சிறகுகள் வீசியே 6

அத்தியாயம் 6 :

[திருநங்கை – திரு + நங்கை
திரு – ஆண் , நங்கை – பெண்.

திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை ‘திருநங்கையர் நாள்’ எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது]

****************************************

“என் காதல் என்னோடே இருந்துவிட்டு போகட்டும்.”

மீண்டும் மீண்டும் விஜய் சொல்லிச்சென்ற வார்த்தைகளே ஆதிராவின் காதுகளில் எதிரொலித்தது. அவன் சென்ற பிறகும் நிமிடங்கள் பல கடந்தும் அதே இடத்தில் அசையாது நின்றிருந்தாள்.

“அப்படி என்ன காதல் விஜய் என்மேல் உங்களுக்கு?”

தனக்கு அருகில் இல்லாதவனிடம் கேள்வியை கேட்டிருந்தாள். அவன் சொல்லிச்சென்ற வார்த்தைகளிலேயே உழன்றவளுக்கு நினைவுகள் பல வருடம் முன் சென்றது. அதனோடு விஜய் தன்னிடம் காதல் சொல்லிய நிகழ்வும் கண்முன் வந்து போனது.

சாலையில் பயணித்துக் கொண்டிருந்த விஜய்யும் கடந்த காலத்தில் பயணித்துக் கொண்டிருந்தான்.

பெற்றோர் யாரென்றே தெரியாமல் வீதியில் ஐந்து வயது சிறுவனாகச் சுற்றிக்கொண்டிருந்த விஜய்யை துளசி ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, படிக்க வைத்தார். அந்த வயதிலே அவனுக்கு ஆதிரா மீது தனி ஆர்வம். எப்போதும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தனித்திருக்கும் அவள் மீது அவனுக்கு இரக்கம் சுரந்தது. வளர வளர அந்த இரக்கம் அன்பாக மாற, பருவ வயதில் காதலாகவே நினைக்கத் தொடங்கினான்.

அவன் எவ்வித பூசலுமின்றி தனது காதலை கூறிய தருணம்… ஆதிரா தான் ஒரு ‘திருநங்கை’ என்பதை எவ்வித தடுமாற்றமுமின்றி நிமிர்ந்து கூறினாள்.. ‘ஆம் ஆதிரா ஒரு திருநங்கை.’

சிறுவயதில் அவளது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அவளது பெற்றோர்… இந்த ஆசிரமத்தில் வந்து விட்டுவிட்டனர். அதன் பிறகு துளசி தான் ‘அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளை ஒரு பெண்ணாகவே வளரச்செய்தார்.’ அவள் தோற்றத்திலும் திருநங்கை எனச் சொல்ல முடியாத அளவிற்கு, அழகில் பெண்ணாகவே இருந்தாள். பார்ப்போர் யாருக்கும் அவளிடம் எவ்வித வித்தியாசமும் தெரியாது. நன்கு உற்று கவனித்தால் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு தோற்றத்தில் பெண்களையும் மிஞ்சும் பால் வண்ணத்தில் மிக அழகாக இருந்தாள்.

அவள் ஒரு பெண்ணாகவே வளர்ந்ததால் துளசி மற்றும் அங்குள்ள ஒருசிலரை தவிர ஆதிரா திருநங்கையென யாருக்கும் தெரியாது.

அவள் சொல்லியதில்.. எந்தவித அதிர்வுமில்லாமல், சில நொடி மௌனித்த விஜய் “அதற்கென்ன.. நான் உன்னைக் காதலிக்கிறேன்” என மிடுக்குடன் கூற அவனை ஆச்சரியமாகவே பார்த்தாள் ஆதிரா.

அதன் பிறகு அவனிடம் இவள் பேசினாலும் ஒதுங்கியே இருந்தாள். ஆனால், அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் காதலில் உறுதியாக இருக்கின்றான்.

அவனது உறுதி ஆதிராவின் மனதை அசைத்துக்கொண்டு தான் இருக்கிறது.. ஆனால், அவளால் அவன் மீது தோன்றும் உணர்வினை புரிந்து கொள்ள முடியாது தடையாக இருந்தது… ‘வெளியுலகில் அவளுக்கிருக்கும் திருநங்கை எனும் தோற்றம்.’

வாழ நினைத்தாலும், தங்களுக்கும் குடும்பம் ஒன்று வேண்டுமென எண்ணினாலும் சமூகம் அவர்களுக்கான அங்கீகாரத்தையோ மரியாதையையோ அளிப்பதில்லையே. என்னதான் வளர்ந்துவிட்டாலும் சில விஷயங்கள் எப்போதும் மாற்றம் பெறுவதில்லை.

அவளது காதலை விஜய் உணர்ந்தாலும்… அவள் அதனை உணர்ந்து வரவேண்டுமென இன்றளவிலும் காத்திருக்கிறான்.

நினைவில் மூழ்கியிருந்த ஆதிரா துளசியம்மாவின் தொடுகையில் நிகழ்காலம் திரும்பினாள். ஆதிராவின் முகவாட்டத்தை வைத்தே நடந்ததை அனுமானித்தவர்,

“நீ என்ன தான் பிடிவாதமா இருந்தாலும் அவன் சற்றும் இறங்கி வரப்போவதில்லை. அவனது காதலில் இருக்கும் ஆழம் உன் பிடிவாதத்தில் இல்லை” என்றார்.

“நீங்க சொல்றது புரியலயம்மா”

ஆதிரா புரியவில்லை என்றதும்,

“கொஞ்சம் அவன் காதலை கன்சிடர் பண்ணலாமே” என்றவர் அவள் வாதிடுவதை தடுப்பதற்காக அலுவலக அறையில் வேலையிருப்பதாக சொல்லி சென்றுவிட்டார்.

அவளுக்கும் விஜய்யை பிடிக்கும்.

ஆனால் அந்த பிடித்தம் எந்தவகையில் என்று தான் அவளுக்கு விளங்கவில்லை.

விஜய்யின் காதலை மட்டும் மனதில் வைத்து ஒரு சில நொடிகள் யோசித்தால் கூட அவளுக்கு புரிந்துவிடும், ஆனால் யோசிக்கத்தான் அவளின் மனம் இடமளிக்கவில்லை.

அமைச்சரின் வீட்டின் முன்பு வண்டியினை நிறுத்திய விஜய் தன்னுடைய நினைவுகளிலிருந்தும் வெளி வந்திருந்தான். மாளிகை போன்ற பிரமாண்ட வீட்டினை தலையை உயர்த்தி பார்த்தவன், “தான் சொல்வதை அவர் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமே” என எண்ணினான்.

அமைச்சரின் வீட்டு கேட்டின் முன்பு நின்றிருந்த செக்யூரிட்டி கார்ட்ஸ் விஜய் யாரென்று அறிந்திருந்தாலும், பரிசோதனை செய்து.. அவனிடமிருக்கும் துப்பாக்கியினை வாங்கிக்கொண்ட பின்னரே அவனை உள் செல்ல அனுமதித்தனர்.

இது அவர்களின் கடமையென்று அமைதியாக இருந்தான். வரவேற்பறையில் விஜய் அமர வைக்கப்பட்டான். பழச்சாறு கொடுக்கப்பட்டது, நாகரிகமாக அதனை மறுத்தான். அந்நேரம் துள்ளலுடன் வெளியே செல்ல கிளம்பி வந்தாள் அமைச்சரின் மகள் நந்தினி. விஜய்க்கு ஹாய் சொல்லியவள், வெளியே செல்வதாக சொல்லி புறப்பட்டாள். விரைந்து சென்றவளை தடுத்து நிறுத்திய விஜய், “எதிலும் அதிக கவனமா இருங்க.. டேக் கேர்” எனக் கூறி அனுப்பி வைத்தான்.

முழுதாக ஐந்து நிமிடங்கள் கடந்திருந்தது. மெல்ல மாடியிலிருந்து இறங்கி வந்தார் அமைச்சர் சண்முகபாண்டியன். அவர் அருகில் வந்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற விஜய்யை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.

“சொல்லுங்க மிஸ்டர்.விஜய், விஷயம் இல்லாமல் நீங்கள் வர மாட்டீங்களே.. ஏதேனும் முக்கியச் செய்தியா” எனக் கேட்டவர் உடனடியாக நினைவு வந்தவராக “பெண்கள் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் அதானே” என்றார்.

விஜய்யின் மௌனம் ஆமென்னும் பதிலை அவருக்கு அளித்தது.

“நீங்க நேரடியாக என்னை சந்திக்க வந்திருப்பதால் குற்றவாளி ரொம்ப பெரிய இடம் போல.. குற்றவாளி யார்?”

அமைச்சரிடமிருந்து எதிர்பார்த்த கேள்வி வந்ததும், சற்றும் தாமதிக்காது குற்றவாளி யார் என்பதை விஜய் சொல்ல.. தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து அதிர்ந்து எழுந்தார். நின்ற வேகத்தில் விஜய்யின் காக்கிச்சட்டையை கழுத்தில் பிடித்திருந்தார்.

“உங்களது நிலை எனக்கு புரிகிறது சார். பட் இது தான் உண்மை” என்று அவரது கைகளை விலக்கிய விஜய் தான் சேகரித்த ஆதாரங்களுடன் விளக்கி கூறினான்.

“குற்றவாளி யாராக இருந்தாலும் உங்கள கடமையை நீங்க செய்ங்க.”

உள்ளே வலி இருந்தாலும், தன்னுடைய பதவியிலிருந்து தவறாதவராய் ஆணை பிறப்பித்த அமைச்சர் விஜய் சென்றதும் தொய்ந்து போய் இருக்கையில் அமர்ந்தார்.

உடனடியாக தன்னுடைய மகளுக்கு அழைத்தவர் எங்கு இருக்கிறாயெனக் கேட்டு, அவள் உங்கள் மாப்பிள்ளையுடன் தானென்று பதிலளித்ததும், இன்னும் அரை மணி நேரத்தில் நீ வீட்டில் இருக்க வேண்டுமென்று கட்டளையாகக் கூறியவர் தன்னுடைய மனைவி மீனாட்சியை அழைத்தபடி அலுவலக அறையிலிருந்து வெளியில் வர அவரது தங்கை நீலவேணி வருகை தந்தார்.

இந்நேரத்தில் தங்கையை சற்றும் எதிர்பார்த்திடாத சண்முகபாண்டியன் அமைதியாக சென்று இருக்கையில் அமர்ந்தார். எப்போதும் தங்கை வந்தால் முகம் கொள்ளா மகிழ்வுடன் வரவேற்கும் தன் கணவரின் அமைதி மீனாட்சிக்கு ஏதோ இருக்கிறது என்பதை உணர்த்தியது.

அண்ணன் தன்னை வாவென்று அழைக்காததை கூட உணர்ந்திடாத நீலவேணி தான் கொண்டுவந்திருந்த பையிலிருந்து திருமண அழைப்பிதழை எடுத்து, “இப்போதான் அச்சிட்டு வந்தது அதான் என் மருமகளிடம் காண்பிக்க ஓடி வந்தேன்” என்றார்.

“ஓ….” அவ்வளவு தான் சண்முகபாண்டியன் மீண்டும் மௌனமாகிவிட்டார்.

ஆனால், நந்தினியோ நீலவேணியின் பேச்சினை கேட்டபடி வந்தவள் ஆர்பாட்டமாய் ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு அழைப்பிதழை வாங்கி பிரித்து பார்த்தாள்.

“அண்ணா நீங்களும் பாருங்களேன்” நீலவேணி சண்முகபாண்டியனிடம் நீட்டினார்.

அழைப்பிதழையும் தங்கையையும் ஆழ்ந்து நோக்கியவர்…

“இத்திருமணத்தை கொஞ்ச நாட்களுக்கு பிறகு வைத்துக்கொள்ளலாம், அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்த சொல்லிவிட்டேன்” என்றவறாக தன்னை அதிர்வுடன் “அண்ணா” என்று விளித்த தங்கையையும், “அப்பா” என ஓடிவந்த மகளை தவிர்த்தவராகவும் அறைக்குள் புகுந்து கொண்டார்.

மற்ற இருவரிடமிருந்த எந்தவொரு உணர்வும் மீனாட்சியிடம் இல்லை. கணவனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தாரே தவிர எதுவும் பேசாது அடுக்கலைக்குள் சென்று மறைந்தார்.

அமைச்சரின் வீட்டிலிருந்து கிளம்பிய விஜய்… செல்லும் வழியில் பவித்ராவின் வீடிருக்கும் பகுதிக்கு சென்று, அங்கு இருப்பவர்களிடம் விசாரித்து பவித்ராவின் இல்லம் சென்றான்.

ஆனால் பூட்டிய வீடே அவனை வரவேற்றது. அக்கம் பக்கத்தில் விசாரிக்க, மகளின் கொடுமையான இறப்பு தாங்காது அபியின் பெற்றோர் விஷம் குடித்து இறந்துவிட்டதாகவும், தனியாக இருக்க பிடிக்காமல் பவித்ரா எங்கோ சென்று விட்டாள், அவள் சென்ற இடம் தெரியவில்லை என்பதே பதிலாக கிடைத்தது.

ஆதிராவுக்கு அழைத்து விஷயத்தினை பகிர்ந்தவன் “பவித்ராவை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்” என்றான்.

விஜய்க்கு சரியென்றவள் “குற்றவாளி யாரென்று சொல்லுங்களேன்” எனக் கேட்க.. “நாளை தெரிந்துவிடும் இப்போ சாப்பிட்டுட்டு நன்றாக தூங்கு” என்றவன் அழைப்பினைத் துண்டிக்கப் போக.. “தட்டுத்தடுமாறி நீங்க சாப்பிட்டீங்களா” என்றிருந்தாள் ஆதிரா.

முதன் முறையாக தன்னவளின் அக்கறையான விசாரிப்பு இதயத்தின் ஆழம் வரை இனித்தது. அவனின் நிலை தற்போது என்னவாக இருக்குமென்று அவன் சொல்லாது, நேரில் காணாது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. இவ்வளவு நாள் இல்லாது இன்று கேட்டதற்கு ஏதேனும் தவறாக.. அதாவது அவன் பக்கம் தான் சாய்வதாக நினைத்துவிடுவானோ என்று எண்ணியவள்,

“நம் ஆசிரமத்தில் இருப்போரை கேட்பதுபோன்று தான் உங்களிடமும் கேட்டேன்” எனக் கூறி பட்டென்று மொபைலை வைத்திருந்தாள்.

‘அதானே பார்த்தேன் உனக்காவது என் மேல் அக்கறையாவது..’ கசந்த புன்னகையோடு வீடு வந்து சேர்ந்த விஜய் கணேஷிற்கு அழைத்து, “பவித்ரா வீட்டாரை கண்காணிக்கும்படி சொல்லியிருந்தேனே என்னவாயிற்று கணேஷ்.. அவர்கள் இறந்துவிட்டதாகவும் பவித்ரா எங்கோ சென்றுவிட்டதாகவும் சொல்றாங்க,” என்றான்.

“ஆமா சார், நானும் சென்று பார்த்தேன்.. மற்றவர்கள் ஒரு மாதிரி பார்ப்பதால், பேசுவதால் அபியின் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால் அங்கு இருக்க பிடிக்காது பவித்ரா வேறெங்கோ சென்றுவிட்டதாக மட்டும் தகவல் கிடைத்திருக்கிறது. பட், எங்கு போயிருக்கிறாளென்று தெரியவில்லை.”

கணேஷ் அவ்வாறு கூறியதும் வறுமையிலும் தனது நிலையறிந்து நிமிர்வுடன் தான் செய்யும் தொழிலைப் பற்றியும் தனைப்பற்றியும் சொல்லிய பவித்ராவின் முகம் நினைவிற்கு வந்தது. சுற்றத்தாரின் அதிகப்படியான பேச்சு, தைரியமானவர்களையும் நிலைகுலையச் செய்துவிடுமென்று அப்போது விஜய் புரிந்துகொண்டான்.

“உன் அபியின் இறப்பிற்கு காரணமானவனை நாளை கைது செய்யப்போகிறேன்… நிச்சயம் அவனுக்கு தண்டனை உறுதி.” உலகின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் பவித்ராவுக்கு தனது மனதின் வார்த்தைகள் கேட்டிருக்க வேண்டுமென்று நினைத்தான்.

இரவு உணவினை பெயருக்கு உண்டுவிட்டு படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் வரவில்லை. விடியலை நோக்கி எதிர்பார்த்திருந்தான். அறையில் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தான். கடிகாரக்குயில் நேரம் ஒன்று என்பதற்கு அடையாளமாக ஒருமுறை கூவிவிட்டு தன் வீட்டிற்குள் புகுந்து கொண்டது. உறங்கினால் தான் நாளை தெளிவாக செயல்பட முடியும் என்பதால் இப்போது உறங்கியே ஆகவேண்டுமென மெத்தையில் விழுந்தான். அடுத்த அரை நொடியில் அவனின் மொபைல் அலறியது. எண் புதிதாக இருந்தது. இந்நேரத்தில் யாராக இருக்குமென்கிற யோசனையோடு எடுத்து ஆன் செய்து காதில் வைத்தான்.

விஜய் அழைப்பினை ஏற்றதை அறிந்ததும்.. எதிர் பக்கத்திலிருந்தவன் சத்தமாக சிரித்து வைத்தான்.

விஜய் எவ்வித எதிர்வினையும் ஆற்றாது… எதுவாக இருந்தாலும் அவனது வாயிலிருந்தே வரட்டுமென்று காத்திருந்தான்.

“என்ன ஏசி.பி சர்… என் ஆள் ஒருவனை பிடித்துவிட்டால், என்னை பிடித்துவிடலாமென்று கனவு காணாதீர்கள்… நான் சிக்கமாட்டேன். சிக்கினாலும் எப்படி தப்பிப்பதென்று எனக்குத் தெரியும்.. மரியாதையா என் ஆளை விட்டுவிடு… இல்லை காதலியென்று ஒருத்தி சாரி சாரி ஒருவன் இல்லையா.. ஆமா அவனா அவளா எப்படி சொல்வது, அவளுக்கும் மற்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிலை தானென்று கொக்கரித்தான்” விஜய்யின் ரத்த அழுத்தம் எதை கூறினால் அதிகரிக்கும் என்று தெரிந்தே ஆதிராவைப் பற்றி பேசினான்.

“நன்றாக சிரித்துக்கொள் நாளையோடு உன் சிரிப்பு அடங்கிவிடும்” என்ற விஜய், “இன்று இரவு தான் நீ உறங்கும் கடைசி இரவு” எனக் கூறியதோடு மட்டுமல்லாமல்..

“வீ வில் மீட் வெரி சூன்” என்றவனாக நாளை மொத்தமாக அவனை துண்டிப்பதற்காக இப்போது அலைபேசியை துண்டித்தான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top