சிறகுகள் வீசியே 7

அத்தியாயம் 7 :

#இன்றைய முக்கியச்செய்தி.

‘பிரபல தொழிலதிபர் மற்றும் நீலவேணி அறக்கட்டளையின் நிர்வாகியுமான திரு.ரவீந்திரன் அவர்கள் பெண்கள் கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இன்று காலை எட்டு மணியளவில் துணை ஆணையர் விஜய் ஐபிஎஸ் அவர்களால் கைதி செய்யப்பட்டார்.’

ஊடகங்கள் பலவற்றில் முதன்மை செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நகரத்தின் சூடான செய்தி இதுதான். யாராலும் நம்ப முடியாத செய்தியும் கூட.

ரவீந்திரன் சமுதாயத்தின் மிகப்பெரும் புள்ளி. அமைச்சரின் தங்கை கணவர். அவர் கால்பதிக்காத தொழிலே கிடையாது. தன்னிடம் வேலைபார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர் கடவுள். அவர் நடத்தி வரும் நீலவேணி அறக்கட்டளையின் கீழ் இலவச பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, ஆகியவை அடக்கம். ஆதலால் மக்கள் பலரும் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை நம்புவதா என்ற குழப்பத்தில் இருந்தனர்.

‘காலை எட்டு மணி’

ஆதிரா மற்றும் கணேஷினை அழைத்த விஜய் இருவரையும் கிளம்பி இருக்க சொன்னதோடு செல்லும் வழியில் இருவரையும் அழைத்துக்கொண்டு ரவீந்திரன் இல்லம் நோக்கி சென்றான்.

செல்லும் வழியில் இவ்வளவு சீக்கிரம் எங்கு போகிறோம்.. எதற்காக… என்ன காரணமென்று ஆதிரா மற்றும் கணேஷ் இருவரும் மாற்றி மாற்றி கேட்ட கேள்விக்கு விஜய் வாய் திறந்தானில்லை.

பிரமாண்டமான வீடு ஒன்றின் முன் வண்டி நிற்க அதிலிருந்து மூவரும் இறங்கினர். அவர்கள் வந்து சேர்ந்த நேரம் ஊடகவியலாளர்கள் வந்து குவிந்தனர். தான் வரும் நேரம் கணித்து சரியாக நிரூபர்களும் அங்கு வந்து சேருமாறு அவர்களை வரவழைத்திருந்தான் விஜய்.

ஆதிராவும், கணேஷும் இங்கு எதற்கு வந்துள்ளோமென்று விஜய்யை பார்க்க,

“யார் குற்றவாளியென உங்களுக்கு தெரிய வேண்டாமா?, வாங்க உள்ளே போகலாம்” என்றான்.

அப்போது தான் வீட்டு முன் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகையை கண்ட இருவரும் அதிர்ந்தனர். இருப்பினும் “குற்றவாளி இங்கு தான் வேலை செய்கின்றானா?” என ஆதிரா மற்றும் கணேஷ் ஒருசேர வினவ விஜய் அட்டகாசமாய் சிரித்தான்.

விஜய்யின் சிரிப்பிற்கான அர்த்தம் இருவருக்கும் புரியவில்லை.

“எங்களை நீங்களே அழைத்து இங்கு வருமாறு கூறியதற்கான காரணம் என்ன சர்” வந்திருக்கும் ஊடகவியலாளர்களில் ஒருவர் கேட்க,

“உள்ளே வந்தால் தெரிந்துவிடப்போகிறது, வாருங்கள்” என்று அனைவரையும் அழைத்தவனாக விஜய் முன் சென்றான்.

வீட்டின் காவலாளி, ரவீந்தரனை ஏதோ பேட்டி எடுப்பதற்காக அனைவரும் வந்திருப்பதாக நினைத்தவன், இது அடிக்கடி நடக்கும் ஒன்றென எண்ணி எல்லோரையும் உள் செல்ல அனுமதித்தான்.

ரவீந்திரன் வரவேற்பறையின் இருக்கையில் அமர்ந்து  அன்றைய செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார். கணவருக்கு தேநீர் கொண்டுவந்த நீலவேணி வந்திருப்போரைக் கண்டு பதறியவராக.. இன்னும் அவர்களை கவனியாது இருக்கும் கணவனிடத்தில் “கொஞ்சம் அங்கே பாருங்களேன்” என்று கூறினார்.

நெடுநெடுவென்ற உயரத்தில் காக்கி உடையில் மீசையை முறுக்கி விட்டவனாய் தன்னை நோக்கி ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கும் விஜய்யை பார்த்து உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியில் திடமாகவே நின்றார் ரவீந்திரன்.

“வாங்க மிஸ்டர்.விஜய், என்ன இந்தப்பக்கம்” ஒன்றுமறியாதவர் போல் வினவினார்.

“உங்களை ஒரு முக்கியமான இடத்திற்கு அழைத்துச்செல்ல தான் இந்தப்பக்கம் வந்தேன், போகலாமா?” விஜய்யின் வார்த்தைகளில் கேலி இருந்ததோ… ஆனால் ரவீந்திரன் அவனின் முகம் பார்க்க உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.

விஜய் ரவீந்திரனை அழைத்ததுமே அவன் தான் குற்றவாளியென புரிந்த ஆதிரா மற்றும் கணேஷ் நம்பமாட்டாது அதிர்வுடன் நடப்பதை வேடிக்கை  பார்க்கலாயினர். விஜய்யின் அழைப்பால் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் நடப்பது புரியாது நின்றிருந்தனர்.

விஜய் போகலாமா என்றதும் ரவீந்தரனின் முகம் வெளிறியது. உடல் முழுக்க வியர்வையில் குளித்தது. கைகளில் நடுக்கம் பரவியது. கண்கள் சொருக நீள்விரிக்கையில் மயங்கி சரிந்தார்.

ரவீந்திரனின் மனைவி நீலவேணி பதறி அவரின் அருகில் ஓடிவர, விஜய் வராத அழைப்பினை ஏற்றவனாக மொபைலினை எடுத்து காதில் வைத்து,

“வாட்… ரவீந்திரனின் மகன் ராஜேஷ்க்கு விபத்தா, சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாரா?” விஜய் அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாக பேசினான்.

அதனை கேட்டதும்… “அய்யோ ராஜேஷ்” என்று கத்தியவராய் ரவீந்திரன் எழுந்து அமர்ந்தார். நீலவேணியே ஒரு நொடி கணவனின் நாடாகத்தினை நம்ப முடியாது உறைந்துவிட்டார்.

நடப்பதை பார்த்தபடி மேலிருந்து கீழிறங்கி வந்த ராஜேஷ், ரவீந்திரனிடம் “வாட் இஸ் திஸ் டாட்” என்றான்.

அங்கிருப்போர் அனைவரும் ரவீந்திரனா இப்படியென அதிர்ச்சிக்குள்ளாயினர்.

அனைவரின் முன்பு தன்னுடைய குட்டு வெளிப்பட்டதில் அவருக்கு அவமானமாக, மகனை பார்க்க விரும்பாது நிலம் தாழ்ந்தார்.

“போகலாமா..?”

இம்முறை விஜய்க்கு எதிராக எவ்வித நாடகமும் அரங்கேற்றாமல் அமைதியாக அவனின் பின் சென்றார்.

“எதற்காக அவரை கைது செய்கிறீர்கள்?”

ராஜேஷின் கேள்விக்கு, “இதற்கு உன்னுடைய தந்தையே பதில் சொன்னால் தான் சரியாக இருக்கும். பெற்ற மகனிடம் “நானொரு காமுகன், பல பெண்களை கற்பழித்து கொன்றது நான் தானென்று தான் செய்த தவறினை.. நேற்று இரவு என்னிடம் கொக்கரித்தாயே அதேபோல் சொல் பார்க்கலாம்.” 

“ஊரில் நல்ல மனிதர் எனும் போர்வைக்குள் சுற்றிக்கொண்டு, பல இளம் பெண்களிடம் தன் இச்சையை தீர்த்துக்கொண்ட அரக்கன் இவன் தான்.” கண்களில் அனல் கக்கும் பார்வையுடன், ரவீந்தரனை எரித்துக்கொண்டே… சுற்றி இருப்போரிடம் அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவிக்க அன்றைய சூடான செய்தியாக பல ஊடகங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரபல தொழிலதிபர் ரவீந்திரன்.

ஊடகங்களும் அவரது பிறப்பு முதல் இன்றைய தினம் வரை அனைத்து செயல்களையும் நிகழ்வுகளையும் சேகரித்து மீண்டும் மீண்டும் பிரபலப்படுத்தினர். அதோடு மட்டுமல்லாது சிதைந்து போன பெண்களின் நிலையை கேலி காட்சிகளாக சித்தரித்து இறந்தவர்களை மீண்டும் இறப்பிற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தனர். இதில் சம்பந்தமே இல்லாமல், ரவீந்திரனின் மச்சான் என்பதால் அமைச்சரின் பெயரும் சுழலில் சிக்கிக்கொண்டு சுழற்றியடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

‘தவறு செய்பவன் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதும், பாதிக்கப்பட்டவன் கூனிக்குறுகி அவமானப்படுவதும் தான் இன்றைய சமுதாயத்தில் எழுதப்படாதாக விதியாகும்.’

“தன்னுடைய தந்தையா இப்படி ஒரு இழிநிலை செயல்களை செய்தார்.” நினைக்கையிலேயே ராஜேஷின் மனம் வெம்பியது. விஜய் ரவீந்தரனை கைது செய்து அழைத்துச் சென்ற பின்னரும் சிலையாக நின்றிருந்த மகனை, தன்னை திடப்படுத்தியவராய் தொட்டு உலுக்கினார் நீலவேணி.

உணர்ச்சிகள் துடைத்த பார்வையுடன் தனது அன்னையை ஏறிட்டான் ராஜேஷ். சேலை தலைப்பால் வாயினை மூடி அழுகையை கட்டுப்படுத்திய நீலவேணி, மகனின் கையை பிடித்து “என்ன இருந்தாலும் அவர் உன் அப்பாப்பா, அவரை வெளிக்கொண்டு வர முயற்சி செய்” என்க,

தன் கரத்தினை பிடித்திருந்த அன்னையின் கரத்தை உதறித் தள்ளியவன், “எப்படிம்மா அந்த ஆளுக்கு உன்னால் பரிவுக்கொள்ள முடிகிறது. அன்று நீயும் தானே நியூஸ் பார்த்தாய், ஒரு சின்ன பெண் எப்படி சிதைந்து போயிருந்தாள்.” கண்கள் மூடி காட்சிகளை உள்வாங்கியவனின் தொண்டைக்குழி வேதனையில் ஏறி இறங்கியது.

“அன்று நீ என்ன சொன்னாய் நினைவிருக்கிறதா மாம்?”

மகன் அவ்வாறு கேட்டதும் அன்றைய நிகழ்வு நீலவேணியின் கண் முன் காட்சியாக விரிந்தது.

சிறுமி அபியின் செய்தி பல சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ராஜேஷும், நீலவேணியும் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க, ரவீந்திரன் வந்து உடன் அமர்ந்தார். அபியின் உடலை புகைப்படம் எடுக்க வேண்டாமென்று அவளின் தாய் அழுத அழுகையைக் கண்டு, “இதற்கு காரணமானவனை தெருநாய்க்களைக் கொண்டு கடிக்கவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க வேண்டும்” என்றார் நீலவேணி.

அதனைக் கேட்டபடி அமர்ந்திருந்த ரவீந்திரனின் முகத்தில் கோபம் கனன்றது. அன்று அவருடைய கோபத்திற்கு காரணம் சிறுமியின் நிலைக்கு காரணமானவன் மீதென நினைத்த ராஜேஷுக்கு, இன்று தன் அன்னை அவ்வாறு கூறியதால் அவர் மீது ஏற்பட்ட கோபமென்று விளங்கியது.

நினைத்து பார்த்த நீலவேணிக்கு கணவனின் மீது அருவெறுப்பு தோன்றினாலும், தன் மாங்கல்யத்துக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாதென்கிற பயமும் சேர்ந்தே தோன்றியதால், “என்னவாக இருந்தாலும் அவரை வெளிக்கொண்டு வர வேண்டாமா?” எனக் கேட்க வைத்தது.

இகழ்ச்சியாக உதட்டினை சுழித்து, “கணவர் என்கிற பதித்தன்மையோ” என்றவன்… “என்னால் உதவ முடியாது, இப்படியொரு கேடுகெட்டவரின் பணத்தில் தான் இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கிறேன் எனும் போது அவமானமாக இருக்கிறது” எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறினான்.

அடுத்து என்ன செய்வதென்று தவித்தவரின் நினைவுக்கு வந்தது சண்முகபாண்டியன். அடுத்த நொடி தனது அண்ணனின் வீட்டிற்கு சென்றார். அங்கு தான் ராஜேஷ் இருந்தான். அவனுக்கு நந்தினி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க, சண்முகபாண்டியன் இறுகியத் தோற்றத்தில் அமர்ந்திருந்தார்.

மீனாட்சி நேற்றைய இரவு தங்களது படுக்கை அறையில் நடந்த உரையாடலை நினைத்து பார்த்தார்.

விஜய் சண்முகபாண்டியனை சந்தித்துவிட்டு சென்ற பிறகு, அமைதியாக தனது அறைக்குள் புகுந்து கொண்ட சண்முகபாண்டியன் இரவு உணவிற்கு கூட வரவில்லை, தான் கணித்தது போல் விஷயம் ரொம்ப பெரிதென்று எண்ணிய மீனாட்சி கணவனிடம் விசாரிக்க முதலில் தயங்கியவர் பின் தங்கை கணவனின் இழி செயலைக் கூற மீனாட்சி அதிர்ந்தார் இல்லை.

மீனாட்சி ஏழைவீட்டு பெண், சண்முகபாண்டியனின் தந்தை மூத்த அரசியல் தலைவர்.. அவரை பின்பற்றி சண்முகமும் அரசியலில் கால்பதித்த தருணம். ஓட்டு கேட்டு குடிசைப்பகுதிக்கு சென்றவர் அங்கு தான் மீனாட்சியை பார்த்தார். பார்த்ததும் அவரின் கனிவான முகத்தில் கவரப்பட்டவர் அடுத்த முகூர்தத்திலேயே மீனாட்சியை மணந்து கொண்டார். என்ன தான் தனக்கு தங்கை உறவாக இருந்தாலும், சண்முகத்தின் தங்கை கணவரான ரவீந்தரனின் பார்வை மீனாட்சியின் மீது விரசமாக பட ஆரம்பித்தது. எங்கே கணவனிடம் சொன்னால், நாத்தனாரின் வாழ்வு பாதிக்கப்படுமோ என்று பயந்த மீனாட்சி ரவீந்தரனின் பார்வையை சகித்துக் கொண்டார். ஆனால், வீட்டில் வேலை பார்க்கும் பெண்களையும் தவறான கண்ணோட்டத்தில் அவர் பார்ப்பதை அறிந்த மீனாட்சி இனியொரு முறை இப்படி நடந்தால் கணவரிடம் சொல்லி விடுவதாக மிரட்ட, அதுநாள் வரை ஒரே வீட்டிலிருந்த ரவீந்திரன் மனைவியை அழைத்துக்கொண்டு தனியாக சென்றுவிட்டார். இங்கு வந்தாலும் மீனாட்சியின் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்க மாட்டார். முன் நாட்களை நினைத்த மீனாட்சி, இந்த வயதிலும் ரவீந்திரன் அவ்வாறே இருப்பாரென்று நினைக்கவில்லை. பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர் கணவனை கவனித்தார்.

இது எதிர்பார்த்த ஒன்று தானென்று அமைதியாக இருந்த மனைவியிடம்… “நாளை நீலாவின் முகத்தை நான் எப்படி பார்ப்பேன் தெரியவில்லையே”, புலம்பிய கணவனை எவ்வாறு ஆறுதல் படுத்துவதென்று அவருக்கு தெரியவில்லை.

“தவறு செய்தவருக்கு தண்டனை கிடைக்கத்தானே வேண்டும்.” கணவர் என்ன நினைப்பாரோ என்று மெல்லக் கூறினார் மீனாட்சி.

“என்னைப்பற்றி உனக்குத் தெரியாதா?”.. வார்த்தைகளற்று பார்வை மொழியாய் வினவியவர்.. “ரவியை கைது செய்ய வாரண்ட்டில் நேரடியாக கையெழுத்து இட்டதே நான் தான்” எனக் கூறியவர் படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டார்.

நடந்ததிலிருந்து வெளிவந்த மீனாட்சி, “வா நீலா” என்றழைக்க, அவர் அண்ணா என்கிற கூவலோடு சண்முகபாண்டியனின் காலுக்கு கீழ் அமர்ந்தார்.

“எப்படியாவது அவரை காப்பாற்று அண்ணா”

“எப்படிம்மா இன்னும் அந்த ஆளை காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறாய்?”

அன்னையின் வேண்டுகோளை ராஜேஷால் ஏற்க முடியவில்லை. தனது மாமாவை நேருக்கு நேர் பார்த்து, “அந்த ஆளை வெளியில் கொண்டு வர உதவ கூடாது” என்று கட்டளையாகக் கூறினான்.

மகனின் பேச்சினை காதில் போட்டுக்கொள்ளாத நீலவேணி, மீண்டும் மீண்டும் சண்முகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

இருக்கையிலிருந்து எழுந்த சண்முகம், “உனக்கொரு மகள் இருந்து அவளுக்கும் இந்நிலை ஏற்பட்டிருந்தால்,” எனக்கூறி தங்கையை ஆழப்பார்வை பார்த்தவர் மீனாட்சியிடம் நீலவேணியை பார்த்துக்கொள்ளுமாறு கண்ஜாடை செய்து உள்ளே சென்றுவிட்டார்.

********************************************

நடந்த விஷயமறிந்து தலைமை ஆணையர் செல்வகுமார், விஜய் வருவதற்கு முன்பே காவல்நிலையம் வந்திருந்தார். விஜய்யின் வருகைக்காக உள்ளே கூட செல்லாது வாயிலிலேயே காத்திருந்தார்.

சிறிது நேரத்திற்கு பிறகு விஜய்க்கு பின்னால் ரவீந்தரனை கணேஷ் கையால் பிடித்தபடி அழைத்து வருவதை கண்ட செல்வகுமார், ஓடிச்சென்று “என்ன விஜய் இது.. அவர் எவ்வளவு பெரிய மனிதர், நாளை பெரிய இடத்திலிருந்து வரும் பிரச்சினைகளை யார் எதிர்கொள்வது” என்றார்.

“பெரிய ஆளா!!! இவனா… இவர் என்ன வேலை செய்திருக்கிறாரென்று உங்களுக்கு தெரியுமல்லவா” என்ற விஜய் “இவனை கையில் விலங்கு மாட்டி ஆடையில்லாமல் ரோட்டில் நடத்தியே அழைத்து வந்திருக்க வேண்டும்” என பற்களை கடித்தான்.

“என்ன இருந்தாலும் அவருக்கு சமுதாயத்தில் நற்பெயர் இருக்கிறதல்லவா…”

“அந்த பெயர் இன்றோடு காற்றில் பறந்தாச்சு, நீங்க அவனுக்கு இவ்வளவு சப்போர்ட்டாக பேசுவதை பார்த்தால் உங்களுக்கும்……” விஜய் விஷமமாக வினவ,

“யோவ் விட்டால் என்னை இவரோடு கூட்டு சேர்த்துவிடுவாய் போலிருக்கே” என்று பதறிய செல்வகுமார் “என்னவோ செய்” என்றார்.

அது.. என தல ஸ்டைலில் சொல்லிய விஜய்.. நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த ரவீந்திரனை லாக்கப்பில் தள்ளி பூட்டிட்டான்.

காவல் நிலையத்திற்கு வெளியில் குழுமியிருந்த பத்திரிக்கைக்காரர்களை செல்வகுமார் சமாளித்துக் கொண்டிருக்க, ஆதிரா சற்று தள்ளி நின்றிருந்தாள்.

அவர்களை சந்திக்க கணேஷுடன் வெளியில் வந்த விஜய் ஆதிராவையும் உடன் அழைத்து நிருபர்களை நெருங்கினான்.

“இந்த வழக்கில் குற்றவாளியை பிடிப்பதற்கு காரணமாக இருந்தது விஜய், கணேஷ் மற்றும் ஆதிரா. அவர்களுக்கு நன்றி சொல்ல காவல்துறை கடமை பட்டிருக்கிறது.”

செல்வகுமார் முதன்முறையாக ஆதிராவை மரியாதையாக நடத்தினார்.

“சர் ரவீந்திரன் தான் குற்றவாளி என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கின்றதா?” நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, செல்வகுமார் விஜய்யை பார்க்க..

“அனைத்து ஆதாரங்களும் நாளை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்” என்றதோடு விஜய் அமைதியாகினான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top