சிறகுகள் வீசியே 8

அத்தியாயம் 8 :

[‘சத்யமேவ ஜெயதே – வாய்மையே வெல்லும்.’

‘நம்நாட்டின் தேசிய குறிக்கோளுரை. தேசிய சின்னமான நான்முக சிங்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.’]

{வாய்மையே வெல்லும்.. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதே நிதர்சனம்}

நீதிமன்ற வளாகமே மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது. காரணம் பெண்கள் கற்பழிப்பு வழக்கு அன்று விசாரணைக்கு வருவதோடு மட்டுமல்லாமல், குற்றவாளிக்கு சாதகமாக.. வாதாடுவதில் புலியென பெயர்பெற்ற கே.கே (கிருஷ்ண குமார்-KK) ஆஜராக இருப்பதால் மற்ற வழக்கறிஞர்களிடையேவும் இந்த வழக்கின் விசாரணை பிரபலமடைந்தது.

வழக்கு சம்மந்தமாக சிறு துணுக்காவது கிடைத்து, அதனை தங்களது சேனலின் டிஆர்பி உயர்வதற்கு பயன்படுத்த முடியாதா என்று.. மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல் பல ஊடகங்களில் இருந்து நிருபர்கள் குவிந்திருந்தனர்.

நீதிமன்றத்திற்கு செல்லும் முன் ஆதிராவுக்கு அழைத்த விஜய் ரம்யாவை நேரடியாக சரியான நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு பணித்தான்.

காவல் நிலையத்தில் தன்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் ரவீந்திரனை தானே அழைத்து செல்வதாகக் கூறிய விஜய், “அவன் எதாவது வாய் திறந்தானா” என்று கணேஷிடம் வினவினான்.

“இல்லை சார்… எது கேட்டாலும் வாய் திறக்கவே இல்லை. நான் செய்யலன்னு மறுத்து கூட சொல்லல.”

விஜய்யின் கேள்விக்கு பதிலளித்த கணேஷ், “இருட்டறையிலிருக்கும் கத்தி கந்தனை அழைத்து வரவா” என்க, சரியென்பதை போல் தலையசைத்தான் விஜய்.

ஆதிரா ரம்யாவுடன் கிளம்பிவிட்டதாக விஜய்க்கு கால் செய்ய, ஆசிரமத்திலிருந்து நீதிமன்றம் சற்று தொலைவு என்பதால் “பாதி வழி வந்ததும் கால் பண்ணுங்க மிஸ்.ஆதிரா” என்ற விஜய் “மிகக் கவனமாக இருங்க” என பாதுகாப்பினை வலியுறுத்தினான்.

நீதிமன்றத்தினுள் அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் அவரைத் தொடர்ந்து மிக ஆர்ப்பாட்டமாக கேகே, இருவரும் எதிரெதிர் திசையில் நுழைய, ஊடகவியலாளர்கள் பாதி பாதியாக பிரிந்து இருவரையும் சுற்றி வலைத்தனர்.

“குற்றவாளிக்கு தண்டணை கிடைக்குமா சர்?”

“நிச்சயமாக காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் ரொம்பவே ஸ்ட்ராங்கா உள்ளது. குற்றவாளி தப்பிக்கவே முடியாது.”

அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றவாளிக்கு எதிரான தனது வாதத்தை பத்திரிக்கை ஆட்களிடம் தொடங்கிவிட்டார்.

“சார், நீங்க ஒரு வழக்கை கையில் எடுகின்றீர்கள் என்றால், வெற்றி உங்களுக்குத்தான் என்பதை பல வழக்குகளில் பார்த்திருக்கின்றோம். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் என்கிறார்? இதைப்பற்றி உங்களின் கருத்து.”

தன் முன் நீட்டப்பட்ட மைக்கினை அலட்சியம் செய்தவராய் கேகே அங்கிருந்து நகர, “அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்குமென்று அவ்வளவு உறுதியாக சொல்வதால்… நீங்கள் உங்கள் முதல் தோல்வியை சந்திக்க போகிறீர்களா?” என்று மற்றொரு நிருபர் கேட்டார்.

சட்டென நடையை நிறுத்தி பத்திரிக்கை ஆட்களை சுற்றி பார்வை பதித்து, “இது ஒரு வழக்கே கிடையாது… இன்றே இது பொய் வழக்கென்று என் கட்சிக்காரர் வெளியில் வந்துவிடுவார்” என்று கூறி விடுவிடுவென சென்றுவிட்டார்.

கணேஷ் கந்தனை இருட்டறையிலிருந்து வெளிக்கொண்டு வந்து கைகளில் விலங்கினை மாட்டி நீதிமன்றத்திற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். விஜய் தான் சேகரித்த ஆதாரங்களை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதால் ஒருமுறை சரி பார்த்துக்கொண்டான்.

நீதிமன்றம் செல்ல கந்தனையும், ரவீந்தரனையும் ஜீப்பின் பின்னிருக்கையில் ஏற்றிய கணேஷ் தானும் அவர்களோடு அமர்ந்தான். மூர்த்தி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியினை முடுக்க, அவருக்கு பக்கத்து இருக்கையில் அமர விஜய் கால் வைத்த நொடி அவனின் அலைபேசி சிணுங்கியது.

அழைப்பது ஆதிரா, “அதற்குள் பாதிவழி வந்துவிட்டாளா” என்கிற கேள்வியுடன் அழைப்பினை விஜய் ஏற்க, அதிக பதட்டத்துடன் ஆதிராவின் குரல் ஒலித்தது.

“விஜய்… எங்களை ஆறு பேர் துரத்திட்டு இருக்காங்க, காரணம் தெரியவில்லை.. முடிந்தவரை அவர்களை எதிர்த்து பார்த்தேன். இப்போ நம்ம ஆசிரமத்திலிருந்து பத்து நிமிட தொலைவிலிருக்கும் காட்டிற்குள் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.”

“ஆஆஆ…”

ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கும் போதே இணைப்பு துண்டிக்கப்பட, எதிர் பக்கம் ஆ’என்கிற ரம்யாவின் அலறல் ஒலி கேட்டது.

இந்த வழக்கில் ரம்யா முக்கிய சாட்சி மற்றும் வழக்கில் சம்மந்தப்பட்ட விக்டிம் என்பதாலும், ஆதிரா அவனின் உயிருக்கு இணையானவள் என்பதாலும் அவர்களை காப்பாற்ற விஜய்யே புறப்பட்டான்.

குற்றவாளிகளை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு கணேஷிற்கு ஆணையிட்ட விஜய், “ரம்யாவுடன் சரியான நேரத்திற்கு அங்கிருப்பேன்” எனக்கூறி தனது புல்லட்டிலேறி காற்றாய் பறந்தான்.

ஆதிரா சொல்லிய காட்டிற்குள் விஜய் மெல்ல தனது அடிகளை எடுத்து வைத்தான். காடே காற்றில் சலசலக்கும் கிளைகளின் அசைவின்றி நிசப்தமாக இருந்தது. சிறு அசைவு கூட கண்ணில் படவில்லை. ஆதிராவுக்கு அழைக்க நினைத்து மொபைலினை கையில் எடுத்த விஜய், “அவர்கள் எங்கேயாவது பதுங்கியிருந்தால் தன்னழைப்பின் மூலம் வரும் ஒலியால் ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்று கருதி எண்ணத்தை கைவிட்டான்.

மரங்களுக்கு நடுவில் மெல்ல முன்னேறிய விஜய்யின் பார்வை கூர்மை பெற்றது. சிறிது தூரத்தில் வலதுபுறம் ஒரு ஒற்றையடி பாதை பிரிந்தது. அதனுள் செல்ல விஜய்யின் மனம் கட்டளையிட, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியினை முன்னெச்சரிக்கையாக கையிலெடுத்து உயர்த்தி பிடித்தவாறு முன்னேறிச் சென்றான்.

ஏதோ சத்தம் செவி வழி நுழைவதை உணர்ந்து கூர்ந்து கவனிக்கலானான். ஐந்தடி தூரத்தில் இரண்டு பெரிய பாறை இடுக்கிலிருந்து மெல்லிய முணகல் சத்தம் வந்துகொண்டிருந்தது. அங்கு சென்று பார்க்க, ஆதிரா ரத்தம் தோய்ந்த உடலுடன் அரை மயக்க நிலையில் கிடந்தாள். காதலனாக ஒரு நொடி துடிதுடித்தான். ஆதிராவின் நிலை அவன் உயிர் வரை சென்று வலித்தது. கண்களில் ஈரத்தை உணர்ந்தவன், தன்னை ஒருநிலைப்படுத்தி.. தன்னவளை தலை முதல் கால் வரை மெல்ல ஆராய்ந்தான். இடது புறத்தோளில் குண்டு பாய்ந்து அப்பக்க உடல் முழுவதும் ரத்தம் கசிந்து பரவியிருந்தது. காலின் முட்டியில் ரத்தம் கசிய என்னவென்று பார்க்க, ஏதோ கூரான முனை வைத்து குத்தியதைப்போல் காயமிருந்தது.

“ஆதி….” என்றழைத்த விஜய்யின் குரல் தழுதழுத்தது.

விஜய்யின் குரல் கேட்டு பிரிக்க முடியாது இமை பிரித்த ஆதிரா, “ரம்யாவை காப்பாத்து விஜய்” என்பதை சொல்லி முடிப்பதற்குள் கண்கள் சொருகி முழு மயக்கத்தை அடைந்தாள். அந்நிலையில் அவளை விட்டுச் சென்று ரம்யாவைத் தேடவும் முடியாது… ரம்யாவை விட்டுச்சென்று அவளின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோவென்று இருதலைக்கொள்ளி ஏறும்பாய் தவித்தான். இருப்பினும் அக்காட்டையே அரை மணிநேரத்தில் சல்லடையாய் சலித்த விஜய்க்கு யாரும் அங்கிருப்பதாக சிறு அறிகுறி கூட கிட்டாததால், ஆதிராவின் நிலையை உணர்ந்து.. அவளை கைகளில் ஏந்தியவாறு காட்டைவிட்டு வெளியேறினான். வரும் வழியில் அப்பகுதி காவல் நிலையத்திற்கு கால் செய்து அக்காட்டையும் அக்காட்டை சுற்றியிருக்கும் பகுதியிலும் தேடக் கூறினான்.

ஆதிராவை மருத்துவமனையில் சேர்த்த விஜய், மருத்துவரிடம் பார்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்திவிட்டு நீதிமன்றம் விரைந்தான்.

விஜய் நீதிமன்ற வளாகத்தில் கால் பதிக்க… ரவீந்திரன் நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப்பட்டிருந்தான்.

பெண்கள் கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி ரவீந்திரன் தான் என்பதற்கு ஆதாரமாக வைர மோதிரத்தை ஒப்படைத்து, அவனின் கையில் வரையப்பட்டிருக்கும் பாம்பின் உருவத்தை குற்றவாளியின் அடையாளமாக ரம்யா சொல்லியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவரின் வாதத்தை தடை செய்வதைப்போல் இடையிட்டார் கேகே.

“அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்தரனின் மோதிரமென்று சமர்ப்பிக்கப்பட்ட மோதிரம் அவருடையதே இல்லை”

இந்நேரம் தான் விஜய் உள் நுழைந்திருந்தான்.

அந்த மோதிரத்திற்கான விளக்கத்ததை அளிக்க, துணை ஆணையர் விஜய்யை விசாரிக்க வேண்டுமென்க, நீதிபதி ஒப்புதல் வழங்க.. விஜய் முன் வந்து நின்றான்.

மோதிரம் ரவீந்திரனுடையதல்ல, அது அவருடைய மகன் ராஜேஷின் நிச்சயதார்த்த மோதிரம். இது விக்டிம் மாலதி இறுக மூடியிருந்த அவருடைய கையிலிருந்து எடுக்கப்பட்டது.

கோவிலில் நந்தினியை சந்தித்தது, முக்கிய ஆதாரமாக கிடைத்த மோதிரம் போன்றே அவளும் அணிந்திருப்பதைக் கண்டு விசாரித்து அதேபோன்றதோறு மற்றொரு மோதிரம் ராஜேஷும் அணிந்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டதாகவும் கூறிய விஜய் அதன் பின் நடந்த நிகழ்வுகளை விவரிக்கத் தொடங்கினான்.

விஜய் அமைச்சருடன் கோவிலுக்கு சென்று வந்தது முதல் ராஜேஷ் தான் குற்றவாளியென மோதிரத்தினை வைத்து முழுமையாக நம்பினான். ஆதலாலே கணேஷிடம் அன்று மாலையே குற்றவாளியை கண்டுபிடித்து விட்டதாகக் கூறினான். இருப்பினும் தனது கணிப்பு தவறாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்ததில் அடுத்த நாள் ராஜேஷை விஜய் கண்காணித்தான்.

சந்தேகம் கொண்டு ராஜேஷை தேடிச்சென்றான். ராஜேஷ் காஃபி ஷாப் ஒன்றில் அவருடைய நண்பன் ஒருவருடன் அமர்ந்திருந்தான். விஜய் மஃப்டியில் சென்றதால் அவன் காவல்துறை அதிகாரியென்று யாருக்கும் தெரியவில்லை. ராஜேஷின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அவனுக்கு பின்னால் காலியாக இருந்த இருக்கையில் விஜய் அமர்ந்தான். தொடர்ந்து ராஜேஷின் மொபைல் ஒலித்துக்கொண்டே இருப்பதையும், அதனை தொடர்ந்து ராஜேஷ் துண்டிப்பதையும் கவனித்தான்.

அது யாராக இருக்குமென்று விஜய் யோசிக்க,

ராஜேஷுடன் இருந்த அவனின் நண்பன் “நந்தினி தானே எடுத்து பேசு மச்சான்” என்க, “எங்கேஜ்மெண்ட் ரிங் மிஸ் ஆகிருச்சுடா, இப்போ கால் அட்டெண்ட் செய்தால் உன்னை நேரில் பார்க்க வேண்டுமென்பாள், போனால் ரிங் இல்லை என்பதை வைத்து ஒரு மாதத்திற்கு சண்டை போடுவாள்… அது கிடைக்கிறதா பார்ப்போம் இல்லையென்றால் அதேபோல் ஒன்று செய்து போட்டுக்கொண்டு தான் அவள் முன் செல்ல வேண்டும்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான் ராஜேஷ்.

மாலதியிடத்தில் தான் மோதிரம் காணாமல் போயிருக்க வேண்டும். அந்த இடத்தில் ராஜேஷ் தான் குற்றவாளியென விஜய் நம்பினான்.

ஆனால், ராஜேஷின் நண்பன்.. “எத்தனை நாட்களாகக் காணவில்லை” எனக் கேட்க, அதற்கு ராஜேஷ் ஒரு வாரமாக காணவில்லை.. ஆதலால் நந்துவையும் பார்த்து ஒரு வாரமாகிறது” என்று வருத்தத்துடன் கூறினான். இந்த இடத்தில் ராஜேஷ் குற்றவாளி இல்லையோ என்கிற எண்ணம் விஜய்க்கு தோன்றியது.

“இந்த தடையமும் விட்டுப்போச்சே.. பிறகு என்ன செய்வது,” விஜய் யோசிக்கலானான். ஆனால் அவன் யோசிக்காமலே ரவீந்திரன் பிடிபட்டார்.

காஃபி ஷாப்பிலிருந்து வெளியேறிய விஜய்யின் இருசக்கர வாகனம் திடீரென சாலையில் நின்றது. விஜய் எவ்வளவோ முயற்சித்தும் வண்டி ஸ்டார்ட் ஆகாததால் பக்கத்திலிருந்த மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு சரிபார்த்து காவல்நிலையத்தில் கொண்டு வந்து தருமாறு கூறியவன் ஆட்டோவிற்காக காத்திருந்த தருணம் அவன் முன் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியது நந்தினி. அவள் மட்டுமில்லாது காரினுள் நீலவேணி மற்றும் ரவீந்திரன் இருந்தனர். நந்தினியின் வற்புறுத்தலால் விஜய் அவர்களது காரில் பயணிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. காரினுள் நிலவிய அமைதியை ரவீந்திரன் கலைத்தார்.

“என்னம்மா, பய போன் எடுக்கலையா”

“ஆமாம் அங்கிள்.. ரிங் தொலைந்து விட்டது என்றால் வேறொன்று வங்கிக்கொள்ளலாமே, எதற்கு என்னை அவாய்ட் பண்ண வேண்டும். நேரில் மாட்டட்டும் பார்த்துக்கொள்கிறேன்.”

ரவீந்தரனின் கேள்விக்கு நந்து வருத்தமாகவும் ஆதங்கமாகவும் பதிலளித்தால். இதில் தனக்கு ஏதேனும் தகவல் கிடைக்கலாமென்று விஜய்யின் செவிகள் கூர்மை பெற்றன.

“ராஜேஷ் மீது தவறில்லை நந்தும்மா, அவன் டேபிள் மீது கழட்டி வைத்திருந்ததை நான் தான் தவறுதலாக மாற்றி அணிந்து சென்று விட்டேன். அலுவலகம் போன பின்பு தான் கவனித்தேன்… அதன் பிறகு தொலைத்தும் விட்டேன். எங்கு மிஸ் ஆனதென்று எவ்வளவு யோசித்தும் நினைவிற்கு வரவில்லை.”

மருமகளிடம் மகனை நியாயப்படுத்த ரவீந்திரன் அளித்த விளக்கம் அவர் மாட்டிக்கொள்ள வழி செய்தது. அவருக்குத்தான் தெரியாதே அந்த மோதிரம் முக்கிய ஆதாரமாக விஜய்யிடம் உள்ளதென்று. விஜய்யால் அறிந்த உண்மையை நம்ப முடியவில்லை. இவரா இப்டியென்று அதிர்ந்தான்.

‘அடுத்தகட்டமாக ரம்யா கூறிய பாம்பின் ஓவியம்.’

ரவீந்தரன் முழுக்கை சட்டை அணிந்திருந்ததால் அதனை காண முடியவில்லை. ஆதலால் அவர் காலை ஜாக்கிங் செல்லும் நேரத்தை அறிந்து தற்செயலாக அவரை அங்கு சந்திப்பதைப்போல் கை குலுக்க கை நீட்டினான். ரவீந்திரன் இயல்பாக நீட்ட, டி-ஷர்ட் அணிந்திருந்ததால் கை முட்டிக்கு கீழ் அவர் வரைந்திருந்த பாம்பின் ஓவியத்தினை விஜய் கண்டு கொண்டான்.

அனைத்தையும் விஜய் நீதிபதியிடம் சொல்லி முடிக்க, கேகே தனது வாதத்தைத் தொடங்கினார்.

“நீங்கள் எப்படி ஐபிஎஸ் பாஸ் செய்தீர்கள் மிஸ்டர்.விஜய் ” கேகே நக்கலாக வினவ,

“படித்துதான் மிஸ்டர்.கிருஷ்ண குமார்” என்று அவரைவிட படு நக்கலாக பதில் சொல்லியிருந்தான் விஜய்.

நீதிபதி இருவரையும் கண்டிக்கும் விதமாக “நீதிமன்றம் கேலி செய்து விளையாடும் இடமில்லை” என்க இருவரில் விஜய் மட்டும் மன்னிப்பு வேண்ட,

“நான் அவ்வாறு கேட்க ஒரு காரணம் உள்ளது” என்ற கேகே, விஜய்யை பார்த்து.. ஒலிப்பதிவு இல்லாத உரையாடல்களை, அதுவும் வெறும் வாய் வார்த்தையாக வழக்கினை விசாரணை செய்யும் காவல் அதிகாரியின் சொல்லை ஆதாரமாக ஏற்க முடியாதென்று உங்களுக்கு தெரியதா? எனக் கேட்க, மோதிரம் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அந்த உரையாடலுக்கு சாட்சியாக நந்தினியை அழைத்து விசாரித்தாலும் கூட, “ராஜேஷ் தொலைத்த மோதிரம் ரவீந்திரனிடன் கிடைத்தது போல் அவர் தொலைத்த மோதிரம் கிடைக்கப்பெற்ற நபர் குற்றவாளியாக இருக்கலாம் இல்லையா” என்று இந்த கேகே சாதித்துவிடுவாரென்று.. நந்தினியை அழைத்து விசாரிக்குமாறு கேட்க நினைத்த எண்ணத்தை நொடியில் கைவிட்டான்.

அடுத்து நீங்கள் ஆதாரமாக சொல்லியிருப்பது அவர் கையிலிருக்கும் டாட்டூ. அதையும் இப்போதே பார்த்துவிடலாம்” என்ற கேகே.. ரவீந்தரனின் இரு கைகளையும் ஆராயா, ரம்யா சொல்லிய மற்றும் விஜய் பார்த்த பாம்பின் ஓவியம் அவரது கைகளில் இல்லை.

இது விஜய்க்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அடுத்ததாக கத்தி கந்தனை விசாரிக்க, அவனோ மருத்துவமனைக்கு திருட வந்த என்னை கைதி செய்து ரவீந்திரனுக்கு எதிராக பொய் சாட்சி சொல்ல சொல்லி அடித்ததாகவும், ரவீந்திரன் யாரென்றே தெரியாதுமென்றும் பொய் கூறினான்.

மருத்துவமனை சிசிடிவி புட்டேஜினை கந்தனுக்கு எதிரான ஆதாரமாக காண்பிக்க… முகம் மூடியிருப்பதால் வெறும் தழும்பை மட்டும் வைத்து அவரை குற்றவாளியென சொல்லிட முடியாதென்ற கேகே’வின் வாதத்தை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

இருந்தும் அரசு வழக்கறிஞர் ரம்யாவின் வாக்குமூலத்தை எடுத்து வாதம் செய்ய, “வேர் இஸ் ரம்யா”? என்ற கேள்வியோடு அதையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் கேகே.

ரம்யா எங்கு என்பதற்கான காரணத்தினை விஜய் அளிக்க,

“இந்த வழக்கினை முடிப்பதற்காக விஜய் அவர்களே பொய்யாக ரம்யா என்கிற பெண்ணை தயார் செய்து, ஒன்றுமில்லாதவற்றை ஆதாரங்களாய் கொண்டு வந்து காட்டி.. பொய்க்கு மேல் பொய்யாகக் கூறி, சமுதாயத்தில் முக்கிய அந்தஸ்து வகிக்கும் எனது கட்சிக்காரரை குற்றவாளியாக்க திட்டம் தீட்டியுள்ளார்” என்ற கேகே உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஆணை பிறப்பிக்குமாறு கூறி தனது வாதத்தினை முடித்துக்கொண்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் அதற்கு மேல் வாதிட ஒன்றுமில்லையென அமைதியாகிவிட்டார்.

“கந்தன் மருத்துவமனைக்கு திருட சென்றதாக அவனே ஒப்புக்கொண்டதால் அவனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், சமுதாயத்தில் முக்கிய பொறுப்பிலிருக்கும் ஒரு நல்ல மனிதரின் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டதால் காவல்துறையை நீதிமன்றம் கண்டிக்கிறது. ரவீந்திரன் தான் குற்றவாளி என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் நிரபராதி என்று கோர்ட் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்கிறது. மேலும் உண்மையான குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

தீர்ப்பினை வழங்கிய நீதிபதி வெளியேறியதும்… வழக்கின் விவாதத்தை காண வந்த அனைவரும் ஒவ்வொருவராக கலைந்தனர். கேகே ரவீந்தரனிடம் வெற்றிக்குறியை உயர்த்தி காண்பித்தவராய் அடுத்த வழக்கினை கவனிக்கச் சென்றுவிட, யாருமற்ற அந்த வளாகத்தில் கை முஷ்டியை மடக்கி தனது ஒட்டுமொத்த கோபத்தையும் சுவற்றில் காண்பித்துக் கொண்டிருந்தான் விஜய்.

அவனின் முதுகு புறம் தான் அணிந்திருந்த கண் கண்ணாடியை கழட்டி சுத்தம் செய்தவராய் வந்து நின்ற ரவீந்திரன் “என்ன மிஸ்டர்.விஜய் கேஸ் இப்படி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதே, இப்படி வலுவில்லாதவற்றையா ஆதாரமாக கோர்ட்டிற்கு கொண்டு வருவீர்கள்” விஷம சிரிப்புடன் கேட்ட ரவீந்திரன்,

“ஆமாம் நான் தான் அத்தனை பெண்களையும் கற்பழித்தேன், மாலதி இறந்துவிட தீபாவும் செத்துவிடுவாளென்று நினைத்தேன். ஆனால் அவள் பிழைத்துவிட்டாளென்கிற செய்தி கிடைத்ததுமே.. மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு மருத்துவரிடம் பணத்தை விட்டெறிந்து அவளையும் கொன்றுவிட்டேன். எவ்வளவு நாள் தான் இளம் பெண்களிடமே தேடலை தேடுவது அதுதான் அந்த அபியை ட்ரை செய்தேன் ஆனால் அவள் சிறுமியல்லாவா, தாக்கு பிடிக்க முடியாது இறந்துவிட்டாள்” என்றவனின் கண்கள் இச்சையால் மயக்கத்தை பிரதிபலித்தது.

“எவ்வளவு போ* பொருட்கள் வந்தாலும் கா*த்திற்கு முன் அனைத்தும் டம்மி தான்” என்று வெட்கமில்லாமல் கூறிய ரவீந்திரனை அங்கே கொன்று புதைத்துவிடும் வெறி அவனுள், இடம் கருதி தன்னை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான்.

“நீ கந்தனை கண்டுபிடித்ததுமே என்னை நெருங்கி விடுவாயென்று தெரியும் அதுதான் உன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் நீ என் மச்சானை சென்று சந்தித்தது தெரிந்ததும் உன்னை மாதிரியொரு ஒரு காக்கிச்சட்டையை விலை கொடுத்து வாங்கி நீ வைத்திருக்கும் ஆதாரங்கள் என்னவென்று தெரிந்து அவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டேன் ” என்று வெடி சிரிப்பு சிரித்த ரவீந்திரன் “பணத்திற்கு விலைபோகாதவர்களே கிடையாது, நீ இன்னும் வளர வேண்டும் தம்பி” என்று கேலி செய்தவராய் அவனிடமிருந்து விலகி வெளியேற, அதுவரை அங்கிருக்கும் தூண் மறைவில் நின்று அனைத்தும் கேட்ட, தன்னை முழுவதும் மறைத்துக்கொண்ட உருவமொன்று கைகளில் கத்தியுடன் ரவீந்திரனை நோக்கி நகர்ந்தது.

யாருமற்ற இடத்தில் சுற்றி தனது பார்வையை சுழலவிட்டு ஆராய்ந்த அவ்வுருவம் ரவீந்தரனை குத்துவதற்காக கைகளை பின்னோக்கி கொண்டு சென்று முன்னோக்கி குத்த.. பின் சென்ற கை யாரோ ஒருவருடைய பிடியில் அங்கேயே தங்கியது.

அந்த ஒருவர் விஜய். வழக்கின் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே மறைந்திருந்த அவ்வுருவத்தையும் அது யாரென்பதையும் கவனித்த விஜய்.. ரவீந்திரன் அவனிடம் பேசும்போதும் அவ்வுருவத்தையே கவனித்திருந்தான்.

அவ்வுருவத்தின் கையினை பிடித்த பிடியை விலக்காது ஒரு சுவற்றின் மறைவில் இழுத்துச் சென்ற விஜய்.. “அவனை கொலை செய்துட்டு, நீ கம்பிகளுக்கு பின் வாழ்க்கையை தொலைக்கப் போகிறாயா பவித்ரா” என்றதில் தன் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கினாள் பவித்ரா.

“அவனால் என் குடும்பம் அழிந்தது போன்று தானே பல குடும்பங்கள் அழிந்திருக்கும், உண்மை தெரிந்தாலும் சட்டத்தால் இம்மாதிரியான பணபலம் படைத்தவர்களை ஒன்றும் செய்ய முடியாதென்று எனக்குத் தெரியும். அதுதான் என் கையினாலே அவனைக் கொல்ல வேண்டுமென்று வந்தேன். என் அபியை பற்றி அவன் சொல்லிய போதே அவன் மீது பாய்ந்திருக்க வேண்டும்” ஒருவிதமான வெறியுடன் கூறிய பவித்ரா, “கடைசியில் உங்களால் கூட அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே” உதடு இகழ்ச்சியால் வளைந்தது.

அந்நொடி, தான் இந்த பதவி வகித்து என்ன பயனென்று அவன் விக்கித்து நின்ற நொடியை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட பவித்ரா அவனது பிடியிலிருந்து நழுவியிருந்தாள்.

அந்த நீதிமன்ற வளாகத்தினை நன்கு அலசியும் விஜய்யின் பார்வை வட்டத்திற்குள் பவித்ரா விழவேயில்லை.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top