சிறகுகள் வீசியே 9

அத்தியாயம் 9 :

பவித்ராவை தேடியவாறு வந்துகொண்டிருந்த விஜய்யை பத்திரிக்கை ஆட்கள் சூழ்ந்து கொண்டனர்.

“இருக்கின்ற கடுப்பில் இவர்கள் வேறா” என்று எண்ணிய விஜய், “வழக்கமா உங்களுடைய கற்பனையில் பல கேள்விகளை யூகித்த வைத்திருப்பீர்களே கேளுங்க என்னால் முடிந்தால் பதில் சொல்கிறேன்” என்றான். முகத்தில் சிறு மாற்றமில்லை, குரலில் இகழ்ச்சி இல்லை ஆனால் விஜய்யின் வார்த்தைகளில் கேலி இருந்தது.

“உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை இதில் எங்களை கிண்டல் செய்வதோடு குறையும் சொல்றீங்களா.”

“நீங்கள் பிரபலமடையத்தானே, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் ரவீந்திரன் அவர்களை இந்த வழக்கில் மாட்டிவிட்டீர்கள்.”

“உண்மையிலேயே ரம்யா விக்டிம் தானா மிஸ்டர்.விஜய்?”.

“மாலதி வழக்கு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லையென, ரம்யாவை வைத்து வழக்கினை திசை திருப்ப முயற்சி செய்தீர்களா?”

ரவீந்திரன் குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வழங்கிய நொடி முதல், ரவீந்திரனை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் அவருக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விஜய்யால் உள்ளுக்குள் சிரிக்க மட்டுமே முடிந்தது.

“என்ன சார் இது உங்களால் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குத்தானே?”

இன்னும் இவர்களால் என்னவெல்லாம் கேட்க முடியுமென்று அமைதி காத்தான் விஜய்.

“இம்முறையாவது எங்களது கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லுங்கள் மிஸ்டர்.விஜய்.”

நிரூபர்களில் ஒருவர் சத்தமாகக் கேட்க, “உங்களுக்கு பதில் தானே வேண்டும்.. சொல்லுகிறேன்” என்ற விஜய் அனைவரையும் சுற்றி ஒருமுறை தனது கழுகு பார்வையை வீசினான்.

“சட்டம் ஒரு இருட்டறை”, இதை நான் சொல்லவில்லை.. “பேரறிஞர் அண்ணா சொன்னது” என்றவனாக தனது கண்ணாடியை அணிந்தபடி நடந்து சென்றான்.

நீதிமன்றத்திலிருந்து ஆதிராவை காண்பதற்காக விஜய் மருத்துவமனை வந்திருந்தான்.

“இப்போது தான் குண்டினை எடுப்பதற்காக அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று செவிலியர் சொல்ல அங்கிருந்த இருக்கையில் ஓய்ந்து போனவனாக அமர்ந்தான்.

அறுவைசிகிச்சை முடிந்து வெளியில் வந்த மருத்துவர், “குண்டினை எடுத்தாச்சு மிஸ்டர். விஜய்.. நௌவ் ஷீ இஸ் ஆல்ரைட்.. நான்கு மணிநேரத்தில் மயக்கம் தெளிந்துவிடும்,” என்றவறாக அங்கிருந்து அகன்றார்.

ஆதிரா மயக்கத்திலிருப்பதால் தனது காவல்நிலையம் புறப்பட்டான் விஜய். வழக்கம்போல் அவனை திட்டுவதற்காக காத்திருந்தார் செல்வகுமார்.

அவர் என்ன பேசுவார் என்பதை யூகித்திருந்த விஜய், அவர் வாய் திறப்பதற்கு முன்பே.. “அவர் தான் குற்றவாளியென உங்களுக்கும் தெரியும்,” என்ற விஜய்… கான்ஸ்டபிள் மணியின் அருகில் சென்று, “என்ன மணி கந்தனை எங்கு வைத்திருந்தோம்” எனக் கேட்டான்.

விஜய் கேட்டதும், “பின்புறம் கீழே இருக்கும் இருட்டறையில் சார்”.. என்று மறுநொடி தடுமாற்றத்துடன் பதிலளித்தார் மணி.

“ரைட்… அப்போ கந்தனிடம் கோர்ட்டில் என்ன சொல்லவேண்டுமென ஓதியது நீங்கள் தான் இல்லையா?.”

விஜய் அவ்வாறு கேட்டதும் மணிக்கு வியர்த்து வழிந்தது.

நடப்பதை செல்வகுமார் அமைதியாக கவனித்தபடி இருந்தார்.

உறையிலிருந்து துப்பாக்கியினை எடுத்த விஜய், அதனை அருகிலிருந்த மேசையின் மீது வைத்தான்.

துப்பாக்கியை விஜய் எடுத்ததும் அரண்டு போன மணி, விஜய்யின் காலில் விழுந்து “மன்னித்துவிடுங்க சார்.. பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்துட்டேன்” என்றார்.

“இறந்து போன பெண்களில் ஒருவர் உங்களது மகளாக இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பீர்களா?” விஜய் உறுமினான்.

“தெரியாமல் செய்துட்டேன் சார்”

“ஆமாம் எனக்குத் தெரியாமல் தான் செய்துட்டீங்க,” என்ற விஜய்.. “குற்றவாளிக்கு உதவி செய்த உங்கள் கண்முன் ஒரு நொடி கூடவா அந்த சிறுமி அபியின் நினைவு வரவில்லை… தயவுசெய்து நீங்களாவே இந்த வேலையை விட்டு சென்றுவிடுங்கள்.. ” சிங்கமென கர்ஜித்தான்.

இறுதியாக விஜய் கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து போன மணி அங்கிருக்கும் மற்ற காவலர்கள் யாரையும் பாராது தலைகவிழ்ந்தவாறு வெளியேறினார்.

“முக்கிய பொறுப்பிலிருப்பவர்கள் பணத்திற்கு விலைப்போகும் வரை குற்றவாளிகள் தண்டனைப் பெற போவதில்லை.” செல்வகுமாரை நேருக்கு நேர் பார்த்துக் கூறினான்.

“ரம்யாவிற்கு என்ன ஆனது?”

விஜய் கூறியது உண்மையென உணர்ந்தாலும், தம்மால் என்ன செய்ய முடியுமென்கிற நிதர்சனம் புரிந்ததால் தன்னுடைய அடுத்த கேள்வியை கேட்டார் செல்வகுமார்.

நடந்ததைக் கூறிய விஜய், ரம்யாவை கண்டுபிடிக்க அப்பகுதி ஆய்வாளரை அனுப்பி வைத்திருப்பதாக விஜய் சொல்லிய நேரம் அந்த ஆய்வாளரே அலைபேசியில் அழைத்திருந்தார்.

“சார் ஆற்றுப்பாலத்திற்கு கீழே ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக தகவல் வந்துள்ளது. நான் இப்போது அங்கு தான் சென்று கொண்டிருக்கிறேன்.”

தகவலறிந்த விஜய் தானும் விரைந்தவனாக ஆற்றுப்பாலத்திற்கு சென்றான். அங்கு கிடக்கும் பெண்ணின் உடல் ரம்யாவுடையது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதமானது.

“ரம்யா இறந்து இரண்டு மணிநேரம் ஆகிறது.” பரிசோதித்த மருத்துவர் சொல்லியதும், தான் வகிக்கும் பதவி மீது எல்லையற்ற கோபம் கனன்றது. விரும்பி ஏற்ற காக்கிச்சட்டை , இப்போது அணிந்திருப்பதற்கு உடல் கூசியது. குற்றவாளி யாரென்று தெரிந்தும் அவனை ஒன்றும் செய்ய முடியாத தன்னிலையை வெறுத்தவனாக அங்கிருந்த கல்மீது சென்றமர்ந்தான் விஜய்.

விஜய்யிடம் எவ்வித பயமுமின்றி “அனைத்திற்கும் காரணம் நான்தான்”.. மிதப்பாகக் கூறிய ரவீந்திரன் நேரே சென்றது அமைச்சரின் வீட்டிற்கு.

அங்கு அவரை வரவேற்போர் யாருமில்லை. இவருக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென மீனாட்சி வழக்கம்போல் தன்னுடைய சாம்ராஜ்ஜியமான அடுக்கலைக்குள் நுழைந்துவிட்டார். வந்திருக்கும் தனது தந்தையை அருவெறுப்பாய் பார்த்த ராஜேஷ், “நீயெல்லாம் மனிதனா” எனும் விதாமாய் பார்வையாலே அவரை எரித்துக் கொண்டிருந்தான்.

சண்முகபாண்டியன் அவர் வந்திருப்பதை அறிந்தும் நிமிர்ந்து பார்த்தாரில்லை. இவை தான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்பதைப்போல் அனைவரையும் அலட்சியம் செய்த ரவீந்திரன் வரவேற்பறையின் ஒரு மூலையில் கணவனின் வருகையைக்கூட உணராது அழுகையில் கரைந்துக் கொண்டிருக்கும் நீலாவின் அருகில் சென்று, “வா நீலா நம் வீட்டிற்கு செல்லலாம்” என்று மனைவியின் கை பிடித்தார்.

இமைப்பொழுதில் ரவீந்திரனின் பிடியை உதறி தள்ளிய நீலவேணி, ஆவேசமாக வெகுண்டெழுந்து ரவீந்தரனின் சட்டையை பிடித்து.. அவரின் முகம் நோக்கி எச்சிலை உமிழ்ந்தார். ரவீந்திரன் முகம் அவமானத்தால் சிறுத்துப்போனது.

அங்கிருந்தோர் அனைவருக்குமே நீலவேணியின் செயல் அதிர்ச்சியாக இருந்தது. கணவனை வெளிக்கொண்டு வர அவ்வளவு கெஞ்சியவர் இப்போது செய்த செயல் யாராலும் நம்பமுடியவில்லை.

“நீலா, நீயும் மற்றவர்களைப்போல் என்னை நம்பவில்லையா?” ரவீந்தரனின் கண்களில் முதலை கண்ணீர்.

இகழ்ச்சியாய் புன்னகைத்த நீலவேணி, “அப்போ நீங்க ஆசையா பச்சை குத்திக்கிட்ட பாம்பு படம் எங்கே. இனியும் என் கண் முன்னே நிற்காதே, உன்னை பார்த்தாலே உடலெல்லாம் எரிமலையாய் எரியுது” என்றவர், “எனக்கு தாலிகட்டிய அந்த ஆளு இறந்து இரண்டு நாட்களாகிறது” எனக் கூறியவராய் அடுக்கலைக்குள் நுழைந்து குடம் தண்ணீரை கொண்டு வந்து வரவேற்பறையின் கூடத்தில் நின்று தன் தலைமீது மொத்தமாய் கவிழ்த்தார்.

“இதற்கான அர்த்தம் என்னவென்று நான் சொல்லி புரியத்தேவையில்லை” என்ற நீலவேணி வாசலை நோக்கி பார்வையை செலுத்த.. அப்போதும் தன்னுடைய தவறினை உணராத ரவீந்திரன் “இருப்பவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு ஆயிரம் வீடு” என இரட்டை அர்த்தத்தில் கூறி நிதானமாகவே அங்கிருந்து வெளியேறினார்.

ரவீந்திரன் வெளியேறியதும் ஈரத்தோடு தரையில் மண்டியிட்டு கதறி துடிக்கும் தங்கையை காண முடியாது சண்முகபாண்டியன் அறைக்குள் சென்று இதுவே அவனுக்கான தண்டனையென மனதோடு நினைத்தார். ராஜேஷ் ஓடிச்சென்று அன்னையைத் தாங்கினான்.

ஏதோ சிந்தனையோடு கல்லில் அமர்ந்திருந்த விஜய்யின் தோளை அப்பகுதி ஆய்வாளர் தொட, “ஏதேனும் தடயம் உள்ளதா” என விஜய் கேட்க இல்லையென்ற பதிலே அவரிடமிருந்து வந்தது.

“உடலில் சிறு கீறல் கூட இல்லை சார், எப்படி இறந்திருப்பாரென்று யூகிக்கக்கூட முடியவில்லை. கழுத்தை நெறித்து கொன்றிருந்தாலும், அதற்கான ஆதாரமாக கழுத்தில் சிறு வீக்கம் கூட இல்லை. வெளித்தோற்றத்தை வைத்து எதுவும் கணிக்க முடியவில்லை. ஒருவேளை விஷமளித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறுவழியா என்பது உடற்கூறு ஆய்விற்கு பிறகே தெரியும் சர்.”

அவருக்கு ஒரு நன்றியை தெரிவித்த விஜய் இதற்குமேல் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறினான்.

ரம்யாவின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடன் சென்ற விஜய்யிடம் ஆதிரா கண்விழித்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

அம்பிலிருந்து புறப்படும் வில்லாக தன்னவளிருக்கும் அறைக்கு விறைந்தான். அவனுக்கென்று இவ்வுலகில் இருக்கும் ஒரே ஜீவன் ஆதிரா மட்டுமே, காட்டில் அவளின் நிலையைக்கண்டு உறைந்த விஜய்யின் இதயம் இப்போது தான் சீராகத் துடித்தது. அவனின் அரவம் உணர்ந்து மூடியிருந்த கண்களை திறந்த ஆதிரா அவனை நோக்கி கையினை நீட்ட, ஆதரவாக தன்னவளின் கரம் பிடித்தவன் ஒன்றும் பேசாது அவளுக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“ஆதி இப்போ எப்படி இருக்கிறது, வலி இருக்கா”.. விஜய்யின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.

அவனின் அழுகை ஆதிராவுக்கு பேரதிர்ச்சி. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் விஜய் கண்ணீர் சிந்தியதில்லை, இது அவனுடன் ஒன்றாக வளர்ந்ததன் மூலம் அவள் தெரிந்து வைத்திருந்தது.

அப்படிப்பட்டவன் இன்று தனக்காக அழுவது அவளுக்கு பிடித்தது. தனக்காகவும் அழுவதற்கு ஆள் இருக்கின்றதே என்ற சந்தோஷத்தில் அவளது மனம் சந்தோஷப்பட்டது.

“தன்மேல் இவ்வளவு நேசம் வைத்திருக்கும் அளவிற்கு தான் என்ன செய்தோம்.” எப்போதும் கேட்கும் கேள்வியை இன்றும் அவளுடைய மனது கேட்டது.

எப்போதும் இக்கேள்வி தோன்றும் தருணங்களில் யோசிப்பதை தடைசெய்பவள் இன்று யோசிக்க கிடைத்த பதிலில் அதிர்ந்தாள்.

இதெப்படி சாத்தியமென நிதர்சனம் புரிய விஜய்யின் பிடியிலிருந்த தன்னுடைய கரத்தை மெல்ல இழுத்துக் கொண்டாள்.

இவ்வளவு நேரம் அவள் ஒன்றும் சொல்லாது தன்னுடைய பிடியிலிருந்ததே ஆச்சரியம் தான் என்றவனின் மனம் அவளின் உரிமையான பிடிக்கு ஏங்கியது.

அளவு கடந்த காதல் இருப்பின் அதனை வெளிப்படுத்த விஜய்க்கு விருப்பமில்லை. அவளாக வரவேண்டுமென்கிற என்கிற எண்ணம் அவனுள். காதலில் தனித்திருக்கும் சுகத்தை விரும்பியே அனுபவிக்கின்றான்.

விஜய்யின் மனநிலையை கலைத்தது ஆதிராவின் குரல்.

“விஜய்…. ரம்யா?”

இப்போது அவளிருக்கும் நிலையில் ரம்யா இறந்ததை சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்த விஜய் எப்படியும் தெரியத்தானே போகிறது என்ற எண்ணத்தில் ரம்யா இறந்த செய்தியை தெரிவித்தான்.

“உன்னால் கூட அவளை காப்பாற்ற முடியவில்லையா விஜய்.”

ஆதிராவின் கேள்வி பவித்ராவை நினைவுபடுத்தியது. காலையில் அவள் கேட்ட வார்த்தைகளை நினைவுபடுத்தியது.

“உங்களால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லையே சார்.”

இவ்வார்த்தைகள் மீண்டும் மீண்டும் யாரோ அவனின் கன்னத்தில் அறைவது போலிருந்தது.

இவ்வளவு முயற்சித்தும் ரவீந்திரனின் முகத்திரையை கிழிக்க முடியவில்லை. “அடுத்து என்ன, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாதா?” மனதோடு பல கோபங்கள் இருந்தாலும் அதனை தீர்க்கும் மார்க்கம் மட்டும் அமையவில்லை.

“ரவீந்திரன் வழக்கு என்னாச்சு விஜய்?”

கோர்ட்டில் நடந்த அனைத்தையும் விஜய் தெரிவித்தான். ரவீந்தரனின் திமிரான பேச்சு உட்பட,

“நிர்பயா தொடங்கி பொள்ளாச்சி நிகழ்வு வரை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லையில்லையா விஜய். தெரிந்தே இவ்வளவு… தெரியாமல்? அப்படியே தண்டனை கிடைத்தாலும் காலம் கடந்திருக்கும். ‘காலம் கடந்த நன்றிக்கே மதிப்பில்லை எனும் போது காலம் கடந்த தண்டனைக்கு எப்படி மதிப்பிருக்கும்?’ இந்த சட்டத்திற்கு குற்றவாளிகளை தண்டிக்கவே தெரியாதா?”

அந்நொடி… ஆதிரா அவ்வாறு கேட்ட தருணம் விஜய் ஒரு முடிவெடுத்தான். நிச்சயம் அவனின் முடிவு குற்றவாளிக்கான முடிவாக அமையும்.

error: Content is protected !!
Scroll to Top