சோறு

தலைப்பு : சோறு

ஆசிரியர் : பிரியதர்ஷினி S

சோறு

“அப்பா ப்ளீஸ்ப்பா…” எட்டு வயது பிரணவ்வும், ஆறு வயது மிருதுளாவும் அவர்களின் தந்தை பிரதாப்பிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

“ஒருவாட்டி கூட்டிட்டுப்போப்பா…” மிருதுளா முகத்தைச் சுருக்கி பாவமாகக் கேட்டாள்.

“போன சண்டேதான ஹோட்டல் போயிட்டு சாப்பிட்டு வந்தோம். நேத்தும் நீங்கக்கேட்டிங்கன்னு ஆபீஸ் விட்டு வரும்போது நூடுல்ஸ் வாங்கிட்டு வந்தேன். ஒழுங்கா காலி பண்ணீங்களா? மீதியை எடுத்து குப்பையிலதான் கொட்டுனீங்க” என்ற பிரதாப், “இன்னைக்கும் ஹோட்டல் சாப்பாடுன்னா வேணாம்” என்று பிரதாப் நிர்தாட்சண்யமாக மறுத்தான்.

“அப்பா எப்பவும் இப்படித்தான். நீ வா மிருது… நாம அம்மாகிட்ட கேட்போம்” என்ற பிரணவ் தங்கையின் கைப்பிடித்து, அன்னை வசுமதி இருக்கும் சமையலறை நோக்கி அழைத்துச் சென்றான்.

பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வசுமதி இவர்களின் உரையாடல்கள் அனைத்தும் கேட்டிருந்தாள்.

பிள்ளைகள் இருவரும் அருகில் வந்ததும் அவர்களுக்கு முன்னாக மண்டியிட்டு அமர்ந்து, இருவரின் கரங்களையும் பற்றிக்கொண்ட வசுமதி, “அடிக்கடி வெளியில சாப்பிடக்கூடாது குட்டீஸ்” என்றாள்.

“இன்னைக்கு ஒருநாளும்மா ப்ளீஸ்…” சிறுவர்கள் இருவரும் ராகம் இழுத்துக் கெஞ்சினர்.

அவர்களைப் பார்க்கவே அன்னைக்கு உருகிவிட்டது போலும். கணவனைத் தேடி வந்தாள்.

தொலைக்காட்சியில் திரைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்த பிரதாப், வசுமதி தனக்கு முன் வந்து நின்றதுமே…

“ரெண்டு பேருக்கும் சப்போர்ட் பண்ணிட்டு வந்து என்கிட்ட பேசாத வசு. ஹோட்டலுக்கு போனா(ல்) காசு அதிகம் செலவாகும். செலவானாலும் பரவாயில்லை… வாங்குற சாப்பாட்டுல பாதிக்கூட சாப்பிடமாட்டாங்க. அவ்வளவும் வேஸ்ட் ஆகும்” என்று தனது மறுப்பை வேகமாக முன் வைத்தான்.

“அப்பா இல்லப்பா… இந்த டைம் நிஜமா வேஸ்ட் பண்ணமாட்டோம்ப்பா.

“பிரணவ், மிருதுளா இருவரும் பிரதாப்பின் இருபுறமும் வந்து நின்று அவனது தோளில் தொங்கியவாறு, தாடை பிடித்து ஆட்டிக் கூறினர்.

“சாப்பாடு அவ்ளோ ஈசி கிடையாது. ஆனால் சாதரணமா என்னால சாப்பிட முடியலன்னு வச்சிட்டு எழுந்திடுறீங்க. அதெல்லாம் அடுத்து குப்பையில் தான் போடுவாங்க” என்ற பிரதாப், தன்னுடைய சிறுவயதில் ஒருவேளை உணவிற்காக அவனின் அன்னை, தந்தை இருவரும் வயலில் பட்ட கஷ்டங்கள் கண் முன்னே நினைத்துப் பார்த்தான்.

வயல் சேற்றில் கால் புதைய நடந்து பயிர்களுக்கு உரம் விசிறும் தந்தையின் வாடியத் தோற்றமும், இடுப்பு நோக உச்சி வெயிலில் களை அகற்றும் அன்னையின் வதங்கியத் தோற்றமும் நெஞ்சில் வலியைப் பரப்பி அவனின் முகத்தை கசங்கச் செய்தது.

குழந்தைகள் தனது முகம் பார்த்தே நின்றிருக்க நொடியில் சீரானான்.

“என்ன வேணும் சொல்லுங்க. அம்மாவை வீட்டிலே செய்துகொடுக்கச் சொல்றேன்” என்ற பிரதாப், பிள்ளைகள் இருவரும் கத்தி அழுது அடம்பிடிக்கவும் என்ன செய்வதென்று தெரியாது வசுமதியை திணறிப் பார்த்தான்.

“இன்னைக்கு ஒருநாள்… விடுங்க.” வசுமதி கூறிடவும் பிரதாப் யோசனையாக பிள்ளைகளைப் பார்த்தான்.

“ஃபுட் வேஸ்ட் பண்ணமாட்டோம் சொல்லுங்க, போலாம்” என்றான்.

“ஐ ஜாலி…” உடனடியாக அழுகையை நிறுத்தி துள்ளிக் குதித்த சிறியவர்கள் இருவரும், “ப்ராமிஸ்ப்பா” என்று கழுத்தில் கை வைத்து உறுதி அளித்தனர்.

“லாஸ்ட் மன்த் ஒரு ஹோட்டல் போனோமே, அங்கப்போகலாம்ப்பா” என்று பிரணவ் சொல்ல, “அங்க தான் நாமளே எடுத்து வச்சு சாப்பிடலாம். அங்கவே போலம்ப்பா” என்றாள் மிருதுளா.

“அங்கவே கூட்டிட்டுப்போறேன்” என்ற பிரதாப், “ஆனால் இதுதான் ஹோட்டல் போறது கடைசி. இனி அடிக்கடி ஹோட்டல் ஃபுட் கிடையாது” என்றான். கண்டிப்புடன்.

“டன்” என்ற சிறுவர்கள் உணவு விடுதி செல்ல ஆயத்தமாக உற்சாகமாகத் தங்களின் அறைக்குள் ஓடி மறைந்தனர்.

“இப்போ இருக்கப் பிள்ளைங்களுக்கு உணவோட மதிப்பு எங்க தெரியுது” என்றவனாக தானும் எழுந்துச் சென்று கிளம்பி வந்தான் பிரதாப்.

அடுத்த அரைமணி நேரத்தில் மிகவும் பிரபலமான உயர்தர உணவு விடுதிக்கு வந்திருந்தனர்.

“புஃபே போலாமா? சர்வீஸ் ஸோனா?” பிரதாப் கேட்க,

“புஃபே போகலாம் பிரதாப். பசங்களுக்கு வேணுங்கிற அளவு மட்டும் எடுக்கலாம். நீங்க நினைக்கிற மாதிரி சாப்பாடு வீணாகாது” என்றாள் வசுமதி.

“குட்” என்ற பிரதாப் அதற்கான வழிமுறைகள் முடித்து தங்களுக்கான இடம் அழைத்துச் சென்றான்.

கண்ணாடி சுவருக்கு அந்தப்பக்கம் வெளிப்புறம் நன்கு தெரியும் வகையில் அவர்களுக்கான மேசை இருந்தது.

“நீங்க ரெண்டு பேரும் இங்கவே உட்கார்ந்திருங்க… உங்களுக்கு வேண்டியதை நானும் அம்மாவும் எடுத்து வர்றோம்” என்ற பிரதாப், உணவுகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி நகர,

“எங்களுக்கு என்ன வேணும்னு உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?” எனக் கேட்டான் பிரணவ்.

“உங்களுக்கு என்ன பிடிக்கும் தெரியாதாடா எனக்கு?” என்ற பிரதாப், “நீங்க எடுத்தா அதிகமா எடுப்பீங்க… அப்புறம் சாப்பிட முடியலன்னு சொல்லுவீங்க. வேஸ்ட் ஆகும்” என்றான்.

“இல்லை… எங்களுக்கு என்ன வேணுமோ, அதை நாங்கதான் எடுத்துப்போம்” என்று சிறுவர்கள் இருவரும் சிணுங்கி அடம் பிடித்திட பக்கத்து மேசை நபர்கள் இவர்கள் புறம் திரும்பினர்.

“இதுக்குத்தான் சொன்னேன். கேட்டியா!” என்று வசுமதியை முறைத்த பிரதாப், “இப்போவே ஆரம்பிச்சிட்டாங்க” என்றான்.

“விடுங்கப்பா… நான் பார்த்துக்கிறேன்” என்ற வசுமதி உணவுகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி பிள்ளைகளை அழைத்துச் சென்றாள்.

என்னதான் படித்து பெரிய வேலையில் இருந்தாலும், விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சிறு வயதிலேயே தந்தைக்கு உதவியாக சேற்றில் இறங்கி அதன் உழைப்பையும் வலியையும் அறிந்திருப்பவனுக்கு உணவின் சிறு பருக்கை வீணும் அத்தனை வேதனையைக் கொடுத்திடும்.

இந்த உணவு கிடைக்காது தவித்த நாட்கள் அதிகம். அதனின் தாக்கம் இன்றும் பிரதாப்பிடம் உள்ளது.

தற்போது எளிதாக அளவுக்கு அதிகமாகவே கிடைக்கிறது என்பதற்காக, அதனை அலட்சியப்படுத்துவதோ, வீணாக்குவதோ அவனுக்கு கடினமான ஒன்று.

சோற்றின் அருமை தெரிந்தவன் தன் பிள்ளைகளுக்கு, அதனின் மகத்துவத்தை உணர்த்த முடியாது கவலைக் கொள்கின்றான்.

பிள்ளைகளுடன் உணவெடுக்கச் சென்ற வசுமதி, உடன் பிரதாப் வரவில்லை என்றதும் இளையவர்களை அங்கேயே விட்டுவிட்டு கணவனை அழைக்க வந்தாள்.

“நீங்க வரலையா?”

“தனியா விட்டு வந்துட்டியா?” என்ற பிரதாப்,

“இருக்குங்கிறதுக்காக இஷ்டத்துக்கு எடுத்து வச்சு தட்டை நிரப்பி சாப்பிட முடியாம வீணாக்கப்போறாங்க. இதுல தனியா நான் எடுக்கணுமா? அவங்க சாப்பிட்ட மீதியை நான் சாப்பிட்டுக்கிறேன்” என்றான்.

“பிரதாப் என்னதிது?” என்ற வசுமதி, “இங்கையும் வந்து உன் சாப்பாட்டு சிக்கனத்தைக் காட்டணுமா?” என்றாள். அவளுக்குமே கணவன் அதிகப்படியாகச் செல்கின்றானோ என்றிருந்தது.

“ஒருவேளை சோத்துக்கு ஏங்கியிருக்கியா வசு?” என்ற பிரதாப், முகம் கசங்க, “உனக்கு என்னை புரியாது” என்றான்.

“என்னவோ” என்று பிள்ளைகளிடம் சென்றவள், இருவரும் கண்ணாடி சுவர் வழியாக வெளியே வெறித்திருப்பதைக் கண்டு, “அங்கென்ன வேடிக்கை? சாப்பாடு எடுத்துக்கலையா?” எனக்கேட்டு பிள்ளைகளின் கவனத்தை மீட்டாள்.

திடீரெனக் குழந்தைகளிடம் ஒருவித அமைதி.

கவனித்தாலும் அவர்களின் அமைதியை கலைக்க வேண்டாமென்று மௌனமாக இருந்தாள் வசுமதி.

எப்போதும் யார் தட்டில் அதிக உணவென்று போட்டிப் போட்டுக்கொண்டு நிரப்புபவர்கள் இன்று தங்களுக்குப் பிடித்தமான ஓரிரு உணவுகளை போதுமான அளவில் மட்டுமே எடுத்துக்கொண்டனர்.

அதில் ஆச்சரியம் அடைந்த வசுமதி, பிரதாப்பின் அறிவுரைக்காக மாற்றம் கொண்டுவிட்டனரோ என்று நினைத்தாள்.

குழந்தைகள் பிரதாப்பிற்கு தனித்தட்டில் அவனுக்குப் பிடித்த உணவை அவன் உண்ணுமளவில் வைத்து எடுத்து வந்தனர்.

“என்னவொரு அதிசயம்?” என்று வியப்பானப் பார்வைக் காட்டினான்.

“இதை சாப்பிட்டுட்டு வேணும்னா எடுத்துக்கிறோ(ம்)ப்பா” என்று ஒன்றாகக் கூறியவர்களிடம் அந்த அமைதி வீட்டிற்கு வரும்வரை நீடித்தது.

வரும் வழியில் கடற்கரைக்கு அழைத்துச் சென்றிருந்தான். அங்கும் சுண்டல், மாங்காய் சீவல், வறுத்த மீன், பஞ்சுமிட்டாய் என்று ஒன்றுக்கு இரண்டாய் அடம் பிடித்து வாங்குபவர்கள் பிரதாப்பே கேட்டபோதும் வேண்டாமென மறுத்திருந்தனர்.

உணவு விடுதிக்கு வந்தபோது கூட, அவர்களிடமிருந்த உற்சாகம், சிணுங்கல், பிடிவாத பாவனை யாவும் சில நிமிடங்களில் காணமல் போயிருந்ததோடு இந்நேரம் வரை நீடித்திருப்பதன் காரணம் தெரியாது பிரதாப் குழந்தைகளையே கவனித்திருந்தான்.

“என்னாச்சுங்க? பிள்ளைங்களையே ஆராய்ஞ்சிட்டு இருக்கீங்க?” என்று வசுமதி கேட்க, “எப்படி இந்த மாற்றம்னு யோசிக்கிறேன் வசு. ஒருவாய் சாப்பிட்டு இந்த ஃபுட் வேணாம் அப்படின்னு அடுத்தடுத்த சாப்பாட்டை எடுத்து வீணாக்குற ரெண்டு பேருமே இன்னைக்கு தட்டிலிருந்து சிந்தாம சாப்பிட்டாங்க. கவனிச்சியா நீ? அதுக்கான காரணம் என்னன்னு யோசிக்கிறேன்” என்றான்.

“ஒருவேளை அப்பா பேச்சைக் கேட்கணும் முடிவு பண்ணிட்டாங்களோ!” என்றவள், அடுத்தநாள் பிள்ளைகள் பள்ளிக்குச்செல்ல தேவையானவற்றை எடுத்து வைக்க சென்றுவிட்டாள்.

தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டிருந்த பிரதாப், பிள்ளைகளின் சத்தமின்றி இருக்கவே அவர்களின் அறைக்குள் தன்னுடைய அரவம் காட்டாது எட்டிப்பார்த்தான்.

பிரணவ், மிருதுளா இருவரும் பால்கனி தடுப்பு கம்பியில் கைகள் வைத்து தலை சாய்த்து நின்றிருந்தனர்.

தவறி விழுந்துவிட்டால் என்ற எண்ணத்தில் அவர்களின் அருகில் சென்ற பிரதாப் இருவரின் பேச்சுக்கேட்கவே அப்படியே நின்றுவிட்டான்.

“ரொம்ப பாவம்ல அண்ணா?” மிருதுளா குரலில் அத்தனை வாட்டம்.

“ஆமா மிருது. அந்த சாப்பாடு நல்லாவே இருந்திருக்காது. ஆனாலும் அதை அந்த பாப்பா வேக வேகமா சாப்பிட்டதை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிடுச்சு” என்று மிதமிஞ்சிய சோகத்தில் கூறினான் பிரணவ்.

அவர்களின் பேச்சுக்கான காரணம் இதுதான்…

உணவு விடுதியில் வசுமதி பிரதாப்பை அழைக்க வந்தபோது, பிரணவ் ஆர்வமாக தனது தட்டினை நிரப்ப முயல, தங்கை அருகில் இல்லாததை கண்டு, வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பக்கம் சென்றான்.

“அந்த மங்கி குட்டியா நல்லாயிருக்குல அண்ணா?” என்று ஒரு கையில் தன்னுடைய நீண்டக் குச்சியில் குரங்கினை அமர வைத்துக்கொண்டு, நான்கு வயது சிறுமியை தோளின் மீது அமர வைத்து சாலையின் ஓரம் நடந்துச் சென்றுகொண்டிருந்த குரங்காட்டியைக் காண்பித்துக் கேட்டாள்.

பரட்டைத் தலையும் முகம் முழுக்க தாடியோடு, அழுக்குப் படிந்த தேகம், கறையில் மூழ்கிய பழைய கிழிசல் ஆடை உடுத்தியிருந்தவர்களைப் பார்த்த பிரணவ், “ரொம்ப டர்ட்டியா இருக்காங்க. குளிக்கவே மாட்டாங்கப்போல” என்றான்.

“ஆமா” என்ற மிருதுளா, “அந்த பாப்பா அழுதுட்டே இருக்கு” என்றாள்.

அந்நேரம் குரங்காட்டி அங்கிருந்த குப்பைத்தொட்டியில் குனிந்து குப்பைகளைக் கிளறினார்.

அந்த வாடை தங்களுக்கு அருகில் வீசுவதைப் போன்று இருவரும் இங்கு மூக்கினை மூடிக்கொண்டனர்.

“இதைப்பார்த்தா எனக்கு வாமிட் வந்திடும். அப்புறம் சாப்பிட முடியாது. நீ வா! ஹனி சிக்கன் சூடா இருக்கு” என்று மிருதுளாவின் கைப்பிடித்து இழுத்தான்.

“அண்ணா அங்கப்பாரு.” மிருதுளா தன்னுடைய முட்டைக்கண்ணை விரித்துக் கைக்காட்ட, பிரணவ் என்னவென்று பார்த்தான்.

குப்பைத் தொட்டியில் கிடந்த பாலீத்தின் பை ஒன்றை எடுத்த குரங்காட்டி, அதனுள்ளிருந்து இரு பொட்டலங்களை எடுத்தார்.

“வீணாப்போன சாப்பாடு தானே குப்பையில் போடுவாங்க?” மிருதுளா கேட்க, பிரணவ் ஆமென தலையசைத்தான்.

“அதையெதுக்கு அந்த தாத்தா எடுக்குறாங்க?” மிருதுளா கேட்கும் போதே, குப்பைத் தொட்டியின் அருகில் அமர்ந்த குரங்காட்டி தன்னுடைய இரண்டு கால்களிலும் குரங்கு மற்றும் சிறுமியை அமர்த்திக் கொண்டு, தரையில் வைத்து அப்பொட்டலங்களில் ஒன்றைப் பிரித்தார்.

உணவு மொத்தமாக வீணாகியிருந்தது. பார்க்கவே பூஞ்சைகள் பூத்து என்னவோ போலிருந்த உணவை எவ்வித முகச்சுளிப்புமின்றி கையில் அள்ளிய குரங்காட்டி, குழந்தைக்கு ஒருவாய், குரங்குக்கு ஒருவாய், தனக்கு ஒருவாய் என்று மாற்றி மாற்றி ஊட்டினார்.

குழந்தையோ, அவரோ முகத்தில் எவ்வித அசூசையான பாவனையைக் காட்டவில்லை. மாறாக இந்த வேளை உணவு கிடைத்தாயிற்று, வயிறார உண்டாயிற்று என்ற பொலிவு மட்டுமே.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரணவ், மிருதுளாவுக்குதான் குமட்டிக்கொண்டு வந்தது. அத்தோடு என்னவோப்போலிருந்தது.

இருவரும் அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவையும், குரங்காட்டி கையிலிருந்த உணவையும் மாற்றி மாற்றி பார்த்தனர்.

உண்டு முடித்து எழுந்த குரங்காட்டி மற்றொரு பொட்டலத்தை தன்னுடைய தோளில் மாட்டியிருந்த துணி மூட்டையில் வைத்துக்கொண்டு, குழந்தையை இன்னொரு தோளிலும், வைத்திருக்கும் குச்சியில் குரங்கினை ஏற்றி பிடித்துக்கொண்டவராக நடக்கத் தொடங்கியிருந்தார்.

அக்காட்சி இன்னமும் சிறுவர்களிடத்தில் எஞ்சி நின்றது.

“ஏற்கனவே கெட்டுப்போன சாப்பாடு அது. அதை பையில வேற எடுத்துக்கிட்டுப் போனார். அதையும் சாப்பிடுவாங்கல” என்றான் பிரணவ்.

“பாவம் அவங்க” என்ற மிருதுளா, “அம்மா எவ்ளோ டேஸ்டா செஞ்சிக் கொடுத்தாலும் ஈசியா நல்லாயில்லைன்னு தூக்கிப் போட்டுடுறோம்ல” என்று முகம் சுருங்கக் கூறினாள்.

“நாம வீணாக்குற சாப்பாடு கூட நிறையப் பேருக்கு கிடைக்கிறது இல்லல மிருது” என்ற பிரணவ், “இதுக்குத்தான் அப்பா ஃபுட் வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்றாங்க” என்றான்.

“ஆமாண்ணா” என்ற மிருதுளா, “அந்த பாப்பா சாப்பாட்டுக்குத்தான் அழுதுச்சுப்போல. சாப்பிட்டதும் அழல” என்றாள்.

“நிறையப்பேருக்கு இங்க சாப்பாடே கிடைக்கிறது இல்லை மிருது. உனக்கும் எனக்கும் வேணுங்கிறது கிடைக்குது. அதான் அதோட கஷ்டம் தெரியல நினைக்கிறேன்” என்ற பிரணவ், “இனி ஃபுட் வேஸ்ட் பண்ணக்கூடாது மிருது. முடிஞ்சா பசியில இருக்கவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம்” என்றான்.

“கண்டிப்பா அண்ணா” என்ற மிருதுளாவின் முகத்தில் மலர்ச்சி. அவளின் பிரதிபலிப்பு புன்னகையாக பிரணவ்விடம்.

பிள்ளைகளின் பேச்சினை முழுதாய் கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்த பிரதாப்பிடம் ஆத்மம் நிறைவு கொண்டது. அவனது அதரங்கள் நீண்டு விரிந்தது. மனதில் ஒருவித நிம்மதி குடிக்கொண்டது.

(சோறு… அதானே எல்லாம்.)

 

 

பசியின் மொழியைப் பேசும் வெண்மையான கவிதை நீ,
பணக்காரன் தட்டிலும் ஏழையின் கனவிலும் ஒரே மதிப்பு நீ.
வியர்வைத் துளிகள் விதைத்த வயலின் வெற்றி நீ,
உயிர்கள் நாள்தோறும் எழுந்து நிற்கும் காரணம் நீ.

அம்மா கைப்பிசைந்த ஒரு பிடி சோற்றில்,
ஆயிரம் அன்புகள் அமைதியாக மறைந்திருக்கும்.
உலகம் எவ்வளவு மாறினாலும்,
பசியை வெல்லும் முதல் மருந்து நீதான்…

சோறு🍚.

 

 

(கதையில் வரும் குரங்காட்டி நான் நேரில் கண்டு என் மனதை கனக்கச் செய்த மனிதர். அவர் தந்த தாக்கமே இந்த சிறுகதை.)

error: Content is protected !!
Scroll to Top