தழலின் தவம் 2
நுளம்ப நாட்டு இளவரசன் சாருமையன் நுளம்பன் (கதையின் நாயகன்) தன் புரவியின் மீது ஆரோகணித்தபடி அரண்மனை வாயிலை அடைந்தான்.
இளவரசனின் வருகையைப் பறைசாற்றும் விதமாக, கோட்டை மதில்களில் நின்றிருந்த வீரர்கள் கொம்புகளை முழங்கி, முரசுகளை அடித்தனர். ஓங்கி உயர்ந்த கோபுரங்கள், மாபெரும் கொத்தளங்கள், வாய்ப்பிளந்த அகழி என நுளம்ப அரண்மனை தலைநிமிர்ந்து ஆணவத்துடன் நின்றிருந்தது.
கோட்டையின் மேல் நுளம்ப நாட்டின் கொடி தனக்கு நிகர் எவருமில்லை என்பது போல காற்றில் பறந்தது. கொடியின் ஒருபுறம் அந்நாட்டின் சின்னமான பத்ம நந்தியும், மறுபுறம் சிவபெருமானின் ஆயுதமான கட்வாங்கமும் ரத்தநிற பொன் நூலால் பின்னப்பட்டு ஒளிர்ந்தது.
புரவியிலிருந்து லாவகமாகக் குதித்த சாருமையன், ஓட்டமும் நடையுமாக அரண்மனை முற்றத்தைக் கடந்தான். இருபது அகவை நிறைந்த இளவரசன் மேனி தேன் நிறத்தில் ஒளிர்ந்தது, இளமையும் வீரமும் திரண்டு வாளிப்பான தோற்றம் கொண்டிருந்தான். அவனின் தோள்களில் சுருள் சுருளான கேசம் புரண்டு அவனுக்குக் கம்பீரத்தைத் தந்தது.
வழியெங்கும் நின்றிருந்த காவல் வீரர்கள், சிரம் தாழ்த்தி வணங்கினர்.
அவர்களின் வணக்கத்தைத் தலையசைத்து ஏற்றுக்கொண்டவன், தன் அருகே விரைந்து வந்த அவனின் அந்தரங்கச் சேவகன் பூதகனை நோக்கி, “பூதகா! மாமன்னர் இப்போது எந்த மண்டபத்தில் உள்ளார்?” என்று வினவினான்.
“ஆலோசனை மண்டபத்தில் உள்ளார் இளவரசே!” என்று பணிவுடன் பதிலுரைத்தான் பூதகன். பின்பு ஏதோ சொல்லத் தயங்குவதைப் போல, “அத்துடன்…” என்று வார்த்தைகளை இழுத்தான்.
அவனது தயக்கத்தை உணர்ந்த இளவரசன், ‘மேற்கொண்டு கூறு’ என்பதைப் போலப் புருவங்களைச் சுருக்கி ஏறிட்டான்.
பூதகன், சற்றே குரலைத் தாழ்த்தி, “தங்கள் பாட்டனார் ரணபத்ர நுளம்பர் தங்களைக் காண வேண்டும் என்று பணித்துள்ளார் இளவரசே. தாங்கள் வருவதற்கு முன்பே, காலை முதல் இரண்டு முறை சேவகர்களை அனுப்பித் தங்களைப் பற்றி விசாரித்து விட்டார்,” என்று கூறினான்.
“முதலில் மன்னரைச் சந்தித்துவிட்டு, பிறகு பாட்டனாரைக் காணச் செல்கிறேன்” என்று கூறியபடியே இளவரசன் ஆலோசனை மண்டபத்தை நோக்கி விரைந்தான்.
அதே சமயம், ஆலோசனை மண்டபத்தில் முக்கிய ஆலோசனை நடந்து கொண்டிருந்தது.
“இந்த ஓலையைத் தகுந்த ஒற்றன் மூலம் உரிய இடத்திற்கு உடனே அனுப்பி வைக்கிறேன் அரசே,” என்று ஓலைநாயகம் பணிவுடன் கூறினார். பின்பு, அந்த ஓலைச்சுருளை எடுத்து அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெள்ளிக் குழாயினுள் பத்திரமாக இட்டார். அதன் மேல் நுளம்ப நாட்டின் அரச முத்திரையான பத்ம நந்தி இலச்சினையை அழுத்தமாகப் பதித்தார்.
நுளம்ப நாட்டின் அரசர் சாந்தவர்ம நுளம்பர், மிகச் சிறந்த சிவபக்தர், அமைதியும் கருணையும் தன் இருகண்களெனப் போற்றிப் பேணுபவர். குடிமக்களின் நலனை மட்டுமே தலையாயக் கடமையாகக் கொண்டு நல்லாட்சி புரிந்து வருபவர்.
ஆலோசனை மண்டபத்தினுள் நுழைந்த சாருமையன், மிகுந்த பணிவுடன் சிரம் தாழ்த்தி, “வணக்கம் அரசே!” என்று கம்பீரமாகக் கூறினான்.
அவனைக் கண்டு புன்னகைத்த மாமன்னர் சாந்தவர்மர், “வாருங்கள் இளவரசே!” என்று வரவேற்றார். பொதுவெளியில் அவர்கள் இருவரும் என்றுமே தந்தை – மகன் என்ற உறவுமுறையை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அரச மரபிற்கு ஏற்ப, ‘அரசன் – இளவரசன்’ என்று மட்டுமே அவர்களுக்கிடையே எப்போதும் நிலவும்.
ஓலைநாயகம் அரசரையும் இளவரசரையும் வணங்கி விடைபெற்றார். பின்பு இளவரசன், “அரசே, தங்களின் ஆணைப்படி தென்கிழக்கு எல்லையில் இருந்த நம் வீரர்களைப் பின்வாங்கச் சொல்லிவிட்டேன். இன்று நானே சென்று எல்லையைப் பார்வையிட்டேன்” என்றான்.
மண்டபத்தில் இருவரைத் தவிர யாரும் இல்லாததால் “ஆம் மைந்தா, தென்கிழக்குப் பகுதியில் வாணர் நாட்டுப் பகுதி உள்ளது. முன்பு போல இனி எல்லையில் சண்டை வேண்டாம். அந்நாட்டு இளவரசி இனி நம் நாட்டவள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்” என அரசர் கூறினார்.
இருவரும் உரையாடியபடி அரண்மனையின் நறுமணம் வீசும் வண்ண மலர்களைக் கொண்ட நந்தவனத்தையும் குளத்தையும் கடந்து அரண்மனையின் மற்றொரு பகுதியில் உள்ள அரசரின் அந்தப்புரத்தை நோக்கி நடந்தனர்.
அறையை அடைந்ததும் அங்கு சாந்தவர்ம நுளம்பரின் மனையாள் மற்றும் பட்டத்தரசி மயூரமாதேவி இருந்தார். அரசனுக்கு ஏற்ற அரசி அன்பும் பண்பும் அதனோடு தன் கணவரையே தெய்வமாக பூஜித்து வருபவர்.
அரச தம்பதியருக்கு இரு பெண்களும், கடைக்குட்டியாக இளவரசனும் பிறந்தனர். பெண்கள் இருவரும் திருமணம் முடித்து வெவ்வேறு நாடுகளில் உள்ளனர்.
மகனைக் கண்டதும் பூரிப்புடன் தாய்மை பொங்க “வா மகனே” என அவனை அணைத்து உச்சிமுகர்ந்தார். சிறுவனாய் இருக்கையில் அந்தப்புரத்தில் இங்கும் அங்கும் ஓடி விளையாடுவான். காலம் எத்தனை விரைவாகக் கடந்துவிட்டது.
இன்று யௌவன புருஷனாய் திருமணத்தை நோக்கியுள்ளான் என அரசியின் மனதில் எண்ண அலைகள் ஆர்ப்பரித்தன. பட்டத்தரசி என்னும் பட்டத்தைக் கடந்து தாயாகவே அத்தருணத்தில் உணர்ந்தார்.
அவற்றை நொடியில் உணர்ந்த அரசர் “அரசியாரே நானும் இங்குதான் உள்ளேன்” எனக் குறும்பாகக் கூறினார்.
மைந்தனின் மனதும் தாயைக் கண்டதும் நிர்மலமான அமைதியைக் கண்டது.
அரசியார் தானே தன் திருகரங்களால் கணவருக்கும் மைந்தனுக்கும் உணவு பரிமாறி எண்ணினார். அந்த தருணத்தில் தன்னை பட்டதரசியாக அல்லாமல் இல்லத்தரசியாகவே அவர் உணர்ந்தார். பட்டதரசியின் பார்வையை உணர்ந்த சிரம் தாழ்த்தி அகன்றனர் பணிப்பெண்கள்.
பசும்பொன் தட்டுகளில், வாழை இலை விரிக்கப்பட்டு, அதன் மீது ஆவி பறக்கும் சம்பா அரிசிச் சோறு பரிமாறப்பட்டது. தொடர்ந்து, நெய் மணம் கமழும் பருப்பு, அறுசுவை கூட்டும் கறிவகைகள், இனிய பாயசம் என வகைவகையான உணவுப் பதார்த்தங்களை அன்பும் கனிவும் ததும்பும் முகத்துடன் அரசரின் தட்டிலும், இளவரசரின் தட்டிலும் பட்டத்தரசி இட்டார்.
தாயின் அன்பிலும் அறுசுவை விருந்திலும் மனமும் வயிறும் நிறைந்த இளவரசன், சிறிது நேரத்தில் தாய் தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டு, தன் பாட்டனார் ரணபத்ரரைக் காண அவருடைய மாளிகைக்கு விரைந்தான்.
எழுபது அகவை நிரம்பிய ரணபத்ரரின் சிகை நரை படர்ந்து பஞ்சுப் பொதியெனக் காட்சியளித்தது . அவரை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், ‘ தளர்ந்துபோன முதியவர்’ என எள்ளல் செய்வர். ஆனால், அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரைப் பற்றி நன்குத் தெரியும்.
முதுமை அவருடைய உடலை மட்டுமே தழுவியிருந்ததே தவிர, அவரது மனதை அண்டவில்லை. தீட்சண்யமான பார்வையையும், கூர்மையான செவித்திறனையும், தீர்க்கமான சிந்தனையையும் கொண்டவர்.
அரசியலின் நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் தேர்ந்த வித்தகர், மறுபுறம் அளவான மது மாதுவுடன் நேரத்தை இன்பமாக ரசிப்பவர். அவருடைய மனையாள் சந்திரமதி.
முன்பு பல ஆண்டுகளாக ரணபத்ரர் – சந்திரமதி தம்பதியினர் நுளம்ப நாட்டை ஆண்டு கொண்டிருந்தனர். வயது மூப்பு காரணமாக, தன் மகன் சாந்தவர்மனிடம் அரியணையை ஒப்படைத்துவிட்டு, இந்த மாளிகைக்கு ஒதுங்கிவிட்டார் ரணபத்ரர்.
ஆனால், அவர் அரியணையிலிருந்துதான் விலகினாரே தவிர, அரசியலில் இருந்து ஒருபோதும் ஓய்வு பெறவில்லை.
தனி மாளிகையில் அவர் ஓய்வெடுப்பது போலத் தோன்றினாலும், அரண்மனையின் அந்தரங்க ஆலோசனைகள் தொடங்கி, எல்லைப்புறத்தில் வீசும் சிறு சலசலப்பு வரை அனைத்தையும் தன் ஒற்றர்கள் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
இளவரசன் சாருமையனுக்கு, வாணர் நாட்டு இளவரசி விநிதையைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற யோசனையை முதன்முதலில் முன்வைத்தவர் பாட்டனார் ரணபத்ரர்தான்.
இதைக் கேட்டதும், “முதியவருக்குச் சித்தம் கலங்கிவிட்டதா?” என்ற குழப்பமும் அதிர்ச்சியுமே குடும்பத்தார் அனைவரின் முகத்திலும் படர்ந்தது. அதற்கான வலுவான காரணமும் இருந்தது. நுளம்ப நாட்டிற்கும் வாணர் நாட்டிற்கும் இடையே எல்லைப் பகுதியில் அனுதினமும் பூசல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
எலியும் பூனையுமாகப் பகைமை பாராட்டும் இரு தேசத்து வாரிசுகளைத் திருமணம் செய்து வைத்தால் என்ன விபரீதம் விளையுமோ என்ற அச்சம் ஒருபுறம். அதைவிட, பரம்பரைப் பகைவர்களிடம் எப்படிச் சென்று பெண் கேட்பது என்ற தயக்கம் மறுபுறம்.
இப்படிப் பல கேள்விகள் அரசர் சாந்தவர்மனின் மனதில் எழ, தந்தையின் பேச்சில் ஏதோ குளறுபடி இருப்பதாக எண்ணியவர், சற்றும் தாமதிக்காமல் “உடனே அரண்மனை வைத்தியரை அழைத்து வாருங்கள்!” என ஆணையிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட எத்தனித்தார்.
அரசர் சாந்தவர்மன் அங்கிருந்து நகர முயன்றதும், ரணபத்ரர் மிக நிதானமாகப் பேசத் தொடங்கினார். அவர் குரலில் குழைவு, அன்பு, அக்கறை, கவலை எனப் பல உணர்வுகளும் குவியலாய் அடங்கியிருந்தன.
“சாந்தவர்மா! சற்று நில்… நான் கூறுவதை முழுமையாகக் கேள். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாம் வாணர் நாட்டோடு இப்படியே பகைமை பாராட்டிக் கொண்டிருப்பது? இந்தத் தீராத பகைக்கு ஒரு முடிவு வேண்டாமா? நமக்குப் பிறகு, உன் அருமை மைந்தன் சாருமையனும் இதே பகையைச் சுமந்துகொண்டு அலைய வேண்டும் என்பதுதான் உன் விருப்பமா?”
சற்று இடைவெளி விட்ட ரணபத்ரர், தன் மகனின் கண்களை ஊடுருவிப் பார்த்தபடி தொடர்ந்தார். “அன்று சாருமையன் உயிருக்கு ஆபத்தான தருணத்தில் இருந்தபோது, இளவரசி விநிதை மட்டும் அவனைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நாம் நினைத்துப் பார்க்க முடியாத அனர்த்தம் அல்லவா அரங்கேறி இருக்கும்!”
மகனின் மனதில் சலனம் ஏற்படுவதை உணர்ந்த அந்தத் தேர்ந்த ராஜதந்திரி, இறுதியாகத் தன் மகனை வீழ்த்தும் பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்தார்.
“பகைவனின் மகளே நம் குலக்கொழுந்தைக் காப்பாற்றியிருக்கிறாள் என்றால், இது அந்த எம்பெருமான் ஈசனின் திருவிளையாடல் என உனக்குத் தோன்றவில்லையா?” என்று ரணபத்ரர் நா தழுதழுக்கக் கேட்டதும், சாந்தவர்மனின் பிடிவாதம் முற்றிலுமாகத் தவிடுபொடியானது.
தந்தையின் வார்த்தைகளில் இருந்த உண்மையையும் தெய்வீகத்தையும் உணர்ந்தவராக, “தந்தையே! தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இது அந்த ஈசனின் திருவிளையாடல்தான்!” என்று நெகிழ்ச்சியுடன் கூறித் தன் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார்.
தந்தை சாந்தவர்மன் இத்தனை எளிதாகச் சம்மதம் தெரிவித்துவிட்டதைக் கண்டு, இளவரசன் சாருமையன் அதிர்ந்தான்.
சினத்துடன் “என்னால் இதை ஒருபோதும் ஏற்க இயலாது. ஆபத்தான தருணத்தில் வாணர் நாட்டு இளவரசி எனக்கு உதவிக்கரம் நீட்டினாள். அதை நான் மறுக்கவில்லை. அதற்காக அவளைத் திருமணம் செய்து கொள்வதென்பது என் கனவிலும் நடவாது பாட்டா!” என்று தன் முடிவைச் சற்றுக் கடுமையாகவே உரைத்தான்.
பேரனின் கோபத்தைக் கண்டு சற்றும் கலங்காத ரணபத்ரர், அவனைத் தன் அருகில் அன்புடன் இருத்திக்கொண்டார்.
“சரி சாருமையா, நீயே சொல்… உன் மூத்த தமக்கை திருமணமாகிச் சென்றுள்ள தேசம் எது?” என்று நிதானமாக வினவினார்.
பாட்டனாரின் கேள்வியின் ஆழம் புரிந்தது, குரலின் சுருதி குறைந்து “கதம்பர்கள் நாடு” என்றான் சாருமையன்.
“உன் இளைய சகோதரி?”
“வைதும்பர்கள் நாடு”
“இந்தத் திருமணங்களுக்கு முன்பு, அந்த இரு தேசங்களோடும் நம் நுளம்ப நாட்டின் உறவு எப்படி இருந்தது என்பதைச் சற்று நினைத்துப் பார்…”
“அனுதினமும் சண்டையும் சச்சரவுமாகத்தான் இருந்தது…” என்றான் இளவரசன் சற்றுத் தயக்கத்துடன்.
“இப்போது எப்படி இருக்கிறது?” என்று ரணபத்ரர் கேட்க,
“சமாதானம் நிலவுகிறது… ஆனால் பாட்டா, வாணர் நாடு என்பது…” என்று சாருமையன் பேச முயன்றான்.
அதற்குள் இடைமறித்த ரணபத்ரர், ” இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படிச் சண்டையிடுவது. அதற்கு ஒரு முடிவு வேண்டாமா? குடிமக்களின் நலனைச் சிந்தித்துப் பார் சாருமைந்தா. இன்று சாதாரண எல்லைப் பூசல் ஒரு நாள் போராக வெடிக்கும். அப்போது இருதரப்புக்கும் உயிர்ச்சேதம் பொருள் சேதம். விளைவை எண்ணிப் பார்”
இதற்கு விடையளிக்க இயலாமல் தத்தளித்தான் இளவரசன். மக்கள் நலன் என்ற மற்றொரு ஆயுதம் கொண்டு இளவரசனையும் வீழ்த்திவிட்டார் ரணபத்ரர்.
பாட்டனாரின் முடிவை எப்படி எதிர்கொள்வது என்றே சாருமையனுக்குப் புரியவில்லை.
தனக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் தாய் பட்டத்தரசியிடமும், பாட்டி சந்திரமதியிடமும் சென்று தன் ஆதங்கத்தைக் கொட்டிப் புலம்பினான்.
“உன் பாட்டனார் ஒரு செயலைச் செய்கிறார் என்றால், அதில் காரணம் இல்லாமல் இருக்காது மகனே…” என்று இருவருமே ஒரே குரலில் கூறிவிட்டனர்.
பாட்டனாரின் செயலால் குழப்பத்தில் இருந்தான் இளவரசன். சில நாட்களில் எதிர்பாராமல் இளவரசி விநிதையைக் காண நேர்ந்தது.
முன்பெல்லாம் இவனைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொள்ளும் அந்த வாணர் நாட்டு இளவரசி, இம்முறை முற்றிலும் மாறியிருந்தாள். அவனைக் கண்டதும் அவள் விழிகளில் கனிவு ததும்பியது.
எப்போதும் கடுகடுப்புடன் காணப்படும் அவளது வதனத்தில், மெல்லிய புன்னகை அரும்பியது. அவளது அந்த எதிர்பாராத மாற்றம், சாருமையனின் உள்ளத்தில் ஒரு மெல்லிய சலனத்தை ஏற்படுத்தியது.
அனைவரும் தயங்கி நின்ற வேளையில், பாட்டனார் ரணபத்ரர் தானே நேரடியாக வாணர் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று பெண் கேட்டார்.
அரசியலின் சூட்சுமங்களைக் கரைத்துக் குடித்த அந்தத் தேர்ந்த ராஜதந்திரிக்குப் பேசவா கற்றுக்கொடுக்க வேண்டும்? வாணர் நாட்டு மன்னரின் மனதை மிக எளிதாக மாற்றி, வெற்றிக் கனியுடனே நுளம்ப நாட்டிற்குத் திரும்பினார்.
பரம்பரைப் பகையை மறந்து, வாணர் நாட்டு அரசரும் தன் மகள் விநிதையைச் சாருமையனுக்கு மணம் முடித்துத் தர முழுச் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார்.
தொடரும் …
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
