4) மயிலாஞ்சி

மயிலாஞ்சி

 

அத்தியாயம்-4

 

கோவில் வாசலில் வந்து நின்ற காரின் சத்தம் கேட்டு, அனைவரின் பார்வையும் வாசலை நோக்கி திரும்பியது. அப்போது தான்‌ ரத்னாவும் அவள் தாய் தந்தையுடன் கோவில் உள்ளே நுழைந்தாள். காரில் இருந்து வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்தில் தடிமனான தங்க சங்கிலி, கையிலும் கை விரல்களிலும் தங்கம் தான் மின்னியது. அவன் இறங்கி வந்து நேராக அய்யனார் சிலையைப் பார்த்து தலைக்கு மேல் கை கூப்பி வணங்கி,

 

“அய்யனாரப்பா இந்த ஊரு நிம்மதியா இருக்க நீ தான் அருள்புரியனும்” என வேண்டி கொண்டு கண்ணை திறந்தவன் பார்வை அதியன் மீது விழுந்தது. அப்படியே திரும்பி தேஜஸ்வினியைப் பார்த்தான். அவன் பார்வை அவளைத் துளைப்பது தெரிந்து, தேஜஸ்வினி அதியன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

 

கருணாகரன் வேப்பத்தூரின் பெரிய பண்ணையார், கந்து வட்டி, ஸ்பீடு வட்டி, காரார் வட்டி, என்று பணத்தின் மீதே புரளும் பணத்திமிர் பிடித்த அரக்கன். வட்டி சரியாக வரவில்லை என்றாள் அந்த வீட்டு பெண்களை துன்புறுத்துவது, அந்த குடும்பத்தை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துவது என்று அவன் செய்யும் அக்கிரமத்திற்க்கு அளவே இல்லை. அவனால் பாதிக்கப்பட்ட ஆட்கள் கூட, அவனை பற்றி வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பயமுறுத்தி வைத்திருப்பான். போலீசும் அரசியல்வாதிகளும் கூட அவன் பணபலத்தின் முன் தூசு தான். இதில் அதியன் மட்டும் அவனை மதிக்காமல் இருப்பதும். அவன் பணத்திமிருக்கு சவால் விடுவது போல இருக்கும். அதற்கு பழிவாங்க இதுவே சரியான நேரம் என்று வம்பாய் வந்து நிற்கிறான்.

 

“என்ன பெருசு.. பேரனுக்கு கல்யாணம் ஆனதையே மறைச்சிட்ட.. கல்யாண கறி விருந்து சாப்பிட முடியாம போச்சு.! ஆனா பொண்ணு நம்ம ஊர் பொண்ணு இல்லையே. இந்த ஊர் வழக்கப்படி சொந்தத்துல பொண்ணு எடுத்து பொண்ண கட்டுறது தானே! சுத்துப்பட்டுல கூட இதானே வழக்கம். ஊருக்கு ஒரு நியாயம் பெரிய வீட்டுக்கு ஒரு நியாயமா? என்ன அதியன் போலீஸ்கார் வடநாட்டு பொண்ண கல்யாணம் பண்ணி புரட்சி பண்றீங்களா.” என கருணாகரன் கேட்க, அதியன் கோபத்தில் கையை முறுக்கி ஒரு அடி முன்னே போக, நித்தியன் தடுத்தான்.

 

“அண்ணா.. வேண்டாம் நம்ம சாமி கும்பிட தான் வந்தோம்.. சண்டை வேண்டாம்” என்க, அதியன் முகத்தில் அத்தனை கடுமையான கோபம் இருந்தது.

 

“இல்ல நித்தி அவன” என்றவன்

 

“அதியா வேணாப்பா வா போகலாம்” என்றார் ராஜன்.

 

“இருங்க கருணாகரன் கேட்டதுல என்ன தப்பு இருக்கு” என மங்களம் இது தான் நேரமென பேசவும், ராஜன் தன் தங்கையை கோபமாகப் பார்த்தார்.

 

“எங்ககளையும் இந்த ஊர்ல மாமன் மச்சான்னு மாத்தி மாத்தி தானே கல்யாணம் பண்ணி தானே கொடுத்தீங்க, திடீர்னு எங்கயோ இருந்து பாசை தெரியாத பொண்ண கட்டிக்கிட்டு வந்தா என்ன அர்த்தம்ங்குறேன்.”

 

“மங்களம்..!” என பரமசிவம் தாத்தா தடியை தரையில் ஊன்றி கத்த. மங்களம் தான் எதிர்த்து நிற்பது தன் சொந்தம் உடன் பிறந்தவனின் குடும்ப என்பதையே மறந்தார். பரமசிவம் தாத்தாவின் குரலில் மங்களம் வாயயை மூடிக்கொண்டு நின்றார்.

 

“இங்க பாருங்க ஊர் வழக்கத்தை மீறி இவன் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். அதுக்கு பஞ்சாயத்து கூடி ஒரு முடிவு எடுக்கணும் நாளைக்கு பஞ்சாயத்து கூட்டுங்க” என கருணாகரன், அதியனை விடுவதில்லை என்பது போல எகத்தாளமாக பேசினான்.

 

“கருணாகரா இப்போ போய் இதெல்லாம் பேசிட்டு. அவன் போலீஸ் நாலு இடம் போறவன். போன இடத்துல பொண்ண பிடிச்சு இருக்கும். கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான். அதுக்காக இத பஞ்சாயத்து பண்ணனுமா” என்று ஊர்ரார் ஒருவர் கேட்க.

 

“இன்னைக்கு இவன் பண்ணுவான். நாளைக்கு அவன் தம்பி பண்ணுவான். இப்படி ஒவ்வொருத்தரும் பண்ணிட்டு போன நம்ம ஊர் பொண்ணுங்க வாழ்க்கை என்னாகுறது பேசி இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும்” என கருணாகரன் சொல்ல, அதியனின் கோபம் தான் இரண்டு மடங்காக ஆனது. அவன் கோபத்தில் தேஜஸ்வினியை அழைத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தான். அவன் குடும்பமும் அவனோடு சென்றது. ரத்னா வயிற்றில் கனல் தகிக்க எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை மங்களம் இழுத்துக்கொண்டு போனார்.

 

அதியன் வீட்டின் வாசலில் ஜீப்பை நிறுத்தினான். அனைவரும் இறங்கியதும்’ அவன் மட்டும் ஜீப்பை கிளப்பிக் கொண்டு போக, ‘கிள்ம்பிட்டானா..! போச்சி வரும் போது எப்படி வருவானோ?’ என நித்தியன் மனதில் நினைத்துக் கொண்டே உள்ளே சென்றான். செண்பகம் புலம்பிக் கொண்டு உள்ளே போக. தாத்தாவும் ராஜனும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்தனர்.

 

“ஆர்த்தி நீ.. இவங்கள பூஜை அறையில விளக்கெத்த வை நான் அதியனைப் பார்த்துட்டு வரேன்.” என நழுவ பார்த்தவனை, ஆர்த்தி பிடித்துக் கொண்டு,

 

“எதுக்கு நீங்களும் ஊத்திக்கிறதுக்கா? மாமான்னு பார்க்க மாட்டேன்.. கால உடைச்சு உட்கார வச்சிடுவேன் பேசாம வாங்க” என்றாள் ஆர்த்தி,

 

“என்னடி உன் தம்பி போனப்போ அமைதியா இருந்துட்டு‌.. இப்ப வந்து என்னை அடக்குற” என எழிலன் நியாயம் கேட்க, அவளா விடுவாள்.

 

“அவன அடக்க அவன் பொண்டாட்டி இருக்கா, அவ பார்த்துப்பா.. நீங்க வாங்க” என ஆர்த்தி எழிலன் இடுப்பில் கிள்ளி இழுத்துக் கொண்டு போனாள். தேஜஸ்வினி, அதியன் வரவில்லை என்று? வாசல்படியில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன தேஜூ வா புஜை அறையில விளக்கு ஏத்தனும்ல” என ஆர்த்தி சைகையிலும் சொன்னாள். தேஜஸ்வினிக்கு ஒருவாறு புரிந்தாலும்? அதியனுக்காகவே அவள் காத்திருந்தாள். அவள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“வா தேஜூ..! அதியன் லேட்டா தான் வருவான்” என்க, தேஜஸ்வினி அவளுடன் சென்றாள்.

 

ஆர்த்தி வாங்கி வந்த பித்தளை புது விளக்கை அலங்கரித்து வைத்தாள். தேஜஸ்வினி முகம் வாடி இருந்ததால் அவள் முகத்தை பிடித்து,

 

“இங்க பாரு.. இனி இது தான் உன் வீடு. எங்க வீட்டோட முதல் மருமக நீ. எதையும் மனசுல வச்சிக்காம, இந்த விளக்கை ஏத்தனும் புரிஞ்சிதா. அதியன் ரொம்ப நல்லவன் தான். அதே அளவுக்கு கோவக்காரன். குடும்பம் அவன் செய்யிற வேலை இது தான் அவன் உலகம். கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னவன், உன் கழுத்துல தாலி கட்டி இருக்கான்னான அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். அதெல்லாம் புரிஞ்சி அனுசரணையா நடந்துக்கனும் சரியா.” என ஆர்த்தி சொல்ல அவளுக்கு புரியவில்லை, ஆர்த்தி பேசியதை நித்தியன் ஃபோனில் ரெக்கார்ட் செய்து மொழி பெயர்த்து ஆர்த்தியிடம் கொடுத்தான்.

 

“ஏய் அக்கா இந்தா இத அண்ணிக்கிட்ட காட்டு” என்றான்.

 

ஆர்த்தி ஃபோனை வாங்கிப் பார்த்தாள். ஒடிசா மொழியின் எழுத்தைப் பார்த்தவள்,

“என்னடா இது.. முறுக்கு சுட்ட மாதிரி இருக்கு எழுத்து” என்க,

 

“இது தான் அவங்க மொழி.. நீ பாட்டுக்கு தமிழ்ல ஏதேதோ சொல்ற அவங்களுக்கு புரியுமா.” என்றான் நித்தி.

 

“ஆமா நான் இத மறந்துட்டேன் பாரேன்” என நித்தியன் ஃபோனை வாங்கி தேஜஸ்வினியிடம் கொடுக்க, அதைப் படித்துவிட்டு கண்கள் கலங்க ஆர்த்தியை அணைத்துக் கொண்டாள்.

 

“என்னடா” என ஆர்த்தி நித்தியனிடம் கேட்க,

 

“எமோஷனல் ஆகிட்டு போல.. சரி நீங்க வேலைய பாருங்க” என்று கூறிவிட்டு நித்தியன் சென்றுவிட.

 

ஆர்த்தி தேஜஸ்வினியை தேற்றி முகம் துடைத்து. தலையில் பூ வைத்து விட்டு ஆர்த்தியை விளக்கேற்ற வைத்தாள். செண்பகம் அதியனைத் தவிர எல்லோரும் பூஜை அறையில் இருந்தனர். தேஜஸ்வினி ஏற்றிய விளக்கு பிரகாசமாக எரிந்தது. பூஜை அறையில் இருந்து வெளியே வந்த தேஜஸ்வினி, தாத்தா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

 

“நல்லா இருமா பேத்தி” என்றார். தேஜஸ்வினி, அதியனின் அப்பா காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

 

செண்பகம் கொல்லைபுறம் கிணத்தடியில் அமர்ந்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார். “இதெல்லாம் என் குடும்பத்துக்கு தேவையா! இந்த சிறுக்கியால என்‌ குடும்ப மானமே போகுது. நாளைக்கு பஞ்சாயத்து கூட்டி இன்னும் எங்களை அவமானப் படுத்த போறானுங்க. ஐய்யோ.. ஐய்யோ.. எந்த ஜென்மத்து பாவமோ இப்படி என் புள்ள தலையில வந்து விழுந்து இருக்கே” என்று புலம்பி கொண்டிருந்தார்.

 

இங்கு ஆர்த்தியும், தேஜஸ்வினியும் இரவு உணவு சமைத்து முடித்து, சாப்பிட தயாராக எடுத்து வைத்துவிட்டு, எல்லோரையும் அழைத்தார். செண்பகம் வர மாட்டேன் என பிடிவாதமாக கொல்லைப்புறத்திலேயே அமர்ந்து இருந்தார். தேஜஸ்வினி ஆர்த்தியுடன் எல்லோருக்கும் பரிமாறினாள். மொழி புரியாவில்லை என்றாலும் ஆர்த்தி சைகையில் சொல்வதைப் புரிந்துக் கொண்டு அழகாக வேலை செய்தாள். அவளின் அந்த பொறுப்புணர்வு தாத்தாவுக்கும் ராஜனுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

 

செண்பகம் சாப்பிடாமல் அமரந்து இருந்ததால் தேஜஸ்வினி அவரிடம் போய் சாப்பிட அழைத்தாள் சைகையில்.

 

“ம்ம்.. இப்போ எனக்கு அது ஒண்ணு தான் முக்கியம் பாரு.. என் கண்ணு முன்னாடி நிற்காத போடி.. போடி போ” என கத்தி அவளை தோளைப் பிடித்து தள்ளிவிட. அவளுக்கு ஒரு மாதிரி ஆனது. ஆர்த்தி அதைப் பார்த்துவிட்டு ஓடி தேஜஸ்வினியை தோளணைத்துக் கொண்டு.

 

“ம்மா.. ஏன்மா இப்படி பண்ற! அவ என்ன பண்ணுவா பாவம் மொழி தெரியாம வந்துருச்சு. கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு திரிஞ்சவன் கல்யாணம் பண்ணிட்டு வந்தானேன்னு சந்தோஷப்படு” என்றாள் ஆர்த்தி,

 

“போடி உனக்கு என்ன தெரியும்.. அந்த கருணாகரன் பேசுனத கேட்டியில்ல. இதெல்லாம் உங்கப்பா தாத்தா மனச எவ்ளோ காயப்படுத்தும். இது வரைக்கும் நம்ம குடும்பத்து மேல ஒரு சொல்லு வந்திருக்கா! எல்லாம் இவளால” என்று செண்பகம் திட்டி தேஜஸ்வினியை முறைத்தார்.

 

“சரி விடு.. நீ வந்து சாப்ட்டுட்டு படு.. காலையில எவ்ளோ வேலை இருக்கு” ஆர்த்தி சொல்ல,

 

“வரேன் போ.. இவ மட்டும் என் கண்ணு முன்னாடி வர கூடாது சொல்லி வை” என செண்பகம் சொல்ல, ஆர்த்தி தேஜஸ்வினியை அழைத்து வந்து அதியன் அறையில் அமர்த்தினாள். தேஜஸ்வினி கை வீங்கி இருப்பதை ஆர்த்தி அப்போது தான் கவனித்தாள்.

 

தேஜஸ்வினி கையைப் பிடித்து,

“அச்சசோ என்ன இப்படி வீங்கி இருக்கு என்னாச்சு.” என ஆர்த்தி பதிறினாள். தேஜஸ்வினி கையை இழுத்துக் கொண்டு.

 

“ஒண்ணும் இல்லே சரி ஆகிடும்” என்றாள் சைகையில்.

 

“சரி ஆகிடுமா..! அப்படியே போட்டேன்னா பாரு” ஆர்த்தி அடிப்பது போல கை ஓங்க தேஜஸ்வினி சிரித்தாள்.

 

“உனக்கு நான் பேசுறது புரியுதோ இல்லையோ… கைய காட்டு எவ்வளவு பெருசா வீங்கி இருக்கு கொளவி கொட்டிருச்சா..” என்றவள் நித்தியனை அழைத்தாள்.

 

“என்னக்கா”

 

“பாட்டி கிட்ட சுண்ணாம்பு வாங்கிட்டு வாடா. கொளவி கொட்டி இருக்கு சொல்லவே இல்ல இவ” என்றாள் ஆர்த்தி. நித்தியன் பாட்டியிடம் சுண்ணாம்பை வாங்கி வந்து கொடுக்க. ஆர்த்தி அவள் கையில் சுண்ணாம்பு தடவி விட்டாள்.

 

“சரி ஆகிடும் சரியா.. நான் கிளம்புறேன் அதியன் வந்ததும் சாப்பிடு. அவனுக்கும் சாப்பாடு போடு சரியா” என்று கூறிவிட்டு ஆர்த்தி, அவள் கணவனுடன் மாமியார் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

 

நாளைக்கு பஞ்சாயத்தில் என்னவாகுமோ என்ற தவிப்பிலும் கலக்கத்திலும் தாத்தாவும் அதியன் அப்பாவும் வெளியே திண்ணையில் அமர்ந்து இருந்தனர்.

 

“எப்பா.. நாளைக்கு பஞ்சாயத்துல என்ன நடக்குமோ” என ராஜன் கவலையோடு கூற,

 

“எதுவா இருந்தாலும் ஏத்துக்கிட்டு தானே ஆகணும்.”

 

“ஆனா ப்பா..”

 

“ராஜா.. என் பேரன் பேத்தி நல்லா இருந்தா போதும். ஊரும் உறவும் எனக்கு வேண்டாம். மங்களம் கூட அதியன புரிஞ்சிக்காம பேசுனா. எனக்கு நம்ம பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம்” என்றவருக்கு இருமல் வந்துவிட,

 

“செண்பகம் குடிக்க தண்ணி கொண்டா..!” என்க அவர் உறங்கி இருந்தார் குரல் கேட்டு தேஜஸ்வினி ஓடி வந்தாள். அவளைப் பார்த்த ராஜன் என்ன சொல்வது என்று புரியவில்லை. அவரே எழுந்து போய் தண்ணீர் கொண்டு வந்தார்‌. தேஜஸ்வினி கவலையோடு வாசலிலேயே நின்றாள்.

 

“ஏன்மா நீ இங்க நின்னுட்டு இருக்கே போய் படு”

 

“அவர் வரட்டும்” என்றாள் சைகையில். அதற்கு மேல் அவளிடம் அவர் பேசவில்லை. நேரமும் உழைப்பின் களைப்பும் ராஜன் உறங்கச் சென்றார். தாத்தாவும் தடியை பிடித்தபடி உள்ளே சென்றார்.

 

அதியன் வருவான் என தேஜஸ்வினி வாசலில் குத்துகாலிட்டு அமர்ந்து, முகத்தை முட்டிக்காலில் புதைத்துக் கொண்டு இரவின் நிசப்தத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் கண்களும் தூக்கத்தை வேண்டியது. அவள் இமைகள் மூடும் நேரத்தில், ஜீப் சத்தம் கேட்டதும் பட்டென எழுந்துக் கொண்டாள். அதியன் ஜீப்பை நிறுத்திவிட்டு, தள்ளாடி நடந்து வர, தேஜஸ்வினி ஓடிப் போய் கணவனைப் பிடித்துக் கொண்டாள்.

 

அண்ணன் வந்தது தெரிந்தும் நித்தியன் ஓடி வந்தான். அவன் கோபத்தில் எப்போதாவது, இப்படி குடித்துவிட்டு வரும் நேரமெல்லாம், அவன் தான் சத்தமில்லாமல் கூட்டிச் சென்று படுக்க வைப்பான். தேஜஸ்வினி அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு வரவும், நித்தியன் போய் படுத்துக் கொண்டான். அதியன் போதையில் ஏதோ முணங்கிக் கொண்டே வந்தான்‌.

 

தேஜஸ்வினி அவனை அறையில் கொண்டு போய் நிறுத்த, அவனால் நிற்க முடியாமல் அவளையும் இழுத்துக் கொண்டு மெத்தையில் விழுந்தான். போதையில் இருந்ததால் அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவளை நெஞ்சோடு அணைத்தபடி பிடித்து இருந்தான். தேஜஸ்வினி அவன் பிடியில் இருந்து எழுந்தாள். அவனை சரியாகப் படுக்க வைத்து அவன் முகத்தை துடைத்துவிட்டாள்.

 

“ஏய் தேஜூ.. உன்னால தான்டி எல்லாம்.. நாளைக்கு என் குடும்பத்துக்கு மட்டும் ஏதாவது தலை குனிவு வந்துச்சி.. நீ இந்த வீட்டுல இருக்க முடியாது. என்னாலையும் தான் நானும் எங்கயாவது போய்டுவேன். என் தாத்தாவும் அப்பாவும் என்னால கஷ்ட்டப்படுறத பார்க்க முடியாது.” என்று அதியன் உளறினான்.

 

அவள் புரியாமல் விழித்தாள். ஆனாலும் அவளுக்கு அவன் வீட்டின் நிலைமையும் கொஞ்சம் புரிந்து இருந்தது. கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கினாள்.

 

‘நாம் இந்த வீட்டுக்கும், ஊருக்கும், புதியது அங்கு அவருக்கும் எனக்கும் நடந்தது ஒரு திடீர் கல்யாணம். அங்கு நடந்ததை போல இவருக்கும் கஷ்டமா தானே இருக்கும். என்னால முடிஞ்சவரை இந்த குடும்பத்தை பார்த்துக்குறேன்!’ என்று அவள் மனதில் நினைத்தபடி அமர்ந்து இருந்தாள்‌.

 

அதியன் போதையில் போர்வை என நினைத்து. தேஜஸ்வினி புடைவை முந்தானையை இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவன் அருகில் விழுந்தாள்‌. அவன் அவள் இடையில் கை போட்டு இறுக்கிக் கொண்டாள். கோழியின் சிறகுகளில் அடைகாத்துக் கொள்ளும் கோழிகுஞ்சு போல, அவன் கையில் அடங்கி இருந்தாள்.

 

இரவெல்லாம் அவன் அணைப்பில் பசி மறந்து உறங்கி இருந்தாள். அவளுக்கு எப்போதும் மூன்று, நான்கு மணிக்கு எழுந்துக் கொள்வது வழக்கம். இன்றும் அதே போல் எழுந்தாள். மெல்ல அவன் கையை விலக்கி எழுந்து வெளியே வந்தாள். வீட்டின் வாசலில் சிறிய விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

 

அவள் குளித்து முடித்துவிட்டு, வாசலில் கோலம் போட்டு, வீட்டை சுத்தம் செய்து மாட்டு தொழுவத்தையும் சுத்தம் செய்து அதியன் குளிக்க சுடுதண்ணி வைத்தாள். அதியனுக்கு இஞ்சி தட்டி போட்டு மோர் கலக்கி வைத்தாள். அனைவருக்கும் காஃபி போட்டு வைத்தாள். வந்த முதல் நாளே பம்பரமாய் வீட்டு வேலையை செய்து வைத்திருந்தாள்.

 

செண்பகம் எழுந்து ஆச்சர்யமாகப் பார்த்தாள் இது அவள் வீடு தானா என்று, வாசலுக்கும் கொல்லைப் புறத்தில் ஓடி ஓடி பார்த்தார். ஒவ்வொருநாளும் செண்பகம் இந்த வேலையை செய்து இடுப்பு வலியும் முட்டி வலியும் வேதனையுமாக இருப்பார். இன்று தேஜஸ்வினி முக்கால்வாசி வேலையை முடித்துவிட்டாள். கன்னத்தில் கை வைத்துப் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த செண்பகத்தின் தோளை சுரண்டினான் நித்தியன்.

 

“ஏய்.. யார்ரா..” என செண்பகம் அலறிட.

 

“நான் தான் ம்மா இந்த அண்ணி காஃபி கொடுத்தாங்க”

 

“அண்ணி பொல்லாத அண்ணி போடா”

 

“அப்போ காஃபி வேண்டாமா சரி” என்றவன் டம்ளரை எடுத்துக் கொண்டு திரும்பிட,

 

“த.. கொண்ட அத வவுறு வேற கபகபன்னு இருக்கு.” என செண்பகம் காஃபியை வாங்கி குடித்தார். நித்தியனும் தேஜஸ்வினி காஃபியை குடித்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

 

தேஜஸ்வினி மோர் டம்ளரை எடுத்துக் கொண்டு போய் அதியனை எழுப்பினாள்.

 

 

தொடரும் மயிலாஞ்சி ✍️

 

மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பர்களே 🙏💐

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top