வந்த லாபத்தை எந்தவித பாகுபாடுமின்றி ஐந்து சம பங்காகப் பிரித்துக் கொண்டவர்கள், பின்னர் படகை வழக்கமாகப் பாதுகாப்பாக நிறுத்தும் இடத்தில் கொண்டு போய் நிறுத்திவிட்டு, களைப்போடும் அதே நேரம் நிறைவான மனதோடும் அவரவர் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
முதல் நாள் கடலுக்குப் போன கணவர் இன்றைக்கு அதிகாலையிலேயே வந்துவிடுவார் என்பது கலைக்கு நன்றாகவே தெரியும். அதனால் சுதாகருக்குப் பிடித்தமான உணவுகளைச் சுடச்சுடச் சமைத்து வைத்துவிட்டு, மனதிற்குள் ஒருவித எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருந்தார்.
சமையலறையில் படபடப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் தாயைப் பார்த்த கமலி சும்மா இருப்பாளா? “என்னம்மா கலை… புருஷர் கடல்ல இருந்து வர்றாருன்னதும் முகத்துல அப்படி ஒரு பளபளப்பு! காலையிலேயே இவ்வளவு உபசரிப்பா?” என்று தன் பாணியில் கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கிண்டல் செய்து கொண்டிருக்கும்போதே, வீட்டின் வாசலில் சுதாகரின் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
“அப்பா வந்தாச்சு!” என்று கத்தியபடியே கமலி துள்ளிக்குதித்து வாசலுக்கு ஓடினாள்.
சுதாகர் பைக்கை நிறுத்திவிட்டு, கையிலிருந்த மீன் பையை மகளிடம் நீட்டியவர் “இந்தா ஆத்தா… இதுல உனக்குப் பிடிச்ச வஞ்சிரமும் சங்கராவும் இருக்கு! அம்மாக்கிட்ட கொடுத்து காரசாரமா சமைச்சுப் போடச் சொல்லி சாப்பிடு,” என்று செல்லமாகச் சொன்னார்.
“தேங்க்ஸ் பா!” என்று பையை வாங்கிக் கொண்ட கமலி வீட்டிற்குள் ஓட, சுதாகர் தன் கை கால்களைக் கழுவிவிட்டு உள்ளே நுழைந்தார்.
சமையலறை வாசலில் நின்றிருந்த கலை, கணவனைப் பார்த்ததும் ஒரு புன்னகையைச் சிந்தினாள். அதைக்கண்ட சுதாகர், மனைவியைக் பார்த்து ஓரக்கண்ணால் குறும்பாகக் கண்ணடித்தார்.
கணவரின் இந்தத் திடீர் குறும்பை எதிர்பார்க்காத கலை, “வெவஸ்த கெட்ட மனுஷன்… வயசுக்கு வந்த பொண்ணு வீட்டில் இருக்கும்போது என்ன வேலையைப் பாரு!” என்று பொய்யாகக் கடிந்துகொண்டாலும், அவளது வெட்கப் புன்னகையும் உதட்டோரச் சிரிப்பும் அவள் கட்டுப்பாட்டை மீறி வெளியே வந்தது.
அப்போது மீன் பையைத் தட்டில் கொட்டிக் கொண்டிருந்த கமலி, “என்ன… ரெண்டு பேரும் ரகசியமா பேசி முடிச்சாச்சா?, நான் உள்ளே வரலாமா?” என்று தோட்டத்து வாசலில் இருந்து குரல் கொடுக்க, சுதாகரும் கலையும் அசட்டு சிரிப்பு சிரித்தனர்.
“கலை… சாப்பாடு எடுத்து வை, குளிச்சிட்டு வர்றேன்,” என்று சுதாகர் கலைக்கு வழிவிட்டுத் தன் அறைக்குச் சென்றார்.
குளித்து முடித்து, வேறு உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவர் ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தவரின் பார்வை, எதிரே சுவரில் மாட்டியிருந்த அவர்களின் பெரிய குடும்பப் புகைப்படத்தின் மீது விழுந்தது. அந்தப் படத்தைப் பார்த்த கணமே, சுதாகரின் நினைவுகள் முப்பத்தாறு வருட கடந்த காலத்தை நோக்கிச் சுழன்றடித்தன…
அப்போது சுதாகருக்குப் பதினைந்து வயது இருக்கும்.
அந்த அமைதியான நள்ளிரவில் சீறிப் பாய்ந்து வந்த கொடூரமான சுனாமி பேரலை, அந்த ஊரின் மொத்த சந்தோஷத்தையும் ஒரே அடியில் சுருட்டிச் சென்றுவிட்டது. சுதாகரையும் அவரது தாயையும் தவிர, அவரது அப்பா, தங்கை என மொத்தக் குடும்பமும் அந்த ஆழிப்பேரலைக்கு பலியாகிப்போனது.
நிலைகுலைந்துபோன தாயை அழைத்துக்கொண்டு சுதாகர் அழுது புலம்பிய அந்த நாட்களை யாராலும் மாற்ற முடியாது. சுதாகரின் தந்தை கடலுக்குப் போய்ச் சேர்த்து வைத்த சிறுகச் சிறுகச் சேமிப்பில், இறப்பதற்கு முன்பே ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு காலி இடத்தை வாங்கிப் போட்டிருந்தார்.
“இனிமே இந்தக் கடல் பக்கமே நாம இருக்க வேண்டாம்ப்பா… இன்னொரு இழப்பை என்னால தாங்க முடியாது!” என்று கதறிய தாயின் சொல்லைத் தட்ட முடியாமல், சுதாகர் தன் தாயோடு முதன்முதலாக இந்த நிலத்திற்கு வந்து சேர்ந்தார்.
அங்கே ஒரு சிறிய குடிசையைப் போட்டனர். சுற்றிலும் இருந்த நான்கு ஏக்கர் நிலத்தில், அவர்களின் தேவைக்குக் காய்கறிகளைப் பயிரிடத் தொடங்க எண்ணி, நிலத்தில் ஒரு ஆழ்துளைக் கிணற்றை அமைத்து விவசாயம் செய்ய, ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ என்பதைப் போல, அந்த நிலத்தில் நெல்லும் காய்கறிகளும் அமோகமாக விளைந்தன.
விவசாயத்தை சுதாகரின் தாய் கவனித்துக் கொள்ள, சுதாகரோ தன் சிறுவயதிலேயே நண்பர்களோடு சேர்ந்து மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலுக்கே செல்லத் தொடங்கினான்.
அவர்களின் உழைப்பு வீண்போகவில்லை. மீன்பிடித் தொழிலும் விவசாயமும் சேர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது. சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு, நான்கு அறைகளோடு முற்றம் வைத்த அழகான ஓட்டு வீட்டைக் கட்டி முடிக்கும்போது சுதாகருக்கு வயது இருபத்தொன்பதாகியிருந்தது.
‘நான் கண்ணை மூடுறதுக்குள்ள என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்வை அமைச்சு கொடுத்துரணும்’ என்று எண்ணிய அவனது அம்மா, தூரத்துச் சொந்தத்தில் தனது மகனுக்கு ஏற்ற பெண்ணாகக் கலையைப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்தார்.
கலை அந்த வீட்டிற்குள் மகாலட்சுமியாக அடியெடுத்து வைத்தாள். அவர்களின் அன்பிற்கும் காதலுக்கும் சாட்சியாக முதலில் மகன் பிறக்க, தந்தையின் நினைவாக கதிரேசன் என்ற பெயரிலிருந்து கதிர் என்று மகனுக்கு பெயர் வைத்தனர்; அவனுக்கு ஏழு வயது இருக்கும் போது பிறந்த மகளுக்கு தங்கையின் பெயரான கமலியை கமலினி என்று ஜோதிடர் சொல்லியது போல வைத்தார்.
மீண்டும் தனது அப்பாவும் தங்கையும் தனக்கே பிள்ளைகளாக பிறந்து வந்துவிட்டனர் என்று பூரித்து போனான்.
வருடங்கள் இதோ உருண்டோடி விட்டது!
வயது மூப்பின் காரணமாக அவரது அம்மா இறந்துவிட, கலையே தன் கணவனை தாய் போல தாங்கினார்.
ஆழி பேரலையில் எல்லாவற்றையும் இழந்து நின்ற சுதாகர், இன்று சொந்த உழைப்பில் நிமிர்ந்து நின்று, தன் பிள்ளைகளை உயரே பறக்க வைத்திருக்கிறார்.
நல்லபடியாக படித்து முடித்த கதிர் வெளிநாட்டில் சம்பாதிக்கிறான்; கமலியையும் திருச்சிக்கு அனுப்பிப் படிக்க வைக்கப் போறோம். அவளது படிப்பும் முடிந்ததும், ஒரு நல்ல இடத்தில் அவளைக் கட்டிக் கொடுத்துவிட்டால்… தங்கள் கடமை திருப்திகரமாக முடிந்துவிடும் என்று சுதாகர் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே…
“இந்தாங்க… சூடா டீ குடிங்க,” என்ற கலையின் குரல் கேட்டது.
மனைவி நீட்டிய டீ டம்ளரை வாங்கிய சுதாகர், தன் நீண்டகால நினைவுகளிலிருந்து மெல்ல மீண்டு வந்து, கலையைப் பார்த்துப் புன்னகைத்தார்.
அரை மணி நேரம் கடந்திருக்கும்… கலை தன் கணவருக்கும் மகளுக்கும் சூடாகச் சாப்பாட்டைப் பரிமாற, பேசிக்கொண்டே திருப்தியாகச் சாப்பிட்டு முடித்து எழுந்தனர்.
சுதாகர் வெளியே வந்து, திண்ணையில் பாயை விரித்துப் போட்டு ஹாயாகப் படுத்துக்கொண்டவர், பின்னர் கலை பக்கம் திரும்பி, “சாயந்திரம் ரெண்டு பேரும் ரெடியாகுங்க..புள்ளை இவ்வளவு நாள் ஸ்கூலுக்குப் போனதால தான் நகை நட்டு எதுவும் போடாம போச்சு. இனி காலேஜுக்குப் போகுது இல்லையா… நகை எதாவது போட்டுகிட்டுப் போகட்டும்,” என்று தன் மனதிற்குள் நினைத்ததைச் சொன்னார்.
கணவர் சொன்னதைக் கேட்டு கலை மௌனமாக புன்னகைத்தவர் “சரிங்க,” என்றார்.
மனைவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “என்னடி பொண்டாட்டி… நீ மனசுக்குள்ள நினைச்சதை நான் அப்படியே சொல்லிட்டேன்னு சிரிப்பு வருதோ?” என்று சுதாகர் கேட்க…
“ஆமா ஆமா… எல்லாம் உங்களுக்குத் தெரியும்! சரி சரி, கண்ணை மூடித் தூங்குங்க… நான் போய் சமைக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு கலை சமையலறைக்குச் சென்றார்.
கமலியும் அம்மாவுடன் சேர்ந்து கொண்டாள். சுதாகர் கடலிலிருந்து கொண்டு வந்த மீனை தேவைக் கேற்பக் கொஞ்சம் மீனைப் பக்குவமாக ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு, மீதியை மணக்க மணக்கக் காரசாரமான மீன் குழம்பாகவும், மொறுமொறுப்பான மீன் வறுவலாகவும் செய்து முடித்தனர்.
மதியச் சமையல் தடபுடலாகத் தயாராகி வாசம் தூக்கிய அந்த வேளையில்… வீட்டின் வாசலில், “சார்… கொரியர்!” என்ற சத்தம் கேட்டது.
“இருங்க வர்றேன்!” என்று கமலி உற்சாகத்துடன் வெளியே ஓடினாள்.
அங்கே வாசலில் ஒரு பெரிய பார்சலோடு கொரியர்காரர் நின்றிருந்தார். கமலி ஆவலுடன் கையெழுத்துப் போட்டுவிட்டு, அந்தப் பெரிய பார்சலை வாங்கி வீட்டிற்குள் கொண்டு வந்தாள்.
அவளது பிறந்தநாளுக்காக வெளிநாட்டிலிருந்து கதிர் அனுப்பிய ‘சர்ப்ரைஸ் கிஃப்ட்’ அது!
ஆவலோடு அந்தப் பார்சலை அவிழ்த்துப் பிரித்துப் பார்த்த கமலிக்கு ஒரே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க முடியவில்லை. அவளது பிறந்தநாளுக்காக அழகான புதிய ஆடைகள், கல்லூரிக்கு எடுத்துச் செல்வதற்காக நேர்த்தியான புதிய லேப்டாப் பேக், அப்பா, அம்மா மற்றும் தங்கைக்கு எனத் தனித்தனியாகத் தங்க வேலைப்பாடு கொண்ட வாட்ச்கள், இன்னும் ஏகப்பட்ட அன்பளிப்புப் பொருட்களை கதிர் பார்த்துப் பார்த்து அனுப்பி இருந்தான்.
பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்த கமலியின் கண்கள் மகிழ்ச்சியில் பளபளத்தன.
வெளிநாட்டு ஏற்றுமதித் தொழிலுக்கான முதற்கட்ட சான்றிதழ்களையும், சுங்கத்துறை வழிகாட்டுதல்களையும் தெரிந்துக் கொண்டு வீடு திரும்பிய ஆதவனும் அருணும் அடுத்தகட்டச் செயல்பாடுகளில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.
மறுநாள் காலையில் வீட்டின் ஹாலில் இருக்கும் டீபாயின் மீது ஒரு சார்ட்டை விரித்து வைத்தான் ஆதவன். அவனது தெளிவான திட்டமிடலைக் காண பரமுவும் அருணும் ஆர்வத்துடன் உட்கார்ந்தனர்.
“அப்பா, நாம இதுவரைக்கும் ஆட்களை வச்சு மீன் பிடிச்சு, உள்ளூர் சந்தைக்கும் சென்னை பெரிய வியாபாரிகளுக்கும் மட்டும்தான் அனுப்பிட்டு இருந்தோம். ஆனா, இனிமே அப்படி இல்லை!” என்று ஆதவன் தன் லேப்டாப்பைத் திறந்து காண்பித்தான்.
“சிங்கப்பூர், மலேசியா, அப்புறம் துபாய்ல இருக்கிற பெரிய சீஃபுட் உணவகங்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு நேரடியாவே நாம மீன்களையும், இறால்களையும் ஏற்றுமதி செய்யப்போறோம்,” என்றான் ஆதவன்.
மகன் சொன்னதைக் கேட்டவர் “அதெல்லாம் சரிதான் கண்ணு! கடல் மீனு கெட்டுப்போகாம வெளிநாட்டுக்குச் போய் சேர்றது சாதாரண விஷயம் இல்லையேப்பா… அதுக்கு என்ன வழி?” என்று பரமு தன் அனுபவப் பூர்வமான சந்தேகத்தைக் கேட்டார்.
அதற்கு அருணோ, நீங்கள் தான் மாமா ஐஸ் பாரை தூக்கி வச்சுக்கிட்டு பெட்டி மேல உட்கார்ந்து இருக்கணும் என்க, அடேய் என்றார்.
மாப்பி என்று ஆதவன் பல்லைக் கடிக்க, அமைதியோ அமைதினு அருண் தன் வாய் மேல் விரல் வைத்து மூட, ஸ்சப்பா என்றபடி தந்தை பக்கம் திரும்பியவன் “அதுக்குத்தான் அப்பா நாம ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ மற்றும் நவீன ‘ஃபிளாஷ் ஃபுரீஸிங்’ முறையைப் பயன்படுத்தப்போறோம். கடல்ல இருந்து மீன் கரைக்கு வந்த சில மணி நேரத்துலயே, அதன் பிரஷ்னஸ் மாறாம -18°C குளிரூட்டிப் பேக் பண்ணிடுவோம். அதுக்காகத் துறைமுகத்துக்குப் பக்கத்துலயே ஒரு சிறிய பேக்கிங் யூனிட்டும், குளிரூட்டும் சேமிப்புக் கிடங்கும் குத்தகைக்கு எடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்,” என்றான்.
அருண் இடையிட்டு, “ஆமா மாமா! அதுமட்டுமில்லாம, வெளிநாடுகளுக்கு அனுப்ப ‘எக்ஸ்போர்ட் ஐடி’ வாங்க அப்ளைப் பண்ணியாச்சு. அப்புறம் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தோட அங்கீகாரமும் நமக்கு இன்னும் ரெண்டு நாள்ல கிடைச்சிடும்,” என்றான்.
ஆதவனின் தொழில் நுணுக்கங்களையும், அருணின் சுறுசுறுப்பையும் பார்த்த பரமுவின் முகம் பெருமையில் பிரகாசித்தது.
“சரிப்பா… நீ படிச்ச படிப்புக்கும், உன் யோசனைக்கும் நான் குறுக்க நிற்கல. நமக்குக் கடல்தான் சாமி… அந்தச் சாமியை நம்பி இறங்குறோம். தேவைப்படுற முதலீட்டுக்கு நம்ம சேமிப்புப் பணத்தை எடுத்துக்கோ,” என்று பரமு பச்சைக்கொடி காட்டினார்.
அடுத்த சில நாட்களில், ஏற்றுமதி நிறுவனத்தின் பெயராக ‘ஏஏ சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்’ என்று பதிவு செய்யப்பட்டது.
இதைப்பற்றி பேஸ்புக், யூடியூப், மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் இருவரும் தெரியப்படுத்து, சோஷியல் மீடியாவில் தீ போல விஷயம் பரவியது.
முதல் கட்டமாக, சிங்கப்பூரில் உள்ள ஒரு பெரிய தமிழரின் ஹோட்டலுக்கு 500 கிலோ தரமான வஞ்சிரம் மற்றும் பாறை மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான முதல் ஒப்பந்தம் ஆதவனின் கைக்கு வந்து சேர்ந்தது!
முதல் ஆர்டர் கைக்கு வந்த சந்தோஷத்தில், ஆதவனும் அருணும் தங்கள் நிறுவனத்தின் லோகோவைத் தயாரிக்கும் பணியிலும், பேக்கிங் டிசைன்களை முடிவு செய்வதிலும் தீவிரமாக இறங்கினர்.
தேடல் தொடரும்…
