தழலின் தவம் 3

தழலின் தவம் 3

மாளிகையின் சாளரங்கள் வழியே மெல்லிய தென்றல் வீசிக்கொண்டிருந்தது. பாட்டனார் ரணபத்ரர் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். அவரது இமைகள் மூடியிருந்தன. அகத்தால் விழித்திருந்த போதிலும், புறத்தோற்றத்திற்கு ஆழ்ந்த நித்திரையில் உள்ளதுப் போலவே  காட்சியளித்தார்.

அவ்வேளையில் இளவரசன் சாருமையன் தன் பாட்டனாரின் மாளிகைக்குள்  அடியெடுத்து வைத்தான். காலடியோசை கேட்டு இமை திறந்த ரணபத்ரர், தன் எதிரே நின்றிருந்த பேரனைக் கண்டதும் உதட்டோரம் கேலிப் புன்னகையைத் தவழவிட்டார்.

“ஆஹா! காலையில் விடுத்த அழைப்பிற்கு நண்பகலில்  வந்து சேர்ந்துவிட்டீரே, இளவரசரே!” என்று குத்தலான வரவேற்புச் சொற்களைப் பன்னீரெனத் தெளித்தார். 

பாட்டனாரின் இத்தகைய வரவேற்பை இளவரசன்  முன்னரே எதிர்பார்த்திருந்தான். ஆதலால், அவனும் தக்க மறுமொழியை உதிர்த்தான்.

“அது சரி பாட்டா! உமது  ஒற்றர் படைக்குத்தான் என்னவாயிற்று? நான் எங்கு செல்கிறேன், யாரிடம் என்ன உரையாடுகிறேன்  என்பதைக் உம்மிடம் அப்படியே  ஒப்பிப்பவர்களாயிற்றே! இன்று எனக்கு இருந்த முக்கிய  அலுவல்களைப் பற்றி அவர்கள் உமக்குத் தகவல் தரவில்லையா?” என்று வினவிய சாருமையன், ஏதோ ஒரு மாபெரும் நகைச்சுவையை உதிர்த்தது போலக் கலகலவென நகைத்தான்.

தன் பேரனின் மதிநுட்பத்தையும் சாதுர்யமான பதிலையும் கேட்ட ரணபத்ரர் விழிகள், பெருமிதமுத்துடன்  மின்னின.

“அரச தந்திரத்திலும், பேச்சுத் திறமையிலும் உன் தந்தையையே நீ மிஞ்சிவிட்டாய் சாருமையா! அதுவரையில் எனக்குப் பெரும் திருப்திதான். வா, என் அருகே வந்து அமர்,” என்று வாஞ்சையுடன் பேரனின் கரங்களைப் பற்றித் தன் அருகில் அமர்த்திக்கொண்டார்.

அப்போது, உள்ளிருந்து  வந்த பாட்டியார் சந்திரமதி, “வா சாருமையா உணவுண்ண வருகிறாயா?” என்று பாசத்துடன் வினவினார்.

அதற்குச் சாருமையன் வாய் திறப்பதற்குள்ளாகவே, “அதெல்லாம்  தேவையில்லை சந்திரமதி, அவன் தன் அன்னையின் கையால் அறுசுவை விருந்து உண்டுவிட்டான்,” என்று ரணபத்ரர் சட்டெனப் பதிலுரைத்தார்.

அந்தப் பதிலை உதிர்த்தபடியே பேரனை நோக்கிய ரணபத்ரர். ‘உன் ஒவ்வொரு அசைவையும் நான் முழுமையாக அறிவேன்’ என்ற பொருள் பொதிந்த  பார்வை அது. 

அதற்குச் சற்றும் சளைக்காத சாருமையனும், ‘அனைத்தும் அறிந்திருந்தும் எதற்காக இந்த நாடகம்?’ என்பது போலத் தன் விழிகளாலேயே கேள்வி தொடுத்தான். அங்கே வார்த்தைகளின்றி, பாட்டனும் பேரனும் நயன மொழியில் உரையாடினர்.

தன் கணவரின் உளவுத் திறனை அறிந்திருந்த சந்திரமதிக்கு, இருவரின் பார்வைப் பரிமாற்றமும் புரியாமல் இல்லை. ‘சொந்தப் பேரனைக் கூடவா இப்படிக் கண்காணிக்க வேண்டும்?’ என்று மனதிற்குள் சற்றே சலித்துக்கொண்டார். ஆயினும், அரண்மனை நாகரிகம் கருதித் தன் எண்ணங்களை முகத்தில் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

பேரனை உபசரிக்காமல் விடுவதாயில்லை என்ற உறுதியுடன், “சரி, அறுசுவை உணவுதான் வேண்டாம் என்கிறாய். பழச்சாறேனும் அருந்துகிறாயா சாருமைந்தா?” என்று மீண்டும் பரிவுடன் வினவினார் மூதாட்டியார் சந்திரமதி.

பாட்டியின் அளவற்ற பாசத்தை உணர்ந்த சாருமையன், புன்னகையுடன் தலையசைத்து, “இல்லை பாட்டியாரே, இப்போது எதுவும் வேண்டாம். சற்றுப் பொழுதிற்குப் பிறகு அருந்துகிறேன்,” என்று பாட்டியின் அன்பான உபசரிப்பை மிக மென்மையாக மறுத்தான்.

அந்த உபசரிப்புப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணபத்ரர், தன் குரலில் இருந்த கேலியைச் சற்றே குறைத்துக்கொண்டு, “உனக்காக வெகு நேரமாய்க் காத்திருந்தேன் சாருமையா. மேல்மாடத்து உப்பரிக்கைக்குச் சென்று தனிமையில் உரையாடலாம் வா,” என்று பேரனின் மறுமொழியைக்கூட எதிர்பாராமல் முன்னே நடந்தார். இளவரசன் சாருமையனும் அமைதியாகத் தன் பாட்டனாரைப் பின்தொடர்ந்தான்.

மாளிகையின் மேல் தளத்திலிருந்த அந்த விசாலமான உப்பரிக்கை, தென்றல் காற்று தாராளமாக உலாவும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மிகப்பெரிய ஊஞ்சல் ஒன்று இரும்புச் சங்கிலிகளால் தொங்கவிடப்பட்டிருந்தது. 

சாதாரண ஊஞ்சலைப் போல இல்லாமல், அரசகுலத்தோர் அமரும் வண்ணம் அழகான அமைப்போடுக் காணப்பட்டது. பாட்டனாரின் முதுமையையும் உடல் நலனையும் கருத்தில் கொண்டு, மிருதுவான இலவம்பஞ்சு மெத்தைகளால் ஆன பட்டுத் திண்டுகள் அதன் மீது அடுக்கப்பட்டிருந்தன.

அந்தப் பட்டுத் திண்டுகளில் சாய்ந்து வசதியாக அமர்ந்துகொண்டார் ரணபத்ரர். இளவரசன் சாருமையனும் எதுவும் பேசாமல், பாட்டனாரின் அருகே மிகுந்த மரியாதையுடன்  அமர்ந்தான். 

சில கணங்கள் அந்த உப்பரிக்கையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. பிறகு ரணபத்ரர் “சாருமையா! நீயும் இளவரசி விநிதையும் திருமணத்திற்குப் பிறகு உங்கள் இல்லற வாழ்க்கையைத் தொடங்க, நந்தவனத்திற்கு அருகே புதிய மாளிகை ஒன்று எழுப்பப்பட்டுள்ளதே… அதை நேரில் சென்று பார்த்தாயா?”

“பார்த்தேன் பாட்டா,” என்றான் சாருமையன் சுருக்கமாக.

“எப்படி உள்ளது? உன் மனதிற்குப் பிடித்திருக்கிறதா?”

“மிகவும் அழகாக உள்ளது. நம் சிற்பிகளின் கைவண்ணம் வியக்க வைக்கிறது.”

ஆனால், பாட்டனாரின் பேச்சில் இருந்த வழக்கமான தொனி இன்று இல்லை. மனதில் எதையோ வைத்துக்கொண்டு, அதை எப்படித் தொடங்குவது என அவர் தயங்குவது போலவே சாருமையனுக்குத் தோன்றியது. புதிய மாளிகையைப் பற்றிக் கேட்பது வெறும் சம்பிரதாய பேச்சு மட்டுமே என்பதை அவன் உள்ளுணர்வு தெளிவாக உணர்த்தியது.

“பாட்டா! தாங்கள் எதையோச் சொல்லத் தயங்குவது போலத் தெரிகிறதே…” என்று நேரடியாகவே வினவினான்.

ரணபத்ரர் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டார். தலை அசைத்தபடி  “ஆம் மைந்தா! ஆனால், நான் கூறப்போகும் செய்தியைக் கேட்டதும் நீ அதை  எவ்விதம்  எடுத்துக்கொள்வாய் என்றுதான் எனக்குப் புரியவில்லை.”

புன்முறுவலுடன், “எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள் பாட்டா. நான் என்றும் உங்கள் சாருமையன். எனக்குக் கட்டளையிடுங்கள்,” என்றவாறே பாட்டனாரின் கரங்களை ஆதரவாகப் பற்றினான்.

சற்று நேரம் இலக்கில்லாமல் நோக்கிய ரணபத்ரர், “திருமணத்திற்குப் பிறகு, விநிதையின் தாய்நாடான வாணர் நாடும் நம் நாட்டைப் போலத்தான். அதனுடைய பாதுகாப்பு மற்றும் ஆட்சிப் பொறுப்புகளையும் நீதான் சேர்த்துக் கவனித்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.

இதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்பது போல, “நிச்சயமாகப் பாட்டா, அது என் தலையாய கடமையல்லவா?” என்று இயல்பாக விடையளித்தான் சாருமையன்.

ரணபத்ரர் மெல்லத் தலையசைத்தார். “உனக்கு இன்றைய அரசியல் சூழலின் தீவிரம் இன்னும் முழுமையாகப் புரியவில்லை மைந்தா… நம் மண்ணின் அரசியலே இப்போது ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல்லவப் பேரரசின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. அதே வேளையில், சோழர்கள் ஒரு மாபெரும் பேரரசாக உருவெடுக்கும் வல்லமையோடு எழுந்து கொண்டிருக்கிறார்கள்.”

“ஆம் பாட்டா, நானும் இச்சூழலைக்  கவனித்தேன். இதையேதான் சிந்தித்துக்கொண்டும் இருந்தேன்.”

“இல்லை சாருமையா, நான் சொல்ல வருவதை நீ இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை!” என்று கூறிய ரணபத்ரர், சில கணங்கள் அமைதியுடன் விழிகளை மூடினார். உப்பரிக்கையின் சூழலே சட்டென இறுக்கமாக மாறியது. 

பிறகு, அழுத்தமான குரலில் தன் பேச்சைத் தொடங்கினார். அவரது வதனத்தில் கவலையும் சினமும் போட்டிப் போட்டுத் தோன்றி மறைந்தன.

“இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாம் பிறருக்குக் கப்பம் கட்டும் சிற்றரசாகவே நீடிப்பது? பல்லவரின் வீழ்ச்சியையும், சோழரின் எழுச்சியையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோமா? நம் வீரக் கொடியும் வானுயரப் பறக்க வேண்டாமா? நம் பேரரசு விரிவடைய வேண்டாமா?”

பாட்டனாரின் இந்தக் கேள்விக்கு என்ன மறுமொழி உரைப்பதென்றே இளவரசன் சாருமையனுக்குத் தெரியவில்லை. மிகப்பெரும் படைபலமோ, பரந்து விரிந்த நிலப்பரப்போ கொண்டது நுளம்ப நாடில்லை என்ற கசப்பான உண்மையை அவன் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 

பேரனின் இந்தத் தயக்கத்தையும் அமைதியையும் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட ரணபத்ரர், மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“ஏன் இந்தப் பேரரசுகள் சிற்றரசர்களை முற்றிலுமாக அழிக்காமல் வைத்திருக்கின்றன தெரியுமா சாருமையா? பல தருணங்களில் போர்க்களத்தின் முதல் வரிசையில், எதிரிகளின் அம்புகளுக்குப் பலியாகும்படி சிற்றரசு வீரர்களைத்தான் முன்னே அணிவகுத்துச் செல்ல வைப்பார்கள். 

மதம் கொண்ட யானைகளின் கால்களில் மிதிபட்டு, மண்ணோடு மண்ணாகி வீரமரணம் எய்துவது நம்மைப் போன்ற சிற்றரசைச் சேர்ந்த வீரர்கள்தான். இப்படிப் பல சான்றுகளை என்னால் கூற முடியும். போர் முடியும் வரை நம்மைப் பயன்படுத்திக்கொண்டு, வெற்றி கிட்டியதும் தூக்கி எறிவதுதான் பல பேரரசுகளின் வழக்கம்.!”

பாட்டனாரின் சொற்களில் இருந்த கசப்பான உண்மை சாருமையனின் நெஞ்சைத் தைத்தது. “உண்மைதான் பாட்டா…” என்று சிந்தனைவயப்பட்டவனாகத் தலையசைத்தான்.

“ஆனால், இந்த நிலை மாற வேண்டும்! அனைத்துச் சிற்றரசர்களும் ஒன்றுபட்டு, ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட்டால்…” என்று ரணபத்ரர் இழுத்தார்.

இடைமறித்தான் சாருமையன் “ஒவ்வொரு சிற்றரசனுக்கும் தனித்தனி எண்ணமும் செயல்பாடுகளும் உள்ளது அல்லவா? ஆகவே  அது இன்றைய சூழலுக்கு  நடவாத செயல் பாட்டா. ,” என்று.

“நடத்தி வைக்க வேண்டும் மைந்தா!” என உறுதியான குரலில் கூறினார் பாட்டனார்.

திகைப்புடன் பாட்டனாரை ஏறிட்டு நோக்கிய சாருமையன், “என்ன கூறுகிறீர் பாட்டா? தாங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள்?” என்று வினவினான்.

“ஒவ்வொரு சிற்றரசாக நம் ஆளுகைக்குள் கொண்டு வந்து, அனைத்தையும் இணைத்து ஒரு மாபெரும் பேரரசாக மாற்றி அமைத்தால்?”

“அது எவ்வாறு இயலும்?”

“அதற்கு இன்னும் சில காலமே நாம் பொறுமை காக்க வேண்டும்.”

“எனக்கு புரியவில்லை பாட்டா. சற்று விளக்கமாகக் கூறுங்கள்.”

ரணபத்ரர் மெல்லிய குரலில் பேசலானார், “முதலில், நம் நுளம்ப நாட்டுடன், நீ மணக்கப்போகும் விநிதையின் வாணர் நாட்டை இணைக்க வேண்டும்.”

அதிர்ச்சியுடன் எழுந்த சாருமையன், “அது எவ்வாறு இயலும் பாட்டா? வாணர் நாட்டை ஆள அங்கே ஒன்றுக்கு இரண்டு இளவரசர்கள் இருக்கிறார்களே! அவர்களின் உரிமையை நாம் எவ்வாறு பறிக்க முடியும்?” என்றான்.

ரணபத்ரரின் முகத்தில்  தந்திர புன்னகை உதயமானது . “அந்த இருவரையும் பிரிப்பது எனக்குக் கைவந்த கலை சாருமையா! மூத்த இளவரசனை அன்பாகப் பேசி என் வசம் ஆக்கிக்கொள்கிறேன். இளையவனை நீ நட்பு பாராட்டி உன் வசம் ஆக்கிக்கொள். ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையேப் பகைமையை மூட்டிவிட்டால், வாணர் நாடு இரண்டாகப் பிளவுபடும். பிறகு, சகோதரச் சண்டையில் வலுவிழந்து நிற்கும் அந்த நாட்டை எளிதாக நம்முடன் இணைத்துக்கொள்ளலாம்,” என்று சர்வ சாதாரணமாகத் தன் சூழ்ச்சித் திட்டத்தை விவரித்தார்.

இதைக் கேட்டதும் சாருமையன் சற்றே உஷ்ணமான குரலில், “இது அறம் அல்ல பாட்டா! பெண் எடுத்த நாட்டிலேயே சதி செய்து, சகோதரர்களைப் பிரித்து நாட்டைப் பிடிப்பது கோழைத்தனம். இதற்குப் பதிலாக, நேருக்கு நேர் போர் புரிந்து, வீரத்தால் நாட்டை வென்று ஆளலாம்!” என்றான்.

அவன் இத்தகைய பதிலையே உரைப்பான் என்பதைப் பாட்டனார் முன்னரே கணித்திருந்தார். ஆதலால், அவனது சினம் அவரைச் சற்றும் அசைக்கவில்லை. சற்றேக் கடுமையாக , “சூழ்ச்சியும் சதியும் பின்னிப் பிணைந்ததுதான் அரசியல் மைந்தா! இதற்குப் பெயர்தான் இராஜதந்திரம்,” எனப் பாடம் புகட்டலானார்.

“இல்லை பாட்டனாரே! போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று வாள் வீசுவது மட்டுமே ஷத்திரிய தர்மம். அந்த தர்மத்தின் வழி நின்று நேர்மையுடன் வாழ்வதே வீரத்திற்கு அழகு.  வஞ்சக வலையில் வீழ்த்திப் பெறும் அரியணை எனக்கு ஒருபோதும் தேவையில்லை,” என இளவரசன் அடக்கபட்ட சினத்துடன் மறுத்தான்.

“பாட்டனாரே, தாங்கள் சகுனியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், நான் ஒருபோதும் அதர்மத்தின் வழிநடக்கும் துரியோதனனாக இருக்க மாட்டேன் என்பதை மட்டும் நன்கு நினைவில் கொள்ளுங்கள்,” என இளவரசன் அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினான்.

“உன் இடத்தில் வாணர் குலத்து இளவரசன் இருந்திருந்தால், நான் உரைத்த வழியில்தான் திண்ணமாக அடியெடுத்து வைத்திருப்பான்,” என்று பாட்டனார் குரலில் அழுத்தம் கூட்டினார்.

“ஒருபோதும் இல்லை! அன்று நான் என் தோழர்களுடன் அடர்ந்த கானகத்திற்குள் வேட்டையாடச் சென்றிருந்தேன். நம் நாட்டின் எல்லைப் பகுதிதானே என்ற துணிவில், நான் மெய்க்காப்பாளர்களை உடன் அழைத்துச் செல்லவில்லை. அங்கே கொடிய காபாலிகர்கள் எங்களைச் சுற்றி வளைத்தனர்.

அவர்களுடன் நாங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கடுமையாகப் போரிட்டோம். ஆனால், அவர்களின் தாக்குதல் முறையாக அல்லாமல்    மூர்க்கமாக இருந்தது. கண்ணிமைக்கும் பொழுதில், ஏதோப் பச்சிலைகளை என் தோழர்களை நுகரச் செய்து மயக்கமுறச் செய்தனர். இறுதியில் தனி ஒருவனாக, நான் மட்டுமே எஞ்சியிருந்தேன்…

அந்தக் கொடிய காபாலிகத் தலைவன் விழிகளில் வெறி மின்ன என் அருகே நெருங்கி வந்தான்.

மற்றவர்கள் என் கரங்களை இறுகப் பிணைத்துக் கட்டியிருந்தனர். இன்னும் ஒரே ஒரு கணத்தில் என் உயிர் பிரிந்துவிடும் என நான் எண்ணி இருந்தேன். எதிர்பாராத அம்பு மழை பொழிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அத்தனை காபாலிகர்களும் மண்ணில் சாய்ந்து மாண்டு போயினர்.

வாணர் குலத்து இளவரசிதான் என்னை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டாள். எனக்கு அது ஒரு மறுபிறவி போலவே தோன்றியது. என் அருகே வந்தவள், ஒரு சொல்லும் பேசாமல் என் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டாள்.”

“நான் அப்போது வாளுமின்றி நிராயுதபாணியாக இருந்தேன். அவள் நினைத்திருந்தால் என்னைக் காப்பாற்றாமல் விட்டிருக்கலாம் அல்லது, தன் எதிரியான என்னை அவளே வீழ்த்தியிருக்கலாம். ஆனால், அவள் அவ்விரண்டையும் செய்யவில்லை. அவள் ஷத்ரிய  தர்மத்தின் வழியில் நின்றாள். அவள் சகோதரனான இளவரசன் இருந்திருந்தாலும் இவ்வாறுதான் செயல்பட்டிருப்பான் என்பதை என்னால் உறுதியாகக் கூற இயலும்.

தாங்கள் இப்படியும் எண்ணலாம். காபாலிகர் தாக்குதல் வாணர் நாட்டின் நாடகமாக இருக்கலாம் என. என்னையும் வாணர் நாட்டு இளவரசனையும் நரபலி இடுவதாக இறைவன் முன் சூளுரைத்தான் என ஒற்றர்கள் வாயிலாக அறிந்தோமே அவன்தான் அன்று தாக்குதல் நடத்தியவன். ஆதலால் இது நாடகமாய் இருக்க வாய்ப்பில்லை”

தாங்கள் இந்தத் திருமணத்தை உறுதி செய்திருக்காவிட்டால், நானும் அவளும் என்றும் எதிரிகளாகவே இருந்திருப்போம். அன்று அப்பொழுதே அவளுக்கு என் நன்றியை உரைத்தேன். அதோடு எங்களுக்கு இடையேயான அந்த நிகழ்வும் முடிவுக்கு வந்தது,” எனத் தன் நெஞ்சில் தேங்கியிருந்த உணர்வுகளை எல்லாம் கொட்டித் தீர்த்தான் இளவரசன்.

ஆனால், இளவரசி விநிதையின் உள்ளத்துள் மலர்ந்திருந்த மாற்றங்களை அவன் அத்துணையாய் உணர்ந்திருக்கவில்லை. அவளைச் சந்தித்த தருணங்களில் அவளிடம் தென்பட்ட சிறு மாறுதல்கள் கூட, காலம் செல்லச் செல்லத் தானாகவே மறைந்துவிடும் என அவன் எண்ணினான். 

அவ்வாறே, தன் நெஞ்சில் துளிர்க்கத் துடித்த உணர்வுகளுக்கும் அவன் இறுக்கமாகக் கடிவாளம் இட்டுக்கொண்டான்.

இளவரசனின் நெஞ்சில் பாட்டன் மேல் மூண்ட சினம் இன்னும் தணிந்திருக்கவில்லை. ஆயினும், வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான பாட்டனாரிடம் வாக்குவாதம் எல்லை மீறிப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தால், தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு அவரிடமிருந்து விடைபெற்று அகன்றான்.

சாருமைந்தனைத் தன் வழிக்குக் கொண்டு வருவது அத்துணை எளிதல்ல என்பதைப் பாட்டனார் நன்கு புரிந்துகொண்டார். அது அவருக்குச் சற்று ஏமாற்றத்தையே அளித்தது.

அதோடு, காபாலிகர்கள் சூழ்ச்சியில் தன் ஒற்றர் படை கோட்டைவிட்டதை நினைத்துப் பார்க்கையில், அவரின் நெஞ்சில் சினம் பொங்கியது.

தொடரும்… 

   

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top