அத்தியாயம் 17

தாரணியின் பெரியப்பா மகள் வித்யாவுக்கு நிச்சயதார்த்தம். பூவளூரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெறவிருந்த அந்த நிகழ்ச்சிக்காக, இரண்டு வாரங்களுக்கு முன்பே மீனாட்சி தொலைபேசியில் அழைத்திருந்தாள்.

திருமணத்திற்குப் பிறகு தன் உறவினர்கள் அனைவருக்கும் முத்துவை முதன்முறையாக அறிமுகப்படுத்தப் போகிறாள் என்பதால், தாரணிக்கு அந்த நிகழ்ச்சியின் மீது தனி ஆர்வம் இருந்தது.

“ஞாயிற்றுக்கிழமை நாம ரெண்டு பேரும் பூவளூர் போகணும். வருவீங்களா?” என்று வியாழக்கிழமை இரவு முத்துவிடம் கேட்டாள்.

“பாக்கறேன்,” என்றான் முத்து.

அவன் சொன்ன பதிலைக் கேட்டதும் தாரணி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் வருவான் என்ற நம்பிக்கையிலேயே அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். அந்த நிச்சயதார்த்தத்திற்குத் தன்னுடன் முத்துவும் வர வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் நிறைந்திருந்தது. ஆனால், அந்த நாளில் அவனால் வர முடியாமல் போகும் என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

அதோடு, உறவினர் வீட்டு விசேஷம் என்றால் முத்துவுக்கு விருந்தாளியாகச் சென்று அமர்ந்திருக்கும் எண்ணமே வராது. யாராவது உதவி கேட்டால் ஓடிச் செல்வது, பொருட்களை எடுத்துக் கொடுப்பது, பந்தியில் பரிமாறுவது என்று ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பதுதான் அவனுடைய வழக்கம். இந்த முறை தாரணியுடன் ஒரு விருந்தாளியாகச் செல்ல வேண்டும் என்பதை அவன் பெரிதாக யோசிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை தாரணி நீல நிறப் பட்டுப்புடவை அணிந்து, தலையில் மல்லிகைப்பூ சூடி தயாரானாள். முத்துவுக்காக அவன் புதிதாக வாங்கிய சட்டையையும் வேட்டியையும் எடுத்து வைத்திருந்தாள்.

ஆனால் காலை ஏழு மணிக்கு அறையிலிருந்து வெளியே வந்தபோது முத்து வீட்டில் இல்லை.

“அவன் காலையிலேயே அப்பாவைக் கூட்டிட்டு டாக்டரைப் பார்க்கப் போயிட்டான்,” என்றாள் சிவகாமி. “இன்னிக்கு இதய மருத்துவர் பரிசோதனை இருக்குன்னு சொன்னேனே. மூணு மாசத்துக்கு ஒருமுறை போகணுமே!”

அப்போதுதான் தாரணிக்கு நினைவுக்கு வந்தது. கருப்பையாவுக்கான பரிசோதனை இன்று என்பது அவளுடைய நினைவிலிருந்து முற்றிலும் மறந்துபோயிருந்தது.

உடனே முத்துவை அழைத்தாள். கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது.

அவளுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்தானே என்று புரிந்து கொண்டாள். இருந்தாலும், தன்னுடன் வருவதாகச் சொன்னவன் இப்போது இல்லையே என்ற சிறிய ஏமாற்றம் மனதில் எழுந்தது.

‘சீக்கிரம் வந்துடுவாரு. நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்குள்ள வந்துடலாம்,’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு தனியாகப் பேருந்தில் ஏறினாள்.

பூவளூர் மண்டபம் உறவினர்களின் சிரிப்பாலும் பேச்சாலும் நிறைந்திருந்தது. தாரணி உள்ளே நுழைந்ததும் உறவினர்கள் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள்.

“வாடி தாரணி! புது மணப்பெண்ணே! மாப்பிள்ளை எங்கே?”

“அவருக்கு ஒரு வேலை இருக்கு அத்தை. வந்துடுவாரு.”

“என்ன வேலை? இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானே?”

அடுத்தடுத்து வந்த கேள்விகளுக்குப் புன்னகையுடன் பதில் சொல்லி சமாளித்தாள். ஆனால் அவளுடைய பார்வை மட்டும் அடிக்கடி நுழைவாயிலை நோக்கித் திரும்பியது.

மதியம் ஒரு மணி கடந்தது. பிறகு இரண்டு மணியும் ஆனது. நிச்சயதார்த்தச் சடங்கு தொடங்கியது. உறவினர்கள் தங்கள் கணவன், மனைவியுடன் அருகருகே அமர்ந்திருக்க, தாரணி மட்டும் பெற்றோருக்கு அருகில் தனியாக அமர்ந்திருந்தாள்.

அவளுடைய முகத்தைப் பார்த்த ராமலிங்கம் மெதுவாகக் கேட்டார்.

“என்னம்மா, இன்னும் வரலையா?”

“மாமாவக் கூட்டிட்டு மருத்துவமனைக்குப் போயிருக்காருப்பா. அவரோட போனும் அணைஞ்சிருக்கு.”

“அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னா, அதுதான் முதல்ல முக்கியம். நீ கவலைப்படாதே. நேரம் கிடைச்சதும் வந்துடுவார்,” என்று ராமலிங்கம் மகளைச் சமாதானப்படுத்தினார்.

தாரணி தலையசைத்தாள். காரணம் நியாயமானதுதான். ஆனாலும், வர முடியாது என்று ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என்ற எண்ணம் அவளை விடவில்லை.

அப்போது கார்த்திக் அவளருகே வந்து,

“அக்கா, அத்தான் இன்னும் வரலையா? எல்லாரும் கேக்குறாங்க,” என்று மெதுவாகக் கேட்டான்.

“கார்த்திக், கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்று எரிச்சலுடன் பதிலளித்தாள்.

அவளுடைய மனநிலையைப் புரிந்துகொண்டவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நகர்ந்தான்.

அதே நேரத்தில், அரசு மருத்துவமனையின் நெரிசலான வராந்தாவில் கருப்பையாவுடன் அமர்ந்திருந்தான் முத்து.

காலை எட்டு மணிக்கே வந்திருந்தும் மதியம் இரண்டு மணி ஆகியும் மருத்துவரைப் பார்க்க முடியவில்லை. கூட்டம் அத்தனை அதிகம். முத்துவின் கைப்பேசி காலையிலேயே அணைந்துவிட்டிருந்தது. அதைச் சார்ஜ் செய்யக்கூட அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.

மூன்று மணியளவில்தான் இருவரையும் மருத்துவர் அறைக்குள் அழைத்தார்கள்.

கருப்பையாவைப் பரிசோதித்த மருத்துவர், “இரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமா இருக்கு. மருந்தை மாத்தித் தர்றேன். நேரத்துக்கு மாத்திரை எடுத்துக்கணும். இவரைக் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க,” என்றார்.

முத்து தலையசைத்தான்.

அப்போது கருப்பையா முத்துவின் கையைப் பாசத்துடன் பற்றிக்கொண்டு, “என் மகன் மட்டும் இல்லன்னா, நான் என்ன பண்ணியிருப்பேனோ தெரியல டாக்டர்,” என்றார்.

தந்தையின் அந்த வார்த்தைகள் முத்துவுக்குள் வழக்கமான பொறுப்புணர்வை மீண்டும் அழுத்தமாக நினைவூட்டின..

மாலை ஐந்து மணிக்குத்தான் நிகழ்ச்சி முடிந்தது. தாரணி தனியாகவே வீடு திரும்பினாள்.

வீட்டை அடைந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது. அறைக்குள் சென்று பட்டுப்புடவையைக் கழற்றி வைத்துவிட்டு, திண்ணையில் வந்து அமர்ந்தாள். முத்து இன்னும் வரவில்லை.

இரவு எட்டு மணியளவில் கருப்பையாவுடன் முத்து வீட்டிற்குள் வந்தான்.

“அப்பாவுக்கு எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. மருந்தை மட்டும் மாத்தியிருக்காங்க,” என்று சிவகாமியிடம் சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான்.

வாசலில் அமர்ந்திருந்த தாரணியைப் பார்த்ததும் முத்துவின் கால்கள் தன்னையறியாமல் நின்றன. நீல நிறப் புடவையில், காலையில் சூடிய மல்லிகைப்பூ வாடிய நிலையில், சோர்ந்த முகத்துடன் அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவனுக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தியது. அப்போதுதான் அன்று நிச்சயதார்த்தத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

“தாரணி… நான்…” என்று தயக்கத்துடன் பேச்சைத் தொடங்கினான்.

“எங்க இருந்தீங்க?” அவளுடைய கேள்வி சட்டென்று வந்து விழுந்தது.

அந்தக் குரலில் இருந்த இறுக்கம் முத்துவை ஒரு கணம் அமைதியாக்கியது.

“அப்பாவுக்கு டாக்டர் செக்கப். காலையிலேயே ஆஸ்பத்திரிக்குப் போயிட்டோம். அங்கே கூட்டம் அதிகமா இருந்துச்சு. அதான் வர நேரமாயிடுச்சு.”

“போன் ஏன் அணைஞ்சிருந்துச்சு?”

“சார்ஜ் இல்ல. கவனிக்காம விட்டுட்டேன்.”

“நிச்சயதார்த்தத்துக்கு வர்றேன்னு சொன்னீங்களே?”

“நான் பாக்கறேன்னுதானே சொன்னேன்…” என்றான் முத்து மெதுவாக.

அவன் சொன்ன பதில் அவனுக்குச் சாதாரணமாக இருந்திருக்கலாம். ஆனால், நாள் முழுவதும் அவனுக்காகக் காத்திருந்து, உறவினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்த தாரணிக்கு அது மேலும் எரிச்சலைத் தந்தது.

“அப்போ வர முடியாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?”

“அப்படியில்ல தாரணி. அப்பாவுக்கு செக்கப் இருக்குன்னு தெரிஞ்சதும்…”

“தெரிஞ்சதும் எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே! காலையிலேயே சொல்லியிருந்தா, நான் இவ்வளவு நேரம் உங்களுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்காதுல்ல? அங்கே போனதும் எல்லாரும் மாப்பிள்ளை எங்கேன்னு கேட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் என்ன பதில் சொல்றதுன்னே தெரியாம நின்னேன்.”

முத்து பதில் சொல்லாமல் தலைகுனிந்தான்.

“மன்னிச்சிடு. நான் மறந்துட்டேன்.”

“மறந்துட்டீங்களா?” என்று அவனைப் பார்த்தாள் தாரணி. “என் வீட்டுல நடக்கிற முதல் விசேஷம் இது. அதுல நீங்களும் என்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அது உங்களுக்குப் புரியலையா?”

“தாரணி, நான் வேணும்னே வராம இருக்கல…”

“நீங்க வேணும்னு எதுவுமே செய்யறதில்ல! அதுதான் எனக்குப் புரியவே மாட்டேங்குது!” அவளுடைய குரல் சற்றே உயர்ந்தது. “எல்லாருக்கும் உங்களால நேரம் ஒதுக்க முடியுது. யார் கூப்பிட்டாலும் ஓடிப்போய் நிக்கிறீங்க. ஆனா, எனக்காக ஒரு விஷயத்தை மட்டும் ஏன் உங்களால உறுதியா சொல்ல முடியல? எல்லாருக்காகவும் யோசிக்கிற நீங்க, என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்ல?”

அவளுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துவின் மனதில் இறங்கின. ஆனால், அவற்றின் பின்னால் இருந்த அவளுடைய ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல், தன் குடும்பத்தின் மீதான குறையாகவே அவன் எடுத்துக்கொண்டான்.

“என் குடும்பத்தைப் பத்தி நீ இப்படிப் பேசாதே,” என்றான் முத்து. அவனுடைய குரல் அமைதியாக இருந்தாலும், அதில் இருந்த அழுத்தம் தாரணியை மேலும் பேசவிடாமல் ஒரு கணம் நிறுத்தியது.

“நான் உங்க குடும்பத்தைப் பத்திப் பேசல! உங்களைப் பத்தித்தான் பேசுறேன். நீங்க ஏன் எதையும் மனசுவிட்டுப் பேச மாட்டேங்கிறீங்க? உங்களுக்கு என்ன வேணும், என்ன பிடிக்காது, எது முக்கியம்னு எனக்கு எப்படித் தெரியும்? ஒரு வார்த்தை சொன்னாதானே தெரியும்!”

முத்து மௌனமாக நின்றான்.

அவனுக்குள் பல எண்ணங்கள் ஓடின. ஆனால் எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதும் போல அமைதியாக இருந்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடும் என்று நினைத்தான். ஆனால் அந்த மௌனம் தாரணியின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

“பார்த்தீங்களா? இப்பவும் பேச மாட்டேங்கிறீங்க. இதைத்தான் நான் சொல்றேன்!”

முத்து அவளை ஒரு கணம் பார்த்தான். பிறகு எதுவும் பேசாமல் அருகில் இருந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு வெளியே நடந்தான்.

“எங்க போறீங்க?”

அவன் பதில் சொல்லவில்லை.

அவன் காலடிச் சத்தம் இருளுக்குள் மறைந்ததும், தாரணி அப்படியே நின்றாள். சில நொடிகளுக்கு முன்பு இருந்த கோபம் மெல்லக் குறைந்தது. அதன் இடத்தில் குற்றவுணர்வும் வெறுமையும் வந்து அமர்ந்தன.

அவன் வேண்டுமென்றே தன்னை அலட்சியப்படுத்தவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. தந்தையின் உடல்நலத்துக்காகத்தான் மருத்துவமனையில் இருந்திருக்கிறான். அதில் அவன் தவறு எதுவுமில்லை.

ஆனால், ஒரு சிறிய தகவலைக்கூட அவளிடம் சொல்லாமல் விட்டது ஏன்? அவன் மௌனமாக இருந்ததால்தானே இவ்வளவு பெரிய சண்டை வந்தது? அந்தக் கேள்வி மட்டும் அவளுக்குள் அப்படியே இருந்தது.

அப்போது சிவகாமி வாசலுக்கு வந்தாள்.

“என்ன கண்ணு? முத்து எங்க போனான்?”

“வயலுக்குப் போயிருக்காரும்மா.”

சிவகாமி பெருமூச்சு விட்டாள்.

“அவன் அப்படித்தான். மனசு கஷ்டப்பட்டா யார்கிட்டயும் சொல்ல மாட்டான். நேரா வயலுக்கோ, கிணத்தடிக்கோ போய் உட்கார்ந்துடுவான். சின்ன வயசுல அரவிந்தன் ஏதாவது சண்டை போட்டாலும் இப்படித்தான். அழவும் மாட்டான், யார்கிட்டயும் சொல்லவும் மாட்டான்.”

அவள் சொல்லிவிட்டுத் திரும்பினாள். ஆனால் அவளுடைய வார்த்தைகள் தாரணியின் மனதில் பதிந்தன.

வயலில் கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தான் முத்து. சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் மட்டும் கேட்டது.

தன் காலில் இருந்த புதிய செருப்பைக் கழற்றி வைத்துக் கொண்டான். வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்தான்.

ஏன் உங்களால உறுதியா சொல்ல முடியல?

தாரணியின் கேள்வி மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தது.

அதற்குப் பதில் அவனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அதை வார்த்தைகளில் சொல்ல அவனுக்குப் பழக்கமில்லை.

சிறுவயதிலிருந்தே தன் ஆசைகளை அடக்கிக்கொண்டு, மற்றவர்களின் தேவைகளைப் பார்த்து வாழ்ந்தவன் அவன். தன்னுடைய மனதில் இருப்பதைச் சொன்னால் யாராவது வருத்தப்படுவார்களோ என்ற எண்ணமே அவனை எப்போதும் அமைதியாக வைத்திருந்தது.

இப்போது அவனுடைய மனைவி அவனிடம் பேசச் சொல்கிறாள். மனதில் இருப்பதைச் சொல்லச் சொல்கிறாள். ஆனால், இத்தனை வருடங்களாகப் பழகிய மௌனத்தை ஒரே நாளில் எப்படி உடைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.

நள்ளிரவு நெருங்கியது.

தாரணி இன்னும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தாள். அவளுடைய கண்கள் கலங்கிக் கொண்டு இருந்தன. 

“தாரணி…”

வள்ளியம்மாளின் குரல் கேட்டுத் திரும்பினாள்.

கம்பை ஊன்றிக்கொண்டு மெதுவாக நடந்து வந்தவர், அவளருகில் நின்றார்.

“இன்னும் தூங்கலையா கண்ணு?”

“இல்ல பாட்டி…” என்றாள் தாரணி. அவளுடைய குரல் உடைந்திருந்தது.

“வா, என் பக்கத்துல உட்காரு.”

அவளருகில் அமர்ந்த வள்ளியம்மாள், சிறிது நேரம் அவளை அமைதியாகப் பார்த்தார்.

பிறகு மெதுவாகச் சொன்னார்.

“நீ இப்போ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும் தாரணி. அதுக்காகத்தான் உன்கிட்ட ஒரு கதை சொல்லப் போறேன்…”

தொடரும்… 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top