இருள் நிழலாய் நானே 14

இருள் நிழலாய் நானே 14

தனக்காக உயிரையும் பொருட்படுத்தாது கிராமத்திற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தன் அத்துவை தடுக்கும் வழி தெரியாது மகியின் ஆன்மா தவித்துக் கொண்டிருந்தது.

“அங்க போய் எங்கடா தங்குறது?” சீனு கேட்க,

“அங்க தங்கி சுத்திப் பார்க்க போகல” என்ற சமர், “அப்புறம் ஒரு விஷயம்” என நிறுத்தி “நான் மட்டும் தான் போறேன்” என்றான்.

“முடியாது சமர்” என்று உடனடியாக மறுத்த சீனு, “உன்னை எல்லாம் தெரிஞ்சே, அங்க தனியா விட முடியாது” என்றான்.

“அதே தான் நானும் சொல்றேன். போனால் திரும்பி வருவேனா தெரியாத இடத்துக்கு உன்னையும் கூட்டிட்டு போய் வாரிக்கொடுக்க முடியாது” என்றான். அழுத்தமாக.

“நான் வருவேன் தான்!” சீனு அடம் பிடித்தான்.

“ரொம்ப தான் பாசம்.” கண்ணாடி மேடையில் காலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்த அனல் அரூபம் கேலி செய்தது.

“உயிர் இல்லாத உனக்கு எங்க எமோஷன்ஸ் புரியாது.” சீனு காட்டமாக மொழிந்தான்.

“உணர்வுகள் பத்தி தெரிஞ்சதால் தான், மகியை வைத்து உங்களை கிளப்பியிருக்கேன்” என்ற அரூபம், “நிச்சயம் உங்களுக்கு எதும் ஆகாது. நான் இருக்கேன்” என்றது.

“அண்ணா பிளீஸ் வேண்டாம். என்கிட்டவும் இதைத்தான் சொன்னாள். நான் இல்லாம போகும்போது எங்க போனாள் கேளுங்க” என்று சீறியது மகியின் அரூபம்.

சீனு மகிக்கு பதில் சொல்லாது சமரிடம் மல்லுக் கட்டிக்கொண்டு இருந்தான்.

“அண்ணா… அண்ணா…” மகி அழைத்திட..

“இப்போ நீ என்ன பேசினாலும் சீனுவுக்கும் கேட்காது” என்று சத்தமாக சிரித்த அனல், “உன்னை காப்பாத்த முடிஞ்சிருந்தா கண்டிப்பா நான் காப்பத்தியிருப்பேன். என்னோட சக்தியை அங்க யாரோ கட்டி வச்சிருக்காங்க. வேலை செய்ய மாட்டேங்குது” என்று வருத்தமாக சொல்லியது.

“லட்டு…” என சமர் அழைக்க, அவனின் கையில் குளிரின் தடம்.

“போகலாமா?”

அடி எடுத்து வைக்க விடாது சமரின் பாதம் இரண்டையும் பனியால் உறைய வைத்தாள் மகி.

சட்டென்று நெருப்பு கங்குகளின் வெப்பத்தால் பனி உருகி கரைந்தது.

“அய்யோ ஏன் இப்படி பன்ற?” என்று ஆற்றாமையுடன் மகி அழ, அவளின் கண்ணீர் சமரின் கையில் பனித்துகளாக விழுந்தது.

“அழறியா லட்டு” என்ற சமர், “அதான் நான் கிளம்பிட்டனே மகியை விடு பிளீஸ்” என அனலிடம் கெஞ்சும் குரலில் கேட்டான்.

“உனக்காக… உன் மேலிருக்கும் நம்பிக்கையால் விடுறேன்” என்று அனல் பதில் வழங்கிய நொடி, மகியின் ஆன்மா அரூபத்தின் கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு சமருக்கு வெண்புகை உருவமாக காட்சியளித்தாள்.

“லட்டு.” மகியின் காற்று அவனை சுற்றி வளைத்தது.

“நீ அவளை கட்டுப்படுத்துற மாதிரி, அவளால் உன்னை செய்ய முடியாதா?”

சீனு முக்கிய கேள்வியை அனலிடம் கேட்டான்.

“இதுக்கு பதில் அங்க வந்தால் தெரியும்” என சிரித்த அனல், “நாம வெளியில் இருப்போம் வா” என்று மறைந்தது.

‘அவளே ஆவியா இருக்கா ஒரு கிஸ் கூட கொடுக்க முடியாது. இது புரியமா இதெல்லாம் ஒரு பேய்’ என்று நினைத்த சீனு நொடியில் தான் உணரும் முன்பு கூடத்தில் இழுத்து தள்ளப்பட்டிருந்தான்.

“ஹேய் என்ன?” என்று எழுந்த சீனு, “அதான் பிரண்ட்ஸ் ஆகிட்டோம்ல. அப்புறமும் என்ன பயம் காட்டிட்டு இருக்க?” கோபமாக வினாவினான்.

அனல் சத்தமிட்டு சிரித்தது.

“என்ன?”

“ஒன்னுமில்லை” என்ற அரூபத்தின் குரலில் முதல் முறை அழுகையின் சாயல்.

“நீ கொடூரமா சிரிப்பையே… அதைக்கூட செய். இப்படி அழ மட்டும் செய்யாத” என்ற சீனு, “நீயும் கொஞ்சம் நல்ல பேய் தான்” என்றான்.

ஆன்மா விரக்தியாக சிரித்தது.

“அங்க வந்தால் ஒரு எல்லைக்கு மேல் என் சக்தி வேலை செய்யாது. மகியால் மட்டும் உங்களுக்கு உதவ முடியும் சொல்ல முடியாது. வைக்கிற ஒவ்வொரு அடியும் கவனமா வையுங்க” என்ற அனல், “சமர்ரை தனியா விட்டுடாத?” என்றது.

“பாருடா பேய்க்கு அக்கறைய” என்ற சீனு, “உன் பக்கம் சொல்லாத கதை ஒண்ணு இருக்கும் போல” என்றான்.

“நிறைய சொல்லப்படாத விஷயம் இருக்கு. அங்க வந்தால் தெரிஞ்சிடும்” என்றாள்.

“மகி உன்னை எதையோ சமர் கிட்ட சொல்லவிடாமல் தடுக்கிற மாதிரி தெரியுதே! என்ன அது?”

“அவளே சொல்லுவாள்.”

“ம்ம்.”

அறைக்குள் தன்னை புகையாய் சுற்றி வளைத்திருக்கும் தன் லட்டுவின் ஸ்பரிசத்தை சமர் மெல்ல மெல்ல தன்னில் உணர்ந்தான்.

“லட்டு.” வெகு நாட்களுக்குப் பின்னான இறுகிய அணைப்பு.

சமரின் கண்கள் கண்ணீரைக் கொட்டியது.

“நீ வர வேணாம் அத்து.” அவனது அணைப்பில் வாகாய் பொருந்தி நின்ற மகி மெல்ல சமரின் காதில் கூறினாள்.

“எனக்கு நீ எப்படி இப்படின்னு எல்லாம் தெரியணும் லட்டு” என்ற சமர், “வேணாம் சொல்ல என்ன காரணம் சொல்லு” எனக் கேட்டான்.

மகி அங்கு நடந்தது கண்டது என எல்லாம் மாயம் போல் இருக்க… எதையென்று என்ன சொல்லுவாள்.

தன் கண்ணில் பட்டதை அப்படியேக் கூறினாள்.

இதையேதான் தினேஷும் கூறினான்.

“நீ உன் உடம்பை பார்த்தியா லட்டு?”

“இல்லை” என்றது மகியின் அரூபம்.

“உண்மையாவே நீ… நீ செத்…” அந்த வார்த்தையை சொல்லவே சமர் தடுமாறினான்.

“உன் முன்னாடி ஒரு ஆன்மாவா நிக்கிறேன். உனக்கு இன்னும் நம்ப முடியலையா?” என்ற மகி, “அவளை நம்பி போக வேண்டாம் அத்து” என்றாள்.

“பிளீஸ் லட்டு… உனக்கு நான் நியாயம் செய்யணும்” என்றான் சமர்.

“அவள் உன்னை என்னை வைத்து மிரட்டி கூப்பிடுறாள் அத்து. அது உனக்கு புரியலையா?”

“அங்க வந்தால் உன்னை மீட்கலாம் சொல்லுது.”

“வாய்ப்பே இல்லை அத்து. அவளுக்கு அவளோட இறப்பு, கிராம மர்மம், அங்க என்ன நடக்குது எல்லாம் தெரியணும். அவளால் இங்க நம்ம கிட்ட காட்டுற வித்தையை அங்க காட்ட முடியாது. அதான் உன்னை யூஸ் பண்ணிக்கிறாள்” என்ற மகி, “அந்த மலையில் என்னவோ நடக்குது அத்து” என்றாள்.

“ஒரு பெர்சென்ட் வாய்ப்பு இருந்தாலும் போதும். அவள் உன்னை உயிரோடு கொண்டு வர முடியும் சொல்லும் போது… அது உண்மையா இருக்கும் தான் தோணுது” என்ற சமர், “எனக்கு எதும் ஆனாலும் பரவாயில்லை மகி, உனக்காக… எனக்காக முயற்சி செய்றேன்” என்றான்.

“இன்னுமாடா பேசிட்டு இருக்க. போற வழி முழுக்க பேசலாம். கிளம்புடா! இந்த பேய் வேற அங்க அது இருக்கு இது இருக்குன்னு பயம் காட்டுது. ஏழு மணிக்குள்ள போகணும் சொல்லுது” என்று கூடத்திலிருந்து குரல் கொடுத்தான் சீனு.

“அத்து பிளீஸ்…” மகி சமரின் கையை அழுத்தமாகப் பற்றினாள்.

“உனக்கு திரும்ப உன் அத்துவோடா வாழ சான்ஸ் கிடைக்கும் போது எதுக்கு தடுக்கிற மகி,” அனல்.

“என்னால் முடிஞ்சா உன்னை மேல அனுப்பிடுவேன். முடியலையே” என்று மகி கோபம் கொண்டாள்.

“ஆல்ரெடி மேல போக முடியாமதான் அல்லாடுறேன்” என்ற அனல், “எனக்கான பதில் கிடைச்சா நானே போயிடுவேன்” என்றது.

“அப்போ உன்னை வழியனுப்பி வைக்க, நீ எங்க உயிரோடு விளையாடுறியா?” என்றான் தினேஷ்.

“நீயொரு சுயநலவாதி.” மகி தன்னால் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லையே, அவளை மீறி சமர் செல்வதை தடுக்க முடியவில்லையே என இயலாமையில் கத்தினாள்.

“மகி… கிளம்பியாச்சு. அவளை விடு. அவளை நம்பி நான் வரல. நான் என் மகியை நம்பி வரேன்” என்றான் சமர்.

“அவன் மட்டுமில்லை. நானும் தான்” என்றான் சீனு.

“அண்ணா நீங்களாவது நான் சொல்றதை கேட்டு இங்கேயே இருங்க, பிளீஸ்” என்ற மகி, “ஏற்கனவே என்னால் ரெண்டு உயிர் போயிருக்கு” என ராகுல் மற்றும் வர்ஷாவைக் குறிப்பிட்டுக் கூறினாள்.

“அவங்களுக்கான காரணம், உனக்கு என்னாச்சு, இதையெல்லாம் நீ தெரிஞ்சிக்க வேண்டாமா மகி?” அனல் அழுத்தமாகக் கேட்டது.

“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். எல்லாம் அந்த லெட்டரால் வந்தது. அதை நம்பி, அந்த ஊர் மர்மத்தை கண்டுபிடிக்கன்னு நாங்க யாரும் கிளம்பியிருக்கவேக் கூடாது” என்ற மகி, சமர் முன் அழுகையை அடக்கிட முடியாது புகையாய் மறைந்து போனாள்.

“மகி…” சமர் சுற்றித் தேடினான்.

“அவள் உன்னை விட்டு எங்கும் போகல. உன் கண்ணை விட்டு மறைஞ்சிருக்கு. கிளம்பு” என்றது அனல்.

சமர் கிராமத்துக்கு செல்ல முடிவெடுத்ததும், மகியின் இழப்பிலிருந்து மீள வேண்டும் என்பது காரணமாக வைத்து, ரேவதி மற்றும் சுந்தரை கோவில் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து நேற்று தான் அனுப்பி வைத்திருந்தான்.

அவனை விட்டு போகமாட்டோம் என்றவர்களை அதை இதை சொல்லி அனுப்பி வைத்துவிட்டு அவனும் தன்னவளைத் தேடி புறப்பட்டுவிட்டான்.

_________________________

பேருந்தில் வர முடியும் தூரம் வரை வந்து சேர்ந்திருந்தனர்.

தன்னுடன் சேர்ந்து இறங்கிய சீனுவை சமர் முறைத்து பார்த்தான்.

“சும்மா முறைக்காதடா. உன்னை அனுப்பி வச்சிட்டு நான் அங்க என்னாச்சுன்னு கவலைப்பட்டு நிக்கிறதுக்கு… உன்னோட வந்து எதா இருந்தாலும் பார்த்திடுறேன்” என்றான்.

கிளம்பும் நேரத்தில் சமர் வர வேண்டாமென சொல்லிய எதையும் காதில் ஏற்காது அடமாக அவனோடு வந்து கொண்டிருக்கிறான்.

சாலையிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினான் சமர். அவனோடு சீனு.

“எங்கடா இந்த பேய். நம்மளை தனியா அனுப்பி வச்சிட்டு எங்க சுத்துது?” என்று தன் பார்வையை சுழற்றினான் சீனு.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் வறண்ட பூமியாக காட்சியளித்த இடத்தில், ஒற்றையாக தனித்து நின்ற மரத்தின் கிளையில் காலாட்டியபடி உட்கார்ந்திருந்தது அனல் ஆன்மா.

“ம்க்கும்.” சீனு பாதையில் கண் வைத்தான்.

“மகி…” சமர் அழைக்க, குரல் காட்டாது தன்னிருப்பை உணர்த்தியது மகியின் ஆன்மா.

“இருட்டிட்டால் கஷ்டம். சீக்கிரம்” என்றது அனல்.

“உனக்கு தான் பவர் இருக்கே. எங்களை கண்ணை மூடி கண் திறக்கிறதுக்குள் போக வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போயிடேன்” என்றான் சீனு.

“இங்க அவள் மாயாஜாலம் வேலை செய்யாது” என்று மகி சிரிக்க…

“சிரிச்சிக்கோ… எனக்கு என் வேலை நடந்தால் போதும்” என்ற அனல், “இந்த பரப்பு முடிஞ்சு காடு வரும். சின்ன காடு தான். ஆனால் கடக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றது.

“அத்து…” என்ற மகி, “திரும்பி போயிடு” என்றது.

கோபம் கொண்ட அனல், “இனியொரு முறை நீ தடையா குறுக்க வந்த” என்ற அனல், தன் நெருப்பு வளையம் கொண்டு மகியை கட்டிப் போட்டது.

பனி நெருப்பின் தாக்கத்தில் மெல்ல உருக, சமரின் பாதத்தில் நீர் நிறைந்தது.

“மகி… மகி…” சமர் அரூபத்தின் கோபத்தில் அதன் உடல் தீப்பற்றி எரிவதை கண்டு கத்தினான்.

“என்னால் இங்க நடப்பதற்கு எதிராகத்தான் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு எதிராக என்ன வேணாலும் செய்ய முடியும்” என்ற அனல், மகியை விட்டது.

“அவள் பனியாய் உறைய காரணம், அவளோட உடல் குளிர்வூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது” என்ற அரூபம், “இன்னொரு உண்மை சொல்லட்டுமா?” என்று மகியை பார்த்துக்கொண்டே கேட்க,

மகி சமரை ஏறிட, சமர் அவளை தீயாய் முறைத்துக் கொண்டு நின்றான்.

மகி வேண்டாமென அனலை சுற்றி வளைத்து, அதனின் தொண்டையை இறுக்கிப் பிடித்தது.

அனலும் சுற்றி சுழன்று பனியின் பிடியிலிருந்து வெளிவந்ததாக, பனியை வளைத்து தன் தகிப்பைக் கூட்டி கரைய வைத்தது.

கரைந்த பனி, துகள்களாக சிதறி அனலின் தணலை குறைத்தது.

அனல், பனி… இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று கட்டுண்டு மீளா சுழலில் சிக்கி சுழன்று அவ்விடத்தையே பாதி குளிராகவும், பாதி வெப்பமாகவும் மாற்றியிருந்தன.

நடுவில் மாட்டிகொண்ட சமரும் சீனுவும்… ஒரே நேரத்தில் சில்லிப்பையும், தகிப்பையும் ஏற்க முடியாது, கோபம் கொண்டு விதி மீறி நடக்கும் இரு ஆன்மாக்களை அடக்கும் வழி தெரியாது தவித்து நின்றனர்.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top