தித்திக்கும் தேனருவி (எபிலாக்)

தித்திக்கும் தேனருவி (குட்டி எபிலாக்)

கருவீரன் கோவிலில் ஒலிக்கும் மோள சத்தம், தேனோடை மருவம் வரை பரவி எதிரொலித்தது.

அன்று பௌர்ணமி.

பெண்கள் அனைவரும் கருவீரனுக்கு பொங்கல் வைக்க சென்றிருந்தனர்.

அருவிக்கரை பாறையின் மீது தேவ் வாசுவுடன் பேசியபடி மனைவியின் வருகைக்காகக் காத்திருந்தான்.

“தூக்கம் வருதுடா!” வாசு இதோடு பத்து முறைக்கு மேல் சொல்லிவிட்டான். தேவ் அவனை விடுவதாக இல்லை. அவனும் சென்றுவிட்டால், இருட்டில் தனியாக எப்படி அமர்ந்திருப்பது. காட்சிகளும் புலப்படாத கருமையில். அதற்காகவே வாசுவை இழுத்துப் பிடித்தான்.

“மதுராவும் தானே போயிருக்கு. கொண்டுவர பொங்கல் சாப்பிடாம நீ தூங்கப்போவதில்லை. அப்புறம் எதுக்குடா வீட்டுக்கு போகணும் அடம் பிடிக்கிற?” எனக் கேட்டான் தேவ்.

“நீ வெக்கேஷனுக்கு வந்திருக்க. ஜாலியா உட்கார்ந்திருப்ப. நாளைக்கு நான் ஹாஸ்பிடல் போக வேண்டாமாடா?” என்ற வாசு, “இப்போ மலையில் இருக்கும் கிராமம் எல்லாம் மருவத்துக்கு தான் சிகிச்சைக்கு வறாங்க. எல்லாம் உன்னால் தான் அதி. ரொம்ப தேன்க்ஸ் டா” என்றான். நெகிழ்வாய்.

“அடி வாங்குவ… ராஸ்கல்” என்ற தேவ், “இது உன்னோட கனவுடா. நிறைவேறியிருக்கு. முழு காரணம் உன்னோட எஃபோர்ட் மட்டும் தான்” என்றான்.

“ஆனால் நீயில்லாமல் சாத்தியமில்லை” என்ற வாசு, “வளைக்கவே முடியாத யர்ராவையே உன் பக்கம் வளைச்சிட்டியே” என்றான்.

யர்ராவுக்கு தற்போது வாசுவை காட்டிலும் தேவ் ஒருபடி மேல் தான். மகளை மருமகன் பார்த்துக்கொள்ளும் விதத்தில் மொத்தமாக அவன் பக்கம் வீழ்ந்துவிட்டார்.

இன்னும் நேரடியாக பேசிக்கொள்வதில்லை என்றாலும், தேவ் என்றால் இப்போது கொள்ளைப்பிரியம் அவருக்கு.

அதனையே வாசு சுட்டிப் பேசினான்.

“மேள சவுண்ட் கிட்ட கேட்குது. நாம வா உள்ள போகலாம்” என்று வாசு எழ, “இருடா விளக்கு விடுவதை பார்த்திட்டு போகலாம்” என்று வாசுவை பிடித்து நிறுத்தினான் தேவ்.

கருவீரனுக்கு படைத்த பொங்கலை தேனருவி அம்மனின் முன்பு வைத்து வணங்கிய பெண்கள், அங்கிருந்து ஏற்றி வந்த தீபத்தை அருவி ஓடையில் விடும் காட்சி அந்த அடர்ந்த இருளில் அத்தனை வெளிச்சமாய் கொள்ளை அழகாய் காட்சியளித்தது.

விளக்கின் ஒளியில் தன்னவளையும், தன் மகளையும் இருளில் பிரகாசிக்கும் நிலவாய் ரசித்திட்டான் தேவதிரன்.

“மதுரா வறாள்” என்று தேவ் வாசுவிடமிருந்து நகர்ந்து செல்ல,

“நீங்க தூங்கியிருப்பீங்க நினைச்சேன்” என்று வாசுவின் அருகில் வந்த மதுரா, பொங்கலை அவனது கையில் கொடுத்தாள்.

“பையன் எங்க மாமா?”

“அவன் அப்பாவோட தூங்கிட்டான்” என்ற வாசு, தேவ்வுக்கு கை அசைத்துவிட்டு மதுராவுடன் தன் வீடு நோக்கிச் சென்றான்.

“அண்ணா இருந்தாங்களா? நான் கவனிக்கல” என்ற மதுரா, “என்ன நினைத்தாரோ?” என்றாள். வீட்டிற்குள் நுழைந்தவாறு.

“அவன் எதுவும் நினைக்க மாட்டான். இப்போ நீ என்னை நினை” என்ற வாசு எப்போதும் போல் மனைவியிடத்தில் தொலைந்து போனான்.

மொத்த பெண்கள் கூட்டமும் தத்தம் குடிலுக்கு சென்ற பின்னர் தான், அருவியும், அவர்களது நான்கு வயது மகள் தேனமிழ்தாவும் கரையை விட்டு வெளியில் வந்தனர்.

அதுவரை மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு ரசித்து பார்த்திருந்தான் தேவதிரன்.

தேவ் தன்னுடைய அருவிக்காக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஐந்தாறு நாட்கள் இங்கு தங்குவது போல் வந்திடுவான். அப்போதெல்லாம் முதலில் இங்கு வந்தபோது தங்கிய குடிலிலே தன் மனைவி மகளுடம் தங்கிக்கொள்வான். அதற்காக யர்ராவின் வீட்டிற்கு செல்லமாட்டான் என்றில்லை. செல்வான், உண்பான், வந்துவிடுவான். யார்ராவே அங்கு தங்கும்படி கூறியும் அவன் அங்கு தங்கியதில்லை. அது யார்ராவின் மீதான கோபமில்லை… அவரால் இன்னமும் எப்படி இறங்கி வந்து தேவ்வுடன் இயல்பாய் பேசிட முடியவில்லையோ, அதுபோல் அவனாலும் இயல்பாய் அவர்கள் வீட்டில் தங்கிட முடியவில்லை.

“உங்களைப்போல் அவன் மொத்தமா ஒதுங்கி போகலையே! அதுவே போதும்” என வாசு சொல்லிய பின்னர் தான் அல்லி மனம் சமன் கொண்டார்.

அல்லிக்கு மகள் நிறைவான வாழ்வு வாழ்வதை பார்த்து அத்தனை பூரிப்பு.

மனைவியும் மகளும் பக்கம் வர, மகளை அள்ளித் தூக்கிய தேவ், மனைவியை கை வளைவில் குடில் நோக்கி அழைத்துச் சென்றான்.

“நான் பொங்கல் வச்சேன் ப்பா. புஸ்ஸுன்னு பொங்கி வந்துச்சு. அம்மாவுக்கு பாப்பா நிறைய ஹெல்ப் பண்ணேன்” என்று தேனு கோவிலில் நடந்த கதைகளை கண்களை உருட்டி, கைகளை விரித்து சொல்லிக்கொண்டு வர, தேவ் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டு வந்தான்.

மகளிடம் அவன் காட்டும் கனிவையும், அவளது பேச்சில் அவன் நீண்டு சிரிப்பதையும் மௌனமாய் உள்ளுக்குள் உள்வாங்கியபிடி அருவி அவனுடன் இணைந்து நடந்தாள்.

குடிலுக்குள் நுழைந்து மகளை கட்டிலில் அமர்த்திய தேவ்,

“ஹனி பேபிக்கு தூக்கம் வரலையா?” எனக் கேட்டான். கன்னத்தை பிடித்து ஆட்டி.

“பேபி சித்துகிட்ட பேசலையே!” குழந்தை உதட்டை சுளித்து சொல்லிட தேவ் நேரத்தை பார்த்தான்.

“சித்து தூங்கியிருப்பான். நீங்க கோவில் போன டைம் கால் பண்ணாங்க” என்று தேவ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, தேவ்வின் அலைப்பேசி இசைத்தது.

“தின்க் ஆஃப் த டெவில்” என்று சிரித்த தேவ், “சித்து தான்” என அலைபேசியை ஏற்று “என்னடா?” எனக் கேட்டான்.

“பாப்பா வந்தாச்சா அதிண்ணா?”

“அவள் தூங்கிட்டா டா!”

“என்னது தூங்கிட்டாளா?” என்ற சித்து, “அவகிட்ட பேசாமல் எனக்கு தூக்கம் வராது தெரியும்ல. வந்ததும் கால் பண்ணுங்க சொன்னேன் தானே” என்று தன் அண்ணனை கடிந்தான்.

“எதுக்குடா கத்துற? சும்மா சொன்னேன். அவளும் இப்போதான் உன்னை கேட்டாள்” என்று மகளிடம் கொடுத்தான்.

“ஹனி டார்லிங் இன்னைக்கு சித்துவுக்கு கால் பண்ணல. நான் கோபமா இருக்கேன்” என்று சித்து சிறுவனாய் குழந்தையிடம் கோபித்துக்கொள்ள,

“அச்சோ சித்து நான் உனக்காக வேண்டிக்கத்தான் கோவில் போயிருந்தேன்” என்று தேனு சற்றும் யோசிக்காது பதில் கூறியிருந்தாள்.

“நிஜமாவா?”, சித்து.

“ஆமா சித்து. நீ எப்போ பாரு சித்தியை சீக்கிரம் வீட்டுக்கு வான்னு கேட்டுட்டே இருப்பல? அதான் நான் சாமிக்கிட்ட சித்தியை தம்பி தூக்கிட்டு வீட்டுக்கு வர வையுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்” என்ற தேனுவின் பேச்சில் தாய் தந்தை இருவரிடமும் அப்படியொரு புன்னகை.

சித்துவுக்கும், வித்யாவுக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு வருடங்களாகிறது. வித்யா பிரசவத்திற்காக அன்னை வீடு சென்றிருக்க, சித்து அவள் வரவை எதிர்பார்த்து அவளிடம் கேட்டுக்கொண்டிருக்க, அதனையே தேனு குறிப்பிட்டாள்.

“தேன்க்ஸ் டா டார்லிங்” என்று மகளுக்கு அலைப்பேசி வழி முத்தம் வைத்த சித்தார்த், அவளிடமிருந்து தானும் பெற்றுக்கொண்டே அழைப்பை வைத்திட்டான்.

சில நிமிடங்களில் தேவ் மகளுடன் பேசியபடி அவளை தூங்க வைத்திட்டு பார்க்க, அருவி மற்றொரு படுக்கையில் படுத்து உறங்கியிருந்தாள்.

மகளின் நெற்றியில் முத்தம் வைத்து கீழே விழாதிருக்க இரு பக்கமும் அணைவாக தலையணைகளை வைத்துவிட்டு மனைவியின் அருகில் வந்தவன், இடையில் கை குற்றி சில நொடிகள் அவனது அருவியையே பார்த்திருந்தான்.

“ராஸ்கல்… அதான் நடிக்க வரல தானே! அப்புறம் என்ன?” என அவளின் திருட்டுத்தனத்தை கண்டு கொண்டவனாக மனைவியை ஒட்டி படுத்தான்.

“ப்பா… உங்ககிட்ட எதாவது பண்ண முடியுதா? எல்லாம் கண்டு பிடிச்சிடுறீங்க” என எழுந்து அமர்ந்தாள்.

“ம்ப்ச்… இப்போ எதுக்கு எழற?” எனக் கேட்டு அவளின் கை பிடித்து இழுத்து, தன் மார்பில் தாங்கினான்.

“பொங்கல் கொண்டு வரேங்க” என்று அவனது பிடியிலிருந்து நழுவி எழுந்தவள், சிறு இலையில் கொண்டு வந்து கொடுக்க, வாய் திறந்து காட்டினான்.

ஊட்டி முடித்தவள் கை கழுவி வர,

“இந்த பொங்கல் சாப்பிட எத்தனை கட்டுப்பாடு? இப்போ நான் சாப்பிட உன் அப்பா ஒன்னும் சொல்லமாட்டாரா பொண்டாட்டி?” என அவளை சீண்டி, முறைப்பை பரிசாகப் பெற்றான்.

“நீ பர்ஸ்ட் டைம் கொடுத்த பொங்கல் அளவுக்கு வேறெந்த பொங்கலும் இருந்ததில்லை” என்று அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.

முதல்முறை கருவீரன் கோவில் முன்பு வைத்து பொங்கல் கொடுத்த நிகழ்வு நினைவு வந்து அருவியை சிவக்க வைத்திட, மொத்தமாய் அவனுள் சிவந்து கரைந்தாள்.

களைத்து படுத்திருப்பவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து தன் அணைவில் வைத்தவன்,

“அருவி அதிகிட்ட இன்னொன்னும் மறைக்கிறாங்களே?” என்று அவளின் காது மாடலை உதட்டால் உரசினான்.

“இல்லையே!”

“இல்லையா?” தேவ்வின் கரம் அவளின் வயிற்றில் படிந்தது.

“உங்ககிட்ட எதையுமே மறைக்க முடியல. போங்க… இந்த முறையாவது சர்ப்ரைஸ் பண்ணலான்னு பார்த்தேன். கண்டுபிடுச்சிட்டிங்க” என்று அவனது மார்பிலே கடித்து வைத்தாள்.

தேனு வயிற்றில் உதித்த போதும், அவளுக்கு முன்பு தேவ் கண்டு கொண்டிருந்தான்.

“அதிக்கு தெரியாம அருவிக்கிட்ட எந்த ரகசியமும் இல்லையே” என்ற தேவ், “லவ் யூ மிஸ்ஸஸ் தேனருவி தேவதிரன். செக்கெண்ட் டைம் அப்பா ஆக்கிட்ட” என்று மீண்டும் அவளுள் மூழ்கி திளைத்தான்.

தனக்கு கிடைத்திடவே மாட்டானா என்று தனக்காக உருகி குலைந்தவளை ஒவ்வொரு நாளும் தனக்குள் உருக்குலைய வைத்து, அன்பை மட்டுமே பொழிந்து, வாழ்வின் ஒவ்வொரு அத்தியாத்துக்கும் தனது அருவியை மகிழ்வில் அதீத ஆர்பரிப்போடு அழைத்து சென்று கொண்டிருக்கிறான் தேவதிரன்.

அவர்களின் வாழ்வு இறுதி அத்தியாயம் வரை காதலாய் சலசலத்துக்கொண்டே இருக்கும்.

இது தேவதிரனின் காதல் தித்திக்கும் தேனருவி.

சுபம்

error: Content is protected !!
Scroll to Top