தித்திக்கும் தேனருவி 1

அத்தியாயம் 1

இலை வடிவில் இதயம் இருக்கும்
மலை அளவு எதையும் சுமக்கும்
– நா. முத்துக்குமார்.

கடந்த பின்பும் கனமாக…
கலைந்த பின்பும் கனவாக…
அவன்(ள்) நினைவு!
மற(று)க்க முடியாத நிஜம்!

ஏனோ,
நிஜமில்லா நினைவுகளைத்தான்
மனம் அதிகம் நேசித்து…
வதை(வலியின்பம்) கொள்கிறது.

அவனு(ளு)ள் நானாக…
– பிரியதர்ஷினி.S

ஏதோ தூர நினைவுகள் அவனுள். இமைகள் மூடிய விழிப் பார்வையை கடந்து அகக்கண்ணில் காட்சி சிதறலாய் அவனவளின் ஈர முகம்.

வெள்ளியை உருக்கி ஓடவிட்டது போல், கரும்பாறை விளிம்பில் இடி முழக்கமாய் புவியவளின் மடியில் கொட்டி ஆர்ப்பரிக்கும் அருவியின் நடுவே ஒளி கீற்றாய் பால் வண்ண முகம்.

கொட்டும் நீரில் நனைந்து கொண்டிருந்த முகம், நீரை விட்டு முகத்தை வெளியில் பளிங்காய் காட்டிட முனைய,

“டாக்டர்” என்ற குரலில் அகம் சேர்ந்திட்ட முகத்தை கரம் சேர்க்க முடியாது பட்டென்று விழி திறந்திருந்தான் தேவதிரன். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணன்.

‘டாக்டர்’ எனும் ஒலி… அவன் இதயத்தை ஒரு கணம் நின்று துடிக்க வைத்தது.

எத்தனை பேர் உச்சரித்தாலும் அவனவளின் ஒற்றை அழைப்புக்கு ஈடாகுமா?

கண்கள் இரண்டும் செந்நிறம் பூசி, உறக்கத்திற்கு கெஞ்சியது. சற்றும் அதனின் தாக்கம் அவனது முகத்தில் இல்லை. உறக்கத்தையே மறந்தவன் போல் அசட்டையாய் நிமிர்ந்து அமர்ந்தான்.

தன்னை விளித்த செவிலிப்பெண்ணின் முகம் பார்த்து தன் புருவம் உயர்த்தினான்.

“ஓ.டி ரெடி சார்.”

கேட்டுக் கொண்டதற்கேற்ப அவனின் தலை மெல்ல அசைந்ததோ. ஒருவித சந்தேகத்துடன் தான் அப்பெண் அங்கிருந்து சென்றிருந்தாள்.

ஆகாய வர்ண சட்டைக்கு மேல் கழுத்தைச்சுற்றி இறுகியிருந்த ஸ்டெத்தஸ்கோப்பினை கழட்டி மேசையின் மீது வைத்தவனின், விரல்கள் மெல்ல அதனை வருடியது.

நொடியில் சிந்தை சேர துடிக்கும் நினைவை விரட்டியவனாக, வேக எட்டுக்கள் வைத்து, நிமிர்ந்த நடையோடு, கண்களில் கூர்மை, நெஞ்சில் மிடுக்கினை அசாதாரணமாகக் காட்டி அறுவை சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்தான்.

பாதுகையின் மேல் அதற்குரிய கவரினை அணிந்தவன், அறுவை சிகிச்சை அறைக்குள் செல்வதற்கு ஏதுவாக அங்கியினை அணிய வந்த செவிலியை தடுத்து தானே அணிந்து கொண்டவன், தலையையும் உறை கொண்டு மறைத்தவனாக, முகத்திற்கு மூக்கு மட்டும் வாயினை மறைக்கும் மாஸ்க் அணிந்து உள்ளே சென்றான்.

ஒருவித இறுகியத் தோற்றத்தில் இருந்தவன் நொடியில் உடலினை தளரச் செய்து கண்களில் கனிவை காட்டி, படுக்கையில் கிடந்த சிறுமியிடம் கண்களால் புன்னகை சிந்தினான்.

அனுதினமும் அவனை பார்த்து, உடன் அவன் கீழ் பணிபுரியும் செவிலிகளுக்கு அவனது ஒவ்வொரு பாவனையும் ஆச்சரியம் தான்.

தனிமையில் இருக்கும் நேரம் உலகத்தில் தான் மட்டும் தான் இருக்கிறோம் என்ற அளவில் தானுண்டு தன் வேலையுண்டு என்று ஆழ்ந்த அமைதியிலும், தனக்கு பேசவே தெரியாதெனும் விதமாக அதரங்கள் விரிக்காது பார்வை மொழி பேசி தனக்கென்ற எல்லை வகுத்து மூழ்கியிருப்பவன்…

பணியென்று வந்துவிட்டால் போதும்…

அதுவும் தன்னை நம்பி, தன்னிடம் வந்தால் சரியாகிப்போகும் என்கிற நம்பிக்கையோடு தன்னெதிரே கண்களில் சோகம் ஏந்தி அதீத நம்பிக்கையோடு அமர்ந்திருப்பவர்களை பார்த்துவிட்டால், முழுதாய் மாறிடுவான்.

அத்தனை வாஞ்சை அவனது கண்கள் பிரதிபலிக்கும். குரலில் மென்மையும், கனிவும் நிரம்பியிருக்கும்.

“குட்டிக்கு அங்கிள் தூங்கிறதுக்கு ஊசி போடுவேன். சமத்தா தூங்குவீங்களாம்” என்று பேசிக்கொண்டே, உடல் மரத்து ஆழ்ந்த மயக்கத்திற்கு செல்லும் மருந்தினை சிறுமியின் உட்செலுத்துமாறு அதற்குரிய மருத்துவரிடம் கண் காட்டினான்.

மருந்து உள்ளே நுழைந்த விநாடி சிறுமியின் கண்கள் மூடிக்கொள்ள விழைந்த தருணம்,

“தூங்கி எழுந்துட்டால், சரியாகிடுமா? வலியெல்லாம் போயிடுமா அங்கிள்?” சிறுமி சிறு திணறலோடு ஒருவித ஏக்கத்தோடு கேட்க…

“உங்க பிரண்ட்ஸ் எல்லோரடவும் கூட மம்மி விளையாட விடுவாங்களே! குட்டிம்மா… இனி ஜாலியா ஓடி விளையாடலாமே!” என்று, குழந்தை மயக்கத்திற்கு சென்றது தெரிந்தும் ஆதுரமாக பதில் வழங்கினான்.

மருத்துவராக அவனுக்கு நன்கு தெரியும், ஆழ்ந்த மறந்த நிலையிலும், சுற்றுபுறத்தை உணர முடியும். ஒலிகளை உள்வாங்கிட முடியும். அதற்காகவே சிறுமியை ஏமாற்றாது பதில் கூறியிருந்தான்.

இது தெரிந்ததாலோ என்னவோ… உள்ளத்து ரணத்தை மறக்க முடியாதென்று நன்கு அறிந்து, தினம் தினம் கீறிக்கொண்டு வதை கொள்கிறான். அதையும் விருப்பமாய் ஏற்கிறான்.

சிறுமியின் தலையில் சிறு கட்டி. அதனை அகற்றுவதற்கே அறுவை சிகிச்சை. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் தீவிர ஆபத்து இன்றி காப்பாற்றிடலாம். இருப்பினும் நோயாளி சிறுமி என்பதால், அத்தனை கவனம். பெரும் ஸ்ரத்தை அவனிடம்.

வேண்டிய உபகரணங்களுக்காக மட்டுமே அவனது கை தன்னிச்சையாக நீண்டது. பார்வையும் மனமும் சிறுமியிடமிருந்து இம்மியும் அசையவில்லை.

முறையாக சிறு பிழையுமின்றி அறுவை சிகிச்சை செய்து முடித்தவன், கையுறையை கழட்டியபடி வெளியில் வர, சிறுமியின் பெற்றோர் அவனது கைகளை பற்றிக்கொண்டனர்.

“சில்…” என்றவன் தன் கரம் பற்றியவர்களின் கரத்தின் மீது தட்டி கொடுத்தவனாக சிறு தலையசைப்பில் நகர்ந்து தனதறை வந்தான்.

தேவிற்கு உதவியாக இருந்த செவிலிப்பெண் தான்… சிறுமியின் நலன் பற்றி அவன் சொல்லிய அறிவுரைகள் அனைத்தையும் அவர்களிடம் தெரிவித்தாள்.

தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கையில் அமர, அவனது அலைப்பேசி தன்னிருப்பைக் காட்டியது.

யாரென்று பார்த்தவன் அவசரம் காட்டாது நிதானமாக ஏற்று காதில் வைத்தான்.

“மாம்…”

“சாப்பிட்டியா அதி?”

“ஆப்பரேஷன் இப்போ தான் முடிந்தது.”

“அப்போ வீட்டுக்கு வரலாமே?”

“ராது” என்று இழுத்தவனாக “குட்டி பொண்ணும்மா. கண் திறக்கும் வரை நான் இருக்கணும்” என்றதோடு, “லேட் நைட் ஆகுது இன்னும் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று சத்தமின்றி அதட்டலாக வினவினான்.

அன்னையிடம் எப்படி பேசினால் அடங்கிப்போவாரென்று அவனுக்கு தெரியாதா என்ன?

“இதோ போயிட்டேன். போன் வைக்கிறேன்” என்று பொறுமலோடு அவர் வைப்பது அவனின் இதழில் மென் முறுவலை தோற்றுவித்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் அவனது அறை கதவை தட்டியபடி உள் நுழைந்தார் ஈஷ்வர்.

தேவதிரனின் தந்தை. அவரும் மருத்துவர். இதய நிபுணர்.

சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டமின்றி மாநிலத்தின் பல பெரும் நகரங்களில் மிகச்சிறப்பாக செயல்படும் ‘D ஹாஸ்பிடல்’சின்’ நிர்வாகி.

வியாபார நோக்கமின்றி சேவையாக மட்டுமே ஆரம்ப காலத்திலிருந்து செய்து வருகிறார். அதனால் மாநிலம் முழுக்க டி மருத்துவமனைகளும், ஈஷ்வரும் பிரபலம்.

தன்னுடைய உயரத்தை எப்போதுமே தலைக்கு ஏற்றாதவர். தோற்றத்திலும் அத்தனை எளிமையானவர். அவரின் மறு உருவம் தான் அவரது ஒரே மகனான தேவதிரன் ஈஷ்வர்.

தலைமை மருத்துவமனையின் டீன் அவர். கையில் சாப்பாட்டு பையுடன் நேரத்தையும் பொருட்படுத்தாது மகனின் பசி போக்க வந்திருந்தார்.

“டாட்” என்றவன் இருக்கையிலிருந்து எழுந்திட…

“உட்காருப்பா” என்று அவன் முன் அமர்ந்தவர், மேசையில் உணவினை எடுத்து வைத்தவராக, அப்போது அவன் முடித்து வந்த சிகிச்சை பற்றி பேசினார்.

அவர் கேட்டதற்கு பதில் சொல்லியவன், அவர் ஊட்டிவிட்ட உணவினை மறுக்காது முழுதாய் உண்டு முடித்தான்.

“சரிப்பா நான் கிளம்புறேன்” என்று ஈஷ்வர் புறப்பட…

“இதுக்கு நான் வீட்டுக்கே வந்திருப்பேன் டாட்” என்றான் தேவதிரன்.

அவர் புன்னகைக்க…

“பசிச்சாக்க கேண்டினில் சாப்பிட்டுக்கப்போறேன். எதுக்கு இந்த நேரத்தில் நீங்க வந்தீங்கன்னு கேட்டிடக்கூடாதுன்னு தானே வந்ததும் வாயில் சாப்பாட்டை வச்சிங்க. இப்போ வேகமா கிளம்பிப்போறீங்க?” என்றான்.

ஈஷ்வர் அப்பட்டமாக மகனிடம் அசடு வழிந்தார்.

“அது வந்து அதி” என்றவர் மீண்டும் அவனின் முன்பு அமர முற்பட…

“வேண்டாம் வேண்டாம் நீங்க கிளம்புங்க. ராது நான் சாப்பிட்டனான்னு நியூஸ் தெரியாது ஹாலிலே உட்கார்ந்திருப்பாங்க. ஓடுங்க… ஓடுங்க” என்று கிளப்பி அவருடனே இணைந்து நடந்தான்.

இரவு பணியிலிருந்து… அவர்களுக்கு எதிர்பட்ட பணியாளர்களுக்கு, இருவரின் நெருக்கமும் எப்போதும் வியப்பு தான்.

உறவால் தந்தை மகன். பார்ப்போரின் கண்களுக்கு… இருவருக்கிடையேயான நட்பும் ஒட்டுதலுமே தெரியும்.

பெரும் உயரம், புகழிலிருந்தாலும் ஒருபோதும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாத ஈஷ்வரின் தன்மையான குணம், தந்தையின் செழிப்பில் தன்னை உட்புகுத்திக்கொள்ளாது, தனக்கென்று தனி அடையாளத்துடன் வலம் வரும் தேவ்’வின் பண்பான பாங்கு… அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணி.

“டாட்… ஹெட் நர்ஸ் சுலோ ஆண்ட்டி உங்க எதிரில் வறாங்க” என்றவன் ஈஷ்வருக்கு பின்னால் தேங்கிட…

ஈஷ்வரும், சுலோச்சனாவும் கடக்கையில் இருவரிடமும் மென்னகை.

தேவுக்கு சுலோ வணக்கம் வைத்து நகர,

தேவ் இரண்டெட்டில் ஈஷ்வருடன் இணைந்தான்.

“சுலோ ஆண்ட்டி மேல மட்டும் உங்களுக்கு அப்படியென்ன பாசம் டாட்?”

தெரிந்துகொண்டே வினவினான்.

அவனிடம் பலமுறை இதற்கான பதில் வழங்கியிருக்கிறோம் என்றபோதும், மீண்டும் ஒருமுறை கூறினார்.

“ஒரே ஊர். ஒரே ஸ்கூல். அப்போ சுலோ மேல் ஒரு விருப்பம். அவங்களுக்கும் தான். கல்லூரி படிப்பு அப்படியிப்படின்னு அப்போலாம் பார்க்குறதே அரிதானதில், எல்லாம் மறந்துப்போச்சு. இப்போ ரெண்டு பேருக்கும் நடுவில் நட்பு தான் இருக்கு” என்றார்.

நடந்துகொண்டே வாகனங்கள் தருப்பிக்கும் இடம் வந்திருந்தனர்.

“அப்போ சுலோ ஆண்ட்டி உங்க பர்ஸ்ட் லவ் சொல்லுங்க?” என்றவன், தந்தைக்கு காரின் கதவினை திறந்து விட்டான்.

“முழுமையான லவ் என் ராது தான். இருந்தாலும், முதன் முதலில் உணர வச்சவங்களை காலத்துக்கும் மறக்க முடியாது கண்ணா” என்றவர், சன்னல் வழி அவனின் கன்னம் தட்டி வண்டியை இயக்கினார்.

சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவரின் மனம் அத்தனை வேதனையை சுமந்து கொண்டிருக்கிறது. மகனை நினைத்து.

பெற்றபிள்ளை காதலால் பேரவஸ்தை கொண்டிருக்கும் போது, அவரால் இயல்பாய் இருக்க முடியவில்லை.

என்ன தான் நண்பன் போல் பழகினாலும், சில வலிகளை தனித்துதானே அனுபவிக்க வேண்டும். பிறர் சுமந்திட முடியாதே?

இத்தனை வயதாகியப் பின்பும், அவருக்குள்ளும் அவரது முதல் காதல் இதயத்தின் ஓரம் இருக்கத்தானே செய்கிறது.

“வலி அனுபவித்து அதனை சுமப்பதற்கு அதிலிருந்து வெளிவந்துவிடு” என்று எப்படி அவரால் சொல்லிட முடியும்.

மகனை அதட்டியே பேசிடாதவர், மகனின் ரணத்தை போக்கிட முடியாது தவிக்கிறார்.

காதலில் பிரிவு வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்… இங்கு அவனவளுக்காகவல்லாவா அவன் பிரிந்து வந்தது.

தன்னவளுக்காகவே காதலை துறந்து வந்தவனிடம், சேர்ந்துவிடு என்று எப்படி சொல்வது?

மகனின் வாழ்வை எண்ணி வருத்தம் உள்ளபோதும்,

“கொல்லும் காதலை துறந்து, இன்னொரு உறவிற்குள் அடி வைத்திடு” என்று ஒருநாளும் ஈஷ்வரால் தேவ்’விடம் உரைத்திட முடியாது.

தந்தை கூறிச்சென்றதில் என்ன உணர்ந்தான் என்பது அவன் மட்டுமே அறிவான்.

மீண்டும் அவனுள் மின்னல் வெட்டு. நீர் சொட்டும் தேன் முகம். அகம் நிறைத்தது.

மறக்க நினைக்கவில்லை. சிந்தையிலிருந்து தள்ளி வைக்க நினைக்கின்றான். முடியவில்லை.

எத்தனை நேரம் அங்கேயே நின்றிருந்தானோ?

வாகன ஒலியில் கலைந்தவன், தன்னை வெகுவாக மீட்டுக்கொண்டான்.

மீண்டு விடுவதாக எண்ணிக்கொள்கிறான். காதல் மீள முடியா மீளா சுழல் என்று அறிந்தும்.

காதலைப்பற்றி அவனைவிட வேறு யாருக்கு நன்றாகத் தெரிந்துவிடப்போகிறது.

காதலுக்காக போராடுவது மட்டும் காதல் அல்ல… தன் இணைக்காக அவளையே துறப்பதும் காதல் தான்.

தேவதிரனின் பிரிவும், தூரமும் அவனின் காதலுக்காகத்தான்.

விடியல் வரை சிறுமியின் உடல் நலனை ஆராய்வதில் கண்ணாக, நெஞ்சத்தை ஒதுக்கி வைத்தவன், விடிந்த பின்னரே இல்லம் சென்றான்.

தேவதிரன் வீடு நுழைந்த போது , ஈஷ்வரன் மருத்துவமனை செல்ல தயாராக இருந்தார். ராதிகா பூஜையறையில் கண்மூடி பிரார்த்தனையில் அமர்ந்திருந்தார்.

“குட்மார்னிங் டாட்.”

தந்தையை அணைத்து விடுத்த தேவ், அவரின் அருகிலே இருக்கையில் தொப்பென்று சரிந்தான்.

“டயர்டா இருந்தால் ரெஸ்ட் எடு அதி.” மகனின் முன்னுச்சியை ஒதுக்கியவராக ஈஷ்வர் கூறிட, அவரின் தோள் சாய்ந்தான் தேவதிரன்.

“டூ ஹவர்ஸ் டாட். ஹாஸ்பிடல் வரணும். மானிட்டர் பண்ணணுமே. ஸ்கேன் பார்க்கணும்” என்றவன், நெற்றியில் பட்ட விரலில் கண் திறந்தான்.

ராதிகா அவனின் நெற்றியில் திருநீறு பூசி, கையிலிருந்த தீபாராதனையை தன் கையால் மகனின் கண்களில் சேர்பித்தார்.

தீபாராதனை தட்டிலிருந்த மஞ்சளும், குங்கமும், பூக்களும் தூரத்து நினைவினை அகம் சேர்த்திட சிந்தையின் முன்வர விரட்டியடித்தான்.

“ஹாய் மாம்.”

ராதிகா முகம் திருப்பியவராக கணவரின் நெற்றிக்கு தாவிவிட்டார்.

தேவ் தந்தையை ஏறிட…

“என்ன கோபம் உனக்கு?” என்று மனைவியிடம் கேட்டார் ஈஷ்வர்.

“என் கோபம் என்னன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்ற ராதிகா, வேலையாளை அழைத்து பூஜை தட்டினை பூஜையறையில் வைக்குமாறு கொடுத்தனுப்பியவர் கணவர், மகன் இருவரையும் முறைத்தவராக உணவு மேசை நோக்கி நகர்ந்தார்.

“மாம் அதான் நைட் டாட் டின்னர் கொண்டு வந்து… நான் சாப்பிட்டனே! அப்புறம் என்ன கோபம் உங்களுக்கு?” ராதிகாவிடம் கேட்டுக்கொண்டே பின்னால் சென்ற தேவ், அவரின் கழுத்தை கட்டிக்கொண்டவனாக, கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“இதெல்லாம் கொடுத்தாலும், என் கோபம் என்னன்னு நீ தெரியாத மாதிரி நடிக்கிறதை நான் நம்பமாட்டேன்” என்றார். உர்ரென்று.

முடிந்ததென்று தெரிந்தும் வாழ்வின் அடுத்த அத்தியாயமான திருமணம் வேண்டாமென்று இருக்கின்றானே என்கிற மிதமிஞ்சிய ஆதங்கம். தாயாய் அவருள். நாட்கள் செல்ல செல்ல மகனின் மீது சிறு கோபமும்.

சட்டென்று இணக்கமாக இருந்த தேவ்வின் முகம் இறுக்கம் கொண்டது.

அதனை தன் அன்னைக்கு காட்ட மறுத்தவனாக வேகமாக சென்றுவிட்டான்.

இக்கணம் இவ்வுலகில் அவன் அவனாக இருப்பது, அவனுக்கென்று நெருக்கமாக இருக்கும் உறவுகளிடம் மட்டுமே. அதையும் தன்னுடைய முயற்சியால் மட்டுமே சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறான்.

தன்னுடைய வருத்தமும் வேதனையும் தன்மீது அளவுகடந்த அன்பையும், தனது மகிழ்ச்சி ஒன்றையே தங்களின் மகிழ்வாய் கொண்டு, தன்னையே அவர்களது உலகமாய் நினைத்து வாழும் பெற்றோருக்கு கவலையை கொடுத்திடக் கூடாதென்பதற்காகவே இந்த இயல்பும்.

மனம் முழுக்க ஒருத்தி அசைக்க முடியாதளவுக்கு வேர் பிடித்து ஆழ ஊன்றியிருக்கும் போது, அவளுடனான பிரிவு…

நேசம் கொண்ட நெஞ்சத்திற்கு எவ்வளவு ரணம்? வலிக்க வலி கொடுக்குமே!

கால்களை தரையில் ஊன்றி மெத்தையில் மல்லாக்க படுத்திருந்தவனின், கை வைத்து மூடியிருந்த கண்களில் நீர் வழிந்தது.

அவளுக்கான அவனது அழுகை. என்று வற்றுமோ?

சேர்ந்திட சாத்தியமில்லை எனும் நிதர்சனத்தில் தத்தளித்து தள்ளாடுகிறது தேவதிரனின் காதல் இதயம்.

செவி தீண்டிய கண்ணீரின் ஈரம், மனதை விறைக்கச் செய்திட, சட்டென்று எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

நீரின் குளுமை மனதின் வெம்மையை அணைப்பதற்கு மாறாக கூட்டிடவே செய்தது.

தலையில் கொட்டும் நீர், பேரிரைச்சல் வெண் ஓடையை நினைவூட்டிட… கண்கள் வேறொரு அருவியின் பிம்பத்தை கண்டுவிட அலைமோதியது.

தேவ்’வின் மனம் அருவி என்று ஓலமிட்டது.

‘எனக்குள்ள உன்னை கட்டிவச்சு படுத்தறடி!’ மனதோடு மட்டுமே அவனது குமுறல்கள் யாவும்.

எங்கு எதுவாக இருப்பினும் அவனது எண்ணத்தின் முடிவுகள் யாவும் அவளாகவே இருந்தன.

கண்ணாடி முன்பு நின்று ஈர கேசத்தை துவட்டி கொண்டிருந்தவனின் கை அசைய மறுத்தது. அவனது பார்வை, வலது கண்ணிற்கு மேல் நெற்றியில் புருவத்தை தொட்டுக் கொண்டிருந்த ஒரு இன்ச் தழும்பில் நிலைத்தது.

விரல் கொண்டு தொட்டு வருடியவனின் இதழில் குறுஞ்சிரிப்பு.

அன்றைய நிகழ்வும், உரையாடலும் இன்றைய வேதனைக்கு மருந்தாக அமைந்தது.

நிச்சயம் தான் விருட்டென்று வந்தது, அப்பா, அம்மா இருவருக்குமே வருத்தத்தை கொடுத்திருக்கும் என்று எண்ணம் எழ, விரைந்து தயாராகி கீழே வந்தான்.

நடையில் துள்ளலை தானாக கொண்டுவந்திருந்தான்.

“டாட் இன்னும் நீங்க போகலையா?”

இன்றாவது மகனின் முடிவு என்ன என்பதைப்பற்றி கேட்டிட வேண்டுமென உறுதியாக இருந்த ராதிகா, தன் மனம் புரிந்தும் புரியாததைப்போல் கேள்வி கேட்கின்றானே என்று அவ்வாறு பேசிவிட்டார்.

அதில் மகன் கொண்ட சுணக்கம் தாங்காமல் கலங்கிய கண்களோடு வந்தமர்ந்திட்ட மனைவியை தேற்ற முடியாது, மகனின் வரவை எதிர்நோக்கி ஈஷ்வரனும் மருத்துவமனை செல்லாது காத்திருந்தார்.

சோகம் பரவிய விழிகளை தங்களுக்கு காட்டக்கூடாதென்பதற்காக விரைந்து மறைந்த மகனை சாதாரணமாகக் கண்ட பின்னரே ஈஷ்வரனுக்கு நிம்மதியாக இருந்தது.

“இதோ கிளம்பிட்டேன்” என்ற ஈஷ்வரன்,

“இன்னும் எத்தனை வருடத்துக்கு அதி?” என்று கேட்டுவிட்டார்.

கடந்து சென்ற ஆறு வருடங்களில் ஒருமுறை கூட மகனிடம் இதனை இப்படி அவர் கேட்டதில்லை. கேட்க வேண்டுமென்று நினைத்ததும் இல்லை.

மகனது வாழ்வு?

தொக்கி நிற்கும் கேள்வி ராதிகாவின் கண்ணீர் அவரை கேட்க வைத்துவிட்டது.

ஈஷ்வரனால் சுலோவை கடக்க முடிந்ததென்றால்… அவருக்கு சுலோ ஈர்ப்பு மட்டுமே. காதல் என்ற எல்லையை தொடுவதற்கு முன்பே படிப்பை பற்றிக்கொண்டு பாதைமாற்றி விலகிக்கொண்டார்.

தேவதிரனுக்கு அவள் உயிராக அல்லவா அவனுள் குடிகொண்டிருக்கிறாள். அவனால் எப்படி கடந்து வர முடியும்?

உயிருக்குள் ஒருத்தியை பொத்தி வைத்திருக்கும் போது… கிடைத்த சுகம் நினைவாக மாறும்போது, பெற்ற சுகத்தின் இரட்டிப்பாய் மனதை வதைக்க வைத்திடுமே. எளிதில் நீர்த்துப்போகக் கூடியதா அது?

கண்களை மூடியவனாக இருக்கையின் பின் தலை சாய்த்து அமர்ந்துவிட்டான். எல்லாம் ஓய்ந்தவனாக.

தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்று பெற்றோரை அவன் குறையாக எண்ணவில்லை… அவர்களது ஆசையும் நியாயமானது யாரையும் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.

அவன் எடுத்த முடிவு. ஆறு வருடங்களாகக் கடந்திட முடியாது தவிக்கின்றான்.

“ப்ரொபோஸல்ஸ் வந்திருக்கு பார்க்குறியா அதி?”

ராதிகாவின் குரலில் அப்படியொரு தயக்கம்.

அவனிடம் பிரதிபலிப்பென்று எதுவுமில்லை. கலங்கிவிட்ட கண்களை இமை தாண்ட விடாது தவித்துப்போனான்.

“இல்லைன்னா அந்தப்பொண்ணு வீட்டுல நாங்க போய் பேசட்டுமா?”

“அருவி… தேனருவி…”

இமை திறக்காது மொழிந்திருந்தான். பலமுறை சொல்லிய பெயரென்றாலும் ஒவ்வொரு முறை உச்சரித்திடும்போதும் பெயரிலிருக்கும் தேனின் சுவை அவனது நா மட்டுமல்ல, அவனது அகத்திலும் தித்திப்பாய் சேர்கிறது.

“ஆமாம்… தேனருவி தான்.” ராதிகாவிடம் மெல்லிய முணுமுணுப்பு.

ராதிகாவினுள் அப்பெண்ணை நினைத்து சிறு சடைப்பு. இவன் வேண்டாமென்றால் அவளும் அப்படியே இருந்துவிடுவாளா? அப்போது அவள் காதல் அவ்வளவு தானா என்று.

அவள் கொண்ட காதலுக்காகத்தான் தன்னவனின் பேச்சை கேட்டு அவன் விட்டுவந்த இடத்திலேயே நிற்கிறாளென்று ராதிகாவிற்கு தெரியவில்லை.

வேண்டாமென்று வந்த பின்பு இதென்ன, அவளின் நினைவாகவே… வரம் வேண்டி காத்திருப்பது போல் என்ற மனவருத்தம் அவரிடம்.

அந்த நாளது அவனது அழுகை, கண்ணீர், வாழ்வை முற்றிலும் வெறுத்தவனாக அவன் நின்ற தோற்றம் இப்போதும் கண்முன் நின்று மனதை கனக்கச் செய்கிறதே! தாயுள்ளம் தாங்குமா?

“இதென்ன அதி பைத்தியக்காரத்தனம்… வேண்டான்னு முடிவு பண்ணி வந்துட்ட… அப்புறமும் அவளுக்காகக் காத்திருப்பது” என்று இடை நிறுத்திய ராதா,

“கண்ணன் கிடைக்கமாட்டாருன்னு தெரிந்தும் அவருக்காகக் தவமிருந்த மீரா மாதிரி” என்றார்.

“தவம் தான். கிருஷ்ணரோடு அவரது மனைவி ருக்குமணியை அதிகம் பேசியதோடு… அவரின் காதலான ராதாவின் கதையைத்தான் அதிகம் பேசுகிறோம். அப்படித்தான் என்னுடையதும்” என்றவன்,

“முடியல மாம்” என்று எழுந்து சென்றுவிட்டான்.

ஈஷ்வரன், ராதிகா இருவரின் மனதிலும் பாரமேறியது.

தங்களது மகன் என்ன மாதிரி நேசம் கொண்டுள்ளான்… பிரமிப்பாக இருந்தது. அவனது ஆசையை நிறைவேற்ற முடியாத தங்களின் நிலையை எண்ணி நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது அவர்களால்.

error: Content is protected !!
Scroll to Top