தித்திக்கும் தேனருவி 10

அத்தியாயம் 10

அன்றைய தினம் வேலையெல்லாம் முடித்து கிளம்பி மின்தூக்கிக்காக தேனு காத்திருக்க… சித்துவும் வீடு செல்ல கிளம்பியிருந்தான்.

“ஹாய் ஹனி” என்று அவளருகில் வந்தவன்,

“என்ன முகத்துல எக்ஸ்ட்ரா ஒளி?” எனக் கேட்டு அவளை சீண்டினான்.

“உங்க அண்ணா கொஞ்சம் இறங்கி வரமாதிரி தெரியுது சீனியர்” என்றாள்.

“என்ன சொல்ற?”

“மார்னிங் கால் பண்ணார்” என்று நடந்ததை தெரிவித்தாள்.

உண்மையில் அவள் சொல்லியதை நம்பமுடியாது தான் பார்த்தான்.

“வாசன் கால் பண்ணலன்னு நேற்று மாதிரி இன்னைக்கும் பீல் பண்ணிவியோன்னு பண்ணியிருக்கலாம்” என்றான். சிறு தோள் குலுக்களுடன்.

“நான் சந்தோஷமாயிருந்தால் உங்களுக்கு பிடிக்காதா? ஏன் இப்படி சொல்றீங்க?” என்ற தேனுவின் கண்கள் சட்டென்று துளிர்த்துவிட்டன.

“ஆறு வருடமாக இறங்கி வராதவங்க இப்போ மட்டும் எப்படி? தேவையில்லாமல் கற்பனை பண்ணிக்கிட்டால் நமக்குத்தான் வலி. அதுக்குத்தான் சொன்னேன். எச்சரிக்கைன்னு வச்சிக்கோயேன்” என்ற சித்து, “அண்ணா இப்பவும் அவருடைய காரணங்களிலிருந்து வெளிவரல… அவருக்கு நீ மட்டும் போதும். ஆனால், இங்கு நீயென்று அண்ணா குறிப்பிடுவது உன்னைச் சார்ந்த அனைத்தும்” என்றான்.

வேகமாக கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

வாசு வந்து சென்று பத்து நாட்களுக்கு மேலாகியது.

“அவங்க சொன்னாங்கன்னு இத்தனை வருடம் கேட்டது போதும் ஹனி. இனியாவது உன் மனசை வெளிப்படையாக் காட்டு. நேரா வீட்டுக்கே போயிடு. நிச்சயம் உன்னை போன்னு சொல்ல மாட்டாங்க” என்றான்.

பேச்சின் நடுவே மின்தூக்கியில் ஏறி தரை தளம் வந்திருந்தனர்.

“வான்னும் கூப்பிட மாட்டாங்க தானே?” என்றவளின் உதட்டில் புன்னகை இருந்தாலும், விழிகள் வருத்தத்தை பிரதிபலித்தது.

“தின்க் பாசிட்டிவ். நீ அங்கு போனால், அப்பா, அம்மாவே உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அதுமட்டுமில்லாமல், ராதும்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றான்.

“அவங்களை மீறி… ப்ளீஸ் சித்து” என்றவள், “அவங்க மனசளவில் என்னைத் தேட ஆரம்பிச்சிட்டாங்க. சீக்கிரமே நான் வேணுன்னு வருவாங்க” என்றாள்.

இந்தநிலையில் இத்தனை நம்பிக்கை எப்படியென்று தான் சித்து சிந்தித்தான்.

“அப்புறம் உன் ஃபிரண்ட் என்ன சொல்றாங்க?” வலியென்று தெரிந்து, அவளிடம் தேவ்வை பற்றி அதற்கு மேல் பேச சித்துவுக்கு மனமில்லை.

“அவங்க ஆளு எப்போ லவ் சொல்லுவாங்கன்னு மேடம் வெயிட்டிங்” என்றாள்.

“சொல்லிடலாமே!” என்ற சித்து, “என் அண்ணா லவ் சக்ஸஸ் ஆகட்டும்” என்றான்.

“ம்ம்ம்…” என்று தலையாட்டிய தேனு, “இந்த ஜென்மத்தில் சொன்ன மாதிரி தான்” என்றாள்.

“எனக்கு என்ன சிக்கல் வரப்போகுதுன்னு நினைச்சாலே பயமா இருக்கு” என்ற சித்து உடலை குலுக்கி சிலிர்த்தான்.

“காதல் அப்படின்னாலே பிரோப்ளேம் தான் சீனியர். அதை சரிசெய்து கொண்டுபோறது தான் வாழ்க்கை” என்றவளிடம் உள்ள பக்குவம் சித்துவை ஆச்சரியப்படுத்தியது.

“ஓகே சீனியர், டைம் ஆகுது. நான் கிளம்புறேன்” என்று தேனு கிளம்பியும் சித்து அங்கேயே நின்றிருந்தான்.

அடுத்து என்ன நடக்குமென்று யாராலும் கணிக்க முடியாத சூழலை உருவாக்கியிருந்தான் தேவதிரன். அவனைக்கொண்டே அவர்களின் வாழ்க்கை சுழல… அனைவரையும் தன் எண்ணங்களால் ஆட்டுவித்தான்.

வாசு வந்து சென்று பத்து நாட்கள் ஆகியிருந்தது.

அடுத்த நாளே வித்யாவும் விடுதிக்கு வந்திருந்தாள். இப்போது இருவருக்கும் தனித்தனி பணி நேரமென்பதால் வித்யா நண்பகலே விடுதிக்கு சென்றிருந்தாள்.

வந்த நாள் முதல் வித்யா தேனுவை இன்னும் அதிகமாக கவனிக்க ஆரம்பித்தாள்.

நடந்ததையெல்லாம் வாசுவின் மூலமாக அறிந்துகொண்டவளுக்கு, தன் தோழியை எப்படியாவது தேவ்வுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்ற யோசனையை உள்ளுக்குள் ஓடியது.

“இப்போலாம் ரொம்ப அதிகமா தின்க் பண்ற வித்யா” என்று தேனு கேட்டும் அவள் எதுவும் சொல்லவில்லை.

வழக்கத்திற்கு மாறாக, வாசுவின் அழைப்பினை தேனு ஏற்று இரண்டு நிமிடங்கள் பேசுவதை ஆச்சரியமாக பார்த்தாள் வித்யா.

அதனை தேனுவிடம் கேட்கவும் செய்தாள்.

“என்ன திடீரென அண்ணா மேல பாசம்?”

“சொல்லத் தெரியல” என்றதோடு முடித்துக்கொண்டாள் தேனு.

ஆனால் வித்யா, தேனு தேவ்வை பற்றி மனம் திறக்கம்மாட்டாளா என்று இப்போதெல்லாம் தேவ்வை நினைவு கூறும் வகையில் அவளை சீண்டிக்கொண்டே இருக்கின்றாள்.

அப்படித்தான் இன்று அலுவலகம் விட்டு வந்த தேனுவை பிடித்துக்கொண்டாள் வித்யா.

“அக்காவுக்கு பையன் பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம்?”

“அது அவங்க சாய்ஸ் வித்யா.”

“சித்திக்கு தான் முதல் உரிமை. நீ சொல்லு…”

“எதுவும் தோணலை.”

“அப்போ நான் சொல்வதில் ஒன்றை சூஸ் பண்ணு” என்ற வித்யா “தேவ், அதி, தீரன், அதிரன்” என்று தேவதிரன் என்ற பெயரை உடைத்து பல சுக்கலாக பிரித்துக் கூறி கேட்டாள்.

துணிகளை மடித்துக்கொண்டிருந்த தேனுவின் கை அசையாது நின்றது.

“தேவதிரன்.” மெல்ல முணுமுணுத்தாள். அவள் சொல்லியது காற்றுக்கே கேட்டிருக்காது. ஆனால் வித்யா அவளின் உதட்டசைவை கவனித்து,

“இந்த பெயர் நல்லாயிருக்கே! தேவதிரன்” என்றிட, காதுகளை பொத்திக்கொண்ட தேனு, “ப்ளீஸ் வித்யா. அந்த நேம் சொல்லாத” என்று கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

“திருமதி. தேனருவி தேவதிரன்.” அவளவனின் குரலில் காதுக்குள் எதிரொலித்து நெஞ்சத்தில் மத்தளம் கொட்டியது.

“ஏன்? நல்லாதானே இருக்கு” என்ற வித்யா மீண்டும் ஒருமுறை சொல்லிட

“அது அவங்க நேம் வித்யா. சாதாரணமாக அந்த பெயரை என்னால் கடக்க முடியாது” என்று கத்திய தேனு வெடித்து கதறினாள்.

என்று தேவ் அவளது பெயரோடு அவனின் பெயரை இணைத்துக் கூறினானோ அதுமுதலே அவளை மொத்தமாக உடைத்திட, உறைய வைத்திட, சித்தம் கலங்கிட, அவனுள் அடங்கிட வேண்டுமென்ற ஏக்கத்தை அதிகரிக்க அவனது முழுப்பெயர் போதுமானதாக இருந்தது.

முதல் முறை அவளின் வெளிப்படையான அழுகையை காண்கிறாள் வித்யா. பதறிவிட்டாள்.

“தேனு…” என்று அவளருகில் சென்று நெஞ்சில் சாய்த்துக்கொண்ட வித்யா, என்றுமே அவள் இப்படி அழுது பார்த்ததில்லை என்பதால் என்ன செய்வதென்று தெரியாது படபடத்தாள்.

“அம் சாரி… சாரி… தேனு” என்று அரற்றினாள்.

“என்னை துடிக்க வைக்க அவங்க பெயர் ஒன்னு போதும் வித்யா” என்ற தேனுவின் இதயம் தாறுமாறாக துடித்தது.

சித்து அதியென்று பலமுறை சொல்லியபோதெல்லாம் அதிர்வை மட்டும் காட்டிய தேனுவின் இதயம் அவனின் முழு பெயரில் அத்தனை ரணம் கொண்டது.

தன்னவனின் பெயர் கூட தன்னுடைய திடத்தை பறித்துவிடும் என்பதால் தானே அவனின் பெயரைக்கூட உச்சரித்திடாது கவனமாக இருக்கின்றாள்.

“எனக்கு அவங்களை பார்க்கணும் வித்யா.” அத்தனை ஏக்கங்கள் தேனுவின் கண்ணீர் முகத்தில்.

வித்யா செய்வதறியாது தவித்தாள்.

தேனு மொத்தத்திற்கும் சேர்த்து வைத்து அன்று அழுதாளோ! அடக்கி வைத்த ரணத்தை வலிகள் யாவும் அவளின் கண்ணீரில் வெளியேறிக் கொண்டிருந்தது.

தேனுவை ஆறுதலாக அணைத்திருந்த வித்யா நினைவு வந்தவளாக…

“நீ அழக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரே தேனு” என்றிட…

பொத்தானை அழுத்தியதும் விளக்கு உயிர் துறப்பதைப்போல், தேவ்வின் அவ்வார்த்தைகள் வித்யா சொல்லி தேனுவின் நினைவில் உதித்த அக்கணமே கண்ணீர் நின்றிருந்தது.

விழிகளோடு முகத்தையும் சேர்த்து அழுந்த துடைத்த தேனு…

தன்னுடைய அலைப்பேசியை எடுத்தாள்.

வழக்கம்போல் தேவ்வின் நிழலுருவத்திடம் அனைத்தும் சொல்லி வருந்தப்போகிறாள் என்று வித்யா நினைக்க…

தேனுவோ பல நாட்கள் விரல் தொட்டு தீண்டிய தேவ்வின் எண்களை இன்று அழுத்தியிருந்தாள்.

தேனு சிறிது நேரத்தில் முற்றிலும் உடைந்திருந்தாள். தன்னவனால் மட்டுமே தன்னை மீட்டெடுக்க முடியுமென நினைத்தாள். எப்போது இணைவோமென்று தெரியாது. அதுவரை தைரியமாக இருக்க வேண்டுமென்றால் இந்நொடி தேவ்வின் அருகாமை வேண்டுமென உள்ளுக்குள் சதிராடியவள், அவனது தடைகள் மீறி அழைத்துவிட்டாள்.

தேனு தேவ்வுக்கு அழைப்பதை விழிகள் தெறித்து விடுமளவிற்கு ஆச்சரியமாக நோக்கிய வித்யா, அறையை விட்டு வெளியேற முனைய…

“வித்யா” என்ற தேனு அறையை விட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தாள்.

தேவ் வாசுவிடம் சொல்லிவிட்டான்.

“இனியும் பிரிந்திருக்க முடியாது” என்று…

“உன் அப்பாவோட சம்மதத்தோடு என் அருவியை எனக்கு சொந்தமாக்கிக் கொள்வேன்” என்று…

ஆனால் எப்படி? தெரியவில்லை.

‘முதலில் மருத்துவ முகாமினை காரணமாக வைத்து அங்கு செல்வோம். மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று முடிவெடுத்தவனாக தன்னவளின் நினைவுகளில் மூழ்கியபடி மேனி தீண்டும் இரவின் குளிர் காற்றை ரசித்திருந்த தேவ்…

தன்னுடைய நினைவுகளுக்கு சொந்தகாரியே அழைப்பாளென்று எதிர்பார்க்கவில்லை.

அவளிடம்… தன்னுடைய அருவியிடம்… மூச்சுக்கு பலமுறை மனம் உரைத்திடும் அருவி எனும் தன் உயிரிடம் பேசிட நெஞ்சம் முட்டும் ஆசை இருந்த போதிலும், ஏனோ அக்கணம் பேசிட முடியா வலி உள்ளத்தின் அடி ஆழம் உழல, மார்பு விம்மி இறங்க அழைப்பினை ஏற்காது வெறித்தான்.

“என்னை கூட்டிட்டு போங்க” என்று மீண்டும் கேட்டுவிட்டால், இம்முறை நிச்சயம் அவனால் மறுத்திட முடியாது. அவனே அவனது காரணங்களுக்கு தடையாக இருந்திடுவான்.அடுத்த நிமிடம் அவள் முன் நின்றிடுவான். அவளை தன் கை வளைவுக்குள் பொத்தி மார்புகூட்டில் புதைத்து வைத்திடுவான்.

தன் கட்டுப்பாட்டில் தேவ்விடம் உறுதியில்லை.

தன்னவள் தன் வாழ்வில் முறையாக வரவேண்டுமென்ற அவனின் காத்திருப்பிற்கு மதிப்பின்றி போய்விடும்.

அத்தோடு,

“பெத்தவங்களை தவிக்கவிட்டு போகிறவள் நிச்சயம் நல்லாவே இருக்கமாட்டாள். கஷ்டப்படுத்திட்டு போகிறவள், சந்தோஷமா வாழ்ந்திடத்தான் முடியுமா? திரும்ப எங்கக்கூட்டுக்குள் வரத்தான் முடியுமா? வந்தால்… பார்த்திருப்பிங்களே! என்ன நிலைன்னு?”

கர்ஜனையாக ஒலித்த குரல், தன்னவளை அவள் கூறிய இடத்தில் நிறுத்திப்பார்க்கவே அஞ்சி நடுங்கினான்.

தானாக காதல் திருமணம் செய்து கொண்டவர்களை சில வருடங்களில் தங்களுடன் இணைத்துக் கொள்வது பெற்றோர்களின் பாசத்திற்கு சான்று. அல்லது புதுவரவு அனைத்தையும் மறக்கச் செய்திடும். என்றாவது ஒருநாள் தங்களது குடும்பம் தங்களை கட்டாயம் ஏற்றுக்கொள்ளும் எனும் நம்பிக்கை இருக்கும்.

ஆனால் தேனுவின் விஷயத்தில் பொய்யாகக் கூட அப்படியொரு நம்பிக்கைக்கொள்ள முடியாது.

இப்போது வாழும் தொடக்கத்தில் அவர்கள் வேண்டாமென்று அவனவளே சொல்லி அவனுடன் வந்துவிடலாம். சில காலங்கள் சென்ற பின்பும் இந்நிலை இந்த உறுதி நீடிக்குமென்று சொல்லிட முடியாதே. சில கட்டங்களில் உறவுகளை மனம் தேடும். அப்போது அவர்களிடம் பேச்சிலாவது சுமுக நிலை இருக்க வேண்டும். அதற்கு அவனவள் எல்லோரின் விருப்போடு அவனின் கரம் சேர வேண்டும்.

இதுவே தேவதிரனின் அதிகபட்ச ஆசை.

நியாயமானது தானே! ஆனால் காத்திருப்பு இத்தனை நீடிக்குமென்று நினைக்கவில்லை.

முதல் முறை அழைப்பு முழுதாக ஒலித்து அடங்கிட…

தேவ் எடுக்கமாட்டான் என்று தெரிந்தும், தேனுவுக்கு… ஏற்கப்படாத அந்த அழைப்பு வலிக்க வலி கொடுத்தது.

இன்று மனதில் எழுந்திருக்கும் வலி… சிறிது நேரம் கண்களை மூடி தன்னவனின் நினைவுகளோடு சுழன்றால் தணிந்து போகுமெனத் தோன்றவில்லை.

தனது நெஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் தன்னவனை பார்த்தால் மட்டுமே சரியாகுமென்றது. காதலில் கனத்திருக்கும் அவளின் இதயம்.

இல்லையேல் அவனின் குரலாவது கேட்க வேண்டுமென்றது.

அதனால் விடாது அழைப்பினை தொடர்ந்தாள்.

எடுக்க முடியாது தேவ் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் தான் ஏற்காது விடமாட்டாளென்பது தேவ்விற்கு புரிந்தது. சித்துவிற்கு அழைத்து என்னவென்று கேட்கக் கூறினான்.

“உங்களுக்கு கூப்பிட்டால் நீங்க பேசுங்க. அட்லீஸ்ட் என்னன்னு பேசாது கேட்க மட்டும் செய்யுங்க. நான் பண்ண மாட்டேன்” என்று சித்து மறுக்க, தேவ் விடவில்லை.

“புரிஞ்சிக்கோ சித்து. என்னால் முடியலடா!” தழுதழுப்பாக ஒலித்த தேவ்வின் குரல் இறுதியில் மெலிந்து ஒலித்தது.

அந்த குரலை என்றுமே சித்துவால் மீறிட முடியாது.

“முடியலன்னு சொல்லியே எல்லாரையும் ஆட்டி வைக்கிறீங்க அதி அண்ணா” என்ற “சித்து, கால் பண்ணிட்டு என்னன்னு சொல்றேன்” என்க…

“நான் கான் காலில் மியூட்டில் இருக்கேன். நீ அவளை மெர்ஜ் பண்ணு” என்றான் தேவ்.

“இதெல்லாம் எங்கு போய் முடியப்போகுதோ!” என்ற சித்து, தேவ் சொல்லியதை செய்தான்.

இவ்வளவு நேரமும் ரிங் சென்ற அழைப்புகள் இரண்டாவது அழைப்பில் செல்ல… சித்து தனக்கு அழைப்பானென்ற தேனுவின் யூகம் பொய்யாகவில்லை.

“சொல்லுங்க.”

தேனுவுக்கு தேவ்வின் தம்பி நானென்று தெரிந்துவிட்டது என்பதை சித்து தேவ்விடம் சொல்லாததால்… தேவ்வும் இணைப்பில் இருந்திட, அதனை காட்டிக்கொள்ளாது இயல்பாய் பேச முயன்றான்.

“ஹாய் ஹனி… என்ன வாய்ஸ் உர்ருன்னு வருது?”

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்ட தேனு, “இப்போ நீங்க என்னோட பாஸ்ஸா கால் பண்ணியிருக்கீங்களா இல்லை உங்க அண்ணாக்கு தம்பியாவா?’ என வினவி தேவ்வை அதிர வைத்தாள்.

“ஹனி… நான்!”

“ப்ளீஸ் சித்து… இத்தனை வருசமா அவங்க சொன்னதை கேட்டு, நான் விலகி தானே இருக்கேன். அவங்களை பார்க்கணும், அவங்ககிட்ட பேசணும்… அது முடியாது எத்தனை நாள் துடிச்சிருக்கேன் தெரியுமா? இன்னைக்கு ஏனோ திடமா நிலைகொள்ள முடியல. ப்ளீஸ் ஒரு டைம் பேச சொல்லு” என்று அழுகையோடு மொழிந்தவள்…

“இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இன்னைக்கு இத்தனை முறை அழைக்கின்றேனே ஏன்னு யோசிக்கமாட்டங்களா? அவங்களுக்கு என்னை மாதிரி தோணாதா? ஒருவேளை எனக்கு உயிர்போற நிலைன்னு நான் கால் பண்ணியிருந்தால் என்ன பண்ணுவாங்க? அப்பவும் இப்படித்தான் எடுக்காமல் இருப்பாங்களா?” என்று மூச்சுவிடாது தனது ஆதங்கத்தைக் கொட்டியதோடு,

“செத்திடலாம் போலிருக்கு சீனியர்” என்று மொட்டை மாடி தரையில் மடங்கி அமர்ந்தாள்.

“ஹனி… ஹனி… அழாதடாம்மா! நான் வறேன்” என்று சித்து அவளின் அழுகையிலும், வார்த்தையிலும் பரிதவிக்க…

“அவங்களை பேச சொல்லுங்க ப்ளீஸ்” என்று வைத்திட்டாள்.

தேனு செத்திடலாம் என்று தொடங்கியதுமே வெடித்து கிளம்பிய வேதனையை பொறுக்க முடியாது தேவ் இணைப்பைத் துண்டித்திருந்தான்.

தேனுவை என்றுமே இப்படியொரு நிலையில் சித்து பார்த்ததே இல்லை. தன்னுடைய வலியை கூட புன்னகையில் தான் காட்டுவாள். இன்று இப்படி ஏங்கித் தவிக்கின்றாளே! காரணம் என்னவாக இருக்குமென்று எண்ணிய சித்துவுக்கு தன் அண்ணனின் மீது அத்தனை கோபம்.

போன் செய்து மொத்தமாக வெடித்துவிட்டான்.

“இப்போக்கூட உங்களால் எப்படி இவ்வளவு அமைதியா இருக்க முடியுதுண்ணா?” என்ற சித்து…

“ஹனி சொன்னதேதான் நானும் கேட்கிறான். இத்தனை நாளில்லாமல் இன்று கூப்பிடுறாளே… என்னவாயிருக்கும் கொஞ்சம் யோசிச்சீங்களா? இத்தனை நாள் நீங்க சொன்னதை மட்டுமே கேட்டு பைத்தியக்காரி மாதிரி உங்க காதாலுக்காகக் காத்திருக்காளே அதுக்காகவாவது எடுத்து… என்னன்னு கேட்டிருக்கலாமே?” என்றான்.

“நீ என்னோட தம்பின்னு அவளுக்கு எப்போ தெரியும்?”

சித்துவுக்கு இப்போதும் பொறுமையாக தன்னிலையில் மட்டுமே பிடிவாதமாக நிற்கும் தேவ்வின் மீது ஆயாசமாக வந்தது.

“நம்ம வீட்டுக்கு வந்த அன்னைக்கு நைட்.”

“ஏன் சொல்லலை? அன்னைக்கு மத்தது எல்லாம் சொன்னியே!”

“சொல்லணும் தோணல” என்றான்.

“ம்ம்” என்ற தேவ்…

“அவளுக்கு மட்டும் வலியில்லைடா… என்னால் அவகிட்ட பேசிட்டு மட்டும் விட முடியும் நினைக்கிறியா? இன்னும் கொஞ்சநாள். எல்லாத்துக்கும் காரணமிருக்கு சித்து” என்று வைத்திட்டான்.

நம் மனம் ஒருவரை அதிகம் தேடும் சமயம் அவர்களால் நிராகரிக்கப்படுகிறோம் எனும் உண்மை புரிந்தால்… நாம் தேடுவது தோள் சாய்ந்திட ஒரு நபர். மனம் விட்டு அழ ஒரு மடி. அக்கணம் நாம் நாடுவது நம் உறவுகளை. உறவுகளில் நெருக்கமானவரை!

இப்போது அந்நிலையில் தான் தேவ் தேனுவை நிறுத்தியிருக்கிறான்.

அவனுக்குத் தெரியும்… தனக்கடுத்து அவள் அதிகம் விரும்புவது அவளின் குடும்பத்தை தான். அதிலும் வாசு அவளுக்கு அண்ணனாக இருந்தாலும், அவனைத்தான் பெற்றோரின் இடத்தில் வைத்திருக்கிறாள்.

நிச்சயம் தனக்கடுத்து தேனு வாசுவை தேடுவாள்… இவளாக செல்லும் நிலையில் தான் வாசு இருக்கின்றான்.

தனக்காக குடும்பத்திடமிருந்து பிரிந்திருப்பவளை தவிக்க விட்டு சேர்த்து வைத்திட எண்ணினானோ? அவள் மறந்த அவளது ஸ்தலவாசம் அனுப்பி வைத்திட நினைத்தானோ?

அதுவே உண்மை.

வாசுவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் தேனு அங்கிருக்க வேண்டும்.

நாளை வாசு தேனுவிடம் இதைப்பற்றி பேச அழைப்பதாக தேவ்விடம் கூறியிருந்தான்.

தேவ்விற்கு அவனது அருவியைப்பற்றி நன்கு தெரியுமே! தன்னுடைய பிடிவாதம் விட்டு எக்காரணத்திற்காகவும் அவள் அங்கு செல்லமாட்டாள்.

ஆனால் இப்போதிருக்கும் நிலையில் நாளை வாசு அவளை அழைக்கும்போது மறுக்காது செல்வாள். அவளுக்கு அவளின் தவிப்பு அடங்கும் இரண்டாம் இடம் அவள் சுற்றித்திரிந்த மலையல்லவா!

இதனை தெரிந்தே அழைப்பை ஏற்க பரபரத்த உணர்வுகளையும் கைகளையும் கட்டுப்படுத்தி தன்னவளின் தவிப்பை அதிகரித்து வலிக்க வைத்திட்டான்.

தேவ்வின் எண்ணம் நிஜம் கொள்ளுமா?

error: Content is protected !!
Scroll to Top