தித்திக்கும் தேனருவி 11

அத்தியாயம் 11

தேவதிரன்…

ஒற்றை பெயர்.

தேனருவியின் இதயத்தை மொத்தமாக தகர்த்திருந்தது.

ஆழ்ந்திழுத்து மூச்சினை
வெளியேற்றி…
கண்களை மூடினால்,
கலைந்து விடும் களைப்பல்ல!
ஏனோ,
இக்கணம்…
உன் முகம் பார்த்திட ஏங்குகிறேன்.
உன் குரல் கேட்டிட தவிக்கிறேன்.
உன் வாசம் உணர துடிக்கிறேன்.
உன் கை கோர்த்திட வேண்டுகிறேன்.
உன் மார்புகூட்டில் புதைத்துக்கொள்ள தவம் புரிகிறேன்.
வரம் தருவது என்றோ?

பல வருடங்கள் அவள் கொண்ட திடத்தையெல்லாம் யாரோ சொல்லிய அவனவளின் பெயரில் அவளது உணர்வாய் கலந்து எதிரொலிக்க… அவளை அணு அணுவாக வாரிச்சுருட்டிக்கொண்டது.

அதிர்வலையாய் உள்ளம் பொங்கிக் கொண்டிருக்க… அணைத்திடும் வழி தன்னவன் என்கிற உள்ளத்து கூப்பாடை அடக்கிட முடியாது…

எப்படியும் எடுத்திடுவான் என்கிற நம்பிக்கை பொய்த்திட… மனம் வெதும்பி இருளில் வதங்கிக் கொண்டிருந்தாள்.

தேனு சென்று வெகு நேரமாகியும் திரும்பி வராததால், அவளைத்தேடி மேலேறி வந்த வித்யா தோழியின் நிலை கண்டு சொல்லண்ணா வேதனை கொண்டாள்.

“தேனு…” தனக்கு முன் மண்டியிட்டவளின் கழுத்தினை தாவி கட்டிக்கொண்டு அவளின் தோளில் முகம் புதைத்து கண்ணீர் உகுத்தாள் தேனு.

“அவங்க எடுக்கல! நான் வேணாமா?” தனக்குள் சிதறிய கண்ணீர் துளிகளை அருவியாய் கன்னம் சுரந்திட்டாள்.

“அழாத தேனு. என்னால் உன்னை இப்படி பார்க்க முடியல. ஒரு பெயர் இந்தளவிற்கு படுத்தி வைக்குமா?”

கேட்ட வித்யாவுக்கு தெரிந்திருக்கவில்லை… அனைத்தும் காதலில் மட்டுமே சாத்தியமென்று.

இங்கு மலை மடுவாகும். மடு மலையாகும். சிறு புள்ளி புயலாகும். புயல் தென்றலாகும்.

காதலை சுவாசமாக நினைப்பவர்கள் மட்டுமே அறிந்தது.

“இவ்வளவு நாள் நீ இப்படி இல்லையே தேனு. அன்னைக்கு அவங்க கால் பண்ணப்போக்கூட நீ இப்படி உடைஞ்சு நிக்கலையே?”

அன்று தொடங்கிய அவளுக்குள்ளான காதல் சதிராட்டம் தான் இன்று அவனது பெயரில் பிரவாகம் கொண்டுவிட்டது.

தனக்குள் அடக்கப்பட்டுக் கொண்டே இருப்பது மட்டும் சாத்தியமில்லையே. அடக்கப்படுவதும், அமிழ்த்தப்படுவதும் வீறு கொண்டு வெளிவருவது தானே நியதி.

இங்கு இக்கணம் தேனுவிடமும் அதுவே நிஜமானது.

“எனக்கு சொல்லத் தெரியல வித்யா. நெஞ்செல்லாம் வலிக்குது” என்ற தேனு… “எனக்கு அழணுமே! ஆனால் முடியமாட்டேங்குது” என்று கண்களை துடைத்தவள், “அவங்களை எப்பவும் கடக்க முடியறதில்லை வித்யா” என்றவள் தன்னிலையில் முழுதாய் மரித்திருந்தாள்.

அவளே அழவும் செய்கிறாள்… அவளே தேறவும் செய்கிறாள்.

காதல் இத்தனை ஆட்டுவிக்குமா?

வித்யா தலையை உலுக்கிக்கொண்டாள்.

மெல்ல பேசி தேனுவை அறைக்கு அழைத்து வந்து படுக்க வைத்தாள்.

‘இனியும் இவள் இங்கு தனியாக இருந்தால் மனதால் இறந்துவிடுவாள்’ என எண்ணிய வித்யா, அவளை எப்படியாவது அவளது கிராமத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென முடிவு செய்தாள்.

அதற்கு முன் தேவ்விடம் பேச நினைத்தாள்.

அழைத்து விட்டவளுக்கு அவன் ஏற்ற பின்னர் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

அவனின் பக்கமென்று சில காரணங்கள் இருக்குமே! அதனை அன்று விழாவில் வாசுவின் மூலம் தெரிந்து கொண்டிருந்தாளே!

“ஏன் இப்படி? அவளை பார்க்க முடியல! வலியிலும் அவள் முகம் சிரிப்பை மட்டும் தான் காட்டும். அவள் அழுதால் உங்களுக்கு கஷ்டமா இருக்குமாமே! இப்போ பாதி உயிரா கிடக்கிறாள். ஒரு வார்த்தை பேசியிருக்கலாமே!” என்று ஆதங்கமாக வார்த்தைகளைக் கொட்டிய வித்யா, “இன்னைக்கு அவள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அல்லாடுவதற்கு காரணம் நீங்க இல்லை. உங்களோட நேம்… வெறும் நேம் மட்டுமே அவளை இவ்வளவு வதைக்க வைக்கிறது என்றால்… தினம் தினம் உங்க நினைப்பு அவளை எவ்வளவு கொன்றிருக்கும். அதோட மொத்த வெளிப்பாடு தான் இன்னைக்கு… இப்போ அவளை கதற வச்சிருக்கு” என்றவள் இறுதியில் உடைந்திருந்தாள்.

“நாளைக்கு வாசு கால் பண்ணுவான். அவளை எப்படியாவது அனுப்பி வை. எங்கு தொலைத்தோமோ அங்கு தானே தேட முடியும். தேடுவதை பெற முடியும்” என்று அழுத்தமாகக் கூறிய தேவ் அலைப்பேசியை வைத்திருந்தான்.

படுக்கையில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து எப்போதும்போல, தன்னவளளின் பாதத்தில் சரணாகதி அடைந்த கணம் வித்யா போன் செய்திருக்க… எடுத்து பேசி வைத்தவனுக்குள் கூடும் வலியின் பாரம் சுமையாகியது. தாங்க முடியா சுமையாகியது.

அவளுக்கு மட்டும் தான் ஏக்கம், தவிப்பு, துடிப்பு எல்லமுமா? அவனுக்கு இல்லையா? அவளைவிட, அவளை தள்ளி வைக்கின்றோம் என்பது அதீத கொடுமை. உயிர் துடிப்பதை நித்தம் நொடி நொடியாய் உணர்கிறான்.

சித்துவும் வித்யாவும் மாற்றி மாற்றி தேனுவிற்காக பேசியிருக்க… அவனின் வலியை அறிபவர்கள் யாருமில்லை.

‘சொல்லப்படாத காதல் மட்டுமில்லை… சொல்லப்படாத ரணங்களும் உணரப்படுவதில்லை.’

“அருவி… அருவிம்மா… கஷ்டப்படுத்துறேன். தெரிந்தே கஷ்டப்படுத்துறேன். வேறு வழியில்லையே! நான்தானே? வெறுத்துடாதடி!”

தன்னவளின் பாத புகைப்படத்தில் தன்னை ஒப்புவித்தான்.

அதற்குமேல் அவ்வறையில் இருக்க முடியாது… பெற்றோரின் அறைக்கு சென்றான்.

ஈஷ்வர், ராதிகா உறங்கியிருந்தனர்.

பாதி திறந்திருந்த கதவினை திறந்து உள் சென்றவன் இவருக்கும் நடுவில் படுத்திட… மகனின் வருகையை உணர்ந்த ஈஷ்வர் அவனது மார்பில் தட்டிக்கொடுத்திட…

“அப்பா” என்று அவரை கட்டிக்கொண்டு அழுதிட ராதிகா பதறி எழுந்து விளக்கினை ஒளிரச் செய்தார்.

“அதி…”

“அதி என்னப்பா?”

இருவரும் கலக்கம் சுமந்து ஏறிட நொடியில் தன்னை தேற்றிக்கொண்டான்.

“நத்திங்… நத்திங் மாம்” என்றவன் வலிய கொண்டு வந்த இதழ் விரிப்போடு… “தூக்கம் வரல அதான் இங்கு வந்தேன்” என்றான்.

ராதா நம்பவில்லை என்பது அவரின் கூர் பார்வையிலேயே தெரிந்தது.

“ம்மா…!”

“நம்புறேன்டா… முகத்தை சுருக்காதே” என்று அவனருகில் அமர்ந்தவர், தேவ்வின் தலை கோதி,

“தேனுவை கூட்டிட்டு வந்திடலாமா அதி?” எனக் கேட்டார்.

ஈஷ்வர் ராதிகா கேட்டதை ஆச்சரியமாக பார்த்தார்.

“நீங்க எனக்கு ஏதோ பெண் பார்த்திருக்கீங்க சொன்னீங்க?” வேண்டுமென்றே அவரை சீண்டினான்.

“என் பையன் ஒருத்திக்காக தவம் இருக்கான்னா… அவள் எத்தனை அன்பை என் பையன் மேல் வைத்திருக்கணும். நான் பார்க்கும் பெண் அவளுக்கு ஈடாகுமா? இல்லை அவன் தான் அவளோடு சந்தோஷமாக வாழ்ந்திடுவானா?” என்று தேவ்வின் கன்னம் கிள்ளியவர், “நீ ஒரு முடிவை எடுக்க வேண்டுமென தான் அப்படி சொன்னேன். நான் எந்த பெண்ணை பார்க்கல” என்றார்.

“நீங்க உண்மையை சொல்லியதால் நானும் உங்களுக்கு ஒன்னு சொல்றேன்” என்ற தேவ்… “இன்னும் கொஞ்ச நாளில் அருவியும் நம்மோடு இருப்பாள். எப்படின்னு கேட்காதீங்க… எனக்கே தெரியாத பதில். ஆனால் இங்க சொல்லுது” என்று தன்னுடைய இதயப்பகுதியை நீவி காண்பித்தான்.

“என்னப்பா நீங்க ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க?”

“வலியை என்னமா மறைக்குறன்னு அதிசயித்து பார்த்திருக்கே(ன்)ப்பா!” என்ற ஈஷ்வர், “நாளை தேனுவை பார்க்கப்போறோம்” என்றார்.

“டாட்!”

“மேனகா எல்லாம் சொல்லிட்டா(ள்)ப்பா” என்ற ராதிகா… “சித்து வீட்டுக்கு கூட்டிட்டு போனதும்” என்றதோடு, “இத்தனை நாளா இதையேன் எங்ககிட்ட மறைச்சிட்டு இருந்தன்னு தெரியல” என்றார்.

“அவள் எங்கிருக்கான்னு தெரிந்ததும் நீங்க சும்மா இருப்பீங்களா? சரியோ தவறோ ஒரு முடிவை எடுத்து விலகியிருக்கோம். அதுக்கு மதிப்பு கொடுக்கணுமே” என்ற தேவ், “இப்போ மாதிரி பார்க்கன்னு மட்டும் அப்போ இருந்திருக்கமாட்டிங்க, வீட்டுக்கு கூட்டிவந்து எங்க கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டு தான் உட்கார்ந்திருப்பீங்க” என்றான்.

“இப்பவும் அதைத்தான் செய்யப்போறேன்” என்றார் ராதிகா.

“அப்புறம் மை சன்… நீ சொன்னதில் ஒன்று தவறு. நீ மட்டும் தான் வேண்டாம், விலகலாம் அப்படின்னு முடிவு பண்ண. தேனு இல்லை” என்றார் ஈஷ்வர்.

இதயத்தில் ஊசி கொண்டு குத்தியதைப்போல் அவரின் வார்த்தை அவனை பதம் பார்த்தது.

“நார்மலானான்… திரும்ப வாட வச்சிட்டிங்க” என்ற ராதிகா, “நீ படு அதி. கிழம் அப்படித்தான் உளறிக்கிட்டு இருக்கும்” என்றார்.

அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்ட தேவ்…

“நாளைக்கு கன்ஃபார்ம் பார்க்கப்போறீங்களா மாம்?” எனக் கேட்டான்.

“நீதான் போட்டோ கூட காட்டியதில்லையே! அப்போ சித்துவுக்கு மட்டும் காட்டுன. உன்னை அழ வச்சிட்டாளேன்னு கோபத்தில் பார்க்கமால் விட்டுட்டேன். இப்போ பார்க்கணும் தோணுதே” என்றார்.

“இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணுங்க மாம்” என்ற மகனிடம்,

“எட்ட நின்னாவது பார்த்திட்டு வறேன்டா! உன் சித்தியையும் பார்த்து ரொம்ப நாளாச்சே” என்றார்.

அங்கு சென்று தேனுவை பார்க்கும் வரை, இப்படி எதாவது காரணம் சொல்லிக்கொண்டேதான் இருப்பார் என்பதால் அதற்குமேல் தேவ்வும் அவரை தடுக்கவில்லை.

“கேம்ப் எப்போ கிளம்புற அதி? மத்த டீமெல்லாம் அவங்கவங்க இடத்துக்கு நேற்றே போயாச்சு” என்றார் ஈஷ்வர்.

வேலை விஷயத்தில் அவன் இப்படி மெத்தனமாக இருக்கும் ஆளில்லை என்பதால், வேறெதுவும் திட்டம் வகுத்து எங்கு அங்கு செல்லாது விட்டுவிடுவானோ என அதைப்பற்றி அறிந்திட வினவினார்.

“நெக்ஸ்ட் வீக் வாசு மேரேஜ் டாட். எப்படியும் என்னை இன்வைட் பண்ணக்கூடாதுன்னு அவனுக்கு கட்டளை போட்டிருப்பார். கேம்ப் காரணம் வைத்து போகிறேன்” என்றான்.

தலையசைத்து ஏற்றுக்கொண்ட ஈஷ்வர்,

“பத்து நாளுக்கு முன்பு வந்தப்போ வாசு ஒண்ணுமே சொல்லவேயில்லையே?” என்றார் கேள்வியாக.

“எப்போ அருவியை கல்யாணம் செய்துகொள்ளப் போறேன்னு கேட்டுட்டே இருந்தான்… உனக்கு ஆனதுன்னு சொன்னேன். அதான் நான் மனசு மாறிடுவனோன்னு அவசரவசரமா ஏற்பாடு பண்ணிட்டான்” என்ற தேவ் “அவங்க குல தெய்வம் முன்னாடி தான் கல்யாணம் செய்துப்பாங்க… அரேஞ்மெண்ட்ஸ் பண்ண அதிக நாளெல்லாம் தேவையில்லை. அதான் இத்தனை ஸ்பீட்” என்றான்.

“நீ கல்யாணம் பண்ணிக்க, அவன் ஏண்டா கல்யாணம் செய்துக்கணும்?” ராது புரியாது வினவினார்.

“அருவி தான் பொண்ணுக்கு தாலி கட்டணும். தாலி கட்டுற மாப்பிள்ளையோட தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிருக்கக்கூடாது” என்று விளக்கம் அளித்தான்.

“கல்யாணத்துக்கே இத்தனை விதிகளாடா?” ராதுவுக்கு அவர்களின் முறைகளை கேட்பதற்கே ஏதோ அத்துவான காட்டுக்குள்ள தனித்து மாட்டிகிட்டதை போல் உணர்ந்தார்.

இன்னும் அவர் தேவ் பார்த்ததையெல்லாம் நேரில் பார்த்திருந்தால்? அவ்வளவு தான். தலை சுற்றி… இந்த காலத்திலும் இப்படியா என்று விழி விரித்திருப்பார்.

“சரிசரி நான் காலையில் சீக்கிரம் கிளம்பணும்… தூங்கு அதி” என்று மகனின் தலையை தலையணைக்கு மாற்றிவிட்டு அவனருகில் படுத்து தன் கையால் அணையிட்டுக் கொண்டார்.

தேவ்வின் முன்னுச்சியை ஒதுக்கிய ஈஷ்வர் தானும் படுத்து, அவனின் கரம் பற்றிக்கொண்டார்.

“டாட்…” என்று கிசுகிசுப்பாக ஈஷ்வரை அழைத்த தேவ், அவர் கண் திறந்திட…

“கேம்புக்கு சுலோ ஆண்ட்டியையும் கூட்டிட்டு போறேன். உங்களுக்கு பிரோப்ளேம் இல்லையே? சுலோ ஆண்ட்டியை பார்க்காமல் ஒரு வாரம் இருந்திடுவிங்க தானே?” என அதே மெல்லிய ஒலியில் கேட்டான்.

“எனக்கு ராது கையால் அடி வாங்கி வைக்காமல் விடமாட்ட போலிருக்கே” என்று ஈஷ்வரன் “எனக்கு எப்பவும் என் ராது தாண்டா” என முணுமுணுக்க…

“எனக்கு உங்களைவிட சுலோ மேல நம்பிக்கை இருக்கு. பேசாமல் தூங்குங்க” என்று அதட்டினார் ராதிகா.

எத்தனை வயதாகி காலங்கள் ஓடினாலும்… புரிதலால் மட்டுமே உறவில் நம்பிக்கை பலப்படும்.

கணவனின் முந்தைய காதல் தெரிந்த போதிலும்… இன்றைய காதலும், வருங்காலமும் தனக்கு மட்டுமே என்ற தெளிவே ராதுவை கணவனின் காதல் விஷயத்திலும் எளிதாக எடுத்துக்கொள்ள வைத்தது.

தேவ்விற்கு தன் பெற்றோரின் அன்பு எப்போதும் வியப்பு தான். இப்போது போல். தான் பார்த்து வியக்கும் அவர்கள் தன்னை பார்த்து வியக்க வேண்டுமென பேராசை கொண்டான்.

தாய் தந்தையரின் அரவணைப்பில் அலைப்புறுதல்கள் யாவற்றையும் மறந்து நிம்மதியான உறக்கம் கொண்டான் தேவதிரன்.

இந்த உறக்கம் அங்கு சென்ற பின்பு கிட்டுமா?

*******

காலை தேனுவிற்கு முன்பு விழித்துக்கொண்ட வித்யா, இப்போது அவளது மனநிலை எப்படியிருக்கும் என்று தேனுவின் மீது கண் வைத்தவளாகவே அனைத்தும் செய்து கொண்டிருந்தாள்.

நேற்றைய வலியின் மிச்சம் இன்றும் இருக்குமோ? இன்றும் அழுது அரற்றினால் என்ன செய்வது… எப்படி அவளை தேற்றுவது என்கிற கவலையான யோசனை அவளிடம்.

ஆனால் வித்யாவின் எண்ணத்திற்கு நேர்மாறாக… அனுதினம் கொண்ட பழக்கமாக மலர்ந்த முகமாக தன்னுடைய அலைப்பேசியை எடுத்து தேவ்வின் படத்தில் கண் திறந்தவள்,

“குட் மார்னிங் டாக்டர்” என்றாள். நீண்டு விரிந்த இதழில்.

‘அடிப்பாவி…’ என வாய்பிளந்து பார்த்திருந்தாள் வித்யா. இவளா நேற்று அந்த மனுஷன் மேல் அவ்வளவு கோபத்தில் இருந்தவள் என்று.

அடுத்து தேனு பேசியதில் வித்யா கொலைவெறி ஆகினாள்.

“சாரி டாக்டர். கண்ட்ரோல் பண்ணவே முடியல. அதான் கால் பண்ணிட்டேன். அத்தனை முறை பண்ணியும் நீங்க எடுக்கலன்னு உங்க மேல் லைட்டா கோபம் தான். தூங்கி எழுந்ததும் சரியப்போச்சு. உங்கப்பேச்சை மீறி கால் பண்ணத்துக்குதான் சாரி” என்றவள் வித்யாவை பார்த்து கண் சிமிட்டி விட்டு குளிக்கச் சென்றாள்.

‘கண்ணைக்கட்டுதே!’ என நினைத்த வித்யா “ஷீ இஸ் ஓகே நவ்” என்று தேவ்விற்கு தகவல் அனுப்பிவிட்டு தன் வேலைகளில் கவனமானாள்.

தகவலை பார்த்த தேவ்விற்கு மட்டுமே தன்னவளின் நிலை புரிந்தது.

வித்யாவிற்காக இயல்பாகக் காட்டிக்கொண்டிருக்கிறாள் என்பது.

கசப்பாய் முறுவலித்துக் கொண்டான்.

தேவ்வின் எண்ணம் உண்மை என்பது போலத்தான், குளியலறைக்குள் கொட்டும் நீருக்கடியில் நின்று கொண்டிருந்தவளின் கண்கள் அருவியாய் நீரோடு கலந்து கொண்டிருந்தது.

வித்யாவுக்காக மட்டுமல்ல தன்னவனுக்காகவும் தனது வலியை விழுங்கி… கனன்ற முகம் திருத்தி வெளியில் வந்தாள்.

சரியாக வாசு அழைத்திட…

அடக்கி வைத்தவற்றை யாரிடமாவது கொட்ட வேண்டுமென்ற மனதின் படபடப்போடு முதல் ஒலியிலேயே செவி மடுத்திருந்தாள்.

“வாசுண்ணா…”

“பாப்பா… தேனும்மா!”

தங்கையின் குரலில் பரிதவிப்பை கண்டதும், அவனின் குரலில் பதட்டம். சிறு கமறல்.

“பாப்பா! என்னாச்சுடா?”

“நீங்க வறீங்களா?”

அன்னை மடியாய் அண்ணன் தோளில் தலை சாய்த்து இளைப்பாற மனம் விரும்பினாள்.

“வரேன்… இதோ கிளம்பிட்டேன்… இப்போ கிளம்பிட்டேன் டா!” என்று வாசு சொல்லும் போதே, அவனின் கைகளிலிருந்து அலைப்பேசி பறிக்கப்பட்டது.

“இன்னும் அஞ்சாறு நாளுல உன் அண்ணனுக்கு கல்யாணம். முறை செய்யணும். வந்து சேரு” என்று மிரட்டலாய் ஒரு குரல் ஒலித்து அடங்கியது.

“நீ அங்க போறேன்னு நிக்காமல், அவளை இங்கு வர வை” என்று வாசுவிடம் அதட்டுவதும் தேனுவிற்கு நன்கு கேட்டது.

“வாசுண்ணா…”

“அவர் எப்பவும் அப்படித்தானேடா!” என்ற வாசு, “நான் வாறேண்டா” என்றான்.

“இல்லைண்ணா… வேண்டாம். நான்… நான்” கொஞ்சம் தடுமாறியவள் “வந்து ஆகணுமே! அவங்களவுக்கு என் அண்ணாவும் எனக்கு முக்கியம்” என்றாள். வழிந்துவிட்ட கண்ணீரோடு.

வாசுவுக்கு அவளின் வார்த்தையில் நெஞ்சம் நெகிழ்வதற்கு பதிலாக கனத்துப்போனது.

“பாப்பா…” வாசு குரல் நனைந்து நலிந்தது.

“இத்தனை வருடம் எதை புரிய வைக்க தனியா இருந்தனோ… அது அவங்களுக்கு எப்பவோ புரிஞ்சிருக்கும். என் அண்ணாவோட ஸ்பெஷல் மொமெண்ட் மிஸ் பண்ணிடமாட்டேன்” என்றவள், “எனக்கு பதில் வேற தங்கச்சி ரெடி பண்ணிட்டிங்களா?” என்றாள் பொய் கோபத்தோடு.

“அடேய்… நீ வரலன்னா கல்யாணமே இல்லைடா” என்ற வாசு மகிழ்வின் உச்சத்தில் இருந்தான். தங்கையின் அருகாமை வேண்டி காத்து கிடப்பவனின் நெஞ்சில் அருவியின் குளுமையை பாய்ச்சியிருந்தாள் தேனருவி.

காதலில் மட்டுமல்ல… பிரிவு என்பது எல்லா உறவிலும் வலி தான்.

“சந்தோஷம் டா பாப்பா. நான் வந்து கூட்டிக்கவா?” ஆர்வமாக வினவினான்.

“அண்ணா…” என்று விளித்தவளின் குரலில் அத்தனை எத்தனை தூரம் தன்னுடைய உடன்பிறப்பை கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு. அதே சமயம் தன் முகம் காண எவ்வளவு காத்திருக்கிறான் என்பதும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

நேற்றைய தேவ்வின் செயலைத்தானே தானும் வாசுவிற்கு செய்து கொண்டிருந்தோம் என்பது புரிந்தது.

இதை தனக்கு உணர்த்திடத்தான் தேவ் தன்னுடைய அத்தனை அழைப்பபுகளையும் நிராகரித்தான் என்பதும் அக்கணம் அவளுக்கு விளங்கிற்று.

இதைத்தானே தேவ்வும் அவளிடம் எதிர்பார்த்தான். உணர்த்த முயன்றான். வலிக்க வலி கொடுத்து உணர்த்தியும் விட்டான்.

தங்கள் இருவருக்கான வலியில் மற்றவர்கள் கஷ்டம் கொள்வதில் தேவ்விற்கு விருப்பமில்லை. அதற்கே நேற்றைய நிராகரிப்பு.

“ஆபிசில் இம்பார்டன்ட் ப்ரொஜெக்ட் வொர்க் இருக்குண்ணா. உங்க மேரேஜுக்கு அட்லீஸ்ட் டூ டேசாவது லீவ் வேணுமே! வொர்க் முடிச்சிட்டு நெக்ஸ்ட் வீக் வரேன்” என்றவளுக்கு அன்றைய தினமே அண்ணனின் கை வளைவுக்குள் ஆறுதல் அடைந்திட மனம் ஆர்ப்பரித்த போதும்… தனக்காக இத்தகைய சூழலில் அவன் அலைய வேண்டாமென தன் வரவை உறுதி செய்து விளக்கம் கொடுத்தாள்.

“பாப்பா?”

“கண்டிப்பா வருவேன் வாசுண்ணா!”

அதன் பின் என்ன? நாட்கள் விரைந்து ஓடி வரவேண்டிய நாள் வந்திருந்தது.

இடைப்பட்ட நாட்களில் தேவ்விடம் சொன்னது போல்…

ராது சித்துவின் அலுவலகம் வந்து, தேனுவிற்கே தெரியாது அவளை பார்த்துச் சென்றார்.

நான்கு வருடங்களாக தேவ்வுடன் சேர்ந்து தேனு இங்கிருப்பதை சொல்லாது மறைத்ததற்காக மேனகாவிடமும், சித்துவிடமும் சண்டை பிடித்து இருவரையும் ஒருவழி ஆக்கியிருந்தார்.

தேவ் பார்க்க வேண்டுமென்று அழைத்திருந்ததால், மேனகாவும் ராதுவுடன் வந்து, மகனை பார்த்து அவனின் மனமாற்றத்தை அறிந்து அகம் மகிழ்ந்தவராக ஊர் திரும்பியிருந்தார்.

எல்லோருக்கும் ஏதோவொரு தீர்மானத்தில் நம்பிக்கை அளித்த தேவ்விற்கு… சுத்தமாக நம்பிக்கையில்லை. தேனுவை அவர்களாக தனக்கு கொடுப்பார்களென்று.

எல்லாமே நம்பிக்கையில் தானே இயங்குகிறது எனும் நியதியின் கையில் தன்னுடைய வாழ்வை ஒப்படைத்தவனாக வாசுவின் இருப்பிடம் கிளம்பிவிட்டான். இன்னும் இரு தினங்களில் வாசுவின் திருமணம்.

அடுத்த வாரம் வருவதாக சொல்லிய தேனுவும் கூட… எந்த நாளென்று குறிப்பிட்டு சொல்லாததால், அவள் கிளம்பும் நாள் வாசுவுக்கு சித்தார்த் மூலமாகத்தான் தெரிந்தது.

புரொஜெக்ட்டில் தன்னுடைய பணி முழுமையாக முடிந்ததும்… அன்றைய தினமே சித்துவிடம் ஊருக்கு செல்ல இருப்பதாக சொல்லி விடுப்பு கேட்க… இதற்காகக் காத்திருந்தவன் போல் எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளென்று விடுப்பு வழங்கிவிட்டான்.

“வனவாசம் முடிந்தது போல” என்று வித்யா கூட தேனுவை கிண்டல் செய்திருந்தாள்.

தேவ்வும், தேனுவும் தங்களையறியாது தங்களுடைய பயணத்தை தங்களின் காதல் தரித்த இடம் நோக்கி ஒரே நாளில் தொடங்கியிருந்தனர்.

நாமும் சில வருடங்கள் முன்னோக்கி பயணித்து மீள்வோம்.

error: Content is protected !!
Scroll to Top