அத்தியாயம் 12
(எல்லாம் கற்பனையே! மலையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தின் பெயர்கள் உட்பட.)
தேவதிரன், மலைவாசன் கல்லூரியில் நண்பர்களாகினர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தான் கல்வி பயின்றனர். இளங்கலை மருத்துவம் இந்தாண்டினை முடிக்கும் போது… ஒருவருக்கு ஒருவர் இன்றியமையாதவர்கள் ஆகியிருந்தனர். இவர்களுடன் ரகு.
வாசுவும், ரகுவும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தாலும் பெரும்பாலும் இவ்விருவரின் வாசமும் தேவ்வின் வீட்டில் தான்.
இன்னும் இரு தினங்களில் ஹவுஸ் சர்ஜனில் வரும் கடைசி பயிற்சி தேர்வு. அது முடிந்துவிட்டால் மூவரும் வெவ்வேறு பாதையில் பயணத்தை தொடங்க வேண்டும்.
“மேற்படிப்பு எங்கடா?”
தேர்வு முடிந்ததும் வீடு செல்வதற்காக தன்னுடைய உடைமைகளை பெட்டிகளில் அடுக்கிக்கொண்டிருந்த வாசுவிடம் ரகு வினவினான்.
“என்னோட வில்லேஜ்க்கு சர்வீஸ் பண்ணத்தான் டாக்டர் படிச்சேன் ரகு. இவ்வளவு செலவு செய்து ஜெனரல் முடித்ததே பெரிய விடயம். மார்க் இருந்து சீட் கிடைத்ததால் இது கூட சாத்தியமானது. பிராக்டிஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவேன்” என்றான்.
“அதி நீ?”
“நியூரோ பண்ணனும் டா. இங்கே தான். அப்போதான் அப்பாக்கு ஹெல்பா இருக்க முடியும்” என்க,
“நான் வேலூரில் தான் பிஜி. அப்பா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. அப்போ நாம் மூணு பேரும் ஒண்ணா இருக்கப்போவது இன்னும் மூணு நாளுக்குத்தான் இல்லையா?” என்றான் ரகு. அதீத கவலையாக.
மற்ற இருவரிடமும் கூட அந்த கவலை பிரதிபலித்தது.
“எல்லாம் அவ்வளவு தானாடா?” வாசு கேட்டிட…
“ட்ரிப் மாதிரி பத்து நாளுக்கு எங்காவது போயிட்டுவரலாமா?” என வினவினான் தேவ்.
“ம்க்கும்… வாய்ப்பேயில்லை அதி. எக்ஸாம் முடிந்த மூணு மணி நேரத்தில் நான் வீட்டில் இருக்கணும். இல்லை யர்ராமுண்டி சாமி ஆடிடும். ஊருக்கு போக ஒன்றரை மணி நேரம்ன்னா… மீதியிருக்க ஒன்றரை மணி நேரம் தான் அவர் எனக்கு கொடுத்திருக்க சுதந்திர நேரம்” என்றான் வருத்தமாக.
“ஹேய் வாசு… சில் மேன். இப்போ நீ சின்னப்பையன் கிடையாது. டாக்டர். சொசைட்டியில் உனக்குன்னு பெரிய இடமிருக்கு. இப்பவும் பர்ஸ்ட் இயரில் அவருக்கு பயந்திட்டு இருந்த மாதிரியே இருக்க?” என்று தேவ் வாசுவை கிண்டல் செய்திட, ரகு சிரித்திட்டான்.
அவர்களிடமிருந்த புன்னகை வாசுவிடம் இல்லை. முகமே நொடியில் வாடிப்போனது.
“ஹேய் வாசு!”
“அம் ஓகே டா” என்ற வாசு, “என்னுடைய சூழல் உங்களுக்கு சொன்னா புரியாதுடா அதி. நேரில் பார்த்தாலும் புரிந்துகொள்வது கஷ்டம் தான்” என்று பெட்டிகளில் அதுக்கும் வேலையை தொடர்ந்தான்.
“அப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ வாசு. ரகு வீட்டுக்கு கூட போயிட்டு வந்திருக்கோம். உன் வீட்டுக்கு நீ கூப்பிட்டதே இல்லையே!” என்றான் தேவ்.
“அங்கெல்லாம் உங்களுக்கு செட் ஆகாதுடா. போன் கூட யூஸ் பண்ண முடியாது” என்று உடனடியாக மறுத்தான் வாசு.
“இண்ட்ரஸ்டிங்” என்று தேவ் சொல்ல, “அப்போ கண்டிப்பா அங்க வரணுமே! யாரோட தொந்தரவும் பிரஷரும் இல்லாமல் கொஞ்சநாள் ஃபிரியா இருக்கலாம். நமக்கும் உடனிருந்த பீல் இருக்குமே. இந்த கொஞ்சநாள் என்ஜாய் பண்ணுவோம்” என்றான் ரகு.
“வெறும் காடு, மரம், மலைன்னு நடக்கவே சிரம்மம்டா உங்களுக்கு.”
“நாங்க உன் வீட்டுக்கு வரக்கூடாதா வாசு?” தேவ் ஒருமாதிரி அழுத்தமாகக் கேட்டிட…
“அச்சோ அதி அப்படியில்லை. இங்கிருக்கும் வசதியில் கால் பங்கு கூட உங்களுக்கு அங்கிருக்காது” என்று உண்மை நிலையைக் கூறினான்.
“நாங்க வசதி எதையும் கேட்கலையே வாசு. உன்னால் அங்கு இருக்க முடியுங்கிற போது எங்களாலும் இருக்க முடியும். அதுக்கு அப்புறம் உன்னுடைய விருப்பம்” என்று தேவ் சொல்லிட, ரகுவும் ஆமோதித்தான்.
ஐந்து வருடங்களில் அவர்கள் மூவரும் இருந்ததே தேவ்வின் வீட்டில் தான் அதிகம். வருடத்திற்கு ஒருமுறை ரகுவின் வீட்டிற்கு கூட சென்று வந்திருக்கின்றனர். வாசு தன்னுடைய சூழல் புரிந்து வாருங்களென்று பேச்சிற்க்காகக்கூட அழைத்தது கிடையாது.
தான் அழைத்து அங்கு வந்த பின்னர் அவர்கள் சிரமம் கொள்வார்கள் என்பதாலேயே தவிர்த்துவிட்டான்.
இப்போது இவ்வளவு கேட்டும் அழைத்துச் செல்லவில்லை என்றால் அது மனதில் தவறாக பதிந்துவிடுமென அரை மனதாக சம்மதித்தான்.
நண்பர்களை தன்னுடைய இருப்பிடம் அழைத்துச் செல்வதில் வாசுவுக்கும் மகிழ்ச்சி தான்.
அப்போதே தன்னுடைய தந்தைக்கு அழைத்து, தனது நண்பர்கள் இருவரை அழைத்துவர விரும்புகிறேன் என்று தெரிவிக்க… அவரும் முழுமனதாகவே சம்மதம் வழங்கினார்.
“அப்பா ஒத்துகிட்டார் டா. எக்ஸாம் முடிச்சிட்டு மூணு மணிக்கு கிளம்பிடலாம்” என்றான் வாசு.
தேவ்வும், ரகுவும் உற்சாகமாக தலையாட்டினர்.
“நீ நினைக்கும் அளவுக்கு உன் அப்பா டெரர் இல்லைன்னு நினைக்கிறேன். கேட்பதற்கே பயந்த? இப்போ ஈஸியா ஓகே சொல்லிட்டார்” என்று ரகு சொல்ல… “இதுவேற அதுவேற மச்சி. வீட்டுக்குவர விருந்தாளி எதிரியாவே இருந்தாலும் வாங்கன்னு தான் சொல்லுவார். அவரை பொறுத்தவரை நீங்க விருந்தாளி” என்றான்.
“இவன் என்னடா அவருக்கு இவ்வளவு பில்டப் கொடுக்குறான்” என்றபோதும், வாசு சொல்லும் அளவுக்கு சீரியஸான நபராக அவரை தேவ் கணிக்கவில்லை.
தேர்வு முடிந்த அன்று, காலை பரீட்சை எழுதிவிட்டு விடுதியை வாசுவும், ரகுவும் காலி செய்து தேவ்வின் இல்லம் வந்துவிட்டனர்.
“மூணு மணிக்கு பஸ். சீக்கிரம் கிளம்புங்க. இதை விட்டால், கச்சிராயப்பாளையம் டவுனில் மலைக்கு போகும் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவோம். அதை விட்டுட்டால் அடுத்த நைட் எட்டு மணிக்குத்தான்” என்றான் வாசு.
“நான் கார் கொண்டு வறேன் வாசு. போகலாம். சிரமம் இருக்காது” என்று தேவ் சொல்ல…
“இல்லை மச்சான் மலையில் கார் வரகுமலை வரை தான் போகும். அதுக்கு அப்புறம் கொஞ்ச தூரம் ஜீப்பில் போவதே கஷ்டம் தான். அடுத்து நாலு கிலோமீட்டர் நடந்து தான் போகணும்” என்றான்.
“இதெல்லாம் பிளான் பண்ணப்போ சொல்லவேயில்லை நீ!” ரகு கேட்டிட…
“அதான் இப்போ சொல்றனே” என்ற வாசுவின் முகம் சுருங்கியது. இதற்குத்தான் வேண்டாமென்று சொன்னேன் எனும் விதமாக.
“ஹேய் மேன். அவன் நார்மலா கேட்டான். நீயேன் பியூஸ் போற?” என்ற தேவ், “பத்து நாளில்லை… பிஜி ஜாயின் பண்ண டூ மன்த்ஸ் இருக்கு. அதுவரை அங்கு தான். ஓகேவா?” எனக் கேட்டு வாசுவை சமன் செய்தான்.
“ஆமாம் மச்சி… காடு மலையெல்லாம் ஃபன் பன்றோம்” என்று ரகு கூறிய பாவனையில் வாசு சிரித்துவிட்டான்.
“சீக்கிரம் கிளம்புங்கடா! நான் குளிச்சிட்டு வறேன்” என்று வாசு குளியலறைக்குள் செல்ல, “அம்மாவை ஸ்நாக்ஸ் செய்ய சொன்னேண்டா. செய்திருப்பாங்க ஒரு கை பார்த்திட்டு வறேன்” என்று ரகு கீழே ஓடிவிட்டான்.
தேவ் பையில் தான் எடுத்து வைத்தவற்றை சரி பார்த்துக்கொண்டிருக்க… வாசுவின் அலைப்பேசி ஒலித்தது.
அழைப்பு தொடர்ந்து கொண்டே இருக்க… யாரென்று எடுத்து பார்த்தான் தேவ்.
‘பாப்பா’ என்றிருந்தது.
‘வாசு தங்கச்சி’ என்ற தேவ், அழைப்பு நின்றுவிட்டது என நினைக்கையில் மீண்டும் ஒலித்தது.
தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் ஏதேனும் அவசரமாக இருக்குமென்று தேவ் அவ்வழைப்பை ஏற்றான்.
“வாசுண்ணா… கிளம்பிட்டிங்ளா? டவுனில் பஸ் பிடிச்சிடுவீங்களா? நான் கீழ வந்தேன். மேல போயிட்டால் சிக்னல் இருக்காதே! அதான் இவ்வளவு டைம் கால் பண்ணேன்” என்று தேவ் ஹலோ சொல்வதற்கு கூட இடிமளிக்காது படபடவென பெண்ணின் குரல்.
அத்தனை வேகமான குரலும் தேவ்விற்கு இனிமையாய் இருந்தது. தென் சொட்டும் குரலோ என்று எண்ண வைத்தது.
“அண்ணா… வாசுண்ணா… இருக்கீங்களா?”
“நான்… வாசு ஃபிரண்ட்.” குரலை செருமி மெல்லமாக பதில் வழங்கினான்.
“ரகு அண்ணாவா?” எனக் கேட்டவள், தேவ் பதில் சொல்வதற்கு முன்…
“ஜீப் கிளம்பிடுச்சுண்ணா. இதுக்கு அப்புறம் எனக்கு சிக்னல் கட் ஆகிடும். வாசுண்ணா வரும்போது டவுனில் பஸ் இல்லைன்னா. வரகுமலை வரை ஆட்டோவில் வந்துட்டு, மேகமலை போஸ்ட் ஆபிசுக்கு கால் பண்ண சொல்லுங்க” என்று வைத்துவிட்டாள். இதில் பாதி விட்டு விட்டு தான் தேவ்விற்கு கேட்டது.
வாசு வந்ததும் தனக்கு கேட்ட பாதி விஷயங்களை தேவ் சொல்லிவிட்டான்.
“உன் தங்கச்சிக்கு உன் மேல் நல்ல கேர் டா” என்றான் தேவ்.
“ம்ம்ம்” என்று புன்னகைத்த வாசு, “உன் மேல் சித்து காட்டுற மாதிரிதான்” என்றான்.
தேவ் புன்னகைத்துக் கொண்டான்.
“பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எடுத்துக்கோ அதி. சில முக்கிய மெடிசன்ஸ் கூட எடுத்துக்கோ. புதுசா வரவங்களுக்கு சூழல் செட்டாகிறதே கஷ்டம்” என்றான்.
“டேய்… உங்க ஊர் என்ன தமிழ்நாட்டில் தானே இருக்கு? ஏதோ அமேசான் பாரஸ்டுக்குள்ள கூட்டிட்டு போற மாதிரி பண்றடா” என்ற தேவ் நண்பன் சொல்லியதை செய்தான்.
“அங்குகூட போயிட்டு வந்திடலாம்” என்ற வாசுவுக்கு தன்னுடைய மக்களை நினைத்து அதீத கவலை.
காலங்களில் பல மாற்றங்கள் வந்து நாகரிகம் விண்ணைத் தொட்டு நிற்கிறது. இப்பவும் இப்படியும் மனிதர்கள் இருக்கின்றனரா என்று தினம் போல் இன்றும் நொந்துகொண்டான்.
படிக்கவென்று வெளியில் வந்த பின்னர் தான்… வாசுவிற்கே தங்களின் உலகம் வேறு, வெளி மக்களின் உலகம் வேறு என்பதே தெரிந்தது.
சரியான நேரத்திற்கு திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிவிட்டனர். ஈஷ்வர் தான் உடன் வந்து ஏற்றிவிட்டார்.
பயணத்தின் போது… வழி நெடுக்க,
“அங்கு என்ன நடந்தாலும், எதை பார்த்தாலும் கடந்து போயிடுங்க” என்று வாக்கியத்தை வார்த்தை மாற்றாது பலமுறை சொல்லிவிட்டான் வாசு.
“அடேய்… அவங்களும் மனுஷங்க தானேடா” என்று தேவ் மற்றும் ரகு நொந்து போயினர்.
வாசு சொன்னதற்கும் மேல் அங்கு பலவற்றை கண்டு ஆச்சரியமும், கோபமும் கிட்டயிருப்பதை இருவருமே அறியவில்லை.
சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி வந்து அங்கிருந்து கச்சிராயபாளையம் வந்து சேர்ந்தனர். என்ன அவர்கள் இறங்குவதற்கும், அடுத்து ஏற வேண்டிய பேருந்து செல்வதற்கும் சரியாக இருந்தது.
“ம்ப்ச்.” சலித்தவனாக வாசு இடுப்பில் கை குற்றி இருவரையும் பார்த்திட…
“ஆட்டோ இருக்குல போகலாம்” என கூலாகக் கூறினர். இந்த கூல் நிலையெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கும் நடையில் காணாமல் போய்விடும் என்பதை உணராது.
வாசு யாருக்கோ அழைத்தான்.
“எங்கடா இருக்க? நான் பழைய பஸ் ஸ்டாப்பில் இருக்கேன். மேல போகணும்டா” என்றான் வாசு.
எதிர்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ,
“இங்கேயே நில்லுங்கடா. இன்னொரு பஸ் ஸ்டாப் இருக்கு. அங்கு தான் ஆட்டோ ஸ்டான்ட்” என்று வாசு சென்றுவிட்டான்.
“என்னடா இப்படி மூணு ரோடு ஜாயின்ல நிக்க வச்சிட்டு போயிட்டான்” என்ற ரகு அவர்களுக்கு எதிர் பக்கமிருந்த தலைவர்கள் சிலையை பார்த்து நேரத்தை போக்கிட… தேவ்விற்குள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செவி தீண்டிய தேன் குரலை மீண்டும் கேட்டிட வேண்டுமென்ற தவிப்போடு நின்றிருந்தான்.
அக்குரல் அவனை என்னவோ செய்துவிட்டது. மற்றவர்களுக்கு அவளுடையது இயல்பான குரலாகத்தான் தெரியும். ஆனால் தேவ்விற்கு இதயத்தில் மத்தளம் வாசிக்க வைத்திட்டது.
சில நிமிடங்களில் ஆட்டோவுடன் வந்த வாசு, “ஏறுங்கடா” என்க… அவர்களின் பயணம் கல்வராயன் மலையை நோக்கித் துவங்கியது.
கல்வராயன் மலை கிழக்குத்தொடர்ச்சி மலையின் சிறு பகுதி, திருவண்ணாமலை வரை நீண்டிருக்கும். எதிர்புறம் சேலம் வரை. சேலத்திலுள்ள ஏற்காடும் கிழக்குத்தொடர்ச்சி மலையில் அடக்கம்.
சேலத்தின் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் எல்லைகள் கல்ராயன் மலை என்றும், கள்ளக்குறிச்சி எல்லைகள் கல்வராயன் மலை என்றும் அழைக்கப்படும்.
இந்த கல்வராயன் மலையின் உச்சியில் ஆட்களே செல்ல முடியாத இடம் தான் வாசுவின் கிராமம்.
கிராமத்தின் பெயர் தேனோடை மருவம். இங்குள்ள அம்மனின் பெயர் தேனருவி. உச்சியில் சிறு ஓடையாக துவங்கும் நீர், மலையின் பரந்த பரப்பில் சீறிப்பாய்ந்து பூமியை நோக்கி கொட்டும் தேனோடை அருவிக்கு நடுவில் வெட்டவெளியில் வாசம் செய்கிறாள்.
இங்கு மருவி பழங்குடியினர் (கதைக்காக மட்டுமே இப்பெயர். கற்பனை*) இன்னமும் தங்களது பழமை மாறாது, அனைத்து சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி வாழ்கின்றனர். இவர்களின் பூர்வீகம் இம்மலை தான். அதீத கட்டுப்பாடு மிக்க கிராமம். அருகிலிருக்கும் மற்ற கிராம மக்களே அங்கு செல்ல சில கணங்கள் யோசிப்பர். தவறென்றால் மன்னிப்பே கிடையாது. மரணம் தான் தீர்ப்பு. இரு தலைமுறைகளுக்கு முன்னர் தான் அரசாங்கத்தால் அத்தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. அப்படியும் சில விதிகளில் அவர்கள் தங்களின் கோட்பாடுகளை தளர்த்திக்கொள்ளவில்லை.
கீழே கோமுகி அணையை கடந்து மலை சாலையில் அமைந்திருக்கும் பெரியார் நீர்வீழ்ச்சியை கடந்து, மான்கொம்பு நீர்வீழ்ச்சிக்கு மேல் சென்று சில சுற்றுலாத்தலங்களை கடந்தால் வரகு மலை கிராமம். அத்தோடு அம்மலையில் பாதை முடிவடைய, இவர்கள் வந்த பேருந்து பயணம் முற்றுப்பெற்றது.
வழி முழுக்க பச்சை நிறமாக கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்ததால் அலுப்பு தெரியாது வந்து சேர்ந்தனர்.
வரகு மலையிலிருந்து மேகம் மலை செல்ல வேண்டும். அதற்கு அடுத்து தான் தேனோடை மருவம்.
“வந்துட்டோமா டா?” ஆட்டோவிலிருந்து இறங்கியதும், சோம்பல் முறித்தவனாக ரகு கேட்க…
“வந்ததுல பாதி தூரம் இன்னும் போகணும்” என்று அதிர வைத்தான் வாசு.
அங்கு வாசுவை நோக்கி ஒரு நபர் ஓடிவர, அவரின் தோற்றம் கண்டு ரகு நடுங்கி தேவ்வின் பின்னால் ஒளிந்து கொண்டான்.
“என்னையும் பயம் காட்டாதடா. வாசுவுக்கு தெரிந்தவர் போல” என்று, வாசு அந்நபரிடம் பேசுவதை வைத்து ரகுவை அதட்டினான் தேவ்.
வாசு காட்டிய பைகளை அந்நபர் தூக்கிக்கொள்ள, வாசு அவனை பின்தொடரந்தான்.
“என்னடா நின்னுட்டிங்க. ஜீப்பில் போகணும். அங்க நிக்குது பாருங்க” என்று கை காண்பித்தவன், “இவன் கொல்லன். அந்த ஜீப் எங்க மக்களுக்காக தலைவர் வாங்கி விட்டது. இவன் தான் டிரைவர்” என்றுகூறி கொல்லனின் தோளில் தட்டினான் வாசு.
“வாங்க தம்பிங்களா? என்னை பார்த்ததும் பயந்துட்டிங்களாக்கும். கிழங்கு பிடுங்கிட்டு இருந்தேங்க. வாசு தம்பி போன் போட்டுச்சுன்னு தபால்கார ஆபீசரு சொன்னாங்கன்னு பாப்பா சொல்லுச்சு. வந்தால் காத்துட்டு இருப்பீங்களேன்னு அப்படியே ஓடியாந்துட்டேன். என் நிறத்துக்கு சேத்து மண்ணு பட்டிருக்கவும், தாட்டியான உடம்புகிறதால தம்பி பயந்துடுச்சு” என்ற கொல்லன், “ஏறுங்க” என்றான்.
“என்னடா அதி சின்ன விஷயத்துக்கு இம்புட்டு பேசுறார்?” என்ற ரகு, கொல்லனின் பார்வையில் அரண்டு வண்டியில் ஏறியிருந்தான்.
“கிராமத்து மக்கள் இப்படித்தான் எல்லா விஷயத்திலும் இன்னொசெண்ட்டா இருப்பாங்கடா” என்ற தேவ், “என்ன வாசு அமைதியாகிட்ட?” எனக் கேட்டான்.
“நாலு கிலோ மீட்டர் நடக்கணும் அதி. நடந்திடுவீங்களா?” என்று தயக்கமாக வினவினான் வாசு.
“நீ எங்களுக்கு கஷ்டம், சிரமம் அப்படின்னு தின்க் பண்ணாதடா. பார்த்துக்கலாம் விடு” என்றான் தேவ்.
“ஆமாம் பார்த்துக்கலாம். முடியலன்னா கொல்லன் அண்ணா தூக்கிப்பாரு” என்று ரகு விளையாட்டாய் சொல்ல…
“அதுக்கென்னங்க தம்பி… தூக்கிடலாங்க” என்று சர்வ சாதாரணமாகக் கூறி ரகுவை அதிர வைத்தார் கொல்லன்.
மேகமலை வந்தடைந்ததும், அங்கு சிறு கல் வீட்டிற்குள் தபால் நிலையம் இருந்தது. அதன் முன் ஜீப்பை நிறுத்தி இறங்கினார்கள்.
“இங்கிருந்து தான் நடக்கணும் தம்பி. கல்லு முள்ளுமா, செடியும் கொடியுமா இருக்கும். ஒத்தயடி பாதை. பார்த்து வாங்க” என்று மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் வரியாக தெரிந்த பாதையை கொல்லன் காண்பிக்க…
வாசு முன் செல்ல, அவனை மற்ற இருவர் பின் தொடர அவர்களுக்கு இறுதியில் கொல்லன் நடந்தார்.
மாலை ஆறினை தாண்டியிருக்க… மரங்களுக்கு நடுவில் கும்மிருட்டாக இருந்தது.
கொல்லன் வாசுவின் கையில் டார்ச் விளக்கினை கொடுத்திருக்க… கொல்லனும் ஒன்று வைத்திருந்தான்.
ரகுவுக்கு ஒரே பீதியாக இருந்தது.
பார்க்கும் இடமெல்லாம் இருட்டில் பல்வேறு வடிவங்களை காண்பித்து மிரள வைத்தது.
“பார்த்து போங்க தம்பி” என்ற கொல்லன், “ஊரு ரொம்ப கட்டுப்பாடானதுங்க. பார்த்து பதுசா நடந்துக்கோங்க” என்றதோடு, தங்களின் வழமை முறைகளை கதையாக சொல்லிக்கொண்டே வந்தார்.
இருட்டில் மரம் எது பாறை எதுவென்றே தெரியாது குத்துமதிப்பாக இருவரும் நடந்து கொண்டிருந்தனர். வாசுவும், கொல்லனும் பழக்கமானதால் எட்டி அடி வைத்தனர்.
திடீரென்று இடி முழக்கம் விடாது ஒலிக்க… ரகு மற்றும் தேவ்வின் நடை நின்றது.
“அருவி சத்தம் தம்பி அது. எங்கம்மா தேனாத்தா அதுல தான் குடியிருக்காள். அதான் மங்கள ஓசையா இடியோசை மாதிரி அருவி சத்தம் முழங்குது” என்ற கொல்லன் சொல்லும் ஒவ்வொன்றிலும் சிறு அதிர்வு இருக்கத்தான் செய்தது.
“அருவியில் நடக்கப்போறோம் அதி. கீழே பார்க்காதீங்க” என்ற வாசு, தனக்கு பின்னால் வந்த ரகுவின் கையை பற்ற நால்வரும் சங்கிலி போல் இணைந்தனர்.
அருவியின் மேற்பரப்பு அத்தனை அகலமாக இருந்தது.
நிலவு ஒளியில் நிழல் நிறமாக தெரிந்த நீரோடை அச்சத்தையே வழங்கியது.
“இதை கடக்கவே ஒரு நாளாகும் போல?”
“இந்த அருவிக்கு கீழதான் அம்மன் இருக்காள். அவள் பாதுகாப்பா(ள்) தம்பி. பயப்படாமல் போங்க” என்ற கொல்லன் கிட்டத்தட்ட இருவரையும் இழுத்துக்கொண்டு அருவியை கடந்திருந்தார்.
“இந்தப்பக்கம் சரிவில் இறங்கனும் அதி. ஸ்கிட் ஆகப்போகுது” என்ற வாசு பார்த்து கவனமாகவே நண்பர்களை அழைத்து வந்தான்.
அருவியின் கரையோரம் கிராமம்.
நுழைவு வாயிலில் கற்பாறைகளால் உருண்டு திரண்ட அமைப்பில் இருபக்கமும் காவல் சிலைகள் வைக்கப்பட்டிருக்க… அதன் தலைகளில் வயபில்லினால் கிரீடம் வைக்கப்பட்டிருந்தது.
தேவ்விற்கு அவ்விரு சிலையும் அரக்கர்கள் போல் தான் தெரிந்தனர்.
அனைத்து வீடுகளும் மூங்கில் குடில்கள். அத்தனை விஸ்த்திரமாக தனித்தனி அறைகளென வைத்து… குடில் சுற்றி மூங்கில் வேலிகள் அமைத்து தனித்தனி வில்லாக்கள் போல் பார்ப்பதற்கு அத்தனை நேர்த்தியாகவும், வரிசையாகவும் படிகள் அமைப்புகளில் அடுக்கடுக்காக இருந்தன. ஏழு அடுக்குகளில் உச்சி அடுக்கிற்கு கூட்டி வந்திருந்தான் வாசு.
“இதுதாங்க தலைவர் வீடு” என்று அக்குடிலின் திண்ணையில் கொல்லன் பைகளை வைத்திட…
“உங்க வீட்டுக்கு போகலாம் வாசு” என்று தேவ் சொல்ல…
“அவங்க ஐயா தான் தம்பி தலைவரு” என்று கொல்லன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து திடகாத்திரமான உடலமைப்பில், ஆஜானபாகுவானத் தோற்றத்தில் வெளிவந்தார் யர்ராமுண்டி. வாசுவின் தந்தை.
தீர்க்கமான முகம். அவரின் சாதாரணத் தோற்றமே அத்தனை கடுமையை காட்டியது.
அவரின் பார்வையே என்னிடம் மட்டுமல்ல என் இனத்திடமிருந்தும் தள்ளி நில் என்றது.
தேவ் எட்ட நின்றிடுவானா?