Skip to content
அத்தியாயம் 13
இரவில் தெரியாத எழிலெல்லாம் இளஞ்சூட்டு சூரியனின் ஒளியில் ரம்மியமாகக் கண்ணுக்கு விருந்தளித்தது.
பெரும் இரைச்சலில் அவ்விடத்திற்கு மொத்தமாய்… அழகுக்கு அழகு சேர்த்தது போல் கொட்டிக்கொண்டிருந்தது தேனோடை அருவி.
பார்க்கும் இடமெங்கும் பச்சைகள் கலந்த நிறங்கள் தான். மனதிற்கு அத்தனை இதமாய்.
சுவாசிக்கும் காற்றே ஒருவித நறுமணமாய்!
மேலிருந்து கொட்டும் அருவியை தலை உயர்த்தி விழிகள் விரித்து அதிசயத்து பார்த்த தேவ்வின் முகத்தில் பிரம்மிப்பு.
பரந்த பரப்பிலிருந்து கீழே விழும் அருவி சமதளமாக ஓடி, மீண்டும் அருவியாய் கொட்டியது.
இரண்டு அடுக்காய் கொட்டிக்கொண்டிருந்த நீரின் முதல் அருவியில் தான் தேனருவி அம்மன் வீற்றிருக்கிறாள். அம்மனுக்கு அருவி நீர் அபிஷேகமாய் கொட்டிக்கொண்டிருந்தது.
அந்நீர் சமதளமாக ஓடும் நீரின் மீது தான் இரவு நடந்து வந்தோம் என்பது, இப்போது தேவ்வுக்கு தெரிந்தது.
பாதையாக இருக்கும் நீர் மீண்டும் அருவியாய் ஆர்பரித்தது.
நிறமற்ற நீர் மனதிற்கு அத்தனை குளுமையை தந்தது.
வானமே தெரியாத அளவிற்கு ஓங்கி உயர்ந்த மரங்கள் கிளை பரப்பி, கிராமத்திற்கே குடை பிடித்த நின்றன.
“வாவ்… அமெசிங் வீவ்டா அதி. நைட்டு எதுவுமே தெரியல” என்ற ரகு, காணும் காட்சியில் சிலாகித்தவனாக அங்கிருந்த பாறை மீது ஏறினான்.
“இந்த ஊரில் கேர்ள்ஸ் இல்லை போலிருக்குடா அதி. எல்லாம் பாரு கட்டையும் வேல் கம்புமா பெரிய பெரிய உடம்போடு சுத்திட்டு இருக்காங்க” என்றான்.
“வாசு எங்கடா?”
ரகு கேட்டிட இரவின் இதமான மிச்சம் இப்போது தொக்கி நின்றது தேவ்விடம்.
‘யார்ராமுண்டி.’
தீர்க்கமான முகம். அவரின் சாதாரணத் தோற்றமே அத்தனை கடுமையை காட்டியது.
அவரின் பார்வையே என்னிடம் மட்டுமல்ல என் இனத்திடமிருந்தும் தள்ளி நில் என்றது.
தேவ் எட்ட நின்றிடுவானா?
வாசு தன்னுடைய தந்தைக்கு நண்பர்களை அறிமுகம் செய்து வைத்திட… இன்முகமாக வரவேற்று பேசினார்.
தோற்றத்திற்கும் குணத்திற்கும் சம்மந்தமில்லை என்பதைப் போலிருந்தது யர்ராவின் பேச்சு.
“உங்க இஷ்டம் போல எத்தனை நாள் வேணாலும் இருங்க தம்பி… ஆனால் இங்கிருக்க நாள் வரை எங்களுக்கு நம்பிக்கையானவங்களா, உண்மையா இருக்கணும்” என்றார். இதனை சொல்லும்போது மட்டும் பார்த்ததுமிருந்த இறுக்கம் அவரிடம்.
“அப்புறம்… நீங்க இந்த காலத்து புள்ளைங்க. எங்க வழக்கம் வேற. அதெல்லாம் பார்ப்பதோடு கடந்துடங்க” என்று அழுத்தமாகக் கூறிய யர்ராமுண்டி, “கரும்பாறை குடிலுக்கு கூட்டிட்டு போ மலையா(ன்) (மலைவாசன்). நீயும் அவங்க போறவரை அங்கவே தங்கிக்கோ” என்றார் வாசுவிடம். உத்தரவாக.
“சரிங்க ஐயா” என்ற வாசுவின் குரல் அத்தனை ஒலியடங்கி ஒலித்தது.
“நீங்க போங்க… சாப்பாடு கொடுத்து அனுப்புறேன். வயிறார சாப்பிடுங்க தம்பி” என்று அனுப்பி வைத்திருந்தார்.
“என்னடா இவரு வீட்டுக்குள்ளவே கூப்பிடல?” ரகு சடைப்பாகக் கேட்டிருந்தான்.
“நீங்க எங்க இனமில்லையே! அவரு உங்களை திண்ணையோடு அனுமதித்ததே என் ஃபிரணட்ஸ் அப்டிங்கிறதால தான். எனக்கே அவரா இவ்வளவு பொறுமையா பேசினாருன்னு ஆச்சரியமா இருக்கு” என்ற வாசு… பெருமூச்சினை வெளியேற்றினான்.
“சிலது இங்க இப்படித்தான் அதி. நீ தப்பா எடுத்துக்காத” என்ற வாசுவின் கைகளை அழுத்திக்கொடுத்தான் தேவ்.
“நீங்க இப்போ கெஸ்ட். அதனால் தான் இந்த மென்மையெல்லாம். அப்பவும் மறைமுகமாக எச்சரித்தார் பார்த்தீங்களா? அதுதான் யர்ராமுண்டி. முக்கியமா ரகு உனக்குத்தான். விளையாட்டுத்தனமா எதையும் பண்ணிடாத. முக்கியமா இங்கிருக்க பொண்ணுங்ககிட்ட பேசுவதோடு” என்று இடைவெளிவிட்ட வாசு, “பேசவே பேசாதே” என்று முடித்தான்.
ரகு அவனை முறைக்க…
“இங்கு கட்டுப்பாடுகள் விதிகள் அதிகம் ரகு. தண்டனை மிகக் கொடூரமாக இருக்கும்” என்றான்.
இவர்கள் இருவரும் தான் பேசிக்கொண்டு வந்தனர். தேவ் தன் மனம் தேடும் நபர் தென்பட மாட்டாளா என்று பார்வையை சுழன்றிக்கொண்டு நடந்தான்.
“இங்கு ஏழு மணிக்கெல்லாம் தூங்கப்போயிடுவாங்க அதி. அதான் எல்லா குடிலும் கதவடைச்சிருக்கு” என்ற வாசுவிடம்,
“இப்பவும் எப்படிடா இந்த குடிசையில் இருக்கீங்க?” எனக் கேட்டான் ரகு.
“குடிசை தான். ஆனால் எங்க வசதிக்கேற்ப எல்லாம் உள்ளயிருக்கு. கட்டிடம் உள்ள வந்த இயற்கைக்கு ஆபத்துன்னு அதை தவிர்த்திட்டோம். இங்கிருக்க எல்லா வசதியும் நாங்களே செய்து கொண்டது தான். இங்கிருக்க நாங்க அராசங்கத்தோட பார்வைக்கு தெரியவேயில்லை” என்றான். அவர்கள் தங்கும் குடிலும் வந்திருந்தது.
இந்து நிமிட நடை.
“இங்கென்னடா ஒரு யானை படுத்திருக்கு?” ரகு அரண்டுவிட்டான்.
குடிலின் பூட்டினை திறந்துகொண்டிருந்த வாசு பதறி எதை சொல்கிறானென்று பார்க்க… சிரித்துவிட்டான்.
“அது பாறைடா” என்று ரகுவின் தலையில் கொட்டினான்.
“இருட்டுல ஒரு யானை படுத்திருக்க மாதிரியே இருக்குடா” என்றான் நெஞ்சில் கை வைத்து.
“உள்ள வாங்கடா” என்று வாசு உள்ளழைக்க..
“லைட் போடுடா” என்றான் தேவ்.
பொத்தானை அழுத்தியதும் வெளிச்சம் பரவ, உள்ளிருக்கும் அனைத்தும் மூங்கிலால் ஆனதாகவே இருந்தது.
ரகு வாய் பிளந்திட்டான்.
“என்னடா வெளியில் குடிசை… உள்ள பங்களா அளவுக்கு இருக்கு” என்றான்.
“இங்கு கரெண்ட் எப்படி வாசு?” என்ற தேவ், அங்கிருந்த மூங்கில் கட்டிலில் அமர்ந்தான்.
“ஃபாரஸ்ட் ரோந்துக்கு மின்கம்பம் வைக்க மினி டிரான்ஸ்பார்மர் ஒன்னு இந்தப்பக்கமா ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்குடா. அதை நாங்க யூஸ் பண்ணிக்கிட்டோம்” என்றான்.
“திருட்டு கரெண்டா?” கேட்ட ரகுவின் வாயிலே வாசு குத்தியிருந்தான்.
“அந்த ஃபாரஸ்ட் ஆபீசர் கரெண்ட்டுக்குன்னு மன்த்லி மாமுல் வாங்கிட்டிருக்கான்” என்ற வாசு கொல்லன் உணவு கொண்டு வரவும்…
“பின்னால் ரெஸ்ட்ரூம் இருக்குடா” என்றான் நண்பர்களிடம்.
“எனக்கு ரொம்ப பசிக்குது மச்சி. நான் சீக்கிரம் குளிச்சிட்டு வந்துடுறேன். இவ்வளவு தூரம் நடந்து வந்தது அசதியா இருக்கு” என்ற ரகு முதலில் சென்றான்.
கொல்லன் உணவுகளை அங்கிருந்த மூங்கில் டீபாயின் மீது வைத்திட…
“பாப்பா எங்கண்ணா? ஆளே காணோம்” என்று தன் தங்கையை வினவினான்.
“இன்னைக்கு பௌர்ணமி தம்பி” என்று கொல்லன் சொல்ல, “ஹோ… மறந்துட்டேன்” என்ற வாசு, “பூஜை முடிஞ்சிருக்குமா? பாப்பாவை பார்க்கணுமே! இல்லைன்னா காலையில் சாமி ஆடிடுவாள்” என்றான்.
வாசு அவனது தங்கையை பற்றி பேசுவதை செவி வழி உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான் தேவதிரன்.
தேவ்விற்கு அந்த குரலை மீண்டும் எப்போது கேட்போம். அந்த முகத்தை எப்போது தரிசிப்போம் என்று பெரும் ஆவல்.
இதுவரை ஒருமுறை கூட வாசு தன் தங்கையை பற்றி நண்பர்களிடம் பேசியதில்லை. அதற்கு காரணம் அவர்களின் கட்டுப்பாடாக இருக்கலாம். அவர்கள் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளின் பெயரைக்கூட அடுத்தவர்கள் முன்னிலையில் சொல்லிட மாட்டார்கள்.
இன்று முதன் முதலாக தேவ் வாசுவின் அலைப்பேசியை எடுத்தது போல், ரகு ஓரிரு முறை தேனுவிடம் பேசியிருக்கிறான். அதனாலேயே தேவ்வினை ரகு என்று நினைத்து பேசியிருந்தாள் தேனு.
“இன்னைக்கு நிலா முளைக்க தமதமாகிப்போச்சு வாசு தம்பி. பூஜை தமதமாத்தான் தொடங்குச்சு. முடிய நேரமாகும். நீங்க வந்துட்டால் உங்களை தூங்க சொல்ல சொல்லி பாப்பா சொல்லிட்டுத்தான் போச்சு” என்ற கொல்லன் சென்றிருந்தார்.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த ஊர் பெண்கள், சிறுமி முதல் வயதானவர் வரை அனைவரும்… அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் மலைக்கு இன்னும் மேலுள்ள கருவீரன் கோவிலில் பொங்கல் வைத்து படைத்து வணங்குவர். கருவீரன் தேனருவி தெய்வத்தால் அவ்வூரை காக்க நியமித்திருக்கும் காவல் தெய்வம். பெண்கள் அங்கிருந்து தீபமேற்றி வந்து அருவியில் வீற்றிருக்கும் தேனருவி அம்மனுக்கு முன் நீரில் விடுவது வழக்கம். இதில் ஆண்கள் கலந்துகொள்ளமாட்டார்கள். தவறி சென்றுவிட்டால் கடுமையான தண்டனை அளிக்கப்படும்.
இம்மக்களுக்கு அந்த தெய்வம் மட்டுமல்ல அனைத்து பெண்களும் தெய்வம் தான். அதே சமயம் தவறு செய்துவிட்டால் தெய்வமென்றும் பாராது மாய்த்துவிடுவர்.
உணவினை முடித்து மூவரும் படுத்துவிட்டனர். ரகு முதலில் உறங்கிட, வாசுவும் தேவ்வும் தான் பேசிக்கொண்டிருந்தனர்.
“அப்பா முன்னாடி ஜாக்கிரதையா இருக்கணும் அதி. சின்ன சின்ன விஷயம் கூட சரியா இருக்கணும் நினைப்பார். கம்பி வேலி போட்டிருக்க இடம் தவிர்த்து எங்க வேணாலும் போகலாம். இருட்டுவதற்குள் வந்திடணும்” என்ற வாசு, “மேல இருக்க கோவிலுக்கு ஆண்கள் போகக்கூடாது. ரகு துடுக்கா ஏதும் பண்ணிடுவான். கவனம் வச்சிக்கோ அவன் மேல்.
“அப்புறம் இங்க மொபைல் சிக்னல் சரியா வராது. கீழ போகனும், இல்லைன்னா ரேஞ்சர் ஆபீசர் ரூம் கொஞ்ச தூரத்தில் எதிர்பக்கமா இருக்கு. அங்க போனால் கிடைக்கும். அப்பா அம்மாக்கு கால் பண்ணனும்ன்னா அங்கு போய் பேசிட்டுவா” என்று அங்கிருக்கும் சூழலை விளக்கிக் கொண்டிருந்தான்.
தேவ் வாசுவின் பேச்சிற்கு செவி மடுத்துக்கொண்டிருந்தாலும், அவனின் எண்ணம் முழுக்க வாசுவின் தங்கை மீது தான்.
ஏனோ அவனே அறியாது தன்னைப்போல் அவனின் மனம் அவளை கண்டுவிட தவித்தது. ஏனிந்த உணர்வென்று அவனுக்கே தெரியவில்லை. குரல் இனிமையாக இருந்ததால், முகம் பார்த்திட சிறு ஆவல். ஒருமுறை பார்த்துவிட்டாள் சரியாகிப்போகும் என்று எண்ணிக்கொண்டான்.
சட்டென்று அருவி சத்தத்துக்கு இணையாக பறையோசை நான்கு திசைகளிலும் எதிரொலித்தது.
சத்தத்தில் ரகு புரண்டு படுக்க… அவனின் மீது கையிட்டு ஒருபக்கமாக திரும்பி படுத்த தேவ்… “என்னடா இந்நேரத்தில் மோள சத்தம்?” எனக் கேட்டான்.
“அருவியிலிருக்க அம்மனுக்கு விளக்கு விடறாங்க அதி… அதான் பறையடிக்கிறாங்க. ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிடும்” என்றான்.
வாசு சொல்லியது போன்று சில நிமிடங்களில் இடம் அமைதியாகியிருந்தது. அருவி சத்தம் இப்போது பழகியிருக்க… அது தனியாக தெரியவில்லை.
“வாசுண்ணா…! அண்ணா!”
தான் மீண்டும் கேட்க தவித்த குரல் திடீரென வாசுவை அழைத்து ஒலிக்கவும், தேவ்வின் உடலில் அதிர்வு. வேகமாக எழுந்து அமர்ந்தான்.
அவனின் வேகம் கண்டு, திடீரென ஒலித்த விளிப்பால் பயந்துட்டான் போலென்று எண்ணிய வாசு…
“என் தங்கச்சிடா அதி. நீ படு” என்று எழுந்து சென்று கதவினை திறந்தான்.
வாசு இதுநாள் வரை அவளைப்பற்றி பேசியதில்லை என்பதாலும், அத்தோடு இங்கு வந்ததுமே பெண்கள் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடானவர்கள் என்பது தெரிந்ததாலும்… வாசுவாக அவனின் தங்கையை அறிமுகம் செய்து வைப்பானென்று தேவ்விற்கு தோன்றவில்லை.
ஆதலால் சன்னல் வழி அவளின் முகம் பார்க்க முடிகிறதா என எட்டிப்பார்த்தான்.
முழுதாய் அவளை மறைத்தபடி நின்றிருந்தான் வாசு.
“அடேய்…” தேவ்வின் தவிப்பிற்கு வாசுவின் மீது இக்கணம் எரிச்சலாக வந்தது.
இருவரும் பேசிக்கொள்வது மட்டும் தெளிவாகக் கேட்டது.
“ஏன் வாசுண்ணா இங்க வந்துட்டிங்க?”
“ஃபிரண்ட்ஸ் வந்திருக்காங்கடா! அவங்களை எப்படி தனியா விடுறது?” என்ற வாசு, “நேத்தே வந்துட்டியா? எத்தனை நாள் லீவ்?” எனக் கேட்டான்.
‘ஹோ அப்போ இவளும் வெளியூரில் தான் படிக்கிறாளா?’ வாசுவின் கேள்வியில் தேவ்வாக யூகித்தான்.
‘நேம் என்னன்னு தெரியலையே! இவனும் எப்பவும் பாப்பான்னு தான் சொல்லியிருக்கான்’ என நினைத்த தேவ்விற்கே தன்னைக் குறித்து ஆச்சரியமாக இருந்தது.
‘நானா இப்படி ஒரு பெண்ணின் குரல் மட்டும் வைத்து, அவளை காண, அவளைப்பற்றி தெரிந்திட ஆர்வம் கொள்கிறேன்’ என்று தன்னைக் குறித்தே ஆராய்வில் இறங்கிவிட்டான்.
வாசு கேட்டதற்கு பதில் வழங்கிய தேனு,
“ரகு அண்ணாவா?” எனக் கேட்டாள். வந்திருப்பது யாரென்று அறியும் பொருட்டு.
“ஹ்ம்ம்… ரகு, அதி” என்று வாசு சொல்ல,
‘என்னையும் அண்ணா சொல்லிடாதடி’ என்று தேவ்வின் மனம் அலறியது.
அந்த அலறல் தேவ்விற்கு அவனின் மனதை எடுத்துக்காட்டியது.
‘எப்படி இது சாத்தியம்?’ தனக்குள்ளே வினா எழுப்பியவனாக, மீண்டும் மீண்டும் தன் மனம் குறித்த ஆராய்ச்சியில் மூழ்கினான்.
‘பார்த்தே இராத பெண். என்னை அண்ணா என்று விளித்தால் என்ன பிரச்சனை எனக்கு? ஏனிந்த பதட்டம்? என்ன உணர்விது?’ குழம்பி நின்றான்.
“சரிண்ணா கிளம்புறேன்” என்று திரும்பியவள், தன் நெற்றியை தட்டியவளாக…
“பொங்கல் எடுத்துக்கோங்க” என்று கையில் இலையில் சிறிதளவு இருந்த பொங்கலை வாசுவின் முன் நீட்டினாள்.
“இந்த மாதம் காவலுக்கு நெடுமல்லி அண்ணன் தான். அவள் பொங்கல் பானை தான் முதலில் பொங்குச்சு” என்றாள்.
அவ்வூரில் கருவீரனுக்கு பொங்கல் வைக்கும்போது, யாருடைய பானை முதலில் பொங்குகிறதோ அவ்வீட்டு ஆண் தான் அந்த மாதம் முழுக்க இரவில் ஊரை காவல் காக்க வேண்டும். (கூர்க்கா மாதிரி) அந்த தகவலைத்தான் தேனு வாசுவிடம் பகிர்ந்தாள்.
“சரிடா நீ கிளம்பு. இருட்டில் பார்த்துப்போ. காலையில் வீட்டுக்கு வறேன்” என்று வாசு தங்கையை அனுப்பி வைக்க…
“அண்ணா பொங்கலை நீ மட்டும் தான் சாப்பிடணும். மறந்தும் உன் பிரண்ட்ஸுக்கு கொடுத்துடாதே!” என்றுவிட்டு போனாள்.
‘ஏன் இவங்க வைத்த பொங்கலை நாங்க சாப்பிடக்கூடாதா(ம்)மா!’ என்று சிறு கோபம் கொண்ட தேவ்விற்கு, அவள் முகம் காணும் வாய்ப்பு கிட்டாது, செல்லும் அவளின் பின் உருவம் தெரிந்தது.
தேவ்வின் விழிகள் இமைக்க மறந்து அகல விரிந்தது.
அருவியென கார் கூந்தல் அவளின் பின்னுடலை மறைத்திருந்தது. மயில் தொகையென முதுகில் விரிந்து படர்ந்திருந்த குழல் அத்தனை நீளம் மற்றும் அடர்த்தி.
‘மோகினிக்கு கூட இவ்வளவு நீளமிருக்காது… ‘ என்று வியந்து பார்த்தான்.
வாசு வெளியில் நின்றே பொங்கலை சாப்பிட்டுவிட்டு, அருவியிலிருந்து பிரிந்து சிறு வாய்க்கால் போல் குடிலுக்கு அருகில் ஓடும் நீரில் கையினை கழுவி உள்ளே சென்று கதவடைத்தான்.
“எங்களுக்குல்லாம் பொங்கல் இல்லையா மச்சான்?” தேவ்வின் குரலில் என்ன உணர்வென்று வாசுவால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“பாப்பா சொன்னது கேட்டுருச்சா?” என்று தேவ்வின் அருகில் வந்து அமர்ந்த வாசு, “இந்த அம்மன் தான் எங்க இனத்தோட காவல் தெய்வம். அவளுக்கே காவல் இப்போ பொங்கல் வச்சிட்டு வந்த கருவீரன் சாமி. ரொம்ப ஆக்ரோஷமான கடவுள். அவருக்குன்னு வைக்கிற படையலை வெளி ஆட்கள் சாப்பிடக்கூடாது. அது அவருக்கு பிடிக்காதாம்” என்று விளக்கம் கொடுத்தான் வாசு.
“பிடிக்காதுன்னு அந்த சாமியே வந்ததை சொல்லுச்சா?” எனக் கேட்ட தேவ், “இதையெல்லாம் நீயும் நம்புறியா?” என்றான்.
“மூட நம்பிக்கைன்னு புத்திக்கு புரியுது. ஆனால் நம்பித்தான் ஆகணும். இங்கு மாறாத பல விஷயங்களில் இதுவும் ஒன்னு. வேத்து ஆளுங்க படையல் வச்சா கோபம் வந்து அவங்களை சாமி எதுவும் செய்திடுமாம். பல தலைமுறைக்கு முன்னால் அப்படி பல துர் மரணங்கள் அந்த கோவில் வாசலில் நடந்திருக்குன்னு கதை சொல்றாங்க எங்க முன்னோர்கள். அதை இப்போ இருக்கவங்களும் நம்புறாங்க. படையல் வைக்கிறது மருவி, இப்போ சாப்பிடவும் பயந்து எங்க மக்கள் தவிர்த்து யாரும் அந்தப்பக்கம் போறது இல்லை” என்றான்.
“ம்ம்ம்… எல்லாமே இங்கு ஏதோவொரு நம்பிக்கையில் தான் நடக்குதுல” என்ற தேவ்… வாசுவிடம் கதை கேட்டபடி, புதிதாக மனதை குடையும் புரியா உணர்வோடு உறங்கியிருந்தான்.
அந்த உணர்வின் இதம் மிச்சமாய் இப்போதும் நெஞ்சில் சாரலாய். தன்னையறியாது புன்னகை சிந்திக் கொண்டிருந்தான்.
பாறையின் மீது நின்று கீழே பார்த்துக்கொண்டிருந்த ரகு…
“இங்கு அருவி பல அடுக்காய் நிறைய கிளை அருவிகள் மாதிரி இருக்கு அதி. இந்த வீவ்… மனமே லேசானது போலிருக்கு” என்றான்.
“வாசு தங்கச்சி நேம் என்னடா?”
எதுக்கு உனக்கு எனும் விதமாக ரகு தேவ்வை அதிர்ந்து பார்த்தான்.
“சும்மா தெரிஞ்சிக்க…” என்று தோள் குலுக்கி குடிலுக்குள் சென்றான் தேவ்.
ரகுவும் அவன் சொல்லியதை நம்பி அதனை ஆழமாக எடுத்துக்கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் வாசு ஒரு பெண்மணியோடு அங்கு வந்தான்.
“அம்மாடா அதி” என்றவன், தனது தாயை இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.
“ராத்திரியே வர முடியல. எல்லாம் வசதிபடுதாப்பா” என்று அக்கறையாய் கேட்டவர், இருவருக்கும் மரத்தாலான குவளையில் காபி நிற பானத்தை சூடாக ஊற்றி ஆவி பறக்க கொடுத்தார்.
“பனங்கிழங்கு பானம். ரொம்ப ருசியா இருக்கும். குடிங்க” என்றவர், “அவரு எதாவது கட்டுப்பாடு அது இதுன்னு சொல்லிருப்பாரு. கண்டுக்காதீங்க. பிடித்த மாதிரி இருங்க. என்னனாலும் என்கிட்ட கேளுங்க” என்றவர் “இவன் தான் இன்னமும் அவன் அய்யனுக்கு பயந்துட்டு இருக்கான்” என்றார்.
தேவ் அவருடன் சகஜமாக பேசிட, ரகுவும் சில நிமிடங்களில் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
“காலை உணவை பாப்பாகிட்ட கொடுத்துவிடுறேன். சாப்பிடுங்க” என்றவர் சென்றிட…
“ஆண்ட்டி சுவீட் ல?” என்றான் ரகு. தேவ்வும் ஆமோதித்தான்.
“நான் அப்படியே ஒரு வாக் போயிட்டு வறேன்” என்று தேவ் மெல்ல அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து கீழிறங்கினான்.
எங்கும் எழில் நிறைந்திருந்தது. ஒவ்வொன்றும் அழகாய் மிளிர்ந்தது.
இயற்கையை ரசித்துக்கொண்டே வெகு தொலைவு வந்துவிட்டான் போலும்…
நீரோடு சலங்கை ஒலியும் சேர்ந்து செவி நுழைய, தான் நின்றிருந்த இடத்திலிருந்து சுற்றி பார்த்தான்.
தேவ்வின் கண்களில் விழுந்து இதயத்தை புரட்டிப்போட்டது ஒரு ஜோடி பாதங்கள்.
Post Views: 0
error: Content is protected !!