தித்திக்கும் தேனருவி 14

அத்தியாயம் 14

கொட்டும் சுனையின் ஓசைக்கு நடுவே மெல்லிய கீதமென ஒலித்தது நீரில் நடக்கும் இரு பாதங்களின் கொலுசின் சத்தம்.

அடர்ந்த மரங்கள் மற்றும் செடிகளுக்கு நடுவில் யாரென்று சரியாக தெரியவில்லை என்றாலும், புதர்களுக்கு நடுவில் கீற்று போன்று தெரிந்த இடைவெளியில் பாறைகளை மூழ்கடித்து ஓடும் நீரின் மீது தண்ணீரை உதைத்து நடந்த பால் வண்ண பாதங்கள் நன்றாகவே தெரிந்தது. அணிந்திருந்த தங்க நிற கொலுசு அத்தனை எடுப்பாய்.

தேவதிரனின் இதயத்தில் அப்பாதங்கள் நொடியில் தடம் பதித்தன. ஆழமாய். அழுத்தமாய்.

தேவ்வின் உள்ளுணர்வு அரிதியிட்டு சொல்லியது அவன் காணத் துடிக்கும் பேதையவள் என்று.

பாதங்கள் கண்ணிலிருந்து மறைந்திட சற்று தள்ளி வந்து பார்த்தான்.

இப்போது அவள் அங்கிருந்த கல்லின் மீது பின் உருவம் காட்டி அமர்ந்திருக்க… தேவ்வின் விழிகள் தன்னைப்போல் அவளின் பாதங்களில் சரணடைந்தது.

வரும் வழியில் தெரிந்த அழகையெல்லாம் தன்னுடைய அலைப்பேசியில் பதிந்து கொண்டு வந்தவன்… தன் நெஞ்சத்தில் தன்னை கேட்காது அடி வைத்திட்ட பஞ்சு பாதங்களையும் புகைப்படம் எடுத்திருந்தான். இருக்கும் சூழலின் பின்னணியில்.

பாவாடை சற்று மேலேறியிருக்க… கணுக்கால் தெரியும் பாதம். நீரில் முங்கி நனைந்திருக்க… தண்ணீரை தொட்டும் தொடாது படிந்த பாறையின் மீது ஒரு பாதம் அழுந்த பதிந்திருக்க, அதன் மேல் மற்றொரு பாதம் வீற்றிருந்தது. போட்டிருந்த கொலுசு சூரிய ஒளியில் மின்னியது. ஒரு கை நீரினை அள்ளித் தெளிக்க உயர பறக்கும் நீர்த்திவலைகள்.

நீர் நனையும் இரு பாதமும். நீரை அள்ளித் தெளிக்கும் ஒரு கையும் மட்டுமே புகைப்படத்தில் நிழலாய் சேமித்ததோடு, தன் அகமும் நிரப்பியிருந்தான்.

தேவ் தான் நின்றிருக்கும் இடத்திற்கு எதிர்புறம் சென்றால் தான் அவளின் முகம் பார்த்திட முடியும். ஏனோ அவனுக்கு அவளே தன் முகம் காட்டுவாளென்று உள்ளுக்குள் ஒரு குமுறல்.

“அக்கா நீந்தி வாங்க… சுனை சீரா கொட்டுது. நல்லாயிருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் போனால் நீர் வரத்து அதிகமாகிடும்” என்று ஒரு பெண் அழைத்திட… அக்குரலில் தான் சுற்றுப்புறத்தை கவனித்தான் தேவ்.

அவன் ரசித்த பாதமலர்களுக்கு சொந்தக்காரியின் அருகில் நான்கு இளம் பெண்கள் அமர்ந்து கூடை கூடையாக எதையோ நீரில் கழுவிக் கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு கிழங்கு வகையென்று தெரிந்தாலும், என்ன கிழங்கென்று தேவ்விற்கு தெரியவில்லை.

அவர்களுக்கு அருகில் சற்று தள்ளி, இரு பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்க…

உச்சியிலிருந்து கொட்டும் சுனை அருவியில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

அவள் தான் அப்பெண்ணை அழைத்தது.

‘இங்க யாரும் நேம் சொல்லி அவளை அழைக்கமாட்டங்களா?’ தன் மனதை தாக்கும் பெண்ணின் பெயர் கூட அறிந்துகொள்ள முடியவில்லையே என்று தேவ்வுக்கு கடுப்பாக வந்தது.

தேவ் அவள் முகம் காட்டிட மாட்டாளா என்று ஆவலாக… கண்ணில் ஏக்கமாக பார்த்திருக்க…

சட்டென்று தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நீரில் பாய்ந்தவள், முன்னோக்கி நீந்தி தன்னை அழைத்த பெண்ணின் அருகில் சென்றவள், அருவி நீரில் மறைந்தாள்.

தேவ்வின் கண்ணில் தவிப்பு கூடியது. இதயம் வேகமாகத் துடித்தது.

‘ஒருவேளை இந்த பெண் நீ ரசித்த குரலுக்கு சொந்தக்காரியாக, வாசுவின் தங்கையாக இல்லாமல் இருந்தால்?’ என்று அவனின் மனம் கேள்வியாய் தொக்கி நிற்க…

தன் நெஞ்சத்தில் உள்ளங்கை வைத்து மெல்ல தட்டிக்கொடுத்த தேவ்…

“இவள் தான் என்னவள்” என்று தன்னைப்போல் சொல்லியிருந்தான். இரு வினாடிகளுக்கு பின் தான், தான் சொல்லிய வார்த்தையின் பொருள் புரிந்து… அவள் தனக்குள் மொத்தமாய் நிறைந்துவிட்டாள் என்று அகத்தால் உணர்ந்தான்.

குளுமையான சூழலில் தேவ்வின் தேகம் மேலும் சில்லிட்டது.

இதழோடு விழிகளும் நீண்டு மலர்ந்தன.

‘உன் முகம் பார்க்கல. உன் பெயர் தெரியல. ஆனால் மொத்தமா உள்ளுக்குள் என்னை சிறைபிடிச்சிட்ட’ என்று நினைத்த தேவ்வின் கரு விழிகள் அசைய மறுத்து உறைந்து நின்றது தன்னவளின் முகம் கண்டு.

வெள்ளியை உருக்கி ஓடவிட்டது போல், கரும்பாறை விளிம்பில் இடி முழக்கமாய் பாறைகளின் மடியில் கொட்டி ஆர்ப்பரிக்கும் அருவியின் நடுவே ஒளி கீற்றாய் பால் வண்ண முகம்.

கொட்டும் நீரில் நனைந்து கொண்டிருந்த முகம், நீரை விட்டு முகத்தை வெளியில் பளிங்காய் காட்டிட தேவ்வின் இதயத்தில் தாளம் தப்பியது.

செந்நிற முகம் நீரில் பளிங்காய் மின்னிட… தேவ்வின் இதயத்தில் அம்பு தைத்தது.

முண்டு அமைப்பில் புடவை கட்டியிருந்தாள். நனைந்த ஆடை தேக எழிலை வரிவடிவமாகக் காட்டிட… தன் இளமை சிலிர்த்து தனக்குள் துடித்து அடங்கினான்.

தேவ்வின் கண்களுக்கு தேவதையாக மிளிர்ந்தாள்.

அருவியின் ஆர்பரிப்பை விஞ்சியது தேவ்வின் இதய ஆர்பரிப்பு.

காலையில் அவன் ரசித்திட்ட அருவிக்கு இணையாக அவனவள் எழிலாய் தெரிந்திட… அவனது இதழ்கள் அருவி என்று முணுமுணுத்தது.

அதே சமயம்… கிழங்கு அலசிக் கொண்டிருந்த பெண்ணில் ஒருத்தி…

“தேனு… தேனு… அடியேய் தேனருவி” என்று கத்தி விளித்திட…

தேவ்வின் செவிகள் சுக ராகமாக தன்னவளின் பெயரை தன் மனம் உச்சரித்த பெயரின் சிலிர்ப்போடு உள்வாங்கியது.

“தேனருவி… என்னோட அருவி.” தனி தேஜஸாய் ஒளிர்ந்தது தேவ்வின் முகம்.

“சொல்லுங்க முத்தாமணி அக்கா.” அருவி சாரலில் அவனது அருவியின் குரல் தித்திப்பாய் அவனை சேர்ந்தது.

‘பெயருக்கு ஏற்ற மாதிரி குரல் இனிப்பா இருக்கு. பைத்தியம் பிடிக்குது.’ உள்ளம் அரற்றினான்.

“கிழங்கு கழுவியாச்சு. சந்தைக்கு அனுப்பணும். நாங்க கிளம்புறோம். வெரசா வந்து சேருங்க” என்று மற்றவர்கள் கிளம்பிவிட… தேனுவும் அவளுடனான பெண்ணும் மட்டும் நீரில் நின்றுகொண்டிருந்தனர்.

கிளம்பிய பெண்கள் தேவ் நின்று கொண்டிருந்த பக்கம் கூடைகளைத் தூக்கிக்கொண்டு வர, தேவ் மறு பக்கம் திரும்பி நின்றான்.

நீரிலிருந்து பாதைக்கு அருகில் வந்து பெண்கள் கூடையை வைத்துக்கொண்டு பாறையை தாண்ட முடியாது கடினப்பட…

ஒரு பெண் தேவ்வை பார்த்து, “தம்பி” என்று அழைத்தாள்.

அப்போதுதான் அவர்களை பார்ப்பதுபோல் திரும்பிய தேவ்… அவர்கள் கேட்பதற்கு முன்பே,

“ஹெல்ப் பண்ணட்டுமா?” எனக் கேட்டான்.

“அதுக்குத்தான் கூப்பிட்டேன்” என்று அப்பெண் சொல்ல…

நீரில் கால் வைத்து நான்கைந்து கூடைகளை எளிதாக கரை தாண்டி பாதையில் வைத்தான்.

“நன்றி தம்பி” முத்தாமணி சொல்லிட, புன்னகையை பிரதிபலித்தான்.

“ஆளு புதுசா இருக்கே!” என்று மற்றொரு பெண் யோசனையாய் இழுத்திட…

“வாசுண்ணா கூட வந்த அவுங்க நட்பு வட்டம் நீங்கதானா?” எனக் கேட்டிருந்தாள் இன்னொரு பெண்.

தேவ் ஆமென்று தலையசைத்திட…

“இதுக்கு மேல போவாதீங்க தம்பி. கருவீரன் கோவிலிருக்கு. ஆண்கள் உள்ள போகக்கூடாது” என்று முத்தாமணி சொல்லி மற்றவர்களுடன் நகர…

“என்ன கிழங்கிதுக்கா? நான் பார்த்தது இல்லை” என்றான் தேவ். தேவ்வுக்கு, அருவியிலிருந்து கிளம்பிவிட்ட தேனுவின் முகத்தை அருகில் பார்த்திட கொள்ளை ஆசை. தான் மட்டும் தனித்து நின்றிருப்பது என்னவோபோலிருக்க, அதுவும் வாசு அத்தனை கட்டுப்பாடாக பலவற்றை சொல்லியிருக்க… அவள் அருகில் வரும்வரை இவர்கள் உடனிருந்தால் மற்றவர்களுக்கு தவறாக தெரியாதென அவர்களை நிறுத்தி வைக்க பேச்சை நீட்டித்தான்.

“நீங்க வாசு தம்பி நட்புன்னா… டாக்டர் தானே?” என்று வினவிய முத்தா அக்கா,

தேவ் ஆமென்றதும், “அப்புறம் இந்த கிழங்கு தெரியல சொல்றீங்க?” எனக் கேட்டார்.

‘இந்த கிழங்குக்கும் மருத்துவத்துக்கும் என்ன சம்மந்தம்’ என்று தேவ் யோசிக்கும் போதே அவர்களை நெருங்கிவிட்ட தேனு…

“இது முடவாட்டுக்கால். நாலாயிரம் நோய்களை சரி செய்யுமாம். எங்க முன்னோர்கள் எழுதிய பனையோலை மருத்துவக் குறிப்பில் இருக்கு. இந்த கிழங்கு சாப்பிட்டால் நூறு வயதிலும் ஒலிம்பிக்கில் ஓடலாம். எலும்பு, மூட்டு சம்மந்தமான எந்த பிரச்சனையும் வராது. அதான் மருத்துவம் படித்த உங்களுக்கு இந்த விளக்கம் தெரியலையேன்னு கேட்குறாங்க டாக்டரே!” என்று விளக்கமாகக் கூறினாள் தேனு.

இமைகள் இமைக்க மறந்து நின்றிருந்தான் தேவ். அவன் நகர்ந்தால் தான் தேனு கரையில் கால் வைத்திட முடியும். அத்தனை அருகில் தன்னவளின் முகம் பார்த்து, அவளின் குரல் கேட்டவன், அசையவும் மறந்து மூச்சு முட்டியவனாக உறைந்திருந்தான்.

“டாக்டர்.”

பெயர் தெரியாததால் அப்படி அழைக்கிறாளென்று மற்றவர்கள் போல் தேவ்வும் நினைத்தான்.

“ஹான்…”

“நகருங்க” என்ற தேனு கல்லின் மீதிருந்த பாதம் நகர்த்த வழுக்கிவிட்டது. பின் விழ இருந்தவளின் கரத்தினை பட்டென்று பிடித்திருந்தான். முன்னிருந்த தேவ்.

தேவ்விற்குள் பாய்ந்திட்ட மின்சாரம் தேனுவிற்குள்ளும் கடத்தப்பட்டது.

இருவரின் விழிகள் அழுத்தமாக மற்றவரின் முகத்தில் நிலைகுத்தி நிற்க… பார்வையால் மனங்கள் பகிரப்பட்டடன.

“தேனுக்கா… அவங்களாம் போறாங்க.”

தன்னுடன் வந்த பெண்ணின் சத்தத்தில் நிகழ் மீண்ட தேனு… நிதானமாகவே தேவ்வின் கரத்திலிருந்து தன் கரத்தை விடுவித்தாள்.

தேனுவை கடந்து அப்பெண் முன் சென்று தேவ்வினை தாண்டி செல்ல… தேனு மெதுவாக தேவ்வின் விழிகளை சந்தித்தவாறு கடக்க… அவளின் தோள் அவனின் நெஞ்சம் உரசியது.

“இப்போ விட்ட கையை வாழ்க்கை முழுக்க விடக்கூடாது தோணுது. வரம் கிடைக்குமா?” பட்டென்று கேட்டுவிட்டான். காதலை மறைமுகமாக சொல்லிவிட்டான்.

செவி தீண்டிய மெல்லொலி வார்த்தையில் அகம் அதிர்ந்தவளுள் அத்தனை இன்பம்.

தேவ்வின் நிழலுருவை கண்டு விருப்பம் கொண்டிருப்பவளுக்கு… அவனது இவ்வார்த்தைகள் எப்படி இருக்கிறதாம்?

அவளின் அதரங்கள் மலர, கீழாநெல்லி விழிகள் பனித்துப்போனது.

தன்னவளின் கண்கள் கரை நிற்கும் துளி நீரில் பதறிய தேவ்…

“ஒரு நாளுக்கே உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது. எனக்குள்ளவே பொத்தி வச்சிக்க முடியல. உன் குரலே பைத்தியம் பிடிக்கும் போலிருக்கு. அதான் டக்குன்னு சொல்லிட்டேன்” என்றான்.

“என்னடா மச்சான் இவ்வளவு தூரம் வந்துட்ட?” திடீரென கேட்ட வாசுவின் குரலில் இருவருக்குள்ளும் பதட்டம் உண்டானது.

“ஹான் வாசு…” என்று தேவ் தடுமாற, தங்கையை கவனித்த வாசு,

“என்னடாம்மா இங்க?” எனக் கேட்டான்.

“முத்தாமணி அக்காவோடு கிழங்கு பிடுங்க வந்தேன் வாசுண்ணா. அதோ போறாங்க” என்று வாசு வந்த திசைக்கு எதிர்திசை கை காண்பித்தாள். அவர்கள் பல அடிகள் முன் சென்று கொண்டிருந்தனர்.

“சரிடா… வீட்டுக்கு போ. ஈர தலையோட நின்னுட்டு இருக்க. தண்ணி சொட்டுது பார். சாம்பிராணி போட்டு காய விடு. இல்லைன்னா நாலு நாள் ஆனாலும் இருக்கிற நீளத்துக்கு காயாது” என்று கூறினான்.

“அண்ணா இவங்க?” என்று தேனு தேவ்வை பார்க்க…

‘தான் சொல்லியதை சொல்லப்போகிறாள் போல’ என தேவ் அரண்டுவிட்டான்.

ஆனால் வாசுவோ… இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான்.

வாசு தேவ்வின் பெயர் சொல்ல… தேனு நொடியில் தனக்குள் பலமுறை சொல்லி பார்த்துவிட்டாள்.

‘தேவதிரன்… தேவ்… அதி… அதிரன்… தீரன்.’

“சரி வாங்க போகலாம். அங்க ரகு சாப்பிடாமல் வெயிட் பண்ணிட்டு இருக்கான்” என்று வாசு முன் செல்ல… தேவ்வால் தன் பெயரை உச்சரித்துப் பார்க்கிறாள் என்று உணர முடிந்தது.

“திருமதி.தேனருவி தேவதிரன்” என்று அவளின் காதில் குனிந்து சத்தமின்றி சொல்லிவிட்டு ஓடினான் தேவ்.

ஆயிரம் வண்ணத்துப்பூச்சிக்கள் இதயத்தை ஊடுருவிய இதம் அனுபவித்தாள். தேவ் சொல்லிச்சென்ற பெயரில்.

‘இதன் தாக்கம் தான் ஆறு வருடங்கள் கடந்தும்… அன்று தேனுவை உணர்வுகளால் வதைத்தது.’

“பாப்பா…” சமைந்து நின்றவள் வாசுவின் குரலில் அவர்களைத் தொடர்ந்தாள்.

************

ரகு தேவ்வை குறுகுறுவென்று பார்த்து வைத்தான்.

“என்னடா புதுசா பாக்குற மாதிரி பாக்குற?” தேவ் ரகுவின் விலாவிலே இடித்தான்.

“இன்னைக்கு புதுசாத்தான் தெரியுற அதி” என்றான் ரகு.

“அம்மா வீட்டுக்கு கூப்பிட்டாங்கடா!” வாசு அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

“உங்க அப்பா எதுவும் சொல்லப்போறார்டா!” ரகு தான் பயந்து கூறினான். காலையில் அவன் பார்த்த காட்சி அப்படி. அதனை தேவ்விற்கு கூறினான்.

“எவனோ மூலிகை பறிக்க அந்த அம்மன் இருக்கிற அருவிக்கு மேல போயிருக்கான் மச்சான். இந்த ஊர் இல்லை போல. மரத்தில் கட்டிவைத்து அடி வெளுத்திட்டார். நாம் நடந்து வந்தோமே தண்ணி, அதுக்கு மேலிருக்க அருவியில் அம்மன் இருக்குன்னு, அந்த அருவிக்கு மேல யாரும் போகமாட்டாங்களாம்” என்று சிறு அச்சத்தோடு சொன்னான் ரகு.

“நம்ம கால் பட்ட தண்ணீ சாமி மேல விழுகு(ம்)ன்னு யாரும் அந்த அருவிக்கு மேல போகமாட்டோம் அதி. எல்லாம் இரண்டாவது அருவிக்கு கீழத்தான் பயன்படுத்துவோம். இவன் புதுசு. போயிட்டான். தெரிந்து தண்டனை கொடுத்து தூரதிட்டாங்க” என்று வாசு சாதரணமாகக் கூறினான்.

வாசுவிற்கு இதெல்லாம் பழக்கம். எளிதாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் தேவ்விற்கு. கேட்டதே மனதை பிசைந்தது.

“இது தப்பு வாசு.”

“கடந்து போக முயற்சி பண்ணு அதி. இங்கு எதையும் மாற்ற முடியாது” என்றான் வாசு.

அவன் தான் பலமுறை முயன்று தோற்றிருக்கின்றானே. அவனது பிடிவாதத்தால் தான்… இந்த தேனோடை மருவத்தை தாண்டி மேகமலைக்கு கூட செல்லாத தன்னுடைய இன பெண்களுக்கு நடுவில் தங்கையை படிக்கவே வெளியில் கொண்டு வந்திருந்தான். தேனுவை தொடர்ந்து ஒவ்வொருவராக கொண்டு வந்திடலாமென்று வாசு நினைத்திருக்க… தேனு மட்டுமே விதிவிலக்காய் அமைந்துவிட்டாள். அவளோடு அந்த மாற்றம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

பள்ளி படிப்பிற்கே மேகமலை கிரமாத்திற்குத்தான் செல்ல வேண்டும். அதுவும் பெண் பிள்ளைகள் பூப்பெய்தி விட்டால் அதற்கும் தடை.

அந்த தடையை தேனுவின் விஷயத்தில் வாசு உடைத்திருந்தான்.

அதற்கே யர்ராமுண்டி பல கட்டுப்பாடுகள் விதித்தே அனுப்பி வைத்தார். வாசு உடனிருப்பதால். ஆனால் மற்றவர்கள் பெண் பிள்ளைகளை அனுப்பவே முடியாதென்று இன்றளவிலும் உறுதியாக இருக்கின்றனர்.

அதற்கு காரணம் பள்ளிக்கு சென்ற ஒரு பெண், ஒரு ஆணுடன் ஓடிவிட்டாள் எனும் நிகழ்வு.

தேனுவையும் அனுப்பாதீர்கள் என்று யர்ராமுண்டியிடம் முறையிட…

“தேனுவை படிக்க அனுப்பலன்னா… உங்களுக்கு ஆண் பிள்ளையே இல்லைன்னு முடிவு பண்ணிக்கோங்க” என்ற வாசுவின் அதிரடியில் தான் யர்ராமுண்டி இறங்கி வந்தது. அதற்கும் காரணம் உள்ளது. அவர்களது இனத்திற்கு தலைவனாக இருக்கும் நபருக்கு ஆண் வாரிசு கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறைக்கு தலைவர் பதவி அக்குடும்பத்திற்கே கிட்டும் என்பது அவர்களுக்குள்ளான விதி.

வாசு மருத்துவம் படிக்க வந்ததுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

ஒருமுறை ஊருக்குள் பரவிய மர்ம காய்ச்சலால்… அவர்களுக்குள்ளான இயற்கை வைத்தியம் எத்தனை பார்த்தும் பல உயிர்கள் பறிபோனது. அப்போது மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் கீழே கச்சிராயபாளையம் தான் வரவேண்டும். அங்கு வருவதற்குள் வழியிலேயே பல உயிர்கள் பிரிந்தன.

அச்சமயம் தான் அரசாங்கத்திற்கு மருவம் ஊரின் நினைவு வந்தது போல். “மலைக்கு கீழே இடம் தருகிறோம். உங்கள் கிராமத்தை அங்கு மாற்றிக்கொள்ளுங்கள். இத்தனை உயரத்தில் வருவதே சிரமம். இங்கெப்படி அரசு வசதிகள் செய்ய முடியும்?” என்க…

“இது எங்க பூர்வீகம். இந்த இடத்தை விட்டுப்போனால் எங்க உடம்பில் உயிர் தங்காது. இத்தனை காலம் எப்படி வாழ்ந்தோமோ அப்படியே இனியும் வாழ்ந்துகொள்கிறோம்” என்று அரசாங்கத்தையே ஒட்டு மொத்தமாய் புறக்கணித்தனர்.

அன்று அதனை விளைவால்,

“நம்ம மக்கள் உயிர் காக்க என் மகன் மலையனையே வைத்தியருக்கு படிக்க வைப்போம்” என்று யர்ராமுண்டி எடுத்தத்ன் சபதமே வாசு மருத்துவரான கதை.

வாசுவுக்கும் கண்முன்னே கண்ட பல உயிர்களின் இழப்பு அவனை விரும்பியே மருத்துவம் படிக்க வைத்தது.

இதனை இன்று தான் வாசு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறான்.

கேட்டவர்களிடம் ஆயசமான உணர்வு.

“இதுக்கே இந்த பாடா வாசு? எல்லாருக்கும் நல்லதுன்னா, கொஞ்சம் இறங்கி போவதில் என்னடா தப்பு?” என்று கேட்டது ரகு.

“எங்கிருந்து இறங்கி போகச்சொல்ற ரகு. இந்த இடத்தை விட்டா?” என்ற வாசு, “அதை என்னாலே முடியாது. இங்க ஒண்ணுமே கொண்டுவர முடியாதுன்னு இல்லை. இங்கிருக்க மக்களை உயிராக பார்க்கத் தவறிய அரசாங்கத்தின் சப்பைக்கட்டு அது. இங்கிருக்க காட்டுக்குள் கொண்டு வந்த மின்சாரத்தை ஊருக்குள்ள கொண்டுவர என்ன சிரமம். அரசாங்கம் சொன்ன காரணம் என்ன தெரியுமா? அருவி பக்கமிருக்கு. ட்ரான்ஸ்ஃபார்மர் வைக்கிறது ஆபத்தாம்!” என்றான். வாசுவிடம் அதீத குமுறல்.

“செய்யனும் நினைத்தால் எதுவும் செய்யலாம் அதி. அரசாங்கம் சொன்னதை நாங்க ஏத்துக்கலன்னு எங்க இனத்தையே மறந்துட்டாங்க” என்றான் ஆதங்கமாக.

தேவ்வால் வாசுவின் உணர்வை புரிந்துகொள்ள முடிந்தது. நண்பனின் தோளில் தட்டிக்கொடுத்தான்.

தேவ் அந்நேரம் சிந்தித்தது ஒன்றே ஒன்று தான்…

‘ஒரு பெண்ணின் படிப்பிற்கே இத்தனை தடைகள் என்றால்… அதி நீ உன் காதலுக்காக ரொம்ப போராடணும் போலிருக்கே!’ தனக்குள் தடைகள் பலவென்றாலும் போராட முடியுமென்று உறுதியும் கொண்டான்.

இந்த உறுதியெல்லாம் அடுத்தடுத்த நிகழ்வில் ஆட்டம் காண இருப்பதை அவன் அறியவில்லை.

error: Content is protected !!
Scroll to Top