Skip to content
அத்தியாயம் 15
தேவ் பார்த்ததும் தன்னுடைய காதலை அவனது அருவியிடம் சொல்லிவிட்டான். ஆனால் அவளின் பதிலை எதிர்பாராது தன்னுடைய காதலை தனது பார்வையாலே அவளுள் கடத்திக்கொண்டிருந்தான்.
அவனது அருவியை முதன் முதலாக பார்த்து, காதலை சொல்லி பத்து நாட்கள் கடந்திருந்தது.
தற்செயலாக எங்காவது சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால், அவனது விழிகள் காதலை பறைசாற்றிக் கொண்டிருக்கும். அவனது விழிமொழி அவளுக்கும் புரிவது தான் காதலின் பித்து நிலையோ?
அன்று தேவ் மற்றும் ரகுவை வீட்டிற்கு அழைத்த வாசுவின் அன்னை அல்லிக்கொடி…
“அந்த மனுசனுக்கு கூறு அவ்வளவு தான். விருந்தாளியாக வந்தவங்களை ஒருநா(ள்)க்கூட வீட்டுக்கு கூப்பிடலன்னா என்ன மரியாதை இருக்கு?” என்றவர், விருந்து செய்து உண்ண வைத்தார்.
“அப்பா வந்துட்டால் பிரச்சனைம்மா” என்று வாசு எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
ஆனால் வெளியில் சென்றுவந்த யர்ராமுண்டி, வீட்டிற்குள் அமர வைக்கப்பட்டிருந்த இருவரையும் பார்த்து எதுவும் சொல்லாது.
“நல்லா வயிறார சாப்பிடுங்க. வரகு அறுப்பு நாள். நான் காட்டுக்கு போறேன்” என்று சொல்லிச் சென்றதை வியப்பாய் ஏறிட்டனர் வாசுவும், அல்லியும்.
வீட்டிற்குள் அமர்ந்திருப்பவர்களை கழுத்து பிடித்து வெளித்தள்ளுவது முறையாகதே! அதற்காக மட்டுமே யர்ராமுண்டி அமைதியாக சென்றார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
“பாப்பா எங்கம்மா?”
“பரனை மேல போய் பாருடா!”
“பரனையா?” ரகு சந்தேகம் கேட்டிட, “மேல் தளம்” என்று பதிலளித்த வாசு, தேனு இருக்குமிடம் செல்ல,
“மொபைல் சார்ஜ் பண்ணனும் வாசு” என்றான் தேவ்.
“ஆளே இல்லாத கடைக்கு டீயாடா?” என்று அலைவரிசையின்றி அலைப்பேசிக்கு எதற்கு சார்ஜ் என்று கேட்டிருந்தான் ரகு.
வாசு இடம் காட்டிட தேவ் எழுந்து சென்றான். அங்கு ஏற்கனவே ஒரு அலைப்பேசி இணைப்பில் பொருத்தப்பட்டிருக்க, தன்னுடையதை போடுவதற்காக அந்த அலைப்பேசியை தேவ் இணைப்பிலிருந்து கழுட்டிட விரல் பட்டு, லாக் செய்வதற்கு எந்தவொரு கடவுச்சொல்லும் இடப்படாது இருந்ததால், திரை நீங்கி முகப்புத் திரை ஒளிர்ந்திட… தேவ் அதிர்ச்சியாக ஆச்சரியம் கொண்டான்.
முகப்புத் திரையில் அவனது புகைப்படம்.
அது வாசுவுடைய அலைப்பேசி இல்லை என்பது திண்ணம். யாருடையதாக இருக்குமென்று அவனுள் ஒரு கணிப்பு. இல்லையென்றால் வாசு இங்கு வந்து அலைப்பேசியை மாற்றியிருந்தால் என்கிற சந்தேகமும் எழ அமைதியாக சென்று அமர்ந்து கொண்டான்.
வாசு கீழிறங்கி வரும்போது தேனுவும் உடன் வந்தாள்.
“வாங்க” என்று இருவருக்கும் பொதுவாக சொன்ன தேனுவின் பார்வை தேவ்வின் மீது ஒரு நொடி அதிகமாக பதிந்ததோ? அவனுக்கு அப்படித்தான் தோன்றியது.
தேனு நேராக சென்று தன்னுடைய அலைப்பேசியை எடுக்க… நொடியில் தேவ்வினுள் ஆயிரம் மின்னல்கள் வெட்டிச்சென்றன.
“ம்மா முத்தாக்கா வீட்டுக்கு போயிட்டு வறேன்” என்றவள் தேவ்வின் முன்பு தன் மனம் கட்டுப்பாடின்றி அலை மோதிட அங்கிருந்து ஓடிவிட்டாள்.
தேவ் மௌனமாக அகம் மகிழ்ந்தான்.
அந்த புகைப்படத்தில் தேவ்வுடன் வாசுவும் ரகுவும் இருப்பர். இவள் அதில் அவனை மட்டும் வெட்டி வைத்திருந்தாள். அவள் தனக்கு முன்பே தன்னை காதலிக்கத் தொடங்கிவிட்டாள் என்பது அத்தனை மகிழ்வை கொடுத்தது அவனுக்கு.
அவன் அவளது குரலில் காதல் கொண்டானென்றால்… அவளோ அவனின் பிம்பத்தில் காதல் கொண்டிருந்தாள்.
வாசு அலைப்பேசியில் கல்லூரி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று என்றோ ஒரு நாள் தேனுவிடம் காட்டியிருக்க… பார்த்ததும் தேவ் அவளுள் ஆழமாக இறங்கிவிட்டான்.
அன்று சாதாரணமாக அவனது பெயரை தேனு வாசுவிடம் கேட்க, யர்ராமுண்டி பார்த்த பார்வையில் இருவருமே கப்சிப்.
அதன் பின்னர் வாசு தன் நண்பர்களைப்பற்றி பல கதைகள் பகிர்ந்தாலும், ஒரு யூகத்தில் தன் மனம் கவர்ந்தவனின் பெயரை அறிந்து கொள்வதில் விருப்பமற்று, அன்று முதலே டாக்டர் என மனதோடு அழைக்கத் துவங்கியிருந்தாள்.
வாசு, ரகு விடுதியில் ஒன்றாகவே இருப்பதால், என்றேனும் இவள் அழைத்து வாசு எடுக்காவிட்டால் ரகு எடுத்து பதில் சொல்வதால் அவனைப்பற்றி மட்டும் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்திருந்தது.
நேரில் ஒருமுறை கூட பார்த்திட முடியாது என்கிற நிலையிலும், ஏதோவொரு நம்பிக்கையில் காதலை இதயத்தில் தினம் தினம் அதிகரித்துக்கொண்டாள். தேவ்வை மனதால் ஸ்ரீகரித்துக்கொண்டாள்.
இருவருக்குமே ஒருவரைப்பற்றி ஒருவர் ஒன்றுமே அறிந்திடாது காதல் கொண்டனர். அதனை மனதில் ஆழப்படுத்தியும் இருந்தனர்.
தான் காதல் சொன்ன அன்றே தன்னவளின் விருப்பத்தை அறிந்துகொண்ட நொடி முதல், இன்று வரை அவளின் மறைமுக காதலை தேனின் சுவையாய் பருகிக் கொண்டிருக்கிறான்.
அதன் சுவையை தன்னுடைய அருவியிடம் காட்டிடவும் தவறவில்லை.
அவள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் தேவ்விற்கு பிடித்தே இருந்தது. பத்து இருபது நாட்கள் மட்டுமே தங்கவென்று வந்தவன், நாட்கள் நீண்டும் அங்கேயே இருந்தான். தன்னை மொத்தமாய் கொள்ளை கொண்டவளுக்காக.
வாசுவும் அங்கு சிறு கிளினிக் ஆரம்பிக்க தீவிரமாக இறங்கிவிட்டான். அதற்கு ஈஷ்வர் மூலமாக தேவ் தான் பல உதவிகள் செய்து கொண்டிருக்கிறான். அதனால் யர்ராமுண்டி தேவ் அங்கிருப்பதற்கு இன்னும் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அத்தோடு அவர்களின் இருப்பிடம் வந்திருப்பவர்களை போவென்று என்றும் சொல்லிட முடியாதே. அதிலும் தேவ் வாசுவிற்கு அவனது செயலுக்கு உறுதுணையாக நிற்கின்றானே. தேவ்வின் மீது யாரின் மீதில்லாத மதிப்பு யர்ராமுண்டிக்கு வந்திருந்தது.
இன்னும் ஒரு வாரத்தில் தேனு கல்லூரிக்கு சென்றிடுவாள். தேவ்வும் மேற்படிப்பில் கவனம் செலுத்திட வேண்டும். அதற்குள் தேனுவிடம் வெளிப்படையாய் காதலாக நாட்களை கடத்திட ஆசை.
அதற்கு முதல் அடியை எடுத்து வைத்தான் தேவ்.
அங்கிருக்கும் நாட்களில் ஒவ்வொரு வெள்ளி அன்றும் கருவீரன் கோவிலுக்கு சென்று வருவது தேனுவிற்கு வழக்கம். அதனை அறிந்திருந்த தேவ் ரகுவிடம் மட்டும் சற்று நடந்துவிட்டு வருவதாக சொல்லி தேனு கோவிலுக்கு தனித்து செல்லும் நேரம் சென்றான்.
அன்று சற்று முன்னதாகவே தேனு கோவிலுக்கு வந்திருந்தாள். அவளுக்கு பின் வந்த தேவ், ஆண்கள் உள் செல்லக்கூடாது என்கிற அவர்களின் விதிகளை மீறாது கோவில் பகுதியென குறிப்பிடப்பட்ட கரைக்கு வெளியிலேயே நின்றுகொண்டான்.
அடர்ந்த மரங்களுக்கு நடுவே கம்பீரமாக வீச்சரிவாள் பிடித்தபடி குதிரையில் அமர்ந்திருந்தார் கருவீரன். அங்கிருந்த மரக்கிளைகள் யாவும் தாழ்ந்து தரையோடு உறவாடிக் கொண்டிருந்தன. கற்களும் கிளைகளும் சேர்ந்தே மதில் போல் இரு அடிக்கு கோவிலைச்சுற்றி அரண் அமைத்திருந்தன. உள் செல்லவில்லை என்றாலும், கருவீரனை தேவ்வால் காண முடிந்தது. அத்தனை ஆக்ரோஷமான தோற்றம் கொண்டிருந்தார் கருவீரன்.
அவ்விடம் முழுக்க பல வர்ணங்களில் காட்டு மலர்கள் செழித்திருக்க… சுவாசத்திற்கு இதமான நறுமணம் நாசி சேர்ந்தது.
கருவீரனுக்கு விளக்கேற்றி வணங்கிய தேனு, வீட்டிலே சிறிதளவு செய்து கொண்டு வந்திருந்த கருவீரனுக்கு விருப்பமான உணவான பால் பொங்கலை முன்பு வைத்து தன் பிரார்த்தனையை முணுமுணுத்தாள்.
“என் காதல் தெரியுறப்போ அவங்களும் என்னை நேசிக்கணு(ம்)ன்னு நான் வைத்த வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்ததால் தான் வாராவாரம் வெள்ளிக்கிழமை உனக்கு பிடித்ததை கொண்டுவரேன். இதே மாதிரி எந்தவொரு தடங்கலும் உண்டாகமல் எங்க கல்யாணத்தையும் முடித்து வைத்திடு. வாழ்க்கை முழுக்க பால்பொங்கல் செய்து தரேன்” என்று கிட்டத்தட்ட கடவுளையே மிரட்டினாள்.
ஆழ்ந்த அமைதியான இடமென்பதால், உள்ளே தேனு பேசிய வார்த்தைகள் அச்சறம் பிசகாது தேவ்வின் செவிகள் தீண்டி முறுவலிக்க வைத்தது.
இதெல்லாம் அவனுக்கு போதாது. தன் கண் பார்த்து அவள் சொல்ல வேண்டுமென்கிற பேராசை அவனிடம். அதற்காகத்தான் இங்கு நின்றுகொண்டிருக்கிறான்.
பூஜை கூடையுடன் கோவிலை விட்டு வெளியில் வரும் தன்னவளை அகவிழி பருகியவனாக பார்த்திருந்தான் தேவ்.
தாவணி பாவடையில், நீண்ட கூந்தலை பின்னலிட்டு… ஊதா வர்ண காட்டு மலர்ச்சரம் சூடி… நெற்றியில் சாமி கும்பிட்டதற்கு அடையாளமாக மஞ்சளும், குங்குமமுமாக செங்காந்தள் மலரென நடந்து வருவளின் தோற்றம் மொத்தமாய் அவனை களவாடியது.
‘அருவி.’ தேவ்வின் மனதின் விளிப்பு அவளுக்கு கேட்டதோ… பாதையில் கண்ணாக இருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.
தன்னவனை அங்கு அந்நேரத்தில் சற்றும் எதிர்பாராது கண்டதில் இனிய படப்படப்பிற்கு உள்ளானாள். நடையில் தடுமாற்றம். மெல்ல அருகில் வந்துவிட்டாள். தேவ்வை கடந்து செல்ல முடியாது நின்றுவிட்டாள்.
“நீயும் என்னை விரும்புறன்னு தெரியும். என்னால் உணர முடியுது. நீ சொல்லி கேட்கணும். இந்த கண் பார்த்து பேசுறதுலாம் வேண்டாம். ஊருக்கு போயிட்டால்… அடுத்து எப்போ பார்ப்போம் தெரியாது” என்று தேவ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே…
அவனது கையில் எதையோ திணித்துவிட்டு ஓடினாள்.
“அருவி…” முதல்முறை அவனது அழைப்பு. சில்லென்று தாக்கிட, நின்று திரும்பினாள்.
“என்னதிது?” கையில் அவள் திணித்த இலையிலிருந்த மஞ்சள், குங்குமம் மற்றும் பல வர்ண மலர்களைக் காட்டி வினவினான். அவளின் அருகிலும் வந்திருந்தான்.
“அதிலிருக்கும் மஞ்சள், குங்குமம் உங்க கையால் வாங்கிக்க சம்மதம்.” அவனுக்கு வேண்டிய காதலை திருமண பந்தத்தோடு ஒப்பிட்டு தன் மனதை சொல்லியிருந்தாள்.
தேவ்விற்கு எப்படி இருக்கிறதாம்?
விண்ணில் பறக்கும் உணர்வு.
அடுத்து என்னவென்று தெரியாது அக்கணத்தை நெஞ்சில் சுகமாய் நிரப்பியவாறு தேவ் மௌனித்து இருக்க…
“நான் போகட்டுமா?” எனக் கேட்டிருந்தாள்.
தேவ் ஏன் எனும் விதமாக ஏறிட…
“யாராவது பார்த்திட்டால் சிக்கலாகிடும்” என்றாள்.
“ஹோ…” என்றவன், “எந்த இயர்?” என அவளைப்பற்றி அறிந்திடக் கேட்டான்.
“லீவ் முடிந்து காலேஜ் போனால் தேர்ட் இயர்” என்றவள், கல்லூரி மற்றும் படிக்கும் இடத்தின் பெயரை சொல்லிட… தேவ்விற்கு சித்துவும் அதே கல்லூரி என்ற நினைவிருந்த போதும் சொல்லவேண்டுமென்று தோன்றவில்லை.
தன் முன் தடுமாறி இமைகள் படபடக்க நின்றிருக்கும் பெண்ணவளை தேவ்விற்கு அத்தனை பிடித்தது.
“மொத்தமா கட்டியிழுக்குற…” என்றவன் பின் திரும்பி தலையை கோதியவனாக வட்டமிட்டு சுழன்று நின்றான்.
தேவ் சொல்லியதில் விலுக்கென நிமிர்ந்தவள், அவனின் செயல் கண்டு புரியாது பார்த்தாள்.
“ஆர்மபம்தானே… போகப்போக பழகிடும்” என்றவன், அவள் கையிலிருந்த கூடையை காண்பித்து, “எனக்கு?” என்றான்.
‘பால் பொங்கல்.’
அவன் கேட்பானென்று அவள் நினைக்கவில்லை. கருவீரனுக்கு வைத்தது. வேற்று இனத்தவர் உண்ணக்கூடாது. இதனை எப்படி அவனிடம் சொல்வதென்று தவிப்பாக நிற்க…
தன் கையிலிருந்த குங்குமத்தை எடுத்து கீற்றாய் அவளின் நெற்றியில் வைத்துவிட்டான்.
அடுத்து சிறு அளவு பொங்கலை எடுத்து அவளின் வாயருகே நீட்டினான்.
தேனு தன்னைப்போல் வாய் திறந்து வாங்கியிருக்க… அடுத்த நொடி பொங்கல் தேவ்வின் நா சுவைத்திருந்தது.
அவள் உணரும் முன்பே சுவைத்து விலகியிருந்தான்.
“பொங்கலைவிட என் அருவி ரொம்ப தித்திப்பு” என அவன் சொல்வதை கேட்பதற்கு அங்கு நிற்காமல், சிவந்த தன்முகம் காட்ட மறுத்தவளாக வீடு செல்லும் பாதை நோக்கி ஓடினாள்.
“வாழ்க்கை முழுக்க உனக்காக காத்திருக்க இந்த சில கணங்கள் போதும்” என்று அவளை துரத்திய தேவ்வின் வார்த்தைகள் பின்நாளில் உண்மையாகியிருந்தது.
உண்மையில் இந்த அழகிய நிகழ்வை கொண்டே அவர்களின் காத்திருப்பு நிலைத்திருக்கிறது.
தேனு ஊருக்குள் வந்த சமயம், ஊரே அவளது வீட்டிற்கு முன்னிருக்கும் பாறை மீது கூடியிருந்தது. தலைமையாய் யர்ராமுண்டி அமர்ந்திருந்தார்.
சில நிமிடங்களில் தேவ்வும் வந்துசேர…
“எங்கடா போயிட்ட? ஏதோ பிரச்சனைப்போல… ஊரே கூடி நிக்குது” என்ற ரகு வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் தேவ்வையும் இழுத்துக்கொண்டு வந்தான்.
வாசு எங்கேயென்று அவர்கள் தேட… அவனும் அருகில் வந்தான்.
“இதெல்லாம் நீங்க பார்க்க வேண்டாம் அதி. குடிலுக்கு போங்க” என்று அங்கிருந்து செல்ல வலியுறுத்தினான்.
“பஞ்சாயத்தாடா? பார்த்ததேயில்லை. இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்போல” என்ற ரகு அங்கிருந்து நகராது தேவ்வும் வாசு சொல்வதை கேட்கவில்லை.
“நம்ம ஊர் கட்டுப்பாடு தெரியும் தானே?”
வானளவு உயர்ந்து உச்சியில் ஒன்றோடொன்று உரசி, குடைபோல் விரிந்து மையத்தில் குடிலாய் இடமளிக்கும் மூங்கில் மரங்களுக்கு நடுவில் கூடியிருந்த மக்களின் முன் நடுநாயகமாக அமர்ந்திருந்த யர்ராமுண்டி சிங்கமெனக் கேட்க,
அனைவரின் முன்பும் உடல் குறுகி தலைகவிழ்ந்து நின்றிருந்த பெண், கண்ணீர் பெருகும் கண்ணோடு, அவர் கேட்ட கேள்விக்கு ஆமென்று தலையசைத்தாள். தொண்டையில் ஒலித்த விம்மலோடு.
“இனி கட்டுப்பட்டு இருப்பதானே?”
அவர் கேள்விக்கு ஒப்புதல் போல் அப்பெண்ணிடம் தலையசைப்பு.
“சடங்குகள் ஆரம்பியுங்கள்!” என்ற யர்ராமுண்டி, “மலையா உன் நட்பு ரெண்டு பேரையும் கூட்டிட்டுப்போ” என்றார்.
அதற்கு மேல் வாசு அவர்களை அங்கு நிற்க அனுமதிக்காது, கூட்டிச்சென்றான்.
செல்லும்போது தேனுவின் கண்களிலிருந்து பரிதவிப்பை கண்ட தேவ்வுக்கு எதுவோ சரியில்லை எனத் தோன்றியது.
“என்னடா நடக்குது?”
“இந்தப்பொண்ணு ஓடிப்போயிடுச்சுடா. அவன் சரியில்லன்னு திரும்ப வந்திருக்க. அதான் தண்டனை கொடுக்குறாங்க” என்றான் வாசு.
“ஏதோ சடங்குன்னு தாண்டா சொன்னாரு?” கேட்ட தேவ்விற்கு வாசுவால் பதில் சொல்ல முடியவில்லை. வாசுவின் அமைதியே பெரும் கொடுமையை செய்கிறார்களென உணர்த்த தேவ் அமைதியாகினான்.
அடுத்தநாள் தேவ் ஊருக்குள் செல்லும்போது… குற்றவாளியாக நின்ற பெண் மொட்டையடிக்கப்பட்டு, முகத்தில் கரி பூசப்பட்டு பஞ்சாயத்து நடந்த இடத்தில் கட்டிப்போடப்பட்டிருந்தாள்.
எதிரே வந்த கொல்லனிடம்…
“என்னண்ணா அநியாயம் இது?” எனக் கேட்டிருந்தான்.
“செய்த தப்புக்கு தண்டனை தம்பி. இனத்தை விட்டு ஓடிப்போய் திரும்பி வந்தாள் இதுதான் நடக்கும். ஆறு நாள் தண்ணிக்கூட இல்லாமல் கிடக்கணும். அப்பவும் ஏழாம் நாள் உயிர் இருந்தால், ஆத்தா அவள் செய்த தப்பை மன்னிச்சி எங்க இனத்தில் திரும்ப சேர்த்துகிட்டா(ள்) அர்த்தம்” என்றான்.
தேவ்விற்கு கோபமாக வந்தது.
“மனிதாபிமானமே இல்லாத செயல்” என்றான்.
“இதுதான் எங்க இன வழக்கம் தம்பி” என்று சொல்லிவிட்டு கொல்லன் சென்றிட… தேவ் அப்பெண்ணின் கட்டை அவிழ்க்க நகர்ந்தான்.
“டாக்டர்” என்று அவனை அழைத்த தேனு, கண்களில் கண்ணீரோடு வேண்டாமென்று இடவலமாக தலையசைத்து, இருவரும் முதன் முதலாக சந்தித்த அருவி நோக்கி ஓடினாள்.
தேவ்வும், அவள் செல்லும் பாதை வைத்து அவ்விடம் வந்தான்.
கல்லின் மீது அமர்ந்தவள் உடல் குலுங்க முகம் மூடி அழுது கொண்டிருந்தாள்.
“அருவி…”
தேவ் அவளின் தோளில் கை வைத்திட, பட்டென்று அவனின் இடையை கட்டிக்கொண்டு வெடித்து சிதறினாள்.
“அழாதடி ப்ளீஸ். நீயழுதால் கஷ்டமா இருக்கு” என்றவனின் குரல் தழுதழுப்பை உணர்ந்தவள்… கண்ணீரை நிறுத்தியிருந்தாள்.
“நாளைக்கு காலேஜ் கிளம்புறேன். இங்கிருக்கவே பிடிக்கல” என்றாள்.
“இந்த சூழலும், மக்களும் எவ்வளவு பிடிக்குமோ அதேயளவு இவங்களுடைய பழமையான கட்டுப்பட்டித்தனம் மீது அத்தனை வெறுப்பு” என்று குமுறினாள்.
“இந்தவூர் எங்ஸ்டர்ஸ் நினைத்தால் எல்லாம் மாற்றலாம்” என்றான் தேவ்.
“நானும், அண்ணாவும் மாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். முடியல. எங்களால் பள்ளிக்கூடம் கூட இங்கு கொண்டுவர முடியல” என்றவளின் கண்களில் வெறுமை. நடக்கவே நடக்காதென்ற ஆசைகள்.
“நான் படிக்கவே எத்தனை போராட்டம்” என்றவள், “படித்து முடித்து நிறைய மாற்றணும் டாக்டர். அப்பாவுக்கு நாகரிக மாற்றங்கள் வர விருப்பம் தான். ஆனால் அப்பவும் இந்த கட்டுப்பாட்டையும், சடங்குகளையும் விட்டுக்கொடுத்திட விருப்பமில்லை. இதிலே ஊரியவர்களை மாற்றுவது எளிதல்ல. அதுக்குத்தான் முயற்சிக்கிறோம்” என்றவள், அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
சொல்லியதுபோல் அடுத்த நாள் கல்லூரி கிலம்பிவிட்டாள். தேவ்வும் இரு தினங்களில் ரகுவுடன் கிளம்பிவிட்டான்.
தேவ் கிளம்பும்போது,
“இது ஒத்துவராது மச்சான். அந்த பொண்ணுக்கு நடந்த கொடுமையை பார்த்தும், தேனு வேணும் தோணுதா?” எனக் கேட்டான் வாசு.
இருவரும் கோவிலில் சந்தித்த அன்றே வாசுவிற்கு அவர்களின் காதல் தெரிந்துவிட்டது. கொல்லன் மூலமாக. அங்குதான் கொல்லன் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டிருந்தான். யர்ராமுண்டிக்கு தெரிந்தால் தேனுவின் நிலை அவ்வளவு தானென்று பயந்தவன் வாசுவின் காதில் போட்டதோடு, விஷயத்தை தனக்குள் புதைத்துக் கொண்டான்.
தேவ்விற்கு வாசுவால் பதில் சொல்ல முடியவில்லையென்றாலும், காதலில் பின்வாங்கிட மனமில்லை. அமைதியாக புறப்பட்டிருந்தான்.
செல்லுமுன் அரை மயக்கத்தில் கிடந்த அப்பெண்ணின் இடத்தில் தேனுவை வைத்து பார்க்க திடுக்கிட்டான். இந்த நினைவே வேண்டாமென்று வேகமாக வந்திருந்தான்.
மேல்படிப்பில் கவனம் பதித்தான்.
தினமும் இரவு சரியாக தேனு அழைத்திடுவாள். அவள் அழைக்கிறாளென்றாலே தேவ்வின் இதயம் ஆர்ப்பரிக்கும். அவளாகத் தன்னை தேடுகிறாள் என்பதில் தேவ்விற்கு அலாதி சுகம். அதனாலேயே அவனுக்கு பேசிட தோன்றினாலும் அவளை அழைக்கச்சொல்லி தகவல் அனுப்பிடுவான்.
நாளுக்கு நாள் தேனுவின் மீது அத்தனை காதலை காட்டினான். அவனது காதலின் கனத்தில் அவள் தான் தவித்துப்போவாள்.
படிப்பில் முக்கிய காலகட்டம் என்பதால், தேனுவை நேரில் சென்று அவனால் பார்க்க முடியவில்லை. அந்த வருட விடுமுறைக்கு தேனு மலைக்கு சென்ற மூன்றாம் நாள் அவளுக்கு காய்ச்சலென்று அறிந்து அங்கு சென்றுவிட்டான்.
அந்தப்பகுதி காட்டிற்கு புதிதாக வந்த ரேஞ்சர் அவர்களின் கட்டுப்பாடுகள் தெரியாது, அருவியில் கிழங்கு கழுவிக்கொண்டிருந்த பெண்ணிடம் வம்பு செய்ய… அரசு ஊழியரென்றும் பாராது கட்டி வைத்து உதைத்து, குற்றுயிராகத்தான் அனுப்பி வைத்தனர். அந்நிலையில் தன் காதல் விஷயம் தெரிந்தால், தன்னவனுக்கும் இந்நிலை தானே என்று நடுக்கம் கொண்டவளுக்கு பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது.
தேவ்வின் திடீர் வருகையை நம்ப முடியாது வாசு பார்த்திருக்க… யர்ராமுண்டி தான் வாங்க தம்பி என்று வரவேற்றிருந்தார்.
“இப்போலாம் ஊர் மக்களுக்கு எதாவதுன்னா மலையனே பார்த்துக்கிறான். என்னவொன்னு மருந்து மாத்திரை கொண்டுவரத்தான் கஷ்டமா இருக்கு. சரியான ஒத்துழைப்பில்லை” என்றார்.
அவர் பேச்சினை அவன் கேட்கவேயில்லை. திண்ணையிலிருந்தபடியே வீட்டிற்குள் தன்னவளைத்தேடி அலைந்தான்.
வாசு கண்டுகொண்டான்.
“ஐயா நடவுக்கு கொட்டு அடிக்க பூஜைப்போட போகணும் சொன்னீங்களே” என்று வாசு யர்ராமுண்டியை அனுப்பி வைத்திட, தேவ் எதையும் பொருட்படுத்தாது தேனுவிடம் சென்றிருந்தான். சென்ற வேகத்திற்கு காய்ச்சலில் அனத்திக் கொண்டிருந்தவளை இழுத்து அணைத்திருந்தான்.
“டாக்டர்” என்று பரிதவித்தவளின் முகமெங்கும் முத்தமிட்டவன், “எப்போ டோஸ் போட்ட?” என அதிர்ந்து நின்றிருந்த வாசுவிடம் கேட்டான். சமைத்துக் கொண்டிருந்த அல்லிக்கொடியும் தேவ்வின் செயலில் கல்லென சமைந்திருந்தார்.
“மிட்நைட்.”
“ஹ்ம்ம்.”
தான் கையோடு கொண்டு வந்திருந்த மருந்தினை வலிக்காது அவளுக்கு உட்செலுத்தியவன்,
“சாப்பாடு கொண்டுவாங்க ஆண்ட்டி” என்க, அவர் புரியாது வாசுவை பார்த்தார்.
வாசு தேவ்வை பார்த்துக்கொண்டிருந்தான். தன் தங்கைக்காக தவிப்பவனின் காதலின் ஆழம் அவனுக்கு புரிந்தது.
“கொண்டுவாங்க.” வாசு சொல்ல அல்லி எடுத்து வந்தார்.
தானே ஊட்டிவிட்டு மாத்திரைகளை விழுங்க வைத்தவன், அவள் நல்ல உறக்கத்திற்கு சென்ற பின் தான் நகர்ந்தான்.
அல்லி அதிர்விலிருந்து மீளாதிருக்க…
“அவள் என்னோட உயிர் ஆண்ட்டி. எனக்கே எனக்குன்னு கொடுத்திடுங்களேன்” என்றான். கெஞ்சலாக.
“இது ஒருநாளும் நடக்காது தம்பி.”
திடீரென ஒலித்த யர்ராமுண்டியின் குரலில் வாசுவிற்கு சகலமும் உறைந்தது. வெளியில் சென்றவர் எப்போதோ வந்திருந்தார். அனைத்தும் பார்த்தபடி வெளியில் நின்றுவிட்டார்.
யர்ராமுண்டி தேவ்வினை நெருங்க…
“வேண்டாங்க… அந்த தம்பி ஏதோ தெரியாமல் கேட்டிருச்சு. இப்போ போயிடுமுங்க” என்று அல்லி தான் குறுக்க நின்றார்.
“வீடு தேடி வந்திருப்பவங்க யாராக இருந்தாலும், கோபத்தை காட்டுறது நம்ம வழக்கமில்லையே அல்லி” என்ற யர்ராமுண்டி, “கிளம்பு” என்றார் தேவ்விடம்.
“அருவியில்லாமல் நானில்லை. எனக்கு கொடுங்க” என்று பிடிவாதமாக நின்றான். வாசுவிற்கு யர்ராமுண்டியை எதிர்த்து என்ன பேசவென்று தெரியவில்லை.
“கொடுக்கலன்னா?”
தேவ் அமைதியாக இருக்க…
“இழுத்துகிட்டுப் போவியோ?” என்றார்.
“அவளை கொடுங்கன்னு கேட்டது அவளைச்சார்ந்த எல்லாம் தான்” என்றான் அழுத்தமாக.
“அது நடக்காது.” நிர்தாட்சண்யமாக மறுத்தார்.
“நான் கூப்பிட்டால் அவள் வருவாள்.”
“நீ கூட்டிட்டுப்போனால் என் பொண்ணு செத்திட்டான்னு எல்லா சடங்கும் செய்திடுவேன்.”
அவ்வார்த்தையில் தேவ் துடித்தான்.
“உன்னால் உன் அப்பா, அம்மாவை விட்டுவர முடியுமா?” தேவ்விற்கு அரை வாங்கிய உணர்வு.
தன்னை மட்டுமே உலகமாக நினைக்கும் பெற்றோரை விட்டு எப்படி வர இயலும்? தன்னைப்போல் தானே அவளுக்கும். அக்கணம் அவனுக்கு நிதர்சனம் புரிந்தது.
“பெத்தவங்களை தவிக்கவிட்டு போகிறவள் நிச்சயம் நல்லாவே இருக்கமாட்டாள். கஷ்டப்படுத்திட்டு போகிறவள், சந்தோஷமா வாழ்ந்திடத்தான் முடியுமா? திரும்ப எங்கக்கூட்டுக்குள் வரத்தான் முடியுமா? வந்தால்… பார்த்திருப்பிங்களே! என்ன நிலைன்னு?”
கர்ஜனையாக ஒலித்த யர்ராவின் குரலில், தன்னவளை அவர் கூறிய இடத்தில் நிறுத்திப்பார்க்கவே அஞ்சி நடுங்கினான்.
அக்கணம் தீர்மானித்தான் இவரின் சம்மதமின்றி தன்னுடைய அருவி தனக்கு வேண்டாமென்று.
எதுவும் பேசாது வீட்டைவிட்டு வெளியேறி சென்றுகொண்டே இருந்தான்.
தேவ்வின் அந்நிலை வாசுவுக்கு வலி கொடுத்தது.
யர்ரா பேசிய அனைத்தும் தேனுவும் கேட்டுக்கொண்டிருந்தாள். வீட்டின் பின்வழியாக ஓடிச்சென்று தேவ்வை மறித்து நின்றாள்.
“நானும் வரேன். என்னையும் கூட்டிட்டு போயிடுங்க டாக்டர். அப்பா எப்பவும் சம்மதிக்கமாட்டார்” என்றவள்,
“நீ எனக்கு வேண்டாம் அருவி” என்ற தேவ்வின் வார்த்தையில் கால்கள் துவண்டு பாறை மீது அமர்ந்தாள். கண்ணீர் சுரந்தது.
“நீ வரேன்னு நான் கூட்டிட்டு போயிட்டால்… அதுக்கு வேறு பெயர். நம் காதல் உன் பக்க சம்மதத்தோடும் கல்யாணத்தில் சேர வேண்டும்” என்றான்.
தேவ் சொல்ல வருவது அவளுக்கு புரிந்தது.
“ப்ளீஸ்… நீங்கயில்லாமல் முடியாது.”
“அழாதடி ப்ளீஸ். முடியல.” அவளின் கன்னம் தாங்கி நெற்றிமுட்டி கூறினான்.
“உன் சொந்தங்களை வருத்தி எனக்கு நீ வேணாம். அவங்களோட வருத்தத்தில் நாம் சந்தோஷமா வாழமுடியாது. நான் எப்படி நீ வேணான்னு உறுதியா இருக்கேனோ… நீயும் அப்படி இருக்கணும். என்னை பார்க்கணும் நினைக்கூடாது. என்னைப்பற்றி செவி வழி செய்தியாகக் கூட நீ தெரிந்துகொள்ளக் கூடாது” என்று உயிர்வலியில் ஆரம்பித்தவன், கட்டளையாய் முடித்திருந்தான்.
வீடு வந்து சேர்ந்தவன் பெற்றோரிடம் அனைத்தையும் சொல்லி துடித்த கணங்களை வார்த்தையில் வடித்திட முடியாதது.
தன் மகிழ்விற்காக மற்றவர்களை வருத்தக்கூடாதென நினைப்பவனின் காதல் எப்போதோ வென்றுவிட்டது. ஒன்றுசேரவே நாட்கள் காத்துக்கிடக்கின்றன.
Post Views: 0
error: Content is protected !!