Skip to content
அத்தியாயம் 16
“இது கனவில்லையே டாக்டர்?”
நீரில் நனைந்திட்ட தன்னுடைய மான் விழிகளோடு தனது கூர் விழிகளை கலக்கவிட்டபடி தாலியை முடிச்சிட்டுக் கொண்டிருந்த தேவ்விடம் நடக்கும் அழகிய தருணத்தை நம்ப முடியாது பூரித்த முகத்துடன் கேட்டிருந்தாள் தேனருவி.
இருவருக்கும் இடையில் புகுந்த சித்து…
“நான் வேணுன்னா கிள்ளட்டுமா?” என்று கேட்க…
“மொக்கை” என்று அவ்விடத்தையே அதிர வைத்தனர் இளைஞர் பட்டாளம். கொள்ளென்ற சிரிப்பும்.
யாரையும் கண்டுகொள்ளாது மூன்று முடிச்சிட்டு தேனுவின் கன்னம் தாங்கிய தேவ், தன்னவளின் நெற்றியோடு முட்டிட… அவளது மஞ்சளும், குங்குமமும் அவனுக்கு இடம் பெயர்ந்தது.
தன் நெற்றியை தொட்டு காண்பித்தவன்…
“நிஜம்தான். நம்புறியா பொண்டாட்டி?” என விரிந்த அதரத்தோடு கேட்டிருந்தான்.
“திருமதி. தேனருவி தேவதிரன்.” காதலாய் அவன் மொழிந்திட, பார்வையால் அவனை களவாடிக் கொண்டிருந்தாள்.
அக்கணம் இருவரும் தங்களது திருமணம் சாத்தியமான நிகழ்வுகளை நொடியில் வலம் வந்தனர்.
மருத்துவ முகாமிற்காக தேவையானவற்றை சரிபார்த்து ஆயத்தமாகிக் கொண்டிருந்த தேவ்விடம், அவனுடன் செல்லவிருந்த மருத்துவர்…
“போனமுறை நான் அங்கு போனப்பவே எனக்கு செட்டாகல டாக்டர்” என்று வர மறுத்திட, தேவ் வற்புறுத்தவில்லை. வாசு இருக்கின்றானே என சுலோவுடன் மினி வேனில் புறப்பட்டுவிட்டான்.
இப்போது மேகமலையிலிருந்து தேனோடை மருவம் சென்றிட அந்த காட்டுப்பாதையில் நடந்திட தேவையில்லை.
மருவத்திற்கு அருவிக்கு எதிர்பக்கமாக இருக்கும் டிரான்ஸ்ஃபார்மர் பகுதி வழியாக தார் சாலையே அமைத்தாயிற்று.
இந்த ஆறு வருடங்களில் மருவத்திலும், அங்கிருக்கும் மக்களிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அதிகம். அவர்களிருந்த கட்டுப்பாட்டிற்கு இந்த மாற்றங்கள் ஆச்சரியமே!
ஒரு மாற்றம் ஏற்பட்டிட சிறு நிகழ்வு போதும். அந்நிகழ்வு மொத்தமாக அனைத்தையும் புரட்டி போட்டிடும். அப்படியான ஒரு நிகழ்வே மருவத்திற்கு மாற்றத்தை கொண்டு வந்தது.
தேனுவை துறந்து தேவ் வந்துவிட்ட சில மாதங்களில் கடும் மழை பொழிந்து இயற்கை பேரிடரால் மருவம் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
செல்ல முடியாத பகுதி என்று அரசாங்கம் எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. இதனை வாசுவின் மூலம் அறிந்த தேவ், ஈஷ்வர் மூலமாக உதவிகளுக்கு தங்களது மருத்துவ குழுவை அனுப்பி வைத்ததோடு, இழந்துவிட்ட அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்தான்.
மக்களிடையே மாற்றம் கொண்டுவர சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என நினைத்த தேவ்விற்கு,
‘இவங்களாம் மாறவே மாட்டார்களா? மாற்றவே முடியாதா?’ என அவனவள் கேட்டு அழுதது நினைவில்வர அவளுக்காக எதையும் செய்திடலாமென்ற எண்ணத்தில் ஈஷ்வரை மருவத்தை தத்தெடுக்க வைத்திட்டான்.
அவர் மூலமாகவே தேவ் அனைத்தையும் செய்திட வைத்தான்.
இப்போது எந்த தேவைக்கும் மருவத்தினர் மேகமலைக்கு செல்ல வேண்டியதில்லை.
மருத்துவ உதவிக்காக மலைக்கு கீழே செல்ல வேண்டியதில்லை. அனைத்து வசதிகளுடன் சிறு மருத்துவமனையையே அங்கு உருவாக்கிவிட்டான்.
மின்சாரம் அளித்திட்டான். இப்போது அவர்கள் ரேஞ்சருக்கு மாமுல் தரவேண்டியதில்லை.
சித்துவின் மூலமாக நெட்வொர்க் கோபுரம் வைத்திட்டான். இப்போது அலைவரிசையை தேடி எங்கும் செல்லத்தேவையில்லை. இயற்கை மாற்றத்தின் போது மட்டுமே சிறு தடங்கல் ஏற்படும்.
அவர்கள் விவசாயம் செய்திடும் உணவுப்பொருட்களை சந்தைப்படுத்திட கச்சிராயபாளையம் வரை கொண்டு செல்லத் தேவையில்லை. மொத்தமாக கொள்முதல் செய்திட அதற்கென தனி ஆட்களை பிடித்து, அவர்களின் விவாசயத்துக்கும் தேவ் ஈஷ்வரன் மூலமாக நல்லது செய்திட்டான்.
தங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்த ஈஷ்வர் மீது யர்ராவுக்கு தன்னைப்போல் மரியாதை வந்திருந்தது. அவர்களின் அம்மனுக்கு ஈடாக ஈஷ்வரன் மீது பக்திகொண்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.
மாற்றம் ஏற்பட்டிட கல்வி அறிவு மிக முக்கியமென்று மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அங்கு பள்ளிக்கூடத்தையும் கொண்டுவந்திட்டார் ஈஷ்வர்.
“ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டுவந்த பள்ளிக்கூடம் ஏன் பூட்டிக்கிடக்கணும். பசங்களை படிக்க வையுங்க” என்று யர்ராவேக் கூறிட, இப்போது அங்கிருக்கும் அனைத்து பிள்ளைகளும் தரமான கல்வியை கற்கின்றனர். அவரிடம் இத்தகைய மாற்றம் வர காரணமே அந்த பெரும் மழையும், அவரது இனமென்று கர்வமாக எண்ணிய அவரின் மக்களும் தான்.
ஒரு நாள் நிகழ்வு பெரும் மாற்றத்திற்கு வித்தாகியிருந்தது.
மருத்துவ முகாமிற்காக மருத்துவர் வருகிறாரென்று ஈஷ்வரன் சொல்லியிருக்க… வருபவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க யர்ராவே காத்திருந்தார்.
எவ்வளவு மாற்றம் செய்தாலும் தன் நிலையில் நிற்கும் யர்ராவை நினைத்து வருத்தத்தோடும், குழப்பத்தோடும் வந்திறங்கிய தேவ்வை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் பார்வையிலே தெரிந்தது.
“நீதான் உன் கல்யாணத்துக்கு உன் ஃபிரண்டை இப்படி வரவழைத்ததா?” என்று வாசுவிடம் கோபமாக அவர் கேட்டிட…
“அப்படியும் வச்சிக்கோங்கப்பா” என்று தேவ்விடம் நகர்ந்துவிட்டான் வாசு.
தேவ்வாக இறங்கி வந்திருக்கும் சந்தர்ப்பத்தை கெடுத்துக்கொள்ள வாசுவுக்கு விருப்பமில்லை. அதனால் இத்தனை நாளில் செய்திடாத ஒன்றை தன் நண்பனுக்காகவும், தங்கைக்காகவும் செய்திட்டான். யர்ராவை எதிர்த்து பேசிவிட்டான்.
அங்கிருக்கும் மக்களிடையே பல மாற்றம். இவர் மட்டும் இன்னும் இப்படியே இருக்கின்றார் எனும் ஆதங்கம் வாசுவிடம்.
இயற்கை பேரிடரின் போது அங்கு தாக்குப்பிடிக்க முடியாது ஒருசிலர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். பசி அவர்கள் இன கட்டுப்பாட்டை தகர்த்திருந்தது. வெளியுலகம் அவர்களில் மாற்றத்தை உண்டாக்கியிருந்தது. நாம் வாழ்வது மட்டும் வாழ்வல்ல… வாழ்வென்பது அதீத நீளம் கொண்டதென்பது புரிந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் கட்டுப்பாடு என்பது அவனின் மனம் சம்மந்தப்பட்டதென்பது புரிந்தது. நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் அனுமதியே இல்லாத போது பிறருக்கு கொடுக்கும் உரிமையை யார் வழங்கியது? எனும் பெரும் கேள்விக்கான பதில் புரிந்தது. இப்போது அவர்கள் அங்கு நடக்கும் விசேஷ நாட்களுக்கு மட்டும் விருந்தினராக வந்து செல்கின்றனர்.
வெளியுலக மனிதர்களின் மூலம் உண்டாகிய மாற்றத்தால், தலைமை முடிவென்பது அவரவர் விருப்பமென்ற நிலைக்கு வந்திருந்தது.
அத்தோடு ரேஞ்சரை அடித்து பாதி உயிராக அனுப்பிட… உடல் நலன் தேறிவந்த ரேஞ்சர் காவல்துறை அதிகாரிகளை வைத்து, மருவத்தின் ஆண்கள் பலரையும் கைது செய்து நரகத்தை காட்டியிருக்க… தண்டனை கொடுப்பதிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
வாசு தான் ஈஷ்வரன் மூலமாக பெரும் புள்ளிகளை வைத்து அவர்களை வெளிக்கொண்டு வந்தான்.
இப்படி எல்லாம் ஏதோவொரு வகையில் மாற்றம் கொண்டிருந்தனர். அந்த மாற்றம் வெளியில் பெண் எடுத்து, பெண் கொடுப்பது வரை வெளியில் சென்றிருந்திருந்தவர்களிடம் வந்திருந்தது.
இருப்பினும் யர்ரா மட்டும் தன்னிலையில் அப்படியே இருக்கின்றார். அவரால் அவர் நிலைவிட்டு வரமுடியவில்லை என்பதே உண்மை.
இப்போது மருவமும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில்… முழுதாக இல்லையென்றாலும், பாதியாவது மாற்றம் பெற்ற கிராமம்.
தன் மக்களின் மாற்றத்தை ஏற்றுக்கொண்டவரால், தன்னில் மாற முடியவில்லை.
யர்ராவுக்கு மற்றுமொரு அதிர்ச்சி, தேனு அன்று இரவே வந்ததே!
‘இவன் வந்திருக்கான்னு வந்திருக்காளோ? அன்னைக்கு என்னவோ வசனமெல்லாம் பேசிட்டுப்போனான். இத்தனை வருசம் வராதவள், அவன் வந்திருக்கான்னு வந்திருக்காளோ? அப்போ அவனோடு தொடர்பில் தான் இருக்கிறாளா?’ என்று நினைத்த யர்ரா தேனுவை முறைக்க… அப்படியொருவர் அங்கிருக்கிறார் என்பதையே கருத்தில் கொள்ளாது அல்லியிடம் சென்றுவிட்டாள்.
தேனுவிற்கு சிறுவயது முதலே யர்ராவின் கட்டுப்பாடுகளின் மீது வெறுப்பு. அதனாலே அவரிடம் எப்போதும் சற்று தள்ளித்தான் இருப்பாள். இன்று முழுதாக விலகியே சென்றிருந்தாள்.
நான்கு வருடங்களாக தன்னை தவிர்க்கவே விலகியிருந்தாளென்று புரியாதது… இன்றைய நேரடியான விலகளில் அவருக்கு புரிந்தது.
உள்ளிருந்தவர் வெளியில் சென்று திண்ணையில் அமர்ந்துவிட்டார். மகளை பார்வையால் தழுவியபடி.
யர்ராமுண்டிக்கு மகளென்றால் கொள்ளைப்பிரியம். அதனால் தான் அவள் பிறந்ததும், அவர்களின் குலதெய்வமான அந்த அம்மனின் பெயரையே அவளுக்கு வைத்திட்டார். அப்படிப்பட்ட மகளின் இன்றைய விலகல் அவருக்கும் வலியை அறிமுகம் செய்து வைத்தது.
அனைத்து வலிகளுக்கும் மருந்தாக தேனு அன்னை மடி சாய்ந்திட்டாள். மகளை உச்சிமுகர்ந்து தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினார் அல்லி.
“அண்ணா எங்கம்மா?”
“ஆஸ்பத்திரிக்கு போயிருக்கான்.”
கடந்து சென்ற வருடங்களில் ஊரில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி தேனுவிற்கு தெரியாது. எதையும் அறிந்துகொள்ளாது இருந்துவிட்டாள்.
“நம்மவூரில் ஹாஸ்பிட்டலாம்மா?” என்று வினவியவள், “ஊருக்கு பஸ்லாம் வருது. கச்சிராயபாளையத்தில் ஆட்டோ பிடிக்கப்போனால், மருவம் பெயர் போட்டு பஸ் நிக்குது. ரோடெல்லாம் போட்டிருக்கு எப்படிம்மா?” என்று ஆச்சரியமாகவே கேட்டாள்.
யர்ரா திண்ணையில் அமர்ந்திருப்பதை கவனிக்காத அல்லி,
“எல்லாம் தேவ் தான். அவங்க அப்பா மூலமாக எல்லாம் செய்தது” என்று வாசுவின் மூலம் தனக்கறிந்த உண்மையை கூறினார்.
“அவங்க என்கிட்ட பேசுவதே இல்லைம்மா. அவங்களை பார்த்தே ஆறு வருடமாகுது. ரொம்ப வலிக்குதும்மா. அவங்கில்லாம முடியல” என்று துடித்த மகளின் கண்ணீர் கண்டு அல்லி பதறியதில் ஆச்சரியமில்லை.
ஆனால் யர்ராமுண்டி?
அல்லி சொல்லியதில் எல்லாரும் என்னை ஏமாற்றுகிறீர்களா? என கோபமாக எழுந்தவர், வெளிப்படையான மகளின் கண்ணீரில் துவண்டுபோனார்.
அதுவும் அவள் சொன்னதில்…
“நானே கூட்டிட்டுப்போங்கன்னு சொல்லியும்… வேண்டாம்மா?” என்றவள் அருகில் வந்துவிட்ட யர்ராவை பார்த்து, கண் மூடிக்கொண்டாள்.
சில நிமிடங்கள் சென்றும் அவர் நின்றிருக்கிறார் என்பதை உணராது, அன்னைமடி கிடைத்த இளைப்பாராளில் அனைத்தும் மறந்து உறங்கிவிட்டாள்.
மகளையே பார்த்திருந்த யர்ராவிற்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. பல உணர்வுகள் அவரின் முகத்தில் தெரிந்தன.
அவரை கவனித்து பார்த்த அல்லி…
“யாருக்காக இந்த வரட்டு பிடிவாதம்? உங்க இனத்துக்காகவா? அவங்களே இப்போது நாகரிகத்தில் மாற்றம் பெற்று, தனித்து இயங்க ஆரம்பிச்சிட்டாங்களே. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். இங்க? ஒரு இயற்கை பேரிடர்… நாம் யாருன்னு உணர்த்திடுச்சுல்ல? தலைவருன்னு நாட்டாமை செய்த இடத்தில் இப்போ நீங்களும் சாதரண மனிதன் தானே! உங்களுக்கான மரியாதை பதவியில் இல்லங்க. நடந்துகிற நல்ல செயலில் இருக்கு” என்ற அல்லி…
“நானே உங்க இனமில்லையே! அப்புறம் என்னை மட்டும் எப்படி உங்க மனைவியா ஏத்துகிட்டிங்க? அதுக்கு காரணம் நீங்க என்மேல் வச்சிருந்த விருப்பம் தானே? உங்களுக்காக உங்கப்பா என்னை உங்க இனமுன்னு சொல்லி ஊரையே ஏமாற்றி கல்யாணம் செய்து கொடுக்கலாம். ஆனால் நீங்க உங்க மகளுக்காக கொஞ்சம் இறங்கிவர முடியாதா? ஊரை ஏமாற்றியது தப்பா இருந்தாலும், மகனோட விருப்பத்தை நிறைவேற்ற அவர் செய்தது தந்தையாக சரி. அப்படி ஏன் உங்களால் இருக்க முடியல. என்னை கட்டிக்கும்போது தெரியாத இனம், பழமை, கட்டுப்பாடு, விதி எல்லாம் தலைவரா உங்க கண்ணுக்குத் தெரியுதா? இப்போ அதுவே வெறும் பெயருக்குத்தானே? இன்னமும் எதுக்காக இந்த வீம்பு? நீங்க என் குடும்பத்தையே வலிக்க வைத்து என்னை கூட்டிட்டு வரலாம்? உங்க பொண்ணு மட்டும் குடும்பத்தை விட்டு அவள் ஆசைப்பட்டவனோடு போகக்கூடாதா? உங்களுக்கு பயந்து அந்த தம்பி இவளை தள்ளி வைக்கல. நீங்க அன்னைக்கு பேசிய வார்த்தையெல்லாம் கேட்டுட்டு மனசாட்சியே இல்லாமல் கூட்டிட்டுப்போக நீங்கயில்லையே அந்த தம்பி. தான் நேசிக்கும் பெண்ணுக்காக உங்களோட சம்மதத்துக்காக இத்தனை வருசம் காத்திருக்கும் தேவ் தான் பெரியவன். நீங்க எப்போ பெரிய மனிதனா நடந்துக்கப் போறீங்க?” எனக் கேட்டு தன்னுடைய மொத்த குமுறலையும் அன்று இறக்கி வைத்திருந்தார் அல்லிக்கொடி.
மொத்தமாக தளர்ந்தவராக யர்ரா திரும்பிட… அனைத்தும் கேட்டும் அமைதியாக நின்றிருந்தான் வாசு.
இந்த இனத்தில் இருந்துகொண்டு தன் அன்னை மட்டும் சில நேரங்களில் எப்படி தனித்து விளங்குகிறார் என்ற அவனின் பலநாள் கேள்விக்கு இன்று விடை தெரிந்தது. விரக்தியாய் முறுவலித்தான்.
“உங்களை நான் எதுவும் கேட்கப்போவதில்லைப்பா. ஆனால் சிலதை சொல்லணும். இன்னும் கொஞ்சநாள் போனால்… உங்க இனம், பழம்பெருமை, கட்டுப்பாட்டில் மாற்றம் வந்ததைப்போல் தேவ், தேனு விஷயத்தில் எல்லாம் மாறிடு(ம்)ன்னு மட்டும் நினைக்காதீங்க. கொஞ்சநாள் போனால் வேறு பையன் பார்த்து கல்யாணம் செய்து வைத்தால் சரியாகிடுங்கிற உங்க நினைப்புத்தான் தப்பாப்போகும்” என்ற வாசு, “ஆறு வருடமில்லை… அறுபது வருடமானாலும் இன்னொருவனை கட்டிப்பான்னு மட்டும் நினைக்காதீங்க! இப்படியே எல்லாத்தையும் ஒதுக்கி இருப்பாளேத் தவிர இன்னொருவனை கட்டிக்கமாட்டாள். அதியும் அப்படித்தான். நேசித்திட முகம் பார்க்க வேண்டுமென்றில்லை. நீ, நான் என்கிற நினைப்பு போதும். அதைத்தான் உங்களுக்கு உணர்த்திட்டு விலகி நிக்கிறாங்க. நானே வரேன்னு சொல்லியும், அவளோட உறவுகளுக்காக மட்டுமல்ல உங்களுக்காக, ரெண்டு வரின்னாலும் நீங்க பேசிய அர்த்தமான வார்த்தைகளை யோசித்து விட்டுட்டு போன என் அதி தேனுவோட மனதில் மட்டுமில்லை… உண்மையிலே உயர்ந்தவன்’ப்பா. இந்த ஊர் சகல வசதியோட இருக்குன்னு பெருமையா வலம் வரீங்களே அதுக்கு மொத்த காரணமும் என் அதி தான். அவன் விரும்பும் பெண் ஆசைப்பட்டா(ங்)கிறதுக்காக” என்று நீண்டு பேசிய வாசு, “ஊர் மக்களுக்காக நீங்க பார்க்கலன்னு தெரியும். இப்போவாவது இறங்கி வாங்கப்பா” என்றான்.
“நம்ம வாழ்க்கை முடியப்போகுதுங்க. வாழ வேண்டிய பிள்ளைங்களை தண்டிச்சிடாதீங்க” என்றார் அல்லி.
“இப்போ இதை அதிக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க. அதிக்காக மட்டும் தான், அவன் சொல்லக்கூடாதுன்னு சொல்லியதால் தான் இத்தனை வருடம் சொல்லாமல் இருந்தேன்” என்ற வாசு, “நீங்க இப்போ உயிரோடு இருக்கவே அதிதான் காரணம் சொன்னால் இந்த உயிரே வேண்டான்னு செத்துப்போயிடுவிங்களா?” என்று யர்ராவின் இதயத்தில் ஓங்கி அடித்திருந்தான்.
“என்ன பாக்குறீங்க? அருவியில் வழுக்கி விழுந்து பேச்சு மூச்சில்லாமல் கிடந்தீங்களே, நினைவிருக்கா? மண்டையில அடிபட்டதில் நீங்க பிழைப்பீங்கன்னு எனக்கே நம்பிக்கை இல்லை. ஆனால், என் அதி உங்களை பிழைக்க வச்சான். ஈஷ்வர் அங்கிள் உங்களுக்கு சிகிச்சை கொடுக்கல… என் அதி செய்தான். கிட்டத்தட்ட பத்து நாள் அவன் கண்ணுக்குள்ள உங்களை வைத்து மீட்டெடுத்தான். அதை சொல்லியே, நன்றிகடனாக உங்க பொண்ணை கொடுங்கன்னு அவன் கேட்டிருக்கலாம். அப்படி கேட்டிருந்தால் உங்களால் தான் இல்லையென்று சொல்லிட முடியுமா? உயரின் முன்பு இந்த இனமெல்லாம் இரண்டாம்பட்சமாகியிருக்குமே!” என்ற வாசுவின் முகத்தில் வருத்தத்தின் சாயல்.
உண்மை அறிந்து மனிதர் ஆடிப்போய்விட்டார்.
அவருள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டது தான். ஆனால் அதை கடந்து அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மகளின் கண்ணீர் அவரை மொத்தமாக உடைய வைத்திருக்க… அல்லி, வாசுவின் பேச்சில் பலவற்றை சிந்தித்தவராக படுத்துக்கொண்டார்.
அடுத்தநாள் காலையே சுலோவின் உதவியோடு தேவ் மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்துவிட்டான்.
ஊர் மக்கள் ஒவ்வொருவராக வந்து சென்றுகொண்டிருந்தனர்.
ஓரளவு கூட்டம் குறையத் தொடங்க… முத்தாமணி வந்தார்.
“எப்படியிருக்கீங்க தம்பி” என்று நலன் விசாரித்தவர், தேவ்வின் புன்னகைக்கு பின்னாலிருந்த வலியை கண்டு கொண்டார்.
“ஐயாவை யோசித்து வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்திடாதீங்க தம்பி” என்று சொல்லிச்சென்றார்.
முத்தாமணி கொல்லனின் மனைவி. அவர் மூலமாகத் தெரிந்திருக்குமென்று நினைத்துக்கொண்டான்.
யர்ரா தன் மக்கள் முன்பு, தான் தலை குனிவதா என்று இன்றளவிலும் மகளின் காதலை கொஞ்சமும் கசிய விடாதுதானே காத்து வருகிறார்.
“பொண்ணை எனக்கு பார்க்கணும் போலிருக்கு. வாசுவோட தங்கை தானே?” சுலோ ஆர்வமாகக் கேட்டார்.
“வாசு கல்யாணத்தில் காட்டுறேன் ஆண்ட்டி.” தேனு வந்துவிட்டாள் என்பது தெரியாது கூறினான்.
“வாசு ஆளையே காணோமே!”
“மூணு நாளில் கல்யாணம். வேலையா போயிருப்பான்” என்ற தேவ் அடுத்தடுத்த நபரில் கவனம் வைத்தான். அன்று ஓரளவிற்கு ஆட்கள் வந்து சென்றிருந்தனர். மாலை போல் யர்ரா வந்தார்.
“வாங்க” என்றவன், அவரின் முந்தைய செயல்கள் பற்றி எதுவும் பிரதிபலிக்காது பரிசோதித்து அவரை அனுப்பி வைத்தான்.
தேவ்விடம் பேசிடத்தான் அவர் வந்தார். ஆனால் முடியாது சென்றுவிட்டார்.
தேவ் அதற்குமேல் தன்னை திடமாகக் கட்டிக்கொள்ள முடியாது, சுலோவிடம் சொல்லிவிட்டு கருவீரன் கோவில் பக்கம் சென்றான்.
அவனது வாழ்வின் அழகிய தருணம் அரங்கேறிய இடமாயிற்றே. சற்று இதம்கொள்ள நினைவுகளை மீட்டிட அங்கு சென்றான். அவர்கள் காதலாக பகிறந்துகொண்டது சிற்சில நிகழ்வுகள் தான். ஆனால் அதனின் ஆழம் அதீதம் அல்லவா! கோவிலுக்கு வெளியில் கல்லின் மீது அமர்ந்தவன் கண்களை மூடி அமர்ந்திட்டான்.
இரவு நடந்த நிகழ்வால் வாசு சுற்றம் மறந்து தங்கையுடனே அன்றைய நாளை நகர்த்த…
ரொம்ப நாள் கழித்து வந்த மகள் பழைய துள்ளலின்றி வீட்டுக்குள்ளே முடங்கியிருக்கிறாளென்று,
“வெள்ளிக்கிழமை. கருவீரனுக்கு விளக்கு போட்டுட்டு வா தேனு” என்றார்.
மாலை நேரமென்பதால் வாசுவும் தங்கையுடன் சென்றான்.
“நான் இங்கவே இருக்கேன். நீ சாமி கும்பிட்டு வா” என்று கோவிலின் அருகில் வந்ததும் தேனுவிடம் சொல்லிய வாசு, அவளின் நிலைகுத்திய பார்வையில் என்னவென்று பார்த்தான்.
தேவ் கண்மூடி அமர்ந்திருக்க. அவனின் முகம் ஆயிரமாயிரம் வலியை பிரதிபலித்தது.
“டாக்டர்.” உயிர் கரைய உதடு மட்டுமே அசைத்தாள்.
அவளின் ஓசையின்றிய அழைப்பு அவனின் இதயத்தை தட்டிட… பட்டென்று இமை திறந்தான்.
இருவரின் விழிகளும் எதிரேயிருக்கும் பிம்பம் மறைந்துவிடுமோ என அஞ்சி உறைந்திருக்க… கோவில் மணியோசையில் சுயம் மீண்ட தேவ் வேகமாக அவர்களை கடந்திட…
“இப்பவும் கூட்டிட்டுப்போகமாட்டிங்களா டாக்டர்?” என்று அத்தனை தவிப்போடு கேட்டிருந்தாள். கன்னம் இறங்கிய கண்ணீரோடு.
அவள் கேட்டதில் தடுமாறியவன்,
“அழாதடி. எனக்கு வலிக்கும்” என்று திரும்பியும் பாராது சொல்லியவன், காலினை நேர் வைத்து எட்டி நடைபோட்டான்.
தேனுவின் கண்களில் அத்தனை ஏக்கம்.
அங்குதான் யர்ராவும் இருந்தார். மனதில் ஆயிரம் விஷயங்கள் உழல தெளிவு வேண்டி அங்கு வந்திருந்தார். மறைவாக அமர்ந்திருந்தவருக்கு, ஏக்கமாக மகள் கேட்டதும், அதற்கு வலியோடு தேவ் கடந்ததும் நன்கு தெரிந்தது.
அடுத்தடுத்த நாட்களும் இதுவே தொடர்ந்தது. தேனுவின் விழிகள் ஏக்கத்தோடும் தவிப்போடும் தேவ்வின் மீது படிய… அவனோ வலிக்க வலி கொடுத்து விலகிச் சென்றான்.
காதலில் கசிந்துருகிய நாட்களில் அவள் கண்களில் காதலை மட்டுமே பார்த்த தேவ்வுக்கு, இப்போதைய அவளின் ஏக்கம் ஆயிரமாயிரம் வலியை வலிக்கக் கொடுத்தது.
அனைத்தையும் யர்ரா கவனித்துக் கொண்டுதான் இருந்தார். உடனடியாக இறங்கிவர முடியவில்லை.
அப்பாவிற்கு மகளின் கண்ணீர் எதையும் செய்திட வைக்குமென்று அவர் உணரும் தருணமும் மிக அருகில்.
தேனு பேசிட முற்பட்டாலும் தேவ் அதற்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை.
வாசுவும் செல்லும்போது அழைத்துச் சென்றுவிடு என்று சொல்லிவிட்டான். ஆனால் அது தேவ்வால் முடியாதே!
அழைத்துச் செல்பவனாக இருந்திருந்தால், அன்று அவள் சொல்லியபோதே செய்திருப்பானே! இப்போதும் தான் வேண்டி நிற்பது கிடைக்காது அழைத்துச்சென்றால், காத்திருந்த காத்திருப்புக்கும், தவித்த தவிப்புக்கெல்லாம் பலனின்றி போகுமே!
“நான் கூப்பிட்டால் அவள் வருவாள்.” அன்று அத்தனை கர்வமாக தேவ் சொல்லியபோது, யர்ரா பெற்ற பெண்ணுக்கே சாபம் விடுவதைப்போல் பேசியது இன்றும் ரணத்தை உண்டாக்கியது. அவராக சம்மதம் கொடுக்காது கூட்டிச்சென்றால் எங்கே அவரின் வார்த்தைகள் பலித்துவிடுமோ என்று மனதின் ஓர் மூலையிலிருக்கும் சிறு அச்சத்தை கடக்க முடியாதே இன்றளவிலும் வலி சுமக்கின்றான்.
“முடியல அருவிம்மா!”
சுலோ அருகிலிருப்பதை மறந்து வாய்விட்டு சொல்லிவிட்டான்.
சுலோ அவனின் கரம் பற்றி அழுத்தம் கொடுக்க…
“உங்க ஆளுகிட்ட சொல்லிடாதீங்க. உடனே ஓடி வந்திடுவார்” என்று சட்டென்று இயல்புக்கு மீண்டிருந்தான்.
சுலோ அவனின் வலியை உள்வாங்கியவராக… “நிறைய மாறியிருக்கே அதி. நான் பேசி பார்க்கட்டுமா?” எனக் கேட்டார். வேண்டாமென்று மறுத்துவிட்டான்.
அன்றைய இரவு உறக்கம் பிடிக்காது தன்னவளை நினைத்து விட்டத்தை வெறித்து படுத்திருந்த தேவ்… அருவி கொட்டும் ஓசைக்கு நடுவில் மெல்லிய கீதமென கேட்ட தன்னருவியின் கொலுசொலியில் சட்டென்று கதவினை திறந்து வெளியில் வந்திருந்தான்.
குடிலுக்கு முன் அவனவள் நிலவு ஒளியில் சோகப் பாவையாக நின்றிருந்தாள்.
தேவ் திரும்பிட முயல…
“டாக்டர் ப்ளீஸ்…”
அக்குரலை அவனால் கடக்க முடியவில்லை. அசையாது நின்றுவிட்டான்.
“நாம் சேர்ந்து இருந்ததைவிட, பிரிந்திருந்த நாட்கள் தான் அதிகம். காதலுக்கு பக்கம் தேவையில்லை. தூரத்திலும் அதீத காதல் கொள்ளலாம். ஆனால் இந்த விலகல் காதல் மூச்சு முட்டுது டாக்டர்” என்று கன்னம் வழிந்த கண்ணீரோடு மொழிந்தவள் தேவ் எதிர்பாராது அவனது இடையோடு கையிட்டு இறுக்கி அணைத்தவளாக மார்பில் முகம் புதைத்திட்டாள்.
தன்னவளை கட்டிக்கொள்ள கைகள் பரபரத்த போதும் முஷ்டி மடக்கி, கண்கள் மூடி விறைத்து நின்றான்.
சில நிமிடங்கள்… தன் வேதனைகளை தன்னவனுக்கு கடத்தியவள் விலகி ஓடிவிட்டாள்.
அப்படியே தரையில் மண்டியிட்டு உள்ளங்கையில் முகம் மூடி உடல் குலுங்கிய தேவ், இருள் வானை நோக்கி முகம் உயர்த்தி வெடித்து கதறினான்.
இந்நேரத்தில் தேனு தனித்து செல்வதை கவனித்து பின்னோடு வந்த யர்ரவுக்கு மகளின் செயலைவிட தேவ்வின் செயல் அதிர வைத்தது.
‘என் வார்த்தைக்காகவா?’
தேவ்வின் கதறல்…
மனிதர் மொத்தமும் உடைந்து நொறுங்கிய தருணம் அது. அமைதியாக சென்றுவிட்டார்.
அன்று வாசுவின் திருமணம்.
யர்ராவின் தங்கை மகள் தான் பெண்.
வாசுவிற்கு தேவ் மற்றும் தேனுவின் நிலையை நேரில் பார்க்கும்வரை யர்ராவுக்கு அவர்களின் காதல் புரியப்போவதில்லை என்பதாலேயே இருவரையும் வரவழைக்க தன் திருமணம் தான் காரணியென்று தேவ் சொல்லியதும் தனது திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டான்.
யர்ராவும் அவரது தங்கையும் எப்போவென்று காத்திருந்ததாலும், வாசுவுக்கு மதுரவிழி மீது விருப்பமிருந்ததாலும் உடனடி திருமணம் சாத்தியமாயிற்று.
வாசு நினைத்ததைப்போல் ஓரளவுக்கு யர்ராவுக்கு புரிய வைத்திட்டான். உணர்ந்தாரா என்பது அவர் மட்டுமே அறிந்தது.
தேனருவி அம்மனுக்கு முன்னிலையில் அருவியின் மத்தள இசையில் தான் வாசு மதுரவிழியின் திருமணம் நடைபெற்றது.
ரகுவின் மனைவிக்கு பிரசவ தேதி என்பதால் அவனால் வர முடியவில்லை. விரைவான திருமணமென்பதால் வாசு மற்ற நண்பர்களை அழைக்கவில்லை.
மதுராவின் கழுத்தில் தேனு மரகத மணியை அணிவிக்கும் கணம் அவளின் விழிகள் ஏக்கமாக தேவ்வை நோக்கியது. பனித்த கண்களில் துளி நீரை சட்டென்று உள்ளிழுத்திட்டாள்.
வாசு மதுராவுக்கு காட்டுமலர் சூடி மஞ்சள், குங்குமம் வைக்க… தேனுவின் பார்வை தேவ்வின் மீது அழுத்தமாக.
கூடியிருந்தோர் வேப்பம்பூ தூவி மணமக்களை ஆசிர்வதித்தனர்.
“இங்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு” என்ற சுலோ, “உனக்கும் இந்த முறையில் தான் கல்யாணமா?” என அவனின் மனதை தெரிந்துகொள்ள கேட்டிருந்தார்.
“அருவியோட விருப்பம் தான் ஆண்ட்டி” என்று பட்டென்று சொல்லியிருந்தான்.
யர்ராமுண்டி மகளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தார்.
அவளின் கண்ணீர், ஏக்கம், வலி யாவும் உள்ளத்தை நொறுங்க வைப்பதை உணர முடிந்தது அவரால்.
தேவ்வின் விலகல் எதனால் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது அவரால்.
அன்று அவருடைய காதலுக்காக அவர் செய்யாததை இன்று தேவ் அவனுடைய காதலுக்கு செய்கின்றானே! அன்று தேவ் நேரடியாக தன்னிடமே தன் மகளை கேட்டதில் தான் அவருக்கு கோபம். எங்களைப்பற்றி அனைத்தும் தெரிந்து எப்படி கேட்கலாமென்கிற கோபம். இன்று மகளின் கண்ணீர் முன்பு அந்த கோபம் ஒன்றுமில்லாமலாகியது.
அல்லிக்காக அவர் யோசிக்கக்கூட செய்யாத ஒன்றை, தன் மகளுக்காக அவளின் சந்தோஷமான வாழ்விற்காக, அவளின் உறவுகளும் வேண்டுமென்று, அவளே நெருங்கி சென்றும் பிடிவாதமாக விலகி நிற்கும் தேவ் உயர்ந்து தெரிந்தான்.
திருமணம் முடிந்ததும் கூட்டம் கலையத் தொடங்க, பெண்கள் படை சூழ, புதுமணத் தம்பதியர் கருவீரன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மணமகள் விளக்கேற்றி மணமகனுக்கு மஞ்சள் குங்குமம் கொண்டு வந்து வைத்திட வேண்டும். அதில் தனக்கு வேலையில்லையென்று தேனு உடன் செல்லாது தேங்கிவிட்டாள்.
அன்றே தேவ் திரும்பி செல்வதாக இருந்தது. அதனை அறிந்திருந்த தேனுவுக்கு இப்போதாவது அவனிடம் பேசிட வேண்டுமென்கிற எண்ணம். அதற்குத்தான் அவன் வாய்ப்பே கொடுக்காதிருக்கிறானே!
தேனுவை கவனித்திருந்த சுலோ…
“பாவம்டா” என்றார்.
தேனுவின் பார்வையில் தாக்குப்பிடிக்க முடியாத தேவ்…
“கிளம்பலாம் ஆண்ட்டி” என்று நகர்ந்தான்.
என்ன நினைத்து இங்கு வந்தானென்று அவனுக்கேத் தெரியவில்லை. எதுவும் செய்யாது மீண்டும் வலிகளை மட்டுமே சுமந்து திரும்பிச் செல்கின்றான்.
தேவ் செல்வதை பார்த்த யர்ரா, மகளின் கைப்பற்றியவராக…
“தேவ் தம்பி. நில்லுங்க” என்றிருந்தார்.
அவரின் அழைப்புக்கு நின்றிருந்தாலும் திரும்பாதிருந்தான்.
தேனுவை இழுத்துக்கொண்டு தேவ்வை நோக்கிச் சென்றார்.
நடுவிலிருந்த சுலோ யர்ராவின் செயலில் அரண்டவராக…
“சார் எதுவும் பிரச்சனை வேண்டாம். நாங்க இப்போ கிளம்பிடுவோம்” என்றார்.
நேராக தேவ்வின் முன் வந்தவர்,
தான் பிடித்திருந்த மகளின் கையை தேவ்வின் முன் நீட்டியவராக…
“கூட்டிட்டுப்போயிடுங்க தம்பி. என்னயிருந்தாலும் என்னால் சிலதில் இறங்கிவர முடியவில்லை” என்றவர், “மனசார… முழு மனசோடு தான் சொல்றேன். கூட்டிட்டுப்போயிடுங்க. அவளை எப்பவும் அழுகையோடும், வலியோடும் பார்க்க முடியல” என்றார்.
யர்ரா முழுமனதாக சம்மதிக்கிறேன் என்ற அடுத்த நொடி சுற்றத்தை கருத்தில் கொள்ளாது தன்னுடைய அருவியை தனக்குள் பொதிந்துகொண்டான்.
காத்திருந்த வார்த்தைகளாயிற்றே!
தவித்த தவிப்பிற்கெல்லாம், வலித்த வலிக்கெல்லாம் மொத்தமாக சேர்த்து தன்னை அவளிடம் ஒப்புவித்து, ஏக்கம் தீர்த்தான்.
தேனுவிற்கு அவன் மீதிருந்த புள்ளி அளவிலான கோபம் கூட, அவனின் அழுத்தமான… இனி உன்னை யாருக்காகவும் விட்டுவிடமாட்டேன் என்று உணர்த்திய அணைப்பில் மறைந்திருந்தது.
காதல் அனைத்தையும் மறக்கும் மன்னிக்கும். இங்கு தேவ் காதலை மட்டுமே காட்டியிருக்க அவளால் எப்படி கோபத்தை காண்பித்திட முடியும்.
கோவிலிலிருந்து திரும்பிய வாசுவுக்கும், அல்லிக்கும் யர்ராவின் மனமாற்றம் அத்தனை மகிழ்வை கொடுத்தது.
நடக்கவே நடக்காதென்ற தருணம் நடந்ததில் கொள்ளை மகிழ்ச்சி அனைவருக்கும்.
“இப்போவாவது கூட்டிட்டுப்போவீங்களா டாக்டர்?” அவனது அணைப்பில் இருந்தபடியே தேனு கேட்டிட…
“தூக்கிட்டேபோவேன்!” என்ற தேவ் சொன்னதை செய்திருந்தான்.
தேனுவுடன் தேவ் வந்த நாளை, அவனது மொத்த குடும்பமும் கொண்டாடித் தீர்த்தது.
தேனு, தேவ்வின் காதலில் அவர்களோடு சேர்ந்து வலியை அனுபவித்ததால்… மிகவும் எதிர்பார்த்த நாளினை தள்ளி வைக்க மனமின்றி அடுத்த முகூர்த்தத்திலே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
வாசுவும், சித்துவும் ஒரு வார்த்திற்கு முன்பே வந்துவிட்டனர். வித்யாவும். யர்ரா அல்லியையும், மதுராவையும் மூன்று நாட்களுக்கு முன்பே அனுப்பி வைத்திட்டார்.
ரகுவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்க… திருமணத்தன்று சரியான நேரத்திற்கு வந்துவிட்டான்.
தேனு, “நீங்கதான் என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும்” என்க, வழக்கமான முறையிலேயே திருமணம் ஏற்பாடாகியது.
திருவண்ணாமலை ஈசனின் முன் தேவதிரன், தேனருவியின் திருமணம், அவர்களின் வாழ்வு மலரவேண்டுமென வாழ்த்தும் நெருங்கிய உறவுகளுடன் இனிதே நடந்தேறியது.
கருவீரனின் மஞ்சள், குங்குமம் வாசுவை எடுத்துவரச் செய்திருந்தான் தேவ். தேனுவின் வகிட்டில் குங்குமம் வைத்துவிட சொல்லியபோது, அந்த மஞ்சள் குங்குமத்தை தான் தன்னவளுக்கு நெற்றியில் வைத்துவிட்டான்.
தேனுவின் கண்கள் அதீத காதலோடு தன்னவனை ரசித்தது.
தாலி கழுத்தில் ஏறிய பின்னரும் நம்ப முடியாது “இது கனவில்லையே?” எனக் கேட்டிருந்தவளின் கேள்விக்கு அவளின் நெற்றியோடு தன் நெற்றி முட்டி செயலால் தேவ் பதிலளிக்க…
வாசு, ரகு, சித்து, வித்யா, மதுரா என சிறியவர்கள் ஓவென்று கூச்சலிட்டு ஆர்பரித்தனர்.
பெரியவர்களின் முகம் உண்மையான சந்தோஷத்தை பிரதிபலித்தது.
“நீங்க எப்போ இப்படி லவ் பண்ணப்போறீங்க பாஸ்?” தன்னருகில் நின்றிருந்த சித்துவிடம் வித்யா கேட்க,
“அவன் லவ்வை இந்த ஜென்மத்தில் சொல்லமாட்டான். நீ உன் வீட்டு அட்ரெஸ் கொடு. நேரா பொண்ணு கேட்டே வந்துடுறேன்” என்று மகனை கேலி செய்தார் மேனகா.
“நீங்க சொல்லமாட்டிங்களா?” வித்யா கேட்டிட…
“உன்னால் என் லவ்வை உணர முடியுதுல? அப்புறம் ஏன் வார்த்தையால் சொல்லணும்” என்றவன்
“எப்போயிருந்து லவ்?” எனக் கேட்டான்.
“பார்த்த முதல் நாளே!” என்று வித்யா சொல்ல…
“இதெல்லாம் எங்க முன்னாடி தான் பேசிக்கணுமா? நீயாவது உன் அண்ணா மாதிரி ரொம்ப இழுக்கமா சீக்கிரம் கல்யாணம் பண்ணு” என்று தன்னிரு மகன்களையும் ராது வார்த்தையால் வாரினார்.
அங்கே சிரிப்பலை எழுந்து அடங்கியது.
மகளின் வளமான வாழ்வு அவள் பெறப்போகும் சொந்தங்களால் அறிந்த அல்லி மகிழ்வில் துளிர்த்திட்ட கண்ணீரை சட்டென்று மறைத்துக்கொண்டார்.
அனைத்து சடங்குகளும் முடிய வீட்டிற்கு கிளம்பினர். கோவில் தரை வெயிலில் அதீத சூட்டினை காண்பிக்க… தேவ் தேனுவை யாரையும் பொருட்படுத்தாது தூக்கிக்கொண்டான்.
“மச்சான்” என்று வாசு உற்சாகமாகக் கூச்சலிட…
“உன் பொண்டாட்டியை பாருடா” என்றிருந்தான் தேவ்.
அவர்கள் வீடு வந்தபோது… தோட்டத்து இருக்கையில் யர்ராமுண்டி அமர்ந்திருந்தார்.
“தெரிந்தவர்ன்னு சொன்னார். அதான் உட்கார வைத்தேன்” என்று காவலாளி சொல்ல… மாலையும் கழுத்துமாய் வந்து நின்ற மகளின் அருகில் வந்தார் யர்ரா.
என்றுமே செய்திடாத் தலை வருடலை அக்கணம் மகளின் உச்சி தொட்டு செய்தார். பாசத்தையும் தன்னுடைய கம்பீரமாகவே காண்பித்தார்.
“இதைப்பார்க்கத்தான் வந்தேன். நல்லாயிருங்க” என்றவர் வாசலோடு வெளியேற…
“தங்கிட்டு போகலாமே” என்று உள்ளே அழைத்தார் ஈஷ்வர்,
“இல்லங்க சார். என்னயிருந்தாலும் மொத்தமா என்னால் இறங்கிட முடியல” என்று வெளிப்படையாகக் கூறிய யர்ரா, “கூட இருந்து எல்லாம் பார்த்திட்டு மெதுவாவே வா” என்று மனைவியிடம் சொல்லிச்சென்றார்.
அவரின் மாற்றம் இந்தளவிற்கு வந்துள்ளதே! மொத்தமும் ஒருநாள் மாறும் என்று நம்பிக்கை கொண்டனர்.
எப்போதும்போல யர்ராவை இப்போதும் புரிந்துகொள்ள முடியாது தேனு செல்லும் அவரை பார்த்திருக்க… தேவ் அவளின் உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தான்.
தேனு தன்னவனின் அரவணைப்பில் அனைத்தும் மறந்து மலர்ந்து புன்னகைத்தாள்.
மணமக்களை வீட்டிற்குள் வரவேற்று பூஜையறைக்கு சென்று விளக்கேற்றக் கூறினார் ராது.
தேனு விளக்கேற்றி நிமிர, வித்யா அவளுக்கு மரகத மணியை சூடிவிட்டாள். தனக்காக செய்கிறான் என்பது புரிந்த தேனுவிற்கு இப்போதும் தேவ்வின் மீது காதல் பெருகியது.
அல்லி காட்டுமலர்கள் அடங்கிய சரத்தினை தேவ்வின் கையில் கொடுக்க… தன்னவளின் நீண்ட கூந்தலில் ஆசையோடு சூட்டினான்.
வாசு கருவீரனின் மஞ்சள் குங்கமத்தை தேனுவிடம் நீட்டி… “அதிக்கு வச்சுவிடு பாப்பா” என்க, “அதான் ஏற்கனவே அண்ணா நெற்றியில் இருக்கே” என்று சித்து கோவில் நிகழ்வை கொண்டு கேலி செய்திட… அதனை பொருட்படுத்தாத தேனு, எப்போதும் அவன் செய்வதை அவள் செய்திருந்தாள்.
தேவ்வின் பாதத்தின் மீது ஏறி நின்று… அவனின் நெற்றியோடு நெற்றி முட்டி மஞ்சள் குங்குமத்தின் தடத்தை அவனில் பதித்திருந்தாள்.
அங்கிருந்த அனைவரின் மனமும் நிறைந்துவிட்டது.
காதலுக்காக தவமிருந்தவன் வரம்பெற்றவனாகினான் அவனவள் கரம் சேர்ந்ததில்.
தேவதிரன் தேனருவியின் வாழ்வு அவர்கள் கொண்டிருக்கும் உயிர் நேசத்தால் வலிகளின்றி மகிழ்வில் பயணித்திடும்.
இது தேவதிரனின் காதல். தித்திக்கும் தேனருவி.
Post Views: 0
error: Content is protected !!