தித்திக்கும் தேனருவி 2

அத்தியாயம் 2

நம்மை ஒருத்தர் விட்டுவிட்டு சென்றுவிட்டால்… அவர்களை நினைத்து வருத்தம் கொள்ளாமல் இருக்க முடியுமென்றால்… நடிக்கத்தான் முடியும். வருத்தம் ஏதும் இல்லாது போன்று.

ஆனால் வருத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கான முயற்சி தான் வாழ்க்கை.

நம்முடைய வாழ்வில் நமக்கானவர்கள் கண்டிப்பாக உடன் இருப்பார்கள். இல்லாதவர்கள் நமக்கானவர்களாக இருக்க முடியாது. இதை விதியென்று சொல்வதைவிட காதலென்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

தேவதிரனின் தேனருவிக்கு நிச்சயமாகத் தெரியும்… அவளின் தீரன் அவளுக்கானவன் என்று. அதில் பெரும் நம்பிக்கை அவளுக்கு. அதனாலோ என்னவோ அவன் விட்டுச்சென்ற பின்பும், அவனின் நினைவுகளோடு மட்டுமே வாழ்கிறாள்.

ஆறு வருடங்கள் ஆயிற்று அவனை பார்த்து… அவனது குரல் கேட்டு.

அவன் வேண்டாமென்று மறுப்பதற்கான காரணங்கள் அவளது சூழலாகவும், அவளின் நலனுக்காகவும் இருக்கலாம்.

ஆனால் அனைத்தும் துறந்து உன்னுடன் வருகிறேன் என்றவளை மறுத்துச் சென்றவனின் மனதில் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான்…

அவனுக்கு அவள் மட்டுமல்ல… அவளைச் சார்ந்த அனைத்தும் வேண்டும்.

சொந்த மண்ணின்றி சிறு செடிக்கூட அடுத்த இடத்தில் வேர் பிடித்திட சிரமம் கொள்ளும்.

மனிதன் எளிதில் அனைத்தையும் விட்டுவிடுவானா?

உதறிவிட்டு வர ஒரு நொடி போதும். வந்த பின்னர்? நினைப்பு ஒன்று போதுமே. கொல்லாமல் கொன்று புதைத்திட.

நீ மட்டுமே வேண்டுமென்பது காதலுக்கு உரித்தானதாக இருக்கலாம். திருமண பந்தத்திற்கு பொருந்தாதே. இரு மனங்களோடு, சுற்றாத்தாரும் இணைந்திட வேண்டும். அப்போது தான் வாழும் வாழ்வில் நிறைவிருக்கும்.

இதைத் தாண்டி ஒரு அழுத்தமான காரணம் அவனிடத்தில் உள்ளது. 

அதற்காகவே தேவதிரனின் விலகல்.

அந்த விலகல் தனக்கானது என்று புரிந்ததாலே… அவனை மறக்காது துறக்காது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவனை நினைத்தே கடந்து கொண்டிருக்கிறாள் தேனருவி.

தீரனின் அருவி ❤️ .

அதிகாலை விடியலில்…

மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தேனருவியை, அவளது விடுதியறை தோழி வித்யா தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

“ஹேய் தேனு… எழுந்திரு!”

“இன்னும் டைம் இருக்கே வித்யா” என்ற முனகளோடு கவிழ்ந்து படுத்த தேனருவி, தலையணைக்கு அடியில் கைவிட்டு தன்னுடைய அலைப்பேசியை எடுத்து திரை நீக்கி, அதில் ஒளிர்ந்த முகத்தினை பார்த்து விழி மலர்ந்தாள்.

“குட் மார்னிங் டாக்டர்” என்றவளின் இதழில் நீண்ட புன்னகை.

தேனு அலைப்பேசியை கையில் எடுத்ததுமே, அவளை முறைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்துவிட்டாள் வித்யா.

இனி அவள் தன்பக்கம் திரும்பிட குறைந்தது மூன்று நிமிடங்களாவது ஆகுமென்று தெரியும்.

“டாக்டருக்கு என் நினைவு இருக்கா?” என்று அலைப்பேசியில் உள்ள நிழல் உருவத்திடம் கேள்வி கேட்டவள்,

“கண்டிப்பா இருக்கும். டாக்டருக்கு அருவியை ரொம்ப பிடிக்குமே! எப்படி நினைப்பில்லாமல் போகும்” என தானே பதிலும் சொல்லிக்கொண்டாள்.

“பார்க்கணும் போலிருக்கே! உங்களுக்கு அப்படியில்லையா?”

வித்யா தலையில் கை வைத்துக்கொண்டாள்.

தினமும் கேட்கும் பேச்சு… அவளுக்கு கடுப்பாக வந்தது. தனது தோழியின் காதலின் ஆழம் தெரிந்ததால் பொறுத்துப்போகிறாள்.

காதலைப்பற்றி எதையும் தேனருவி பகிர்ந்து கொண்டதில்லை. வித்யாவும் கேட்டுக்கொண்டதில்லை. ஆனாலும் இருவருக்கிடையேயும் ஒரு புரிதல். அவர்களது நட்பிற்கு காரணமாக இருந்தது.

“என்னை நினைத்து வருத்தத்தில் இருப்பீங்கன்னு தெரியும். நான் உங்களுக்குத்தான். ஒன்னு சேர காலம் தான் லேட் பண்ணுது. கொஞ்சம் பொறுத்துக்கோங்க… உங்க ஆசைப்படி முறையா உங்க பக்கத்தில் நானிருப்பேன்” என்று தினமும் கூறும் தேறுதல் வார்த்தையை இன்றும் கூறியவளாக எழுந்து அமர்ந்தாள்.

“அருகில் நானிருப்பேன்” என்று சொல்லுபவள் அதற்கான எந்தவொரு முயற்சியும் புள்ளி அளவிலும் செய்யவில்லை. அதற்கு அவனது வார்த்தைகள் ஒன்றே காரணம்.

முயற்சி செய்திடாது எப்படி இணைந்திட முடியும்?

காதலில் அன்பை கொட்டுவதை தவிர்த்து நீ ஒன்றும் செய்திட வேண்டாம். கொண்டுள்ள காதல் உண்மையெனில் இணை சேர்ந்திட அந்த காதலே போராடும்.

அந்த நம்பிக்கையில் தன் டாக்டர் மீது கொண்டுள்ள நேசத்தை மட்டுமே நெஞ்சில் பற்றாய் பற்றிக்கொண்டு வருடங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறாள்.

“டாக்டர் எழுந்திருப்பாரா வித்யா?” எனக் கேட்டுக்கொண்டே கண்களை தேய்த்து தோழியை ஏறிட்டாள்.

வித்யாவோ அந்த வெள்ளி முளைத்திடாத நேரத்திலேயே வெளியில் செல்லத் தயாராகியவள் போன்று கிளம்பியிருந்தாள்.

“எங்க கிளம்பிட்ட?”

“அடியேய் உன்னை கொல்லப்போறேன் பாரு” என்ற வித்யா, “நைட்டே சொன்னேன் தானே ஊருக்கு போறேன். ஆறு மணிக்கு ட்ரெயின். நீதான் என்னை ஸ்டேஷனில் டிராப் பண்ணனும்” என்றவள் கோபத்தில் புசுபுசுவென மூச்சினை இழுத்து வெளியேற்றினாள்.

“ஹோ… அக்காக்கு பேபி ஷவர்’ல? மறந்துட்டேன்” என்றதோடு,

“வார்டனிடம் பெர்மிஷன் வாங்கிட்டியா?” என வினவிய தேனு, வித்யாவிடம் பதிலை எதிர்பாராதவளாக, குளியலறைக்குள் புகுந்து பத்து நிமிடத்தில் வெளிவந்தாள்.

வித்யாவின் படுக்கையில் தயாராக இருந்த பையினை எடுத்துக்கொண்ட தேனு, “வா போவோம்” என்று தன்னை முறைத்துக்கொண்டு நின்றிருந்த வித்யாவை பிடித்து இழுத்துக்கொண்டு, விடுதியை விட்டு வெளியில் வந்தாள்.

விடுதி காப்பாளரிடம் வித்யா ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்ததால், அந்நேரம் வெளியில் செல்ல அவர்களுக்கு எந்த தடையும் இருக்கவில்லை.

விடுதியில் இருசக்கர வாகனம் வைத்திருக்க அனுமதி உண்டு. தோழியர் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதால், ஒன்றாக சேர்ந்து இருசக்கர வாகனம் ஒன்றை தங்களின் தேவைக்கு வாங்கியிருந்தனர்.

“என்னை விட்டுட்டு நீ தனியா வந்திடுவதானே?” கேட்டபடி தேனுவின் பின்னால் அமர்ந்தாள் வித்யா.

“நான் ரிட்டர்ன் வரும்போது நல்லா விடிஞ்சிருக்கும் வித்யா. வா உன் ட்ரெயினை பிடிக்க முடியுதா பார்ப்போம்” என்று தார் சாலையில் தன் நெற்றி கேசம் பறந்திட வாகனத்தை சீற விட்டாள் தேனருவி.

அரை மணி நேரத்தில் நகரத்தின் மத்திய ரயில் நிலையம் வந்து சேர்ந்தார்கள்.

“நீயும் வான்னா வரமாட்டேங்கிற!” வித்யா குறைப்பட்டுக் கொண்டாள்.

மூன்று வருடங்களாக ஒன்றாக வேலை பார்க்கின்றனர். ஒவ்வொரு விடுமுறைக்கும் வித்யா தவறாது தன் இல்லம் சென்றிடுவாள். ஒருமுறை கூட தேனு அவளது வீட்டிற்கு சென்றதில்லை. அவளை பார்த்திடவும் உறவுகள் என்று யாரும் வந்ததும் கிடையாது.

சொந்தமென்று அண்ணன் மட்டுமே அலைப்பேசி வழி அழைப்பான். ஒருநாள் தவறாது காலை நேரம் வரும் அழைப்பினை ஒன்றைக்கூட இத்தனை வருடங்களில் தேனு ஏற்றதே இல்லை.

எப்போதும் உதட்டில் சின்ன புன்னகையை தவழவிட்டபடி வலம் வரும் தேனு வித்யாவுக்கு என்றுமே புரியாத புதிர் தான்.

இந்த மூன்று வருடத்தில் தேனுவைப்பற்றி வித்யாவுக்கு தெரிந்த இரண்டே விடயம்… அவளது பெயர் தேனருவி என்பதும், ஆறு வருடங்களாக ஒருத்தரை காதலிக்கிறாள் என்பதும் மட்டுமே! அந்த நபரின் பெயர் கூட தேனு டாக்டர் என்று சொல்லித்தான் அறிவாள்.

“இப்படியிருக்காத தேனு. குடும்பமென்று ஆட்கள் இருக்கும்போது எதற்கு இந்த வனவாசம். அட்லீஸ்ட் உனக்கு தினமும் கால் செய்யும் உன் அண்ணனிடமாவது ஒரு வார்த்தை பேசேன்” என்று வித்யா பலமுறை சொல்லியிருக்கிறாள்.

அதற்கெல்லாம் தேனுவின் பிரதிபலிப்பு பற்கள் தெரியா சன்னமான சிரிப்பு.

வித்யா தான் தன்னைத்தானே நொந்தவளாக இப்போதெல்லாம் அப்பேச்சினை எடுப்பதில்லை. அவள் போக்கிலே அவளை முழுமையாக தன் நட்புக்குள் ஏற்றுக்கொண்டாள்.

தேனுவின் மனதில் சுமக்க முடியாத பாரம் உள்ளதென்று வித்யாவுக்குத் தெரியும். அதை தன் புன்னகையால் மறைக்கின்றாள் என்பதும்.

இருப்பினும் எப்படி அவளால் நாள் முழுக்க மலர்ச்சியாகவே இருக்க முடிகிறது? இதனை தேனுவிடமே வித்யா பலமுறை கேட்டதுண்டு.

“நான் அழுதால் அவங்களுக்கு பிடிக்காது.” அதையும் சிரித்துக்கொண்டே சொல்வாள்.

ஒருமுறை கையில் அடிபட்டபோதும்…

அவளது கண்கள் மட்டுமே கலங்கியது. உதட்டில் புன்னகை உறைந்திருந்தது.

நிச்சயம் ஏற்பட்டிருந்த காயத்திற்கு வேறு யாராக இருந்திருந்தாலும் கதறி துடித்திருப்பர்.

அன்று தான் வித்யா தன் தோழியின் காதலின் ஆழத்தை முழுதாய் உணர்ந்தாள் என்கலாம்.

காதலிப்பதாக சொல்லும் நபரை நேரில் பார்த்தே ஆறு வருடங்களாகிறது. இருந்தபோதும், அன்று அவன் சொல்லிய ஒவ்வொரு வார்த்தைக்கும் இன்றளவிலும் மதிப்பளித்து அவனது நினைவாக மட்டுமே வாழ்கிறாள்.

என்ன மாதிரியான காதல் இது?

இப்படி காதலில் பித்தாய் இருப்பவளுக்கும் அவன்மீது கோபமென்ற ஒன்று உள்ளது. அதனை காட்டிட அவள் உடனிருக்க வேண்டும். அதற்கு அவன் தான் வாய்ப்பே கொடுத்திடாது இருக்கின்றானே!

உருகி உருகி அவனுக்காக மருகுபவள், அவனை வைத்து செய்யும் நாளும் உண்டு. வெகுவிரைவில். காதலை மட்டும் காட்ட தவம் இருப்பவள், தன் கோபத்தை தன்னவனிடம் காட்டிடுவாளா?

“இவ்ளோ லவ் பன்றியே தேனு. அவங்க இருக்க இடம் உனக்கு தெரியும் தானே! நேரில் போய் பார்க்கலாமே?”

என்றோ வித்யா கேட்ட கேள்விக்கு தேனு அளித்த பதில்…

“நானா அவங்களை தேடி வரக்கூடாது சொல்லிட்டாங்க” என்றாள். இதனை சொல்லும்போது குரலில் ஒருவித சோகம், இழை ஓடினாலும்… தேனுவின் முகத்தில் புன்னகை குடிக்கொண்டிருந்தது.

வித்யாவுக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

தனிமையில் கூட காதலுக்காக வருந்தி பார்த்ததில்லை.

தேனு காதலில் காட்டும் அதிகப்படியான விஷயம், அலைப்பேசியில் பதிந்திருக்கும் அவனது புகைப்படத்திடம், நேரில் இருப்பதைப்போல் உரையாடுவது மட்டுமே.

இத்தனை காதலை கொண்டிருப்பவள் இச்சிறு கிறுக்குத்தனம் கூட இல்லாமல் எப்படி…? வித்யா தனக்குள் நினைத்துக்கொள்வாள்.

“அவங்க நெம்பர் உன்கிட்ட இல்லையா?”

“இருக்கு.”

“அப்போ ஒருமுறை கால் செய்து பேசிட முயற்சிக்கலாமே?”

“அவங்க குரல் என் நெஞ்சுல பதிஞ்சு இருக்கு. என் காதில் அருவின்னு அவங்க கூப்பிடுறது கேட்டுட்டே இருக்கு. அப்புறம் எதுக்கு போன் பண்ணி கேட்கணும்?”

அக்கணம் வித்யா தேனுவை மலைப்பாய் பார்த்தாள்.

“அவங்க சோஷியல் மீடியாவில் இல்லையா?”

“நானில்லையே!” 

விலகிச் சென்றால் நெருங்கி செல்லும் என்பது இயற்கை. அந்த விலகளையும் விலகி நின்று காதலாய் ஏற்பது தேனருவியாக மட்டுமே இருக்கும்.

தேனுவின் காதலில் பிரமிக்கும் வித்யாவுக்கு, அவளை விட்டு தள்ளி நிற்கும் தேவ்வின் மீது அதீத கோபம்.

தேனு இப்படி அவன் மீது காதல் கொண்டிருக்க… அவன் எத்தகைய காதலை அவளிடம் காட்டியிருக்க வேண்டும். வித்யாவுக்கு அவனின் பக்கம் தெரியவில்லை. புரியவில்லை.

அவனை நேரில் பார்த்தால் கேட்க வேண்டுமென்றே ஒரு நான்கு கேள்விகளை மனதில் வைத்திருக்கிறாள்.

செல்லும் இடத்தில் எதிர்பாராது… யாரென்று தெரியாமலே கோபம் கொண்டுள்ள அவனை நேரில் பார்க்கவிருக்கிறோம் என்பதை அறியாது ரயிலில் ஏறி தனக்குரிய இருக்கையில் அமர்ந்தவள் தன்னுடன் வருமாறு பலமுறை கேட்டும் மறுத்தவளை மீண்டும் ஒருமுறை அழைத்திருந்தாள்.

ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும்… 

தேனுவை விட்டுச் செல்கிறோமே என்கிற வருத்தம் வித்யாவுக்கு வரும். தேனு அவள் வீட்டிற்கு சென்றாலும் பரவாயில்லை. நல்ல நாட்களில் கூட செல்லாமல் இருப்பவளை காண்கையில் பெற்றோரிடம் அப்படியென்ன பிரச்சனை என்று தான் தோன்றும். ஆனாலும் கேட்டுக்கொள்ளமாட்டாள்.

“எனக்கு ஆபிசில் வொர்க் இருக்கே” என்று வித்யாவின் அழைப்பை எப்போதும்போல் மறுத்த தேனு…

ரயில் தண்டவாளத்தில் ஓடத் துவங்கியதும் விடுதி நோக்கிச் சென்றாள்.

******

மருத்துவமனை வந்த தேவ்…

தாய் கிளப்பிவிட்ட நினைவுகளில் மூழ்கிடாது இழுத்து பிடித்தவனாக தன் வேலையில் கவனம் பதித்தான்.

நேற்று அறுவை சிகிச்சை செய்து முடித்த சிறுமிக்கு வேண்டிய அனைத்து பரிசோதனைகளையும் தானே முன்னின்று செய்தான்.

தன்னுடைய நோயாளிகள் அனைவரிடமும் மூழ்கி… தன் நெஞ்சம் சுமக்கும் கனத்த நினைவுகளிலிருந்து சில மணி நேரங்கள் தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டான்.

பார்வையாளர் நேரம் முடிந்த பின்பும்… இல்லாத வேலைகள் இருப்பதைப்போல் பார்த்துக்கொண்டிருந்தவன், அதற்கு மேலும் ஒன்றுமில்லையென நிர்வாகப் பிரிவின் கணக்குகளை தானே சரிபார்க்கத் துவங்கினான்.

“எதுக்குப்பா இந்த ஓட்டம். யாரை மூழ்கடிச்சிக்க இப்படி ஓடுற?”

காலையிலிருந்து தன் பணியில் கண்ணாக இருந்தாலும், மகனின் மீதும் ஒரு கண் வைத்து இருந்தாரே ஈஷ்வர்.

மனதோடு அவன் படும் வேதனையை பார்க்க முடியாது கேட்டுவிட்டார்.

“என்னை நானே மறக்கணும் டாட்.” 

தேவ் இருக்கையில் அமர்ந்திருக்க, தனக்கு பக்கவாட்டாக நின்றிருந்த தந்தையின் வயிற்றில் முகத்தை அழுத்தியவனாகக் கூறினான்.

“அம்மா ஆசையும் தப்புன்னு சொல்ல முடியாதே அதி.” மகனை தனக்குள் அணைத்தவராகக் கூறினார்.

“புரியுது டாட்” என்றவன், “அவள் இல்லாமல் ஒரு வாழ்க்கை… கண்டிப்பா முடியாதுப்பா” என்றான்.

“இது புரிந்ததால் தான் ராது உன்னை வற்புறுத்துறா(ள்). எங்க நீ இப்படியே இருந்திடுவியோன்னு அவளுக்குள் பயம் வர வைத்திட்ட அதி கண்ணா!” என்றவர்…

“ஆறு வருடங்கள் ஆகிருச்சே. இப்பவும் அப்படியே இருப்பாங்களா? மனசு மாறியிருக்கலாம் தானே! நான் பேசட்டுமா அதி?”

……..

தேவ்விடம் அமைதி.

கண் முன்னே ஒரு பொண்ணுக்கு நடந்த நிகழ்வு… அந்த பெண்ணிடத்தில் தன்னுடைய அருவியை வைத்து கற்பனை செய்திடவே அவனால் முடியாத போது, நிஜத்தில் நிகழ்வில் எப்படி தன்னவளுக்கு அப்படியொரு சூழலை உருவாக்கிடுவான். அதற்கு அவன் தான் காரணமாக இருந்திடுவானா என்ன?

“அவங்க எப்பவும் மாறமாட்டங்க டாட்” என்றவனின் குரலில் விரக்தி.

“இன்னமும் பழங்காலம், பாரம்பரியம் அப்படின்னு அதுலே மூழ்கியிருக்காங்க. நான் அவங்களது இன வழக்கத்தை குறையாக சொல்லவில்லை. நடமுறைக்கு ஏற்றவாறு தங்களது சூழலையும், நிலையையும் மாற்றிக்கொள்ளலாமே!” என்றவனின் பேச்சு ஈஷ்வருக்கும் புரியத்தான் செய்தது.

யுகங்கள் மாறினாலும் சில மனிதர்களின் வேரோடு ஊறிப்போயிருக்கும் சிலவற்றை எப்போதும் மாற்றிட முடியாது. அதில் இனம், கட்டுப்பாடு, பாரம்பரியம், சடங்குகள் என்பது அடக்கம்.

“படிப்பதற்கு, வேலைக்கென்று வெளியூர் அனுப்பி வைக்கிறார்களே? அது அவர்களின் குலத்திற்கு மாற்று இல்லையா? பிறர் செய்யும் உதவிகளை ஏற்றுக்கொள்கிறார்களே… அது மட்டும் எப்படி?” பல நாள் தனக்குள்ளிருக்கும் ஆதங்கத்தை மகனின் முன் வைத்தார்.

“அவர்களது கட்டுப்பாட்டிற்கு பாதகம் ஏற்படுத்தாத செயல்கள் யாவும் அங்கே அனுமதிக்கப்படும்” என்று பதில் சொல்லிய தேவ்வின் உதட்டில் நெளிவான புன்னகை.

ஈஷ்வருக்கு அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை.

எக்காலத்திலும் மகனின் உறுதி கொஞ்சமும் அசையாதென்று புரிந்த பின்னர் பேசி என்ன பயன் என்ற நிலைக்கு வந்திருந்தார் அவர்.

ஈஷ்வரன் அப்படியே நின்றிருக்க…

“இன்னும் என்ன டாட் கேட்கணும்?”

“நான் உன்னோட அப்பான்னு தெரியவரும்போது என்ன நடக்கும்?” என்று கேட்டவர், தேவ் பதில் வழங்கும் முன்பே…

“இதுவரை அவர்களுக்காக நாம் செய்து கொடுத்த அனைத்தையும் வேண்டாமென்று தூக்கிப்போட்டுவிடுவாங்களா?” என்றார்.

“சொல்லும் எண்ணம் உங்களுக்கு இருக்கா?”

“நீ சொல்ல விட்டுவிடுவாயா?”

ஈஷ்வரன் அவ்வாறு கேட்டதும் தேவ்வின் முகத்தில் பல நாட்களுக்குப்பின் அதரங்கள் நீண்ட சிரிப்பு.

“இந்த சிரிப்புக்காக என்ன வேணாலும் செய்யலாம். ஆனால் என்ன செய்யணும் தெரியல” என்றவரிடம் மிதமிஞ்சிய வருத்தம்.

“நான் பலமுறை அங்கு போகிறேன். ஒருமுறை கூட வாசு அவன் தங்கச்சியை எனக்கு காட்டவேயில்லையே! நீ காட்டக்கூடாது சொல்லிட்டியா?”

“டாட்…” என்ற தேவ், “அவள் அங்கில்லை. ஃபோர் இயர்ஸ் ஆகுது மேடம் அங்கு போய்” என்றான்.

“எங்கிருக்காள் தெரியுமா?”

“தெரியும் நினைக்கிறேன்.”

“இதென்ன பதில் அதி?”

“வேறென்ன சொல்லணும் டாட். வேண்டாம் முடிவு செய்து விலகியிருக்கோம். எதுக்கு இந்த குறுக்கு விசாரணை. நான் தான் என் நேரில் வந்துவிடாதேன்னு சொன்னேன். அதுக்கு அவளை கண்டுபிடித்து என் கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்தலாம் நினைக்குறீங்களா? அவளாக என் முன்னால் வந்திடுவாளா?” என்ற தேவ்வின் மனம் முழுக்க வந்துவிடமாட்டாளா என்கிற ஏக்கம்.

“அப்போ ராதுக்கு நீதான் பதில் சொல்லணும். இதில் உன் சித்தி வேற, அங்கு அருளை உன்கிட்ட பேசச்சொல்லி தொல்லை செய்கிறாளாம்” என்றவர், “இம்முறை கேம்ப்’க்கு நீதான் ஹெட்” என்றார். தந்தையாக இல்லாது, அவன் வேலை பார்க்கும் மருத்துவமனையின் டீனாக சொல்லிட அவரை அதிர்ந்து ஏறிட்டான் தேவதிரன்.

இதுபோன்ற அவரின் வார்த்தைகளை இதுவரை அவன் மீறியதே இல்லை. மீறிடவும் முடியாது. தானே மற்றவர்களுக்கு வழியமைத்துவிடக் கூடாது என்பதற்காகவே வேலை என்பதில் அத்தனை கவனமாக இருந்திடுவான்.

ஒரு விஷயத்திலிருந்து தூரமிருப்பதைவிட… அருகில் சென்று என்னவென்று இறங்கி பார்த்தால் தான் அது நமக்கானதா இல்லையா என்று தெரியும்.

இன்னும் எத்தனை காலங்களுக்கு இப்படியே இருந்திட முடியும். அதுதான் மகனை அவனது காதலோடு சேர்த்து வைத்திட, தானே களத்தில் இறங்கிவிட்டார் ஈஷ்வர்.

ஈஷ்வர் சொல்லிச் சென்றதில் தேவ்விடம் அதிர்வு. அவர் சென்ற பின்பும் அப்படியே அமர்ந்திருந்தான்.

மீண்டும் அங்கு சென்றிட முடியுமா? அடி வைத்திட முடியுமா?

உள்ளுக்குள் எழும்பிய நடுக்கம் உடல் முழுவதும் பரவி… சட்டென்று வியர்வையில் நனைந்திட்டான்.

“ப்ளீஸ் டாக்டர். கூட்டிட்டு போங்களேன். நீங்காயில்லாமல் நானெப்படி?” கண்ணீரில் தழுதழுத்து கரகரத்த குரல் அவனின் செவி தீண்டி இதயம் உடையச் செய்திட… எங்கோ நினைவுச் சுழலில் சிக்கிக்கொள்ள இருந்தவனை கலைத்து மீட்டது…

வாசுவிடமிருந்து வந்த அலைப்பேசி அழைப்பின் ஒலி.

error: Content is protected !!
Scroll to Top