அத்தியாயம் 3
“நம்ம ஊர் கட்டுப்பாடு தெரியும் தானே?”
வானளவு உயர்ந்து உச்சியில் ஒன்றோடொன்று உரசி, குடைபோல் விரிந்து மையத்தில் குடிலாய் இடமளிக்கும் மூங்கில் மரங்களுக்கு நடுவில் கூடியிருந்த மக்களின் முன் நடுநாயகமாக அமர்ந்திருந்த நடுத்தர வயது மனிதர் சிங்கமெனக் கேட்க,
அனைவரின் முன்பும் உடல் குறுகி தலைகவிழ்ந்து நின்றிருந்த பெண், கண்ணீர் பெருகும் கண்ணோடு, அவர் கேட்ட கேள்விக்கு ஆமென்று தலையசைத்தாள். தொண்டையில் ஒலித்த விம்மலோடு.
“சடங்குகள் ஆரம்பியுங்கள்!”
அடுத்த நாள் அப்பெண்ணை தேவதிரன் பார்த்தது…
இப்போதும் நெஞ்சம் கனத்தது.
அப்படியொரு நிலை தன்னுடைய அருவிக்கு வேண்டாமென்று தான் அவன் தனது உயிர் காதலை துறந்தது.
மீண்டும் அந்த நினைவுகள் உயிர் கொண்ட இடத்திற்குள் எப்படி அவனால் சென்றிட முடியும்?
வேதனையில் மூழ்கியவனின் சிந்தை கலைத்தது அலைப்பேசியின் ஒலி.
“அதி… அதிரா!”
அடைத்த தொண்டையை சரி செய்துகொண்ட தேவ்…
“சொல்லுடா… என்ன விஷயம்?” என்று சாதரணமாகக் கேட்டான்.
“எப்போ கிளம்புற?”
“எங்க?”
“நீ வரலையா?”
“வரணுமா?”
“பார்க்கணும் போலிருக்குடா!” வாசுவின் குரலில் அழுகையின் சாயல்.
“எல்லாம் மறந்துட்டு… முடியாது தான். ஆனால், ஒருநாள் பழைய தேவ்வா, வாசுவா இருந்திட முடியாதான்னு நித்தம் வேதனையா இருக்குடா! நான் என்ன தப்பு பண்ணேன்னு என்னைக்கூட பார்க்க வரக்கூடாதுன்னு சொல்லிட்ட.” நண்பனிடம் உரிமையாய் கோபம் கொண்டு கேட்டான்.
வாசு… மலைவாசன். மருத்துவன். தேவ்வின் உற்ற நண்பன். அவனுக்கு நண்பன் மட்டுமல்லவே! அவனவளின் அண்ணனாயிற்றே! முகம் பாராது பேசிவிடலாம். இயல்பாய் எதிர்கொள்ள முடியுமா?
தேவ்வின் காதல் முளைத்த நொடி முதல்… வேண்டாமென்று மன்றாடியவனாயிற்றே. இது இப்படித்தான் முடியுமென்று தெரிந்ததாலோ என்னவோ தன்னுடைய தங்கை தேவ்வுக்கு ஒத்துவரமாட்டாளென்று ஆயிரமுறை சொல்லியிருப்பானே!
தனது தங்கைக்கு நல்லவன் ஒருவன், அதுவும் தன்னுடைய நண்பனே வாழ்க்கைத்துணையாக கிடைக்கவிருக்கிறான் என்ற சந்தோஷத்தைவிட, இந்த காதலால் நண்பனின் சந்தோஷத்திற்கு பாதகமென்றே காதலை தடுத்தான்.
கேட்டானா இவன். காதல் மட்டுமே பிரதானமாக தெரிந்த வேளையில்… வாசுவின் பேச்சுக்கள் மூளைக்குள் ஏறியிருந்தால்… இப்போது ரணமாய் கொல்லும் வலிகளுக்கு இடமிருந்திருக்காதே!
இந்த காதல் பல பேரின் மகிழ்ச்சியை, உறவுகளைக் கொன்றிருந்தது.
“ஒழுங்கா பேசக்கூட மாட்டேங்கிறடா!” வாசுவிடம் ஏக்கம்.
“அப்படியில்லை வாசு” என்ற தேவ்… “ஹாஸ்பிடல் எப்படியிருக்கு? எல்லாம் ஓகே தானே? மெடிசன்ஸ் ரெகுலரா வருதா?” என்று டி மருத்துவமனையின் கீழ் செயல்படும் மருத்துவமனை ஒன்றின் செயல்பாட்டை ஆராயும் தலைமை மருத்துவராகக் கேள்வி கேட்டதோடு, “அங்கு எல்லாம் வசதியாகத்தானே இருக்கு. ஹயர் ஸ்கூலுக்கு அப்ரூவல் வந்திருச்சே. அதுக்கான கட்டிடவேலை ஒழுங்கா நடக்குதா?” என்று ஈஷ்வரன் தத்தெடுத்த கிராமத்தின் பொறுப்புகளுக்கு உடையவனாகக் கேட்டான்.
“நான் என் பிரண்ட் தேவதிரனுக்கு கால் பண்ணேன்.” மிக மிக அழுத்தமாகக் கூறினான் வாசு.
“வேறென்ன பேசுறது தெரியல வாசு.” தேவ் உண்மையைத்தான் கூறினான். ஒருகாலத்தில் அவனிடம் வாய் ஓயாது பேசிக்கொண்டிருந்தவன், இன்று என்ன பேசுவதென்றே தெரியவில்லை என்று சொன்னதில் வாசுவால் உணரப்பட்டதெல்லாம் தேவ் சுமக்கும் வலி. அப்பட்டமான வலி.
“ப்ளீஸ் அதி… கஷ்டப்படுத்தாதடா! ஆறு வருஷம் ஆச்சு. இன்னுமாடா வெளியில் வரல நீ?” நண்பனைப்பற்றி முழுதாய் தெரிந்துகொண்டே வினவினான்.
எல்லாம் துறந்து வந்த அன்றிலிருந்து வாசுவையும் தேவ் ஒதுக்கித்தான் வைத்தான். வாசுவால் நண்பனின் ஒதுக்கத்தை ஏற்க முடியாது, நெருங்கி வந்துகொண்டே இருக்க… தேவால் ஒரு கட்டத்தில் அவனை மறுக்க முடியவில்லை. வாசு இல்லாதது அவனுக்கும் கஷ்டமாக இருந்திட… பேச்சுக்கு மட்டும் இடமளித்தான்.
வாசுவாக அழைத்தால் மட்டுமே பேசுவான். தவறிக்கூட அவனது அருவியைப்பற்றி கேட்டிட மாட்டான்.
தேவ், தன் தங்கையை பற்றி விசாரித்திடமாட்டானா? எல்லாம் சரியாகிடாதா? வாசுவின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிட… முற்றிலும் நடந்து முடிந்தவற்றை தவிர்த்தான் தேவதிரன்.
“காதலிச்சிருக்கியா வாசு? அப்போ எந்நிலை உனக்கு புரியாது.”
தேவ்வின் பதிலில் அவனது வலியை உணர்ந்த வாசு…
“மிஸ் யூடா” என்றான்.
தேவ் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டான்.
வேண்டாமென்று செல்ல… வேண்டுமென்று தேடி வரும் நட்பு எளிதில் கிடைக்கப் பெறுவதில்லை.
அப்படிப்பட்ட நட்பு, தேவ்விடம் வாசு காட்டுவது.
உண்மை அன்பை வெளிப்படுத்த நமக்குத் தெரிந்த ஒரே வழி வார்த்தைகள் தானே! இன்று ஏனோ அதனை இரு வார்த்தையில் காட்டிவிட்டான் வாசு.
மிஸ் யூ என்பது அத்தனை எளிதாக சொல்லப்படுவதில்லை. மனதால் உணரப்பட்டால் மட்டுமே வாய் வழி வெளிவரும்.
“மிஸ் யூ லாட்.” அடைத்த தொண்டையை சரிசெய்து… மெல்ல முனகினான் தேவ்.
இரு ஆண்களுக்கு இடையேயான அன்பை உணர்த்த வார்த்தைகள் தேவையில்லை. உணரப்படும் ஒன்று வார்த்தை வடிவம் பெறுகிறதென்றால் அங்கு சொல்லப்படாத அன்பு எத்தனை ஆழம் இருக்க வேண்டும்.
கேட்ட வாசுவிற்கு கண்கள் பனித்தது.
நடந்து முடிந்தவற்றில் வாசுவின் மீது தவறென்று எதுவுமில்லை. ஆனால் வாசுவின் நட்பு, விலக நினைப்பதை நெருங்க வைத்திடும் என்பதாலேயே வாசுவிடமிருந்து தன்னை தள்ளிவைக்க முனைந்தான். முடியாது போனது.
தேவ் கொண்ட காதலை விட நட்பிற்கு வயது அதிகமாயிற்றே! காதாலுக்காக நட்பை இழக்க தேவ் தயாராக இல்லை.
அத்தோடு அவனவள் கொண்ட கனவை நிறைவேற்றிட… மீண்டும் செல்ல மறுக்கும் இடத்திலிருக்கும் நபர் ஒருவர் வேண்டுமே! அதனால் காரியத்திற்கு மட்டும் பழகும் விதமாகக் காட்டிக்கொண்டு வாசுவிடம் நட்பை மறைத்து உடன் நிறுத்திக்கொண்டான்.
நண்பனின் மனம் புரிந்ததாலே வாசுவும்… ‘நீ தள்ளி நிற்கிறாயா? நின்றுகொள். நான் உன்னை பற்றிக்கொள்கிறேன்’ என ஒட்டியே தொடர்ந்து கொண்டிருக்கிறான்.
பணி நிமித்தமாக பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும், ஈஷ்வரனை முன்னிறுத்தி வாசுவை பார்ப்பதை இன்று வரை தவிர்த்து வருகிறான்.
எவ்வளவு முயன்றாலும் நேரில் தள்ளி நிறுத்துவது முடியாத காரியமாயிற்றே! அப்படியொரு சூழல் வேண்டாமென்பதற்காகவே தேவ்வும் ஒவ்வொன்றிலிருந்தும் தன்னை ஒளித்துக் கொள்கிறான்.
இன்று இப்படி தன்னுணர்வை தேவ் வெளிக்காட்டிடுவான் என்று எதிர்பாராத வாசுவுக்கு அவனை இந்த நொடியே அணைத்து தானிருக்கிறேன் என்று காட்டிட வேண்டுமென்ற வேகம்.
முடியாதே!
தேவ்’வாக நினையாது அவனை பார்த்திட முடியாதே!
“ப்ளீஸ் டா அதி. பார்க்க சான்ஸ் கொடுடா!” கிட்டத்தட்ட மன்றாடும் குரல்.
“ம்… வறேன்.”
தேவ் ஒப்புக்கொண்டதில் அத்தனை மகிழ்ச்சி வாசுவுக்கு.
தேவ்வுக்கும் தன்னை துரத்தும் ஈர நினைவுகளிலிருந்து கொஞ்சம் வெளிவந்திட வேண்டும் போலிருக்க… வாசு அழைக்கும் சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டான்.
“வேற…?”
“எதாவது காரணமிருந்தால் தான் கால் பண்ணனும்… பேசணும் அப்படின்னு ஆகிருச்சா அதி?”
கடந்து சென்ற வருடங்களில் ஒருநாளும் வாசு இப்படியெல்லாம் பேசியதில்லை. ஈஷ்வரனும் என்றுமில்லாது இன்று புதிதாகத்தான் பேசிச்சென்றார்.
இருவருக்கும் என்ன ஆனதென்ற கேள்வி தான் தேவ்வின் உள்.
“என்ன புதுசா?”
“உன் இஷ்டத்துக்கு விட்டதுதான் தப்பு” என்ற வாசு, “எனக்கு என் பழைய அதி வேணும். இந்த உணர்வற்ற அதி வேண்டாம்” என வெளிப்படையாகவேக் கூறினான்.
“நான் நார்மலாகத்தான் இருக்கேன் வாசு.”
“ஹோ…”
“நீயும் புரிஞ்சிக்காமல் பிஹேவ் பண்ணாத வாசு.”
“உன்னை புரிஞ்சிக்கிட்டதால் தான் இத்தனை வருஷம் பொறுமையா இருந்தேன். இனியும் இப்படியே இருந்தால், என் நண்பன் வாழ்க்கையும், தங்கச்சி வாழ்க்கையும் என்னோட கண் முன்னாலே வீணாகிடும் போல” என்றான் வாசு.
‘அப்போதில்லாத உதயம் இப்போதென்ன?’ கேட்டிட தொண்டை வரை வந்துவிட்ட சொற்களை வெளிவிடாது விழுங்கிக்கொண்டான் தேவ்.
“அப்போ உன் தங்கச்சி… இல்லை, என்னோட அருவியை எனக்கே எனக்குன்னு கொடுத்திடு.” வாய் திறந்து கேட்டுவிட்டான்.
காதலித்த காலத்தில் இப்படியொன்றை தேவ் தன்னிடம் கேட்டுவிடக் கூடாதென்று பயந்த வாசு, பிரிவிற்கு பின்னர் கேட்டிடமாட்டானா என்று ஏங்கியது.
“கூட்டிட்டு போயிடு.” வாசு பட்டென்று சொல்லியிருந்தான்.
“அவள் மட்டும் போதுமாக இருந்திருந்தால்… இத்தனை வருடம் வீணடித்திருக்கமாட்டேன். அவளுக்குன்னு இருக்க உறவுகளெல்லாம் எனக்கும் உறவுகளாக வேண்டும்” என்றான் தேவ். மிக மிக அழுத்தமாக.
“அது நடக்காதுன்னு உனக்கும் தெரியும் அதி. அப்புறமும் இதென்ன பிடிவாதம்?”
“நீங்களெல்லாம் இல்லாமல் என் காதலால் மட்டும் அவளுடைய வாழ்க்கை நிறைவு கொள்ளாது வாசு. நீயிருப்பியா? உன் அப்பா அம்மா இல்லாமல், உன் உறவுகள் இல்லாது. கூட்டிட்டு போகச் சொல்றியே, வந்த பிறகு? உங்களையெல்லாம் கஷ்டப்படுத்திட்டு அவள் என்னோடு சந்தோஷமா வாழ்ந்திடுவாளா? உங்கள் எல்லாரையும் விட அதீத அன்பையும் காதலையும் என் அருவிக்கு என்னால் கொட்டி கொடுத்திட முடியும். அதையெல்லாம் எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் அவள் அனுபவிக்க வேண்டாமா?” சத்தத்தை உயர்த்தாது அடர்த்தியாகக் கேட்டிருந்தான் தேவ்.
இதற்கு வாசு என்ன பதில் சொல்லிடுவான்.
அவனுக்காக அன்றி, தன்னுடைய தங்கைக்காக யோசிப்பவனிடம் எப்படி தன் வாதத்தை வைத்திடுவான்.
“என்னடா சைலண்ட் ஆகிட்ட?” என்ற தேவ், “ஓகே எனக்கு டியூட்டி இருக்கு. ஃபங்(ன்)க்ஷனில் பார்க்கலாம்” என்று வைத்திட்டான்.
வாசுவுக்கு அவன் வருவதாக சொன்னதே தற்போதைக்கு ஆறுதலாக இருந்தது.
நீண்ட வருடங்களுக்கு பின்னர் நண்பனை காண இருக்கும் சந்தோஷம் இப்போதே அவனிடம்.
*****
“நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டிங்களா?”
கேட்டுக்கொண்டே நீண்ட கூந்தலை பின்னலில் கட்டி, அடியில் பூஞ்சுருளால் இறுக்கிக் கட்டினாள் தேனருவி.
வித்யாவை அனுப்பி வைத்துவிட்டு ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய தேனு, வரும் வழியில் இருப்பவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து… கடற்கரையோரம் சிறிது நடந்து முடித்து… காலைநேரம் அங்கு கிடைக்கும் கரும்புச்சாறு இரண்டு குவளை அருந்தி… இதற்குமேல் சென்றால் அலுவலகம் செல்ல சரியாக இருக்குமென்ற நேரத்திற்கு பின்னர் தான் விடுதி வந்து சேர்ந்தாள்.
முடிந்தவரை தன்னை தனிமையிலிருந்து எட்ட வைத்திடவே விரும்புவாள்.
தனியாக இருக்க நேரிட்டால் இப்படி அவனவளுடன் வாய் நிறுத்தாது பேசிக்கொண்டே இருப்பாள்.
அதில் அவளுக்கு ஆத்ம சந்தோஷம்.
‘என் சித்தம் மொத்தமும் நீயென்று வாழ்ந்திடவே பேராசை.’
அப்படித்தான் அவளும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
“ஆபீஸ் கிளம்பிட்டேன் டாக்டரே! ப்ரேக்கில் பேசுவோம்” என்ற தேனு, “வித்யா கூட போயிருக்கலாம் போல. இப்போ தனியா அந்த மேனேஜர் மண்டையனை சமாளிக்கணும்” என்றவாறு தோள் பையினை எடுத்து மாட்டியவள்…
“நீங்க இல்லாமல் எந்த உறவோடும் பற்றுதல் வைக்க முடியல டாக்டர். ஆதான் போகல. எவ்வளவு நாள் இப்படி தனியா விடப்போறீங்க?…
“ஹான்…
“சீக்கிரம் வந்து கூட்டிக்கோங்க… இல்லை, உங்க வார்த்தையை இவ்வளவு நாள் கேட்டது போதுமென கிளம்பி வந்துட்டே இருப்பேன்” என்று திரையில் மிளிர்ந்தவனை விரல் நீட்டி மிரட்டியவள், அலைப்பேசியை எடுத்து பையில் போட்டவளாக அறையை பூட்டி வெளியில் வந்தாள்.
எதிர்ப்பட்ட விடுதி காப்பாளருக்கு புன்னகை முகமாக வணக்கம் வைத்தவள், சில நொடிகள் அவருடன் நின்று பேசிவிட்டு வந்தாள்.
வண்டியில் அமர்ந்தவள், கையிலிருக்கும் வாட்சில் மணியை பார்த்திட… அதுவோ எட்டு மணி இருபது நிமிடங்களை காட்டியது.
வழக்கமாக எட்டு மணிக்கு வரும் அலைப்பேசி அழைப்பு இன்றில்லை.
மனதில் ஏதோ புரியா ஒன்று.
புறம் ஒதுக்கியவளாக அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
பணிபுரிபவர்களுக்கெல்லாம் சிரித்த முகமாக அவர்களுக்கேற்றவாறு பேசியபடி தன்னிருக்கையில் அமர்ந்தாலும், அவளிடம் ஏதோ ஒன்று இன்று குறைந்தது.
அதனை அவளும் உணரவே செய்தாள்.
“ஆபிஸ் வந்தாச்சு டாக்டர்” என்றவள், “என்னைக்கும் கூவுற எட்டு மணி கோழி இன்னைக்கு கூவலையே என்னவா இருக்கும்?” என்று அவனிடம் கேட்பதுபோல் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
‘வேண்டான்னு தூரமிருக்க… ஒருமுறை கூட எடுத்து பேசியதில்லை… அப்புறம் எதுக்கு இந்த வெட்டி எதிர்பார்ப்பு.’
தேனுவின் மனம் அவளை நன்கு கொட்டியது.
சாதாரணமாக தோளை குலுக்கிக்கொண்டு தன் வேலையில் கவனம் வைத்தாள்.
அதுவொரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனம். நெட்வொர்க்கிங்கில் ப்ரோகிகிராமிங் அசிஸ்ட்டாக இருக்கிறாள். எதற்கோ நினைத்து படித்து, இன்று எதற்கோ இங்கிருக்கிறாள். பிடிக்காத வேலை, இடம், சூழல். இருந்தாக வேண்டிய கட்டாயமில்லை.
ஏனோ சொந்த இடம் வேறாய் உணர வைத்திட… இப்படி இங்கு வனவாசம் இருக்கிறாள். விரும்பியே ஏற்றுக்கொண்டாள்.
பலவற்றை மாற்ற வேண்டுமென்றே அங்கிருந்து போராடி படித்தாள். ஆனால் ஒன்றும் செய்யாது வந்துவிட்டாள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு படிப்பை முடித்ததும், தனது இல்லம் சென்றவள். பல்லை கடித்துக்கொண்டு நாட்களை கடத்தியவள், கேம்பஸ் நேர்முகத்தேர்வில் தேறியிருந்ததால் அவர்களிடமிருந்து அழைப்பு வரவும் வேலையை காரணம் காட்டி அங்கிருந்து வந்தவள்… இங்கேயே இருந்துகொண்டாள்.
வேர் ஓரிடமாகவும் கிளை வேறிடமாகவும் இருந்திட வேதனையாக இருப்பினும், ஒருவித பிடிவாதத்துடன் பெற்றவரையும், உடன் பிறந்தவனையும், சொந்தங்களையும் மறந்து இருக்கின்றாள்.
பச்சை பசேலென்று கண்களுக்கு குளிர்ச்சியாய்… இயற்கை பொங்கும் எழிலின் நடுவே மனதிற்கு இனிமையாய் வாழ்ந்துவிட்டு… இப்படி கட்டிடங்களுக்கு நடுவே இருப்பது அத்தனை கடினமாக இருந்தபோதும், அங்கு அவனன்றி தனித்து செல்ல மனம் ஒப்பவில்லை.
தங்களை பிரித்தவர்கள் முன்னிலையில் சேர்ந்து செல்லத்தான் ஆசை கொண்டிருக்கிறாள்.
நிறைவேற்ற வேண்டியவன், வேண்டாமென்றிருக்க… என்ன செய்திடுவாள்?
நேரம் நீண்டிருக்க…
அலைப்பேசியை நொடிக்கு ஒருதரம் எடுத்து பார்த்தாள்.
வரவேண்டிய அழைப்பு வந்தபாடில்லை.
‘என்னவாயிற்று?’ சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியாது அல்லாடினாள்.
‘அடேய் பாசக்காரா… உன் பாசம் அவ்வளவு தானா? பேசலன்னாலும், நான் உன்னோடு இருக்கிறேன்னு தினமும் கால் பண்ணிட்டு இன்னைக்கு ஏண்டா படுத்துற… தொல்லை.’ மனதிற்குள் முணுமுணுத்தாள்.
அன்றைய நாளின் தேவ் மீதான மொத்த கோபத்தையும் தன் சகோதரன் மலைவாசனிடம்(வாசு) தான் இறக்கி வைத்திருந்தாள் தேனு.
அக்கணம் தான் தேவ்வின் காதல் மட்டுமல்ல தங்கையின் காதலும் வலிமை கொண்டதென்று வாசு அறிந்திட்டான்.
இக்கால நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றவனாக இருந்தாலும், தனக்கோ அல்லது தன் நண்பனுக்கோ ஆதரவாக பேசிடாத அண்ணனின் மீது கோபம்.
அதில் அவன் செய்திட ஒன்றுமில்லையென தெரிந்தும். அவனது பேச்சு பழமையில் ஊறியிருக்கும் நபர்களிடம் எடுபடாது என்று தெரிந்தும் கோபம்.
படிப்பிற்கே போராட வேண்டியிருந்தது. காதலுக்கு யுத்தம் நிகழ்த்தினாலும் இறங்கி வரமாட்டார்கள் திண்ணமான ஒன்று. இருந்தும் கோபத்தை யார்மீது காட்டுவதென்று தெரியாது அண்ணனிடம் காட்டிக் கொண்டிருக்கிறாள்.
அவள் அழைப்பினை ஏற்க மாட்டாளென்று தெரிந்தும் தினமும் நொடி தவறாது சரியான நேரத்திற்கு தன்னிருப்பை காட்டுபவன் இன்று பொழுதாகியும் அழைக்காமல் இருப்பது தவிப்பை ஏற்படுத்தியது.
அதையும் நிழலுருவமான தேவ்விடம் தான் புலம்பினாள்.
“உங்க ஃபிரண்டுக்கு தங்கச்சி மேல பாசம் அவ்வளவு தான் போலிருக்கு டாக்டர். என் நினைப்பே இல்லை” என்றவளின் வதனம் சுருங்கியிருந்தது.
மீட்டிங் என்று மேனேஜர் அழைத்திட ஆர்வமே இன்றி சென்றவள் கடமைக்கு அமர்ந்திருந்தாள். அந்த கூட்டத்திற்கு எம்.டி’யும் வந்திருக்க தவிர்க்க முடியாது போனது.
கூட்டத்திற்கு நடுவிலும் தன்னுடைய அலைப்பேசியை எடுத்து பார்த்தவளாகத்தான் இருந்தாள்.
தேனுவின் அருகில் அமர்ந்திருந்த ஹர்ஷா…
“தேனு… ஹீ இஸ் லுக்கிங் டூ யூ” என்று அவளின் காலில் இடித்தான்.
தேனு நிமிர்ந்து பார்க்க, எம்.டி சீட்டில் அமர்ந்திருந்த சித்தார்த் அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.
இவள் பார்த்ததும் என்னவென்று புருவம் உயர்த்திட, அவளோ ஒன்றுமில்லையென தலை அசைத்தாள்.
பின் அவன் அப்போ கவனி என்பதை பார்வையால் ப்ரொஜெக்ட்ர் போர்டினை கண்காட்டிட, அவள் சரியென மண்டையை உருட்டிவிட்டு கவனித்தாள்.
அதுவும் சில நிமிடங்கள் தான் மீண்டும் அலைப்பேசியை எடுப்பதும் வைப்பதுமாக இருந்திட, அவளது சிந்தனை இங்கில்லை என்று சித்துவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
கூட்டத்தோடு அன்றைய நாள் முடிவடைய அவனைவரும் அவ்வறையை விட்டு வெளியேறினர்.
“ஹனி…”
ஹர்ஷாவுடன் நகர்ந்த தேனுவை சித்து அழைத்து நிறுத்தினான்.
தேனு அவனது அழைப்பில் அதிர்ந்திட…
“போ… போ… இப்போ நீ ஏன் இப்படி இருக்கன்னு காரணம் கேட்பார்” என்று அவளை முன்னால் தள்ளிவிட்டான் ஹர்ஷா.
“அடேய்… ஏண்டா?”
“அவருக்கு உன் மேல ஏதோ இருக்கு தேனு. அப்பப்போ அவர் உன்கிட்ட மட்டும் கேரிங்கா… ரொம்ப கன்சர்னா நடந்துக்கிறார்” என்றான்.
“அவர் எல்லோரிடமும் அப்படித்தானடா?”
“ஹான்… உன்கிட்ட கொஞ்சம் எக்ஸ்ட்ரா. இங்கிருக்க எல்லாருக்கும் நீ அவருக்கு கொஞ்சம் ஸ்பெஷல்’ன்னு தெரியும். அவருக்கு உன்மேல என்னன்னு தான் தெரியல” என்றவனின் விலாவிலே இடித்து…
“அவர் காலேஜில் என்னோட சீனியர்டா. அப்போவே என் மேல் அவருக்கு அட்டாச்மெண்ட் தான்” என்றாள்.
“அப்படியென்ன நெருக்கம்?”
“உனக்கும் எனக்கும் என்னவோ அதுதான்.”
“அப்போ அது இல்லையா?” என்று வார்த்தையை இழுத்தவனை, “எது?” எனக்கேட்டு அவள் முறைத்து வைத்தாள்.
“ஹர்ஷா…” சித்துவின் அழுத்தமான குரலில்,
“இதோ கிளம்பிட்டேன் சார்” என்று அவன் ஓடிவிட்டான்.
இப்போது அவ்வறையில் அவர்கள் இருவர் மட்டும் தான்.
“நான் கூப்பிட்டேன்.”
“இதோ… வந்துட்டேன்” என்ற தேனு வேக எட்டுக்களில் சித்துவின் இருக்கைக்கு முன் வந்து நின்றாள்.
தனக்கு முன்னால் நீண்டிருந்த மேசையின் பக்கவாட்டு இருக்கையை கை காண்பித்து “சிட்” என்றான்.
தேனு அமர்ந்ததும்…
“என்னாச்சு?” ஒற்றை வார்த்தையாய் கேட்டிருந்தான். அதில் அவனது விழிகளில் அவளால் உணரப்பட்டது அக்கறை. அவளின் நலன்.
“நத்திங்” என்றவள் அவனது ஏறியிறங்கிய பார்வையில்…
“வீட்டிலிருந்து கால் வரல. ஒரு மாதிரி இருக்கு” என்றாள். சத்தமே எழும்பா குரலில்.
“அவங்க பண்ணலன்னா என்ன? நீ பண்ணியிருக்கலாமே?”
அனைத்தும் தெரிந்தும் மிகமிக சாதாரணமாகக் கூறினான். அவள் என்ன பதில் சொல்வாளென்று அறிந்திட கூறியிருப்பானோ?
“அது…” அவள் சொல்ல முடியாது தயங்கிட…
“இட்ஸ் ஓகே. ஜஸ்ட் ரிலாக்ஸ்” என்றவன், “வேலையில் மறந்திருக்கலாம். இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு பண்ணுவாங்க. இதுக்கு வருத்தப்படுவாங்களா?” என்று அவள் தேறும் விதமாக பேசியவனிடம், தன் சூழலை எப்படி அவனுக்கு விளக்குவதென்று தெரியாது சரிசரியென மண்டையை ஆட்டினாள்.
சித்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
‘பேசமாட்டங்க… எதிர்பார்ப்பாங்களாம்?’
“சித்து… சார்…” என்று அவள் தடுமாறிட,
“சரி கிளம்பு” என்றான்.
சித்து சொன்னதும் விட்டால் போதுமென்று இருக்கையிலிருந்து தேனு வேகமாக எழுந்திட…
“உனக்கு எப்பவும் சித்து தான்” என்றான்.
அவனது குரலில் என்னயிருந்தென்று தெரியாது ஆராயாது வெளியேறியிருந்தாள்.
அவளுக்கு அவனைத் தெரியுமே! ஹர்ஷா போல் அவளுக்கு எவ்வித குழப்பமும் இல்லை.
விடுதி வந்து சேர்ந்தவள் நேரத்தை நெட்டித் தள்ளினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
“உங்க ஃபிரண்டுக்கு என்னதான் ஆச்சு டாக்டர்?” என்று கேட்டவள், “எல்லாரும் ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க. வலிக்காத மாதிரி நானும் எவ்வளவு தான் மேனேஜ் பண்ணுவேன்” என்றாள்.
நேரில் இல்லாதவனிடம் தான் தன்னுடைய அனைத்து உணர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறாள்.
மனதால் பகிரப்படும் அவளின் உணர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டிருந்தான் தேவதிரன்.