அத்தியாயம் 4
வாசுவிடம் வருவதாக சொல்லிவிட்டான். நேரில் பார்க்கும்போது சகஜமாக, நட்புடன் பேசிட முடியுமா?
அலைப்பேசி வழியாக பேசுவதில் கூட ஒதுக்கம் தானாக ஒட்டிக்கொள்கிறது. நேரில் சென்று நண்பனை கஷ்டப்படுத்த வேண்டுமா?
எந்நேரமும் சிந்தனைக்குள் உழன்று கொண்டிருக்கிறான் தேவதிரன்.
அவனின் மனமும் மூளையும் அமைதி கொள்ளும் ஒரே இடம் தேனருவி. சிறு சொட்டு நினைவால் பருகிவிட்டாலும், உற்சாகமாக அன்றைய நாளினை நகர்த்திடுவான்.
ஆனால் இப்பொதெல்லாம் தனக்கில்லை என்கிற வலி அவனை நித்தம் சாய்க்கிறது.
சிறு இடைவெளி வேண்டும் தவித்தான்.
தொலைந்துபோக ஆசை கொள்கிறான்.
முடியாதே!
பெரும் வதைப்படுகிறான். தனக்குள்ளே!
நண்பன் ஒருவனது வீட்டு விசேடம். பார்த்தே பல வருடங்கள் ஆகியதால், இந்த விழாவை நண்பர்கள் தங்களது ரீயூனியனாக பயன்படுத்திக் கொண்டனர்.
எல்லோரும் ஒன்றாக இணையும்போது தான் மட்டும் செல்லாதிருந்தால் நன்றாக இருக்காது என்பதற்காகவே, வாசுவிடம் முதலில் மறுத்தாலும், பின்னர் வருவதாக சம்மதம் கூறினான்.
தேவ்வுக்கும் வாசு சொல்லியதைப்போல், சில மணி நேரங்களாவது பழைய… படிக்கும் காலத்திலிருந்த தேவ்வாக எதைப்பற்றியும் கவலையில்லாமல் இருந்திட ஆசை. அதற்காகவே ஒப்பும் கொண்டான்.
அங்கு சென்றால் கண்டிப்பாக துள்ளலோடு இருக்க வேண்டும். தனித்து அமர்ந்து பிறரையும் யோசிக்க வைத்துவிடக் கூடாதென்று தனக்குத்தானே பல அறிவுரை வழங்கியவனாக அமர்ந்திருந்தவன், எப்போதும் தன்னுடைய குழப்பமான மனநிலையில் தெளிவு பெற பேசிடும் தன்னுடைய சித்திக்கு அழைப்பு விடுத்தான்.
“அதிம்மா…”
“சித்தி… இந்த வீக்கெண்ட் இங்கு வறீங்களா?”
“என்னவாம் இப்போ?”
“உங்க அக்கா ரொம்ப பண்றாங்க.” சிறுவனாய் முறையிட்டான்.
“உன்னைவிடவா என் அக்கா பன்றாள்?”
“கடக்க முடியலையே!”
“உன்னை யாரும் கடந்துவர சொல்லல அதி. உனக்கானதை உன்கிட்டவே வச்சிக்கோன்னு சொல்றோம். கேட்கமாட்டேங்கிற. அடம் பிடிக்கிற!”
“நானில்லாமல் நீங்க இருப்பீங்களா சித்தி?” தேவ் கேட்க வருவது நன்றாகவே மேனகாவிற்கு புரிந்தது. கடந்த ஆறு வருடங்களாக இதனைத்தானே அவர்களுக்கு புரிய வைத்திட முயற்சிக்கின்றான்.
“உனக்குன்னு வர பொண்ணை, அவ குடும்பத்துகிட்ட இருந்து நீ பிரிக்கக்கூடாதுன்னு நினைக்கிறது சரிதான் அதி. அதுக்காக இன்னும் எத்தனை வருடத்துக்கு இப்படியே இருக்கப்போற. ஒருத்தி உன்னையே நினைச்சிட்டு… நீ சொல்ற குடும்பத்தை ஒதுக்கிவச்சிட்டு தனியா தவிச்சிட்டு இருக்கிறது தெரியுதா தெரியலையா? அட்லீஸ்ட் அவளோடு நீ பேசுவாவது செய்றீயா? அதுவும் இல்லை” என்றவர்,
“பேசிக்காமல்… பார்த்துக்காமல் எப்படி இத்தனை காதல்ன்னு எனக்கும் தெரியல” என்றார்.
தேவ்விடம் ஆழ்ந்த மௌனம்.
“நீயே மனசு சரியில்லைன்னு கால் பண்ண. நானும் திரும்ப அதைப்பற்றியே பேசுறேன் பாரு” என்றவர்,
“எப்படியும் அக்கா உன்னை இந்த டைம் விடமாட்டாங்க” என்றார்.
“அச்சோ சித்தி…”
“சாரி… சாரிடா” என்றவர், அவனிடம் அவனது வேலைப்பற்றி பேசி சகஜமாக்கினார்.
“ஃபிரண்ட்ஸ் கெட்டுகேதர் சித்தி. போகலாம் இருக்கேன்” என்றான்.
“ஜாலியா போயிட்டு வா அதி” என்றவரிடம், “பார்க்கணும் போலிருக்கு சித்தி” என்றான். குரலில் அத்தனை ஏக்கம்.
“இங்க வாயேன். அவளும் உன்னை பார்த்த மாதிரி இருக்கும்.” வெகு தீவிரமாகத்தான் கூறினார்.
அவளை பார்த்துவிட்டு மட்டும் வருவதா? முடியுமா அவனால்?
அங்கு சென்றால் அவளை பார்க்கத் தோன்றும் என்பதற்காக, அன்னையைவிட அதிக ஒட்டுதலான சித்தியின் வீட்டிற்குக்கூட நான்கு வருடங்களாக செல்லாதிருக்கிறானே!
மேனகா சொல்லியதற்கு பதில் சொல்ல முடியாது அமைதி காத்திட…
“இப்பவும் அப்படியே இருப்பாங்களா?” எனக் கேட்டார்.
“கொஞ்சம் முன்புகூட வாசு கால் பண்ணான். கூட்டிட்டு போன்னு தான் சொன்னான்” என்றான்.
“அவள் அண்ணனே சொல்றான். அப்புறம் என்னடா?”
“மாற்றம் வந்திருந்தால்… வந்து பேசிப்பாருன்னு தான் சொல்லியிருப்பான். இது நடக்காது சித்தி. விடுங்க” என்றவன் தான், சற்று முன்பு இதனை ஆரம்பித்ததே! என்ன நினைக்கின்றான்… என்ன வேண்டுமென்று தெளிவின்றி நிற்கிறான்.
“எனக்கு எல்லாரோட மனசு நிறைஞ்ச ஆசியோடு அவள் கை பிடிக்கணும் சித்தி. அவளோட மொத்த சொந்தத்தையும் கஷ்டப்படுத்தி வேண்டாம்” என்றான்.
“இதைத்தானே இத்தனை வருசமா சொல்லிட்டிருக்க. காது புளிச்சிப்போச்சுடா. இந்த ஜென்மத்தில் உன் ஆசை நடக்கும் எனக்கு தோணல. நீ கல்யாணம் பண்ணிக்காமல், உன் தம்பியும் பண்ணிக்கப்போவதில்லை” என்று அலுப்பாகக் கூறியவர், “நீ உன் பிரண்ட்ஸ் பார்த்துட்டு வா. நான் வறேன்” எனக்கூறி வைத்துவிட்டார்.
மனசு தெளிவாக வேண்டுமென நினைத்தவனிடம் பாரமேறிக்கொண்டது.
அவனது தம்பிக்கு அவனல்லவா நாயகன்.
அவனை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, அவனுக்கு தேவ் தான் எல்லாம்.
அண்ணனின் காதல் நிறைவேறாது தன்னுடைய காதல் வேண்டாமென்று இன்னும் காதலிக்கும் பெண்ணிடம் கூட தன்னுடைய காதலை சொல்லாதிருக்கிறான்.
சொல்லிவிட்டு அண்ணனைப்போல் ஏதும் வில்லங்கம் ஏற்பட்டுவிடுமோ? அண்ணனைப்போல் அதனை எதிர்கொள்ளும் திடம் தனக்கிருக்கா? என்கிற சந்தேகத்தோடு… தனக்கு துணையாய் நிற்க வேண்டியவன் பலமிழந்து வேதனையில் வாடும்போது தான் மட்டும் இன்பம் கொள்ள அவனின் பாசம் மறுக்கிறது.
அப்படிப்பட்ட தம்பியின் அன்பிற்காகவாவது தன்னுடைய பிடிவாதத்திலிருந்து வெளிவர நினைக்கின்றான். முடியவில்லை.
பார்ப்பதற்கு சாதரணமாக இருக்கலாம். அதனை கடக்க நினைப்பவர்களுக்குத்தானே நிலையும் சூழலும் தெரியும்.
அடுத்து என்னவென்று யோசிப்பவனின் அகம் முழுக்க நிறைந்தாள் அவனது தேனருவி.
‘தனிமையிலும் தனியாக இருக்க விடமாட்டாள். ராட்சசி!’ மெல்ல முணுமுணுத்தவனுக்கு, வலி நீங்கி நெஞ்சத்தில் தேனின் சுவை இறங்கும் உணர்வு.
‘அவள் தான் என்னுடன் வருகிறேன் என்கிறாளே! அழைத்து வந்துவிடுவோமா?’ நினைத்த நொடி அவ்வெண்ணத்தை விரட்டியும் இருந்தான்.
வேண்டாமென்று வந்த மனதிற்கு காதலிக்க மட்டுமே தெரிந்திருந்தது. நாளுக்கு நாள் அவள் வேண்டுமென்கிற ஆசையும்.
என்று தீரும் இந்த காதல் தாகம் என்ற பித்துநிலையிலும் அவனால் தீர்க்கமான முடிவினை எடுக்க முடியவில்லை.
நடந்த நிகழ்வுகள் கண்முன் தடையாய் அமைந்திட… அதனை தாண்டி முடிவென்ற ஒன்றில் ஒன்றிட முடியாது தவிக்கிறான்.
அவள் வேண்டும் என்ற காதலில் அவள் என்பது, அவளை சார்ந்த அனைத்தும் என்பதில் மட்டும் திண்ணமாக இருக்கின்றான்.
தேனருவி தேவதிரனின் உயிர். சுவாசகாற்றாய் அவனுள் நிரம்பியிருக்கிறாள்.
‘வேண்டாம். இது ஒத்துவராது.’
இதனை சொல்வதற்குள் இறந்து பிறந்திருந்தான்.
சொல்லிவிட்டு வந்த நிகழ்வு கண்முன் தோன்றியது.
அழுதபடி கண்ணீர் முகத்தோடு நின்றிருந்தவளின், முகத்தை இரு கைகளாலும் ஏந்தியவன், அவளின் நெற்றியோடு தன் நெற்றி இடித்து…
“அழாதடி. கஷ்டமா இருக்கு. ரொம்ப வலிக்குது” என்றவன், அவளின் நெற்றியோடு ஒட்டியிருந்த மஞ்சள், குங்குமத்தின் தடத்தை தன்னுடைய நெற்றியில் பதித்தவனாக வேகமாக விலகி திரும்பியும் பாராது வந்திருந்தான்.
அக்கணங்கள் நினைக்கையில் இன்றும் கனமாய் நெஞ்சை முட்டி வலி கொடுக்கிறது.
“அருவி…” உள்ளம் உரக்கமிட… இதழ் மெல்லொளியில் உதிர்த்தது. தேகமெல்லாம் இதம் பரவிட… தானாக அதரங்கள் மென்புன்கை சிந்தியது.
வந்துவிட்டான். ஆனால் அவளை நிழல் போல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றான்.
என்னவொன்று அவளை பார்த்திட முயன்றதில்லை. செவிவழியாக மட்டுமே அவளின் அனைத்தையும் தெரிந்து கொள்கிறான்.
தினம் தினம் தனக்காக அவள் காட்டும் காதலை கண்டு பயம் கொண்டவன், தன்னை அவள் மறக்க வேண்டுமென்றே தனது முகம் காட்டாது இருக்கின்றான்.
தானாவது அவளைப்பற்றி அனைத்தும் அறிந்து கொண்டிருக்கிறோம். தன் வார்த்தைக்கு மதிப்பளித்து தன்னைப்பற்றி எதையுமே தெரிந்துகொள்ளாது தன்னை மட்டுமே நினைத்து, தனக்காக யாவற்றையும் துறந்து எப்படி அவளால் இத்தனை காதல் கொள்ள முடிகிறதென்கிற வியப்பு தேவ்விடம்.
இன்றைய சூழ்நிலையில் சமூக வலைத்தளங்கள் என்பது பொழுதுபோக்கு. அனைவரும் பயன்படுத்தும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. அப்படியிருந்தும், தன்னைப்பற்றி தன்னுடைய பேச்சினை மீறி அறிய நேரிட்டுவிடுமோ என்று நினைத்தே அவற்றில் ஒன்றையும் பயன்படுத்தாது தவிர்க்கிறாள் என்று அவளைப்பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவனுக்கு அவளும் அவளது காதலும் பொக்கிஷம் தான்.
நெஞ்சில் புதைந்து கிடக்கும் பொக்கிஷத்தை ஏனோ கைக்குள் அடக்கிட காலமும் மனமும் கூடிவரவில்லை.
தானே விட்டாலும் தன்னவள் தன்னை விட்டுவிடமாட்டாள் என்று அழுத்தமாக அறிந்திருப்பவனுக்கு, அவள் தன்னை கடந்து சென்றிடமாட்டாள் என்று நன்றாக தெரிந்ததால் தானோ… எங்கே சென்றிடுவாளென்கிற அலட்சியமோ?
அது அலட்சியமில்லை அவளின் நலன் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
இருப்பினும் இப்போதெல்லாம் அவள் வேண்டுமென்று நினைக்கத் தொடங்கிவிட்டான். ஆனாலும், மற்றவர்களிடம் அதனை காட்டிக்கொள்ளவில்லை.
அதீத ரசனை கொண்ட ஆழமான காதல் எப்போதும் ரகசியமாகத்தான் பொத்தி வைத்து காக்கப்படுகிறது.
தேவதிரனின் காதலும் அதிலே அடங்கும்.
தன் நினவுகளில் மூழ்கியிருந்தாலும் வேலையிலும் கண்ணாக இருந்தவன், மாலைபோல் பணியின்றி அமர்ந்திருக்க…
மருத்துவ முகாம் போட வேண்டிய விவரங்கள் அடங்கிய கோப்பினை அவனது மேசைக்கு அனுப்பி விட்டார் ஈஷ்வரன்.
“டாட்…” தேவ்விற்கு ஆயாசமாக வந்தது.
துறை சம்மந்தமாக வேலை எதுவாகயிருந்தாலும் தேவ் பின்வாங்கிடாது செய்திடுவான் என்பது ஈஷ்வருக்கு தெரியும். அதனாலேயே இவ்வழியில் அவனை அங்கு அனுப்பி வைத்திட பாதை வகுக்கிறார்.
அடி வைத்திடத்தான் தடுமாறுவோம். இரண்டடி வைத்துவிட்டால் நமக்கான பாதையை நாமே உருவாக்கிடுவோம். அந்த நியதியைத்தான் ஈஷ்வரன் மகன் விடயத்தில் அரங்கேற்றுகிறார்.
*********
சித்தார்த் வீட்டிற்கு வந்த நேரம்…
அவனின் தாய் தேவியும், தந்தை நாதனும் மாலை நேர சிற்றுண்டியுடன், தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தனர்.
“ஹாய் மாம் அண்ட் டாட்” என்றவன், தனதறைக்கு செல்லாது அவர்கள் அருகே அமர்ந்துவிட்டான்.
“ரொம்ப சோர்வா தெரியுற சித்து. காஃபி கொண்டு வரவா?” தேவி கேட்டிட,
“உங்க புருஷன் கம்பெனியை என் தலையில் கட்டிட்டு, இந்த வயதில் ஜாலியா உங்களோட டூயட் பாடிட்டு இருக்கார். நான் சந்தோஷமா ஊர் சுத்த வேண்டிய வயதில் நாள் முழுக்க கம்ப்யூட்டரோடு போராடிட்டு வறேன்” என்றான். தந்தையை பார்த்து பொய் கோபம் கொண்டவனாக.
மகனின் குற்றச்சாட்டில் நாதன் வெடித்து கிளம்பிய சிரிப்போடு…
“கொஞ்சம் கடந்த காலத்தை ரீவைண்ட் செய்து பாரு சித்து” என்றார்.
கல்லூரி படிப்பை முடித்த சித்தார்த் ஒரு வாரம் கூட வீட்டில் சும்மா இருக்கவில்லை.
நாதன், “இப்போ தான் படிப்பு முடிச்சிருக்க… வேலைக்குன்னு போயிட்டால் உட்கார நேரமிருக்காது. ஓடிட்டே இருக்கணும். அதனால் ஒரு ரெண்டு வருசம் ஃபிரியா இருந்துட்டு கம்பெனி பொறுப்பை எடுத்துக்கோ” என்றதற்கு…
“படிப்பு முடித்த சூட்டோடு வேலையில் அமர்ந்தால் தான் ஒரு ஃபயர் இருக்கும் டாட்” என்று சொல்லி, அடுத்த நாளே பிடிவாதமாக தந்தையை வீட்டோடு இருக்க வைத்திட்டான்.
அதற்கு காரணம் அவனது காதல்.
“உன் ஆளு நம்ம கம்பெனியில், கேம்பஸ் பிளேஸ் ஆகியிருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டு, அவளை தினமும் பார்க்கணும் அப்படின்னு வம்படியா என் புருஷன் சீட்டை பிடுங்கிட்டு இன்னைக்கு அவரையே குறை சொல்றியா நீ?” என்று மகனின் காதினை வலிக்காது திருகிய தேவி, அவனின் அளறலில் விட்டிருந்தார்.
“மாம்… யூ டூ” என்றவன், உடலை தளர்த்தியவனாக,
“உங்க மருமகள் இன்னைக்கு முழுக்க ரெஸ்ட்லெஸ்ஸாவே இருந்தாள்” என்றான்.
“என்னாச்சு? நீ கூப்பிட்டு கேட்கலையா?”
“வாசன் கால் பண்ணலப்போல” என்ற சித்து, “அவன்கிட்ட பேசலனாலும், அவனிடமிருந்து கால் வந்திடணும் எதிர்பார்க்கிறாள்” என்றான்.
“அவளுக்கு இங்கென்ன தனியா இருக்கணும் அவசியம்?” என்ற தேவி “யாருதான் சொல்றதை கேட்கிறாள். நீயாவது முன்னாடி போவன்னு பார்த்தால் அங்கேயே நிக்குற” என்றார் அங்கலாய்ப்பாக.
இனி தேவி பேச்சை நிறுத்தாது புலம்பிக்கொண்டே இருப்பாரென்று, நாதனும், சித்துவும் மெல்ல நழுவிச் சென்றனர்.
தனது அறைக்கு வந்த சித்து யாருக்கோ அழைத்து பேசிவிட்டு, தன்னவளுக்கு அழைப்பு விடுத்தான்.
தோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததால், இவனது அழைப்பு காத்திருப்பில் சென்றது.
அடுத்து குளியலறைக்குள் சென்றவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு பத்து நிமிடங்கள் சென்று வெளியில் வந்தான்.
மீண்டும் அழைக்க அப்போதும் காத்திருப்பிற்கு சென்றது.
இவ்வளவு நேரம் பேசுகிறாளென்றால் யாராக இருக்குமென்று யூகித்த சித்து, சின்ன சிரிப்போடு மடிகணினியை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
தேனு வித்யாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
வாசு போன் செய்யாததை சொல்லி தோழியை ஒருவழி செய்துவிட்டாள். வித்யா பயண களைப்போடு சேர்த்து தேனுவின் பேச்சினால் உண்டான கூடுதல் களைப்பில் நொந்துபோனாள்.
ஆரம்பத்தில் தேனுவிற்கு ஆறுதலாக பதில் பேசிய வித்யா, தேனுவின் புலம்பல்கள் நீளவும், ம் கொட்டத் தொடங்கிவிட்டாள்.
தேனு முடிப்பதாகத் தெரியவில்லை. அதற்காக அவளை விட்டு அழைப்பை துண்டிக்கவும் அவளுக்கு மனமில்லை.
ஏனென்றால் ஒருநாளும் தேனு இப்படி புலம்பியதில்லை. வாழ்வை அதன் போக்கில் கடந்து செல்பவள், இன்று இப்படி புலம்புகிறாள் என்றால், முதல் முறையாக தனது தனிமையை தன்னறியாது வெளிக்காட்டுகிறாள் என்பது புரிந்து, மனத்திலிருப்பதை அவள் முழுதாய் கொட்டி முடிக்கட்டும் என்று அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“நான் இப்படிலாம் புலம்பும் ஆளே கிடையாது வித்யா. இன்னைக்கு என்னன்னு தெரியல, உன்னையும் படுத்தி வைக்கிறேன்” என்று சொல்லி தேனு அமைதியாகவுமே வித்யா பேசினாள்.
“உனக்கு உன் மனசுக்கு உன் குடும்பத்தை பார்க்கணும் தோணுது தேனு. ஒருமுறை உன்னோட கோபம் என்னவாக இருந்தாலும் ஒதுக்கி வச்சிட்டு போய் பார்த்திட்டு வா” என்றாள்.
“முடியாது.” சடுதியில் கூர்மையாய் சொல்லியிருந்தாள்.
“நீயிருக்க இடம் உன் அண்ணாவுக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா தேனு?
“உன்னோட மனசுக்கு மதிப்பு கொடுத்து… உனக்கான இடமளித்து உன்னை பார்க்க வராமல் இருக்கிறார்ன்னா, உன்னோட கோபம் புரியுதுன்னு தானே அர்த்தம்.
“இந்த மூணு வருடத்தில் ஒருமுறையாவது அவருடைய காலினை அட்டெண்ட் செய்தியிருக்கியா? முதல் ரிங் முடியும் முன்னவே கட் தான் செய்திருக்க. ஆனால் இன்னைக்கு அவர் கால் பண்ணலன்னு இவ்வளவு கஷ்டப்படுற. அப்படின்னா என்னன்னு இன்னும்மா புரியல..? நீயும் அவரை தேடுற.
“இத்தனை நாள் நீ தனியா இருக்க முடிந்ததற்கான காரணமே அவரிடமிருந்து வரும் போன் காலினால் தான். அங்கு உன்னோட உறவுகள் நலமாக இருக்கின்றார்கள் என்ற குறிப்பினை அந்த அழைப்பு உனக்கு உணர்த்துகிறது. அதனால் தான் அவர்களைப்பற்றிய கவலையின்றி யாரும் வேண்டான்னு உன்னால் இருக்க முடிந்தது. எப்பவும் வர அழைப்பு இன்னைக்கு இலைன்னதும் அவங்களுக்கு என்னவோன்னு பரிதவிக்கிற!
“யாரோ ஒருத்தருக்காக உன் குடும்பத்தை உன்னை பார்க்கக்கூட அனுமதிக்காது இத்தனை வருடம் தள்ளி வைப்பது ரொம்ப தப்பு தேனு.” இத்தனை நாட்களில் ஒருமுறை கூட சொல்ல நினையாத பலதையும் மொத்தமாக சுட்டிக்காட்டியிருந்தாள் வித்யா.
தேனு பதில் பேசாதிருக்க…
“உன்னையும் கஷ்டப்படுத்திக்கிட்டு, இன்னும் யாரை கஷ்டப்படுத்த நினைக்கிற தேனு?” என்று கேட்டிருந்தாள்.
“அவங்க யாரோ இல்லை வித்யா. என் மூச்சு. கேட்கிறதுக்கு சினிமாட்டிக்கா இருக்கலாம். ஆனால் உண்மை இதுதான். என் முகத்தைக்கூட நீ தேடக்கூடாதுன்னு என்னை சொல்லிட்டு போனவங்களுக்கு, இந்த நொடி நான் என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியும்” என்று, குரல் தழுதழுப்போடு மொழிந்த தேனு, நொடியில் தொண்டை அடைக்கும் அழுகையை சீர் செய்திருந்தாள்.
மொத்தமாக சில நொடிகளுக்கு முன்னர் நடந்த பேச்சுக்களையே ஒதுக்கியவளாக பேசினாள்.
“சாரி வித்யா. நீயே ஃபங்ன்க்ஷனுக்கு போயிருக்க. உனக்கு போன் பண்ணி என்ஜாய் பண்ணவிடாமல் தொல்லை செய்கிறேன்” என்ற தேனு,
“நேரிலிருந்தால் அடி வெளுத்திடுவேன்” என்ற வித்யாவின் அதட்டல் கேட்காதவளாக,
“தேனு ஆல்வேஸ் ஸ்மைலிங். நீ ஜாலியா இருந்துட்டு வா” என்று அழைப்பை அணைத்திருந்தாள்.
வித்யாவுக்கு தேனுவை நினைத்து ஆயாசமாக இருந்தது.
‘என்ன இவள் இப்படியிருக்கிறாள் என்று.’
அழுகை மனதை தெளிவாக்கும்.
முடியவில்லை எனும் சூழலில் வெடித்து சிதறும் கண்ணீருக்கு பின்னர் மனம் கொள்ளும் பலம் சக்தி வாய்ந்தது.
தனிமையை அணைத்துக் கொள்பவர்களுக்கு அது தெரியும்.
அப்படிப்பட்ட சூழலிலும், உயிராய் இருப்பவன் சொல்லிய வார்த்தைக்காக அழுதிடக்கூடாதென்று இருப்பவள், இப்போது தன்னையறியாது துவண்டு குரல் கமரியிருக்க…
தேனுவும் எத்தனையை தான் தன் சிரிப்பில் ஒளித்து வைப்பாள் என்ற எண்ணம் வித்யாவின் மனதை கனக்க வைத்தது.
மறுகணம் வித்யா சித்துவுக்கு அழைத்துவிட்டாள்.
சித்து வேறு யாருடனோ பேசிக்கொண்டிருக்க… வித்யா முறிக்க சென்ற நொடி சித்து அழைப்பை ஏற்றிருந்தான். ஆச்சரியமாக.
வித்யாவிடம் வேலை தவிர்த்து அவன் பேசியதில்லை. அவளும் அப்படித்தான். இதுபோன்று போன் செய்ததும் இல்லை. இன்று நேரத்தை பாராது அழைத்திருக்க… சித்துவிடம் புருவ முடிச்சுக்கள்.