தித்திக்கும் தேனருவி 5

அத்தியாயம் 5

வித்யா அழைப்பதை நம்ப முடியாது சித்தார்த் ஏற்றிருந்தான்.

“ஹாய் வித்யா. வீட்டில் விசேஷம் சொல்லி போனீங்க. இப்போ என்ன கால்?” என்று எடுத்ததும் கேட்டான்.

வித்யாவுக்கு நன்கு தெரியும். தேனு அனைவரிடமும் நன்றாக பழகினாலும் பேசினாலும் தனக்கு அடுத்து அவளுக்கு உள்ளுக்குள் நெருக்கமான நபர் சித்தார்த் என்று.

காலேஜ் சீனியர். அதை தவிர்த்து வேறென்ன என்று தெரியாவிட்டாலும், சித்துவின் பார்வையில் தேனுவிற்கான ஏதோவொன்று அதீதமாக இருக்கு என்று தெரியும். அதனாலே அவனுக்கு அழைத்துவிட்டாள்.

“நான் இப்போ என் பாஸுக்கு அழைக்கல” என்றாள்.

“ஹோ… அப்போ யாருக்கு?”

அவனின் உதட்டில் புன்னகை உண்டாகியிருக்குமோ என்கிற சந்தேகம் அவனது முகம் பார்க்காது தூரத்திலிருப்பவளுக்கு எழுந்தது.

“ஹலோ மிஸ் வித்யா!”

வித்யா பேசாதிருக்க விளித்திருந்தான்.

“உங்க ஹனிக்கு என்னவோ ஆச்சு? கால் பண்ணி பேசுங்க. முடிந்தால் நேரில் போய் பாருங்க” என்றவள் “வச்சிடுறேன்” என்க,

“அப்புறம்” என்றிருந்தான்.

வித்யாவுக்கு உண்மையில் அத்தருணம் பொறுமையே இல்லை.

அவ்வளவு எடுத்து சொல்லியும், அவளை வேண்டாமென்று விட்டுச்சென்றவனின் வார்த்தைக்கு மதிப்பளித்து தனது உணர்வைக்கூட அடக்கி வைக்கிறாளே என்கிற கோபம், தேனு போனை கட் செய்ததும் உண்டானது.

அந்த கோபம் இப்போது சித்துவின் பக்கம் திரும்பும் போலிருந்தது.

அலுவலகத்தில் தான் எம்.டி, பணியாள் என்கிற வேறுபாடு. அப்போதும் கூட தேனு என்றால், உடனடியாக தன்னுடைய உயரத்திலிருந்து இறங்கி வந்துவிடுவான்.

தேனு, சித்து இருவருக்குமிடையே சொந்தமென்கிற உறவினை கடந்து வேறொன்று உள்ளதென்று அலுவலகம் மொத்தமும் தெரியும்.

சித்துவே அதனை தேனுவிடமான தன்னுடைய பேச்சு, அக்கறை, செயல் என வெளிக்காட்டுகிறான்.

அப்படி இருக்கையில், இப்போது அவளைப்பற்றி சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொண்டால்? வித்யாவுக்கு புரியவில்லை.

கோபத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தனக்கும், தேனுவுக்கும் நடந்த பேச்சில் அவளின் காதலை தவிர்த்து தான் பேசியது உட்பட… மற்றதை கூறியவள்,

“உங்களுக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப் தெரியாது. அவளுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. இருந்தாலும் ஒன்னு சொல்றேன், அவளை குடும்பத்தோடு ஒத்துப்போக சொல்லுங்க.

“அவள் யாருமில்லாது தனியா இருப்பதை நினைத்து வருந்துவதைவிட, யாருக்காகவோ, அவள் அழுதால் அந்த யாருக்கோ கஷ்டமாம். அதனால் அந்த வருத்தத்தை வெளிக்காட்டிடக் கூடாதுன்னு அழக்கூட செய்யாது அடக்கி வைத்து தன்னை இயல்பாய் காட்டிக்கொள்ளத்தான் அதிகம் கஷ்டப்படுகிறாள்” என்றாள்.

சித்தார்த்துக்கு எதையும் வெளிப்படையாக இப்போது சொல்ல முடியாது.

அவள் பேசியதும் ம் என்ற ஒற்றை எழுத்து மட்டுமே அவனிடமிருந்து பிரதிபலிப்பாக.

“உங்களுக்கு அவளுடைய எல்லாம் தெரியும்ல?”

“மே பீ.”

இதென்ன பதில்? வித்யாவுக்கு கடுப்பாக வந்தது.

“அந்த லூசுக்கு நீங்க அவளோட சீனியர்’ங்கிறதை தவிர வேறெதுவும் தெரியாதுல?”

“இதை நீ ஹனி’கிட்ட தான் கேட்கணும்.”

“எல்லாம் ஒருநாள் தெரிய வரும் தானே?” என்றவள், “என்னவோ பண்ணுங்க” என்று கிட்டத்தட்ட கத்திவிட்டு வைத்திருந்தாள்.

“எப்படி வந்து சிக்கியிருக்கேன் பார்த்தீங்களா?”

அதுவரை மியூட்டில் இருவரும் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த நபரிடம் சித்து சிரித்துக்கொண்டே கேட்க,

“அம் சாரி சித்து” என்ற வார்த்தைகள் எதிர்பக்கமிருந்து சுரத்தின்றி ஒலித்தது.

“ஹான்… அப்புறம்?” என்ற சித்து, “போங்க… போங்க… உங்க பேச்சு பெரிய காய்” என்றதோடு “எனக்கு சாரி சொல்றதைவிட்டு எப்படி சரி பண்ணலாம் பாருங்க. இனியாவது வேண்டான்னு சொல்றதைவிட்டு வேணுன்னு சொல்லுங்களேன்” என்றான்.

“சித்து…”

“என்ன?, முடியலன்னு சொல்லப்போறீங்களா?” என்றவன், “நான் அவளை பார்த்துட்டு வறேன். என் காதலை வேற சீக்கிரம் சொல்லணும்” என்று அலைப்பேசியை வைத்துவிட்டான்.

சில நிமிடங்களில் தேனுவின் விடுதியின் முன்னால் காரிலிருந்து இறங்காது அமர்ந்திருந்தான் சித்தார்த்.

நேரம் ஒன்பதை கடந்திருந்தது.

“அந்த லூசு வித்யா சொல்லுச்சுன்னு நானும் வந்துட்டேன். இப்போ எப்படி இவளை பார்க்கிறது?” ஸ்டியரிங்கில் தாளம் தட்டியவனாக யோசித்தான்.

அவளின் யோசனைக்கு காரணமானவளோ… சில வருடங்களுக்கு பின் தன்னுடைய அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

இல்லையில்லை சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

வித்யாவிடம் பேசி முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் வாசு அழைத்துவிட்டான்.

எதிர்பார்த்த அழைப்பு வந்த பின்னர் தான், தேனுவின் மனம் விவரிக்க முடியாத நிம்மதிக்குள் சமன்பட்டது.

எப்போதும் முதல் ஒலியிலே துண்டித்துவிடுபவள், இன்று பல அழைப்புகள் வாசுவிடமிருந்து மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்க… துண்டிக்காது அலைப்பேசியை வெறித்திருந்தாள்.

தேனுவிற்கு நன்கு தெரியும். தான் துண்டிக்காது, அவன் அழைப்பதை நிறுத்த மாட்டானென்று.

வாசு தன் தங்கை பேசாவிட்டாலும், அவளின் நலனை கணிப்பது… அவள் தன்னுடைய அழைப்பை நிராகரித்து துண்டிக்கும் வேகத்தில் தான்.

அவளாக துண்டிக்காது அவன் நிறுத்திடமாட்டான். நன்றாக இருந்தால், தன் அழைப்பை முறித்துவிடுவாளே? ஏன் செய்யவில்லை? ஏதும் இருக்குமோ? இப்படி பலவற்றை நினைத்துவிடும் அவனது மனது.

வேலை நேரமாக இருந்திருந்தாலும், பணியில் மூழ்கியிருப்பாள் பின்னர் அழைத்து பார்க்கலாமென்று விட்டிருப்பான். இப்போது இரவு நேரம் தானே! அதனாலே அவள் அழைப்பை முறிக்கவில்லை என்றதும், மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருந்தான்.

தவிக்கவிட்டது போதுமென நினைத்தாளோ… மீண்டுமொரு அழைப்பினை அலைப்பேசி தாங்கி ஒலிக்க…

துண்டிக்கச் சென்றவள் ஏற்று காதில் வைத்திருந்தாள்.

“பாப்பா… தேனும்மா! ஒண்ணுமில்லையேடா? நல்லாயிருக்கியா?”

தானொரு மருத்துவன் என்பதை மறந்து, அழைப்பினை அவள் முதல் முறையாக ஏற்றிருக்கிறாள் என்ற ஆச்சர்யத்தை ஒதுக்கி, அண்ணனாக மட்டுமே தனது உணர்வினை வெளிப்படுத்தினான்.

“ரொம்பத்தான் அக்கறை” என்று குரலில் சூட்டை நிரப்பிக் கூறியவளின் எதிர்பார்ப்பை அவனால் உணர முடிந்தது.

“நான் சரியான நேரத்துக்கு கால் பண்ணலன்னு கோபமாடா?”

அவள் பேசவில்லை. ஒரு கோபத்தில் இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டாள். ஆனால் அதற்கு பின்னர் அவளால் பேசிட முடியவில்லை.

அவனுக்கு அப்படியில்லை. பேசாதவள், தன் பேச்சினை கேட்க தவித்திருக்கிறாளே என்பதே இத்தனை வருட வேதனைக்கு போதுமானதாக இருந்திட… தான் மட்டுமே பேசினான்.

“நைட்டு பயங்கர மழைடா பாப்பா. சாதாரண நாளிலே சிக்னல் கிடைக்காது. மலையிலிருந்து கீழ போகவும் சிரமம். அதான் பண்ண முடியல” என்று விளக்கம் கொடுத்தான்.

‘இப்போ மட்டும் சிக்னல் வந்திடுச்சாம்மா?’ வாய்வரை வந்துவிட்ட கேள்வியை கேட்காது விட்டாள்.

ஆனால் அவன் பதில் சொல்லியிருந்தான்.

“பாதையில் ரெண்டு மூணு மரம் விழுந்துருச்சுடா… அதை க்ளியர் பண்ணவே ஈவ்வினிங் ஆகிப்போச்சு. நாளைக்கு ஃபிரண்ட்ஸோட மீட்டிங். வேலூர் போகணும். பாதி ராத்திரிக்கு மேல் மழை வந்துட்டால், கீழ வர முடியாதே” என்றவன் நிறுத்தி, சிறு தடுமாற்றத்தோடு…

“அதி வீட்டுக்கு கிளம்பிட்டேன். இப்போ போயிட்டு, நைட் ஸ்டே அங்கு தான். மார்னிங் அவனை கூட்டிட்டு வேலூர் போகணும்” என்றான் வாசு.

அதி என்ற அவனது உச்சரிப்பு அவளின் இதயத்தை மத்தளம் கொட்ட வைத்தது. கடந்து சென்ற வருடங்களில் மனத்திற்குள்ளே பலமுறை சொல்லிக்கொண்டாலும், மற்றவர் சொல்லி செவி மடுக்கும்போது தனி உணர்வு தான். வெகு நாட்களுக்குப் பின்னர் அவ்வதிர்வை உணர்கிறாள்.

சட்டென்று கலங்கிவிட்ட கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டாள்.

“அவங்க… டாக்டர் நல்லாயிருக்காங்களா?” கேட்டுவிட்டாள். வாசு பதில் சொல்வதற்கு முன் தடுத்தும்விட்டாள்.

“வேண்டாம் சொல்ல வேண்டாம். நான் அவங்களை பற்றி தெரிந்துகொள்ள கூடாதுன்னு சொல்லியிருக்காங்க வேண்டாம்” என்று படபடவென கூறி வைத்துவிட்டாள்.

பேருந்தில் அமர்ந்திருந்தவன் அணைக்கப்பட்ட அலைப்பேசியை உயர்த்தி பார்த்தவனாக இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

என்று தீரும் இந்த வலிகளும், வேதனைகளும்? மனம் மேலும் அதனின் சுமையை கூட்டிக்கொள்வது போலிருந்தது.

‘நீ வேறெங்காவது பிறந்து… அவன் உன்னை காதலித்திருக்கலாம்.’ கவலையாய் எண்ணிக்கொண்டான்.

காலத்தின் எண்ணங்களில் நம் எண்ணங்கள் எல்லாம் ஒன்றுமே செய்திட முடியாது என்பதே நிதர்சனம்.

வாசுவுக்கு தற்போதிருந்த ஒரே நிறைவு, தங்கை தன்னை தேடுயிருக்கிறாள் என்பதே!

மெல்லியதாக மனதிற்குள் மகிழ்ந்தும் கொண்டான்.

வாசு சொல்லிய அதி என்ற பெயரிலேயே கரைந்து கொண்டிருந்தாள் தேனு.

தேவ்வின் நினைவின்றி ஒரு நொடியும் கடந்திடாது. இந்நொடி ஏனோ அவனது நினைவு என்றுமில்லாது அதீத அழுத்தத்தை உண்டாக்கியது.

பல நாட்கள் அவனை பார்த்தே ஆக வேண்டுமென்ற தவிப்புகளையெல்லாம் கடந்து வந்தவளால், இக்கணம் ஏனோ முடியவில்லை.

தேவ்’வை… அவளின் தீரனை பார்த்தே ஆக வேண்டுமென மூச்சு முட்டியது.

“டாக்டர்” என்றவள் தலையணையில் முகம் புதைத்து பொங்கி வரும் அழுகையை அடக்கினாள்.

“என்னை உங்களுக்கு தேடவேயில்லையா டாக்டர்?” கேட்டுக்கொண்டவளுக்கு நெஞ்சின் ஓரம் முள் தைப்பது போல் வலித்தது.

கொட்டும் அருவியில் நனைந்தபடி தங்களின் காதலுக்கு அச்சாரமாய் இருந்திட்ட கரும்பாறையில் உறைந்து நின்ற கடவுளின் முன்… இலையில் மஞ்சளும் குங்குமமும் காட்டு மலர்களுடன் கலந்திருக்க… அதனை தன் காதலுக்கு சம்மதமாக தேவ்வின் கையில் வைத்துவிட்டு ஓடிவந்த தருணம் காட்சியாய் விரிந்து மனதை ரணம் கொள்ளச்செய்தது.

வலிக்க வலி கொடுக்க…

“நீ கஷ்டப்பட்டால் எனக்கு அதீத வலி கொடுக்கும்” என்ற தேவ்வின் குரல் காதோரம் ஒலித்திட வேகமாக எழுந்து கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தாள்.

தன்னை சமன் செய்திட முயற்சித்தாள்.

“ஹனி…”

அலைப்பேசியில் சித்துவிடமிருந்து தகவல் வந்திருக்க எடுத்து பார்த்தாள். பதில் அனுப்பி என்னவென்று கேட்கத் தோன்றவில்லை.

“வாட்ஸப் கூட யூஸ் பண்றதில்லை. அப்படியென்ன காரணமோ? பார்த்துவிட்டாளான்னாவது தெரிந்திருக்கும்” என்று வாய்விட்டே முணுமுணுத்த சித்து,

‘இந்நேரம் அழைக்கலாமா வேண்டாமா?’ என்று தனக்குள்ளே உழன்று, நேரம் அதிகமாவது உணர்ந்து அழைத்துவிட்டான்.

சித்து இதுபோன்று இரவு நேரங்களில் அழைக்கமாட்டான் என்பதால், ஆழ்ந்த மூச்சினை வெளியேற்றி தன்னை நிலைப்படுத்தி அட்டெண்ட் செய்திருந்தாள்.

“பாஸ்…”

“ஹாஸ்டலுக்கு வெளியில் தான் இருக்கேன்.” வைத்துவிட்டான். அவள் மறுத்துவிடுவாளோ என்று.

“இப்போவா” என்று அதிர்ந்தாலும், தனக்காக இந்நேரம் வந்ததற்கான காரணம் அறிய வேண்டி, மெல்ல வெளியில் வந்தாள்.

காவலாளியிடம் “அலுவலகத்தில் முக்கியமான வேலை… என்னை அழைத்துச்செல்ல பாஸ்ஸே வந்திருக்கிறார். ரெண்டு மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லி அனுமதி பெற்றாள்.

நான்கு வருடங்களாக தேனு இந்த விடுதியில் இருக்கின்றாள். அவளைப்பற்றிய காவலாளிக்கு நன்கு தெரியும். ஒரு நாளும் சந்தேகப்படும்படி யாருடனும் சென்றதில்லை. வந்ததுமில்லை. மற்ற பெண்களை பார்த்திட உறவினர்களென்று பலர் வந்தாலும், என்றாவது இவளுக்கென வருவது சித்து (அவனின் பெயர் அவருக்குத் தெரியாத போதும்) என்று மட்டுமே அறிவார்.

அதனால் தைரியமாகவே அவளை அனுப்பி வைத்தார்.

தேனு காருக்கு அருகில் வந்ததும், காரிலிருந்து இறங்கி நின்றவன், காவலாளியை பார்த்து…

“இரண்டு மணி நேரத்தில் நானே கொண்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லி அவர் தலையசைத்ததும் காரிலேறிக்கொண்டான்.

தேனு வண்டியில் ஏறாது என்னவென்று கேட்க,

“அவரிடம் சொன்னதை கேட்டதானே?” என்றான் சித்து.

அடுத்து ஒன்றும் கேட்காது ஏறி அமர்ந்தாள். மிதமான வேகத்தில் கடற்கரையை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.

“ஆபிசிலிருந்து எப்போ வந்தாய்?”

ஏன் கேட்கிறானென்று தெரியாத போதும் பதில் சொன்னாள்.

“சிக்ஸ் தர்ட்டி.”

“இப்போ டைம்… ஆல்மோஸ்ட் டென். ட்ரெஸ் கூட சேன்ஜ் பண்ணாமல் அப்படியென்ன யோசனை?” எனக் கேட்டான்.

முகத்தை சன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“அழுதியா ஹனி?”

அவள் கண்களைத் தாண்டி கண்ணீரை கொட்டி அழவில்லை என்றாலும், அழுகையும் வலியையும் அடக்கியதன் ரணம் முகம் சிவந்ததினால் நன்கு தெரிந்தது.

“என்னை பாரு!” வண்டியினை நிறுத்திவிட்டான்.

மெல்ல திரும்பி அவனை ஏறிட்டாள்.

“உனக்கு சொந்தமென்று நிறைய பேர் இருக்காங்க தெரியும். நீ இந்த நாலு வருசமா அங்கு போன மாதிரியே தெரியல. ஆனால் ஒரு போன் காலுக்காக இவ்வளவு ஏங்குற. அப்படி என்னதான் உன் மனசில் மறைச்சு வச்சிருக்க?” எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தெரியாததைப்போல் கேட்டான்.

இதுவரை வித்யாவிடம் கூட அவள் யாவற்றையும் பகிர்ந்துகொண்டதாக அவனுக்குத் தெரியவில்லை. அதனால் தான் இவ்வளவு அழுத்தமோ என நினைத்துதான், ஒருமுறை எல்லாத்தையும் வெளியில் கொட்டிவிட்டால் கொஞ்சம் தெளிந்துவிடுவாளென்று அவளை பேச வைத்திட அவ்வாறு வினவினான்.

“ப்ளீஸ் சீனியர்” என்றவள் பின்னால் சரிந்து கண்களை மூடிட… கண்ணீர் அவளின் செவி மடல் இறங்கியது. பட்டென்று இமை திறந்தவள் கண்ணீரை அழுந்த துடைத்தவளாக சித்துவை பார்த்து கண்களை எட்டாத சிரிப்பை வழங்கினாள்.

அவள் அனைத்தையும் தனக்குள் புதைத்துக்கொள்ளத்தான் பார்க்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன்… தற்சமயம் அவளின் மனதை மாற்ற முயன்றான்.

“சாப்பிட்டியா?”

அவள் பதில் சொல்லாது இருப்பதிலேயே சாப்பிடவில்லை என்பது தெரிந்தது.

“டே முழுக்க நீ டல்லா இருந்த. வழக்கமான உன்னோட ஸ்மைலிங் ஃபேஸ் மிஸ். அதான் சும்மா பார்த்திட்டு போலான்னு வந்தேன்” என்றவன், “உன்னை பற்றியே நினைச்சிட்டு இருந்தேனா. நானும் சாப்பிடல” என்றான்.

அவன் தன்னை சாப்பிட அழைக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது.

இப்போது தான் உண்ணாமல் அவனும் உண்ணமாட்டான் என்பதும்.

“எனக்கு பால் பொங்கல் வேணும்” என்று சொல்லியிருந்தாள்.

அவளை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தோடு ஏறிட்டான்.

மனதில் செல்லமாக ‘இதற்கொன்றும் குறைச்சலில்லை’ என்று நொடித்தும் கொண்டான்.

‘அடேய்… இந்த பால் பொங்கலுக்கும் ஏதும் பிளாஷ்பேக் இருக்கா?’ என்று மானசீகமாகக் கேட்க வேண்டிய நபரிடம் கேட்டும் கொண்டான்.

அவன் ஏதும் சொல்லாது அமைதியாக இருக்க…

“கிடைக்காதா?” என்று மிட்டாயிற்க்காக முகம் பார்க்கும் குழந்தையாய் கேட்டிருந்தாள்.

“ம்… கேட்டுட்ட… கொடுத்தே ஆகணுமே” என்றவன் நாதனுக்கு அவள் அறியாதபடி தகவல் அனுப்பினான்.

திடீரென சாப்பிடாதுக்கூட இரவில் வெளி சென்ற மகன் இன்னும் வரவில்லையே என கூடத்தில் அமர்ந்து மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த நாதன் சித்து அனுப்பிய தகவலை பார்த்ததும்…

“அச்சோ தேவி உன் பெரிய மகனோடு சேர்ந்து சின்னவனும் நம்மளை படுத்தி வைக்கிறான்” என்று அலைப்பேசியை மனைவியிடம் காண்பித்தார்.

“இப்போவாவது மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் தோணுச்சே” என்ற தேவி… மேனகா தேவி, தேவ்வின் சித்தி “நான் பால் பொங்கல் செய்யணும். உங்களுக்கு சொன்ன வேலையை செய்யுங்க” என்று எழுந்து சமயலறைக்குச் சென்றுவிட்டார்.

“டேய் அருளனாதா உனக்கு வந்த சோதனையா இது?” என்று மேல் பார்த்து கேட்டவர், கூடத்திலிருக்கும் புகைப்படங்களில் தேவ் இருக்கும் அத்தனை படங்களையும் பத்திரமாக கழட்டி அறைக்குள் எடுத்துச்சென்று வைத்தார்.

பொங்கலுக்கு பாலையும், பச்சரிசி மற்றும் சிறு பருப்பையும் கலைந்து கலந்து கொதிக்க வைத்துவிட்டு வந்த மேனகா…

“அக்கா, மாமா போட்டோவும் கழட்டுங்க. நேரில் பார்த்தது இல்லைன்னாலும், போட்டோவில் காமிச்சிருக்கப்போறான்” என்றார்.

“அப்போ நம்மளை விட்டு அவங்களை மட்டும் காட்டியிருப்பானா?” எனக்கேட்ட அருள், “தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போகட்டும் தேவி. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டமெல்லாம்” என்றார்.

“அவள் இங்கிருந்தும் எங்காவது போயிட்டால்?”

“உன் பையன் விட்டுடுவானா? சித்துவையே அவனோட தம்பின்னு அவளுக்குத் தெரியல. இதில் நம்மை எங்கு தெரியப்போகிறது” என்றவர் இதற்குமேல் எதையும் கழட்ட முடியாதென இருக்கையில் அமர்ந்துவிட வெளியில் வாகனம் வரும் ஒலி கேட்டது.

“வந்துட்டாங்கப் போல” என்ற மேனகா, அப்போதுதான் கவனித்தவராக…

“ஏங்க… இது” என்று கூடத்திலிருந்து மாடிப்படி ஏறும் பக்க சுவற்றில் தேவ்வின் கழுத்தினை சித்தார்த் கட்டிக்கொண்டு நிற்பதைப்போன்று இருக்கும் ஆளுயர புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

“மாட்டனும் விதியிருந்தால் ஒன்னும் பண்ண முடியாது” என்ற அருள், “என்னாலலாம் தனியா அதனை கழட்ட முடியாது” என்றார்.

அதற்குள் சித்து தேனுவை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தான்.

“போச்சு” என்று மேனகா, தேனுவை வரவேற்க நகர, அருள் புகைப்படத்தினை மூடி வைக்க ஏதுவாக அதன் மீதிருந்த துணியை இழுத்து விட்டிருந்தார்.

ஜஸ்ட் மிஸ்ட் மொமெண்ட்.

கவனித்த சித்து வாய் குவித்து ஊதிட்டான்.

“வாம்மா வா” என்ற மேனகா, தேனுவின் கரம் பற்றி “அழகா இருக்க” என்றிட…

“ம்மா…” என்று கண் காட்டினான் சித்து.

“சாரி ஆண்ட்டி. இந்த நேரத்தில் தொந்தரவு பண்ணிட்டேன். நான் வேண்டான்னு தான் சொன்னேன். சீனியர் தான் கூட்டிட்டு வந்துட்டார்” என்றாள் சங்கடமாக.

வீட்டு வாயிலிற்கு வந்ததும்…

“உங்க வீடா?” என்று கேட்டவள், சித்து ஆமென்றதும் வெளியில் எங்காவது சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சொல்லி உள்ளே வர மறுத்தாள் தான்.

“இந்நேரத்துக்கு நீ கேட்டது எங்கும் கிடைக்காது. அதோடு எனக்குத் தெரிந்து பால் பொங்கல் எந்த ஹோட்டலிலும் மெயின் டிஷ்ஷா வச்சிருக்காங்களா தெரியாது. அதான் வீட்டுக்கு. அம்மா சூப்பரா செய்வாங்க… வா!” என்று வற்புறுத்தி அழைத்து வந்தான்.

அதனை அவள் சொல்லிட…

“இப்போவாவது கூட்டிட்டு வந்தானே!” என்று உளறியிருந்தார் மேனகா.

“தேவி…” என்று மனைவியை அடக்கிய அருள், என்னவென்று புரியாது பார்த்த தேனுவை நோக்கி சிரித்தவராக,

“அங்கேயே நின்னுட்டு இருந்தால் எப்படி? உள்ளே வாம்மா” என்று அழைத்தார்.

அம்மாவை முறைத்த சித்து…

“நீ வா” என்று நேராக உணவு மேசைக்கு அழைத்துச் சென்றான்.

“செம பசிம்மா. சீக்கிரம் எடுத்து வையுங்க” என்றான்.

“டேய்… கை கழுவும் பழக்கமெல்லாம் இல்லையா?” என்ற மேனகா, “நீ கழுவிக்கோம்மா” என்று அதற்குரிய இடத்தை தேனுவிற்கு காண்பித்தார்.

“என்னை டேமேஜ் செய்வதிலே இருங்க” என்ற சித்துவின் முக பாவனையில் தேனு சத்தமாக சிரித்துவிட்டாள்.

“இப்படியே இருக்கிறதுக்கு என்னவாம்?” என்ற சித்துவிடம்…

“அருவி ஆல்வேஸ் ஸ்மைல்” என்றிருந்தாள்.

“ம்க்கும்… கொஞ்ச முன்பு அப்படியிருந்த மாதிரி தெரியலையே!”

“சீனியர்…” என்று அவள் மேனகாவை பார்க்க…

‘அவங்களுக்கு என்னைவிட அதிகமா எல்லாம் தெரியும்’ என்று மனதில் மட்டும் சொல்லிக்கொண்டான்.

“சரி சரி பேசினது போதும். சாப்பிடுங்க” என்றவர், சித்துவிற்கு சூடான சப்பாத்தி மற்றும் குருமாவை வைத்தவர், தேனுவின் முன் சிறு கிண்ணத்தில் பால் பொங்கல் வைத்து, ஸ்பூனிட்டு கொடுத்தார்.

பாலின் மணமும், நெய்யில் வறுத்த காய்ந்த பழங்களின் மணம் நாசி நுழைந்து நெஞ்சம் சேர, தன் நினைவுகளை உள்வாங்கியவளாக கண் மூடியவளின் கன்னத்தில் ஒரு சொட்டு நீர் உருண்டோடியது.

error: Content is protected !!
Scroll to Top