தித்திக்கும் தேனருவி 7

அத்தியாயம் 7

கன்னம் உருண்ட கண்ணீரை பட்டென்று துடைத்தவளாக தன்னையே பார்த்திருந்த மூவருக்கும் அதரம் விரியா சிரிப்பினை வழங்கினாள் தேனருவி.

சித்து அவளின் கரம் பற்றி அழுத்தம் கொடுக்க…

“அம் சில் சீனியர்” என்றவள், ஸ்பூனால் பால் பொங்கலை வாயில் வைத்திட… பொங்கிவிட்ட கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது தலை குனிந்து கொண்டாள்.

துளி நீர் கிண்ணத்தின் உள் சொட்டியது.

கண்கள் இருண்டிட மயங்கி சரிந்தவளை தன் தோள் தாங்கினான் சித்தார்த்.

அதற்குள், “டேய் சித்து பிடிடா!” என்று வேகமாகக் கூறியிருந்தார் அவனுக்கு முன் அமர்ந்திருந்த மேனகா.

“அடேய் சித்து என்னடா இது? அப்படியென்னடா இருக்கு இந்த பொங்கலில்?” என்று அருள் கேட்டுக்கொண்டிருக்க… சித்து அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து கன்னம் தட்டிட அவளிடம் அசைவில்லை.

“தூக்கு சித்து… சோஃபாவில் படுக்க வை” என்ற மேனகாவின் பேச்சினை சித்து செயல்படுத்தினான்.

“எனக்கு பயமா இருக்குடா! டாக்டருக்கு கூப்பிடவா?” மேனகா கைகளை பிசைந்தார்.

“ஓவரா ஸ்ட்ரெஸ் பண்ணியிருப்பா(ள்)ம்மா. கொஞ்சம் நேரம் பார்ப்போம்” என்ற சித்து மீண்டும் முகத்தில் தண்ணீர் தெளிக்க… கண்களை சுருக்கி இமை திறந்தாள்.

மேனகாவிற்கு போன உயிர் மீண்டு வந்தது போலிருந்தது.

“இப்போ எப்படியிருக்கும்மா?” அருள் அவளின் தலை வருட…

“என்னம்மா இப்படி பயம் காட்டிட்ட!” என்றார் மேனகா.

“சாரி ஆண்ட்டி…” என்றவள், “கொஞ்சம்…” சொல்ல முடியாது தடுமாறி, “சாரி சாரி அங்கிள்” என்றாள்.

உணர்வாய் உள்ளுக்குள் வெகுவாக போராடிக் கொண்டிருக்கிறாள் என்பது மூவருக்கும் புரிந்தது.

“ஹேய் ஹனி… ஜஸ்ட் ரிலாக்ஸ். ஒண்ணுமில்லை. விடு” என்ற சித்து, “மாம்” என்றிட, மேனகா தேனுவின் ஈரம் படிந்த முகத்தை தன்னுடைய சேலை தலைப்பால் துடைத்து விட்டார்.

“டேக் அ டீப் ப்ரித் ஹனி” என்ற சித்து அவளின் கையை விடவே இல்லை.

அக்கணம் அவனின் அண்ணன் மீதுதான் கோபம் எழுந்தது.

காதலர்கள் பிரிவதற்கு பல காரணங்கள் தடையாக அமையலாம். அவர்களே காரணமாக இருக்கலாமா? இங்கு பிறரின் பார்வையில் தடை தேவ் மட்டுமே! அவன் சரியென்று சொல்லியிருந்தால்… பிரிவே இருந்திருக்காது. ஆறு வருடங்களுக்கு முன்னரே இணைந்திருப்பர்.

“ஆர் யூ ஓகே நவ் ஹனி?”

“ஓகே தான் சீனியர்” என்றவள், “நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

“நீயும் வா” என்ற சித்து மற்ற இருவருக்கும் கண்காட்டிட அவர்களும் வற்புறுத்தவே எழுந்து சென்றாள்.

“அதை வச்சிடும்மா. சப்பாத்தி சாப்பிடு.” தேனுவின் முன்னிருந்த பொங்கல் கிண்ணத்தை மேனகா அகற்றி வேறு தட்டு வைத்திட…

“ஆண்ட்டி வேண்டாம். எனக்கு அதுவே போதும்” எனக்கூறி அவர் மறுக்கும் முன் கிண்ணத்தை கையில் எடுத்து உண்ண ஆரம்பித்திருந்தாள்.

ஒவ்வொரு வாய் உணவும் தொண்டையில் சிக்கி அத்தனை வேதனையை கொடுத்தது. பிடிவாதமாக உண்டு முடித்தாள்.

காரணம் தெரியாவிட்டாலும் மூவருக்கும் கோபம் தேவ்வின் மீதுதான்.

தேனுவின் வலியை இன்று தானே கண்கூடாகக் காண்கிறார்.

இத்தனை நாளும் தேனுவின் மீது அவர் கொண்டிருந்த கோபமெல்லாம் காணாமல் போனது.

காதல் இருந்திருந்தால் தேவ் வேண்டாமென்று சொல்லியிருந்தாலும், இவளால் எப்படி விட முடிந்தது எனும் கோபம்… அவன் மீது வைத்துள்ள காதலுக்கு மதிப்பளித்தே எட்ட நிற்கிறாள் என்பது விளங்கியதும் விலகியிருந்தது.

பனித்த நீரால் இமை ஊறியிருக்க, உதட்டில் தருவிக்கப்பட்ட புன்னகையுடன்,

“பொங்கல் சூப்பர் ஆண்ட்டி” என்றாள்.

அவளை அள்ளி அணைத்து ஆறுதல் கொள்ள, கைகள் பரபரத்த போதும்… எட்டி நிற்க வேண்டிய நிலை. மகனைத்தான் பார்த்தார் மேனகா.

சித்துவால் மட்டும் என்ன செய்திட முடியும்? நண்பனாக அவளின் கரம் அழுத்த மட்டுமே முடியும்.

“போகலாமா சீனியர்? டைம் ஆச்சு” என்றாள்.

அவளுக்கு மனம் விட்டு, தொண்டை விட்டு கதறி அழ வேண்டும் போலிருந்தது. இங்கு முடியாதே!

தலையை அசைத்த சித்து, அன்னையை ஏறிட…

“நைட் இங்கிருந்துட்டு காலையில் போகலாமேம்மா!” என்றார்.

சித்துவை பார்த்த தேனு கண்களால் இரைஞ்சினாள். சித்து இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.

“விட்டுட்டு வரேன் மாம்” என்றவன் முன் செல்ல, பெரியவர்கள் இருவரிடம் சொல்லிவிட்டு தேனு சித்துவின் பின் சென்றாள்.

“இத்தனை நாள் வலியும் வேதனையும் நம்ம பிள்ளைக்கு மட்டும் தான்னு நினைச்சேங்க. அவன் அனுபவிப்பதோடு, தேனுவையும் சேர்த்து கஷ்ட்படுத்துறாங்க… ரெண்டும் ஒண்ணுக்கு ஒன்னு உயிரே வச்சிருக்குங்க. அப்புறம் எதுக்கு இந்த பிரிவு தெரியல” என்று அருளிடம் வேதனையோடு சொல்லிய மேனகா…

“வர சொல்லியிருக்கான். மாமாகிட்ட பேசிடலாம் இருக்கேன். இனியும் மறைக்க முடியாது. அட்லீஸ்ட் தேனு நம்ம கண் பார்வையில் தான் இருக்கா(ள்)ன்னாவது சொல்லிடணும்” என்றார்.

தேனுவின் அடக்கப்பட்ட உணர்வினை கண்கூடாக பார்த்த அருளுக்குமே மனம் வெம்பிவிட்டது. அதனால் மனைவி சொன்னதற்கு ஆமோதித்தார்.

“இனி அவன் போக்கிலே விட்டால், வாழ்க்கையே முடிஞ்சிடும் தேவி. நாம் தான் ஸ்டெப் எடுக்கணும். அதிக்கு தெரியாமல் வாசு வீட்டிற்கு செல்வோம். இத்தனை வருஷமாச்சு. கொஞ்சமாவது இறங்கி வர மாட்டார்களா?” என்றார்.

தேவ் அளவிற்கு தேனுவின் பின்னணி பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் செவி வழியாக சிலதை மட்டும் கேட்டறிந்திருக்க, தேவ் நேரிலேயே பலதை பார்த்திருக்கிறான் என்பது புரியவில்லை.

தேவ்வினை மீறி அங்கு சென்றிடுவார்களா?

*******

விடுதிக்கு செல்லும் வரையிலுமே சித்து தேனுவிடம் எதுவும் பேசவில்லை.

தேனுவுக்கும் மனதளவில் மட்டுமல்லாது சூழலாலும் அமைதி வேண்டுமாக இருந்தது.

விடுதிக்கு முன் வண்டியை நிறுத்திய சித்து…

“ஹனி… ஹாஸ்டல் வந்தாச்சு” என்றான்.

மூடிய கண்களை திறவாது…

“கொஞ்சம் நடக்கலாமா சீனியர்? சின்னதா ஒரு வாக்” என்றாள்.

“ம்” என்றவன் இறங்கிட… அவளை இறங்கினாள்.

ஆளரவமற்ற சாலை. இரு மங்கிலும் மரங்களின் குளுமையில் நடப்பதற்கு இதமாக இருந்தது.

“நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா சீனியர்?” அவளே பேச்சினைத் துவங்கினாள்.

“உனக்குத் தெரியுமே ஹனி?”

“சீக்கிரம் சொல்லிடுங்க” என்றவள், “சொல்லிட்டால் எந்தவொரு சூழலிலும், எதையும் காரணம் காட்டி தனியா விட்டுடாதீங்க” என்று இடை நிறுத்தியவள் பக்கவாட்டாக அவனது முகம் பார்த்து,

“உங்க டாக்டர் மாதிரி” என்றாள்.

“ஹனி…”

எப்படித் தெரியும் என்கிற அதிர்ச்சி அவனிடம்.

“வீட்டுக்குள் நுழைந்ததுமே ஹாலில் டிவிக்கு அருகிலிருந்த போட்டோ பார்த்துட்டேன்” என்றாள்.

‘டாட்…’ என்று அவரை மனதிற்குள் முறைத்தவன்,

‘அது ரொம்ப குட்டியா இருக்குமே! எப்படி தெளிவா தெரிந்திருக்கும்?’ என நினைத்த போதும்,

“சொன்னால் எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு தெரியல. அதோடு பார்க்க வந்தால் எங்காவது போயிடுவன்னு வாசனையே மிரட்டி வச்சிருக்க. நான் யாருன்னு தெரிந்து இங்கிருந்து போயிட்டால்?” என்றவன்,

“நீ இங்கு வந்த புதிதில் உன்னைப்பற்றி எதுவும் தெரியாது பித்து பிடித்து சுத்திய அதி எங்களுக்கு ரொம்ப புதிது. திரும்ப அவங்களை அப்படி பார்க்க முடியாது” என்றான்.

தேனுவிடம் விரக்தி மட்டுமே!

தன்னைப்பற்றி தெரிந்துகொள்ளக் கூடாது என்றவன், அனுதினமும் அவளைப்பற்றித் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றான் என்பதில் அவனது காதலை மட்டுமே உள்வாங்கினாள்.

‘இத்தனை காதல் இருக்கும்போது என்னை ஏன் வேணாம் சொன்னீங்க டாக்டர்?’ காரணங்கள் தெரிந்த போதும் தன்னெதிரே இல்லாதவனிடம் குமுறலோடு கேட்டிருந்தாள்.

அதற்கு மேல் தேனு எதுவும் பேசாது நடக்க…

“உன்னை ரொம்ப பிடிக்கும். என்னோட ஹனியா… ஜூனியர் பொண்ணா!இத்தனை நாள், உனக்காக மட்டுமே உன் மீதான கேரிங், கன்சர்ன். என் அண்ணணுகாகன்னு நினைச்சிடாதே! காலேஜில் நீ சோகமா சுத்திட்டு இருந்தப்போ எனக்கு எதுவும் தெரியாது” என்றான்.

“மத்தவங்களுக்காக ஒருத்தர்கிட்ட அன்பு காட்ட முடியாதுன்னு தெரியும் சீனியர்” என்றவள் உன்னை நான் தவறாக நினைக்கவில்லை என்பதை தெளிவாக்கியிருந்தாள்.

மீண்டும் ஒரு மௌனம் இருவரிடமும்.

“அண்ணா பற்றி கேட்க மாட்டியா ஹனி?”

“அவங்களைப் பற்றி அவங்ககிட்ட தானே தெரிஞ்சிக்க முடியும்!”

“எப்படி இந்தளவுக்கு லவ் அண்ணா மேல்?”

ஏனிந்த கேள்வி என்பதுபோல் நின்று பார்த்தாள்.

“அதி தான் அவங்களைப் பற்றி நீ எதையும் தெரிந்துகொள்ளக் கூடாது சொன்னாங்க தெரியும்” என்றவன், “அதி சொன்ன வார்த்தைக்கு ஆறு வருடங்களாக மதிப்பு கொடுத்திட்டு இருக்கியே!” என்றான்.

“நான் அதிகமா நேசிக்கிறேனா தெரியல. ஆனால் நான் இவ்ளோ லவ் காட்டுறேன்னா அவங்க என்னை எவ்ளோ லவ் பண்ணியிருக்கணும்? இப்பவும்” என்றாள்.

சித்துவுக்கு அவர்களின் காதலை பார்க்கும்போது மலைப்பாக வந்தது.

‘ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொள்ளாது, பேசிக்காது இருக்கும்போதே இத்தனை நேசமா?’ பெரும் வியப்பு.

“ம்ம்ம்” என்ற சித்து, “பேமிலியை ஏன் அவாய்ட் பண்ணனும்?” எனக் கேட்டிருந்தான்.

“அவங்களுக்கான காரணம் அதுதானே! நீங்க நினைக்கிற மாதிரியில்லைன்னு காட்டத்தான்” என்றவள், “இப்படியிருக்க முடியலதான். ஆனால்” என்றவள் தழுதழுத்த தொண்டையை சீர் செய்து,

“எனக்கு அவங்க நினைப்பு மட்டும் போதும். நினைப்போடே வாழ முடியுங்கிற போது… அவங்களோடு, அவங்க மட்டும் போதுமென்று, அவங்க எதிர்பார்க்கிற சந்தோஷத்தோடு என்னால் வாழ முடியாதா சீனியர்?” என்றாள்.

சித்துவின் புருவங்கள் தானாக உயர்ந்தது.

அந்நொடி, தன் அண்ணனின் காதலுக்கு இவள் கொண்ட காதல் சற்றும் சளைத்தது இல்லையென்றே சித்துவிற்குத் தோன்றியது.

“உங்களை மாதிரி நேசிக்கணும்” என்றவன், “இவ்ளோ வலியோடு எப்படி ஹனி உன்னால் சிரிச்சிட்டே இருக்க முடியாது. பிரிவு தான் தீர்வுன்னு முடிவெடுத்த அதி அண்ணாவே, சிரிக்க முடியாது வலியை சுமந்துகிட்டு நடமாடும் போது… நிராகரித்துவிட்ட வலி கொஞ்சமும் வெளிக்காட்டிக்காமல் உன்னால் எப்படி முடியுது?” எனக் கேட்டான்.

“சிம்பிள்… ஹீ இஸ் மை எவ்வரித்திங்” என்றாள். சிறு புன்னகையோடு. கண்கள் நீரில் பளபளத்தன.

வலிகள் யாவற்றையும் தன் உள்ளத்தால் மட்டுமே கடக்க நினைக்கின்றாள் என்று சித்துவுக்கு புரிந்தது.

திரும்பி விடுதி நோக்கி நடக்கத் தொடங்கினர்.

“மனசு லேசான மாதிரி இருக்கு சீனியர். தேன்க்ஸ்” என்றாள்.

“அடி வாங்குவ!” என்று விரல் நீட்டி மிரட்டிய சித்து…

“உன்னை அதியோட வருங்காலம்மா தெரியும் முன்னவே… நீ என்னோட ஹனி” என்றான்.

“என் கிளாஸ்மேட் ஒருத்தனை ஓடவிட்ட நினைவிருக்கா… அதுல தான் உன்னை பிடித்தது. அப்புறம் உன்னை நோட் பண்ண ஆரம்பிச்சேன். நீயிருக்க இடம் எப்பவுமே சத்தமா சிரிப்பா இருக்கும். உன்னை பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் வைப்ஃ. அப்படியே மனசுக்கு நெருக்கமான… உறவா அமையும் எதிர்பார்க்கல” என்றான்.

“அந்த சீனியரை ஓடவிட்ட கதை பிரின்சி வரை போய்… நல்லவேளை உங்களால் தப்பிச்சேன். இல்லைன்னா எங்க மலையிலிருந்து என் அப்பாவே என்னை உருட்டித் தள்ளியிருப்பார். யாருடா இது நமக்கு ஹெல்ப் பண்ற சீனியருன்னு உங்களை கவனிக்கத் தொடங்கினேன். என் கிளாஸ்லே பாதிக்கு மேல எல்லாம் உங்க ஃபேன்ஸ். நான் கேட்காமலே உங்க டெய்லி அப்டேட் காதுக்கு வரும். நீங்களும் பார்க்கும்போதெல்லாம் குட்டியா ஸ்மைல் பண்ணுவீங்களா… வாசு அண்ணா உடனிருக்க பீல் வரும்” என்றாள்.

கடந்த காலங்களை நினைக்கும் போது முகத்தில் வரும் புன்னகை உணர்த்தும்… நம் எத்தனை மகிழ்வாய் இருந்தோம் என்பதை.

இருவருக்குமே மனதில் ஒருவித இதம் அத்தருணம்.

நீண்ட நெடு நாட்கள் கழித்து சுவாசிக்கும் காற்று அத்தனை குளுமையை சேர்த்தது அவளின் நுரையீரலில்.

“நான் உன் அண்ணாலாம் இல்லை” என்று வேகமாக மறுத்த சித்து, “உன்னை ஃபிரண்டா பார்க்கத்தான் தோணுது” என்றான்.

ஒரு ஆண் உன்னை தோழியாகத்தான் மனம் விரும்புது என்று சொல்வது அத்தனை எளிதல்ல. பெண்ணின் மீது காதல் கூட நொடியில் மலர்ந்திடும். நட்பு?

தேனுவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது.

ஒன்றாக படித்த காலத்திலும், ஒரே அலுவலகத்தில் ஒன்றாக இருக்கும் போதும் அதிகம் பேசியதில்லை. பழகியதில்லை. பார்வை படும் நிலை மட்டுமே.

இருப்பினும் இருவரின் மனதும் சொல்லிக்கப்படாத நட்பில் திளைத்திருந்தது.

“இதை ஹரிஷ் கிட்ட சொல்லுங்க” என்றாள். சின்ன சிரிப்போடு.

“சொன்னாலும் நம்ப மாட்டான்” என்ற சித்துவிடமும் சிரிப்பு மலர்ந்திருந்தது.

“அவனுக்கும் புரியும். சும்மா சீண்டுவதற்கு எதையாவது பேசுவான்” என்றாள்.

“ம்ம்.”

விடுதி வாயிலில் சாலையில் நின்றிருந்தனர்.

“நீங்க வரதுக்கு முன்னிருந்த மனநிலைக்கு மாறாக இப்போ இருக்கு சீனியர்” என்றவள், “தேன்க்ஸ் சொல்ல மாட்டேன்” என்றாள்.

“இப்பவும் நீயெதுக்கு அழுத… அப்படியென்ன நினைவு? கேட்கத் தோணல. ஆனால் என்னோட ஹனி இதுக்கு அப்புறமாவது என்கிட்ட எல்லாம் ஷேர் பண்ணிக்கணும்” என்றான்.

அவளும் சரியென தலையசைக்க… அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தி விடைபெற்றவனாக காரில் ஏறினான்.

“சீனியர்” என்று தடுத்தவளாக, அவன் ஏறிடும் முன் அவனருகில் சென்று…

சித்து எதற்கு இந்த அழைப்பென்று உணரும் முன்னமே, தோழமையாய் அவனை அணைத்திருந்தாள்.

அவள் அணைப்பில்… தாயிடம் குழந்தை தேடும் அரவணைப்பே அவன் உணர்ந்தான்.

தேனுவின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்தவன்…

“எல்லாம் சரியாகும்” என்றிட…

அவனிலிருந்து பிரிந்தாள்.

“உங்க அண்ணாவை அடுத்து எப்போ பார்த்தாலும் மறக்கமா கொடுத்திடுங்க” என்றாள். உண்மையான மலர்ச்சியுடன்.

“அப்போ இந்த ஹக் எனக்கில்லையா?” என்று சோகம் போல் கேட்டவன், “நீயிருக்கும் போது நான் ஏன் கொடுக்கணும்?” எனக் கேட்டான்.

“அப்போ சீக்கிரம் வந்து கூட்டிட்டு போகச் சொல்லுங்க. இனியும் காத்திருக்க முடியாது… கூட வச்சிக்க முடியாதுன்னா சொல்ல சொல்லுங்க, நான் கட்டி கூட வச்சிக்கிறேன்” என்றவள், “சொன்னதை அப்படியே சொல்லணும். ஒரு வோர்ட் மாறக்கூடாது” என்றவளாக உள்ளே ஓடிவிட்டாள்.

“காலேஜ் டேசில் நான் பார்த்த ஹனி வெளியில் வறாங்க” என்றவனது குரலுக்கு திரும்பி பின் நடந்தவளாக சிரிப்பை பதிலாகக் காட்டி மறைந்தாள்.

***********
காலை உறக்கம் கலைந்து வாசு எழும் போது… படுக்கையில் சாய்ந்து சரிந்து அமர்ந்தவனாக எதிரே மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை இமை சிமிட்டாது பார்த்திருந்தான் தேவதிரன்.

ரசித்திருந்தான் என்று சொல்ல வேண்டுமோ!

தேவ் கண்களில் அப்படியொரு மின்னல். என்னவோ அவனது அருவியே அவனின் கண்முன் வந்து நிற்பது போல் அத்தனை ஒளியுடன் பார்த்திருந்தான்.

இது தினப்படி வழக்கம் என்பது வாசுவுக்கு புரிந்தது.

‘ஒத்த ஃபோட்டோ! அதுவும் வெறும் காலும் கையும் மட்டும் வச்சிக்கிட்டு வாழ்க்கையை ஓட்டிடலாம் நினைக்கிறானா?’ வாசுவால் கூட தேவ்வை புரிந்துகொள்ள முடியவில்லை.

தேவ்விடம் சிறு அசைவு தென்படவும், அப்போது தான் கண் திறப்பவனாக…

“குட்மார்னிங் மச்சான்” என்றான் வாசு.

சடுதியில் தேவ்வின் உடல் இறுகி தளர்ந்தது.

வாசு எப்போதும் போலத்தான் நட்பின் விளிப்பாக மச்சான் என்று அழைத்திருந்தான். ஆனால் தேவ்விற்கு?

எப்போது தேனுவை உயிராக நேசிக்கத் தொடங்கினானோ… அது முதல் வாசுவின் மச்சான் என்கிற விளிப்பைகேட்கும்போதெல்லாம் மனதோடு அத்தனை மகிழ்ந்திருக்கிறான்.

இன்று அந்த மகிழ்வு பச்சை ரணமாய் வலி கொடுக்க… வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டான் தேவ்.

வாசுவுக்கு தேவ்வை நினைத்து ஆயாசமாக வந்தது.

“நான்ந்(தா)ன் மலையில் இருக்கேன். ஆனால் இவன் எப்போ இறங்குவான் தெரியலையே!” முணுமுணுத்த வாசு நேரத்தை பார்க்க… எட்டு பத்தாகியது.

துள்ளி குதித்து எழுந்தமர்ந்தான்.

தன்னுடைய அலைப்பேசியை எடுத்து, கால் லாக் திறக்க…

ஏற்கனவே சரியாக எட்டு மணிக்கு தேனுவுக்கு அழைப்பு சென்றிருந்தது. எதிர்பக்கம் எடுக்கப்பட்டதன் அடையாளமாக டியூரேஷன் எட்டு விநாடிகள் காட்டியது.

‘அதி கால் பண்ணியிருக்கான்.’ தானாகவே புரிந்தது.

நேற்று தான் அழைக்காததால் பதட்டத்தில் இருந்தவள் இரவு அழைத்ததும் எடுத்துவிட்டாள். அதையே தொடர்வாள் நம்பிக்கை நேற்றே வாசுவுக்கு இல்லை. அதனால் இன்று அவள் ஏற்றிருப்பதை நம்ப முடியாதுதான் பார்த்தான்.

“கீழ போறேன். ஹாஸ்பிடல் போகணும். ஃபங்(ன்)க்ஷன் எப்போ?” மருத்துவமனை செல்ல தயாராகி வந்த தேவ்… இன்னும் படுக்கையை விட்டு எழாத வாசுவிடம் வினவினான்.

“2 பி.எம்.”

“ம்… எனக்கு லெவன்க்கு ஒரு அப்பாயின்ட்மெண்ட் இருக்கு. முடிச்சிட்டு வந்துடுறேன். நீ ரெடியா இரு. 12க்கு கிளம்பினால் ஒன்றரை மணிநேரத்தில் ரீச் ஆகிடலாம்” என்றான் தேவ்.

வாசு பதில் பேசாது தன்னையே பார்த்திருக்க…

“என்ன?” என்றான் தேவ்.

“ஃபார்மலா… யார்கிட்டையோ பேசுற மாதிரி பீல் ஆகுதுடா!” தன் உள்ளத்து எண்ணத்தை மறையாது கூறினான் வாசு.

“அப்படியில்லடா வாசு” என்ற தேவ் படுக்கையில் அவனது அருகில் அமர்ந்து, அவனின் கரம் பற்றி…

“இயல்பா இருக்கத்தான் ட்ரை செய்றேன். முடியலடா” என்றான்.

ஒற்றை வரியாயினும் தேவ் மனம் திறந்து சொல்லியதே வாசுவுக்கு போதுமானதாக இருந்தது.

“இட்ஸ் ஓகேடா… உன்னை வருதிக்காதே” என்றவன், “நீ போயிட்டு வா. நான் ரெடியா இருக்கேன்” என்றான்.

“உன்னையும் கஷ்டப்படுத்துறேன்ல?” என்று அதீத வருத்தத்தோடு கேட்டான் தேவ்.

இல்லையென வட இலமாக தலையை ஆட்டிய வாசு…

“என் மச்சானை எனக்குத் தெரியும்” என்றான்.

தேவ் தாவி நண்பனை அணைத்துக்கொண்டான்.

சில கணங்கள் நீடித்த அணைப்பை திடீரென அவ்வறையில் ஒலித்த தேனுவின் குரல் முடிவுக்கு கொண்டு வந்தது.

error: Content is protected !!
Scroll to Top