அத்தியாயம் 8
திருவண்ணாமலையிலிருந்து வேலூர் பயணம். அதிகபட்சமாக இரண்டு மணி நேரம்.
வீட்டிலிருந்து கிளம்பி ஐம்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. கிட்டதட்ட பாதி தூரம் வந்திருந்தனர்.
தேவ்வின் கவனம் முழுவதும் சாலையில் தான். அவனாக ஒன்றும் பேசவில்லை. வாசு கேட்டதற்கு பதில் வழங்கினான். ஒரு கட்டத்தில் வாசுவும் தன் கவனத்தை வெளிப்புறத்தில் பதித்துக்கொண்டான்.
இப்படி யாருக்கோ போன்று கேட்டதற்கு பதில் சொல்லும் தேவ்வை வாசுவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ஒரு காதல் ஒருவனை இந்தளவிற்கு மாற்றுமா? கண்கூடாகக் காண்கிறானே! அவனிடம் பெருமூச்சு மட்டுமே. அவனது தங்கையும் காதலுக்காகத்தானே தங்களை விட்டு இருக்கிறாள். காதல் படுத்தி வைக்குமென்று தெரியும். இந்தளவிற்கு என்பது தனக்கு நெருக்கமானவர்களின் மாற்றத்தை காணும் போதுதான் புரிகிறது.
காருக்குள் நிலவும் அமைதி வாசுவின் மனதை பலவற்றை யோசிக்க வைத்தது.
அதில் ஒன்று காலையில் தேவ்வின் அறைக்குள் திடீரென்று ஒலித்த தேனுவின் குரல்.
“கிளம்பிட்டிங்களா டாக்டர். சாப்பிட்டு போங்க!”
சட்டென்று ஒலித்த குரலில் தேனு தான் வந்துவிட்டாளோ என்று வாசுவின் பார்வை அறையின் வாயிலில் நிலைத்தது. மூடிய கதவு தாழிடப்பட்டிருந்தது.
ஒலித்த குரலை கண்களை மூடி ஆகம் நிறைத்தான் தேவ்.
அவனின் நிலையில் வாசுவின் முகம் சடுதியில் வருத்தத்தை தத்தெடுத்துக் கொண்டது.
ஒரு குரலில் இத்தனை காதலை காட்டிட முடியுமா? தேவ்வின் முகம் காதலை பளிங்காய் காட்டியது.
“இந்த வாய்ஸ்?”
தேவ் கண் திறக்க வாசு கேட்டிருந்தான்.
“தங்கச்சி குரலே நினைவில் இல்லையா?” என்ற தேவ் நகர…
அப்போதுதான் வாசுவுக்கு விளங்கியது. அது ரெகார்ட் செய்யப்பட்டு சரியான நேரத்திற்கு அறையில் ஒலிக்குமாறு பொருத்தப்பட்டிருக்கும் குரல் என்று.
தேவ்வின் காதல் வாசுவிற்கே திணறலை கொடுத்தது.
“ஒரு போட்டோவும், குரலும் போதுமென இருக்கியா அதி?”
வாசுவின் கேள்வியே காதில் விழாதாவாறு சென்றுவிட்ட தேவ்வின் மீது முதல் முறையாக வாசுவுக்கு கோபம் வந்தது.
அந்த கோபத்தோடு கிளம்ப ஆயத்தமாகியவன், தேவ் வரும் நேரமும் உர்ரென்று அமர்ந்திருந்தான்.
கவனித்தாலும் எதுவும் கேட்காது வேலூர் செல்ல கிளம்பிவிட்டான்.
“அவன் கார் ஸ்டார்ட் பண்ணிட்டான் வாசு. போ, இல்லைன்னா விட்டுட்டு போனாலும் போயிடுவான்… இல்லை, ட்ரிப் கேன்சல் பண்ணிடுவான்” என்ற ராதிகா… தேவ் இல்லாத நேரம் வாசுவிடம் அத்தனை புலம்பியிருந்தார்.
“சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர சொல்லு வாசு” என்று அனுப்பி வைத்தார்.
அதனை நினைத்த வாசுவுக்கு…
‘தன் பேச்சை கேட்பவனா இவன்’ என்று மனம் நினைக்க… தேவ்வை திரும்பி மேலும் கீழும் பார்த்தான்.
“இப்போ என்ன கேட்கணும்? ஓப்பன் அப் பண்ணு.” வாசு வந்ததலிருந்து தன்னிடம் பேசுவதற்கே பலவற்றை யோசித்து தன் முகம் பார்த்து தயங்குவதை தேவ்வும் உணர்ந்தே இருந்தான்.
“இப்படியே… இன்னும் எவ்வளவு நாளைக்கு?”
“உன் கல்யாணம் வரை.”
தேவ் இப்படியொரு பதிலை சொல்லுவானென்று வாசு நினைக்கவில்லை. நம்பமாட்டது, பார்வையில் நம்பிக்கையின்மையை காட்டினான்.
“நம்பலையா நீ?” என்ற தேவ்,
“உங்க வழக்கம் ஆணுக்குத்தானே முதலில் கல்யாணம் பண்ணுவாங்க?” என கேட்டதோடு, “உன் கல்யாணத்தப்போ அருவி தானே மணி போடணும். அதுக்கு அவளுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்கணும் தானே?” என்றான்.
வாசுவின் பக்கம் அவன் திருமணம் செய்யப்போகும் பெண்ணிற்கு, மணம் முடிக்காத தங்கை உறவு கொண்ட பெண் தான் கரு மணிகள் கோர்க்கப்பட்ட தாலியை அணிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களில் திருமணம் முழுமை பெறும். அதனைத்தான் தேவ் குறிப்பிட்டான்.
வாசு புரிந்தது என்று தலையாட்டினான்.
“அப்போ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ மச்சான். நான் என் அருவியை தூக்கிட்டு வந்துடுறேன்” என்றான்.
“உண்மையா சொல்றியா அதி?” இன்னமும் நம்பாதுதான் கேட்டான்.
தேவ் தன்னுடைய அலைப்பேசியை தூக்கிக் காட்டினான்.
வாசு என்னவென்று பார்க்க…
“பால் பொங்கல் சாப்பிடணும்” என்று இரவு சித்துவிடமிருந்து வந்த புலனம் தகவல் அது.
நேரத்தையும் பார்த்த வாசு,
“அந்த நேரத்தில்… சாப்பிடணும் அப்படின்னா ஆண்டியை செய்து தர சொல்லி சாப்பிட சொல்லு. உன்கிட்ட எதுக்கு…” என்று சம்மந்தமில்லாது இப்போ இதை ஏன் காட்டுகிறான் என்கிற கடுப்பில் பேசிய வாசு, ஏதோ புரிந்தவனாக தேவ்விடம் பொருள் பொதிந்த தலையசைப்பால் வினவினான்.
ஆமென்று கண்கள் மூடி திறந்த தேவ்…
“எனக்கான காரணத்தில் அவளை அதிகம் கஷ்டப்படுத்துறேன்” என்றான். மிகுந்த வலியுடன்.
“அதி…”
“சில விடயங்கள் இப்படித்தான்னு தெரிந்தாலும்… லேட்டாதான் புரியுது” என்ற தேவ்… “எனக்காக… என் அருவிக்காக ஒருமுறை முயன்று பார்க்கலாம் தோணுது வாசு. தட்டி பார்ப்போம்… அசையலைன்னா, ஒரு ஓரமா தள்ளி வச்சிட்டு நம்ம வேலையை பார்ப்போம்” என்றான்.
“அசைக்கக்கூடிய மலையா அது!” வாசு மலைப்பாகக் கேட்டிட, தேவ் பக்கென்று சிரித்துவிட்டான்.
தேவ் தட்டி பார்ப்போம் என்றும், வாசு மலையென்றும் குறிப்பிட்டது வாசுவின் தந்தையை தான்.
விலகி பிரிந்திருந்தால் பிரிவு மட்டுமே நிரந்தரம் என்பதை தேவ் புரிந்துகொள்ள ஆறு வருடங்கள் தேவைப்பட்டிருக்கு.
இப்போதிருக்கும் பக்குவம் அப்போது இல்லாதிருந்ததாலோ அல்லது இருந்ததாலோ அன்றளவில் அவன் எடுத்த முடிவு சரியானதே!
“என்னை உன் எண்ணத்திலிருந்தும் மனதிலிருந்தும் தூக்கிப்போட்டுவிடு” என்றவனின் வார்த்தை பசுமையாய் இன்றளவிலும். ஆனால் அவளிடம் அதற்கான சிறு முயற்சியும் இல்லை. நாளுக்கு நாள்,நொடிக்கு நொடி தன் நினைவுகளால் மட்டுமே தன்னவளின் உலகம் இயங்குகிறது என்பது என்றோ புரிந்திருந்தாலும், இன்று தான் நிலையான ஒரு முடிவுக்கு வர முடிந்தது. என்றோ எடுக்கப்பட்ட முடிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.
“என்ன திடீர் ஞானோதயம்?” கேட்கக்கூடாது என நினைத்தாலும் கேட்டுவிட்டான். வாசு.
காலை நடந்ததை கூறினான் தேவ்.
தினமும் காலை சரியாக எட்டு மணிக்கெல்லாம் வாசு தேனுவிற்கு அழைப்பு விடுப்பானென்று தேவ்விற்குத் தெரியும். அதோடு சித்துவின் மூலம் வாசு அழைக்காததால், அவனது அருவியிருந்த மனநிலையையும் அறிவான்.
ஆதலால்,
நல்ல உறக்கத்திலிருந்த வாசுவை எழுப்பிட மனமின்றி… தானே வாசுவின் அலைப்பேசியிலிருந்து அவனது அருவிக்கு அழைப்பு விடுத்தான்.
அவனாக அவ்வெண்ணிற்கு அழைக்கும் முதல் அழைப்பு.
எப்போதுமே அழைப்பு அவளிடமிருந்து தான் வரும். இவனுக்கு தோன்றினாலும் அழைத்திட மாட்டான். அவளாக அவனைத்தேடி அழைப்பதில் அலாதி இன்பம் அவனுக்கு. அதில் அத்தனை சுகம் கண்டிருந்தான்.
எப்போதும் எடுத்திடாது துண்டிக்கவே செய்வாள் என்பதால் தைரியமாக அழைத்துவிட்டான்.
அவளோ முதல் ஒலியிலேயே அழைப்பினை ஏற்றிருந்தாள்.
சட்டென்று தொற்றிக்கொண்ட பதட்டத்தில் கட் செய்திடவும் தோன்றாது தேவ் காதில் வைக்க…
இரண்டு மணித்துளிகள் அமைதியில் “டாக்டர்” என்று விளித்திருந்தாள் தேவ்வின் அருவி.
எப்படி கண்டறிந்தாள்? பெரும் வினா அவனிடம்.
“நண்பனுக்காக நீங்க கால் பண்ணிங்களா?”
அவன் பேச மாட்டானென்று அறிந்து அவளே பேசினாள்.
“அண்ணா அங்க வந்திருக்கிறது தெரியும். அண்ணா கூப்பிட்டிருந்தால் பேசமால் அமைதியா இருக்கமாட்டாங்களே! அத்தோடு கால் எடுக்கும்போதே மனசுக்குள் ஒரு இன்டயூஷன் நீங்களா இருக்குமோன்னு. கரெக்ட்டா ஃபைண்ட் பண்ணிட்டனா?” என்றவள், “என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா டாக்டர்!” எனக் கேட்டிருந்தாள்.
அழுகை கண்களை முட்டிக்கொண்டு வந்திருக்க… உடைந்துவிட்ட கதறல் ஒலியுடன் இணைப்பைத் துண்டித்திருந்தாள்.
தேவ்விற்கு அவளின் உள்ளத்து போராட்டம் உணர்ந்தது.
நான் நன்றாக சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று காட்டிடவே… முடியாத போதும் தன்னிடம் இயல்பாக பேசியவள், இறுதியில் மொத்தமாய் முடியாது துவண்டுபோனாள் என்பது.
காதல் பெரும் சித்திரவதை. அதில் பிறர் உனக்கு வதை கொடுக்க வேண்டுமென்பதில்லை. உனக்கு நீயே வதைத்துக்கொள்ள காதல் ஒன்றே சிறந்த காரணி.
இத்தனை உயிர் வதை யாருக்காக? யாரால் அவளுக்கு?
தன்மீதே அத்தனை கோபம் தேவ்விடம்.
அந்த கோபத்தை குறைத்திடவே தன்னை அவளின் பாதத்தில் சரணாகதியாக ஒப்புவித்து புகைப்படத்தை வெறித்திருந்தான். வாசு எழுந்ததும், அவனிடம் தற்போதிருக்கும் மனநிலையில் சாதரணமாகக்கூட பேசிட முடியாதென்றே எழுந்து சென்றிருந்தான்.
இறுதியில், “நானில்லாமல் அவளில்லை வாசு” என்றான் தேவ். கசங்கி கலங்கிவிட்ட முகத்தை வாசுவிற்கு மறைத்தவனாக.
தேவ், தேனு… இருவருக்குமே சமபங்கு வலியென்று வாசு மட்டுமல்ல, அவர்களின் காதல் அறிந்த அனைவருக்குமே தெரியும். அந்த வலியை கண்கூடாகக் காண்கையில் வாசுவிற்கு நெஞ்சம் பிசைந்தது.
“இப்போதான் எல்லாம் புரியுதா அதி?”
“எதையும் சொல்லி விளக்க முடியாது வாசு” என்ற தேவ்,
“அவளுக்கு நான் மட்டும் போதும் அப்படிங்கிறதை காட்டிடத்தானே தனக்குள்ளே தன்னை சிறை வைத்திட்ட மாதிரி, யாரும் வேணாண்னு தனியா நாலு வருசமா உட்கார்ந்திருக்காள். இதைக்கூட புரிஞ்சிக்கலன்னா எப்படி? நான் மட்டும் போதுமென காட்டிட்டா(ள்) தானே! அதுக்கு நான் திருப்பி என் காதலை கொடுக்க வேண்டாமா? நடுவில் யார் வந்தாலும் பார்த்துக்கலாம் திடம் வந்திருக்கு” என்றதோடு,
“துணைக்கு மச்சான் நீ முன்ன நிக்க மாட்டியா?” என்றிருந்தான்.
வாசுவுக்கு அன்றில்லாத தைரியம் இன்று இருந்தது.
தேவ்வின் தோள் மீது கையிட்டு நெருக்கினான்.
“அப்போ இனி அதிரடிதான்” என்றான் வாசு.
ஆனால் தேவ்விற்கு தேனுவை நினைத்து இப்போது கலக்கமாக இருந்தது.
தன் பேச்சைக்கேட்டு தன்னுடைய காதலை வேண்டி இத்தனை வருடங்கள் காத்திருந்தவளுக்குள்ளும் தன்மீது கோபமிருக்கு என்று அறிவான். அந்த கோபம் தன்னை ஏற்குமா என்கிற கலக்கம் அது.
இனி எதுவாக இருந்தாலும் சமாளித்து ஆக வேண்டுமென்று திடம் பெற்றாக வேண்டிய சூழலில் அவன்.
இரவு சித்து அனுப்பிய தகவலை காலை மருத்துவமனை சென்று தான் பார்த்தான்.
அப்போதே, ‘தன்னுடைய தேனு தன்னை தேடுகிறாள்’ என்பதை புரிந்துகொண்டவனின் உள்ளமெல்லாம் வலி.
சரியாக அந்நேரம் மேனகாவும் அழைத்து, இரவு தேனு வந்தது நடந்ததென்று எல்லாம் கூறிவிட்டார்.
மனம் மொத்தமாய் கனத்து பரிதவித்துப்போனான்.
‘மயங்கி விழுமளவிற்கு தன் நினைவுகள் அவளை வதைக்கின்றதா?’ உடன் வைத்துக்கொள்ள முடியாத இந்நிலை இனியும் வேண்டுமா? தன்னைத்தானே கேட்டுக்கொண்டவனுள் அக்கணம் தான் என்ன ஆனாலும் தன்னவளை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற தீர்க்கம் உருவானது.
அடுத்து சித்துவிற்கு அழைத்து பேசிட…
“ஷீ லவ்ஸ் யூ மோர் அண்ட் மோர் அதி அண்ணா. மத்தவங்களுக்காக பார்த்து, மிஸ் பண்ணிடாத” என்று மட்டும் சொல்லி வைத்திருந்தான்.
சித்து சொல்லிய வார்த்தைகள் நினைக்கும்போதும் நெஞ்சை அதிர செய்தன.
தேவ்வின் கைகளில் வாகனம் தடுமாறி சீர் பெற்றது.
“அதி…” வாசு பதறிவிட்டான்.
“அம் ஓகேடா!”
“அடுத்து என்ன? வேணும் முடிவெடுத்தாச்சு. இனி ஒரே லவ்ஸ் தானே?” பலவற்றை நினைத்து மீண்டும் குழப்பிக்கொள்ள பார்க்கிறான் என்பதை தேவ்வின் தடுமாற்றத்தில் உணர்ந்த வாசு, அவனை சிந்தனையிலிருந்து மாற்றும் பொருட்டு பேச்சை மாற்றினான்.
“அவள் உன் தங்கச்சிடா. அண்ணன் மாதிரி பேசுடா” என்றான் தேவ்.
எல்லாவற்றிற்கும் தன்னால் தீர்வு காண முடியுமென்ற திண்ணம் தோன்றியதால், வாசுவுடன் பழைய நிலையில் தேவ்வால் பேச முடிந்தது.
“நான் என் நண்பனிடம் கேட்டேன்” என்று வாசு தன் கேள்வியில் மட்டும் கருத்தாய் இருந்தான்.
“இல்லை” என்று வேகமாக மொழிந்த தேவ்,
“எப்பவும் லவ் பண்ணிட்டு தான் இருக்கோம். இருப்போம்” என்றான்.
“அதான் தெரியுமே! கேட்டால், காதலிக்க பக்கத்தில் இருக்கணும், தினமும் பேசிக்கணும் அவசியமில்லை. உனக்கு நான், எனக்கு நீங்கிற நினைப்பு போதும் சொல்லுவியே” என்ற வாசுவின் பாவனையில் சிரித்துவிட்ட தேவ்,
“அதைத்தான் நானும் சொல்றேன்” என்றான்.
“அப்புறம் எப்படி கல்யாணம்?” வாசு மேலும் மேலும் புரியாது மண்டை காய்ந்தான்.
“யர்ராமுண்டி சம்மதம் வேணும்” என்றான் தேவ். அழுத்தமாய். அடர்த்தியிலும் அடர்த்தியாய்.
வாசுவுக்கு இது நடக்கிற கதையா என்றிருந்தது. அதனை தேவ்விடம் கேட்கவும் செய்தான்.
“கஷ்டமாயிருக்குன்னு இந்த செகண்ட் என்னால் அவளை கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்க முடியும். ஆனால் நாங்க பிரிந்து இருந்ததுக்கு அர்த்தமே இல்லாமல் போயிடுமே! இதுக்கு நான் ஆறு வருஷத்துக்கு முன்னவே அவளை கூட்டிட்டு வந்திருப்பனே!” என்ற தேவ்விடம்,
“ரொம்ப குழப்புற அதி” என்றான் வாசு.
“ஒரு குழப்பமும் இல்லை. இப்போதான் நான் தெளிவா இருக்கேன். இதே தெளிவோட எல்லார் சம்மதத்தோடும் எங்க கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன்” என்றான்.
“ஏதோ பிளான் பண்ணிட்ட… நடத்துடா நடத்து. கொஞ்சம் டைம் கொடு நான் முதலில் கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கு மனைவியா வரப்பொண்ணுக்கு என் தேனு தாலி கட்டணும்” என்றான் வாசு. நெகிழ்வாய்.
“அப்போ அடுத்த மாதம் கல்யாணம் பண்ணிக்கோ” என்றிருந்தான் தேவ். ஏதோ கடலை சாப்பிடு என்று சொல்வதைப்போல் சர்வ சாதாரணமாக.
“எதே! நெக்ஸ்ட் மன்த்தா?” வாசு அதிர்ந்தான்.
“அதான் உனக்கு பொண்ணு ரெடியா இருக்கே! இன்னைக்கு நீ ஓகே சொன்னாலும் உன் அப்பா நாளைக்கு நடத்திடுவாரு” என்ற தேவ்விடம்,
“தேனு வரணுமே!” என்றான்.
“அதெல்லாம் வருவாள்” என்று மனதிற்குள் திட்டம் வகுத்தவனாக, “டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லு. நான் ஒரு பிளான் பண்ணனும்” என்றான்.
“என்ன பிளான்?”
“கேம்ப் உன் மேரேஜ் டைமில் போட்டால், நாங்களா மீட் பண்ண மாதிரி இல்லாமல் தற்செயலா நடந்த மாதிரி இருக்கும்ல” என்றான் தேவ்.
வாசு இதெதற்கு எனும் விதமாக ஏறிட…
“எல்லாம் உங்க ஆளுங்களை சமாளிக்கத்தான்” என்றான் தேவ்.
வாசுவிடம் இப்போதே பெருமூச்சு கிளம்பியது.
“நீங்க ஒண்ணு சேர்வதற்குள் என் ஆயுசு முடிஞ்சிடும் போல…”
இவர்களின் பேச்சுக்கு நடுவில் வரவேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களது நண்பர்கள் படை மொத்தமும் அங்கு தான் இருந்தது.
வாயிலிலே நின்று சிலர் கொட்டம் அடித்துக்கொண்டிருக்க, இருவரையும் கண்டுவிட்டு சூழ்ந்து கொண்டனர்.
“இவனை எப்படிடா இழுத்துகிட்டு வந்தாய்?”
தேவ் வந்ததை நம்ப முடியாது மற்றவர்கள் வாசுவிடம் கேட்க… சிரித்தே சமாளித்திருந்தான்.
கிட்டத்தட்ட அனைத்திலிருந்தும் தேவ் ஒதுங்கித்தானே இருந்தான். அதனால் இந்த ஆச்சரியமான கேள்வி.
அனைவரும் கை குலுக்களிலும், தோள் அணைப்பிலும் தங்களின் சந்திப்பின் மகிழ்வை வெளிப்படுத்தினர்.
உண்மையான சந்தோஷ முகத்தோடு தேவ் காட்சியளித்தான். நட்பு எனும் உறவு அனைத்திற்கும் மருந்தாகிவிடுமே! அதற்காகத்தான் வாசு தேவ்வை இங்கு அழைத்து வந்ததே. சொல்லப்போனால் நண்பனின் ரகுவின் மனைவியின் வளைகாப்பு நிகழ்வை, நண்பர்களின் ரீயூனியனாக மாற்றியதே வாசு தான். அவனின் அதிக்காக.
கல்லூரி நாட்களில் ரகு, வாசு, தேவ் மூவரும் நெருக்கமானவர்கள். தேவ் ரகுவிடம் மட்டும் தான் இடைப்பட்ட நாட்களில் உறவோடு இருந்தான். நண்பனுக்காக வாசுவின் எண்ணத்தை ரகுவும் ஒப்புக்கொண்டான்.
இருவரின் ஏற்பாடு தான் நண்பர்கள் ஒன்றாக இணைந்திருப்பது.
“ரகு எங்கடா?” தேவ் கேட்டிட… ரகுவே அங்கு வந்தான்.
“வாங்க சார். இப்போவாவது எங்களையெல்லாம் பார்க்கணும் தோணுச்சே!” என்ற ரகு அணைத்து வரவேற்றான்.
“ஸ்டார்ட் பண்ணியாச்சாடா?”
கேட்ட வாசுவிற்கு “ரெடிடா” என்ற ரகு நண்பர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.
மண்டபத்தில் ரகுவின் உறவினர்களும் இருந்திட… நண்பர்கள் தங்களுக்கென ஒரு பகுதியில் அமர்ந்து கொண்டனர். பெண் தோழியர்களும் அதில் அடக்கம்.
“என்ன தேவ் இன்னும் சிங்கிள்ன்னு கேள்விபட்டேன். எனக்கொரு சான்ஸ் கிடைக்குமா?” கல்லூரி நாட்களில் தேவ்வை தன்னுடைய க்ரஷாக வைத்திருந்த மாலதி கேட்க…
“அப்போ நானு” என்றான் பிரதீப்.
“இந்த அதிசயம் எப்போடா நடந்துச்சு?” வேறொருவன் கேட்க… “போன மாதம் தான். லவ் பண்ணியே கொல்லுறான்” என்ற மாலதியின் பேச்சில் அங்கே சிரிப்பலை.
“வாசு உனக்கு எப்போ மேரேஜ்?”
“அடுத்து எல்லாரும் வாசு மேரேஜ்ஜில் சீக்கிரமே மீட் பண்ற மாதிரியிருக்கும்” என்று பதில் வழங்கினான் தேவ்.
ஆமாவாடா என்ற நண்பர்களிடம் வாசுவின் நிலை மோசமானது. அடுத்து அவனை ஒரு வழி செய்துவிட்டனர்.
உறவினர்கள் முறை முடிந்திருக்க… இவர்கள் பட்டாளத்தில் பெண்கள் சென்று வளையல் போட்டு பரிசு கொடுத்துவிட்டு வர, ஆண்கள் கூட்டமாக சென்று ரகுவை கிண்டல் செய்து சில நிமிடங்களில் அவ்விடத்தை அதகளம் செய்து கீழிறங்கினர்.
ரகுவின் மனைவியின் தங்கை, தேவ் மேடையேறியது முதல் கீழிறங்கிய பின்னரும் அவனின் மீதே பார்வையை வைத்திருந்தாள்.
“வித்யா…” ரகுவின் சத்தமான அழைப்பில் திடுக்கிட்டு ஏறிட்ட வித்யா அவனருகில் சென்று…
“என்ன மாமா?” எனக் கேட்டிட…
“அங்கென்ன பார்வை?” என்றான்.
“அவர் டாக்டர் தானே?” எனக் கேட்டாள்.
“என் பிரண்ட்ஸ் எல்லாருமே டாக்டர் தான்” என்றான்.
“அச்சோ மாமா” என்றவள், ஏதோ சொல்லிட முனையை, அவனோ யாருடைய அழைப்பிலோ அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
மேடையில் தமக்கையின் அருகில் நின்றிருந்த போதும், வித்யா தேவ்வையே தான் பார்த்திருந்தாள்.
அதனை கவனித்த பெண்ணொருத்தி,
“வந்த இடத்தில் நம்ம ஹீரோவுக்கு ஆள் செட்டாகிருச்சு போலடா!” என்று, நண்பர்கள் அனைவருக்கும் வித்யாவை சுட்டிக்கட்டினாள்.
“தற்செயலா பார்த்திருக்கலாம்” என்று வாசு சொல்ல…
“கொஞ்ச நேரம் நோட் பண்ணுடா” என்றால் அவள்.
அப்போதுதான் தேவ்வும் வித்யாவை கவனித்தான்.
“ஷீ…” என்று தேவ் இழுக்க…
“என்னடா லவ்வா…?
“உன் ஆளா இது?
“அதான் உன்னையே பார்த்திட்டு இருக்காளா?
“சொல்லவேயில்லையே?
என்று தேவ்வின் உண்மை காதல் தெரிந்த வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் அவனை கிண்டல் செய்வதாக கேள்வியால் திணறடிக்க…
“என் ஆளோட ஃபிரண்ட்” எனக்கூறி அனைவரையும் திணறடித்தான் தேவதிரன்.