தித்திக்கும் தேனருவி 9

அத்தியாயம் 9

“என் ஆளோட ஃபிரண்ட்.”

தேவ் சொல்லியதை… அவன் காதலிக்கிறான் என்ற சரியான பொருளில் விளங்கிக்கொண்ட நண்பர்கள் அவனை ஆச்சரியத்தோடு ஏறிட்டனர்.

உற்சாகாக் குரலிட்டு அதகளம் செய்தனர்.

“அடேய் தேவ் நீயாட?” என்று அதிர்ச்சியாகக் கேட்ட பெண்ணை தொடர்ந்து…

“நீ அந்த ராஜஸ்தான் பொண்ணை ஓடவிட்டது இன்னும் என் கண்ணு முன்னால் நிக்குதுடா!” என்று சத்தமாக சிரித்தான் ஒருவன்.

அனைவரும் அவனிடம் அந்த கதை கேட்க, அவன் பக்கம் திரும்பிட… வாசு தேவ்வை இழுத்துக்கொண்டு தனியாக வந்தான்.

“தேனு ஃபிரண்டா அந்தப்பொண்ணு?” வாசு மேடையில் நின்றுகொண்டிருந்த வித்யாவை பார்வையால் சுட்டி வினவினான்.

“ஆமாம் டா! ஹாஸ்டல் ரூம் மேட் அண்ட் சேம் ஆபிஸ்” என்றான் தேவ்.

“அப்போ அவளை தினமும் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருக்க?”

“ஹேய்…” என்று நெற்றியை தேய்த்துக்கொண்ட தேவ்… “அருவி வொர்க் பண்றதே சித்து ஆபிஸில் தாண்டா!” என்றதோடு, “அவனோட ஜூனியர் அருவி” என்றான்.

வாசுவிற்கு உண்மையில் சித்துவை தேவ்வின் தம்பியாக தெரிந்தளவிற்கு, அவனது தொழில் பின்புறமென்று எதுவும் தெரியாது. தி

“இன்னும் என்னலாம் எனக்குத் தெரியாமலிருக்கு?” என்று கண்களில் அதிர்ச்சியை காட்டி வினவினான் வாசு.

“நேற்று நீ மழையால் சிக்னல் இல்லாமல் அவளுக்கு கால் பண்ணாது, நைட் மலைக்கு கீழ வந்து பண்ணங்கிற வரை எனக்குத் தெரியுமென உனக்குத் தெரியாது. இப்போ தெரிஞ்சிருச்சு” என்றான்.

“அதி…”

“என்னடா?” என்ற தேவ், “அவள் என் உணர்வு வாசு. விட்டுவிட்டு வந்துட்டேன் தான். அவளில்லாமல் எப்படிடா?” என்றான்.

“அப்போ என்னையும் கவனிச்சிட்டு இருந்திருக்க?”

“ஹேய் நீ என் ஃபிரண்ட்டா. நான் கேட்கலன்னாலும் உன்னைப்பற்றி ரகு சொல்லிடுவான். இல்லை அப்பா வேலை விஷயமாக உன்னிடம் பேசும்போது தெரிந்துகொண்டதை ஷேர் பண்ணிடுவார்” என்றான்.

“ம்ம்ம்… உன்னை என்னால் புரிஞ்சிக்கவே முடியல அதி” என்ற வாசு, மீண்டும் கவனித்தவனாக…

“அந்தப்பொண்ணு உன்னையேதான் பார்க்குது இன்னும். உன்கிட்ட பேச நினைக்குது போல!” என்றதோடு, “ரகுவுக்கு ரிலேட்டிவ் நினைக்கிறேன்” என்றான்.

“ரகுவோட சிஸ்டர் இன் லா” என்றான் தேவ்.

“ஹோ” என்ற வாசு, “ரகுவுக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.

“தெரியாது. இப்போ அவங்க வந்து என்கிட்ட பேசினால் தெரிந்துவிடும்” என்றான் சாதாரணமாக.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க…

மேடையில் தன்னருகில் நின்றிருந்த வித்யாவை கவனித்த ரகுவின் மனைவி…

“ஹேய் எதுக்கு அவரை இப்படி பார்த்திட்டே இருக்க வித்யா? யாரவது கவனித்து பிரச்சினை ஆகிடப்போகுது” என்ற அதட்டலோடு, “அவங்க மாமாவோட க்ளோஸ் ஃபிரண்ட். திட்டுவாங்கிக்காத” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வித்யாவின் அருகில் வந்த ரகு, “அவனுக்கு அல்ரெடி ஆளிருக்கு வித்யா” என்று பல்லை கடித்தான்.

“அதான் ஆறு வருசமா விலக்கி வச்சிருக்காரா?” என்று சூடாகக் கேட்டிருந்தாள் வித்யா.

இந்த விஷயத்தை இதுவரை ரகு தன் மனைவியிடம் கூட பகிர்ந்துகொண்டதில்லை. எப்படி இவளுக்குத் தெரியுமென்று அதிர்ச்சியாக ஏறிட்டான்.

“அப்புறம் ஒரு பொண்ணு ஒரு பையனை பார்த்தாலே அது அதுக்காகத்தான் இருக்கும் அப்படின்னு நீங்களே அஸ்யூம் பண்ணிக்காதீங்க” என்றாள்.

ரகு இன்னமும் அதிர்ச்சி நீங்காதிருக்க…

“தேனு தான் அவரோட அருவி” என்றிருந்தாள்.

“ம்ம்ம்” என்ற ஒலி மட்டுமே அவனிடம் பிரதிபலிப்பாக.

“நான் அவர்கிட்ட பேசனுமே!?”

“போய் பேசு தனியாத்தானே நிக்குறான்.”

“இன்னொருத்தர் இருக்காரே!” இழுத்து தயங்கினாள்.

“அவன் தேனுவோட அண்ணன் தான்” என்றான் ரகு.

“இவர்தான் அந்த எட்டு மணி கோழியா?” என்று தனக்குத்தானே சத்தமாகக் கேட்டுக்கொண்ட வித்யாவின் வார்த்தைகளை கவனிக்காத ரகு, “அவனை தெரியுது, இவனை உன் ஃபிரண்டோட அண்ணன்னு தெரியாதா?” என்றான் கடுப்பாக.

“அவள் இவங்க போட்டோ மட்டும் தான் வச்சிருக்கா(ள்)” என்ற வித்யா, “அவர் நேம் என்ன?” என்று கேட்டாள்.

‘தேவ் யாரென்பது வரை தெரிந்திருப்பவளுக்கு அவனின் பெயர் தெரியாதா?’

வித்யாவை ஏறயிறங்க பார்த்தவன்,

“அவனிடமே கேட்டுக்கோ” என்று நகர்ந்துவிட்டான்.

வித்யாவும் அவளின் அக்காவிடம் தேவ்விடம் பேசப்போவதாக சொல்லி அவனை நோக்கிச் சென்றாள்.

வித்யா அருகில் வந்ததுமே தேவ் விரிந்த்ததோ எனும் விதமாக மென்புன்னகை வழங்கினான்.

பதிலுக்கு வித்யா சிரிக்காது முறைத்து வைக்க…

“இவங்க உன்மேல கொலை காண்டுல இருப்பாங்க போலடா” என்று மெல்ல முணுமுணுத்தான் வாசு.

“உங்க நேம் என்ன?”

தேவ்விடம் வித்யா கேட்க,

“இதை கேட்கவா அவனை ரெண்டு மணி நேரமா வச்ச கண்ணை எடுக்காமல் பார்த்திட்டிருந்த?” என்று கேலி செய்த வாசுவை வித்யா கண்டுகொள்ளாது…

“சொல்லுங்க?” என்று வினவினாள்.

“தேவதிரன்… மிஸ்.வித்யா!” தன் மூரல்கள் பளிச்சிடக் கூறினான் தேவ்.

“அழகான பெயர் தான். அப்புறமும் எதுக்கு அந்த லூசு டாக்டர் டாக்டர்ன்னு என் காதை பஞ்சர் ஆக்குறா(ள்)?”

“இதை நீங்க அருவிக்கிட்ட தான் கேட்கணும்.”அதே புன்னகையோடு சொன்னான்.

தேவ் தன்னுடைய பேச்சில் உன்னை நன்றாகவே தெரியும் என்பதை உணர்த்தியே பதில் வழங்கினான். வித்யாவும் அதனை எளிதாய் புரிந்துகொண்டாள்.

வித்யா மௌனித்திருக்க…

“எதாவது கேட்கணுமா?” தேவ் வித்யாவிடம் கேட்க, வாசு தான் அவளிடம் தங்கையின் நலன் பற்றி கேட்டிருந்தான்.

“தேனு எப்படியிருக்காள்?”

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டிங்க?” என்று வித்யா நக்கல் செய்திட…

“நீங்க யாருன்னு கொஞ்சம் முன்னாடி தான் சொன்னான்” என்று முகம் சுருக்கினான் வாசு.

வாசுவை பற்றி வித்யாவுக்கு தான் ஓரளவு தெரியுமே! எடுக்கவேப்படாத அழைப்புகளை மீண்டும் மீண்டும் தங்கைக்காக விட்டுக்கொண்டே இருக்கின்றானே! அதுவே போதும் அவனின் தங்கை மீதான அக்கறைக்கு சான்றாய். தேவையில்லாது தேவ் மீதுள்ள கோபத்தை வாசுவிடம் காட்டுகிறோம் என்று நினைத்த வித்யா சட்டென்று வாடிவிட்ட வாசுவின் முகத்தை மாற்றிட…

“சாரிண்ணா” என்று

தேனுவிற்கு வீடியோ கால் செய்திட்டாள்.

“நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க” என்றவள், “உங்க முகத்தை அவளுக்கு காட்டிடாதீங்கண்ணா. என்ன பிரச்சனைன்னே தெரியாமல் நான் அவ(ள்)கிட்ட மாட்டிக்க என் உடம்பில் தெம்பில்லை” என்றவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திட,

வாசுவும் அதீத மகிழ்வோடு காமிராவில் தன் முகம் விழாதவாறு, அலைபேசியின் திரை தெரியுமாறு வித்யாவின் பின்னால் அமர்ந்தான்.

தேவ்விற்கு தன்னவளை இப்படி பார்ப்பதில் விருப்பமில்லை. அவளின் குரலாவது கேட்கலாமென்று வித்யாவின் முன் அமர்ந்தான்.

வித்யாவுக்கு ‘இப்போதும் அவளை பார்க்க இவருக்கு ஆசையில்லையா? அங்கு அவள் இவர் மீது பைத்தியமா இருக்கிறாள். இவருக்கு அப்படியொன்றும் இல்லையா?’ என ஆத்திரமாக வந்தது.

வித்யாவின் பார்வை, உதடு சுழிப்பு இதையெல்லாம் வைத்தே அவள் இப்போது என்ன நினைக்கின்றாள் என்பதை யூகித்த தேவ்விற்கு புன்னகை தான் தோன்றியது.

“எதுக்கு சிரிக்கிறீங்க?”

வித்யா கேட்க்கும்போது தேனு அழைப்பை ஏற்றிருந்தாள்.

“சொல்லுங்க மேடம். வகை வகையா சீமந்த சாப்பாடு சாப்புடுற நேரத்தில் என்ன என் நினைப்பு?” என்று வித்யாவிடம் கேட்டாலும், தேனுவின் கண்கள், அலைப்பேசி திரைக்கும்… அங்கு தான் வேலை செய்யும் கணினித்திரைக்கும் மாற்றி மாற்றி மாறிக்கொண்டிருந்தது.

தங்கையின் முகத்தை பிம்பமாக திரையில் பார்த்த நொடி வாசுவின் கண்கள் பனித்துவிட்டன. தங்கையின் முகத்தை வைத்து அவளின் நலனை அவதானித்தவனாக உறைந்துவிட்டான் வாசு.

தேவ்விற்கு… அவனது அருவியின் குரல் இதயத்தை அதிர வைத்து, தேகத்தை சிலிர்க்கச் செய்த போதும், எதையும் காட்டிக்கொள்ளாது சாதரணமாகவே இருந்தான்.

“புள்ளையை தனியா விட்டுட்டு வந்துட்டோமே! என்ன பண்ணுதோன்னு பார்க்கலாம் கால் பண்ணாக்கா, என்னையே நீ கிண்டல் பண்ற?” என்று தேனு முடிக்கும் முன்னர்,

“யார் தனியா இருக்கா?” எனக்கேட்டு, “டாக்டர் தான் எப்பவும் என்னோடவே இருக்காரே!” என்று தன்னுடைய நீண்டு விரிந்த சிரிப்பை உதிர்த்தாள் தேனு.

அந்த பதிலில் வித்யா அப்பட்டமாக கொலைவெறியோடு தன்னெதிரே இருக்கும் தேவ்வை பார்க்க… அவனுக்கோ அவனவள் சொல்லியது இதயத்தை சில்லாக உடைந்திருந்தது. எப்போதும் நான் மட்டும் தானா? என்ற எண்ணத்தில்.

“அந்த டாக்டர் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்…” என்று வித்யா பற்களை கடிக்க…

“உன் அண்ணா நினைப்புலாம் உனக்கு இருக்காதா?” என்றாள்.

“அண்ணாக்கு என்னை நல்லாவே புரியும் வித்யா” என்ற தேனு, “நீயிப்படிலாம் கேட்குற ஆளில்லையே!” என்று சந்தேகமாக பார்த்தாள்.

“உன்கிட்ட வேறென்ன கேட்டாலும் நீ டாக்டரில் வந்து தானே நிற்ப. அதான் நானே கேட்டுட்டேன்” என்ற வித்யா, “உன் சீனியர் எப்படியிருக்கிறார்?” என்று கேட்டாள். உண்மையில் வித்யா எந்த அர்த்தத்திலும் கேட்கவில்லை. வேறு என்ன பேசி நேரத்தை நீட்டிக்க என்று தெரியாது சித்துவை கேட்டிருந்தாள்.

“உன் ஆளு தானே! செமயா இருக்காங்க” என்றாள்.

“ம்…” வாசுவின் முகத்திலிருக்கும் மகிழ்வை கண்டு மகிழ்ந்த வித்யா, தேனு உன் ஆளு என்றதை கவனிக்கவில்லை. தேவ் கவனித்து உள்ளுக்குள் வாலு என்று சிரித்துக்கொண்டான்.

“சார்…”

சித்து ஏதோ வேலையாக அவள் பக்கம் வந்திருக்க… தேனு அழைத்துவிட்டாள்.

“உங்க ஆளு தான். பேசணுமாம்” என்று அலைபேசியை சித்துவிடம் கொடுத்துவிட்டாள்.

“ஹாய் மிஸ்.வித்யா. ஃபங்(ன்)க்ஷன் எப்படி போயிட்டிருக்கு?” என்ற சித்துவின் இயல்பான பேச்சிலும், தேனு இப்படி அவனிடமே கொடுப்பாளென்று அறியாததாலும் அசடு வழிந்து சமாளித்து, “நல்லா… நல்லா போகுது சீனியர்… ச்ச… சார்… பாஸ்” என்று உளறிக்கொட்டினாள்.

‘டக்குன்னு ஷாக் ஆகிட்டாள் போல’ என நினைத்த சித்து, “ஓகே கேர்ள்ஸ் யூ கேரியான்” என தேனுவிடம் அலைப்பேசியை கொடுத்துவிட்டு “ஹேய் வாலு அப்புறம் அரட்டை அடிக்கலாம். ஒழுங்கா கோடிங் முடிக்கிற வேலையை பாரு” என்று தேனுவின் தலையில் வலிக்காது கொட்டிச்சென்றான்.

“என்ன வித்யா உன் ஆள பார்த்ததும் வார்த்தை தந்தியடிக்குது” என்று தேனு சிரித்துக்கொண்டே கிண்டல் செய்திட, அப்போது தான் அவள் சொல்வதை உணர்ந்த வித்யா…

“என் ஆளா? பிச்சிடுவேன் ராஸ்கல். அவருக்கு தெரிந்தால் என்னாகிறது?” என்று தோழியை அதட்டினாள் வித்யா.

தேனு சொல்லிய உன் ஆளு என்பத்தில் சுற்றுப்புறத்தையே வித்யா மறந்திருந்தாள்.

“சைட்லாம் அடிக்கிற?”

“அழகா இருந்தால் பார்க்கத்தான் செய்வாங்க!”

“அப்படிங்களா?” என்ற தேனு, “நம்ம ஆப்போசிட் டீம் சிந்துஜா… இன்னைக்கு சீனியருக்கு ப்ரொபோஸ் பண்ணப்போறாளாம் ஹர்ஷா சொன்னான்” என்றாள். வித்யாவை அளவிட்டவளாக.

“யாரோ யாருக்கோ பண்ணா எனக்கென்ன?” என்ற வித்யா, உடனடியாக “அதெல்லாம் உன் சீனியர் ஓகே சொல்லமாட்டார்” என்றாள்.

“அதெப்படி சொல்ற?”

“அவருக்கு அந்தளவுக்கு டேஸ்ட் கம்மியில்லை” என்ற தேனு, பேச்சை மாற்றும் பொருட்டு,

“கோழி கூவுச்சா?” எனக் கேட்டாள்.

“கூவுச்சு கூவுச்சு. ஆனால் கூவுனது வாசு அண்ணா இல்லை. டாக்டர்” என்றாள். அதுவரையிருந்த துள்ளல் எல்லாம் நொடியில் வாடியதைப்போல கரகரத்து ஒலித்தது தேனுவின் குரல்.

தேவ் தன்னைப்போல் கண்களை மூடி தன் வலியை மறைத்தான்.

“நான் நம்பமாட்டேன்” என்ற வித்யாவுக்கு,

“என்னாலே நம்ப முடியல தான்” என்று பதில் வழங்கினாள் தேனு.

“நிஜமாவா?”

“ஹ்ம்ம்… அண்ணா மொபைலிலிருந்து கூப்பிட்டிருந்தாங்க!”

“என்ன பேசினாங்க?”

“எதுவும் பேசல!” சுரத்தின்றி கூறினாள்.

“அப்புறம் எப்படி அவங்க தான்னு சொல்ற. அண்ணாக்கூட கால் பண்ணிட்டு, பேச முடியாமல் வைத்திருக்கலாம் தானே?” என்றாள் வித்யா.

“என்னால் அவங்களை உணர முடியும் வித்யா” என்ற தேனு, “இப்போகூட நீதானே என்கிட்ட பேசிட்டிருக்க? ஆனால் எனக்கு, டாக்டர் என் பேச்சை கேட்டுட்டு இருக்கமாதிரி பீல் ஆகுது” என்றாள்.

மூவரும் தேனு சொல்லியதில் அதிர்வை உள்வாங்கினர்.

“பட் அதுக்கு சான்ஸ் இல்லைல்ல?” என்ற தேனு, “நீ ஃபங்(ன்)ஷனை என்ஜாய் பண்ணிட்டு வா” என்று வைத்துவிட்டாள்.

தேவ் முற்றிலும் உடைந்துவிட்டான்.

மூடிய விழிகள் மூடியபடியே இருந்தன. முகத்தில் சொல்லன்னா துயரம்.

“இப்படிப்பட்ட காதலைத்தான் வேண்டான்னு ஒதுக்கி வச்சிருக்கீங்க” என்ற வித்யா,

“உங்களை நேரில் பார்த்ததும் நிறைய கேட்கணும் அப்படின்னு பல கேள்வி யோசித்து வைத்திருந்தேன். ஆனால் நான் என்னோட பெயர் சொல்லாமலே என்னை வித்யான்னு சொன்னீங்களே அதுலே அவளைப்பற்றிய எல்லாம் கவனிச்சிட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். நீங்களும் அவளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவு லவ் பண்றீங்கன்னு தெரியுது” என்றாள்.

“பிரியருதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் வேணுன்னு பிடிச்சு வச்சிக்க காதலுங்கிற ஒண்ணு போதாதா?” என்று தொடர்ந்தவள்,

“அவள் உங்களை பைத்தியக்காரத்தனமா நேசிக்கிறாள். அது எந்தளவுக்குன்னா… நீங்க அவளோடவே அவள் கண் முன்னால் இருக்கீங்கன்னு, நித்தம் உங்கக்கிட்ட எல்லாம் வாய்விட்டே சொல்றளவுக்கு. அவளோட ஒவ்வொரு நாளும் டாக்டர்’ங்கிற வார்த்தையில் தொடங்கி, அதில் தான் முடிகிறது” என்றாள்.

பட்டென்று எழுந்து சென்றுவிட்டான் தேவ்.

வித்யா ஆயாசமாக பார்க்க…

“இதையெல்லாம் நீ சொல்லித்தான் அவனுக்கு தெரியணுமில்லை வித்யா” என்ற வாசு, “தேனு என் தங்கச்சி, நானே சொல்வேன்… தேவ் முன்னால் அவள் நேசம் கம்மிதான்” என்றான்.

“எப்படிண்ணா உங்களால் உங்க தங்கச்சியை வேணான்னு சொல்றவருக்கு சப்போர்ட் பண்ணி பேச முடியுது. அதுவும் அவரோட எப்படி இன்னும் ஃபிரண்டா இருக்க முடியுது?” என்று ஆதங்கமாக வினவினாள்.

விரக்தியாக சிரித்த வாசு,

“கையில பிடிச்சு வச்சுக்கிட்டு, வார்த்தையால் சொல்லிக்கிட்டே இருப்பது மட்டும் காதல் இல்லைம்மா. நீ நல்லாயிருக்கணுமுன்னு விலகி நிக்கிறதும் காதல் தான். என் மச்சான் இதில் ரெண்டாவது” என்றான்.

வித்யா புரியாது பார்க்க…

“உன் சொந்தமெல்லாம் உன்னை ஒதுக்கி வச்சிடும். நீயொருத்தி பிறந்தங்கிறதையே இல்லைன்னு செய்திடுங்கிற நிலை வந்தால் என்ன செய்வ?” எனக் கேட்டான்.

“உன் மொத்த வாழ்க்கையையும் சடங்குன்னு சொல்லி மூளையில் முடக்கிடுவாங்கன்னு வச்சிக்கோ… அப்போ என்ன செய்வ?” என்றான்.

“என்ன சொல்றீங்க?”

“இதெல்லாம் தன் காதலால் தன்னவளுக்கு கிடைக்கும் என்பதால் தான், உயிராக நேசிப்பவளை விட்டு தள்ளியிருக்கான்” என்ற வாசு, எல்லாம்… எல்லாம் கூறினான்.

வாசு சொல்லியவற்றை கேட்ட வித்யாவின் விழிகள் நிமிடங்கள் கடந்தும் தன் அதிர்வை காட்டிக்கொண்டிருந்தது.

“இப்பவும் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்காங்களா?”

“மாற்றமே வேணான்னு இருக்கவங்களை மாற்றவே முடியாது” என்ற வாசு, “தேன்க்ஸ் வித்யா” என்றான்.

தேனுவின் முகம் காட்டியதற்கு.

“அவளை பார்க்கணும்ன்னா எனக்கு கால் பண்ணுங்கண்ணா” என்ற தேனு, தன்னுடைய எண்ணை வாசுவிடம் கொடுத்தாள்.

“அப்போ இவங்க சேர வழியில்லையா?”

“அதுக்குத்தான் ட்ரை பண்றோம்” என்ற வாசு, தேவ் கிளம்பிவிட்டதை கண்டு அவனருகில் ஓடினான்.

வித்யாவும் வேகமாக ஓடிச்சென்று,

“சாரிண்ணா… தெரியாமல் பேசிட்டேன்” என்று தேவ்விடம் மன்னிப்பு வேண்டினாள்.

“நீ உன் ஃபிரண்டுக்காக பேசின. இதுல மன்னிப்பு கேட்க ஒண்ணுமேயில்லை” என்று தேவ் சொல்ல… அங்கு வந்த ரகு,

“இப்படியே இருந்திடாத மச்சான்” என்றான்.

“இனி அவனை விடுறதா இல்லை” என்ற வாசு, தேவ்வின் முதுகில் தட்டினான்.

தேவ் எதாவது சொல்வானேயென்று மற்றவர்கள் பார்த்திருக்க… அவனோ விடைபெறும் விதமாக தலையசைத்தான்.

அவர்களுக்கு சப்பென்றானது.

வரும்போது சொல்லியதற்கு எதிராக இருந்தது தேவ்வின் செயல். வாசு குழம்பினான்.

“நல்லதே நடக்கும்டா” என்று ரகு தான் வாசுவை தேற்றி அனுப்பி வைத்தான்.

தேனுவின் காதலை அருகிலிருந்து பார்ப்பதால், தேவ்வின் மௌன காதலை வித்யாவால் உணர முடிந்தது.

சேர்ந்திடுவார்கள் என்று அவளின் மனம் அறிதியிட்டு மொழிந்தது.

“இப்போ எதுக்குடா அமைதியா இருக்க?” என்று முன்பக்கம் இடதுபுறம் தேவ் அமர்ந்திருந்ததால், வலதுபுறம் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததும் வாசு கேட்டான்.

“வரும்போது நீ சொன்னதெல்லாம் வைத்து என்னென்னவோ கற்பனை பண்ணிட்டேன். இப்போ வாய் மூடிட்டு இருக்க. எனக்கு பயமா இருக்கு அதி. அவள் என் தங்கச்சிடா. இதுக்கு மேலவும் எப்படியும் இருக்கட்டுமுன்னு விடமுடியாதுடா” என்றான். ஆற்றாமையாயாக!

“அவள் என் பொண்டாட்டி மச்சான்!”

“அதி…”

“இங்க அப்படித்தான் வாழ்ந்திட்டு இருக்கோம்” என்று தன்னுடைய இதயத்தை தொட்டு காண்பித்த தேவ்,

“சுத்தியிருக்கும் தடைகளை சரிசெய்யாமல் என்ன பதில் சொல்லணும் எதிர்பாக்குற வாசு?” என்றதோடு, “நான் எதாவது சொல்லி… வித்யா ஏதும் அருவிக்கிட்ட உளறினால் என்ன பண்றது. நமக்கே எந்த பாதையும் கண்ணில் தெரியல. இல்லாத பாதையில் அவளையும் கூட்டிட்டு நடந்து சிக்கலாக்க சொல்றியா? இருக்கும் சிக்கல்கள் போதாது?” எனக் கேட்டான்.

வாசு தேவ்வின் தோளில் கை வைத்திட…

“மொத்தமா நொறுங்கியிருக்கேன் வாசு. முடியல! உன்னால் அருவியோட குரலை மட்டும் தானே கேட்க முடிந்தது. என்னால் அந்த குரலுக்கு பின்னாலிருக்கும் வலியை உணர முடிந்ததுடா!” என்று இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிட…

கண்ணீர் கோடென வழிந்தது.

error: Content is protected !!
Scroll to Top