தீர்த்தக்கரை தனிலே-5
மழையின் தயவால் கிளையின் இலைகளில் தேங்கி நின்ற முத்துமணிகள் மெல்ல மெல்ல தரை நோக்கி சொட்டிட்டு சொட்டுநீர் பாசனம் பரப்பிக் கொண்டிருந்தது.
பூஜையறையில் சாம்பிராணி வாசம் பரவியிருக்க அபிராமி அந்தாதியை கண்மூடி பாராயணம் செய்து கொண்டிருந்தார் விஜயா.
ஹாலில் வந்து நின்ற யாழொளி அந்த குரலில் மெய்மறந்து நின்றிருந்தாள்.
நெற்றியில் விபூதியை வைத்துக் கொண்டு ஆராத்தி தட்டுடன் வெளியில் வந்தார் விஜயா.
காரிடரில் அமர்ந்திருந்த சத்ரியன் அருகில் வந்தவர் தட்டை நீட்டி கண்களில் ஒற்றிக் கொள்ள படிந்தார்.
சத்ரியன் தீபாராதனையை எடுத்து ஒற்றிக் கொண்டு விபூதியை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார்.
இருவருக்குள்ளும் சிறு புன்னகை பரிமாற்றம் ஆனது.
அந்த சமயம் ஜாக்கிங் சென்றுவிட்டு உள்ளே நுழைந்த அஷ்வின் கண்களில் இந்தக் காட்சி பட,
“ஹாய் டாட், ஹாய் மாம் காலையிலையே ரொமான்ஸ் அள்ளுது. ஆனா இதுகூட நல்லாத்தான் இருக்கு”, என்றான்.
“அடேய் படவா”, என்றவாறு சத்ரியன் கையை ஓங்க, விஜயா அந்த வயதிலும் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டார்.
ஹாலிற்கு வந்து நின்ற விஜயா, யாழொளியை பார்த்து நெட்டி முறித்துவிட்டு, கையிலிருந்த குண்டு மல்லியை அவள் தலையில் சூட்டினார்.
“என்ன யாழ் எல்லாமே ஓக்கே தானே”,
“ஓக்கே இல்ல அத்தை”, அவள் முகம் வாடாமல்லியாய் சூம்பிப் போக, ஹாலிற்கு வந்து நின்ற சத்ரியன், அஷ்வின் இருவருக்கும் விஜயாவோடு சேர்ந்து ஏகப்பட்ட பதட்டம்.
“ஏன் யாழ் என்னாச்சு?”,
அவள் மௌனமாய் தலை கவிழ,
“ரொம்ப திட்டிட்டானா? எதுவா இருந்தாலும் சொல்லுடா”,
என்ன சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் மூவரும் இருக்க, நிமிர்ந்து பார்த்து கன்னத்தில் நாக்கை சுழற்றிக் கொண்டவள், “நீங்க எல்லாரும் பயந்தது போல ஒண்ணும் நடக்கல. அந்த முசுட்டுக்காரர் கூலாதான் நடந்துக்கிட்டாரு. எவ்ளோ சாப்ட்டா பேசுனாரு தெரியுமா?”,
மூவரின் முகமும் மின்னல் கீற்றின் வெளிச்சத் தீற்றல் போல் மின்னியது.
“இராஜாத்தி”,
“ஆமா அத்தை ரொம்ப சாதுவா பேசுனாரு. சீக்கிரமே அவர் மனசு மாறிடும். நான் மாத்திடுவேன்”, வார்த்தையில் அழுத்தம் கொடுத்தாள்.
“இந்த ஒருவார்த்தை எங்களுக்கு போதும் மருமகளே ரொம்ப சந்தோஷமா இருக்கு”, சத்ரியன் கூற,
“பரவாயில்ல பிரண்ட் நான் உன்னை என்னமோனு நினைச்சேன் பட் நீ ரொம்ப ஸ்வீட் அண்ட் ஸ்மூத்”, அஷ்வின், யாழொளியின் கரம் பற்றிக் குலுக்கினான்.
“சரி எல்லாரும் அவங்கவங்க வேலையப் பாருங்க”, யாழொளி கூற, எல்லோரும் நகர்ந்திருந்தார்கள்.
சமையலறை சென்ற யாழொளி வம்சிக்கும், தனக்கும் காஃபி கலந்து எடுத்துக்கொண்டு சென்றாள்.
டேபிள் மேல் ட்ரேவை வைத்துவிட்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வம்சியின் அருகில் வந்தாள் யாழொளி.
ஷோபாவில் ஒருக்கணித்து திரும்பிப் படுத்தவாறு கையை கட்டிக்கொண்டு ஆழ்ந்த சயனத்தில் இருந்தான்.
முன்நெற்றியில் குமிழ்ந்திருந்த முடிக்கற்றைகள் அவன் நெற்றியை மறைத்திருந்தது. பார்த்த மாத்திரத்தில் பெண்களை வசியம் செய்யத் துடித்துவிடும் கண்கள் இமை நோகாமல் மூடியிருந்தது. கூர்நாசி, கத்தை மீசை, சிவந்திருந்த அதரங்கள் கெட்டபழக்கம் எதுவுமில்லை என்று கட்டியம் கட்டிக் கூறியது. அனாவசிய சதைப்பிடிப்பற்ற ஆறடி உயர தேகம்.
வைத்தவிழி எடுக்காமல் இதழின் ஓரம் சிறு புன்னகை தவழ பார்த்துக் கொண்டிருந்தாள் யாழொளி.
வெளியில் கொட்டிய மழையின் ஜில்லிப்பு அறையின் உள்ளே ஏசியை போடவிடாமல் தடுத்திருக்க, குளிரில் வெடவெடக்க துடித்த இதழை பற்களால் கவ்விக்கொண்டு படுத்திருந்தான்.
மெல்ல அவன் முடியை கோதிவிட்டவள், அவன் காதருகில் குனிய, பட்டென்று தன் விழி திறந்தான் வம்சி.
அவன் விழி திறக்கவும் இரண்டடி தள்ளி நின்று கொண்டாள் யாழொளி.
அரக்க பரக்க எழுந்தவன், “ஹேய் யாழ் எதுக்கு கிட்ட வந்த?”, என்றான்.
“என் புருஷன் அழகுல எனக்கு ரொம்ப மயக்கம் அதான் பக்கத்துல வந்து சைட் அடிச்சேன்”,
“யாழ்…”,
“உஸ்… போதும் பாஸ் இதெல்லாம் போயி பெருசு பண்ணிக்கிட்டு. எழுங்க போய் பிரஸ்அப் ஆகிட்டு வாங்க காஃபி குடிக்கலாம்”,
“யாழ்…”, என்று அவனழைக்க,
பால்கனி கதவைத் திறந்தவள் காஃபி ட்ரேவோடு வெளியில் நகர்ந்திருந்தாள்.
பிரஸ்அப் ஆகிவிட்டு அவளெதிரே வந்து அமர்ந்தான் வம்சி.
காலை தூக்கி முட்டி போட்டு தூரத்து வானையும், சாலையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யாழொளி காஃபியை சிப் சிப்பாக பருகிக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்கும் சேர்த்துதான் இருக்கு என் முகத்தையே பார்க்காம எடுத்துக் குடிங்க பாஸ்”,
காஃபியை மக்கிலிருந்து கப்பில் ஊற்றியவன் சர்க்கரையை ஒரு ஸ்பூன் எடுத்துப் போட்டு கலக்கிக் கொண்டே, “என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காத யாழ் நான் ஒருநேரம் போல இருக்கமாட்டேன். இந்த வாழ்க்கை உனக்கு நீயா விதிச்சுக்கிட்டது. சோ உன்னோட லிமிட் தெரிஞ்சு தள்ளி நிக்கப் பழகிக்கோ”,
அவனையே அவள் பார்த்திருக்க, வம்சி தொடர்ந்தான்.
“நேத்து ஏதோ பேசணும் போல இருந்தது பேசுனேன் ஆனா இப்போ…”,
“இப்பவும் பேசணும் போல இருந்தா பேசுங்க பாஸ் நான் தடையேதும் சொல்லமாட்டேன்”, சப்பு கொட்டிக் கொண்டு கிளாஸை ட்ரேவில் வைத்தாள்.
“யாழ் நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்”,
“நானும் சீரியஸா தான் சொல்லுறேன் பாஸ். பேசணும்னு தோணுறத பேசிடுங்க”, அதரம் மேலிருந்த காஃபி துளிகளின் எச்சத்தைத் துடைத்தாள்.
“என்கிட்ட பேச ஒண்ணுமில்ல யாழ். இன்னொருமுறை அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு கிட்ட வராத”,
கால் முட்டியை பிரித்து கன்னத்தில் கரம் வைத்து அவனை பார்த்தவள், “அட்வான்டேஜ்னா எப்படி இருக்கும்னு தெரியுமா பாஸ்?”, மெல்ல எழுந்து அவனருகில் வந்தவள், அவன் நெற்றி முடியை ஆட்காட்டி விரலால் அலைந்தாள். நெற்றியிலிருந்து அவள் விரல் பட்டும் படாமல் கீழிறங்கி வந்து அவன் அதரத்தில் தஞ்சம் புகுந்திருக்க, வாய்க்குள் இருந்த காஃபியின் மிடறுகள் தொண்டைக்குள் செல்ல மறுத்து நின்றது அவனுக்கு.
இருவிரல் பற்றலில் அவன் இதழை பிடித்தவள் தன் முகத்தை வெகு அருகில் கொண்டு செல்ல, அவளை பிடித்து தள்ளிவிட்டு உதறிக் கொண்டு எழுந்தான் வம்சி.
“ஹேய் என்ன நினைச்சி இப்படி பண்ணிக்கிட்டு இருக்க. உனக்கு மரியாதை அவ்ளோதான்”, ஒற்றை விரல் நீட்டி அவன் கர்ஜிக்க,
கீழே விழுந்து கிடந்த யாழொளி தன் மேலுள்ள தூசியை தட்டிவிட்டுக் கொண்டே, “இதுக்கு பேர் தான் அட்வான்டேஜ் பாஸ் நான் உங்ககிட்ட இப்படியா நடந்துக்கிட்டேன்”,
“யாழ்…”,
“நீங்க என்னை தள்ளிவிட்டத பெருசு பண்ணாம மன்னிச்சுட்டேன். பேச நேரமில்ல போங்க போயி குளிச்சு ரெடி ஆகுங்க அம்மா வீட்டுக்கு போகணும். அப்படியே ஷாப்பிங்கும் போகணும்”, யாழொளி உள்ளே நகர்ந்திருக்க, ஒற்றை நொடியில் நடந்த சம்பவத்தால் வேர்த்திருந்த முகத்தை துடைத்துக் கொண்டான் வம்சி.
குளித்து முடித்து ஆடையை மாற்றிவிட்டு நிலைக்கண்ணாடி முன் தன் முடியை வாரி விட்டுக் கொண்டிருந்தான் வம்சி.
மெத்தை மேல் அமர்ந்து முட்டியில் சிராய்திருந்த காயத்திற்கு யாழொளி மருந்திட்டுக் கொண்டிருக்க, சீப்பை அதனிடத்தில் வைத்தவன் அவளருகில் வந்து நின்றான்.
அவனைப் பார்த்து அவள் முகம் திருப்பிக் கொள்ள, பஞ்சை எடுத்து டெட்டாலில் முக்கிவிட்டு காயத்தைத் துடைத்தான் வம்சி.
“ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…”,
“ஸாரிமா வேணும்னு பண்ணல நீ அப்படி நெருங்கி வரவும்”, அவன் தயங்கி தயங்கி நிறுத்த,
“இப்பவும் சொல்லுறேன் நான் அத தப்பாவே எடுத்துக்கல பாஸ். இது கூட அவ்ளோவா வலி இல்ல”,
பேண்டேஜ் ஒட்டி முடித்தவன் எழுந்து கொள்ள, “முகத்தை உர்னு வைக்காம சிரிச்ச மாதிரி வைங்க பாஸ். ஏன்னா நம்ம உள்பூசல் விவகாரம் எல்லாம் என்னோட அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தெரியாது”, பட்டென்று கண்ணடித்தாள்.
மெல்ல தலையசைத்த வம்சி அவளோடு இணைந்து கீழே வர, விஜயா, சத்ரியன், அஷ்வின் இருவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
“வா யாழ், வா தம்பி நீங்களும் சாப்ட உட்காருங்க”,
விஜயாவை நோக்கி கண்டனப் பார்வை வீசினான் வம்சி.
வாயில் வைத்த உணவை முழுங்க முடியாமல் திகைத்தவாறு சத்ரியன், அஷ்வின் இருவரும் வம்சியை நோக்க,
“அட சும்மா சும்மா முறைச்சு எல்லாரையும் பயம் காட்டாதிங்க பாஸ். பேசாம உட்காருங்க ரெண்டு வாய் சாப்டுட்டு போகலாம். கண்டிப்பா இன்னைக்கு மெனு உங்களுக்கு பிடிச்சதாத்தான் இருக்கும் இல்ல அத்தை”, தன் தட்டில் வெண்பொங்கலை எடுத்து வைத்தவள் சாம்பாரையும், சட்னியையும் சரிவிகிதத்தில் கலந்து எடுத்துக் கொண்டாள்.
வம்சிக்கு விஜயா பரிமாற கை உயர்த்த, அவன் முகம் செங்குழம்பெனச் சிவந்தது.
“நீங்க வைங்க அத்தை நானே அவருக்கு பறிமாறுறேன்”, யாழொளியே அவனுக்கு தட்டில் அனைத்தையும் எடுத்து வைத்தாள்.
பேருக்கு இரண்டு வாய் உண்டவன் எழுந்து கொள்ளப் பார்க்க,
“உங்களுக்கு விவசாயிங்க படுற கஷ்டம் தெரியுமா அஷ்வின். ஒரு பருக்கை சோற விளைவிக்க தன்னோட வாழ்நாள்ல பாதிய குடுப்பாங்க. ஒவ்வொரு அரிசிமணியும் அவங்களுக்கு பிள்ளைங்க போல. சோ சாப்பாட வேஸ்ட் பண்ணலாமா? புல்லா சாப்டுட்டு எழுந்திரு அஷ்வின் சோத்தை காத்துல அளக்காத. நமக்கு கோபம், விரக்தினு எது இருந்தாலும் அத அன்னத்து மேல மட்டும் காட்டக் கூடாது”,
மீண்டும் அமர்ந்த வம்சி மிச்சமென்று எதுவும் வைக்காமல் உண்டு முடித்தான்.
மூவரின் முகமும் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் மின்னியது.
சக்திவேல், பூமிச்செல்வியை பார்க்க காரில் பயணபட்டுக் கொண்டிருந்தார்கள் வம்சியும், யாழொளியும்.
வம்சி காரை ஓட்டிவர யாழொளி பார்வையை வெளியே பதிப்பித்திருந்தாள்.
ஓரிரு நொடி கடந்தவள், “எவ்ளோ நேரம் இப்படி அமைதியா வர பாஸ். ஒண்ணு பேசுங்க இல்ல மியூசிக் பிளேயர ஆன் பண்ணுங்க”,
“இதோ பக்கத்துல வந்துட்டோம் இல்ல அப்புறம் எதுக்கு சாங். உனக்கு வேணும்னா புளூடூத்த கனெக்ட் பண்ணி போன்ல கேளு”,
“அது சுத்த போர் பாஸ் ஒரே ஒரு சாங் கேட்டுக்கிறேன்”,
பிளேயரை ஆன் செய்ய இசைக்கானம் மிதந்து வந்தது.
“ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள்மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத்தேடி தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்தானே தேடுது”,
மியூசிக் பிளேயரை படிக்க விடாமல் வம்சி அணைத்து வைக்க,
“நல்ல சாங் பாஸ் ஏன் உங்களுக்கு பிடிக்கலையா?”,
“சோகப் பாட்டு எனக்கு பிடிக்காது யாழ்”,
“சரி பாஸ் அந்த இசைக்காக ரெண்டு லைன்”,
“நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா?
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா?”,
“பாட்டு சூப்பர்ல”, யாழொளி சிரித்தவாறு வினவ,
ஒருநொடி அவளை பார்த்து திரும்பியவன் எதிரில் வந்த டேங்கர் லாரியை கவனிக்கத் தவறினான்.
“ஹேய்…”, என்று கூச்சலிட்டவாறு வம்சி ஸ்டேரிங்கை ஒடித்துத் திருப்ப, சாலையின் பக்கவாட்டில் இருந்த பெரிய வேப்பமரத்தில் மோதி நின்றது கார்.
இரத்த வெள்ளத்தில் யாழொளி இருக்க, வம்சி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தான்.
“காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ
நான் செய்த பாவக்கணக்கும் தீராதோ
மகிழம்பூவே எந்தன் மணிமுத்தே
குழலைப் போலே தினம் மழலைபேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே…”,
நதி கரை தொடும்…
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
