தூரமே தூரமாய் 31
“என்ன மேம் சடனா இன்னைக்கு. இன்னும் டூ டேஸ் அப்புறம் பார்த்துக்கலாம் சொன்னாரே?”
பள்ளியின் அலுவலக அறைக்குள் நுழைந்ததும் இமையாள், அவளுடன் அந்த வேலையை சேர்ந்து செய்யப்போகும் நிர்மலா மேடத்திடம் வினவினாள்.
“இந்த இயர் நம்ம ஸ்கூலுக்குன்னு புதுசா பேரன்ட்டிங் ஆப் கிரியேட் பன்றாங்களாம். அது எப்படி ரன் ஆகுதுன்னு நியூ ஸ்டூடன்ட்ஸ் டீடெயில்ஸ் அப்டேட் செய்து செக் பண்ணவாம்” என்றவர், “நீ எல்கேஜி செக் பண்ணிடு இமயா!” என்றவர் அங்கிருந்த மற்றவர்களுக்கும் அவர்களுக்கான வகுப்புகளை சொல்லிட அனைவரும் வேலையில் மூழ்கிப்போயினர்.
புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்களின் தகவல்களை சரிபார்த்து கணினியில் பதிய வேண்டும். அதுதான் வேலை.
மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்த இமையாள் நடுவில் இருமுறை தீபாவுக்கு அழைத்து, தேஷ் என்ன செய்கிறான், சாப்பிட்டானா என விசாரித்திருந்தாள்.
அதனை கவனித்த நிர்மலா,
“என்ன இமயா யாரு அந்தக் குட்டி?” எனக் கேட்க, சற்றும் யோசிக்காது “என்னோட சன் தான் மேம். அம்மா வீட்டில் விட்டு வந்திருக்கேன்” என்றாள்.
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” அங்கிருந்த அனைவருமே ஒருசேரக் கேட்டிருந்தனர்.
“ம்ம்ம்ம்… பையன் இருக்கும்போது கல்யாணம் ஆகியிருக்காதா?” சாதாரணமாக சொல்லியிருந்தாள்.
“சொல்லவே இல்லையே?” நிர்மலா ஆதங்கமாகக் கேட்டிட,
“இந்த டூ இயர்ஸில் யாரும் என்கிட்ட கல்யாணமாகிடுச்சா கேட்கவே இல்லையே மேம்” என்றவள் அதற்கு மேல் என்னகேட்டாலும் பதில் சொல்வது தடுமாற்றமாகிவிடுமென பார்வையைத் திரும்பிக்கொண்டாள்.
“நம்ப முடியலையே!” நிர்மலா சந்தேகமாக இழுத்திட…
“சிட்டி புது டிசி ருத்விக் தெரியுமா உங்களுக்கு?” எனக் கேட்டாள் இமையாள்.
“ம்ம்ம்ம்… சிட்டியே அவர் பேரைத்தானே சொல்லிட்டு இருக்கு.”
“அவங்க தான் என் ஹஸ்பெண்ட்” எனக்கூறி மற்றொரு அதிர்ச்சையைக் கொடுத்தாள்.
அதன் பின்னர் யாரும் அவளிடம் திருமணத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. ருதுவின் பதவி அனைவரின் வாயினையும் அடைத்திருந்தது.
மதிய உணவு வேளையின் போது…
“லன்ச் உங்க அத்தை செய்திருக்காங்களாம். போய் சாப்பிட்டு, தேஷ் என்ன பன்றான் பார்த்திட்டு வாங்க” என ருதுவுக்கு தகவல் அனுப்பினாள்.
“அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த ருதுவின் இதழ்கள் மந்தகாசமாய் விரிந்தன.”
‘நீ முறைச்சிக்கிட்டே சுத்தினாலும் உன் லவ் தாண்டி தெரியுது’ என மனதோடு சொல்லிய ருது, அலைபேசியையே பார்த்திருந்தான்.
“என்னண்ணா சார் முகத்துல புதுசா வேறென்னவோ எக்ஸ்பிரஷன்லாம் வருது.”
மல்லிகாவிடம் அன்று நடந்த ஒரு திருட்டு வழக்கினைப் பற்றி பேசிக்கொண்டிருந்த வெங்கட், ருதுவின் புன்னகையை கவனித்தவனாக கிருஷ்ணனிடம் கேட்டான்.
“இருங்க கேட்டு சொல்றேன்” என மல்லிகா நகர,
“ஏய் இந்தாம்மா… உன் வேலையைப்பாரு நீ. உடனே போட்டுக்கொடுக்க கிளம்பிடுவீங்களே!” என்ற வெங்கட், “என்னாவா இருக்கும்?” என மீண்டும் கிருஷ்ணனிடம் கேட்டிட…
“சார் இவருக்கு உங்ககிட்ட என்னவோ கேட்கணுமாம்?” என்று ருதுவிடம் கோர்த்து விட்டிருந்தார் கிருஷ்ணன்.
“என்ன வெங்கட்?”
“அச்சோ ஒண்ணுமில்லை சார்” என்று வெங்கட் பதறி வேலையில் கவனம் செலுத்திட, இமையாளின் பேச்சினைத் தட்டாதவனாக, “வீடு வரை போய் வர்றேன். பார்த்துக்கோங்க” என கண்காட்டிவிட்டு சுரேந்தரின் இல்லம் சென்றான் ருது.
அவனை வரவேற்று அமர வைத்தவர்,
“தேஷ்க்கு இப்போ தான் சாப்பாடு ஊட்டி தூங்க வைத்தேன். இமயா ரூமில் தான் தூங்குவேன்னு அடம். நீங்க கை, கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றார்.
“சரிங்க அத்தை” என்றவன் இரண்டடி வைத்து திரும்பி, “உங்களுக்கு வருத்தம் எதுவுமில்லையே?” எனக் கேட்டிருந்தான்.
ருது எதுகுறித்துக் கேட்கிறான் என்பது தீபாவுக்கு புரிந்தது.
“நல்லது தானே நடந்திருக்கு மாப்பிள்ளை” என மாப்பிள்ளையில் அழுத்தம் கொடுத்தவர், “ஸ்கூல் போனதிலிருந்து ஆறேழு கால் பண்ணிட்டாள். இதுக்கு பிள்ளையை அவளே கூட்டிட்டுப் போயிருக்கலாம்” என்று சமையலறைக்குள் சென்றார்.
ருது தன்னவளின் அன்பில் கரைந்தவனாக இமையாளின் அறைக்குச் செல்ல… நல்ல உறக்கத்தில் இருந்தான் தேஷ்.
சில கணங்கள் தேஷ்ஷை பார்த்தபடி நின்றுவிட்டான் ருது.
தேஷ்ஷின் வருகையால் அவனது வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்.
குனிந்து சிறுவனின் கன்னத்தில் முத்தம் வைத்தவன், அறையை ஒவ்வொரு இடமாக பார்வையால் வலம் வந்தான். நேற்று சரியாக எதையும் அவன் கவனித்து பார்த்திருக்கவில்லை.
அவ்வறை முழுவதும் தன்னவளின் வாசம் நிரம்பியிருக்க கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தான்.
‘இப்போவே கட்டிக்கணும் தோணுதே!’ சிந்தை சென்ற பாதை அறிந்து கண்களை திறந்தவன், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வேகமாக கீழே வந்திருந்தான்.
உணவை முடித்துக்கொண்டு ருது கிளம்பிட, தீபா ருது வந்து சென்றதை மகளுக்கு தெரிவித்திருந்தார்.
காவல் நிலையம் ருது வந்தபோது வெங்கட் இருவரை விசாரித்துக் கொண்டிருந்தான்.
ருது, “என்ன கேஸ் கிருஷ்ணன்?”
“ஈவ்டீஸிங் சார்.”
“இவனுங்கலாம் திருந்தவே மாட்டானுங்க போல” என்று ருது தன்னுடைய இருக்கை நோக்கி செல்ல…
“பொண்ணு செத்துப்போச்சு சார்” என்றார் கனகா.
“வாட்?” ருது வேகமாகத் திரும்பியதில் கனகாவே பயந்துவிட்டார்.
“என்ன நடந்தது?”
“செத்துப்போன பொண்ணு பஸ் ஸ்டாப்பில் ஃபிரண்டுக்காக நின்னுட்டு இருந்திருக்கு சார். இவனுங்க கலாட்டா பண்ணியிருக்கானுங்க. அந்தபொண்ணு எதையும் கண்டுக்காமல், ஃபிரண்ட் ஸ்கூட்டியில் வந்ததும் ரெண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்துட்டு, செ*** பி**** இவனுங்களை பார்த்து சொல்லியிருக்கு. கரெக்ட்டா வண்டி மூவ் ஆக, ஷால் பிடிச்சு இழுத்திருக்கான். பின்பக்கமா விழுந்ததில் மண்டையில் நல்ல அடி. ஸ்பாட் அவுட்” என்று விளக்கமாகக் கூறிய வெங்கட், “நீங்க போனதும் தகவல் வந்தது. அங்கிருந்தவங்களே பிடிச்சு வச்சிருந்தாங்க. பாடி ஜிஎச்சில் இருக்கு” என்றான்.
“ஒரு பொண்ணை கொலை பண்ணியிருக்கானுங்க. உட்கார வச்சு கொஞ்சிட்டு இருக்கீங்க” என்ற ருது உட்கார்ந்திருந்த இருக்கையை உதைக்க, சரிந்து கீழே விழுந்தனர் இருவரும்.
வேகமாக எழுந்த ஒருவனுக்கு ருதுவை பார்க்கவே பயமாக இருந்தது. பின்னே நகரத்தையே தன் கைப்பிடியில் வைத்திருந்த கைலாஷையே ஒழித்திருந்தானே. தன் நிலை என்னவாகப்போகுதோ என அஞ்சி நடுங்கினான்.
“சாரி சார்… சும்மா ஃபன்னுக்காக…” மற்றொருவன் முடிக்கும் முன்பு வாயிலே குத்தியிருந்தான்.
“ஈவ்டீஸிங், கொலை பண்றதுலாம் உங்களுக்கு ஃபன்னாடா” என்று கேட்டு கேட்டே இருவரையும் மாற்றி மாற்றி துவைத்து எடுத்து விட்டான்.
“சார் நாங்க யார் தெரியுமா?”
“ஆஹான்…” என்று கையிலிருந்த காப்பினை ஏற்றி முறுக்கிய ருது…
“இவனுங்களை தூக்கி செல்லுக்குள்ள போடுங்க கிருஷ்ணன். யாரு அந்த பருப்புன்னு பார்ப்போம்” என்றான்.
கிருஷ்ணன் இருவரையும் செல்லுக்குள் அடைக்க…
“பின்னாடி வருத்தப்படூவீங்க சார்” என்றான் ஒருவன்.
“அடங்கமாட்டானுங்க போலயே!” என்ற ருது செல்லுக்குள் வைத்து இருவரையும் ஓடவிட்டான். இருவரின் அலறலும் காவல் நிலையத்தை அதிர வைத்தது.
மல்லிகா, “மொத்தமா முடிச்சிடுவார் போல?”
கனகா, “வாங்கட்டும் இவனுங்களுக்கெல்லாம் இப்படித்தான் வேணும்.”
“யாருங்க வேணும்?”
அப்போது கண்களில் கனலோடு வேகமாக இமையாள் அங்கு வர மல்லிகா கவனித்துக் கேட்டார்.
“உங்க டிசி இருக்காங்களா?” முயற்சித்தும் இருக்கும் மனநிலையில் இமையாளுக்கு தன்மையாகக் கேட்டிட வரவில்லை.
“யாரும்மா நீ?” என்ற கனகா, “பேங்க் மேனேஜர் பொண்ணு தானே நீ?” எனக் கேட்க,
“உங்க சாருக்கு ஹெட் ஆபீஸ்” என்றாள் கடுப்போடு.
அவருக்கு புரியவில்லை.
இவர்கள் பக்கம் திரும்பிய வெங்கட், வேகமாக அருகே வந்து “வாங்க மேடம். சார் பூஜையில் இருக்கார். வெயிட் பண்ணுங்க” என இருக்கையைக் காட்டினான்.
“இல்லை வேண்டாம்” என்றவள், கேட்ட அலறல் சத்தத்தில் எட்டிப்பார்க்க, ருது இருவரை அடிக்கும் காட்சி. அவனது ஆக்ரோஷத்தில் அரண்டு தான் போனாள். தன்னை சமாளித்தவளாக,
“வெளியில் இருக்கேன்” என்று சென்றாள்.
“அந்த பேங்க் கேஸில் அரேஸ்ட் ஆனாரே மேனேஜர் அவரோட பொண்ணு தானே! எதுக்கு நம்ம சாரை கேட்குது. அதான் கேஸ் முடிஞ்சிடுச்சே” என்றார் கனகா.
அன்று சுரேந்தருக்காக இமையாள் காவல் நிலையம் வந்தபோது வெங்கட் அங்கில்லை. அதனால் அவனுக்கு இவ்விஷயம் தெரிந்திருக்கவில்லை.
‘ஓ மேனேஜர் சாரோட மாமனாரா? அதான் அன்னைக்கு அவருக்கு அவ்வளவு கரிசனமா?’ அன்றைய அவனது கேள்விகளுக்கெல்லாம் இன்று விடை கிடைத்தது.
“இவங்க சாரோட வைஃப்” என்று வெங்கட் சொல்லவும், ருது வெளியில் வரவும் சரியாக இருந்தது.
“அவனுங்க அந்த இடம் விட்டு எதுக்கும் நகரக்கூடாது… எதுக்கும்” என்று அழுத்தமாகக் கூறினான்.
“சார் மேடம் வந்திருக்காங்க?” வெங்கட்.
“மேடமா?”
“ம்ம்ம்… வெளியில் நிக்கிறாங்க” என்றார் மல்லிகா.
“அது யாருடா மேடம்?”
“உங்களுக்கு ஹெட் ஆபீஸாம் சார்.” இதனை வெங்கட் சொல்லிட அங்கு நால்வரும் சத்தமின்றி சிரித்தனர்.
“தெளிவா சொல்லுடா?”
“மேடம் அப்படித்தான் சார் சொன்னாங்க” என்று கனகா சொல்லிட,
ருது வெளியில் சென்றான். இமையாள் நின்றிருந்தாள்.
‘ஹெட் ஆபீசே தான்’ என சிரித்துக்கொண்டவன், வேகமாக அருகில் சென்று…
“இங்கென்ன?” ஏதும் பிரச்சினையோ என பதறினான்.
“வீட்டுக்குப் போவோமா?”
“நேரத்தைப் பார்த்தவன், ட்யூட்டி டைம்” என்றான்.
“ஹோ” என்றவள், “அப்போ ட்யூட்டி முடிச்சிட்டு வாங்க போகலாம்” என அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டாள்.
“எதாவது பிரச்சினையா லேஷஸ்?”
“உங்களை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணனும் தோணுது… போதுமா?” இமையாள் சற்று உரக்க சொல்லியிருக்க, ருது வேகமாக உள்ளே எட்டிப்பார்த்தான். அதுவரை இவர்களை கவனித்துக் கொண்டிருந்த நால்வரும் சடுதியில் வேலை பார்ப்பதைப்போல் பாவனை காட்டிட, அவர்களின் உதட்டில் உறைந்திருந்த சிரிப்பை வைத்தே கேட்டுவிட்டனர் என கண்டு கொண்டான்.
ருதுவிற்கும் அவள் சொன்னதில் மென் முறுவல் நிலையாக நிலைத்துவிட்டிருந்தது.
“டூ மினிட்ஸ்” என்ற ருது, உள்ளே வந்து,
“எவன் வந்தாலும் விடக்கூடாது. மல்லிகாக்கா அட்டாப்ஸி ரிப்போர்ட் சீக்கிரம் வேணும் சொல்லுங்க. வெங்கட் அந்த பஸ் ஸ்டாப்பில் ஃபுட்டேஜ் கிடைக்குதா பாருங்க” என்று அந்த வழக்கு சம்மந்தமாக ஆணைகள் பிறப்பித்தவன், வெளியேறியிருந்தான்.
“எப்பவும் போலீஸ் மைண்ட் தான் போல” என்ற வெங்கட்டிடம், “லவ் மேரேஜ்ஜா?” எனக் கேட்டார் கிருஷ்ணன்.
அவரை மேலும் கீழும் பார்த்த வெங்கட்,
“சொல்ல முடியாது. நான் கேட்டு இதுவரை நீங்க எதாவது சொல்லியிருக்கீங்களா?” என்றதோடு, “சொன்ன வேலையை செய்வோம் வாங்க” என்று அவரை இழுத்துக்கொண்டு வெளியில் செல்ல, இமையாளின் ஸ்கூட்டியில் பின் அமர்ந்தபடி சென்றுகொண்டிருந்தான் ருது.
“நீ ஓகே தானே?”
ருது கேட்டிட இமையாளிடம் பதிலில்லை.
“ஏதும் பேசனுமா லேஷஸ்?”
………
என்னவாக இருக்குமென அவனுக்கு மண்டை காய்ந்தது.
“ஐ லேஷஸ்…”
வண்டியை சட்டென்று நிறுத்தி கண்ணாடி வழி அவனை பார்த்தவள்,
“மூச்… எதுவும் பேசக்கூடாது” என வாயில் விரல் வைத்து அதட்டினாள்.
இமையாள் வண்டியை இயக்கிட,
“கொஞ்சம் கூட புருஷனுக்கு மரியாதையே இல்லை” என்றான். கள்ளப்புன்னகையுடன்.
அவளிடம் பிரதிபலிப்பு இல்லை. வீடு வந்து சேரும் வரை அமைதி தான்.
கதவினை திறந்து உள் வந்ததும், விறுவிறுவென மாடியேறி தங்கள் அறைக்குள் வந்திருந்தாள். ஒன்றும் புரியாது ருதுவும் அவள் பின்னே வந்திருக்க… சட்டென்று திரும்பி ருதுவை இறுக்கி அணைத்திருந்தாள்.
முதல் அணைப்பு. அதனை ரசிக்கும் நிலை அவனிடம் இல்லை.
இமையாளின் கண்ணில் நீர்.
எட்கி அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள். ருதுவின் கண்கள் தானாக மூடிக்கொண்டது.
காவல் நிலையத்தில் அவள் சொல்லும்போதுகூட அவன் நம்பவில்லை. விளையாட்டாகக் கூறுகிறாள் என நினைத்தான்.
‘என்னவோ நடந்திருக்கு?’ நொடியில் யூகித்தவனாக, “லேஷஸ்” என்று அழைத்திட. அவனது குரல் கரகரப்பில் தோய்ந்து ஒலித்தது.
அதில் சுயம் மீண்டவள், அவனை விலகி மெத்தையில் சென்று அமர்ந்தாள். முகத்தை அழுந்த துடைத்து, கைகளில் தாங்கியவளாக.
எதுவும் புரியாது அவளின் செயலில் பதற்றம் கொண்டவன், அவள் முன் சென்று மண்டியிட்டு, அவளது நாடி தொட்டு முகம் நிமிர்த்தினான்.
கருவிழிகள் பந்தாட அவனது கண்களை ஆழ்ந்து நோக்கியவள்,
“தேஷ் உங்களோட… ம்ப்ச்” என்று நிறுத்தி, “உங்க ரத்தம் ஓகே. நீங்க சொன்ன அழுத்தமே உண்மைன்னு சொல்லுது. பட் உங்களுக்கு பிறந்த பையனில்லை… ரைட்?” எனக் கேட்டாள்.
ருது அதிர்வெல்லாம் கொள்ளவில்லை. அவனுக்குத் தெரியும் தன்னிடம் வந்துவிட்டால் தானாகவே அனைத்தையும் தன்னவள் தெரிந்துகொள்வாள் என்று.
அவள் அவ்வாறு கேட்டதும்,
“நீ இவ்வளவு அறிவாளியா இருக்க வேண்டாம்” என்றான்.
“தேஷ்க்காகத்தான் கல்யாணமாகிடுச்சுங்கிற பொய், ஆகாத கல்யாணத்துக்கு டிவோர்ஸ்ங்கிற பொய் எல்லாமா?” எனக் கேட்டாள்.
“செம ஷார்ப் டி நீ!”
“ம்க்கும்” என்றவள், “நீங்களா ஏதும் சொல்லமாட்டிங்களா?” என்று எழுந்திருந்தாள்.
“நிறைய சொல்லணும்… எப்படின்னு தெரியல” என்றான். தற்போது அவனது குரலே மாறிவிட்டிருந்தது. அவனது பார்வை நிலைக்குத்தி இருந்தது.
அவனின் நொடி நேர மாற்றமும் அவளுள் என்னவோப்போலிருக்க, அவனை மாற்றும் பொருட்டு அப்பேச்சையே மாற்றினாள்.
“ஓகே நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். முதலில் முகத்தை மாத்துங்க” என்றவள் எழுந்துக்கொள்ள, அவளின் கை பிடித்து தடுத்திருந்தான்.
“சிட்… எனக்கும் உன்கிட்ட எல்லாம் சொல்லணும். இன்னையோட இதை முடிச்சிடலாம்” என்றான்.
“உங்களை கஷ்டப்படுத்தி எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். அது என்னவா இருந்தாலும் தேஷ் நம்ம பையன்” என்றாள் அடர்த்தியாக.
“லேஷஸ்” என்று தன்னவளை தாவி அணைத்திருந்தான்.
எவ்வித உண்மையும் தெரியாது அவளாகவே அவனையும் தேஷ்ஷையும் ஏற்றுக்கொண்டாளே. இதைவிட வேறென்ன வேண்டும். சொல்லிவிட துணிந்துவிட்டான்.
__________________________________
அப்போது ருதுவுக்கு 26ன் தொடக்கம்.
இமையாளுடனான அழகிய காதல் நாட்கள் அவை.
ருதுவின் தந்தை கைலாஷிற்கு உலகமே அவரது மனைவி துளசியும், ருதுவும், அவனின் அக்கா ரூபிணியும் தான். அப்படித்தான் இருவரும் நினைத்திருந்தனர்.
அவருக்கு பணம் தான் எல்லாம். அதனை தன் குடும்பத்திற்கு தெரியாமல் பார்த்து வந்தார். அவர் பணத்திற்காக அனைத்து தவறான தொழில்களையும் செய்தார்.
ஒருநாள் இரவில் கைலாஷ் யாருடனோ கடத்தல் விடயம் பேசுவதைக் கேட்ட ருது… அவரின் உண்மை முகம் அறிந்து பேசுவதையே நிறுத்திக்கொண்டான்.
உலகத்திலே தன் கணவர் போல வராது என்ற அன்னையின் நம்பிக்கையை உடைக்க விரும்பாதவன் துளசியிடம் எதையும் சொல்லிக்கொள்ளவில்லை. ஏன் கைலாஷிடமே என்ன காரணமென ருது காட்டிக்கொள்ளவில்லை.
ஐபிஎஸ் தேர்வு வகுப்பிற்கு செல்லவும், படிக்கவும் காரணம் சொல்லிக்கொண்டு வகுப்பிருக்கும் இடத்திற்கு அருகிலே விடுதியில் தங்கிக்கொண்டான். நகரத்துக்கு வெளியில் அவர்கள் இல்லம் இருந்தது, ருதுவிற்கு தூரத்தை காரணமாகக் காட்டிட வசதியாகிப்போனது. வாரம் ஒருமுறை துளசியைப் பார்க்க மட்டுமே வீட்டிற்கு சென்று வருவான். அதுவும் கைலாஷ் இல்லாத நேரம் மட்டுமே!
ரூபிணியுடன் ருது அத்தனை நெருக்கமில்லை. ஏனென்று அவனுக்கே தெரியாது. சின்ன வயதில் ஏற்பட்ட சிறுபிள்ளை சண்டையை ரூபிணி மறக்காததே காரணம். நல்ல வசதியான குடும்பத்தில் கட்டிக்கொடுத்திருக்க பிறந்த வீட்டிற்கென்று அடிக்கடி வருவதுமில்லை.
ஐபிஎஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த சமயம் தான் ருதுவுக்கு, இமையாள் மீது காதல்.
இமையாளை தன் மனம் நேசிக்கிறது என்று உறுதியாகத் தெரிந்ததும் எவ்வித தயக்கமுமில்லாமல் அவளிடமும் இனியனிடமும் சொல்லிவிட்டான்.
இருவரிடமும் சம்மதம் கிடைக்க… ருதுவின் கட்டுப்பாடான காதலிலும், ஆர்ப்பரிப்பான நட்பிலும் மகிழ்வாக சென்ற நாட்கள் அவை.
இமையாள் கூட இனியனிடம், “ருது உன்னை தான் லவ் பன்றார் போல” என்று பொய் கோபம் கொள்வதுண்டு.
அப்போதெல்லாம் ருதுவின் பதில், “கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி உன்னை காதலால் மூச்சுமுட்ட வைக்கிறேன் பார்” என்பது தான்.
“இப்போவே மூச்சு முட்டிப் போய் தான் இருக்கோம்” என்று அவள் முணுமுணுப்பதில் அத்தனை மகிழ்வு கொள்வான்.
இந்த மகிழ்ச்சி எல்லாம் ருது தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சிக்கு சென்ற ஒரு வருடம் மட்டும் தான்.
அதன் பின்னான நாட்கள் அத்தனை சாதாரணமாக அவனுக்கு கடந்திடவில்லை.