தூரமே தூரமாய் 32
கைலாஷ்ஷின் உண்மை முகம் தெரிந்த பின்னர் ருது தனது தந்தையென அவரின் பெயர் சொல்வதைக்கூட நிறுத்தியிருந்தான்.
இமையாள் இனியனிடம் கூட, அக்கா இருக்கிறாள் என சொல்லியிருக்கிறான். அவ்வளவு தான். இமையாளே ஒரு நாள் அவனது பெற்றோரின் பெயர் கேட்டிட, துளசியின் பெயர் மட்டும் சொல்லியவன், கைலாஷினை மொத்தமாகத் தவிர்த்தான்.
ஆனால் இனியனிடம், “பெயர் சொல்ற அளவுக்கு எனக்கு அவர் முக்கியமில்லை” என்றிருந்தான்.
நண்பனாக இருந்தால் அவனைப்பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? நட்பில் திளைக்க இருவருக்குமான புரிதல் போதும். ஒருவரைப்பற்றி மற்றவர் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உறவுக்கான இடைவெளியை கொடுப்பதே அவ்வுறவின் நீட்டிப்புக்கு காரணமாக அமையும்.
‘இடைவெளி அனைத்திலும் அழகு தான்.’
எழுதும் வரிகளில், பேசும் வார்த்தைகளில், நிகழும் சூழலில், துன்பமோ இன்பமோ சிறு இடைவெளி கொடுத்திடும் போது அதன் கனம் நிச்சயம் குறையும். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் சிறு இடைவெளி அன்பை ஆழப்படுத்தும்.
இனியனுக்கு அத்தகைய புரிந்துணர்வு ருதுவிடம்.
‘ருதுவிற்கு குடும்பத்தில் ஏதோ கசப்பு’ என புரிந்து அதைப்பற்றி பேசியதே கிடையாது.
அந்த புரிதலால் தான் பெரும் இடைவெளிக்கு பின்னரும் இருவரும் இயல்பாய் தங்களின் நட்பை தடையின்றி காட்டியிருந்தனர்.
ருது தேர்வில் வெற்றி பெற, பயிற்சிக்கென புறப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்ததே இல்லை. அதற்கு காரணம் கைலாஷ் மேலும் மேலும் செய்த தவறுகள் தான்.
அந்நேரத்தில் தான் கைலாஷ் குவாரி ஒன்றை தொடங்கியிருந்தார். குவாரி என்கிற பெயரில் அனைத்து கட்டப்பஞ்சாயத்து, வட்டி வசூல், கடத்தல், எல்லாம் அங்கு வைத்து தான் செய்தார்.
கைலாஷ்ஷை மொத்தமாக ஒதுக்கி வைத்திட்டாலும், அவர் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ருது கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.
அவரின் செயல்கள் யாவும் மேலும் மேலும் அவனை தூரம் செல்லவே வைத்தது.
பயிற்சியில் இருந்தபோது ஒருமுறை மட்டுமே வந்து இமையாளையும் இனியனையும் பார்த்துச் சென்றான். துளசியை பார்ப்பதற்காகக் கூட அவன் இல்லம் செல்லவில்லை. பயிற்சியில் விடுமுறையே கிடையாது என்று சொல்லிவிட்டான்.
கைலாஷிற்கு சிறு சிறு சறுக்கல் ஏற்படத் துவங்கியது.
இந்நிலையில் தான், ருதுவிற்கு பயிற்சி முடிய ஆறு மாதங்கள் இருந்த சமயம், துளசி வற்புறுத்தி ருதுவை வீட்டிற்கு வரவழைத்தார்.
அன்று ரூபிணியும் வந்திருந்தது தான் ருதுவிற்கு ஆச்சரியம். ருது வீட்டிற்குள் நுழையும் போதே ரூபிணியின் சத்தம் வெளி வாயில் வரை ஒலித்தது.
“உங்களுக்கு வெட்கமா இல்லை… இந்த வயதில்… ச்சீய்” என்று அருவருப்பாக முகத்தை சுளித்து அன்னை என்றும் பாராது திட்டிக் கொண்டிருந்தாள்.
அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் கைலாஷ்.
“இந்தா உங்க சீமந்தபுத்திரன் வந்தாச்சு… அவன்கிட்ட சொல்லுங்க. தலையில் தூக்கிவச்சு ஆடுவான்” என்றாள்.
“அக்கா என்ன? இப்போ எதுக்கு அம்மாவை திட்டுற?” பொறுமையாகத்தான் வினவினான்.
“நான் திட்டுறது தான் உனக்கு தெரியுதா? நீ வீட்டுல மகன்னு இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? ஆளில்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்ச கதையாயில்ல இங்க நடந்திருக்கு” என்று அவள் சொல்ல அப்போதும் கைலாஷ் நிமிரவில்லை.
“ஆம்பளை அப்படித்தான் இருப்பாங்க. உனக்கு எங்கப்போச்சு புத்தி?” துளசியை பார்த்து ரூபிணி கேட்டிட, என்னவென்று புரியாது, “அக்கா” என்று கத்தினான் ருது.
“சும்மா கத்தாதடா! வெளியில் தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்?” என்று ருதுவிடம் கோபத்தைக் காட்டியவள், “கல்யாணம் பண்ணியிருந்தால் இவனுக்கே குழந்தை இருந்திருக்கும். இந்த வயசில் இதெல்லாம் தேவையா. வெளியில் எப்படி சொல்லுவீங்க? பேரன், பேத்தி எடுக்குற வயசுல புள்ளை பெத்துக்கப் போறேன்னு. உடம்பு கூசலையா?” என்றாள். தாயென்றும் பாராது.
ருதுவிற்கு விடயம் புரிந்து அதிர்வு. தன் அன்னையை அதே அதிர்வுடன் ஏறிட்டான். அவனால் எதிர்பாராத இதனை கேட்டதும் ஏற்க முடியவில்லை. ஒரு மாதிரிதான் உணர்ந்தான். ஆனால் அன்னையின் கண்ணீர் அவனுள் என்ன நிகழ்த்தியதோ…
“இதுக்கா கத்திட்டு இருக்க?” என்று சாதாரணம் போல ரூபிணியிடம் கேட்டான்.
“எது சாதாரணம்?” என்று எகிறிக் கொண்டு வந்த ரூபிணி… “கல்யாணமாகி அஞ்சாறு வருஷம் ஆகியும். நான் இன்னும் உண்டாகல. ஆஸ்பத்திரி, கோவிலுன்னு நடையா நடந்துட்டு இருக்கேன். என் மாமியார் இதை சொல்லியே தினமும் ஜாடையா பூக்காத, காய்க்காத மரம்ன்னு என்னை குத்தி பேசுறாங்க. இப்போ நான் போய் இதை சொன்னால்… என்ன நினைப்பாங்க? பரிகாசமா சிரிக்க மாட்டாங்க? அவங்க மட்டுமா… ஊரே சிரிக்கும். பொண்ணு வாயும் வாயுறுமா இருக்க வேண்டிய நேரத்தில், அம்மா உண்டாகியிருக்கா… இந்த வயசில் கட்டுப்பாடு வேண்டாமான்னு ஊரே உமிழும்” என்றாள்.
துளசி அமைதியாக கண்ணீர் உகுத்தபடி கூனிக்குறுகி நின்றிருந்தார்.
“இப்போ இதெல்லாம் சாதாரணம். சும்மா அதிகம் பேசாத” என்ற ருது, துளசியின் அருகில் சென்று அவரின் கண்ணைத் துடைத்து, “எழுபது வயதில் எல்லாம் குழந்தை பெத்துக்குறாங்க. சமாளிக்கலாம். விடுங்கம்மா” என்றான்.
“இந்த கண்றாவிய சமாளிக்கப் போறியா நீ? எனக்கு இந்த மானங்கெட்ட செய்தியை கேட்டதும் பதறிப்போச்சு. செத்துப்போலாம் போல இருக்கு. இந்த அசிங்கத்தை தூக்கி சுமக்கப் போறீங்களா? அதுக்கப்புறம் என்னை மறந்துடுங்க” என்றாள்.
“அக்கா கொஞ்சம் சும்மா இருக்கியா? குழந்தையே இல்லாதவங்க காத்திருந்து, பதினைஞ்சு, இருபது வருஷம் கழித்தெல்லாம் குழந்தை பெத்திருக்காங்க தானே? இப்போ என்ன அம்மாவுக்கு இன்னும் ஐந்தாறு வருஷம் லேட்டா பிறக்கப்போகுது அவ்வளவு தானே! இதுக்கு என்னவோ உயிரே போற மாதிரி குதிக்கிற?” என்றான்.
ருதுவிற்கு இவ்வளவு பேச வருமென்றே ரூபிணிக்கு மட்டுமல்ல கைலாஷுக்குமே அன்று தான் தெரியும்.
“எனக்கு குழந்தை இல்லாதது கவலையில்லை உனக்கு, அக்கறையில்லை… உன் அம்மா இந்த வயசில் பெத்துக்கப்போற குழந்தை மேல அதுக்குள்ள அக்கறையா? வெளியில சொல்லிப்பாரு, இது சாதாரணம் சொல்ற உனக்கு அப்போ தெரியும். நக்கலடிச்சு, கிண்டல் செய்தே உன் அம்மாவை ஓட விடுவாங்க. மூஞ்சிக்கு நேராவே துப்புவாங்க” என்றாள்.
“பரவாயில்லை. உன்னை மாதிரியும் சிலர் இருக்கத்தானே செய்வாங்க” என்றவனின் வார்த்தையில் அதீத கோபம் கொண்ட ரூபிணி,
“பேசாம அதை கலைச்சிட்டு வேலையை பாருங்க” என்றாள்.
“ஏய்!”
அதுவரை அமைதியாக இருந்த கைலாஷ் கனல் பொங்க கத்தினார். அவரின் தோற்றத்தில் ரூபிணி அரண்டு நிற்க, ருது அவரை அசராது பார்த்தான்.
“எனக்கு இந்த குழந்தை ரொம்ப முக்கியம்… யாரென்ன சொன்னாலும், அவள் குழந்தையை பெத்தெடுப்பா(ள்)” என்றார் கைலாஷ்.
ருது தான் ஏற்றுக்கொள்ள மாட்டானென்று கைலாஷ் நினைத்திருந்தார். ஆனால் அவனே ஏற்றுக்கொள்ள அவருக்கு வசதியாகிப்போனது.
ருது அன்னைக்காக மட்டுமே பார்க்கிறான் என்பது அவருக்கு தெரியவில்லை.
“இந்த அசிங்கத்தை ஊரறிய சொல்லப்போறீங்களா? உங்க பிஸ்னெஸ் வட்டாரத்தில் சொல்லிப் பாருங்க அப்போ தெரியும்” என்றாள் ரூபிணி. நக்கலாக.
“சொன்னால் தானே!” கைலாஷ்ஷிடம் பெரும் திட்டம்.
“இது நான் இரண்டு மூன்று வருடங்களாக எதிர்பார்த்தது தான்” என்ற அவரின் வார்த்தையில் ருது அதிர்ந்தான்.
அவனின் அதிர்வு தன்னை பிடித்திருக்கும் மகனின் கையில் உணர்ந்த துளசி…
“என்னை மன்னிச்சிடு ருது கண்ணா” என்றார், அவனின் தோளில் சாய்ந்து.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தற்செயலாக எதிர்பாராது நடந்துவிட்டதென அவன் நினைத்திருக்க… இதற்காகக் காத்திருந்ததாக கைலாஷ் சொல்லியதையும், துளசி ஆமோதித்ததையும் ருதுவாலே ஜீரணிக்க முடியவில்லை.
‘தெரிந்தே செய்தார்களா? ஏன்? இந்த வயதில் இது எத்தனை பிரச்சினையை உண்டாக்கும்?’ அவனது கேள்விகளை வாய் திறந்து கேட்டிட முடியாது நின்றிருந்தான்.
“இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை?” இம்முறை ரூபிணி கைலாஷிடமே நேரடியாகக் கேட்டிருந்தாள்.
“பொண்ணு குழந்தைக்கு தவமிருக்கும் போது… அம்மாவும் குழந்தைக்காக அலைஞ்சான்னு தெரிந்தால் கா* துப்* மாட்டாங்க” என்றாள்.
“எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. இந்த குழந்தை எனக்கு வேணும். அவ்வளவு தான்” என்றவர், “வெளியில் ஈஸியா சொல்ல முடியாது தான். என்கிட்ட வேலை செய்றவனே பரிகாசம் செய்வான். அதனால் சொல்லப்போறதில்லை” என்றவர், “நீ கர்ப்பமா இருக்கன்னு உன் வீட்டில் சொல்லு” என்றார். ரூபிணியிடம்.
நொடியில் அவரின் திட்டத்தை ருது யூகித்துவிட்டான். அவனிடம் வளைந்த விரக்தி சிரிப்பு.
“எதுக்கு?” கேட்ட ரூபிணியிடம்,
“துளசியை வீட்டிலே மறைத்து வைத்து பார்த்துக்கலாம். துளசிக்கு குழந்தை பிறக்கும் அன்று உனக்கும் வலி வந்து ஹாஸ்பிடலில் சேர்த்து, உன் குழந்தைன்னு சொல்லிக்கலாம்” என்றார்.
“அருவருப்பா இருக்கு.” சட்டென்று சொல்லியிருந்தாள்.
“இந்த அசிங்கத்தை காலம் முழுக்க நான் தூக்கி சுமக்கணுமா?” என்றவள், “இந்த நினைப்பை இதோட நிறுத்திக்கோங்க. இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. கொஞ்சம் விட்டா என் தலையில் மிளகாய் அரைச்சிடுவீங்க போல. உங்களை அப்பா அம்மா சொல்லவே அசிங்கமா இருக்கு” என்றவள் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.
கைலாஷ் மகளை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாமென இருந்தார். பிள்ளை இல்லை, நிச்சயம் ஒப்புக்கொள்வாள் என பல திட்டங்கள் போட்டிருந்தார். குழந்தை பிறக்கும் வரை அவருக்கு சூழல் சுமுகமாக இருந்திட வேண்டும். அதற்காக அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தவர்…
“உனக்கு உடனே கல்யாணம்” என்றார் ருது.
“பண்ணிக்க முடியாது.” பட்டென்று சொல்லியிருந்தான்.
“வெளிய சொல்ல இப்போதான் கூச்சமா தெரியுதா உங்களுக்கு?” என கைலாஷ்ஷின் முகம் பார்த்து நேராகக் கேட்ட ருது, “உங்ககிட்ட ஏதோ பெரிய திட்டம் ஒன்னு இருக்கு. அதுக்கு என் அம்மாவையும், குழந்தையையும் பகடக்காயா உருட்டுறீங்க தெரியுது. ஆனால் ஏன்? எதுக்குன்னு? புரியல” என தன் நாடியை நீவினான்.
கைலாஷ்ஷின் பார்வையில் திருட்டுத்தனம். ருது கண்டு கொண்டான்.
“சொல்லுங்க எதுக்கு இப்போ இந்த குழந்தை?” ருது கூர் பார்வையோடு வினவ,
“இன்னும் போலீஸே ஆகல… அதுக்குள்ள போலீஸ் புத்தியா?” என்ற கைலாஷ், “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. எல்லாம் உனக்காகத்தான்” என்று சென்றுவிட்டார்.
“எனக்காகவா?” ருது புரியாது இருக்கையில் அமர,
“கண்ணா” என்று அழுகையோடு துளசி அவனருகில் அமர்ந்திட…
“என்னம்மா நடக்குது?” என்றவன், “இதை நான் தப்புன்னு சொல்லல. நானோ, அக்காவோ பிறக்காமல் இருந்திருந்தால்… வயதாகியும் குழந்தைகக்காக காத்திருந்து பெத்தெடுக்கிறீங்க நினைக்கலாம். ஆனால் ஊர் என்ன பேசும், பார்க்குறவங்க பார்வை எப்படியிருக்கும் எல்லாம் தெரிந்தும் எதுக்குமா இப்போ குழந்தை? என்ன அவசியம்?” எனக் கேட்டான்.
“நீ இந்த குழந்தையை ஏத்துக்கலையா கண்ணா?”
“ம்ப்ச்… நான் ஏத்துக்கிறது விஷயமில்லைம்மா” என்றவன், “என்ன அவசியம் கேட்கிறேன். இந்த வயதில் எத்தனை ரிஸ்க் இருக்கும்” என்றான்.
“அப்போ உன் அப்பா இந்த வயதில் சின்னப்பொண்ணை கல்யாணம் செய்துகிட்டு வந்திருந்தால் சரியா இருந்திருக்குமா?” என கண்ணீரோடு துளசி கேட்டதில்… ருது “அம்மா” என அதீத அதிர்வை உள்வாங்கியிருந்தான்.
“அவரை ரொம்ப நம்பிட்டேன் கண்ணா” என்றவர், “உன்கிட்ட இதையெல்லாம் சொல்லக்கூடாது தான். இருந்தாலும் எனக்குன்னு சொல்லி அழ நீதானே இருக்க” எனக்கூறி, முகத்தை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
“இவரு பணப்பேய் ருது. நமக்கெல்லாம் தெரியாம எவ்ளோ விஷயம் மறைத்திருக்கார்” என்றார்.
“பணத்தாசை எல்லோருக்கும் தான் இருக்கும். இதிலென்ன இருக்கு?” சாதாரணம் போல் கேட்டாலும், அவனுள் ஒரு கசப்பு.
“பணத்துக்காக ஆட்களை கடத்தி மிரட்டுறாரு கண்ணா” என்றார்.
தனக்கு தெரியும் என்பதையே ருது காட்டிக்கொள்ளவில்லை.
“போலி சாமியாருங்க கூட எல்லாம் தொடர்பு” என்றவர், “அதுல ஒருத்தன் சொல்லியிருக்கான்… உனக்கு இன்னொரு ஆண் வாரிசு பிறந்தா உன் உயரம் எங்கோ போயிடும்ன்னு. அதுக்குத்தான் எனக்கு இந்த நிலை” என்றார்.
“இது ஆண் குழந்தையா இல்லைன்னா என்ன பண்ணுவாராம்?” அத்தனை கடுப்பு ருதுவின் பேச்சில்.
“கண்டிப்பா ஆணாத்தான் இருக்கும்ன்னு ஜோசியம் சொன்னானாம்.”
“ஹோ… நீங்களும் இதையெல்லாம் நம்புறீங்களா?”
“இதுல நம்புறேன் நம்பாதது அடுத்த விஷயம் கண்ணா” என்ற துளசி, “உன் அப்பா சொல்லும்போது” என்ற அவரின் பேச்சை தடுத்தவன்,
“அந்த ஆளை வார்த்தைக்கு வார்த்தை அப்பான்னு சொல்லாதீங்க எரியுது” என்றான்.
சரியென்றவர் நடந்ததைக் கூறினார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு… அதாவது ருது கைலாஷ்ஷின் உண்மை முகம் தெரிந்து கொண்ட தருணம்,
“எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும்” என்று எவ்வித பூச்சுமின்றி கைலாஷ் சொல்லிட… அவர் விளையாடுகிறார் என நினைத்த துளசி, “ஒன்னு போதுமா இல்லை ரெண்டு மூணு பெத்துக்கோவோமா?” எனக் கேட்டிட… “நான் சீரியஸா சொல்றேன் துளசி. எனக்கு இன்னொரு குழந்தை அதுவும் ஆண் குழந்தை வேணும்” என்றார்.
“இந்த வயசுக்கு மேல… அதுவும் ருதுவுக்கு கல்யாணம் பண்ணப்போற வயசுல” என துளசி சிரிக்கவே செய்தார்.
“என்ன இந்த வயசுக்கு மேல” என்ற கைலாஷ், “உன்னால் முடியாதுன்னா சொல்லு… நான் சின்ன வயசுப்பொண்ணா பார்த்து ஏற்பாடு பண்ணிக்கிறேன்” என்றவரின் பேச்சில் துளசியின் அத்தனை வருட குடும்ப வாழ்க்கை கேள்விக் குறியானது.
“அந்த ஆளு அப்படி சொன்னதும் நீங்களும் சம்மதிச்சிட்டிங்க” என்ற ருது, “இந்த வயதில் பிரெக்னென்சி எவ்வளவு சிக்கலா இருக்கும். மேனேஜ் பண்ண முடியுமா? உங்க ஹெல்த் கண்டிஷன் அலோவ் பண்ணுமா?” என தாயின் மீதான அக்கறையில் மட்டுமே பேசினான்.
துளசிக்கு கணவனை இன்னொரு பெண்ணுடன் அனுமதிக்க முடியாது. கணவனின் உண்மை முகம் தெரிந்தும் ஏனோ அவரால் விட முடியவில்லை. இதுதான் காதலில் பைத்தியம் என்பதுபோல்.
“ஹாஸ்பிடல் போனீங்களா?”
“அங்கெல்லாம் போனால் தெரிஞ்சிடும்ன்னு, அந்த காலத்துலலாம் எந்த ஹாஸ்பிடல் போனாங்கன்னு, அவர் போக வேண்டாம் சொல்லிட்டார்” என்றார். வயதின் காரணமோ என்னவோ, அவரின் உடல் இந்த கர்ப்பத்தால் பல மாற்றங்களை வெளிப்படையாகவேக் காட்டியது. அதனை ருது தற்போதுதான் கவனித்தான்.
“இது உயிர் சம்மந்தப்பட்டது ம்மா. உங்க உயிரும் இதில் அடங்கியிருக்கு. வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று ருது அழைக்க… அதிலே அவன் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டான் என துளசி மகிழவே செய்தார்.
“வேணாம் கண்ணா… அக்கம்பக்கத்தில் தெரிந்தால், மன வேதனை” என்றார்.
“அதுக்கு இது மறைக்கும் விஷயமும் இல்லையேம்மா” என்ற ருதுவிடம் ஆயாசம்.
“உன் அக்காவே எப்படி நடந்துகிட்டாள்… என்னென்ன பேசினாள், இதையெல்லாம் ஊர் பேசினால் என்னால் தாங்கிக்க முடியாது கண்ணா” என்றார்.
“உடம்பு சரியில்லைன்னு எதாவது காரணம் சொல்லிக்கலாம்மா. கிளம்புங்க” என்றவனிடம், “இது மறைக்கக்கூடியதா கண்ணா” என தன் வயிற்றை பார்த்தார்.
“அப்போ உங்க உடம்பை செக் பண்ண வேண்டாமா? இந்த வயதில் குழந்தையை தாங்கிக்க முடியுமா தெரிஞ்சிக்க வேண்டாமா?” என கோபமாக வினவினான்.
“தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டா?” என்றபடி அங்கே வந்தார் கைலாஷ்.
“எனக்கு என் அம்மா முக்கியம்” என்றான்.
“எனக்கு அந்த குழந்தை பிறக்கிறது முக்கியம்” என்றார் கைலாஷ்.
“என் அம்மா பலியா உங்க பேராசைக்கு?”
ருதுவின் கேள்வியை கைலாஷ் பொருட்படுத்தவே இல்லை.
“நாளைக்கு உனக்கு கல்யாணம். பொண்ணு பார்த்திட்டேன். இந்த குழந்தை உன்னோட குழந்தையா தான் பிறக்கும். நம்ம வீட்டில் வேலை செய்யும் வள்ளியோட பொண்ணு மகா கூடதான் கல்யாணம். நாம சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவாங்க” என்றார்.
ருதுவிற்கு மொத்தமாக வெறுத்துவிட்டது.
கைலாஷ் வள்ளியை மிரட்டிதான் சம்மதிக்க வைத்தார். அதனை தெரிந்துகொண்ட ருது, அவரை இரவோடு இரவாக வேறு மாநிலத்தில் இருக்கும் அவரது அண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைத்திட்டான்.
விஷயம் தெரிந்து கைலாஷ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார்.
“நீ இன்னைக்கே பயிற்சிக்கு போய்டுவ. உன் அம்மா என்கூடதான் இருந்தாகணும்…, ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கியே அதையும் மறந்திடு. உன்னை நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். திடீர்னு என்கிட்ட பேசுவதை நீ நிறுத்தினா என்ன காரணம்ன்னு நான் யோசித்திடமாட்டேனா என்ன? உன் அம்மாவுக்கு தெரியாததும் என்னைப்பற்றி உனக்குத் தெரியும். நீ காதலிக்கிற பொண்ணையே உனக்கு கல்யாணம் செய்து வைத்து, அப்பவும் இந்த குழந்தை உன்னோடதுன்னு உலகத்துக்கு சொல்ல முடியும். ஆனால் அதுக்கு அந்தபொண்ணோட குடும்பம் ஒத்துக்கணுமே! அதற்கு வாய்ப்பே இல்லை… ஒழுங்கா நல்ல முடிவா எடு” என்று அவனது வாழ்வில் முக்கியமான இரு பெண்களை வைத்து மிரட்டினார் கைலாஷ்.
ருது அவரின் மிரட்டலுக்கெல்லாம் பயப்படவில்லை… தற்போது அவனது சூழல் அப்படி.
ருதுவிற்கு போலீஸ் வேலை அத்தனை முக்கியம். அதற்காக அவன் போட்ட உழைப்பு அதிகம். அதன் பலனாய் தற்போது பயிற்சி காலத்தில் இருக்கிறான். இன்னும் ஐந்து மாதங்களில் காக்கி உடை அணிந்திடுவான். விட்டுக்கொடுக்க முடியாது. அன்னையை தானும் கூட்டிச்செல்ல முடியாது.
பலவற்றை யோசித்தவனுக்கு அப்போதைக்கு ஒப்புக்கொள்ளும் வழியைத் தவிர வேறில்லை.
“இதுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவசியமில்லையே” என்ற ருது, எப்படியும் உண்மை வெளியில் தெரியத்தானே போகுது, எதற்கு முடியாதென சொல்லி வீணாக அவருடன் பிரச்சினை செய்து அம்மாவுக்கு சிக்கலை உண்டாக்க வேண்டுமென நினைத்த ருது…
“குழந்தை பிறந்த நொடி முதல் என்னுடைய மகன் அவன். அப்படியே அடையாளப்படுத்திக்கோங்க. அதுக்காக கல்யாணம் இப்போவே செய்துக்க முடியாது” என்றான்.
“எப்படியோ என் எண்ணம் நடந்தால் சரி” என்ற கைலாஷ், “நீ லவ் பண்ற பொண்ணு மேலயும் ஒரு கண்ணு வச்சிருக்கேன்” என்றார்.
தான் இன்னும் ஐந்து மாதத்திற்கு இங்கிருக்க முடியாது, கைலாஷ் சொல்வதை செய்யக்கூடிய நபர் தான். ஆதலால் பயிற்சிக்கு சென்றவன், இமையாளுடன் தொடர்பில்லாமலே இருந்தான்.
ருது அன்னைக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி இங்கிருந்து சென்றிருந்த நாள் முதல் அவருக்கு அழைக்கிறான்… அவருடன் பேசிடவே முடியவில்லை. பயிற்சியின் இறுதி. அவனால் வெளியில் வர முடியாத நிலை. அன்னைக்கு என்னவென ஒவ்வொரு நொடியும் அவன் பயத்துடன் வாழ்ந்த நாட்கள்.
அவர் ஒருநாள் அழைத்து தன்னைக் கூட்டிக்கொண்டு செல்லும்படி அழுது கரைய… அன்றே ருது எமெர்ஜென்சி என பொய் சொல்லி விடுப்பெடுத்து அன்னையை காண வந்திருந்தான்.
துளசி வீட்டில் இல்லை.
“அம்மா எங்கே?” கைலாஷிடம் கேட்டிட அவரோ வீட்டிற்கு பின் பகுதியில் இருக்கும் சிறிய அறையை கை காண்பித்தார்.
கைலாஷிற்கு இந்த வயதில் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என சொல்லிட அசிங்கம். அதே சமயம் பணத்தின் செழுமைக்காக குழந்தையும் அவசியம். இதுநாள் வரை குவாரியில் மறைத்து செய்த யாவற்றையும் வீட்டில் வைத்தே செய்திட, தன்னுடைய ஆட்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்ல, துளசியின் நிலை பிறர் அறியாதிருக்க அவரை கிட்டத்தட்ட ஒரு அறையில் மொத்தமாக சிறை வைத்திருந்தார்.
ருது துளசியை சென்று பார்க்க… நீண்ட சங்கிலியால் கட்டிப்போட்டு வைக்கப்பட்டிருந்தார்.
அவரின் உடலில் வயிறு மட்டுமே பெரிதாக தெரிந்தது. குழந்தையின் வளர்ச்சியால். அவன் வந்து சென்று மூன்று மாதங்கள் தான் ஆகிறது… எப்படி இந்தளவிற்கு உருக்குலைந்து போனார் என்று அவனுக்கு அத்தனை அதிர்ச்சி. எலும்பாகியிருந்தார்.
“ம்ம்மா…” பார்த்ததும் அவனது கண்களில் நீர் சுரந்திருந்தது.
தாவி அணைத்துக் கொண்டான்.
“கொடுமையா இருக்கு ருது. அவர் சொல்லியும் கேட்காம ஒருமுறை வெளிய வந்துட்டேன்னு சங்கிலியால கட்டிப்போட்டு அடைச்சு வச்சிருக்கார்” என்று கண்ணீர் உகுத்த துளசி, “குழந்தை இருப்பதால் அடிக்கடி உடலில் என்னென்னவோ நடக்குது ருது கண்ணா. இந்த வயதில் இப்படித்தான் இருக்குமா தெரியல? என்னால முடியல கண்ணா. அங்கங்கே வலி எடுக்குது. வாந்தி இன்னமும் நிற்கல. அப்பப்போ நெஞ்சு அடைக்குது. அப்படியே உயிர் போயிடக்கூடாதா தோணுது. இங்கவே அடைந்திருப்பது பைத்தியம் பிடிப்பது போலிருக்கு…” என்றவர் அவனின் கைகளிலே மயங்கி சரிந்தார்.
அறையின் வெளியில் நின்று இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த கைலாஷ் உள்ளே சென்று,
“முகத்தில் தண்ணி அடி முழிச்சிடுவாள்” என்றார்.
“ஏய்…” என அவரின் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான் ருது.
“உன் பணத்தாசைக்கு இன்னும் என்னடா செய்யலாம் இருக்க நீ? நான் இப்போவே என் அம்மாவை கூட்டிட்டுப்போறேன்” என்றான்.
“எனக்கு அந்த குழந்தை வேணும். வெளியில் வந்ததும் கூட்டிட்டுபோகலாம்” என்றார் அசராது.
“மனுஷனா நீ?”
“மனுஷனா இருப்பதால் தான் இளம் பெண்ணை கல்யாணம் செய்துக்கிறேன் சொன்னேன். உன் அம்மா தான் நானே பெத்துக்கொடுக்கிறேன் சொன்னாள். இப்போ அவஸ்தை படுறாள். இதுக்கு நான் பொறுப்பல்ல” என்று கொஞ்சமும் குற்றவுணர்வு இன்றி பேசினார்.
“உன்னை நம்பி இன்னமும் என் அம்மாவை விட முடியாது” என்ற ருது, துளசியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.
“இப்படித்தான் அடிக்கடி மயக்கம் வருது கண்ணா” என்றவர் மகனிடம் சேயாக ஆறுதல் தேடினார்.
கர்ப்பகால ஹார்மோன்ஸ் வேறு அவரை அதீத மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்க… மகனிடம் பைத்தியம் போல என்னென்னவோ அரற்றிக் கொண்டிருந்தார்.
“என்னை விட்டு போயிடாத கண்ணா…”
“இப்போவே கிளம்பலாம்மா” என்ற ருதுவை தடுத்த கைலாஷ், “உன் ஆளு உயிரோட இருக்க வேண்டாமா?” எனக் கேட்டவர், கல்லூரியின் பெயரை சொல்லி “அங்க தானே படிக்குது. என் கட்டுப்பாட்டில் தான் அந்தப்பொண்ணுக்கே தெரியாமல் வச்சிருக்கேன்” என்றார்.
“டேய்… உன்னை” என்ற ருதுவால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை.
“ஒழுங்கா மிச்சம் இருக்கும் ரெண்டு மாத பயிற்சியை முடி. இவளுக்கும் குழந்தை பிறந்திடும். அப்புறம் கூட்டிட்டு எங்க வேணாலும் போ. நானும் அந்தப்பொண்ணை ஒன்னும் செய்திட மாட்டேன்” என்று ருதுவுக்கே செக் வைத்து அனுப்பி வைத்தார்.
மனம் முழுக்க வலி, வேதனை. ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கைலாஷ்ஷை கொல்லும் வெறி. அதற்கு அவனுக்கு காக்கி அவசியம். எதற்கோ விருப்பம் கொண்டு காக்கியை தேர்ந்தெடுத்தான். ஆனால் அந்த காக்கிதான் கைலாஷ்ஷை அழிக்கும் ஆயுதமென புரிந்துகொண்ட ருது மனமே இன்றி… அன்னையை விட்டுச்சென்றான்.
செல்லும் முன் அவனை விட மாட்டேனென துளசி அழுத அழுகை இன்றும் அவனது உயிரை உருக்கும்.
“கொஞ்சநாள் ம்மா… எனக்காக பொறுத்துக்கோங்க. இந்த பாம்பை நசுக்க இப்போ வேணா ஒன்னுமில்லாமல் இருக்கலாம்” என்ற ருது, “உன் அழிவு என் கையில் தான்” என கைலாஷ்ஷை மிரட்டியே சென்றான்.
தன்னால் தன்னவளுக்கு ஏதும் ஆகிடக்கூடாது, கைலாஷ்ஷை இமையாளின் வழியிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காகவே செல்வதற்கு முன்பு அவளை சந்தித்து இல்லாததை எல்லாம் சொல்லி, அவளை குற்றுயிராக்கி விட்டுச்சென்றான்.
அதனை அறிந்த கைலாஷ், இமையாளுக்கு தான் போட்டிருந்த ஷேடோவை நீக்கியிருந்தார். அப்போதுதான் ருதுவிற்கு பாதி பாரம் இறங்கியது.
மனைவி மீது கொஞ்சமே கொஞ்சம் கரிசனம் வந்ததோ… அல்லது ருது தனக்கு அடங்கித்தான் இருக்கின்றான் என நம்பியதாலோ, அன்றையிலிருந்து ருதுவுடன் ஓரிரு நிமிடங்கள் துளசியை பேச அனுமதித்தார். அப்போதெல்லாம் துளசி மனதால் உடலால் தான் கொள்ளும் வலியை சொல்லி கதறிட மகனாக ருதுவின் ஜீவன் துடித்து அடங்கும்.
கைலாஷ்க்கு எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. திடீரென குவாரியில் விபத்து. பதினோரு பேர் பலி. இன்ஷூரன்ஸ் பணத்திற்காக கைலாஷ் வேண்டுமென்றே உருவாக்கிய விபத்தென காவல்துறை கண்டறிய, சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு தான் அவருக்கு அரசியல் தலைவர்களுக்கு அடியாட்கள் சப்ளை செய்யும் பேட்டை ரவுடியுடன் நட்பு கிடைத்தது அவன் மூலம் ஒன்றரை மாதத்தில் வெளியில் வந்த கைலாஷ், தன்னுடைய சாமியாரைத்தான் முதலில் சென்று பார்த்தார்.
“இன்னொரு ஆண் வாரிசு வந்தால் ஏறுமுகம் தான் சொன்னீங்க… இப்போ பாருங்க இருந்தும் இல்லாமல் போயிடும் போல” என்று கோபம் காட்டினார்.
“உன் பொண்டாட்டிக்கு வலி வந்த பின்னர் சொல்லு” என்ற சாமியாரை புரியாது பார்த்த கைலாஷ் வீட்டிற்கு செல்ல… அவர் அடைத்து வைத்த அறையில் துளசி குற்றுயிராகத்தான் கிடந்தார். அவ்வறையிலே துளசி நினைத்த நேரம் சமைத்து உண்பதற்காக அறையில் அடைத்த அன்றே எல்லாம் ஏற்பாடு செய்திருக்க… கைலாஷ் இல்லாத நிலையிலும் துளசி உணவுக்கு பாதிகமில்லாமல் இருந்தார். அவரால் தான் நன்கு சமைத்து உண்ண முடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தேவைக்கு உண்டு அரை உயிராகத்தான் இருந்தார்.
சில வாரங்களில் பயிற்சி முடிந்து வேலைக்கான ஆர்டருடன் ருது வந்துவிட்டான்.
ஆர்டரை கையில் வாங்கிய அன்று…
‘அம்மாவை பார்த்து, கூட்டிக்கிட்டு இமயாவை பார்க்கணும். உண்மையை சொல்லி அவளையும் கூட்டிட்டு எங்காவது போயிடனும்’ என்று நினைத்தபடி தான் வீடு வந்து சேர்ந்தான்.
ருது வீட்டிற்கு வர, துளசிக்கும் வலி எடுத்தது. அவரின் வயதின் காரணமோ என்னவோ… ருது பிறக்கும்போது அனுபவித்த வலியைக் காட்டிலும் பல மடங்கு வலியை உணர்ந்தார்.
துளசி வலியில் தரையில் உருண்டு கொண்டிருக்க… கைலாஷ் பதற்றமில்லாது யாருக்கோ அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார்.
“அம்மா” என ஓடிவந்த ருது, அவரின் அருகில் செல்ல துளசியின் காலுக்கு கீழே தண்ணீரும் ரத்தமுமாக ஈரம்.
பார்த்ததும் மயக்கம் வரும்போலானது அவனுக்கு. முயன்று தன்னை நிலைப்படுத்தி நின்றவன், அன்னையின் அருகில் குத்திட்டு அமர்ந்து அவரை தன் மடி தாங்கினான்.
“கண்ணா வலிக்குதுப்பா… முடியல…” என்ற அவரின் கண்ணீரில் ருதுவுக்கு நெஞ்சை அடைத்தது.
“இதோ போலாம்மா” என்ற ருது முற்றிலும் நிலை குலைந்திருந்தான்.
எந்தவொரு மகனும் அன்னையை காண கூடாத/முடியாத நிலையல்லவா அது.
“ஆம்புலன்ஸ் வருதா இல்லையா?”
கைலாஷ் ஆம்புலன்சுக்கு தான் அழைக்கிறார் என நினைத்துக் கேட்டான். துளசியை தன் கையில் தூக்கியவனாக.
அந்நேரம் கைலாஷ்ஷின் சாமியார் உள்ளே வர…
ருது துளசியை தூக்கிக்கொண்டு எழுந்து நின்றான்.
“சரியான நேரத்துக்கு தான் வலி வந்திருக்கு. இன்னும் அரை மணி நேரம் கழித்து குழந்தை பிறந்தால் உனக்கு உயர்வு தான். வாழ்வில் சறுக்கலே கிடையாது. உச்சிக்கு போய் தான் நிற்பாய்” என்று சாமியார் சொல்ல…
“ச்சீய்…” கைலாஷ்ஷை ருது அற்பமாய் பார்த்தான். அவனுக்கு அவர்களுடன் மல்லுகட்ட நேரமும் இல்லை… தெம்பும் இல்லை. அன்னையையும் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனிடம் உள்ளது.
துளசியை தூக்கியிருந்த ருது, வெளியில் செல்ல அடி வைத்திட…
“சாமி சொன்னது கேட்கலையா ருது” என்ற கைலாஷ், ருதுவின் அடுத்த அடியில் அவனது தலையிலே மகனென்றும் பாராது கட்டையால் அடித்திருந்தார். அவர் அடித்ததில் மயங்கி கீழே விழுந்த ருதுவின் கையிலிருந்து அவன் விழும் முன்பே கீழே உருண்டிருந்தார் துளசி. அதில் இன்னும் வலி அதிகரிக்க வீறுகொண்டு கத்தியவரின் கதறளில் அவ்வீடே கிடுகிடுத்தது.
முதல் முறை கைலாஷ் துளசியின் கத்தலில் அரண்டு நின்றார்.
“என்ன பாக்குற? உன் பையன் எழுந்தால் காரியம் கெட்டுது” என்று சாமியார் கைலாஷ்ஷை தொட்டு உலுக்கிட, இருவரும் சேர்ந்து ருதுவை தூக்கி இருக்கையில் கட்டிப்போட்டனர்.
அடுத்து குழந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வந்திடக் கூடாதென துளசியின் இரு கால்களையும் உயர்த்தி பிடித்தனர்.
“தலை தெரியுது கைலாஷ். உன் பொண்டாட்டி வயிறை மேல்நோக்கி தள்ளு” என்ற சாமியாரை நோக்கி உணர்வற்ற பார்வை பார்த்த கைலாஷ்… “குழந்தை பிறந்தால் பிறக்கட்டும் என்ன நேரமா இருந்தால் என்ன? துளசிக்கு ஏதும் ஆகிடப்போகுது” என்று மனைவியின் விடாத கத்தலிலும், தன் பாதத்தில் உணர்ந்த தன்னவளின் குருதி ஈரத்திலும்… கல்லுக்குள் ஈரம் போல கைலாஷ் சற்றே மனதால் அசைந்தார்.
விடாத துளசியின் அழுகை ஒலியில் மெல்ல கண் திறந்த ருது…
கண்ட காட்சியில் அம்மாவென அவ்விடம் கிடுகிடுக்க கத்தியவன், அடுத்த வார்த்தையற்று உறைந்தான்.
ருதுவின் மனதோடு குரலும் அடைத்தது.
அவனால் எதுவும் செய்திட முடியாது கைகள் கட்டப்பட்டிருக்க…
“அம்மா” என்று சத்தமின்று அரற்றியவனின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது.
மகன் பார்க்கக்கூடிய காட்சியா அது?
காணும் காட்சியில் அவனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தது.
இயற்கையின் நிகழ்வை தடுக்கப்பார்த்தால் ஏற்படும் சேதம் அனைத்தையும் சிதைத்திடுமே!
துளசியின் கத்தலில், ருது கட்டுக்களை களைய முயல…
“தலை முழுசா வந்திடுச்சு கைலாஷ். இன்னும் ரெண்டு நிமிஷம்” என்ற சாமியார், “முந்தி தள்ளு. முழுசா வெளி வந்து தரையை தொடுற நேரம் எல்லாம் உனக்கு ஜெயம் தான்” என்று சொல்ல… அந்நொடி ஒலித்து அடங்கிய துளசியின் குரலில் கைலாஷ்ஷின் சப்தமும் ஒடுங்கியிருந்தது.
என்னயிருந்தாலும் அவர் மனைவியின் மீது காதல் கொண்டல்லவா வாழ்ந்தார். நடுவில் பணம் எனும் அரக்கன் அன்பு, காதல், பாசம் அனைத்தையும் அவரிடமிருந்து அழித்திருக்க, ஒரு உயிர் ஜனனம் பெற்றது.
கட்டுக்களை விடுவித்து துளசியின் அருகில் வந்த ருது… சாமியாரை பிடித்து தள்ளினான்.
தரையில் அன்னையின் செங்குருதியில் நனைந்து கிடந்த தன் தம்பியை அள்ளி அணைத்து அன்னையின் அருகில் அமர்ந்தான். துளசியால் அசைந்திடவே முடியவில்லை.
ஒரு பக்கம் குழந்தை வீறென்று அலற, மறுபக்கம் ருது அம்மா என்று சிறுவனாக அனத்தியபடி அழுது கொண்டிருந்தான்.
துளசி கண்களை மூடியிருக்க…
“அம்மா, பாரும்மா… என்னை பாரும்மா” என்ற ருதுவின் அழுகை அவரின் செவி நுழைய கடினப்பட்டு இமைகள் திறந்தவர்,
“கண்ணா…” என காற்றாய் ஒலித்தார்.
அவருக்கு அவரின் இறுதி நொடிகள் கண்முன் தெரிந்தது.
ருதுவை குனிந்திட சொல்லி சைகை செய்தவர், அவனின் காதில் “ருத்விக், ருத்தேஷ்” என்றிட… “அம்மா” என்று கதறி துடித்தவனாக, குழந்தையை அவரின் மார்போடு அழுத்தினான்.
“பார்த்துக்க கண்ணா…” என்றவரின் குரல் திணறளில் பதறிப்போன ருது, “உனக்கு ஒன்னும் ஆகாதும்மா… ஹாஸ்பிடல் போகலாம்” என்று எழ,
“குழந்தையை கொடுத்திட்டுப் போடா” என்றார் சாமியார்.
தாய், மகன் பாசப்போராட்டத்தை பார்த்திருந்த கைலாஷ்ஷின் உயிர் தேஷ் ஜனித்த நொடி, தன்னுடன் காதலாய் வாழ்ந்த மனைவி கண்ணுக்கு முன்னே உயிருக்கு போராடும் நொடி, துடித்து அடங்கியதில் தான் செய்த பெரும் தவறின் வீரியம் புரிந்து, கைமீறி சென்ற காலத்தின் கோலத்தில் தன் தலையில் அடித்துக்கொண்டு துளசியின் உடல் முன் மண்டியிட்டார்.
ருதுவிடமிருந்து சாமியார் குழந்தையை பறிக்க முயற்சித்து ருதுவிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க,
“கைலாஷ், இவனை பிடி. பிறந்த ரத்த சூட்டோட குழந்தையை குவாரியில் வைத்து பலி கொடுத்திட்டால் உனக்கு எல்லாம் ஜெயம் தான்” என்று அவர் சொல்ல, கைலாஷ் ஆடிப்போனார்.
“அய்யோ என் குழந்தை…” துளசியின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக காற்றாகிக் கொண்டிருந்தது.
சாமியார் சொல்லியதில் சிந்தை தொலைந்து, அடுத்து என்ன என யோசிப்பது மறந்து தன் தம்பியை நெஞ்சில் அணைத்து பிடித்தவனாக சுவரோடு ஒண்டினான் ருது.
“காப்பாத்து… கண்ணா, தம்பி” என்ற துளசி, நகர முடியாது கையை நீட்டிட… அவரின் அருகில் வந்த ருது,
“நாம போயிடலாம்மா” என குழந்தையை கையில் வைத்தபடி துளசியையும் தூக்கிட முயல, அவனை பின்னிருந்து தாக்க முற்பட்ட சாமியாரை கைலாஷ் கட்டையால் அடித்திருந்தார்.
“நான் பிழைக்கமாட்டேன் கண்ணா… சாவு முன்ன தெரியுது” என்றவரின் மூச்சு விட்டு விட்டு பெரும் சிரமமாக வெளிவந்தது.
“உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கு?”, சாமியார்.
“இவ்ளோ நாள் நீ சொன்னதெல்லாம் கேட்ட எனக்கு பைத்தியம் தான்” என்ற கைலாஷ், “உன்னால் தான் எல்லாம்” என்று வலியோடு பேச அதனை கேட்கவோ, அவரை நம்பும் நிலையிலோ ருது இல்லை.
“பிறந்த குழந்தையை பலி கொடுக்கணும் சொல்றீயே… உன்னை நம்பி என் குடும்பத்தை இழந்துட்டனே!”
“உனக்காக நினைச்சியா… இதெல்லாம் எனக்காக. குழந்தை பலி சக்தி வாய்ந்தது. அதை செய்தால் நான்தான் கடவுள். அதுக்கு உன்னோட பணத்தாசை, முட்டாள் தனத்தை பயன்படுத்திக்ட்டேன்” என்ற சாமியார், ருதுவின் கையிலிருந்த குழந்தையை பறிக்க போக, கட்டையால் சாமியாரின் பின் மண்டையில் அடித்த கைலாஷ், மீண்டும் மீண்டும் அடிக்க மண்டை உடைந்து சாமியார் அங்கேயே இறந்தான்.
அதெல்லாம் ருதுவின் கண்ணிலும் கருத்திலும் பதியவே இல்லை.
இறந்துபோன சாமியாரின் உடலை வெறித்து பார்த்து கைலாஷ், ருதுவின் அருகில் வந்து அவனது தோளில் கை வைத்திட,
“ஏய்” என்று அருகில் உடைந்து கிடந்த கண்ணாடி துண்டினை எடுத்து அவரின் கழுத்தில் வைத்திருந்தான் ருது.
“கண்ணா…”, கைலாஷ்.
“ச்சீய் என்னை அப்படி சொல்லாதே! உன் பணத்தாசை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்குப் பார்… என் அம்மாடா… அம்மா” என்று உரக்கக் கத்தினான்.
“உன்னை கொன்னாதான் என் ஆத்திரம் அடங்கும்” என்று ருது கண்ணாடித் துண்டை அழுத்த,
“கண்ணா வேணாம்…” துளசி அவனது காலை பிடித்து இழுத்தவராக தடுத்திருந்தார்.
“அம்மா இவனை…”
“அவனை கொன்னு உன் கையை கரையாக்கிக்காதே. உன் போலீஸ் கனவு அழிஞ்சிடும். அவனை எதுவும் பண்ணிடாத… இது என் மேல் சத்தியம். அவன் வாழ்நாள் முழுக்க நிம்மதியே இல்லாமல் குற்றவுணர்வோடு வாழ்ந்து சாகணும். அவனை கொன்னு பாவத்தை தேடிக்காதே! எனக்கு சத்தியம் பண்ணு” என்றவரின் குரல் ஒலி குறைந்து கொண்டே வந்தது.
“தேஷ்… பத்திரம் கண்ணா. அவன் உன் மகன்” என்றவரின் கை மீது ருதுவின் கை பதிய, துளசியின் ஆன்மா காற்றில் கலந்தது.
“அம்மா…” வெடித்து கதறித் துடித்த ருதுவின் ஓலமும், தேஷ்ஷின் அழுகையும் அவ்விடத்தை அதிர நிறைத்தது.
கைலாஷ் உறைந்து தரையில் சரிந்திருந்தார்.
தேஷ்ஷின் அழுகையில் அவனை பார்ப்பதுதான் முக்கிய கடமையென தன்னுடைய வலி, அழுகை எல்லாவற்றையும் மனதோடு புதைத்து திடமாய் எழுந்து நின்றான் ருத்விக்.
ருது உயிரற்ற உடலாய் அன்னையை அவ்வீட்டின் தோட்டத்தில் புதைத்தவன், கைலாஷ்ஷை வீட்டு கேட்டிற்கு வெளியே இழுத்து வந்து போட்டான்,
“இது என் அம்மா வாழ்ந்த கோவில். இதிலிருக்கும் தகுதி கூட உனக்கில்லை” என அடைத்து பூட்டினான்.
ஒருமுறை வீட்டை நிமிர்ந்துப் பார்த்தவன், மார்போடு தன் தம்பியாகிய மகவை அணைத்து பிடித்து சாலையில் நடக்கத் துவங்கினான்.
கைலாஷ்ஷிற்கு நன்கு தெரியும், தான் செய்த பெரும் பாவச் செயல்களுக்கு பல குற்றங்களுக்கு, தான் செய்து கொண்டிருக்கும் இருள் வாழ்வை விட்டால், தன்னுடன் இருப்பவர்களே தன்னை போட்டுவிடுவார்கள் என்று, அதனால் அவர் சிறையில் சந்தித்த பேட்டை ரவுடியுடன் தன் வாழ்வைத் தொடர்ந்தார். அவனின் மூலம் கைலாஷ் தொட்டது பெரும் உயரம் தான். ஆனால் அவரின் நிம்மதி, சந்தோஷம் யாவற்றையும் இழந்திருந்தார்.
அவர் தன் மகனை தேடாத இடமில்லை.
ருதுவிற்கு கைலாஷ்ஷை நம்ப முடியவில்லை. அவர் கண்ணில் பட்டால், தேஷ்ஷுக்கு ஆபத்து நேர்ந்திடுமோ என அவருக்கு தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இருந்து கொண்டான். அதற்கு அவனது பதவியும், இருக்கும் இடத்தின் தூரமும் உதவியது.
இங்கிருந்து ருது செல்லும் முன் இமையாளை பார்த்து பேசிடத்தான் முதலில் நினைத்தான்.
ஆனால் அவளை அந்நிலையில் அன்று விட்டு வந்த குற்றவுணர்விலும், தான் சொல்வதையெல்லாம் நம்புவார்களா, தேஷ்ஷை ஏற்றுக்கொள்வார்களா? என்கிற குழப்பத்திலும், தன் கையிலிருக்கும் தேஷ்ஷின் நலன் குறித்த பயத்திலும், தனக்கு வேலை கிடைத்திருக்கும் பீகாருக்கு சென்றிருந்தான்.
அங்குதான் திருவேங்கடம் குடும்பம் அறிமுகமானது. அம்பிகாவிடம் துளசியின் அன்பு கிடைக்க அவருடன் ஒட்டிக்கொண்டான்.
ஒருநாள் நினைவுகளின் கனம் தாங்காது வெடித்து கத்தியவனின் கதறலில் அம்பிகா அன்னையாய் மடி தாங்கிட அவரிடம் அனைத்தும் சொல்லியிருந்தான்.
அன்று முதல் அம்பிகா அவனை தன் பிள்ளையாகவே பாவிக்க… அவர்கள் குடும்பத்தின் அங்கமாயிருந்தான் ருத்விக்.
ருது அனைத்தையும் சொல்லி முடிக்கும் வரையிலும் இமையாளின் கண்களை விட்டு தன் விழிகளை விலக்கவில்லை.
இமையாளின் கண்ணிலிருந்து வற்றிடவே மாட்டேன் எனும் வகையில் கண்ணீர் வழிந்தது.