தூரமே தூரமாய் 38

தூரமே தூரமாய் 38

வந்திருக்கும் பெண் யாரென்று வேங்கடம், அம்பிகாவிற்கும் தெரியவில்லை.

ஷிவா இருக்கும்போது கூடத்து வரை வந்து அமர்ந்திருக்கிறாள் என்றால், ஷிவாவின் தோழியோ என நினைத்து அவளை ஏறிட்டாலும், வயது வித்தியாசம் அப்படியில்லை எனக் காட்டியது.

“நீங்க?” இமையாள் தான் அனைவரின் யோசனையையும் கவனித்து, பெரியவர்களுக்கும் வந்திருக்கும் பெண் யாரென்று தெரிந்திருக்கவில்லையென, தானே கேட்டிருந்தாள்.

“அண்ணாவை பார்க்கணும் சொன்னாங்க அண்ணி. எதாவது பிராப்ளம் அப்படின்னா ஸ்டேஷன் போங்க, அண்ணா வீட்டில் இல்லை சொல்லிட்டேன். பெர்சனல், வெயிட் பண்ணி பார்த்துட்டு போறேன்னு சொன்னாங்க” என்று ஷிவா விளக்கம் கொடுத்தாள்.

வந்த பெண்ணின் பார்வை தேஷ்ஷின் மீது தான் இருந்தது. அவள் வேறு யாரையும் பார்க்கவில்லை. தேஷ் இமையாளின் தோளிலே உறங்கியிருந்தான்.

அப்பெண்ணின் பார்வை தேஷ் மீதே இருக்க, இமையாளுக்கு மனதில் நெருடல்.

“உன் ரூமில் படுக்க வை ஷிவா. நீயும் அவனோடவே இரு” என்று தேஷ்ஷை ஷிவாவிடம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

“யாரும்மா நீங்க? எதாவது சொன்னாதான் எங்களுக்குத் தெரியும்?” என்ற வேங்கடம், அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தார்.

“நான் ருதுவோட அக்கா ரூபிணி.”

அவள் சொல்லியதும், ‘கடந்த காலத்தில் அப்படி பேசிச் சென்றவள், இன்று எதற்கு தம்பி என்று உறவுமுறை சொல்லிக்கொண்டு வந்திருக்கிறாள்?’ என ஒரு நொடி அவளை சுளிப்பாக நினைத்தனர் தான். அடுத்த கணமே ருதுவின் உடன் பிறந்தவள் என்ற கண்ணோட்டத்தில் இன்முகமாகவே வரவேற்றனர்.

“உங்களை முன்னபின்ன பார்த்தது இல்லையே அதான் அடையாளம் தெரியல அண்ணி” என்று இமையாள் தான் சூழலை சகஜமாக்கியிருந்தாள்.

இமையாளுக்கு ரூபிணி தேஷ்ஷை ஏன் குறுகுறுவென பார்த்தாள் என்று தற்போது விளங்கியது.

“ஷிவா ஏதும் சாப்பிட கொடுத்தாளாம்மா?”, அம்பிகா.

“இருக்கட்டுங்க. பரவாயில்லை! ருது எப்போ வருவான்?”

“இப்போதான் ஸ்டேஷன் போனான். எப்போ வருவான் தெரியலையே!” என்றார் வேங்கடம்.

“ஹோ,” என்ற ரூபிணியின் பார்வை இமையாளின் மீது அழுத்தமாக நிலைத்தது.

“ருதுவோட மனைவி.”

“கல்யாணம் ஆகிடுச்சா?”

அம்பிகா சொல்லிட, ரூபிணி சற்று அதிர்வாகத்தான் கேட்டிருந்தாள்.

கைலாஷ்ஷின் வழக்கில் ருது பிரபலமாகியிருக்க, எங்கு சென்றானென்றே தெரியாத ருதுவின் நினைவு வந்தது அப்போதுதான். தம்பி என்கிற பாசமா என்றால்? அவள் மட்டுமே அறிந்தது.

ரூபிணிக்கு சிறைச்சாலை சென்று தந்தையை பார்க்கும் எண்ணமில்லை. சென்று பார்ப்பதால் தனக்கு பிரச்சினை வருமோ என்று சுயநலமாகத்தான் அப்போதும் எண்ணினாள்.

அவளுக்கு உறவே வேண்டாமென பேசிச்சென்ற பின்னர் தன் குடும்பத்தில் என்ன நடந்ததென்றெல்லாம் தெரியாது.

துளசி இறந்துவிட்டார் என்பதே, ஓராண்டுக்கு பின்னர், கைலாஷ்ஷை பணத்திற்காக நேரில் சந்தித்த போதுதான் தெரியும்.

அப்போதும் கைலாஷ் மகளின் தேவைக்காக பணம் கொடுத்து அனுப்பினாரே தவிர, முந்தைய நிகழ்வு பற்றி எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. அவளும் கேட்டுக்கொள்ளவில்லை. ருது எங்கிருக்கிறான் என்று கூட கேட்கவில்லை அவள்.

அப்படிப்பட்டவள் இன்று ருதுவை தேடி வந்திருக்கும் காரணம் தெரிந்தால் அவனின் முடிவு என்னவாக இருக்குமோ?

“எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுறீங்க? கல்யாணம் ஆகிருக்கக்கூடாது நினைச்சீங்களா?” இமையாளின் கூர் கேள்வியில் ரூபிணியிடம் தடுமாற்றம்.

“அப்ப… அப்படிலாம் இல்லை. எனக்குத் தெரியாதே! சோ, சர்ப்ரைஸ்” என்றாள்.

அம்பிகாவும், இமையாளும் ஒருவரையொருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.

ரூபிணி, ருது காவலர்கள் குடியிருப்பில் தான் தங்கியிருக்கிறான் என்பது அறிந்து, அவனது வீடு எதென விசாரித்து இங்கு வர, கதவினை திறந்ததோ ஷிவா.

அப்பெண் யாரென்று தெரியாவிட்டாலும், “ருது?” என்று ரூபிணி கேள்வியாக இழுத்திட… ஷிவா “அண்ணா” என, குறித்து பேசியதில்… ருதுவிற்கு தெரிந்தவர்களோ என்று தான் வீட்டிற்குள் வந்திருந்தாள்.

ஆனால் வீட்டில் மாட்டியிருந்த புகைப்படங்களும், தற்போது கண் முன்னே நிற்பவர்களும் வேறு கதையை உணர்த்திட வாய்விட்டே கேட்டாள்.

“இவங்க உன்னோட அப்பா, அம்மாவா?”, ரூபிணி.

“என் புருஷனோட அப்பா, அம்மா அண்ணி. நீங்க ஏன் ஒரு படபடப்பிலே இருக்கீங்க. ரிலாக்ஸ்டா இருங்க. அவரோட அக்கா நீங்க. இதுவும் உங்க வீடு தான். ஃபீல் ஃபிரி” என்ற இமையாளின் பேச்சு சாதாரணமாக இருந்தாலும், ரூபிணுக்கு தலை சுற்றியது.

கண்களை மூடி திறந்த ரூபிணி, ‘அவன் வாழ்க்கையில் என்ன வேணா நடந்திருக்கட்டும். வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பிட்டே இரு ரூபி’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

“அவங்களை இப்போவே பார்க்கணுமா நீங்க?” கேட்ட இமையாளை விலுக்கென நிமிர்ந்து பார்த்த ரூபிணி, “ம்” என மட்டும் கூறினாள்.

“அப்போ நீங்க வெயிட் பண்ணுங்க. இங்கவேன்னாலும் ஓகே தான்” என்ற இமையாள் அம்பிகாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

வேங்கடமும் அவளிடம் தான் என்ன பேச இருக்கிறதென அறைக்குள் புகுந்து கொண்டார்.

“என்னவா இருக்கும் இமையாள்?”

“தெரியலையே அத்தை. ஆனால் என்னவோ பெருசா வரும்ன்னு தோணுது” என்ற இமையாள், “அவங்க பார்வையே உண்மையா தெரியல அத்தை” என்றாள்.

“இப்போதான் ருது முகத்துல சந்தோஷமே தெரியுது. அதுக்குள்ள அதை கலைக்க இந்த விதி வேலை பார்க்குதே” எனக்கூறி வருத்தப்பட்ட அம்பிகாவைத் தேற்றி அறைக்கு அனுப்பி வைத்த இமையாள், ரூபிணிக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

ரூபிணி தயங்கிட,

“எடுத்துக்கோங்க” என்ற இமையாள் அவளின் கையிலே கொடுத்தாள்.

“கொஞ்சம் அர்ஜெண்ட். ருது எப்போ வருவான்னு…”

“நான் கால் பண்ணி பார்க்கிறேன். நீங்க குடிங்க” என்று தனது அலைபேசியுடன் தள்ளிச்சென்ற இமையாள் ருதுவிற்கு அழைத்தாள்.

வெங்கட் தான் அழைப்பை ஏற்றிருந்தான்.

“அவங்க எங்கண்ணா?”

“சார்… அண்ணாவுக்கு,” என்று வெங்கட் தடுமாறும் போதே, “டேய்… மூச்” என்று ருதுவின் குரல் கேட்டது. வெங்கட்டை சொல்லவிடாது தடுக்கிறான் என்பது புரிந்தது.

“அவங்களுக்கு என்ன?”

அதற்குள் வெங்கட்டிடமிருந்து அலைபேசியை வாங்கியிருந்தான் ருது.

“ஹேய் லேஷஸ் எனக்கென்ன? வீட்டுக்குதான் கிளம்பிட்டேன். கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்” என்று அவளை பேசவே விடாது வைத்திட்டான்.

“யூ… உன்னை யாருடா அட்டெண்ட் பண்ண சொன்னது? இப்போவே எனக்கு என்னவோன்னு கெஸ் பண்ணிட்டாள். வீட்டுக்கு நான் போறவரை தவிச்சிட்டு இருப்பாள். கிளம்பு. வண்டியை கொஞ்சம் வேகமா ஓட்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்தான் ருது.

வீடு வந்ததும்,

“நீ ஸ்டேஷன் போக வேண்டாம். வீட்டுக்கு போ” என வெங்கட்டை அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவனின் கால்கள் உள்ளே கேட்ட குரல்களில் வாயில் நிலைப்படியிலே நின்றுவிட்டது.

ஷிவா குளியலறையில் இருந்திட, தூங்கி எழுந்த தேஷ், கண்களை கசக்கிக்கொண்டே “அம்மா” என அழைத்தபடி வெளியில் வர, இமையாள் சமையலறையில் வேலையாக இருந்தாள்.

மகனின் குரல் கேட்டு இமையாள் அங்கு வருவதற்குள், ரூபிணி அவனைத் தூக்கி மடியில் வைத்திருந்தாள்.

இமையாளுக்கு தேஷ்ஷை ரூபிணியிடம் விடக்கூடாது என்றில்லை. தெரியாத பெண்ணின் பார்வை புரியாது உள்ளே அனுப்பியிருந்தாள். என்ன இருந்தாலும் தேஷ்ஷுக்கு ரூபிணி ரத்த உறவாயிற்றே!

தேஷ்ஷின் குரலில் அம்பிகா, வேங்கடம் கூட வெளியில் வந்திருந்தனர்.

ரூபிணி தேஷ்ஷை வைத்திருக்க, எதுவும் சொல்லாது இமையாள் கிச்சன் செல்ல திரும்பிட,

“நீங்க யாரு?” என்று தேஷ் ரூபிணியிடம் கேட்டான்.

ரூபிணி, “அக்…” என்று வார்த்தையை முழுமையாக முடிக்கும் முன்னர், “அத்தை… தேஷ் குட்டிக்கு அவங்க அத்தை” என்றிருந்தாள் இமையாள்.

அத்தருணம் தான் ருது வந்திருந்தான்.

ரூபிணியை பார்த்த ருது மகிழவே செய்தான். தமைக்கையல்லவா? எளிதில் பாசம் விட்டுப்போகாதே. மறந்து ஒதுக்க அவனொன்றும் ரூபிணி இல்லையே! தமக்கையை கண்ட நெகிழ்வில் அவன் உறைந்து நின்ற கணம் தான் தேஷ்ஷின் கேள்வியும், இமையாளின் பதிலும் கேட்க நேரிட்டது.

இமையாளின் பதிலில் ருது என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனாலே விவரிக்க முடியாது.

முற்றும் முழுதாய் தங்களின் பிள்ளையாகவே அவள் தேஷ்ஷை நினைக்கிறாள் என்பதற்கு இதைவிட வேறு விளக்கங்கள் வேண்டுமா என்ன?

ஓடிச்சென்று, தன்னுடைய லேஷஸை கட்டிக்கொள்ள மனம் துடித்தாலும் அவனது கால்கள் அசைய மறுத்தன. மொத்தமாய் உணர்வின் பிடியில் அவன். அவை யாவும் மொத்தமாக வடிந்தது ரூபிணி அடுத்து பேசியதில்.

“எதுக்கு மாத்தி சொல்ற நீ?” ரூபிணியிடம் கோபம். தன் பேச்சை தடுத்து இமையாள் மாற்றி சொல்வதில் வந்த கோபம். இயல்பு குணம் என்றும் அத்தனை எளிதில் மாறிவிடுமா என்ன? அதுவும் அவள் ஒருமையில் பேசியதை இமையாளின் மனம் குறிக்கவே செய்தது.

மேலும் ரூபிணி ஏதோ பேசிட வாய் திறக்க… கைக்காட்டி தடுத்த இமையாள், கிச்சன் சென்று அடுப்பினை நிறுத்திவிட்டு வந்து ஷிவாவை அழைத்தாள்.

“குட்டி எழுந்தாச்சா… அத்தை கவனிக்கலையே” என்றபடி வந்த ஷிவா, இமையாளின் முகத்திலிருக்கும் அழுத்தம் கண்டு, “என்னாச்சு அண்ணி?” எனக்கேட்டு புரியாது அம்பிகாவை ஏறிட்டாள்.

“பேபி அம்மாகிட்ட வாங்க” என்று இமையாள் அழைத்ததும், தேஷ் ரூபிணியின் மடியிலிருந்து மின்னலாய் வந்திருந்தான் இமையாளிடம்.

“நியூ கேம் விளையாடனும் கேட்டிங்களே! அம்மா வாங்கி வச்சிருக்கேன். அத்தையை கூட்டிட்டுப்போய் விளையாடுங்க” என்று மேலே தங்கள் அறையை காண்பித்தாள்.

“நான் கூப்பிடும்போது வந்தால் போதும்” என்றாள். ஷிவாவும் சரியென தலையை அசைத்தவளாக ருதுவின் அறைக்கு குழந்தையை கூட்டிச்சென்று விட்டாள்.

ஷிவா கதவினை அடைக்கும் வரை பார்த்திருந்த இமையாள், “இப்போ சொல்லுங்க?” என்றாள் ரூபிணியிடம்.

“என்ன சொல்லணும். ருது வரட்டும்… நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்” என்றாள் ரூபிணி. அவளின் முகத்தில் அத்தனை காட்டம். இவ்வளவு நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தது அவள் தானா என நினைக்கும் வகையில் இருந்தது அவளது பேச்சு தொனியும், தோற்றமும்.

“அவர் என் புருஷன். என்னத்தாண்டி தான் அவர்கிட்ட நீங்க பேசணும்” என்றாள் இமையாள்.

அம்பிகாவின் புருவம் உயர்ந்தது.

“இமயா அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன் அம்பிகா”, வேங்கடம்.

“பேச வேண்டிய இடத்தில் பேசித்தான் ஆகணுங்க” என்ற அம்பிகா, “உங்க புள்ளையே வெளிய நின்னு வேடிக்கைத்தான் பார்க்கிறான். நாமும் பார்ப்போம்” என்றார்.

“வந்துட்டானா?” என்று வெளியில் எட்டிப்பார்த்த வேங்கடம், “அவன் பொண்டாட்டியை சைட் அடிக்கிறான்” என்று நடப்பதை கவனிக்க ஆரம்பித்தார்.

“உனக்கு முன்னவே அவன் என் தம்பி.”

“அப்படியா?” என்ற இமையாள், “எனக்கிது தெரியாதே” என்றாள் கேலியாக.

“ம்ப்ச்… உன்கிட்ட எனக்கென்ன பேச்சு?” என்ற இமையாள், “அவன் எப்போ வேணா வரட்டும். எனக்கு என் தம்பி வேணும்” என்றாள் ரூபிணி. அவளின் பார்வை தேஷ் சென்ற அறையை உயர்ந்து பார்த்து விலகியது.

“அவங்க வர நேரம் தான். வந்துட்டு இருக்கன்னு சொன்னாங்க” என்றாள் இமையாள். அவளுக்கு ரூபிணி வேறெதற்கோ அடிபோடுகிறாள் என்பது தற்போது விளங்கியது.

“நான் என் தம்பின்னு சொன்னது ருதுவை இல்லை” என்ற ரூபிணி, “அந்த சின்னப்பையனை” என்றாள்.

“இப்போ நீங்க தான் உறவுமுறையை மாத்துறீங்க” என்ற இமையாள், “அவன் என் பையன். அப்படின்னா எனக்கும் ருதுவுக்கும் பிறந்த பையன். உங்க தம்பி ருதுவுக்கு அவன் மகன் அப்படின்னா, உங்களுக்கு அத்தை முறை தானே! அவன் எப்படி தம்பி ஆவான்?” என இமையாள் கேட்டதில், ‘இவள் சொல்வது உண்மையாக இருக்குமோ?’ என ரூபிணியே நினைக்கத் துவங்கியிருந்தாள்.

“இல்லை நீ பொய் சொல்ற?”

“உங்களுக்கு என்ன தோணுதோ அப்படியே வச்சிக்கோங்க. அதுக்காக என் பையனை உங்களுக்காக உறவு மாத்தி சொல்ல முடியாது” என்ற இமையாளிடம் அதீத நிதானம், அதே சமயம் அழுத்தம்.

அடுத்து என்ன பேசுவதென்று தெரியாது ரூபிணி நிற்க…

“உங்க தம்பி ருது இப்போ வந்திடுவார். அவர்கிட்டவே கேட்டுக்கோங்க” என்று சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

ருது சிறு சிரிப்போடு உள் வந்திருந்தான்.

“வாக்கா!” ருதுவின் முகம் இயல்பாய் வரவேற்றிட, தன்னை கண்டதும் அவனது முகத்தில் வரும் அதிர்வை எதிர்பார்த்து ஏமாந்துப்போனாள் ரூபிணி.

ருதுவின் குரல் கேட்டபோதும் இமையாள் உள்ளவே இருந்தாள். ரூபிணி தன்னிடம் பேசியதை அவனிடம் பேசினால், அவன் என்ன பேசுவானென்று தெரியும். அதனால் அமைதியாக சமைக்கும் வேலையை செய்தாள்.

“இமையாள் தனியா சமைக்குது. நீயும் போ அம்பிகா. இனி ருது பேசிப்பான்” என்ற வேங்கடம், அம்பிகா சமயலறைக்குள் சென்றதும் தானும் தேஷ்ஷை நோக்கி மேலே சென்றுவிட்டார்.

“எப்போ வந்த? எப்படி இருக்க?” ருது உண்மையான அக்கறையில் தான் அவள் நலன் அறிந்திட வினவினான்.

“ம்க்கும்… ரொம்ப அக்கறை இருக்க மாதிரி காட்டிக்காதே! அப்படியிருந்தால் இங்க வந்ததும் என்னை பார்க்க வந்திருப்ப?” என ரூபிணி முகத்தை வெட்டினாள்.

“நான் வரது உனக்கு பிடிக்காதே!” ருது பட்டென்று சொல்லியிருக்க, ரூபிணியின் முகம் கருத்தது.

“சரி வெட்டிப்பேச்சு வேண்டாம். நான் வந்ததை சொல்றேன்” என்ற ரூபிணி, இமையாளிடம் தயங்கியதை போலெல்லாம் ருதுவிடம் தயக்கம் காட்டவில்லை.

தான் என்ன சொன்னாலும் ருது கேட்டுக்கொள்வான் என்ற எண்ணமோ?

“என்ன சொல்லு?” என்று கேட்ட ருது, ஒரு பேச்சுக்கு கூட நீ எப்படி இருக்கன்னு அவள் கேட்காததை எண்ணி தனக்குள் விரக்தியாக சிரித்துக் கொண்டான்.

“இந்தப்பொண்ணு எதுக்கோ பெருசா அடி போடுது இமையாள்” என்றார் அம்பிகா. ருது, ரூபிணியின் பேச்சினை கவனித்து.

“அவங்க தேஷ்ஷை கேட்டு வந்திருக்காங்க அத்தை.” இமையாள் தேஷ்ஷிற்க்காக வேக வைத்த காயினை மசித்துக்கொண்டே சாதரணமாக சொல்லிட, அம்பிகா தான் அதிர்ந்துபோனார்.

இமையாள் சொல்லியதை உண்மையென காட்டியிருந்தாள் ரூபிணி.

“எனக்கு…” என்று ஆரம்பித்த ரூபிணி, “அம்மாவுக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி பிறந்த பையன் பேரென்ன?” எனக் கேட்டாள்.

“அம்மாவுக்கு நீயும், நானும் மட்டும் தானேக்கா?”

ருது அவளை தன் கேள்வியில் அசரடித்தான்.

“பையன் பிறந்ததா அப்பா சொன்னாரே? அம்மாவும் இறந்து…”

அவளை கைக்காட்டி தடுத்த ருது,

“என் அம்மா உடம்பு சரியில்லாம இறந்துட்டாங்க. அவ்வளவு தான். இப்போ நீ வந்த காரணத்தை மட்டும் சொல்லு?” அதுவரை இல்லாத இறுக்கம், ருதுவிடத்தில் சட்டென்று ஏற்பட்டிருந்தது.

“அப்போ இங்கிருக்க அந்த சின்னப்பையன் யாருடா?”

“என் பையன். என் பொண்டாட்டி தெளிவாத்தானே சொன்னாள்?” என்றான்.

“அப்போ உன் பொண்டாட்டி பேசியதை கேட்டும், நீ வேடிக்கை பார்த்திட்டு நின்னுயா?”

“அவள் சரியா பேசும்போது, நான் அமைதியா தானே இருக்கணும்.”

“இங்க பாரு ருது… அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க. ஊருக்கு முன்னாடி அது அசிங்கமாச்சே! எங்களுக்குன்னு வாரிசு இருக்கணுமே! அதான் அந்த பையனை நானே வளர்க்கலான்னு வாங்கிட்டு போக வந்தேன்” என்றாள். எவ்வித அன்பின் உணர்வுமின்றி, தன் நலன் ஒன்றை மட்டுமே எண்ணி ரூபிணி கேட்டிட…

“கெட் அவுட்…” என்று சிம்மமென கர்ஜித்த ருதுவின் கை வாயிலை நோக்கி நீண்டிருந்தது.

ரூபிணி அரண்டு விட்டாள்.

அனைவருமே என்னவோ என்று பதற்றத்தோடு அங்கு வந்துவிட்டனர்.

“என்னடா வெளியில் போக சொல்றியா?”

“ஆமா… போ.” ருதுவின் கை இன்னமும் நீண்டு இருந்தது. அப்போதுதான் அவனது கையில் கட்டினை கவனித்த இமையாள்,

“எப்படி ஆச்சு ருது?” எனக் கேட்டுக்கொண்டு அவனருகில் வர, அவளின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.

“இதை அப்புறம் பார்ப்போம்” என்று இமையாளின் கண்களை துடைத்தவன், “முதலில் இவங்களை அனுப்பிடுவோம்” என்றான்.

இமையாள் சரியென தலை அசைத்தாலும், அவளின் கண்ணில் நீர் பொங்கியது.

“ப்ளீஸ்… கிளம்பு நீ!”, ருது ரூபிணியை பார்த்துக் கூறினான்.

“எனக்கும் உரிமை இருக்கு. அப்பா அப்போ என் பையன்னு சொல்லத்தானே இருந்தார்” என்றாள் ரூபிணி.

அவர்கள் பேச்சு தேஷ் குறித்து என்று புரிந்ததுமே ஷிவா தேஷ்ஷை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றாள்.

“அப்பா…” ருதுவின் கையில் கட்டை கண்டு குழந்தை பயந்து அழுதபடி செல்ல…

“அத்தையோட விளையாடிட்டு வாங்க. அப்பாக்கு ஒண்ணுமில்லை” என முயன்று சிரித்தான் ருது.

“ருது…”, இமையாள்.

“இருடா… இதை முடிச்சிடுறேன்” என்று ரூபிணியின் பக்கம் திரும்பிய ருது,

“அவன் எங்க மகன். அதை நீ நம்பனும் அவசியம் எங்களுக்கில்லை” என்றான்.

“நான் கோர்ட்டுக்கு போவேன்”, ரூபிணி.

“தாராளமா” என்ற ருது, “எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த மகனை பொய் சொல்லி அபகரிக்க முயற்சிக்கிறாங்கன்னு உன்னை நானே தூக்கி உள்ள வைப்பேன்” என்றான்.

ருது சிறையில் வைப்பேன் என்றதும் ரூபிணி நடுங்கிவிட்டாள்.

“இனி நீ எப்பவுமே இந்த நினைப்போடு இங்க வந்திடக்கூடாது” என்ற ருது, “இல்லை… நீ வரவே வராத. எங்க அம்மாவுக்கு நான் ஒருத்தன் மட்டும் தான் பிள்ளை” என்றான்.

“ஏன்டா ருது இப்டியெல்லாம் பேசற. அவன் உன் மகனாவே இருக்கட்டும். எங்களுக்கு குழந்தைக்கு வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனால் உனக்கு இன்னொரு குழந்தை பிறக்குமே! இவனை எனக்கு கொடுத்திடேன்” என்று வராத கண்ணீரோடு, மனதில் இல்லாத மன்றாடலோடு கேட்டாள்.

“அப்பட்டமா நடிக்காத” என்ற ருதுவிற்கு முன் வந்த இமையாள், “உங்களுக்கு பிள்ளை வேணுன்னா… அப்பா அம்மா இல்லாத எத்தனையோ பிள்ளைங்க இருக்காங்க. அவங்களில் யாரையும் தத்தெடுக்கலாமே! ஒரு குழந்தைக்கு அப்பா, அம்மா கிடைக்குமே! அப்பா, அம்மா உயிரோடு இருக்கும் என் மகனை ஏன் கேட்கிறீங்க?” என்றாள். அத்தனை கோபமாக.

“உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா ருது. நான் உன் அக்காடா!” வராத கண்ணீரை புடவையில் துடைத்துக்கொண்டாள்.

“சுயநலத்தோட மொத்த உருவமாதான் என் கண்ணுக்கு தெரியுற. அம்மா இல்லைங்கிறதை கூட சாதாரண செய்திபோல சொன்ன உன்னை என் அக்காவா இந்த செக் நினைக்கத் தோணல. தயவு செய்து போயிடு. அன்னைக்கு நீ பேசியதெல்லாம் சொல்லிக்காட்ட எனக்கு ஒரு நொடி போதும்… ஆனால் தேவையில்லை. எப்படி உன்னால் இப்படி வந்து கேட்க முடியுது” என்ற ருது, “உன்னை நான் பார்க்கிறது இதுதான் கடைசியா இருக்கணும். உன் அப்பாவை மொத்தமா அழிச்ச எனக்கு உன்னை தூக்கி உள்ள வைக்கிறது அவ்வளவு பெரிய விஷயமில்லை” என்றான்.

ருது சொன்னதை செய்துவிடுவானோ என்று மனதில் ஏற்கனவே துவங்கியிருந்த பயம், ருது அதையே மீண்டும் சொல்லிடவும், ‘இங்கு வேலைக்காகாது போல. குழந்தை இல்லைன்னா அந்த மனுஷனைத்தானே ஊர் பேசும். பேசிக்கட்டும். எனக்கு என்ன வந்துச்சு? இவன்கிட்டேர்ந்து தப்பிச்சால் போதும்’ என மனதில் பல கணக்குகள் போட்ட ரூபிணி

“இன்னைக்கு இவள் பாசத்துல கரையலாம்… நாளைக்கு அவளுக்குன்னு உன் வயித்தில் ஒரு குழந்தை வரும். அப்போ தெரியும் அவனுக்கு இவள் உண்மையாவே அம்மாவா, இல்லையான்னு” என்று இமையாளின் மனதை வலிக்க வார்த்தைகளைக் கொட்டிய ரூபிணி… “அப்போ நினைப்ப அக்கா கேட்டப்போ குழந்தையை கொடுத்திருக்கலான்னு. நீ வருந்துவ. நான் வரேன்” என்று முகத்தை வெட்டிச் சென்றாள்.

“எப்பவுமே வந்திடாத!” ருதுவின் அழுத்தமான குரல் செல்லும் ரூபிணியின் முதுகை துளைத்தது.

error: Content is protected !!
Scroll to Top