தூரமே தூரமாய் 40
இரவு நேரம் பதினொன்று…
வீட்டின் அழைப்பு மணி ஓசையில் கதவு திறந்த இனியன்…
“இன்னும் முன்னவே எதிர்பார்த்தேன்” என்று ருது உள்ளே வர வழிவிட்டு நகர்ந்து நின்றான்.
“ரவுண்ட்ஸ் இருந்துச்சு. இல்லைன்னா நீ எதிர்பார்க்கிறதுக்கு முன்னவே வந்திருப்பேன்” எனக்கூறி சிரித்தான் ருது. இனியனிடமும் ஆழ்ந்த சிரிப்பு.
“ஈவ்வினிங் நாலரைக்கு தான்டா இங்கு வந்தாள்.”
“இருக்கட்டும் மச்சான். அஞ்சு மணி நேரமாச்சே!” என்று கண்ணடித்த ருது, “தூங்கியாச்சா?” எனக் கேட்டவாறு அவனுடன் மாடி ஏறினான்.
“ம்ம்ம்… டயர்ட் போல… தேஷ் கூட என் ரூமில் தான் தூங்குறான்” என்றான் இனியன்.
“ம்ம்ம்… நீ தூங்காம என்ன பண்ணிட்டு இருந்த?”
“என் ஆளோட கடலை வறுத்துட்டு இருக்கேன்” என்ற இனியனின் பாவனையில், “மச்சான்” என்று கட்டிக்கொண்டான் ருது.
பாதி படிகளில் இருவரும் கட்டிக்கொண்டு நிற்க, அழைப்பு மணி சத்தத்திலே லேசாக அசைந்த சுரேந்தர், தற்போது ருதுவின் குரலில் அறையை விட்டு வெளியில் வந்து இருவரின் நிலையை கண்டு புன்னகைத்தவராக உள்ளே சென்றுவிட்டார்.
“இன்னும் ஒரு வருஷம் எப்படா போகும்ன்னு இருக்குடா! ராட்சசி படுத்துறாள்” என்று அவஸ்தையாக புலம்பினான் இனியன்.
“நோட்டட். ஷிவாகிட்ட சொல்றேன் இரு” என்று ருது ஓட, இனியன் அவனை துரத்தினான்.
அவருக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. இரு குடும்பமும் ஒரு குடும்பமாய், அத்தனை மகிழ்வாய் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
அன்று தான் இமையாளுக்கு ஒன்பதாவது மாத சீமந்தம் குடும்பம் மற்றும் குவார்ட்டர்ஸில் முக்கியமான நபர்கள் வைத்து வீட்டிலே அதீத சந்தோஷத்தோடு நடத்தியிருந்தனர்.
அன்று மருத்துவமனையிலிருந்து இமையாளை அழைத்து வந்த ருது அவளை ஒன்றும் கேட்கவில்லை என்பதைவிட அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
அறைக்குள் வந்ததும் இமையாள் சுருண்டு படுத்துவிட்டாள்.
குறுக்கிய அவளின் கால்களை நன்றாக இழுத்துவிட்டவன், அவளின் முகம் காணாது கீழே வந்து, அம்பிகா மற்றும் வேங்கடத்திடம் இமையாள் கர்ப்பம் என்பதை தெரிவித்திட, அத்தனை ஆர்ப்பரிப்பாய் மகிழ்ந்தனர்.
அம்பிகா அப்போதே மாடியேறி வந்து அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்து தன்னுடைய மகிழ்வை வெளிப்படுத்திச் சென்றார்.
விஷயமறிந்த ஷிவா இமையாளை கட்டிக்கொண்டு துள்ளினாள்.
சிறிது நேரத்தில் இனியனும் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு வந்திருக்க, இரவு உணவு நேரம் இனிமையாக கழிந்தது.
உண்ணும் நேரம் தான் இமையாள் கீழே வந்திருந்தாள்.
இனியன் முறைத்துக்கொண்டே தான் இருந்தான்.
“ம்ப்ச்… அடி வாங்குவ நீ. விடுடா” என்று ருது தட்டிக் கொடுத்தான்.
“ஏன் இந்த முடிவு எடுத்தான்னு கேட்டியா?” இனியன் சுள்ளென்று விழுந்தான்.
“எனக்கே தெரியும். அவளா பேசட்டும்ன்னு வெயிட்டிங்” என்றான் ருது.
“ரொம்ப செல்லம் கொடுக்காத ருது…”
“உன்னைவிடவா?” என்ற ருது, “சில் மச்சான். நான் சரி பண்ணிடுறேன்” என்றான்.
“எனக்கு இன்னும் படபடன்னு இருக்குடா. அபி சொல்லும் போது, ஒரு நிமிஷம் இதயமே நின்னுப்போச்சு” என்ற இனியன், தேஷ்ஷை மடியில் வைத்து ஊட்டிக்கொண்டிருந்த தங்கையை பார்த்து, “என்னவா இருந்தாலும் சரி பண்ணிடு மச்சான். உன்கிட்ட வந்த அப்புறம் தான் அவள் முகத்தில் சிரிப்பையே பார்த்தேன்” என்றவனுக்கு தங்கை பாசத்தில் கண்கள் கலங்கியது.
இனியனை அணைத்து தேற்றிய ருது,
“உன் ஆளு உன்னை முறைக்குது” என்று ஷிவாவை காட்டினான்.
“சத்தியமா முடியலடா மச்சான். லவ் டார்ச்சர் பன்றாள்” என்ற இனியன், “ஆனால் நல்லாயிருக்கு. பிடிச்சிருக்கு” என்று தன்னவளை நோக்கினான்.
அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி வரவிருக்கும் புதுவரவின் மகிழ்வை கொண்டாடி வெளிப்படுத்தினர்.
சிறிது நேரத்தில் இனியன், சுரேந்தர், தீபா கிளம்பிவிட்டனர். செல்லும் முன்பு தீபா மகளுக்கு ஆயிரம் அறிவுரைகள் வழங்கியிருந்தார்.
“ம்மா போதும்மா… அத்தை பார்த்துப்பாங்க. உங்க ரைட்டர் கதை போட்டிருப்பாங்க. பேய் சிரிப்பு மூட்டுது, காமெடியா இருக்கு சொன்னீங்களே! நீங்க படிக்கணுமே” என்று இனியன் தான் அவரை இழுத்துக்கொண்டு சென்றிருந்தான்.
ருது வருவதற்கு முன்பு இமையாள் தேஷ்ஷை கூட்டிக்கொண்டு அறைக்கு வந்திருந்தாள்.
“நம்ம வீட்டுக்கு பேபி வரப்போகுதாம்மா?”
தேஷ் அவளின் மேல் கை போட்டு படுத்தவனாகக் கேட்டிட, ம் என்ற ஒலி அவளிடம்.
“எனக்கு கேர்ள் பேபி வாங்கி தாங்கம்மா” என்றான் சந்தோஷ புன்னகையோடு.
“தேஷ்க்கு பாய் பேபி வேண்டாமா?” எனக் கேட்டபடி வந்த ருது, மனைவியின் மற்றைய பக்கம் படுத்தான்.
“எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும். இனியா மாமாக்கு அம்மா. அப்பாவுக்கு அத்தை. அப்போ தேஷ்க்கு பாப்பா தான வரணும்” என்றவனின் ஆராய்ச்சி பதிலில் இமையாளை தாண்டி மகனை தூக்கி தன் மார்பில் போட்டு, அவனின் நெற்றியில் முத்தம் வைத்தான் ருது.
இப்படி வரப்போகும் உறவை வைத்து தேஷ்ஷின் பேச்சு நீண்டு கொண்டே செல்ல, அதையெல்லாம் புன்னகையோடு ருது கேட்டிருக்க, இமையாளுக்கு கண்ணீர் முட்டி நின்றது.
இந்த ஒரு செய்தி… தன் வீட்டாருக்கு எத்தனை சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்பதை நேரில் கண்டவளுக்கு, தான் எடுத்த முடிவு அத்தனை வலி கொடுத்தது தற்போது.
பேசிக்கொண்டே தேஷ் தூங்கிட, மார்பிலிருந்து இறக்கி படுக்க வைத்த ருதுவும் இமையாளின் முதுகை அழுத்தமாக பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.
சில நொடிகளில் இமையாள் தன்னை ஒட்டி வருவதை உணர்ந்தபோதும் ருது அசையவில்லை.
கணவனின் கையில் தலை வைத்து நெருங்கி படுத்தவள், அவனது கூரிய மீசையை விரலால் நிமிண்டியவளாக,
“சாரிப்பா” என்றாள். இறங்கிய ஒலியில்.
அடுத்த கணம் ருது தன்னவளை அத்தனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டிருந்தான்.
“சாரிடி… நான் தான் சாரி சொல்லணும். உன்னை… உன்னை அப்போவே நம்பாம போயிட்டனே. தேஷ்க்கு நீ மட்டும் தான் அம்மா” என்றவனின் கண்ணீர் அவளது கன்னத்தில் விழுந்தது.
“ருது” என்று விலகி எழுந்தவள்,
“என்னப்பா?” என்றிட,
“தேஷ்காகத்தானே இந்த முடிவை எடுத்த நீ?” என்ற ருது, “இதுக்கு நான் தானே காரணம். உன்னை தேஷ் விஷயத்தில் நம்பாம இருந்தது தானே காரணம்” என்றான்.
“இல்லை” என்றவள், “என் ருதுக்கு என்மேல எவ்ளோ நம்பிக்கை இருக்குன்னு எனக்குத் தெரியும்” என்று நிறுத்தினாள்.
ருது கேள்வியாய் ஏறிட…
“அன்னைக்கு உங்க அக்கா” என இமையாள் வார்த்தையை முடிக்காது அவனது நெஞ்சில் நெற்றி முட்டி, “நான் அப்படி இருக்கமாட்டேந்தான ருது. ஒருவேளை சின்ன விஷயத்தில் ஏதோவொரு மாற்றம் வந்துட்டாலும் என்னால தாங்கிக்க முடியாது. அதுக்காகத்தான் மனசை இறுக்கி பிடிச்சுக்கிட்டு செய்ய நினைச்சேன். எப்பவுமே தேஷ் நம்ம பையன். நம்மளோட முதல் பையன்” என்றவளின் இறுதி வார்த்தை ருதுவின் இதழ்களுக்குள் அமிழ்ந்துபோனது.
உள்ளிருக்கும் மகவின் சுவாசத்தைக் கருத்தில் கொண்டே தன்னவளை விடுவித்தான்.
“உன் அளவுக்கு என்னால் லவ் பண்ண முடியாதுடி… திணற வைக்கிற” என்றவனின் அழுகை அவளில் கரைந்து கலந்தது.
கூடலில் அனைத்தும் விலகி மனம் நிர்மலாய் அமைதி கொண்டிருக்க, இருவரும் ஒருவருள் ஒருவர் பாந்தமாய் அடங்கியிருந்தனர்.
இருவருக்குமான மௌன மொழி அவர்களின் காதலை ஆட்சி செய்த நொடிகள் அவை.
அதற்கு பின்னான ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு மட்டுமே உரித்தாக கடந்து இந்நாளை அத்தனை நிறைவாய் உணர வைத்திருந்தது.
அனைவரின் நெஞ்சமும் முழுதாய் அன்பில் மட்டுமே கழிந்து கொண்டிருந்த நாட்கள் அவை. குடும்பத்தில் அத்தனை இனிமை சேர்த்தது.
இனியனுடன் சென்று அவனது அறையில் மகனை எட்டிப்பார்த்த ருது,
“குட் நைட் மச்சான்” என மனைவியிடம் வந்தான்.
ருது உள்ளே நுழைய, படுக்கையில் உறங்காது அமர்ந்திருந்தாள் இமையாள்.
“டிசி சாருக்கு வர இவ்வளவு நேரமா? எவ்ளோ நேர(ம்)ங்க வெயிட் பண்றது?” என்றவள், அவன் அமர்ந்ததும் அவனது மடியில் தலை வைத்து படுத்தாள்.
“லேஷஸ் ருதுவை தேடினீங்களா?”
“நீங்க தேடலையா?” என்றவள், “வருவீங்கன்னு தெரியும். அதான் வெயிட் பண்ணேன்” என்றாள்.
“கால் வீங்கியிருக்காடா?” அவளின் பாதத்தை ஆராய்ந்தான்.
“இல்லப்பா” என்றவள், “கட்டிக்கணும் போலிருக்கு” என்றாள்.
“எனக்கும்” என்ற ருது அவளின் அணைப்பில் கட்டுண்டவனாக தன்னுடைய சட்டை பையிலிருந்து கண்ணாடி வளையல்களை எடுத்து மனைவிக்கு அணிவித்தான்.
இரு கைகளையும் ஆட்டி, அதிலிருந்து ஒலிக்கும் சங்கீத இசையில் மகிழ்ந்தவள்,
“சூப்பரா இருக்கு ருது. இதை சந்தனம் வைக்கும்போதே போட்டு விட்டிருக்கலாமே” என்றாள்.
“இது” என்றவன் தன் பின்னந்தலையை வருடியவனாக, “நம்ம பெட்ல உடையும் உன்னோட பேங்கில் (bangle) பீஸஸ் எல்லாம் எடுத்து சேர்த்து வச்சிருந்தேன். இப்போ கடையில் கொடுத்து மெல்ட் அண்ட் மோல்ட் பண்ணிட்டேன்” என்று அவளின் நெற்றி முட்டி தன் வெட்கம் மறைத்தான்.
“ருது” என்றவள் அவனை இறுக்கி அணைத்தாள். ஒற்றை அணைப்பில் அழுத்தமான அவளின் காதல் தடம்.
கதவு தட்டும் ஓசையில் விலகிட,
இனியன் தேஷ் உடன் நின்றிருந்தான்.
“அம்மா வேணுமாம்” என்ற இனியன், “டிஸ்டர்ப் பண்ணிடலையே” என நண்பனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டு, ருதுவின் இதழ் கடித்த புன்னகையில், கண்ணடித்தவனாக திரும்பிச்சென்றான்.
“அம்மா” என்று தேஷ் இமையாளின் மடியில் படுக்க…
“தங்கத்துக்கு தூக்கம் போச்சா?” என்ற இமையாள், அவனின் நெற்றி கேசம் ஒதுக்கி முத்தம் வைத்திட,
“எனக்கு” என்று வந்து அவளின் மற்றொரு பக்க மடியில் தலை வைத்தான் ருது.
இமையாளின் ஒரு கரம் தேஷ்ஷின் கேசத்திலும், மற்றொரு கரம் ருதுவின் கேசத்திலும் வருடியபடி இருக்க, மூவரையும் இணைக்கும் புள்ளியாக அவளின் வயிற்றிலிருக்கும் மகவு.
அத்தருணம் இமையாளின் வயிற்றில் குழந்தை அசைந்து கொடுக்க, ருதுவும், தேஷ்ஷும் துள்ளி குதித்து எழுந்து மண்டியிட்டு அமர்ந்தவர்களாக இமையாளின் வயிற்றில் கை வைத்திட, மூவரின் கண்களும் மின்னியது… மனம் தொட்ட மகிழ்வில்.
அழகோவியமாய்! கவிதையாய்! நிகழும் காட்சி.
_________________________________
ஒன்றரை வருடத்திற்கு பிறகு…
அன்று காலை தான் வெகு விமர்சையாக இனியன், ஷிவன்யா திருமணம் நடைபெற்றிருந்தது.
இரு குடும்பமும் ருதுவின் வீட்டில் கூடியிருந்தனர்.
திருமணம் முடிந்த கையோடு வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றம் சென்றிருந்த ருது அப்போதுதான் வீடு வந்தான்.
அவனை கண்டதும் வெங்கட்டின் இரு வயது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த தேஷ் ஓடி வந்து கட்டிக்கொள்ள, ருதுவின் விழிகள் மனைவியைத் தேடியது.
“அம்மா குட்டிம்மாவை தூங்க வைக்கிறாங்கப்பா” என்றான். இத்தனை நாட்களில் தந்தையை கண்டு கொண்டிருந்தவனாக.
வெங்கட், ராதிகா மற்றும் கிருஷ்ணன் குடும்பத்தார் மதியம் விருந்தென அங்கு வந்திருக்க, வீடே கொண்டாட்டமாய் நிறைந்திருந்தது.
“என்னடா தனியா உட்கார்ந்திருக்க?” இனியனின் அருகில் வந்தமர்ந்த ருது, இருக்கையில் பின்னால் தளர்வாய் சாய்ந்து கண் மூடினான்.
“டயர்டா தெரியுற. கொஞ்சம் ரெஸ்ட் எடுடா. கேஸ் வேலை, என் கல்யாண வேலைன்னு ரொம்பவே அலைஞ்சிட்ட” என்றான் இனியன்.
“சந்தோஷமா இருக்கு மச்சான்” என்ற ருது இனியனின் தோளில் சாய,
“யாரது என் புருஷன் தோளில் சாயுறது” என்று இனியனுக்கான தேநீரோடு வந்தாள் ஷிவா.
“என் மச்சான். யாரை கேட்கணும்” என்ற ருது, “எனக்கு அப்புறம் தான் உனக்கு” என்றான்.
“வச்சிக்கோங்க… யார் வேண்டாம் சொன்னது” என்ற ஷிவா, இனியனின் இன்னொரு பக்கம் அமர்ந்து, “அப்பப்போ எனக்கும் கொஞ்சம் விட்டு கொடுங்க” என்றாள்.
“நான் என்ன பொம்மையா? அண்ணனும் தங்கச்சியும் கொஞ்ச கொஞ்ச நேரம் வைத்து விளையாட. ஆளை விடுங்க” என்று இனியன் எழுந்து அறைக்குள் செல்ல…
ருது வருவதற்காக காத்திருந்த வெங்கட்டும், கிருஷ்ணனும் தன் குடும்பத்துடன் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.
“மண்டபத்திலே கடைசியில் நீ ஆளில்லாம போயிட்ட… போட்டோகிராஃபரை வர சொல்லியிருக்கேன். எல்லாரும் ஒண்ணா ஒரு போட்டோ எடுக்கணும்” என்றார் வேங்கடம். ருதுவிடம்.
“சரிப்பா” என்று அதற்கு தோதாக, ருது கூடத்தில் இருக்கைகளை நகர்த்திக் கொண்டிருக்க இமையாள் அவர்களின் இளவரசி ருதிஷ்டிரா உடன் அங்கு வந்தாள்.
“குட்டிம்மா தூங்கலையா ம்மா” என்ற தேஷ், ஒரு இருக்கையில் அமர்ந்து, “அம்மா என் மடியில் உட்கார வையுங்க” என்றான்.
“சாப்டிங்களா?” ருதிஷ்டிராவை தேஷ்ஷுடம் கொடுத்த இமையாள் ருதுவிடம் விசாரித்தாள்.
“ம்ம்ம்” என்றவன், யாரும் பாராது உதடு குவித்து முத்தத்தை பறக்க விட்டான்.
“ச்சூ” என்றவள், அம்பிகா, தீபா பேசிக்கொண்டிருக்க அவர்களிடம் சென்றாள்.
சில நிமிடங்களில் புகைப்படக் காரரும் வந்துவிட, அனைவரும் தயாராக வந்து நின்றனர். இனியன் மற்றும் ஷிவாவை தவிர்த்து.
“புது ஜோடியை காணோமே!” என்ற ருது, தேஷ்ஷிடமிருந்த மகளை தூக்கிக்கொண்டு, அவனின் காதில் ஏதோ சொல்லி ஷிவாவின் அறைக்கு அனுப்பி வைத்தான்.
“என்ன சொன்னீங்க. அண்ணா பாவம்” என்று இமையாள் ருதுவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“மாமா நைட் தான் தூங்கணுமா! இப்போ நீங்க அத்தைகிட்ட பேசக்கூடாதாம், வாங்க” என்று கத்தி சொல்லியிருந்தான் தேஷ்.
அவனது குரலில் அடித்துபிடித்து வெளியில் வந்த இனியனின் அசட்டு தோற்றத்திலும், அவனின் முதுகை ஒட்டி வந்த ஷிவாவின் திருட்டு விழியிலும் அங்கே பரவி விரிந்தது சந்தோஷ அலை. அனைவரின் சிரிப்பின் வழி.
“உன் வேலை தானா?” ருதுவின் பக்கம் வந்து இனியன் கேட்டிட…
“அஃப்கோர்ஸ் மச்சான்… இப்போ ஃபோட்டோமேன் சொல்லாமலே எல்லாரும் சிரிச்சிட்டே போஸ் கொடுப்பாங்க பாரு” என்றான் ருது.
“அதுக்கு நான் தான் கிடைச்சேனாடா?” இனியன் அப்பாவியாகக் கேட்டிட, “எனக்கு நீதான மச்சான் இருக்க” என்ற ருதுவின் பாவனையில் இனியனிடமும் புன்னகை.
அனைவருக்கும் நடு நாயகமாக தேஷ், அவனது மடியில் ருதிஷ்டிரா. ஒரு பக்கம் வேங்கடம், அம்பிகா. மற்றொரு பக்கம் சுரேந்தர், தீபா. இருக்கையில் அமர்ந்திருக்க… அவர்களுக்கு பின்னால் இரண்டு ஜோடிகளும் நின்றிருந்தனர்.
பல இன்னல்களை கடந்து அன்பென்ற ஒன்றில் அடைக்கலமாகிய பாசப்பறவைகள். ஒரே காட்சியில்.
கண்கள் ஒளிரும் புன்னகையோடும், இதயம் நிறைந்த சந்தோஷத்தோடும்.
அதன் பின்னர் நேரம் ருதுவின் கலாட்டவால் விரைந்து ஓடியது.
பெரியவர்கள் தத்தம் அறைக்கு தங்கள் மக்களின் முகத்தில் நிலைத்திருக்கும் சந்தோஷ நிறைவோடு உறங்கச் சென்றிட, இனியனை அறைக்குள் அனுப்பி வைத்து…
“ஆல் தி பெஸ்ட் மச்சான்” என்று அவனிடம் முறைப்பை பெற்றுக்கொண்டு வெளியில் வந்த ருது, அலங்காரம் செய்து கொண்டிருந்த ஷிவாவிடம் வந்தான்.
“நீங்க இன்னும் போகலையா?” கேட்ட இமையாள் ஷிவாவின் தலையில் பூக்களை சூடினாள்.
ருது ஷிவாவையே பார்த்திருக்க…
“நீங்க பேசிட்டு இருங்க. நான் பால் கொண்டு வரேன்” என இமையாள் நகர்ந்தாள்.
“டார்லிங்…”
தங்கையை அணைத்துக்கொண்ட ருது,
“சந்தோஷமா இருக்கணும் டா” என அவளின் உச்சியில் முத்தம் வைத்தான்.
வேறென்ன பேசிட வேண்டுமென இருவருக்குமே தெரியவில்லை. அமைதியாக அண்ணனில் தஞ்சம் கொண்டிருந்தாள் தங்கை.
“பயமா இருக்காடா?”, ருது.
“லைட்டா… பட் அவங்ககிட்ட இல்லை” என்றாள்.
“இனியன்… என்ன சொல்ல. ஹீ இஸ் பியூர் சோல் டா. கண்டிப்பா உன்னை சந்தோஷமா வச்சிப்பான்” என்று உணர்வாய் பேசிய ருது, “அவனை நீ அலறவிடமால் பார்த்துக்கோ” என்று கேலியில் முடித்தான்.
“அண்ணா” என்று இடையில் கை குற்றி முறைத்தவள்,
பால் தம்ளரோடு வந்த இமையாளிடம்,
“அண்ணாவை எப்படி அண்ணி சமாளிக்கிறீங்க” என்றாள்.
இமையாளிடம் இதழ் விரிந்தது.
“பசங்க தனியா தூங்கிட்டு இருக்காங்க. மேல போங்க” என ருதுவை விரட்டியவள், “சூடா இருக்கு ஷிவா. கொஞ்சம் ஆறியதும் குடிங்க” என்று அவளின் கையில் பால் தம்ளரை கொடுத்து, அணைத்து அனுப்பி வைத்தாள்.
என்னதான் நேசிப்பவனாக, அவனைப்பற்றி அனைத்தும் தெரிந்திருந்தாலும் அன்றைய நாளுக்கான படபடப்பு ஷிவாவிடம் இருக்கத்தான் செய்தது.
ஷிவா மெல்ல அறைக்குள் நுழைய, பின்னிருந்து கதவினை அடைத்து, அவளையும் அணைத்திருந்தான் இனியன்.
“ச்சூ… விடுங்க. கையில் பால் சூடா இருக்கு” என்று ஷிவா விலக முற்பட…
“விடுறதுக்கா கட்டியிருக்கேன்” என்று அவளது காதில் ரகசியம் உரைத்தவன், “அச்சோ…” என்றவளின் சிணுங்களில் தன்னவளை தன்னகத்தே மொத்தமாக கொள்ளையிடத் துவங்கியிருந்தான்.
இமையாள் அறைக்குள் வரும்போது ருது இருள் வானை வெறித்தபடி மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
“படுக்கல” எனக் கேட்டவள், தங்கையை அணையிட்டவாறு படுத்திருந்த தேஷ்ஷின் மீது ருதிஷ்டிராவின் கால் இருக்க… சில கணங்கள் பிள்ளைகளை ரசித்திருந்தவளாக கணவனிடம் சென்றாள்.
ருதுவின் அருகில் சென்ற இமையாள் அவனின் புஜம் கோர்த்து, அவனில் தலை சாய்த்தாள்.
“ஃபீல் கம்ப்ளீட் லேஷஸ்.” நெகிழ்வாய் ஒலித்தது ருதுவின் குரல்.
“டிசி சார் சொல்றது புரியலையே!”
“எப்படி புரிய வைக்கணும் காட்டுறேன்” என்று மனைவியை கைகளில் ஏந்தியவன், தன் மார்பில் உரசும் அவளின் முகத்தை ரசித்தவனாக நெற்றி முட்டி…
“லவ் யூ டி பொண்டாட்டி” என கத்தினான். இருளை கிழித்து ஒலித்த ருதுவின் குரல் இமையாளின் இதழ்களுக்குள் அமிழ்ந்தது.
ருத்விக் எப்போதும் இமையாளில் அடக்கம் தான்.
எங்கோ முடிவுர இருந்த ருத்விக்கின் வாழ்வு, அவனது இமையாளின் காதலில் சிறகாய் விரிந்தது.
தூரமே தூரமாய் விலகி நின்றது. ருத்விக், இமையளின் தெவிட்டா நேசத்தில்.
சுபம்.