நெஞ்சோடு காதல் சேர 1

அத்தியாயம் 1 :

முன் எப்போதும்
உணர்ந்திடாத… இன்ப,
அவஸ்தையான உணர்விது.
நித்தமும்,
கொன்று புதைக்கும்
சுகமான வலியிது.
கண்ணெதிரே தோன்றி
இன்ப உணர்வினையும்,
சுக வலியையும்,
ஒருங்கே அளித்தவள்…
என் தேடலில்
நிறைந்திட்ட
ஏந்திழையின்
காதல்(கை) சேர,
நெஞ்சோடு
மூச்சு முட்டுதே!

***

ரயில்வே நிலையம். நேரம் இரவு பதினொன்றை கடந்து சில நிமிடங்கள் ஆகின்றன. எழும்பூரிலிருந்து கொடைக்கானல் நோக்கி புறப்படத் தயாராக நின்றது நீண்ட தொடர் வண்டி.

அதேநேரம்,

“கொடைக்கானலிலிருந்து புறப்பட்ட வண்டி, இன்னும் சற்று நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் தடம் எண் ஐந்தில் வந்தடையும்” என்ற குரல் ஒலிபெருக்கியில் அவ்விடத்தை நிறைத்தது.

அறிவிப்பு ஒலிக்கவும் ஆறடி உயரத்தில், கலைந்த கேசத்திலும் கம்பீரமானத் தோற்றத்தில் காக்கி உடையணிந்து மீசையை முறுக்கியவாறு விறைப்பாக ஒருவன் அங்கே வரவும் சரியாக இருந்தது.

‘சற்று நேரமென்பது சில நிமிடங்களாகலாம்’ என்று கருதியவன், நடைபாதையில் சிமெண்ட்டினால் கட்டப்பட்டிருந்த நீள் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அந்நேரம் அவனின் அலைபேசி ஒலித்தது.

எதிர்முனையில் என்ன கேட்கப்பட்டதோ, “இன்னும் வரவில்லை, வந்ததும் அழைத்து வருகிறேன்” எனக்கூறி வைத்திவிட்டான்.

அவனின் கண்கள் ரயில் நிலையத்தையே அலசியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசிலர் நின்றிருந்தனர்.

போலீஸ் மூளையல்லவா, அனைத்தையும் அதே கோணத்திலேயே ஆராய்ந்தது.

கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்தவனின் கவனத்தை ஈர்த்தன, அவனுக்கு முன்பு புறப்படத் தயாராக இருந்த ரயிலில் கத்தி கலாட்டா செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவிகள்.

ஒரு பெட்டியினிலே இருபதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் ஒருத்தருக்கு மேல் ஒருத்தர் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து கத்தி கூச்சலிட்டபடி இருந்தனர். வண்டி கிளம்புவதற்கு முன்பே ஆட்டமும் பாட்டமும் தூள் பறந்தது.

“எல்லோரும் அவரவர் இடத்தில் சென்று அமருங்கள் இன்னும் இரண்டு நிமிடத்தில் வண்டி புறப்பட்டுவிடும்” என்று நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர் தன்னுடைய காதுகளை பொத்தியபடி அப்பெண்களிடம் கத்திக் கொண்டிருக்க, அதனை யாரும் சட்டை செய்யாது வருவோர் போவோரை கலாய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பெண்மணி அவர்களின் ஆசிரியராக இருக்க வேண்டும். இவர்கள் சென்னைக்கு சுற்றுலா வந்திருக்கும், கொடைக்கானலைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என பார்த்ததும் அவனுக்கு புரிந்தது.

தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை நினைத்து மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

அந்நேரம் நடைமேடை கடையில் நொறுக்குத் தீனிகளை கைகொள்ளாது வாங்கிக் கொண்டு வந்த இளம் பெண்ணொருத்தி சன்னல் வழியாக அவற்றினை தனது தோழிகளிடம் கொடுத்துவிட்டு “வேறெதாவது வேண்டுமா?” என்றுக் கேட்க யாரின் கவனமும் அவளிடத்தில் இல்லை. எல்லோரின் பார்வையும் அவளுக்கு பின்னால் இருக்கையில் தோரணையாக அமர்ந்திருந்த அவன் மீதே இருந்தது.

காக்கி உடையில் இருந்தபோதும், அவனொரு காவல்துறை அதிகாரி என்பதையும் மறந்தும், அவனின் தோற்றத்தில் லயித்து கண்களவு செய்து கொண்டிருந்தனர். தன்னுடைய தோழிகளின் வெளிப்படையான சைட்டில் சலித்தவளாக தலையில் தட்டிக்கொண்டாள்.

அவனின் கவனத்தை தங்கள் புறம் திருப்புவதற்காகவே பெண்கள் தங்களின் சத்தத்தைஅதிகரித்தனர்.

அந்தோ பாவம், அவர்களின் எண்ணம் உணர்ந்தானோ… சிறிதும் இவர்கள் பக்கம் தன் கண்ணைத் திருப்பவில்லை அவன்.

“இவன் உண்மையாவே கஞ்சி சட்டையாய் இருப்பான் போலிருக்கே.” ஒருத்தி சலித்துக்கொண்டாள்.

“இவனுக்கு சைட் அடிக்க தெரியாது போலிருக்கே.” மற்றொருத்தி கிண்டல் செய்தாள்.

“எந்த ஆணாக இருந்தாலும் சமய சந்தர்ப்பம் கிடைக்கும் வரை மட்டும்தான் நல்லவர்கள்.” ஒருத்தி தன் கருத்தைக் கூற,

“எல்லோரும் அப்படி கிடையாது, அதுவும் அவர் ஒரு போலீஸ், அவரைப்பற்றி உங்கள் கணிப்பு தவறு. அவரை பார்த்தால் நார்மல் பசங்க மாதிரி பிகேவ்  பண்ணும் ஆளாகத் தெரியவில்லை.” தனக்கு பின்னால் அமர்ந்திருந்தவனை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டுக் கூறினாள் அவள்.

“நம்ம பசங்க எல்லோரும் அப்படித்தான்… அதில் போலீசா இருந்தாலும் விதிவிலக்கில்லை.”

“சாதாரணமாக ஒரு பெண் கடந்து சென்றாலே அவளை ஏதோ அதிசய உயிரினம் போல் பார்ப்பதுதான் பசங்க ஆட்டிட்யூட்.”

பெண்கள் தங்களுக்குள் பலவாறு வாதிட்டுக்கொண்டனர்.

“ஹேய் இப்போ நமக்குள் எதற்கு வீண் ஆர்க்யூ” என்றவளை ஏற இறங்க பார்த்த பெண்கள் கூட்டம், “அந்த போலீசுக்கு இவ்வளவு சப்போர்ட் செய்யுற, அவரு மத்த பசங்க மாதிரி இல்லைன்னு ப்ஃரூப் பண்ணு” என்று அவளை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில் அவளிடம் விளையாட நினைத்தனர்.

“ஆமாம் டூர் வந்த இடத்தில் நீ மட்டும்தான் எல்லா கலாட்டாக்களிலும் எஸ்கேப் ஆகிட்ட. சோ, நீ இப்போ அந்த போலீஸ் கிட்ட போய் லவ் ப்ரொபோஸ் பண்ணு… அப்புறம் தெரியும் அவரும் எல்லா ஆண்களை போலத்தான்னு.”

மூளை வேண்டாமென்று மறுத்தாலும், அவனை மற்ற ஆண்களோடு தன்னுடைய தோழிகள் ஒப்பிட்டு பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லை. எப்படியும் அவன் தனித்தவன் என்பதை அவர்களுக்கு காட்டிட வேண்டுமென அவளின் மனம் தூண்டியது.

இருப்பினும் காதல் செய்வதை போல் பேசுவதெல்லாம் அதிகப்படியென்று அவள் தயங்கி நிற்க,

“இப்போ நீதான் வசதியா வெளியவே நிற்கிறாய்… நாங்க யாராவது வெளியில் இறங்கி வந்தோம் அந்த மேம் ஒரு ஆட்டம் ஆடிடுவாங்க, அதனால் நாங்க சொல்லுவதை நீ தான் செய்ய வேண்டும். அதோடு நீதான் அவருக்கு அவ்வளவு சப்போர்ட் பேசின.” தோழியர் கூட்டம் அவளை விடுவதாக இல்லை.

‘எப்படியும் இவளுக தன்னை விடப்போவதில்லை’ மனதில் கூறிக்கொண்டவள், “லவ் ப்ரொபோஸ் வேண்டாமே!” என்று திணறினாள்.

“பசங்களை கலாய்ப்பதற்கு இதெல்லாம் நாம் செய்வதுதானே” என்று ஒருத்தி சொல்லியதோடு சன்னல் வழியாகவே அவளின் கையில் காம்பு நீண்ட பிங்க் வர்ண டேலியா பூ ஒன்றையும், பெரிய சாக்லேட் பார் ஒன்றையும் நீட்டினாள்.

‘முன்னாடியே பிளான் பண்ணியிருப்பாலுங்களோ!’ அவளால் நினையாது இருக்க முடியவில்லை.

தோழி கொடுத்த மலரையே பார்த்து நின்றவளுக்கு அடியெடுத்து வைத்து நகரவே மனமில்லை.

“ரோஜா இல்லைடி. அதான் இந்த பூ. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.” தோழி ஒருத்தி கிண்டலாக மொழிய அவள் கொலைவெறியானாள்.

“இந்த பூ கூட நீ வாங்கினது தான், அதனால யோசிக்காம போடி!” என்ற மற்றொரு தோழியை அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.

எங்கு சென்றாலும், டேலியா மலரை பார்த்துவிட்டால் அதனை வாங்கி கையில் வைத்துக்கொள்ளாமல் விடமாட்டாள். இப்போது அந்த பழக்கத்தை நினைத்து தன்னையே திட்டிக்கொண்டாள்.

“ட்ரெயின் கிளம்பப்போகுது சீக்கிரம் போடி!” ஒரு பெண் அவளை துரிதப்படுத்தினாள்.

“நீங்க சொன்னா யாருன்னே தெரியதவங்கிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணனுமா?” என்று கேட்டவள் உள்ளே வர முயற்சி செய்ய, தோழியர் கூட்டம் அவளை விடாது மறித்து நின்றனர்.

“ஹேய் விடுங்கடி இதென்ன விளையாட்டு” என்றவள் ஒருமுறை அவனை திரும்பி பார்த்தாள். அவனின் ஒருபக்க உருவம் மட்டுமே தெரிந்தது.

“நீதானே எல்லா பசங்களும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்கன்னு சொன்ன. சோ, ப்ரூவ் பண்ணு.” எல்லோரும் ஒன்றுபோல் கூறினர்.

‘நான் வாய் வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம்.’ நினையாமல் இல்லை அவள்.

“ப்ரூவ் பண்றது என் வேலையில்லை.”

“அப்போ எதுக்கு யாருன்னே தெரியாத போலீசுக்கு சப்போர்ட் பண்ண.” பிரியாணி ஆக கிடைக்கும் ஆட்டை விடுமெண்ணம் அவர்களுக்கு இல்லை. இதுநாள் வரை எந்தவொரு கலாட்டாக்களிலும் ஈடுபடாதவளை இம்முறை வம்படியாக தானாக மாட்டியவளை விட்டுவிட மனமில்லை.

அவளுக்கு அவனிடம் சென்று சொல்வதெல்லாம் பெரியவிடயமில்லை. ஆனால் அவன், அவள் சொல்லுவதைப்போல் நல்லவனாக இருந்துவிட்டால் சரி… அப்படியில்லாது அவளின் தோழியர்கள் சொல்லியது போல் பெண்ணிடம் வழியும் ரகமாக இருந்துவிட்டால் என்ன செய்வதென்கிற யோசனையே அவளை தடை செய்தது.

“அவள் போவாடி.”

“இல்லடி போகமாட்டாள்.”

“போவாள்.”

“போகமாட்டாள். பெட் ஆயிரம் ரூபாய்.”

அவள் தனக்குள் உழன்று கொண்டிருக்க பெண்கள் அவளை வைத்து விளையாடத் துவங்கியிருந்தனர்.

‘இப்போ மட்டும் நான் போய் அவர்கிட்ட பேசல, இதை வைத்து கிண்டல், கேலி செய்தே இந்த வருடத்தை ஓட்டிவிடுவார்கள்’ என எண்ணியவளுக்கு, ‘போய் சொல்லித்தான் பார்ப்போமே!’ என்ற எண்ணம் எழுந்தது.

‘இவ்வளவு நாள் தான் பிரண்ட்ஸ் விளையாட்டில் எதிலும் ஈடுபட்டதில்லை. இம்முறை விளையாடி பார்ப்போமே! கல்லூரி வாழ்க்கையில் இந்த மாதிரி கலாட்டாக்கள் கூட இல்லையென்றால் என்ன சுவாரஸ்யம்’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள் அந்த அவனை நோக்கி செல்ல திரும்பினாள்.

“ஹேய் நில்லு.” தோழி ஒருத்தி சொல்ல நின்றாள் அவள்.

“நீ ஏதாவது கோக்குமாக்கு செய்திடுவ, நானும் உடன் வருகிறேன்” என்ற தோழி அவளுடன் இணைந்து நடந்தாள்.

அந்த தோழி அழகான இளம்வயது போலீசை அருகில் சைட்டடிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள்.

அவள் அவனை நெருங்க நெருங்க இங்கே தோழியரிடத்தில் உற்சாக சத்தம் அதிகரித்தது. எல்லோரும் கூக்குரலிட்டு ஆர்பரித்தனர்.

எல்லோரிடத்திலும் அவள் சொன்னதை செய்துவிடுவாளா என்கிற எதிர்பார்ப்பு.

ஐந்தடி தூரத்தை ஐந்து நிமிடங்களாக நீடித்தாள். அவனுக்கு அருகில் சென்றதும் கால்கள் பின்னிக்கொண்டன. நடக்க மறுத்தன. உடன் வந்திருந்த தோழி குச்சி வைத்து தள்ளாத குறையாக தள்ளிக்கொண்டு சென்றாள்.

இவர்கள் பார்க்கும்போது அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன், இப்போது அவர்களுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தான்.

அவனுக்கு மிக அருகில் நின்றவள்,

பயத்தில் வறண்ட தொண்டையை செருமி உலர்ந்த நாவினை சுழற்றி…

“எக்ஸ்க்யூஸ்மி” என்று அழைத்தாள்.

தனக்கு அருகில் ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பியவன், தனக்கு முன்னிருந்த இரு பெண்களையும் ஆராயும் பார்வையால் அளவிட்டான். போலீஸ் புத்தி. தன்னை போல் வேலை செய்தது.

தான் அழைத்ததும் திரும்பியவனின் நெஞ்சுக்கு நேராக அவளின் முகம் இருந்தது. அவளின் பார்வை தானகா அவனின் காக்கிச் சட்டையில் வலது பக்கம்  பதித்திருந்த பெயரில் நிலைத்தது.

‘வருண் கிருஷ்ணா.’ அவளின் மனதில் நொடி நேரத்தில் பதிந்து போனது. இருமுறை உச்சரித்துக் கொண்டாள். ஆனால் அந்த பெயர் அவளினுள் எவ்வித மாற்றத்தையும் தோற்றுவிக்கவில்லை.

இருவரையும் ஆராய்ந்தவன், அவர்கள் அமைதியாக இருக்கவே… அவளின் முகத்திற்கு நேராக சொடக்கிட்டான்.

சொடக்கிட்ட அவனின் விரலில் பதிந்த அவளின் பார்வை சற்று உயர்ந்து அவனின் முகம் காண ஒரு நொடி அனைத்தும் மறந்தாள். அவளின் இதயம் துடித்து அடங்கியது. அவளின் மனதை காந்தம்போல் அவனின் காபி நிற கருவிழி ஈர்த்தது. அடர் பிரவுன் நிறத்திலிருந்த அவனின் கரு(பிரவுன்)விழிகள் அவளிடத்தில் ஏதோ மாயம் செய்தன. அவனின் பெயர் செய்யாத மாற்றங்கள் பலவற்றை அவனின் விழிகள் செய்தன.

தன்னையே மெய் மறந்து பார்த்திருந்தவளை வினோதமாக ஏறிட்டவன், அவளுக்கு அருகில் நின்றிருந்த பெண்ணை கேள்வியாய் நோக்கினான்.

அப்பெண், சிலையாக நின்றிருந்த அவளின் விலாவில் குத்த சுயம் பெற்றவள், எதையும் யோசிக்காது கையிலிருந்த பூவினை அவனின் முன் நீட்டி “ஐ லவ் யூ” என்றாள்.

அடுத்த கணம் அவனின் கரம் இடியென அவளின் கன்னத்தில் இறங்கியிருந்தது. அவளின் கன்னம் தீயாய் எரிந்தது. கண்கள் கலங்கி விட்டிருந்தது. கண்ணீர் விழத் தயாராக நின்றது.

அவனின் அடியை கண்டதுமே பக்கத்திலிருந்த அவளின் தோழி ஓடிவிட்டாள். பெண்களின் சத்தம் நின்று போனது.

கன்னத்தில் கரம் வைத்து தேய்த்தவள், கண்களில் திரண்டிருந்த நீரோடு,

“சாரி… கேர்ள்ஸ்’க்குள்ள சின்ன விளையாட்டு, பிரண்ட்ஸ் சொன்னாங்க அதான்.” அவள் சொல்லி முடிக்கவில்லை மற்றொரு கன்னத்தில் மீண்டும் அறைந்திருந்தான்.

இம்முறை அவளின் தோழிகள் சிலர் அருகில் வந்தனர்.

“என்ன சார் சும்மா அடிக்குறீங்க… போலீஸுன்னா கை நீட்டுவீங்களா?” குரல் மட்டுமே வந்தது.

அக்குரலை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

அவளை நேருக்குநேர் பார்த்தான். அழும் அவளின் விழிகள் அவனை ஈர்த்தது. நொடியில் தன்னை மீட்டுக் கொண்டான்.

“அறிவிருக்கா உனக்கு? பிரண்ட்ஸ் சொன்னாங்கன்னு என்ன வேணாலும் செய்வீயா? இதே நான் வேற மாதிரி பையனா இருந்திருந்தால் என்ன செய்திருப்ப. லவ் சொல்லிட்டியேன்னு அப்படியே கையை பிடிச்சு இழுத்துட்டு போயிருந்தால்.” அவளிடம் காய்ந்தவன், மற்ற பெண்கள் புறம் திரும்பி… “எதெதுல விளையாடுவதென்று வரைமுறை இல்லை. இப்படித்தான் எல்லாரையும் கிளப்பிவிடுறீங்க… போங்க ஒழுங்கா எதுக்கு காலேஜ் போறோமோ அதை மட்டும் பாருங்க” என்றான்.

விட்டால் போதுமென்று எல்லோரும் ஓடிவிட்டனர்.

அவள் மட்டும் நின்றிருந்தாள்.

“என்ன?”

“சாரி.”

அவனிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை.

ரயில் கிளம்பும் ஒலி எழுப்பியது.

“ஹேய் நிலா வாடி… ட்ரெயின் மூவ் ஆகுது.” தோழி ஒருத்தி கத்தினாள்.

அவனை விட்டு செல்ல அவளின் மனம் மறுத்ததோ. கால்கள் மெல்ல அசைந்தன.

“உன் பெயர் நிலாவா?” அவனையும் அறியாது கேட்டிருந்தான்.

“மென்னிலா.” சொன்னவளை, அவளின் தோழி ஒருத்தி ரயிலிலிருந்து இறங்கி வந்து கை பிடித்து இழுத்துச் சென்றாள்.

அவனைத் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள். ஏதோ கை விட்டு விலகிச் செல்லும் உணர்வு அவனிடம். ஆனால் இன்னதென்று விளங்கவில்லை. யாரோ ஒரு பெண். அவ்வளவுதான் அவனின் எண்ணம். அதைத்தாண்டி மனதின் குரல் அவனுக்கு கேட்கவில்லை.

ரயில் மறையும் வரை இருவரின் பார்வையும் ஒன்றாக நிலைத்திருந்தது.

“வம்சி.”

எவ்வளவு நேரம் கடந்ததோ, யாரோ தன்னை அழைத்ததில் தான் அசைந்தான்.

அழைத்தது அவனின் அண்ணன் ‘வருண் கிருஷ்ணா.’

இவன் ‘வம்சி கிருஷ்ணா.’

“என்னடா இங்க நின்னுட்ட?”

“ஆங்… ஒன்னுமில்லை” என்றவனை கூர்ந்து பார்த்த வருண் எதோ இருக்கு என நினைத்துக் கொண்டானேத் தவிர அவனிடம் எதுவும் மேற்கொண்டு கேட்கவில்லை.

எதுவாக இருந்தாலும் வம்சி வருவது வருணிடம் தான். அதனால் அவனே சொல்லுவானென்று வருண் அமைதியாகிவிட்டான்.

“ட்ரெயின் வர டைம் ஆச்சுடா வா அந்த பிளாட்பாரமில் போய் நிற்போம்” என்ற வருண் அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக,

“ஏன்டா எத்தனை முறை சொல்வது என் ட்ரெஸ் போட்டுட்டு போகதடான்னு. அதிலிருக்கும் ஸ்டார்ஸ் வைத்து கூடவாட உன் மதிப்பு உனக்குத் தெரியல” எனக் கேட்டான்.

“நானென்னடா பண்ணட்டும், சின்ன வயதிலிருந்து உன் சட்டை போட்டு பழகிருச்சு” என்ற வம்சி “உன் சட்டை போட்டால் நான் தனியா இருக்க ஃபீலே எனக்கு இல்லைடா, நீ என்னோட இருக்க மாதிரியே இருக்கும்” என்றான். அவன் குரல் சற்று நெகிழ்ந்திருந்தது.

“இப்போ நான் உன்னோடு தான்டா இருக்கேன்” என்ற வருண், “நீ ‘டிசி’டா வம்சி (DC-deputy commissioner), நான் இன்ஸ்பெக்டர் தான். உன்னோட ட்ரெஸ்க்கும் என் ட்ரெஸ்க்கும் நிறைய வித்தியாசமிருக்கு” என்க அதனை வம்சி ஏற்றுக்கொள்ளவே இல்லை.

“என்ன பெரிய வித்தியாசம், வேற வேற ட்ரெஸ் போட்டாலும் ஒருத்தரும் ஒன்னும் கண்டுபிடிக்க முடியாது. ரெண்டும் ஒரே கலர் தானே.” சொல்லியவன் சாதாரணமாக தோளை குலுக்கிக் கொண்டான்.

வம்சிக்கு வருண் தான் எல்லாம். ஒவ்வொன்றிற்கும் அவனுக்கு வருண் வேண்டும்.

“ட்ரெஸ்ஸில் பெயர் இருக்கே வம்சி. அதுகூடவா அடையாளப்படுத்தாது.”

“இப்போ உனக்கென்ன உன் ட்ரெஸ் நான் போடக்கூடாது அவ்வளவுதானே, சரி போடலை” என்றவன் வேக எட்டுக்கள் வைத்து ஐந்தாவது பிளாட்பாரம் நோக்கி சென்றான்.

“சாரிடா வம்சி… நான் அப்படி மீன்(mean) பண்ணல, நான் சாதாரண இன்ஸ்பெக்டர், நானெப்படிடா டிசி ட்ரெஸ் போட முடியும்” என்றான்.

வம்சி வாய் திறக்கவே இல்லை. வருணுக்குத்தான் அய்யோ என்றானது.

வம்சி கோபமாக இருக்க, வருணும் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டான். இருவரும் ஆளுக்கொருபுறம் கைகட்டி நின்றனர்.

கொடைக்கானலிலிருந்து வரும் ரயில் வந்ததும், வம்சி நகர்ந்து சென்று தான் எதிர்பார்த்து காத்திருக்கும் நபரிருக்கும் பெட்டியை நோக்கிச் சென்றான்.

“வம்சி” என்ற அழைப்புடன் எண்பது வயதுமிக்க முதியவர் அவனருகில் வந்தார்.

அவர் அவனின் தாய் வழி தாத்தா திரிலோகச்சந்தர். அனைத்து வேதங்களையும், ஆன்மீக நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர். நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணிக்கக் கூடியவர். சாந்தம் தவழும் முகம். முகத்தில் எப்போதும் புன்னகை நிறைந்திருக்கும்.

“வாங்க தாத்தா” என்ற வம்சி அவரை தழுவி விலகினான்.

உர்ரென்ற முகத்தோடு வந்த வருணும் தாத்தாவை வரவேற்க, அவனையும் அணைத்து விடுவித்தார்.

“என்ன வழக்கம்போல தானே” எனக் கேட்ட தாத்தா முன்னே நடக்க, வருண் தாத்தாவின் பையினை கையில் வாங்கிக்கொண்டான்.

“வருண் சொல்வதிலும் நியாயம் இருக்கே வம்சி.”

“சும்மா நீங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க தாத்தா.” வம்சிக்கு வருண் மீதான கோபம் தாத்தாவிடம் பிரதிபலித்தது.

“நான் அவன் ட்ரெஸ் போடக்கூடாதா தாத்தா? சின்ன வயதிலிருந்து போட்டு பழக்கம். இப்போ இதுலயும் மாத்திக்க முடியல.”

“அதுவும் இதுவும் ஒன்னில்லை கண்ணா” என்ற தாத்தா ஏதோ கணித்தவராக, “இன்று இந்த செயலால் பின்னாளில் உனக்குத்தான் வலி” என்றுக் கூறி காரிலேறி அமர்ந்தார்.

வம்சி விளங்காது நின்றான். 

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top