நெஞ்சோடு காதல் சேர 10

அத்தியாயம் 10

ரத்தினம் கூண்டு புலி போல் வம்சியை நினைத்து வெறியில் அங்குமிங்கும் நடை பயின்று கொண்டிருந்தார்.

அவருக்கு வம்சியின் மீதிருக்கும் ஆத்திரத்தை களைய வம்சி இறக்க வேண்டும். வம்சியின் இறப்பு ஒன்றே அவரை சாந்தப்படுத்தும்.

“நம்ம தம்பியை கொன்னவனை போட்டு தள்ளிடட்டுமா ஐயா?”

“அவனை வேற தண்ணியில்லா காட்டுக்கு தூக்கிடுங்க!”

“அவன் நம்ம பாப்பாவை கடத்தியதுக்கு நீங்க அவனை சும்மா விட்டிருக்கக் கூடாது.”

ரத்தினத்தின் அடியாட்கள் அவரிடம் வாங்கும் பணத்திற்காக குரைத்தனர்.

தன்னுடைய நடையை நிறுத்தியவர்,

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது மகனின் புகைப்படைத்தை பார்த்தவாறு அமர்ந்துவிட்டார்.

அந்நேரம் ரித்திகா மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே வந்து கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் தூக்கி போட்டு உடைத்தாள்.

அவ்விடமே கண்ணாடி துண்டுகளாக சிதறி அவளின் பிம்பமே அனைத்திலும் தெரிந்தது.

தன்னுடைய நிழல் பிம்பங்கள் யாவும் தன்னை கேலி செய்வதாக நினைத்தவள் மீண்டும் வெறி கொண்டவளாக பொருட்களை விசிறியடித்தாள்.

“நான்தான் சொன்னனே உன் திட்டமெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு” என்று சொல்லியவாறே மெல்ல எழுந்து மகளின் அருகில் வந்தார் ரத்தினம்.

ரித்திகா தரையில் அமர்ந்து சிதறி கிடந்த கண்ணாடி சில்லுகளில் தன் உள்ளங்கையை வைத்து அழுத்தி அழுத்தி எடுக்க. ரத்தினம் பதறியவராக மகளின் கைகளை பிடித்துக் கொண்டார்.

“ரித்து என்னமா பண்ற… அய்யோ ரத்தம் வருதே!” மெடிக்கல் கிட்டை எடுத்து வர ரத்தினம் நகர,

“நில்லுங்கப்பா… எனக்கு இந்த வலி வேண்டும்… நான் அனுபவிக்குற இந்த வேதனை தான் அந்த வம்சி கிருஷ்ணா மேல் எனக்கிருக்கும் கோபத்தை குறைக்காமல் பார்த்துக்கொள்ளும்.

“அதுக்காக கைக்கு மருந்து போடாமல்…”

“இந்த சின்ன காயத்திற்கெல்லாம் நான் செத்திடமாட்டேன்” என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

“சின்ன வயதிலிருந்தே எனக்கு நீங்க செய்யுற தொழில் எதுவுமே சுத்தமா பிடிக்காது. உங்களை நினைத்து அம்மா தினமும் அழுவாங்க. அதை பார்த்து வளர்ந்ததால் எனக்கு உங்களை எப்படியாவது மாத்தனும் தோணுச்சு. அம்மா இறக்கும் வரை அதை என்னால் செய்ய முடியவில்லை. கடைசி வரை அவங்க சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. சாகும்போதும் நீங்க திருந்தனும் அதை நான் தான் செய்யணும் கேட்டுகிட்டாங்க. அத்துக்காகத்தான் அந்த வம்சிக்கு நான் உதவி செய்தேன்.

ஆனால், அவன் என் அண்ணனையே கொன்னுட்டு… அதை விபத்தாக மாற்றி இருக்கின்றான்.

என் அண்ணனை கொன்னவனை பழிவாங்கத்தான்… அவனை எப்படி நெருங்கலாம் என்று முடிவு செய்யவே அந்த வம்சியை பற்றி மறைமுகமாக தகவல் சேகரித்தேன்.

வீட்டில் அவனுக்கு அவ்வளவு மதிப்பில்லை. அவனுடைய அப்பாவே அவனை வேண்டாத பிள்ளையாகத்தான் நினைக்கின்றார்.

அவனை பழிவாங்க நான் அவனோடவே இருக்கணும் அதுக்குத்தான் காதலை கையில் எடுத்தேன். அவன் என்னையே மறுத்துட்டான்.

இனி அவனை சும்மா விடமாட்டேன்.”

“என்னம்மா பண்ணுவது. அவனை வேறெங்காவது மாற்றி அனுப்பிவிடவா?”

“இறப்பின் வலியை அவன் உணர வேண்டுமென்றால் அவன் என் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும். அவனை வேறு ஊருக்கு மாற்றினால் என் அண்ணன் வந்திடுவானா? இந்த இரண்டு மணிநேரம் கம்பிகளுக்கு பின்னால் இருந்தது இல்லாமல் அகிவிடுமா?” ரித்திகாவின் குரலில் அவ்வளவு வெறி.

“அவனுக்கு வலிக்கணும். அதற்கு அவனுக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு எதாவது ஆகணும்.” குரூரமாக நினைத்தாள்.

“நீ சொல்லுறது புரியலையே ரித்தும்மா!” ரத்தினம் மகளிடம் சந்தேகமாகக் கேட்டார்.

“இப்போ உங்க பையன் இறந்தது உங்களுக்குத் தானே வலி. அதேபோல் என் அண்ணன் இறந்தது எனக்குத்தானே வலி.”

“புரியுது. அவன் குடும்பத்தையே போட்டு தள்ளிடுறேன்.” ரத்தினம் வேகமாகக் கூறினார். அவர் அவ்வாறு கூறியதும் அருகில் நின்றிருந்த தடியர்களும் தங்களின் விசுவாசத்தைக் காட்ட நான் செய்கிறேனென்று குதித்தனர்.

“எல்லோரையும் ஒண்ணா போட்டுட்டா ஒரே நேரத்தில் எல்லாரையும் நினைத்து வருந்தி சில நாட்களில் சரியாகிடுவான். அப்படி அவனை சாதாரணமாக விடக் கூடாது.

அவன் தெளிய தெளிய ஒவ்வொருத்தரா போடணும்.

அவனுக்கு வலிக்கச் செய்துகொண்டே இருக்கணும்” எனக் கூறிய ரித்திகா, “முதலில் அவனிலிருந்தே ஆரமிப்போம்.”

மகளின் பேச்சினை ஆதரித்த ரத்தினம் “அவனுக்கு சும்மா பயம் மட்டும் காட்டிட்டு வாங்கடா… நான் கொடுக்குற வலியை அனுபவிக்க அவன் உயிர் ரொம்ப முக்கியம். அந்த உயிருக்கு எந்த சேதரமும் ஆகக் கூடாது” என்றுக் கூறி தன் ஆட்களை அனுப்பி வைத்தார். 

“நாம் கொடுக்கும் வலியை அவன் வாழ்நாள் முழுக்க அனுபவிக்க வேண்டும்.”

ஆங்காரமாகக் கூறியவள், தன் கையில் வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாது அங்கிருந்து சென்று தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

மகளின் ஆவேசம் கண்டு ரத்தினமே ஆடி போய்விட்டார்.

*****

மருத்துவமனை…

தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் ஓர் அறையின் முன் வம்சியின் மொத்த குடும்பமும் வீற்றிருந்தது.

திரிலோகர் தன் கை தடியில் இரு கையையும் பதித்தவராக கலங்கிய முகத்தோடு இறுகி நிமிர்ந்து அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் அழகு இருக்கும் இடம் உணர்ந்து அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு, விடயம் அறிந்தது முதல் கண்ணீரை சொறிந்தபடி சேலை தலைப்பில் வாய் பொத்தி விடாது அழுது கொண்டிருக்கும் வசந்திக்கு ஆறுதல் கூற முடியாது அவரை தேற்ற இயலாது அமர்ந்திருந்தார்.

ஈஸ்வர் அறை வாயிலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தார். முகம் அப்பட்டமாக கவலையில் தோய்ந்திருந்தது. தான் வயது முதிர்ந்த ஆண் மகன் என்பதற்காகவே அவர் அழாமல் இருக்கின்றார். இல்லையெனில் தன்னுடைய ஆசை மகனை இப்படியொரு நிலையில் கண்ட பின்னர் அவர் அழாமல் இருப்பாரா! அவரின் இதயம் உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடிப்பது அவர் மட்டுமே அறிந்தது.

ஓரமாக நின்றிருந்த விக்னேஷிற்கு எதுவும் புரியா நிலை. இடது பக்கம் தோள் முழுவதும் அவனின் காக்கி உடை ரத்தத்தில் காய்ந்திருந்தது.

“விக்கி என்னப்பா நடந்தது?”

திரிலோகர் நடந்ததை தன்னுடைய ஆற்றலால் ஓர் யூகத்தின் அடிப்படையில் அறிந்திருந்ததால் ஈஸ்வர் விக்னேஷிடம் கேட்டதும் கண்களை அழுந்த மூடிக்கொண்டார். எல்லாம் அறிந்தும் நடக்கவிருக்கும் இறைவனின் சித்தத்தை தடுத்திட முடியாத வருத்தம் அவரிடத்தில்.

“ரத்தினத்தோட ஆட்கள் நினைக்கிறேன் ப்பா.” அதோடு விக்னேஷ் மேற்கொண்டு ஏதும் கூறாது நிறுத்திக் கொண்டான்.

அவனின் கண் முன்னால் தானே இந்த கொடூரம் நிகழ்ந்தது. அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நடந்ததை கூறினால் நிச்சயம் ஈஸ்வரின் கோபம் வம்சியின் மீது பன்மடங்காகும் என்பதை அறிந்தே சொல்லாது விட்டான்.

இருப்பினும், ரத்தினம் என்ற பெயர் ஒன்றே எதற்காக வருணுக்கு இந்த நிலையென்பதை ஈஸ்வருக்கு உணர்த்தியிருந்தது.

தன்னுடைய உயர் அதிகாரியுடன் அவசர கூட்டத்தில் இருந்ததால் வம்சிக்கு வருணுக்கு நிகழ்ந்த விபத்து பற்றி ஒன்றும் தெரியவில்லை.

கூட்டம் முடிந்து வெளியில் வந்த வம்சி தன்னுடைய அலைபேசியை உயிர்ப்பிக்க, அதில் வருணிடமிருந்து ஏகப்பட்ட தவறிய அழைப்புகள் பதிவாகியிருந்தன. அதோடு விக்னேஷிடமிருந்தும்.

முதலில் வருணுக்கு அழைக்க பதிலில்லை. இருப்பினும் மூன்று நான்கு முறைக்கு மேல் முயற்சித்தவன் விக்னேஷிற்கு அழைக்க அவனும் இரண்டு அழைப்புகளுக்கு பின்னரே எடுத்திருந்தான்.

“வம்சி…” அடுத்து சொல்ல முடியாது கலங்கி நின்றான் விக்னேஷ்.

“விக்கி எனி பிரோப்ளேம்?”

“நீ *** ஹாஸ்பிட்டல் வாடா!” மருத்துவமனையின் பெயரை சொல்லிய விக்னேஷ் காரணம் சொல்லாது வம்சியை அங்கு வரக்கூறி, வைத்து விட்டான். அதற்குமேல் அவனிடம் சொல்ல முடியாதென்று நினைத்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் வம்சி ஆட்டோவில் வந்து இறங்கினான்.

மருத்துவமனையின் உள்ளே செல்லும் வரையிலும் விக்னேஷின் வீட்டில் தான் யாருக்கோ ஏதோவென்று நினைத்திருந்தான்.

ஆனால் இங்கு வந்து பார்த்தால் வருணைத் தவிர அவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்க வருணுக்குத்தான் ஏதோவென்று நொடியில் யூகித்துவிட்டான். காவல் துறையில் உயர் பதவி வகிப்பவனாயிற்றே. இதைக்கூட வினாடியில் கணிக்க முடியாதா என்ன?

“விக்கி.”

தன் முதுகில் வம்சியின் தொடுகையை உணர்ந்த விக்னேஷ்… அதுவரை தான் திடமாக நின்றதே பெரியதென்று எண்ணி, வம்சியை இறுக்கியவாறே கதறி விட்டான்.

“வருண் உன் வண்டியில் போனதால் நீயென்று நினைத்து…” அதற்கு மேல் சொல்ல முடியாத விக்கி,

“நான் எவ்வளவோ முயற்சித்தேன்… ஆனால் என்னை சாலை கம்பத்தில் கட்டிபோட்டுவிட்டு… நம்ம வருணை, நீயில்லை என்று தெரிந்த பின்னரும் விடவில்லைடா.”

விக்னேஷ் சொல்லியது ஈஸ்வருக்கு கேட்கவில்லை என்றபோதும் அவருக்கு நடந்ததில் யூகமிருந்தது.

வருண் சிகிச்சை பெறும் அறையின் கதவினிலே கண் பதித்து அமர்ந்திருந்த ஈஸ்வர் வம்சி வந்ததையும், விக்கி பேசியதையும் கவனிக்கவில்லை.

சிகிச்சை முடிந்து வெளியில் வந்த மருத்துவர், நிலைகுலைந்திருந்த அனைவரையும் ஒருமுறை வருத்தமாக ஏறிட்ட போதும்… இதுபோன்று பலமுறை பார்த்திருப்பதால் தன்னை நொடியில் மீட்டு,

“ரொம்ப க்ரிடிக்கள் ஸ்டேஜ் தான், சிகிச்சை கொடுத்திருக்கின்றோம்… கை மற்றும் காலில் பிராக்ச்சர். மேலும் அவர் ரொம்ப பயந்திருக்கிறார் அத்தோடு அதிர்ச்சி வேறு, அதனால் இதயத் துடிப்பின் அளவு ரொம்ப குறைவாக உள்ளது. மேலும் குறைந்தால் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு மருத்துவர் நகர்ந்திட, அப்போதுதான் அங்கு நின்றிருந்த வம்சியை கண்ட ஈஸ்வர் பொங்கிவிட்டார்.

“இப்போ நிம்மதியாடா உனக்கு. பாருடா பாரு நல்லா பாரு என் பிள்ளை எப்படி கிடக்கிறான் பாரு.

நீ கெத்து காட்ட பெரிய பெரிய ஆளுங்களோடு மோதுவ, அதுக்கு என் பிள்ளை பலிகடா ஆவதா?

உன்னால் எப்பவும் எங்களுக்கு கஷ்டம் தான்,

அந்த ரத்தினத்துகிட்ட மோதின அன்னைக்கே உன்னை வீட்டைவிட்டு துரத்தியிருக்கணும்.

எல்லாம் உன்னால் தான். நீ என் பிள்ளையோடு இருக்கும் வரை அவனுக்கு ஆபத்துதான்.

எங்க குடும்பத்தை அழிக்காமல் விடமாட்டியா? என் கண்ணு முன்னாடி நிக்காதே! போடா இங்கிருந்து.”

சரமாரியாக வம்சியின் தோள் இருபுறமும் கையால் அடிக்க, அனைத்து அடிகளையும் வாங்கிக்கொண்டு அசையாது நின்றானேத் தவிர அவரை தடுக்கக்கூட வம்சி முயலவில்லை.

அடித்து ஓய்ந்தவர்,

“உனக்கும் என் குடும்பத்துக்கும் இனி எவ்வித சம்மந்தமும் இல்லை. போடா முதலில் இங்கிருந்து” என்றவர் வம்சியை தீயாய் முறைத்தார்.

அங்கு நடக்கும் எதையும் உணரும் நிலையில் வசந்தி இல்லை. அவர் தன் சுயம் தொலைத்து வருணின் நலனை எண்ணி இறைவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.

‘தான் நினைத்தது நடந்துவிட்டதே! இதுதான் நடக்குமென்பது விதி எனும் பட்சத்தில் தான் என்ன செய்ய முடியும்’ என்று திரிலோகர் நடப்பதை அவதானித்தப்படி இருக்க, வம்சிக்கு ஆதரவாக பேச வாய் திறந்த அழகுவை தன் பார்வையாலே அடக்கியிருந்தார் ஈஸ்வர்.

அதையும் மீறி அழகு தன் அண்ணனிடம்,

“வம்சிக்கும் தம்மை விட்டால் யாருண்ணா இருக்கா?” என்று கேட்க, வம்சி எதுவும் பேச வேண்டாமென்று தலையசைத்து சொல்ல… தான் கேட்டதற்கு பதில் சொல்லாது நிற்பவரிடம் மேற்கொண்டு என்ன சொல்லவென்று தெரியாது அமைதியாகிவிட்டார்.

அங்கு வம்சியின் நிலையிலிருந்து யோசித்து, அவனுக்கு ஆதரவு தருவோர் யாருமில்லை.

‘வம்சி விலகியிருந்தால் தான் அவனின் அருமை ஈஸ்வருக்கு புரியும்’ என்று நினைத்த திரிலோகர் மௌனமாக இருந்தார்.

சில நிமிடங்களுக்கு பிறகு, தனுக்கு குறுக்காக வழி மறித்து நின்றிருந்த ஈஸ்வரை தாண்டி வருணை பார்க்க வம்சி செல்ல,

“உன் பார்வை பட்டாலே என் பிள்ளைக்கு எதாவது ஆகிடும்” என்றார் ஈஸ்வர்.

“நான் உங்க குடும்பத்து ஆளையோ, அல்லது உங்க பிள்ளையையோ பார்க்க போகவில்லை. என்னுடைய அண்ணனைத்தான் பார்க்க போறேன், குறுக்கே யார் வந்தாலும் வெட்டிபோட்டுடுவேன்” என்று அழுத்தமாகக் கூறிய வம்சி தன் பேச்சில் அதிர்ந்து நின்ற ஈஸ்வரை கண்டுகொள்ளாது வருணின் அறைக்குள் நுழைந்தான்.

கிழிந்த நாராக படுக்கையில் கிடந்த தன் சகோதரனை கண்டவன் முதன் முதலாக தன் கண்களில் கண்ணீரை உணர்ந்தான்.

படுக்கைக்கு அருகில் சென்றவன், வருணின் கையை எடுத்து தனது உள்ளங்கையில் வைத்து…

“அண்ணா…” என்றவன் உடைந்தே விட்டான்.

“எப்பவும் அண்ணான்னு கூப்பிட சொல்லுவியே இப்போ கூப்பிடுறேன் கேட்காம கண்மூடி இருக்கியே!

“எனக்காக வந்திடுடா. உன்னைவிட்டால் எனக்கு யாருமில்லைடா. நான் உன் தம்பி இல்லையாம். உன் அப்பா சொல்றாரு. என்னால் தான் உனக்கு இப்படி ஆகிடுச்சாம். எனக்காக எழுந்திருடா! உனக்கு எதுவுமில்லைன்னா நான் இங்கிருந்து போயிடுவேன். இங்கு யாருக்கும் நான் வேண்டாம். இனி என்னால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வேண்டாம். நான் போறேன் வருண்.”

வம்சியின் கண்ணிலிருந்து கொட்டிய இருதுளி கண்ணீர் வருணின் கைகளில் பட்டுத் தெறித்தது. அவனிடம் அசைவை உணர்ந்தான் வம்சி. வருணின் கருமணிகள் மூடிய விழிகளுக்குள் அலைப்பாய்ந்தது. வம்சியின் கைகளை இறுக பற்றியது வருணின் கரம்.

தன் சகோதரனின் நிலை உணர்ந்த வம்சி, “வருண்” என்றழைக்க

மானிட்டர் சப்தம் எழுப்பியது.

“டாக்டர்…”

வம்சியின் குரல் அதிர, விரைந்து வந்த மருத்துவர் வருணை பரிசோதித்துவிட்டு…

“இதய துடிப்பு சரியான அளவை எட்டிவிட்டது. இனி பயப்பட ஒன்றுமில்லை. மூன்று நாள் அப்சர்வேசனில் இருக்கட்டும். கை, கால் பிராக்ச்சர் மூன்று மாதத்தில் சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு செல்ல அப்போதுதான் அனைவருக்கும் மூச்சு சீரானது.

வம்சி கத்தியதில் அனைவரும் வருணை காண அறைக்குள் வந்திருக்க,

யாரிடமும் சொல்லாது வம்சி மெதுவாக வெளியேறியிருந்தான்.

வம்சிக்கு, வருணுக்கு எவ்வித ஆபத்துமில்லை என்றதே போதுமானதாக இருக்க அங்கிருந்து மட்டுமல்லாது தன் குடும்பத்திலிருந்தும் மொத்தமாக விலகி சென்றுவிட்டான்.

error: Content is protected !!
Scroll to Top