அத்தியாயம் 11
ஒரு வருடத்திற்கு பிறகு,
“என்னடா அவனை கண்டு பிடிச்சிட்டீங்களா?”
ரத்தினம் தனது அடியாட்களிடம் கத்திக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ரித்திகா அவர்களை சீற்றத்துடன் பார்த்திருந்தாள்.
“ஒரு போலீஸ்காரன் எங்க போனான்னு உங்களால் கண்டுபிடிக்க முடியல, நீங்களெல்லாம் ரவுடின்னு வெளியில் சொல்லிக்காதீங்க. ஒரு வருசமா ஒருத்தனை தேடுறீங்க.” முகத்தில் துப்பாத குறை ஒன்றுதான். அவர்களை அவ்வளவு அசிங்கமாகப் பேசினாள்.
“அவன் போலீஸ் வேலையில் இல்லையோ என்னவோ, அப்படியிருந்திருந்தால் இவ்வளவு நாளுக்கு கண்டு பிடித்திருப்போம்.” ஒருவன் தெனாவெட்டாகக் கூறினான்.
“கிழிச்சீங்க…” என்ற ரித்திகா,
“அவன் போலீஸ் வேலையில் தான்டா இருப்பான். அதுதான் அவனுடைய அடையாளம். அதை விட்டெல்லாம் இருக்கமாட்டான். அவன் கிரைம் அண்ட் அண்டர் கிரவுண்ட் போஸ்டிங்கில் இருந்தால் அவனைப்பற்றி ஒரு தகவலும் கிடைக்காது” என்றாள்.
“என்ன டாட் உங்க அரசியல் பவர் யூஸ் பண்ணியும் வேலைக்கு ஆகவில்லையா?”
“இல்லையே ரித்தும்மா… அந்த வருண் பய ஹாஸ்பிட்டலில் இருந்த அன்னைக்கு வெளியில் வரும்போது, அவன் முகத்தில் எவ்வளவு வலி தெரியுதுன்னு பாருங்க தலைவான்னு இவனுவ அனுப்பிய போட்டோவில் அவனை பார்த்தது.
அதற்கு பிறகு அவன் எங்கு போனான் தெரியலையே!
அந்த பெரிய போலீசு ஐஜி’கிட்ட எவ்வளவோ கேட்டு மிரட்டியும் பார்த்துட்டேன்.
உங்களால முடியாததா, அரசியல் பலம் இருக்கே கண்டுபிடிங்க! இல்லையா என்னால வம்சியை கண்டுபிடிக்க முடியலன்னு உங்க தோல்வியை ஒத்துக்கோங்க… இப்பவே சொல்லுறேன் சொல்லுறான். நான் என்ன செய்ய…” என்றார் ரத்தினம்.
“ச்ச…” காலை தரையில் உதைத்தவள்,
“போங்கடா போய் தேடுங்க” என தன் அடியாட்களுக்கு உத்தரவிட்டாள்.
எவ்வளவு தேடினாலும் வம்சியாக நினைத்தாலொழிய இவர்களால் அவனை அறிய முடியும்.
“அவங்க அம்மாவை போட்டுத் தள்ளினால் அவன் வருவானென்று எதிர்பார்த்து போட்டுத்தள்ள இவனுங்களை அனுப்பி வைத்தாள் அதையும் சொதப்பி வைத்து, அவன் அத்தையை ஆக்சிடெண்ட் பண்ணிட்டு வந்தானுங்க… இவனுங்களை நம்பி பிரயோஜனம் இல்லப்பா! நாம் தான் ஏதேனும் செய்ய வேண்டும்.”
ரித்திகா வம்சியின் மீதிருக்கும் பழியுணர்வு குறையாது மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு அவளின் அண்ணனை கொன்றது சிறிய கோபம் தான்… அவளின் காதலை நிராகரித்தது தான் அவளால் ஏற்க முடியவில்லை. அதற்கு பழி தீர்க்கவே இன்றளவும் வம்சியின் மீது வன்மத்தோடு அவனை தேடிக் கொண்டிருக்கிறாள்.
****
“ஆனந்தங்கா உந்தி சார்…” ஒருவன் வலியிலும் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தான்.
“மரிண்டா கட்டிகா செப்புரா.” (இன்னும் சத்தமா சொல்லுடா.)
தலை கீழாகக் கட்டி தொங்க விடப்பட்டிருந்த குற்றவாளியை தன்னுடைய வழக்கமான பாணியில் அடி வெளுத்துக் கொண்டிருந்தான் வம்சி கிருஷ்ணா.
ஆம் வம்சி இப்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பணி புரிகிறான்.
அன்று வருணுக்கு அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் இருந்தபோது, அப்படியொரு நிலையில் தனது உடன் பிறந்தவனை கண்டதும் தன்னால் தானே இப்படியென்று உள்ளுக்குள் உடைந்து போனான்.
வருண் சிறு ஊசியென்றாலும் அலறி அவ்விடத்தையே கலவர பூமி போல் மாற்றிடுவான்.
அப்படிப்பட்டவனின் உடலில் கட்டுக்களை பார்த்ததும் துடித்தான். அத்தோடு விக்னேஷ் சொல்லியதை கேட்டதும், வருணின் பயந்த முகம் கண்ணில் தோன்றி அவனை வதைத்து.
முதல் முறையாக, ‘தனது செயல்களின் விளைவு தன்னுடைய குடும்பத்தை தாக்கும்’ என்று அறிந்தான்.
‘அன்று நீ சொல்லியதைக் கேட்டிருக்க வேண்டுமோ!’ வருணிடம் மனதில் அரற்றியவன் அப்போதே ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
“நிச்சயம் காவல்துறை பணியை விட்டுக்கொடுக்க முடியாது. இந்த காக்கி உடையை போட்டுக்கொண்டு கைக்கட்டி வேடிக்கையும் பார்க்க முடியாது. என்னால் என் குடும்பத்தாருக்கும் ஒன்றும் நிகழக் கூடாது. அதற்கு நான் இங்கு இருக்கக் கூடாது. தூரம் சென்றிட வேண்டும்.”
ஈஸ்வரின் பேச்சில் வம்சியின் முடிவு உறுதியானது.
அறைக்குள் சென்று வருணை பார்த்துவிட்டு, அவனுக்கு இனி ஒன்றுமில்லை என்று அறிந்த பின்னர் ஒரு நொடியும் கடத்தாது தன்னுடைய மேலதிகாரியை சென்று சந்தித்தவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் கேரளாவிற்கு பணியிடை மாற்றம் வாங்கிக்கொண்டு சென்றான்.
அங்கு நான்கு மாதங்கள் பணிபுரிந்தவன்,
தெலுங்கானாவில் கடந்த ஆறு மாதங்களாகியும் தீர்க்க முடியாத ஒரு வழக்கு… சி.பி.ஐ’க்கு மாற்றும் தருவாயில் இருக்க, அப்படி காவல்துறையிலிருந்து CBI க்கு சென்றுவிடக் கூடாதென்று நினைத்தவர்கள்… வம்சியை அவ்வழக்கை தீர்த்து வைக்க வரவழைத்திருந்தனர்.
வந்த இரண்டே மாதத்தில் வம்சி அவ்வழக்கை முடித்திட,
“விருப்பம் இருந்தால் மீண்டும் நீங்க கேரள மாநிலத்திற்கே செல்லலாம்” என்று உயர்துறை சொல்ல…
வம்சி தன் பணியிடத்தை ஹைதராபாத்திற்கு மாற்றிக் கொண்டான். இப்போது கடந்த ஆறு மாதங்களாக இங்குதான் இருக்கின்றான்.
“ச்சால… ச்சால… ஆனந்தங்கா உந்தி சார்…”
“அடகலேதுவே!”(கேட்கவில்லை) குற்றவாளியின் பின்னால் சுள்ளென்று ஏறுமாறு லத்தியால் இழுத்து ஒரு அடி வைத்தான்.
“இன்னைக்கு இவர் பதில் வாங்காது அவனை விடப்போறதில்லை… நாமும் வீட்டுக்கு போகப்போறதில்லை.” வம்சியை பற்றி தெரிந்திருந்த தமிழ் காவலாளி குமார் வாய்விட்டு புலம்பினார்.
“ஏன்டோ செப்பு… அர்த்தம் காலேது!” (என்ன சொல்லுற புரியலையே?”
குமாருக்கு அருகில் நின்றிருந்தவர் கேட்க, அவரை தீயாய் முறைத்த குமார்…
“எனக்கு கூடத்தான் தமிழ்நாட்டுக்காரன் நான் ஏன் இங்க வந்து குப்பைக்கொட்டுறேன்னு அர்த்தம் காலேது” என்று அவருக்கும் மட்டும் கேட்கும் வகையில் கத்தினான்.
“வரலோ தெலுங்கு நேர்ச்சிகொண்டி!” (தெலுங்கு கற்றுக்கொள்) என்றவர் குமாரின் முதுகில் தட்டிகொடுத்தார்.
“நான் பேசுற தமிழ் இவருக்கு புரியலனா இவரு தானே தமிழ் கத்துக்கணும். அதை விட்டுட்டு என்னை தெலுங்கு கத்துக்க சொல்றாரு” என்று முழித்த குமார், வம்சியின் பார்வையில் வாயினை மூடிக்கொண்டான்.
அதற்குள் வம்சி அந்த குற்றவாளியை தன்னுடைய அடியால் ஒரு வழியாக்கியிருந்தான்.
“இப்போ ஸ்டேட்மெண்ட் சொல்லுவான் ரெக்கார்ட் பண்ணிக்கோங்க குமார்” என்று தமிழில் கூறியவன், குற்றவாளியை பார்த்துக் கொண்டே… “மீறு இன்கா எமி செப்பகாபோத்தே நா செய்யி மல்லி மாட்லாடுத்துண்டி” ( இப்பவும் எதுவும் சொல்லவில்லை என்றால் மீண்டும் என் கை பேசும் சொல்லுங்க) என்று சொல்லிச் சென்றான்.
வம்சி சொன்னது குமாருக்கு புரியாத போதும் குற்றவாளிக்கு நன்கு புரிந்தது. உடனடியாக குமார் கேட்பதற்கு முன்பு மடமடவென்று வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தான்.
வம்சியின் அடி அப்படி.
“என்ன குமார் வாக்குமூலம் வாங்கியாச்சா?” என்று தன் முன் வந்து நின்ற குமாரிடம் கேட்ட வம்சி தேநீரை வழக்கம்போல் ஆழ்ந்து அனுபவித்து பருகினான்.
“ம் வாங்கியாச்சு சார்” என்ற குமார் எழுத்து மற்றும் ஒலி பதிவு செய்த குற்றவாளியின் வாக்குமூலத்தை வம்சியின் முன் மேசையில் வைத்துவிட்டு செல்லாது வம்சியை பார்த்தவாறே நின்றிருந்தான்.
“என்ன குமார் டீ வேண்டுமா?” வம்சியின் குரலில் கலைந்த குமார் வேகமாக இல்லையென்று தலையசைக்க, வம்சிக்கு இதழோரம் சிறு புன்னகை. அது இமைப்பொழுதில் துடைத்து எடுத்தார் போல் மறைந்தும் இருந்தது.
“அப்புறம் என்ன குமார்?”
“நான் இங்கு வந்து ரெண்டு வருஷம் இருக்கும் சார்… இன்னும் இந்த தெலுங்கு பேச வரல, ஏன் சரியா புரியவும் புரியாது. ஆனால் நீங்க எட்டு மாதத்தில் எப்படி சார் இவ்வளவு சரளாமா பேசறீங்க?”
“நமக்கு குற்றவாளியின் உடல் மொழி கூட சில நேரம் தெரிந்திருக்க வேண்டும் குமார். அப்போதுதான் குற்றவாளி உண்மையை பேசுகிறானா அல்லது பொய் சொல்கிறானா என்று தெரியும்.
நான் தொழிலில் என்னைத் தவிர யாரையும் நம்புவதில்லை. அதனால் குற்றவாளியின் மொழி எனக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்ற எண்ணம். விருப்பமென்று கூட சொல்லலாம்.
உனக்கு, இந்த மொழி தெரிந்துகொண்டே ஆகனுமா என்கிற சலிப்பு.
அதனால் தான் என்னால் எட்டு மாதத்தில் பேச முடிந்ததை இரண்டு வருடங்களாகியும் உன்னால் பேச முடியவில்லை” என்றான்.
“நீங்க சொல்லுவதை பார்த்தால் கொலை செய்யக்கூட விருப்பம் இருக்கணும் சொல்லுவீங்க போலிருக்கே சார்” என்றுகூறி குமார் சிரித்தான்.
“எஸ் அஃப்கோர்ஸ் குமார். விருப்பமிருந்தால் தான் எதுவுமே தோணும்…” என்ற வம்சியின் மனம் ‘என் விருப்பத்தால் தான் விருப்பமற்ற இடத்தில் மறைந்திருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு நொடியில் அமைதியாகினான்.
வம்சியின் எண்ணத்தில் தன் நலன் நாடும் அனைவரும் வந்து போயினர்.
“வருண்.” ஒருமுறை சொல்லிக்கொண்டான்.
கூடவே அவனின் நிலவின் நினைவும்.
“நிலா.”
வருத்தத்தில் இருந்த அவனின் முகம் நொடியில் பிரகாசமகியது.
‘உன்னை ஒருமுறை பார்க்கணும் போலிருக்கு நிலா.’ மனதில் அவளின் தரிசனத்தை வேண்டியவன், “என்னால் தான் வருணுக்கு அன்று அந்நிலை… அது உனக்கும் வேண்டாமென்றே உன்னைப்பற்றி அறியாது அறிந்துகொள்ள விரும்பாது இருக்கின்றேன். என் வேலைக்கு நான் யாருமற்றவனாக இருப்பதுதான் நன்று” என நினைத்தவன் நெகிழ்ந்த மனதை இரும்பாக்கிக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தவன் கம்பீரமாக நடந்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.
“ரவுண்ட்ஸ் வெய்யண்டி.” ஓட்டுனரிடம் ரோந்து போக சொன்னவன் இருக்கையில் கண் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
சற்று தூரம் சென்றிருக்க ஒரு இளம்பெண் சாலையோரம் இருசக்கர வாகனத்தின் அருகில் நின்றுகொண்டு கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள்.
அவளுக்கு நேரெதிர் திசையில் இவளை பார்த்தவாறே மூன்று நான்கு ஆண்கள் தங்களுக்குள் பேசியபடி இருக்க, போலீஸ் வாகனத்தின் ஒலிகேட்டு அவர்கள் ஓடி மறைந்தனர்.
“அண்ணா பண்டி ஆகு. ஏமி ச்சூடு.”
அந்த ஆண்கள் ஓடுவதை கண்ட வம்சி வண்டியை நிறுத்த சொல்லி என்னவென்று பார்க்கக் கூறினான்.
வண்டியை நிறுத்திய ஓட்டுநர் காவலாளி சுப்பாராவ், ஓடியவர்கள் சென்ற திசையை பார்த்து அங்கு யாருமில்லை என்று அப்பெண்ணின் அருகில் வந்தார்.
“வண்டி திடீரென நின்று விட்டது சார்.”
அவள் பேசிய தமிழ் அவருக்கு புரியவில்லை. அவர் வம்சியை அழைக்க அவன் வண்டியை விட்டு இறங்கி அவர்களிடம் வந்தான்.
மிடுக்காக நடந்து வரும் வம்சியை கண்டு அப்பெண் ஆச்சர்யம் அதிர்ச்சி ஒருங்கே பெற்றாள்.
‘இது அவர் தானா? ஆமா அவரே தான். இவரை எப்படி மறக்க முடியும். இவரைத் தேடி தான் அலைந்தது கொஞ்சமா நஞ்சமா?’
தனக்குத்தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டாள்.
‘எதற்கும் பெயரை செக் செய்திடுவோம்’ என்று நினைத்தவள் அவனின் உடையை பார்க்க அவனோ காக்கி உடை தவிர்த்து வெண்ணிற டிசர்ட் அணிந்திருந்தான்.
அப்பெண்ணை பார்க்காது சுப்பாராவிடம் என்னவென்று கேட்க, அப்பெண் சொல்லுவது தனக்கு புரியவில்லை என்றவரின் பேச்சில்… சாலையின் இருமருங்கிலும் பார்வையை சுழற்றியவனாக,
“இந்நேரத்தில் இங்கு தனியாக நிற்கலாமா?” என்று வினவினான்.
சுப்பாராவிடம் சொல்லிய அதே காரணத்தை அவனிடமும் அவள் சொல்ல… இப்போதும் அவளை பார்க்காது வண்டியை மட்டும் பரிசோதித்து உயிர்ப்பித்து பார்க்க வண்டி இயங்கியது.
அந்நேரம் வம்சிக்கு அழைப்பு வர, அலைபேசியை கையிலெடுத்து பார்த்தவாறே… “பார்த்து போங்க” என்று அப்பெண்ணிடம் கூறியவன் எதிர்பக்கம் திரும்பி அலைபேசியை காதில் வைத்து பேசினான்.
இப்போதைக்கு அவன் தன்னை பார்க்க போவதில்லை என்று உணர்ந்தவள் சுப்பாராவிடம்,
வம்சியை காண்பித்து “கிருஷ்ணா” எனக்கேட்க, அவரும் அவனின் முழுப்பெயர் வம்சி கிருஷ்ணா என்பதால் ஆமென்று தலையசைத்தார்.
உண்மை அறியாது அப்பெண்ணும் மிகுந்த உற்சாகத்தோடு தன் வீடு நோக்கிச் சென்றாள்.