அத்தியாயம் 12
மென்னிலா தன் கண்களில் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்த இயலாது அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.
மனம் முழுக்க வம்சி மட்டுமே நிறைந்திருந்தான்.
இனி தன்னால் எதுவும் முடியாது என்னும் நிலையில் அவள். ஒருமுறை ராஜனிடம் சொல்லி பார்க்கலாம் என்கிற எண்ணம் கூட அவளிடம் விட்டு போயிருந்தது. அதற்கு காரணம் ரேணுகா.
இந்த ஒரு வருடத்தில் ரேணுகாவின் ஆட்டம் மென்னிலாவிடம் அதிகமாக இருந்தது. ராஜனும், ராஜராஜனும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் அவர் கேட்பதாக இல்லை.
ஒருநாள் ரேணுகாவின் செயல் எல்லை மீறியது… ராஜராஜன் அன்று தன் பொறுமையை முற்றிலும் இழந்தவராக ரேணுகாவை அடித்துவிட,
“நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன்” என்று நிலையாக நின்றுவிட்டார்.
“இந்த வயதிற்கு மேல் இதென்ன செயல்” என்று ராஜன் கடிந்துகொள்ள, வினித் தேவிகாவும் கூட அன்னையின் செயலில் முகம் சுளித்தனர்.
“எவளோ ஒருத்தி பெத்தது இங்கு நாட்டாமைத்தனம் பண்ணும், நான் சேவகம் பாக்கணுமா? என்னால் முடியாது.”
ரேணுகாவின் பேச்சில் நியாமே இல்லையென்று அங்கிருப்பவர்களுக்கு தெரிந்து தான் இருந்தது.
“இப்படி அபத்தமா பொய் சொல்லாதே ரேணு… நிலா தான் நீ சொல்லுற அத்தனை வேலையையும் மறு பேச்சின்றி செய்கிறாள். நீ அவளுக்கு தண்ணீர் கூட உன் கையால் கொடுத்தது கிடையாது.” ராஜராஜன் உண்மையைக் கூற ரேணுகா கொதித்தார்.
“அதான் நீங்கயெல்லாம் அவளை தாங்கு தாங்குன்னு தாங்குறீங்களே… இதுல நான் வேற அவளுக்கு ஊழியம் செய்யணுமோ! அவளை பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணு இங்கு இப்படி உரிமை கொண்டாட முடியலையேன்னு எனக்கு இவமேல் கோபம் தான் வருது. அப்படியே அவளை கொன்னுடலாம் தோணுது. முதல் உங்க அம்மா, இப்போ இவள்.
அப்படியென்ன இவள் உசத்தி… அம்மா இல்லை அவ்வளவுதானே!” சர்வ சாதரணமாகக் கூறினார்.
அவரின் வார்த்தைகளை கேட்க முடியாது மென்னிலா கண்ணீர் வடித்தாள். வினித் அவளின் கண்ணீரை தாங்காது தன் உடன் பிறவா சகோதரிக்கு ஆதரவாக வாய் திறந்தான்.
“அக்கா மேல் உனக்கெதற்கும்மா இவ்வளவு வன்மம்?”
“நீ பேசாதே! உங்க ரெண்டு பேரையும் விடுத்து உன் அப்பா வேறொருத்தியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார். நீயும் அவளுக்கு சப்போர்ட்.” மகனிடமும் தன் கோபத்தை காண்பித்தார்.
‘இதெல்லாம் சொல்லி திருந்தாத ஜென்மம்’ என்று நினைத்த ராஜன் அமைதியாகச் சென்று தன்னிருக்கையில் அமர்ந்து கொண்டார்.
ராஜராஜன் என்ன செய்வதென்று தவித்தார்.
உடன் இருந்தும் பல வருடங்கள் தவிக்க விட்ட மகளை விட்டுக்கொடுக்க அவரின் மனம் ஒப்பவில்லை. அதே சமயம் ரேணுகா சொல்லுவதைப்போல் தன்னுடைய பிள்ளைகளுக்கு இடையில் அவர் என்றுமே வேற்றுமை பார்த்ததில்லை.
இதுவரை மென்னிலாவிடம் காட்டிடதா அன்பை மட்டுமே இப்போது வெளிப்படுத்துகிறார். மற்ற இரு பிள்ளைகளும் அதை உணர்ந்து அவருக்கு துணை நிற்கின்றனர்.
இதில் எங்கிருந்து வேற்றுமை, உரிமை உணர்வு வந்ததென்று அவருக்கே தெரியவில்லை.
“முடிவாக என்ன சொல்கிறாய் ரேணு?”
“இனியும் என்னால் உங்களின் கொஞ்சல்களை சகித்துக்கொண்டு, இவள் இருக்கும் இடத்தில் இருக்க முடியாது.” ரேணுகா மனதிலிருப்பதை வெளிப்படையாக வெறியோடு கூறியிருந்தார்.
“ப்ளீஸ் சித்தி அப்படியெல்லாம் சொல்லாதீங்க!” மென்னிலா அப்போது தான் வாய் திறந்தாள். தன்னுடைய சித்தியிடம் அவரின் முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி மன்றாடினாள்.
ரேணுகா எதற்கும் அசைவதாக இல்லை.
“சரி சித்தி நான் வீட்டை விட்டு சென்று விடுகிறேன். நீங்க இங்க இருங்க.”
மென்னிலா அவ்வாறு சொல்லியதும் ராஜராஜன் அதிர்ந்து விட்டார்.
ரேணுகாவிற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஊற்று பெருகியது. இருப்பினும் வெளியில் காட்டிக்கொள்ளாது மேலும் தன் நாவை சுழற்றினார்.
“என்ன எனக்கு வாழ்க்கை பிச்சை போடுறீயா?”
“அய்யோ சித்தி அப்படியெல்லாம் இல்லை.”
“வேறெப்படி?”
‘இவரிடம் இதற்கு மேல் என்ன பேசுவது.’ மென்னிலா நொந்து போனாள். மனதால் மிகவும் சோர்ந்து விட்டாள்.
அப்போது ரேணுகாவின் அருகில் வந்த ராஜன்,
“மென்னிலா இங்கிருப்பது தான் உன்னுடைய பிரச்சினையா?” எனக் கேட்க, அவர் முடிக்கும் முன் “ஆமா அவள் தான். எனக்கு அவளை பிடிக்கவில்லை. நீங்க எல்லோரும் அவளிடம் உருகுவது சுத்தமாக பிடிக்கவில்லை” என்று மொத்தமாகக் உள்ளிருந்த கசடுகளைக் கொட்டிவிட்டார்.
“ரொம்ப சந்தோஷம். இப்போவாவது உண்மையை சொன்னாயே” என்ற ராஜன்,
“மென்னிலாவும் படிப்பு முடித்து ஒரு வருடமாச்சு, இவ்வளவு நாளும் ராஜராஜனுக்காகத்தான் பொறுமையாக இருந்தேன்.
இந்த வயதிற்கு மேல் நீ வீட்டைவிட்டு செல்வதெல்லாம் நன்றாக இருக்காது.
அதேபோல் ஒரு வயது பெண்ணை வெளியிலும் தங்க வைக்க முடியாது.” இறுதியை சொல்லும்போது அவரின் பார்வை மென்னிலாவின் மீது படிந்தது.
“இப்போ என்ன சொல்லவர்றீங்க?” ரேணுகா சற்றும் தன் காரத்தை குறைத்துக் கொள்ளவில்லை.
“மென்னிலாவுக்கு கல்யாணம் செய்து அவளை அவள் புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன். அதுவரையாவது கொஞ்சம் பொறுத்துக்கொள்” என்றவர் இதுதான் என் முடிவு, இனி யாரேனும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சென்றுவிட்டார்.
ரேணுகாவிற்கு அவள் சென்றுவிட்டாள் போதுமென்றிருக்க, ராஜராஜனை பார்த்து நொடித்துக் கொண்டவராக கையிலிருந்த பையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் புகுந்துக்கொண்டார்.
வினித்திற்கு தன் தாத்தா எடுத்த முடிவே சரியாக இருக்க, மென்னிலாவை அணைத்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினான்.
தேவிகா ஒருபடி மேல் சென்று அக்காவிற்கு திருமணம் என்று துள்ளி குதித்து ஆர்ப்பாட்டம் செய்தாள்.
ராஜராஜன் மகளின் தலையை ஆதுரமாக வருடிச் சென்றார்.
அங்கு யாருமே மென்னிலாவின் நிலையை கருத்தில் கொள்ளவில்லை.
ராஜன் மென்னிலாவுக்கு திருமணம் என்றதுமே விக்கித்து நின்றாள். வம்சியின் முகம் கண்ணில் வந்து வந்து போனது. அடக்கி வைத்த காதல் மேலெழும்பியது.
“எங்க கிருஷ்ணா இருக்கீங்க?” மனதோடு தவித்தாள். கண்ணில் வழியும் கண்ணீரை மறைக்க அறைக்குள் ஓடிவந்து கதவடைத்தவள் மணி பல கடந்தும் அழுகையில் கரைந்து கொண்டிருக்கிறாள்.
தன் காதலே சேர்த்து வைக்கும் என்கிற நம்பிக்கையில் வம்சி மீது கொண்ட காதலோடு வம்சிக்காகக் காத்திருந்தவள் கல்லூரி படிப்பு முடிந்த ஒரு மாதத்தில்,
“சென்னையில் தோழியின் திருமணம், தோழிகளுடன் சென்று வருகின்றேன்” என்று பொய் சொல்லிவிட்டு, வைஷூவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தாள்.
முதல் நாள், இவ்வளவு பெரிய ஊரில் அவனை எங்கு போய் தேடுவதென்று மலைத்து யோசனையோடு ஹோட்டல் அறையிலேயே பொழுது கழிந்திட… அடுத்த நாளும்,
“சென்னையிலே நிறைய போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் போல இதில் எங்கிருந்து அவரை தேட” என்ற வைஷூ “நான் ஒரு நல்ல ஐடியா சொல்றேன்… வந்ததே வந்தாச்சு பேசாமல் பீச்சு பக்கமா போய் எல்லா தலைவர்களோட சமாதியையும் பார்த்துட்டு புகாரி பிரியாணி எங்கிருக்குன்னு பார்த்து வயிறு முட்ட சாப்பிட்டு ஊருக்கு கிளம்புவோம்” என்க அவளை மொத்தி எடுத்தாள் மென்னிலா.
“நீ எதுவும் பேச வேண்டாம். எனக்கே ஒரு வழி கிடைச்சிருச்சு” என்ற மென்னிலா, வைஷூவை கூட்டிக்கொண்டு ஆட்டோ ஒன்றை பிடித்தவள் ஐஜி அலுவலகம் எங்கு என்று விசாரித்துச் சென்றாள்.
“இங்கு தான் உன்னவர் வேலை செய்கிறாரா?” ஐஜி அலுவலகம் எதற்கு வந்திருக்கிறோம் என்று அறியாது வினவினாள் வைஷூ.
“மொத்த சிட்டி போலீஸ் கண்ட்ரோலும் இங்க தானே இருக்கும். சோ, இங்கு விசாரித்தால் அவரைப்பற்றி தெரிந்துவிடும்” என்ற மென்னிலா எவ்வித அச்சமும் இன்றி உள்ளே செல்ல… வைஷூவிற்குத்தான் பயம் பிடித்தது.
‘என்ன தைரியத்தில் இவள் ஒரு போலீசை பற்றி போலீசிடமே கேட்க நினைக்கின்றாள்.’ மனதில் நினைத்த வைஷூ, தன்னை நோக்கி ஒரு காவலர் திரும்பவும், “அடியேய் நிலா நில்லுடி” என்றவளாக ஓடிச்சென்று மென்னிலாவுடன் இணைந்து நடந்தாள்.
உள்ளே சென்ற மென்னிலா காவலர் ஒருவரிடம் “ஐஜி சாரை பார்க்கணும்” என்றாள்.
“அவரை அவ்வளவு சாதாரணமாக பார்க்க முடியாதும்மா” என்றவர் என்ன நினைத்தாரோ “அவரே வெளியில் போகிறார் போய் பேசுங்க” என்று அனுப்பி வைத்தார்.
“சார்… சார்… ஐஜி சார்.”
சட்டென்று தன்னுடைய நடையை நிறுத்தியவர் “யார் நீங்கள்?” என்பதைப்போல் பார்க்க, இருவரும் தங்கள் பெயரை முறையாக அறிமுகம் செய்து கொண்டனர்.
மீண்டும் அவரிடமிருந்து “என்ன காரணம்?” என்ற பார்வையே!
“சார் வருண் கிருஷ்ணா?” மென்னிலா அடுத்து என்னவென்று கேட்காது வார்த்தைகளை நிறுத்தினாள்.
“அவரைப்பற்றி உங்களுக்கு எதுக்கு?” அவரின் குரலிலேயே வைஷூ அரண்டு விட்டாள்.
ஆனால் மென்னிலாவுக்கு அப்படி எதுவும் இல்லை போலும். சரளமாக பொய்க் கூறினாள்.
“சார் ஒரு இக்கட்டான சூழலில் அவர் என்னை காப்பாற்றினார். அதற்கு நன்றி சொல்லலாம் என்று தான்” என்றாள்.
அவளை ஆராய்ச்சியாக ஆராய்ந்த போதும் பதில் கூறினார்.
“இப்போ அவர் வேலையில் இல்லை.”
எப்படி வருணின் முகவரியை கேட்பதென்று மென்னிலா யோசிக்க,
“ஒரு காவலதிகாரியை பற்றிய தகவல் தெரியாதவர்களிடம் சொல்ல முடியாது” என்று அழுத்தமாகக் கூறியவர் தன்னுடைய வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார்.
அதன் பின்னர் அங்கிருக்கும் மற்ற காவலர்களிடம் கேட்டும் ஒருவரும் சொல்ல மறுத்துவிட்டனர்.
ஏமாற்றத்தோடு ஊர் வந்து சேர்ந்தவள் அதன் பின்னர் வம்சியை தேட முயற்சிக்கவே இல்லை.
இன்றளவும் தன் முயற்சிக்கு பலனில்லாமல் போனதை எண்ணி வருத்தம் அடைந்தாள்.
“கிருஷ்ணா.” உயிர் உருகும் குரலில் அழைத்தவள் நாளை தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாது வம்சியின் நினைவோடு உறங்கிப்போனாள்.
***
ஹைதராபாத்தில் வம்சியை கண்ட வைஷூ தன் வீட்டிற்கு வந்து நேரத்தைப் பார்க்க, அது நள்ளிரவு பனிரெண்டு என்று காட்டியது.
‘இந்நேரம் நிலா உறங்கியிருப்பாளே’ என நினைத்த வைஷூ “காலை அழைத்து சொல்லிக்கொள்ளலாம்” என்று விட்டுவிட்டாள்.
“நாளைக்கு நான் சொன்னதும் மேடம் துள்ளி குதிக்கப்போறாங்க” என்று வைஷ்ணவி தோழிக்காக மகிழ்ந்திருக்க… நாளை அவளின் வாழ்வே மொத்தமாக திசைமாறவிருக்கிறது.
அடுத்த நாள் என்ன வைத்து காத்திருக்கிறதோ!
மென்னிலாவின் விடியலே ராஜராஜனின் குரலில் தான் விடிந்தது.
தூக்க கலக்கத்தில் இருந்தவளை உலுக்கி எழுப்பியவர் சொல்லிய செய்தியில் இடி விழுந்தது போல் உறைந்து போனாள்.
கேட்ட செய்தியில் அவளுக்கு தலையே சுற்றியது.
‘நேற்று சொல்லி, இன்று எப்படி?’ உள்மனம் படபடவென அடித்துக்கொண்டது.
வார்த்தையை கோர்த்து கேள்வி கேட்க முடியாது தவித்து நின்றாள்.
நாமொன்று நினைக்க, தெய்வம் போடும் கணக்குகளுக்கு மத்தியில் எவையெவை அரங்கேறிடுமோ?
உள்ளம் சுமக்கும் காதலில் சில வலிகளும், ரணங்களும் கலந்திருக்க வேண்டுமென்பதே நியதியோ?
சொல்லிக்கொள்ளாத காதலில் பெரும் வலி மட்டுமே அவளுக்கு நிரந்தரமோ?
“சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வர்றாங்க நிலா.”
தாத்தாவின் வார்த்தைகளில் கண்கள் மட்டுமல்ல மென்னிலாவின் வாழ்வும் இருண்டிருந்தது.