நெஞ்சோடு காதல் சேர 13

அத்தியாயம் 13

“தாத்தா…”

மென்னிலாவுக்கு மொத்த அதிர்ச்சியில் குரலே வெளிவரவில்லை. தொண்டையை செருமியவள்,

“இப்போ கல்யாணத்திற்கு என்ன அவசரம் தாத்தா?” எனக் கேட்க, விரக்தியாக சிரித்த அப்பெரியவர்…

“நேற்று உன் சித்தியின் ஆட்டத்தை பார்த்தாய் தானே! இதற்கு பிறகுமா எதற்கென்று கேட்கிற?” என்றார்.

“நீங்க எனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி ஒரு நாள் கூட முழுதாக ஆகவில்லை.

அதற்குள் என்னை துரத்த பார்க்கிறீங்களா!” அவளின் ஏமாற்றம் அவளை குறையாக பேச வைத்தது.

“உன் அப்பன் உன்னோடு கொஞ்ச நாள் வாழ வேண்டும். நீ இழந்த தந்தை பாசத்தையாவது திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் தான் உன் படிப்பு முடிந்தும்… ரேணுகாவின் குணம் அறிந்திருந்தும் அமைதியாக இருந்தேன்.

ஆனால் நான் எனக்கு தெரிந்த வகையில் உனக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு தானிருந்தேன்.

நேற்று ரேணுகாவின் உண்மை முகம் முழுவதும் தெரிந்த பிறகு, இனியும் அவள் பார்வையில் உன்னை விட்டு வைக்க முடியாது.

அதான் தரகர் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்திலிருந்து உனக்கேற்ற ஒருவரை தேர்வு செய்து, அவர்களுக்கு தகவலும் சொல்லி அனுப்பிவிட்டேன்.

நம் நல்ல நேரம், ஏதோ உறவினர் வீட்டு விசேஷத்திற்காக ஊர் பக்கம் வந்திருப்பவர்கள் இன்று மாலையே இங்கு வருவதாக சொல்லிவிட்டனர்” என்று நீளமாக பேசி முடித்தார்.

நெஞ்சம் வெதும்பி கண்களில் கண்ணீர் இதோ விழுந்து விடுவேனென்று ஆட்டம் காட்ட, முகத்தில் தெரியும் சோகத்தை மறைக்க முடியாது…

“இதோ வந்துவிடுகிறேன் தாத்தா” எனக்கூறி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளின் வருத்தத்தை கண்டுகொண்டவர், தங்களை விட்டு பிரிவதற்கே இத்தகைய சோகமென்று தவறாக கணித்தார்.

அவருக்கு அவளின் மனம் தெரிந்திருக்க வாய்பில்லையே! தெரிந்தாலும் ஏற்கனவே காதலால் சூடுகண்ட குடும்பம் அவளின் காதலை ஏற்குமா? சந்தேகமே!

ராஜன் வெளியே சென்றதும் தன் காலைநேர பணிகளை முடித்துக்கொண்டு வெளியில் வந்தவள் மெத்தையில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

மனம் முழுக்க வம்சியின் முகம் பதிந்திருக்க இன்னொருவனுடன் அவளால் எப்படி வாழ முடியும். அந்நினைவே மனதை அறுத்தது. இதயத்தை இரண்டாக பிளந்தது. அந்த வலியை அவள் உணரும் நிலையில் இல்லை. அவள் தான் எப்போதே மொத்தமாக மரத்து போயிருந்தாளே!

தேவிகா வந்து அழைத்தும் காலை உணவை மறுத்தவளாக அப்படியே கிடந்தாள்.

மகள் உணவு உண்ண வரவில்லை என ராஜராஜன் அவளைத் தேடி வந்தார். மகளின் நிலை கண்டு பதறியவராக அவள் அருகில் அமர்ந்தவர், தலையை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டார்.

“என்னம்மா ஆச்சு…” மென்னிலாவின் நிலை அவருக்கு அழுகையே வருவது போலிருந்தது. குரல் கமறியது.

குரலிலேயே அவரின் கலக்கம் உணர்ந்தவள்,

‘இதுவரை தந்தைக்கு தான் சந்தோஷத்தை அளித்தது இல்லை. அவர் யாரென்றே தெரியாத போது அவருக்காக காத்திருப்பது வீண். அத்தோடு தன் ஒருத்தியின் கவலை நால்வரை வருந்தச் செய்யும். என் மீது அன்பு  கொண்டவர்களின் வேதனைக்கு நான் காரணமாக இருக்கமாட்டேன்.’ மனதை ஒருநிலைப்படுத்தி முடிவு செய்தவள், தந்தைக்கு தெரியாது அழுத முகத்தை அழுந்த துடைத்து அவரின் மடியிலிருந்து எழுந்து அமர்ந்தாள்.

“அப்பா சாதாரண தலைவலி. அதான் படுத்திருந்தேன்” என்றவளின் பதிலில் தன் கலக்கம் நீங்கிய ராஜராஜன்,

“நீ போகின்ற இடத்திலாவது ரொம்ப சந்தோஷமா இருக்கணும்மா… உன்னை உள்ளங்கையில் வைத்து பார்த்துக்கொள்ளுகிற இடமாகத்தான் உன் தாத்தா பார்த்திருக்கிறார்” என்று நெகிழ்ந்து கூறினார்.

ராஜராஜனின் முகத்தில் தெரிந்த மகிழ்வே, அது எப்போதும் தன்னால் குறைந்துவிடக் கூடாதென்கிற எண்ணத்தை அந்நொடி அவளுக்குள் தோற்றுவிக்க… மனதை வலியால் மூடி, கண்களை மறைத்த விழிநீரை உள்ளுக்குள் இழுத்தவளாக, முயன்று குரலில் வருத்தத்தை வெளிக்காட்டாது…

“எனக்கு சம்மதம் ப்பா” என்றாள்.

இதனை சொல்லுவதற்குள் பலமுறை மரித்து உயிர்த்தாள்.

ராஜராஜன் வெளியேறியதும் கதவை உட்புறமாக பூட்டியவள், மனதின் வலி அடங்கும் வரை சத்தமிட்டு கதறி அழுதாள். இதயம் தன் துடிப்பிற்கு ஏற்றவாறு கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒலித்து அடங்கியது. மூச்சு திணறும் போலிருக்க,

‘இப்போதே இறந்து விட மாட்டோமா!’ என்று நினைத்தாள்.

ஆனால் மரணம் வேண்டுமென்று எண்ணியவள் அதனை தானாக செய்யும் செயலை சிந்திக்கவில்லை.

தன் வாழ்நாள் மொத்த அழுகையையும் அப்போதே தீர்த்தவள்,

“என் காதல் உண்மையென்றால் அந்த காதலே எங்களை சேர்த்து வைக்கும்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மனதை திடப்படுத்தினாள்.

நடப்பதை அதன் போக்கிலே ஏற்க துணிந்தாள்.

அந்நேரம் அவளின் அலைபேசி ஒலித்தது.

வைஷூ அழைத்திருக்க சாதரணமாகவே அதனை ஏற்று காதில் வைத்தாள்.

வைஷூ சுற்றி வளைக்காமல் நேரடியாக விடயத்திற்கு வந்திருந்தாள்.

“நிலா, நான் உன் ஆளை இங்கு ஹைதராபாத்தில் பார்த்தேன்.”

“ஹோ.” அவ்வளவாகத்தான் இருந்தது மென்னிலாவின் பிரதிபலிப்பு.

“என்னடி அசால்டா சொல்லுற, அவரைத் தேடி   எங்கெல்லாம் திரிஞ்சோம். இப்போ அவர் இருக்குமிடம் தெரிந்து விட்டதுன்னு சொல்லுறேன். சாதாரணமா இருக்க” என்ற வைஷூ அப்போதுதான் மென்னிலாவின் அமைதியை உணர்ந்தவளாக,

“நிலா ஆர் யூ ஓகே?” எனக் கேட்டாள்.

“ஈவ்னிங் என்னை பொண்ணு பார்க்க வறாங்க” என்றவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அடுத்து எவ்வளவு முயற்சித்தும் வைஷூவின் அழைப்பை மென்னிலா ஏற்கவேயில்லை.

“நான் தேடும் போதெல்லாம்… நீ வேணுன்னு உருகுன அப்போவெல்லாம் கிடைக்காமல் வராமல் இப்போ எதுக்குடா வைஷூ கண்ணுல பட்ட.” தன்னருகில் இல்லாதவனை வார்த்தைகளால் திட்டித்தீர்த்தாள்.

“நீ வேண்டாம் போ… நீ எனக்கு வேண்டாம்…” என்றவள் மெத்தை மீதிருந்த தலையணைகளை விசிறி அடித்தாள்.

தன் இயலாமையை எங்கு எப்படி காட்டுவதென்று தெரியாது மருகினாள். உள்ளுக்குள் இருக்கும் ரணம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

மென்னிலாவை பற்றி அனைத்தும் அறிந்து வைத்திருக்கும் வைஷூவிற்கு அவளின் மொத்த சந்தோஷமும் அவளின் கிருஷ்ணா தான் என்பதும் நன்றாகவே தெரியும். இன்று அவள் ஒப்புக்கொண்டது கூட அவளின் அப்பா தாத்தாவிற்காகத்தான் இருக்குமென்று எண்ணியவள் வம்சியை அவனின் அலுவலகம் சென்றே பார்ப்பதென்று முடிவு செய்து நேற்றிரவு வம்சியை கண்ட பகுதியில் இருக்கும் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டாள்.

வைஷூ அங்கு வந்து சேர்ந்தபோது வம்சி காவல் நிலையத்தில் இல்லை.

ஏதோ சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்வதாக விடுப்பு எடுத்திருந்தான்.

இங்கு வந்த எட்டு மாத காலங்களில் இன்று தான் தனது முதல் விடுப்பை எடுத்திருக்கிறான்.

இரவு வைஷூவை பார்த்தது நல்ல ஞாபகம் இருந்தது சுப்பாராவுக்கு. அவர் அவளை விசாரிக்க, அவரின் மூலம் வருண் என நினைத்திருக்கும் வம்சி இல்லையென்று தெரிந்து கொண்டவள் ஏமாற்றத்தோடு அங்கிருந்து சென்றிருந்தாள்.

ஆனால் செல்வதற்கு முன்பு சுப்பாராவிடம் தன்னுடைய அலைபேசி எண்ணை அளித்தவள், “மறக்காமல் கிருஷ்ணா சாரிடம் கொடுத்து என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்க” என்று ஒன்றுக்கு நூறுமுறை சொல்லிச்சென்றாள்.

வண்டியை உயிர்ப்பித்து இயக்கியவள், “உன்னைப்போல் நானும் உன் காதலையே நம்புகிறேன் நிலா” என்று வானோக்கி சொல்லியவள், “மாலை நடக்கும் பெண் பார்க்கும் நிகழ்வு நின்றால் நல்லாயிருக்கும்” என்று வேண்டிக் கொண்டாள்.

ஆனால் இறைவனின் கணக்கு பொய்க்குமா?

****

மாலை ஐந்து மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டதாக தேவிகா வந்து சொல்லிச் சென்றதும் மென்னிலாவுக்கு உள்ளூர உதறல் ஆரம்பித்திருந்தது.

தன்னுடைய காதலுக்கு தெரிந்தே துரோகம் இழைப்பதாக அவளின் மனம் அவளை சாடியது.

“யாரென்றே தெரியாதவனை விட தன்னுடைய தந்தை முக்கியம்” என்று சொல்லி மனதை தட்டி வைத்தவள் வேண்டா வெறுப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளை காண வந்த வினித்,

“அக்கா சாரி கலர் நன்றாகயில்லை. வேறமாற்று” என்க,

“அந்த மூஞ்சிக்கு இது போதும்” என்றாள் சலிப்பாக.

அப்போது வேகமாக ஓடி வந்த தேவிகா,

“அக்கா மாப்பிள்ளை செம ஹேண்ட்சம், என்னா ஹைட்டு, அப்படியே ஹீரோ மாதிரி இருக்கிறார்” என்று ஆர்வமாக சொல்ல,

“அப்போ நீயே கட்டிக்கோ” எனத் துடுக்காக சொல்லியிருந்தாள்.

“எனக்கு ஓகே தான்க்கா… நீ வேணுன்னா வெளியில் வந்து பிடிக்கவில்லை சொல்லிடு. அடுத்த நொடி நான் பிடிச்சிருக்கு சொல்லி கட்டிக்கிறேன்” என்று கிண்டலாகக் கூறிச் சென்றிட, வினித் மென்னிலாவை ஆராயும் பார்வை பார்த்து வைத்தான்.

“இப்போ நீ எதுக்குடா என்னை உத்து உத்து பாக்குற?” மென்னிலாவுக்கு இங்கு நடக்கும் கூத்து எப்போதடா முடியுமென்று எரிச்சலாக வந்தது.

“அக்கா உண்மையாவே உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தானா?” சந்தேகமாக வினவினான்.

“உனக்காவது கேட்கணும் தோணிச்சே” என்றவள் விரக்தியான சிரிப்பை ஒன்றை உதிர்த்து,

“அப்பா தாத்தாவுக்கு ஓகே” என்றாள்.

“அப்போ உனக்கு ஓகே இல்லையா?”

தம்பியின் கேள்வியில் தடுமாறினாலும் அடுத்து தன்னை சமாளித்தவளாக, அவனை நேருக்கு நேர் பார்த்து,

“இப்போ வந்து இப்படி கேட்டால் என்னடா சொல்ல” என்றதோடு “ஓகே இல்லாமல் தான் கிளம்பி ரெடியா நிக்கிறேனா?” எனக் கேட்டு அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டாள்.

“நீ என்னவோ சொல்லுற சரி” என்று இழுத்தவன்… “எதுக்கும் நல்லா யோசிச்சிக்கோக்கா, வந்திருப்பவங்களை தாத்தா அப்பாக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சுன்னு அவங்க பேச்சிலே தெரியுது… சோ, கண்டிப்பா இந்த இடமே முடிஞ்சிடும்” எனக்கூறி வெளியில் சென்றிட, அவளுக்கு யோசிக்கக்கூட இடமில்லாது தேவிகா அவளை அழைத்துச் செல்ல வந்து நின்றாள்.

“அக்கா போகலாமா?”

தேவிகா அழைத்ததும் வினித் சொல்லியதை அசை போட்டவளாகா தங்கையோடு சேர்ந்து அறையை விட்டு வெளியில் வந்து கூடத்தில் அனைவருக்கும் முன் நின்றாள்.

தலையை உயர்த்தும் எண்ணம் சிறிதுமின்றி அவள் நின்றிருக்க,

பையனின் அம்மாவே எழுந்து வந்து மென்னிலாவின் தலையில் பூவை வைத்துவிட்டு… “எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கூறி “நீயொருமுறை நிமிர்ந்து என் பையனை பார்த்துட்டு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேனா, நாங்க அடுத்து மேற்கொண்டு பேசுவோம்” என்றார்.

வினித் சொல்லியது அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்க, பையனின் தாயும் அவளின் சம்மதம் கேட்டு நிற்க… ‘இதுதான் சமயம் நிமிர்ந்து பார்த்து பிடிக்கவில்லை சொல்லிவிடலாம்’ என்று மனதில் நினைத்தபடி முகம் நிமிர்த்தி விழி உயர்த்தி மாப்பிள்ளையைப் பார்க்க…

அவளின் விழிகள் மேலும் அகல விரிந்தது. இதயம் மத்தளம் வாசித்தது. உடல் முழுக்க சில்லென்ற இதம் பரவியது. கால்கள் தரையில் மிதக்கும் உணர்வு. உள்ளங்கை சில்லிட்டது. விரிந்த இமைகள் சிமிட்ட மறந்தன.

அவளின் இந்நிலைக்கு காரணம்,

மென்னிலாவின் முன் அவளின் கிருஷ்ணா புன்னகை முகமாக அமர்ந்திருந்தான். ராஜனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

மென்னிலாவின் பார்வை உணர்ந்து அவனும் அவளை பார்க்க… அவனிடம் அன்று இருந்த ஒன்று இன்றில்லை. அவளுக்கு அவனிடம் தென்பட்ட மாற்றம் புரிந்தும் புரியா நிலை.

மொத்தமாக குழம்பி நின்றாள்.

error: Content is protected !!
Scroll to Top