அத்தியாயம் 14
மென்னிலா குழம்பி நின்றது ஒரு கணம் தான்… அடுத்து தன்னுடைய குழப்பத்தை ஆராயத் தோன்றாமல் தன் கண் முன் நிற்கும் கிருஷ்ணாவை நம்பினாள்.
மென்னிலாவின் கண்கள் கலங்கியிருக்க அவளின் இதழ் சந்தோஷத்தில் விரிந்திருந்தது.
இருவரும் எதிரெதிரே நின்றிருக்க மென்னிலாவின் நிலை அவனைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.
“எதுக்கு அழறீங்க?” அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் அவன் வினவ,
“நான் அழவில்லை” என்று தலையசைத்துக் கொண்டே “இது ஆனந்த கண்ணீர்” என்றவள் அனைவரிடமும் திரும்பி…
“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” எனக்கூறி அங்கு நிற்காமல் ஓடிவிட்டாள்.
அவளின் கண்ணீர், புன்னகை, சந்தோஷம் என்று எதற்கும் காரணம் புரியாது இப்போது குழம்பி நின்றது வருண் கிருஷ்ணா.
ஆம் மென்னிலாவை பெண் பார்க்க வந்திருப்பது உண்மையான வருண் கிருஷ்ணா. வருண் கிருஷ்ணா என்று எண்ணி மென்னிலா காதலிக்கும் வம்சி கிருஷ்ணா அல்ல.
வருண் அமைதியாக இருக்கையில் அமர்ந்துகொள்ள,
திரிலோகர் பேசத் துவங்கினார்.
அவருக்கு அனைத்தும் தெரிந்திருப்பினும் எதையும் சொல்லும் அனுமதியின்றி நடப்பதை வேடிக்கை பார்க்க ஆயத்தமாக உள்ளார்.
“இது என் மூத்த பேரன் வருண் கிருஷ்ணா. இவனுக்கு இளையவன் ஒருத்தன் இருக்கான். அவன் பெயர் வம்சி கிருஷ்ணா.”
இந்த இடத்தில் ஈஸ்வர் திரிலோகரை தடுத்து, “இப்போ அவனை பற்றி சொல்லியே ஆக வேண்டுமா” என்று காதில் கிசிகிசுத்தார்.
அதற்கு எவ்வித பதிலும் அளிக்காத திரிலோகர்,
“இருவரும் இரட்டையர்கள், அச்சில் வார்த்ததை போல் வித்தியாசமின்றி இருப்பர். வம்சிக்கும் அவன் அப்பாவுக்கும் சின்ன மனஸ்தாபம் அதற்காக அவன் எங்களைவிட்டு கொஞ்சம் தள்ளி இருக்கின்றான்” என்றார்.
ஆம் வருணும் வம்சியும் ஒன்றாக பிறந்த இரட்டையர்கள். ஐடெண்டிக்கள் ட்வின். இருவரையும் ஒன்றாக பார்த்தால் யார் வருண் யார் வம்சியென நிச்சயம் மூளை குழம்பி களைத்துப்போகும். இருவருக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் கண்களுக்குள் இருக்கும் விழி உருண்டை.
வருணுக்கு எல்லோரையும் போன்ற சாதாரண கருவிழி. ஆனால் வம்சிக்கு, ஆழ்ந்த பிரவுன் நிற விழி. அந்த வித்தியாசம் புரியாதுதான் மென்னிலா முதலில் குழம்பினாள். சட்டென்று அவளுக்கு வம்சியின் பிரவுன் நிற விழிகள் நினைவுக்கு வராது போகவே நிஜத்தை மட்டுமே ஏற்று தன் விருப்பத்தை சொல்லியிருந்தாள்.
மென்னிலா வம்சியை முதன் முதலில் பார்த்த போது வம்சி அணிந்திருந்தது வருணின் பெயர் பதிக்கப்பட்ட வருண் கிருஷ்ணாவின் காக்கி உடை. அதனாலே இன்று வந்த உண்மையான வருணை தன்னுடைய காதலன் வம்சியென கருதினாள்.
அன்று வருண் தன்னுடைய உடையை போட்டதற்கு வம்சியை திட்டிய போது கூட,
“என்ன பெரிய வித்தியாசம் வேற வேற கலர் ட்ரெஸ் போட்டாலும் ஒருத்தரும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது” என்று வம்சி சொல்லியதற்கான காரணம் இருவரின் உருவ ஒற்றுமை தான்.
ஆனால் அந்த உருவ ஒற்றுமை தான் இன்று வம்சியின் காதலுக்கு பெரும் எதிரியாக அமைந்தது.
காதலில் வம்சியும், மென்னிலாவும் இணையவே… தனக்கு ஒரே மகன் என்றுதான் சொல்ல வேண்டுமென்று சொல்லி தன் குடும்பத்தை அழைத்து வந்திருந்த ஈஸ்வரின் பேச்சினையும் மீறி திரிலோகர் உண்மையை கூறியிருந்தார்.
யாருக்காக அதனை சொன்னாரோ அவள் அங்கில்லாமல் போனது அவளின் துரதிஷ்டம். இருப்பினும் இவர்கள் மூலமாக அவளுக்கு விடயம் செல்லுமென்று நினைத்தார். அப்போதாவது சரியான ஆள் யாரென்று சிந்திக்கட்டும் என எண்ணினார்.
‘இருவரும் வலி அனுபவித்து தான் ஒன்று சேர வேண்டுமென்று இருந்தால் தான் என்ன செய்ய முடியும்.’ அவரின் மனம் இவ்வாறாகத்தான் நினைத்தது.
அடுத்து இரு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து மேற்கொண்டு பேசிய போதுதான், அவர்களும் கொடைக்கானலுக்கு பக்கத்திலிருக்கும் மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
ராஜராஜனுக்கு ஈஸ்வரை எங்கோ பார்த்த நினைவு. ஆனால் சட்டென்று பிடிபடவில்லை. அதனால் அதனை புறம் தள்ளினார்.
அதன் பின்னர் நிச்சயம் மற்றும் திருமணத்திற்கு நாள் குறித்து வருணின் குடும்பம் கிளம்பிச் செல்ல… வருணின் பார்வை தேவிகாவிடமே சென்று சென்று வந்தது.
‘இதென்ன வருண் பார்க்க வந்த பெண்ணை விடுத்து. அவளின் தங்கையை சைட் அடிக்கின்றாய்?’ வருணின் மனம் கேள்வி கேட்டது.
“எனக்கு மென்னிலாவை பார்க்கும் போது தோன்றாத ஏதோ ஒரு உணர்வு அந்த பொண்ணை பார்க்கும்போது தோணுதே!” என்று மனதின் கேள்விக்கு பதில் சொல்லியவன் காரில் ஏறிய பின்னரும் வழியனுப்ப வெளியில் வந்திருந்தவர்களின் பின்னால் இறுதியில் மறைந்து நின்றிருந்த தேவிகாவின் மீது படிந்து மீண்டது.
என்னடா இதுவென்று தலையை உலுக்கி சமன் செய்தவன், ராஜனின் அழைப்புக்கு இணங்க அவர்களை வழியனுப்ப அப்போதுதான் வெளியில் வந்த மென்னிலாவின் முகத்தை பார்க்காது சென்று வருவதாக தலையசைத்தான் வருண்.
மென்னிலாவுக்கும் இவ்வளவு மாதங்கள்… ஒரு வருடமாக பார்க்க ஏங்கித் தவித்த முகத்தை பார்த்த பின்னர் மனது எவ்வித உற்சாகமுமின்றி அமைதியாக இருந்தது அவளுக்கே வித்தியாசமாக இருந்தது.
“காதல் கைகூடிய அலட்சியமா?” அவளின் கேள்விக்கு அவளிடமே பதிலில்லை.
அவர்கள் சென்றதும் ரேணுகா பொரும்மி தள்ளினார்.
“இவ்வளவு பெரிய இடம் இவளுக்கா? முன்பே தெரிந்திருந்தால் தன் மகளுக்கு எப்படியாவது முடித்திருப்பேனே” என்று பொறாமையில் பொங்கினார்.
“பையனும் சும்மா சொல்லக்கூடாது அம்சமாவே இருக்கான்” என்று அங்கலாய்த்துக் கொண்டவர், “ம்கூம்… அவள் ராசி அப்படி எங்கு போனாலும் ராணி மாதிரி வாழணுமுன்னு” என்று புலம்பியவராக இருக்க அவரை அவரின் குணம் தெரிந்ததால் யாரும் கண்டு கொள்ளவில்லை.
முடிந்தளவு மென்னிலா ரேணுகாவின் பார்வையிலிருந்து விலகி இருப்பதே நன்றென்று நினைத்தவர்கள் திருமணத்தைக்கூட விரைந்து நடத்தவே தேதி முடிவு செய்திருந்தனர்.
****
இங்கு ஹைதரபாத்தில் தன் வீட்டில் அமர்ந்திருந்த வைஷூ மென்னிலாவை நினைத்து வருந்திக் கொண்டிருக்க அவளே வைஷூவிற்கு போன் செய்தாள்.
வேகமாக முதல் ஒலியினிலேயே ஆன் செய்த வைஷூ,
“என்ன நிலா பொண்ணு பார்த்துட்டு போயிட்டங்களா? உனக்கு பிடிக்கலன்னு தானே சொன்ன?” என்று படப்படத்தாள்.
“எனக்கு பையனை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு வைஷூ” என்று ஆர்பரித்த மென்னிலாவின் குரலில் இப்போது குழம்பி நிற்பது வைஷூவின் முறையானது.
“சோகத்தில் உனக்கெதும் பைத்தியம் பிடித்து விட்டதா?” வைஷூவின் கேள்வியில் அவ்வளவு சூடு. பின்னே மென்னிலாவின் காதலுக்காக மென்னிலாவை விட அவள் தானே அதிகம் நொந்திருக்கின்றாள். இப்போது வேறொருவனை பிடித்திருக்கிறது என்று சொன்னால் வைஷூவிற்கு கோபம் வரத்தானே செய்யும்.
“ஹேய் வைஷூ கூல்…”
“என்னடி கூல்… என்னை பார்த்தால் உனக்கு லூசு மாதிரி தெரியுதா?” வைஷூ வெகுண்டாள்.
“என்னை கொஞ்சம் பேச விடு வைஷூ” என்ற மென்னிலா அந்தப்பக்கம் அவள் அமைதியாக இருக்கவும் காலினை கட் செய்துவிட்டு, வீடியோ காலில் அழைத்திருந்தாள்.
அதனை ஏற்ற வைஷூவின் முகம் அஷ்ட கோணலாக இருக்க மென்னிலா அடக்கமாட்டாது சிரித்தாள்.
“இன்னும் நல்லா சிரி… உனக்காக அலைஞ்சு திரஞ்சது நான் தானே! என்னை பார்த்தால் உனக்கு சிரிப்புதான் வரும்” என்ற வைஷூ முகத்தை உம்மென்று வைக்க,
“சாரிடி வைஷூ” என்றாள் மென்னிலா.
இருவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருக்க, மென்னிலாவே பேச்சை ஆரம்பித்திருந்தாள்.
“நான் ஏன் பிடிச்சிருக்கு சொன்னேன் தெரியுமா?”
“உன் அப்பாவிற்காகத்தானே!”
“இல்லை” என்ற மென்னிலா “பையனை பார்த்து பிடிக்கலன்னு சொல்லத்தான் போனேன். ஆனால்…”
“என்ன ஆனால்?”
“என்னை பார்க்க வந்த மாப்பிள்ளையே கிருஷ்ணா தான்” என்றாள்.
“ஹோ அதான் சார் வெளியூர் போயிருக்காரு ஸ்டேஷனில் சொன்னாங்களா?”
வைஷூ தனக்குத்தானே கேட்டுக்கொள்ள, என்ன என்று கேட்ட மென்னிலாவிடம் நேற்றிரவு தான் வம்சியை பார்த்ததும். இன்று அவனை காண காவல் நிலையம் சென்றதையும் கூற, வைஷூவின் நட்பை எண்ணி மென்னிலா கர்வம் கொண்டாள்.
“எனக்கு எது சரியாக அமையாவிட்டாலும் நட்பு ரொம்ப சரியா கிடைச்சிருக்கு வைஷூ” என்ற மென்னிலாவின் குரல் கரகரப்பாக ஒலித்தது.
“எப்படியோ நீ சொல்லியது போல் உன் காதலே உங்களை சேர்த்து வைத்து விட்டது.” வைஷூ மென்னிலாவின் மனநிலை மாறும் வகையில் பேச்சை மாற்றினாள்.
அதன் பின்னர் இருவரும் பல்வேறு விடயங்கள் பேசிவிட்டு போனை வைத்தனர்.
வைஷூவிடம் பேசிவிட்டு வந்த பின்னர், வருணை பார்த்ததும் தோன்றிய சிறு வித்தியாசம், அதனால் ஏற்பட்ட குழப்பம் கூட பின்னுக்க சென்றிருக்க… நீண்ட நாட்களுக்குப் பின்னர் நிம்மதியான உறக்கம் தழுவியிருந்தாள்.
ஆனால் அவளின் காதலுக்கு சொந்தக்காரனோ உறக்கம் தொலைத்து… முதன் முதலில் தன்னவளை பார்த்த இடத்தில் இருக்கையில் பின் சாய்ந்து கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.
நேரம் பின் இரவில் இருந்தது. ரயில் நிலையமே சத்தமின்றி அமைதியை தத்தெடுத்திருந்தது.
தனக்கு அருகில் யாரோ அமரும் அரவம் உணர்ந்தும் வம்சி கண் திறக்கவில்லை. தற்போது அவனுக்கு ஆழ்ந்த அமைதி வேண்டும் போலிருந்தது. அதோடு ஓங்கி ஒலித்து கத்த வேண்டும் போல் இதயம் ஆர்ப்பரித்தது. மனம் நிலையாக இல்லாது தவித்து துடித்தது.
இன்று காலை வம்சி கண் விழிக்கும் போதே அவனுக்கு மென்னிலாவின் நினைவு தான். அப்போது முதல் அவனின் நிலை இதுவாகத்தான் இருந்தது. அந்நொடி தான் அவனுக்கு நினைவு வந்தது தன் நிலவை தான் பார்த்த நாள் இதுவென்று.
அடுத்த நொடி எதுவும் யோசிக்காது… பணிக்கு விடுப்பு சொல்லியவன், தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே சென்னை வந்து சேர்ந்தவன். மென்னிலாவை பார்த்த அன்று தானமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன் உணவு தண்ணீர் எதுவுமின்றி நேரம் இரவை கடந்து கொண்டிருக்கவும் தன்னிலை மாறாது அப்படியே இருந்தான்.
வம்சிக்கு அவனின் இதயம் யாரிடமோ செல்லும் உணர்வு.
தன்னவளை பார்த்து, அவள் மீது காதலை உணர்ந்து சரியாக இன்றோடு ஒரு வருடமாகிவிட்டது. இன்றளவும் அவளை தேடாது தான் மட்டுமே காதலில் உருகிக் கொண்டிருக்கின்றான்.
வம்சியின் அருகில் விக்னேஷ் வந்தமர்ந்து ஒரு மணிநேரம் சென்றிருந்தது. வம்சி அசைவதாக இல்லை. அதனால் விக்னேஷே வம்சியின் தோள் தொட்டு அழைத்திருந்தான்.
“வம்சி.”
விக்னேஷ் அமர்ந்த போதே அது அவன் தானென்று வம்சி கண்டுகொண்டான். இருப்பினும் பேச அவன் விருப்பம் கொள்ளவில்லை. இப்போது அவனே பேசவும் வம்சியால் ஒதுக்க முடியவில்லை.
“வருண் சொன்னானா?”
“ஆமாம். இன்று நிச்சயம் நீ இங்கு இந்நேரத்திற்கு வருவாயென்று சொல்லி, அவன் தான் என்னை அனுப்பி வைத்தான்.”
“தென்” என்ற வம்சி “உன் குழந்தை எப்படியிருக்கு?” எனக் கேட்டான்.
“அப்போ எங்களைப்பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு தான் இருக்கிறாய்?” என்று சொல்லிய விக்னேஷ், “எதற்கு இப்படி எங்களை விட்டு தள்ளியிருக்கிறாய் வம்சி” என்க வம்சியிடம் பதிலில்லை.
“சரிவிடு… நீ இப்போ எங்கு இருக்கிறாய்? ஐஜி’யிடம் கேட்டுக்கூட சொல்ல மறுத்துவிட்டார். அவரையும் உன் கைக்குள் வைத்திருக்கிறாய்!” ஆதங்கமாக வினவினான் வம்சி.
விக்னேஷின் பேச்சு எதற்கும் பதிலளிக்காத வம்சி எழுந்து நடக்க ஆரம்பித்தான்.