அத்தியாயம் 15
வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விக்னேஷ்… தன்னுடைய அலைபேசியின் அலறளில் கண் திறக்க, வருண் பேசினான்.
“நான் சென்னைக்கு பாதிவழி வந்துட்டேன். இன்னும் இரண்டு மூன்று மணி நேரங்களில் வந்துவிடுவேன்.”
“இதை சொல்லத்தான் போன் போட்டியா?” தூக்கம் கலைந்த எரிச்சலில் விக்னேஷ் கடுகடுத்தான்.
“சொல்லுவதை முழுசா கேளுடா என் டொமாட்டோ” என்று அவனுக்கு மேல் காய்ந்த வருண்…
தன் தம்பியின் மனம் அறிந்தவனாக, இன்றைய நாளினை நினைவு கூர்ந்து…
“என்னுடைய கணிப்பு சரியென்றால் இன்று வம்சி ரயில் நிலையம் வருவான். நான் வருவதற்குள் நீ சென்று அவனை பிடித்து வை” என்றான்.
“அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்லுற?”
“காதலுக்கு அந்த வலிமை இருக்கு.”
“எந்த வலிமை?”
“ம்ம்… உன் பிரண்டை கட்டி இழுத்துட்டு வர வலிமை. சொல்லுறதை செய்யுடா” என்ற வருண் போனை வைத்ததும்… வருணின் பேச்சில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியாத போதும், அந்த அர்த்த ராத்திரியில் ரயில் நிலையம் வந்தான் விக்னேஷ்.
வருண் சொன்னதைப்போல் வம்சி அங்கு தான் இருந்தான்.
ஒரு வருடத்திற்கு பிறகு தன்னுடைய நண்பனை காண்கிறான். யாருமற்ற இருட்டில் தனித்து சோகமே உருவாய் அமர்ந்திருந்தவனை கண்டு நெஞ்சம் விம்பியது.
எப்படி மிடுக்குடன் முகத்தில் தேஜசுடன் இருப்பவன். இன்றும் அவனிடத்தில் அந்த கம்பீரம் தொலையாது இருந்தது. ஆனால், அந்த ஒளி? வாழ்வில் அனைத்தும் வேண்டாமென்று ஒதுங்கி வாழ்பவனிடம் காணப்படும் ஒருவித வெறுமை.
வம்சியை பார்த்ததும் நண்பனாக துடித்துப்போனான் விக்னேஷ்.
வருணை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வெளியேறியவனை உணரும் நிலையில் அன்று விக்னேஷ் இல்லை. இருந்திருந்தாலும் வம்சியின் முடிவை அவனால் மாற்றவும் முடியாது.
அன்று வம்சி சென்ற இரண்டு மணி நேரத்தில் வருண் கண் விழித்ததும், தன்னருகில் சோகமே உருவாக நின்றிருந்த தன் தந்தையை கூட பார்க்காது வம்சியைத்தான் கேட்டான்.
அதன் பின்னரே மற்றவர்கள் வம்சியைத் தேட அவன் அவர்களை விட்டு ரொம்ப தூரம் சென்றிருந்தான்.
அதுவரை வருணை நினைத்து கண்ணீர் வடித்த வசந்தி இப்போது தன் செல்ல மகனை நினைத்து தவித்தார்.
வம்சி என்னதான் தைரியம் மிக்க காவல்துறை அதிகாரியாக இருப்பினும், வருணிடத்தில் அவன் இன்னும் குழந்தையே! வீட்டிற்குள் வந்து விட்டால் எதுவென்றாலும் அவனுக்கு வருண் வேண்டும்.
“இப்போது நாங்கள் இல்லாது அவன் என்ன செய்கிறானோ!”
வம்சியைத் தேடிச்சென்ற விக்னேஷ் அவனைப்பற்றி ஒரு தகவலும் இல்லையென்று வந்து சொல்ல மருத்துவமனை என்றும் பாராமல் வசந்தி புலம்பினார்.
“இனியாவது அவனில்லாது நாம் நிம்மதியாக இருக்கலாம்.” வெடுக்கென்று சொல்லியிருந்தார் ஈஸ்வர்.
“அப்பா!” அடிபட்டு கிடந்த அந்த நிலையிலும் உரக்கக் கத்திய வருண்,
“வம்சியில்லாது வாழ்வே இல்லை. இதில் எங்கு நிம்மதியாக இருப்பது” என்றதோடு, அவரை பார்க்க விரும்பாதவனாக கண்களை மூடிக்கொண்டான்.
ஈஸ்வர் மனதால் அடி வாங்கினார்.
‘தனக்கு தன் தம்பி தான் எல்லாமென்று வருண் நேரடியாகவே சொல்ல ஈஸ்வருக்கு ஒருமாதிரி வருத்தமாகிவிட்டது.’
தனக்கு வேண்டாதவன் அனைவருக்கும் வேண்டியவனாக இருப்பதில் அவ்வளவு ஆத்திரம். ஆனால் தன் மகன் வருணுக்காக பொறுத்துக்கொண்டார். என்ன இருந்தாலும் வருணை அவரால் விட்டுவிட முடியாதே!
வருண் சரியாகி வந்ததும் ஈஸ்வர் முதலில் செய்தது வருணை காவல்துறை பணிக்கு செல்ல வேண்டாமென்றது தான். ஏற்கனவே பிடிக்காத வேலையில் தந்தைக்காக மட்டுமே சேர்ந்திருந்தவன் இப்போது சந்தோஷமாக வேலையை விட்டுவிட்டு தங்களது பாத்திரக்கடை மற்றும் ஜவுளிக்கடயை பார்த்துக்கொள்கிறான். அத்தோடு ஜவுளிக்கடையை விரிவு படுத்தி பல கிளைகளையும் நிறுவி வளர்ச்சி பாதையில் தங்களது தொழிலை கொண்டு சென்றான்.
இத்தனை மாதங்களில் வம்சியையும் தேடிக்கொண்டுதான் இருந்தான். வருணோடு சேர்ந்து விக்னேஷும் தன்னுடைய போலீஸ் பதவியை வைத்து தேடியும் பலனில்லை.
அதில் வருணுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது, ‘வம்சி நினையாது தங்களால் அவனை நெருங்க முடியாது’ என்பது.
அதனால் ‘வம்சிக்காக தன்னை பார்க்கத் தோன்றும் போது வரட்டும்’ என்று வருணும் பொறுமை காக்க… திடீரென ஈஸ்வர் வருணுக்கு வரன் வந்திருப்பதாகக் கூறினார்.
தன்னுடன் கருவில் உருவானது முதல் ஒன்றாக இருந்த தனது வம்சி இல்லாது தனக்கு திருமணமா என்று அதிர்ந்தவன் முடியவே முடியாது என்று மறுக்க, ஈஸ்வரும் தன்னிலையில் பிடிவாதமாக இருந்தார்.
நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் திரிலோகர், ‘காதலிக்கும் இருவருமே அமைதியாக இருக்கும்போது எவ்வித முயற்சியுமின்றி அவர்கள் எப்படி இணைவார்கள், வருணை வைத்துதான் அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்’ என்று தனக்குள் கணக்கிட்டவர், வருணிடம் சென்று பேசினார்.
ஈஸ்வரை பொறுத்தவரை ராஜராஜனின் குடும்பத்தைப் பற்றி இப்போதுதான் அறிகிறார். நல்ல வளமான பாரம்பரியமிக்க குடும்பம். தங்கள் இனம். அதுவே அவரின் சம்மதத்திற்கு போதுமானதாக இருந்தது. அதனால் மேற்கொண்டு எதுவும் ஆராயவில்லை. அப்படி ஆராய்ந்திருந்தால்?
ரத்தினத்தின் செயலால் வசந்திக்கு பதில் விபத்தில் சிக்கிய அழகு தன் சுயம் தொலைத்து கடந்த நான்கு மாதங்களாக கோமாவில் இருக்கின்றார். இதுவும் ஒருவகையில் நல்லதாகவே பட்டது அனைத்தும் அறிந்த திரிலோகருக்கு.
வருண், வம்சி விரும்பி அணியும் தன்னுடைய கருநீல நிற சட்டையை கையில் வைத்துக்கொண்டு தம்பியின் நினைவில் ஆழ்ந்திருக்க, அவனின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார் திரிலோகச்சந்தர்.
“வாங்க தாத்தா” என்றவன் கையிலிருக்கும் சட்டையை வாட்ரோபில் வைத்துவிட்டு அவரின் அருகில் வந்தமர்ந்தான்.
“சொல்லுங்க தாத்தா…”
வருணின் தலையை பரிவுடன் வருடியவர், “நீ உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கோப்பா… வம்சி திரும்ப வந்திடுவான்” என்றார்.
எப்போதும் திரிலோகர் அனாவசியமாக எதுவும் சொல்லிட மாட்டார். அப்படி சொன்னால் அதில் பல அர்த்தங்கள் இருக்கும். அவரின் பேச்சினை மறுக்கவும் தோன்றாது.
இன்றும் அது போலவே அவர் கண்களில் உறுதியோடு சொல்ல… வருணும் எதை பற்றியும் யோசியாது ஈஸ்வரிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தான்.
ஏற்கனவே ராஜராஜன் மென்னிலாவுக்கு ராஜனிடம் சொல்லாது வரன் பார்த்துக் கொண்டிருந்ததால் மென்னிலாவின் போட்டோ ஈஸ்வருக்கு கிடைத்தது. ஈஸ்வர் மென்னிலாவை பார்க்கவர அவர்களிடம் சம்மதம் கேட்டு காத்திருந்த போதுதான்… ரேணுகாவின் செயலால் மென்னிலாவின் திருமணமும் விரைந்து செய்ய முடிவாகியது.
அச்சமயம் பங்காளி முறையில் ஒருவர் வீட்டில் விசேடமென்று சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் மென்னிலாவை பெண் பார்க்க சந்தர்ப்பமும் அமைய அதனை முடித்துக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
சென்னையை வந்தடைய வருண் தான் துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றான்.
நேற்று விசேடத்திற்கு கிளம்பும் போதே இன்றைய நாளை எண்ணி வருண் செல்ல மறுத்தான். ஈஸ்வர் கட்டாயப்படுத்தவே, ‘எப்படியும் காலையில் ஃபன்க்ஷன் முடிந்ததும் கிளம்பி இரவிற்குள் வந்துவிடலாம்’ என எண்ணி அரை மனதாகத்தான் சென்றான்.
வருணுக்கு தெரிந்தது… இங்கிருக்கும் வரையில் அப்பெண்ணின் நினைவென்றாலே ரயில் நிலையத்திற்கு சென்று மணிக்கணக்கில் அமர்ந்திருப்பவன், இன்று அப்பெண்ணை பார்த்த முதல் நாள் என்பதால் நிச்சயமாக வம்சி வருவானென்று உறுதியாக நம்பினான்.
மாலை பெண் பார்க்கும் படலம் இல்லாமல் இருந்திருந்தால் விக்னேஷிற்கு பதிலாக வருணே வந்திருப்பான். தன் தம்பியையும் பார்த்திருப்பான்.
ஆனால் விதி நினைத்திருப்பது தானே அனைவரின் வாழ்விலும் நடைபெறும். அதில் வருணின் எண்ணம் மட்டும் மாற்றாக நடந்தேறிடுமா என்ன?
தன்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தடைய முடியாது என்பதாலேயே வருண் விக்னேஷை அனுப்பி வைத்தான். வருணின் எண்ணம் பொய்க்காது விக்னேஷும் வம்சியை பார்த்துவிட்டான். ஆனால் என்ன, வம்சியை மீண்டும் தொலைத்து நிற்கின்றான்.
அதிகாலை ஐந்து மணியளவில் சென்னை வந்த வருண் முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி வீட்டிற்கு கூட செல்லாது பாதியிலேயே இறங்கி ஆட்டோ ஒன்றை பிடித்து ரயில் நிலையம் வர, அங்கு விக்னேஷ் மட்டுமே அமர்ந்திருந்தான்.
“எங்கு போகிறாய் வம்சி? இன்னும் கொஞ்ச நேரமிரு… வருண் வந்துவிடுவான்” என்று சொல்லிக்கொண்டே விக்னேஷ் வம்சியின் பின்னால் செல்ல நொடிப்பொழுதில் வம்சி அவனின் பார்வையிலிருந்து மறைந்திருந்தான்.
கண் முன்னிருந்தவன் எப்படி எங்கு மறைந்தான் என்று தெரியாது விக்னேஷ் விழித்தபடி வம்சி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டான்.
“வம்சி எங்கடா?”
வருணின் ஆர்வமான கேள்வியில் விக்னேஷ் நடந்ததை சொல்லியதோடு,
“நான் வராமல் இருந்திருந்தாலாவது வம்சி இங்கேயே இருந்திருப்பான் போலடா… நான் பேசியதும் தான் என் கண்ணிலிருந்து மறைந்து விட்டான்” என்று வருந்தினான்.
“விடு விக்கி… அவனுக்கா எப்போ தோணுதோ அப்போ வரட்டும்” என்ற வருண் தன்னுடைய வருத்தத்தை மறைத்துக்கொண்டு, “சரி அவன்தான் போயிட்டானே அப்புறமும் நீ ஏன் இங்கேயே உட்கார்ந்திருக்க” என்று வினவினான்.
“நீ வரும்போது நானுமில்லாமல் போனால் உனக்கு ஏமாற்றமாக இருக்குமே!” விக்னேஷின் வருத்தம் சற்றும் குறையவில்லை.
“அடபோடா… வம்சி போனப்பவே அவன் போயிட்டான்னு ஒரு போன் பண்ணி சொல்லியிருந்தால், நானும் நேரா வீட்டுக்கு போயிருப்பேன். நீயும் இவ்வளவு நேரம் இங்கு இருந்திருக்கத் தேவையில்லை” என்று பொய்யாக அலுத்துக்கொண்டான்.
“அட ஆமால…” விக்னேஷ் தன் வருத்தம் நீங்கி அசடு வழிய… தற்போதைக்கு இந்த மாற்றம் போதுமென்று நினைத்த வருண் விக்னேஷை கூட்டிக்கொண்டு அங்கிருந்து செல்ல…
செல்லும் இருவரையும் தன் விழிகளில் நிரப்பிக் கொண்டிருந்தான் வம்சி கிருஷ்ணா.
விக்னேஷைக் கண்டதும் வம்சியும் தன்னிலை அனைத்தும் ஒரு நொடி மறந்து நெகிழ்ந்து தான் போனான்.
ஆனால் அடுத்த கணமே, ஒரு வருடமாகியும் ரத்தினம் தன்னை தேடிக்கொண்டிருப்பதையும், தன்னை வரவழைக்கவே அம்மாவை போட நினைத்து அதில் அத்தை மாட்டிக்கொண்டதும் அறிந்திருந்தவனுக்கு அவர்களிடம் நெருங்கி இருப்பது ஆபத்தென்று நினைத்தவன் இப்போதும் விலகி இருக்கவே முடிவு செய்து… விக்னேஷின் பார்வையிலிருந்து மறைந்து வருணுக்காக ஒளிந்து காத்திருந்தான்.
ரயில் நிலையத்திற்குள் வருண் நுழையும்போதே பார்த்திட்ட வம்சியின் கண்கள் அவனறியாது கலங்கின.
வருணின் வேகமும் பரபரப்புமே அவன் தன்னை எத்தனை தேடுகிறானென்ற அவனின் தவிப்பை வம்சிக்கு காட்டிக்கொடுக்க அந்நொடி வருணை விட வம்சி மனதால் மிகவும் ஓய்ந்துபோனான்.
வருணும் விக்னேஷும் தன்னை நினைத்து வருத்தப்படுவதை ஒருவித சந்தோஷ உணர்வுடன் பார்திருந்தவன் அவர்கள் செல்வதை வலி நிறைந்த வேதனையுடன் பார்த்து நின்றான்.
என்னதான் வம்சி அங்கிருந்து சென்றுவிட்டானென்று விக்னேஷ் சொல்லியிருந்தாலும், வம்சி அங்கில்லையென அவனில்லாத சுற்றுப்புறம் எடுத்துரைத்தாலும், வருணின் உள்ளுணர்வு வம்சியின் இருப்பை உணர்ந்திட திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே அவ்விடம் விட்டு வெளியேறியிருந்தான்.