அத்தியாயம் 16
இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது. வம்சி சென்னை சென்று வந்து.
இதற்கிடையில் வேலை வேலையென்று தன்னை முழுவதுமாக அதிலேயே மூழ்கி போகச் செய்தவன் மனதிலிருக்கும் உறவுகளை மொத்தமாக விரட்ட முயற்சித்தான்.
முடியாத ஒன்றை செயல் படுத்த முடியுமா என்ன? உயிரோடும் உணர்வுகளோடும் வேரூன்றி இருக்கும் பாசத்தை ஒதுக்க முடியுமா?
இப்போது வம்சியின் நிலையும் அதுவே!
உறங்குவதற்காக மட்டுமே காவலர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் தன்னுடைய இல்லம் வருகிறான். அந்த உறக்கம் கூட அதிகபட்சமாக மூன்று மணிநேரங்கள் மட்டுமே!
வம்சி வெகுவான குழப்பத்தில் இருந்தான்.
குழப்பத்திற்கு காரணம்,
‘தானில்லாது தன்னுடைய வருணுக்கு திருமணமா?’
வம்சி அவர்களையெல்லாம் விட்டு விலகி இருந்தாலும் ஒவ்வொருத்தரின் சிறு அசைவையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
நிச்சயமாக வம்சியால் வருணை எந்நிலையிலும் விட்டுக்கொடுக்க இயலாது! அது அவனையே தள்ளி வைப்பதற்கு சமம்.
‘தானில்லாது வருண் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றான் என்றால், நிச்சயம் தன்னை வரவழைப்பதற்கே’ என்று வம்சிக்கு புரிந்துதான் இருந்தது.
அன்று விக்னேஷ் வந்திருந்தும் வருணை நேருக்கு நேர் பார்த்திடாது தவிர்த்து வந்தவனால் வருணின் வாழ்வில் நடக்கவிருக்கும் புதிய அத்தியாயத்தின் துவக்கத்தை தவிர்த்திட முடியாது.
“தான் வருவேனென்று வருண் உறுதியாக நம்பிக் கொண்டிருப்பான்.”
இவ்விடயத்தில் வருணின் நம்பிக்கையை உடைத்திட முடியாது என்றே வம்சிக்கு தோன்றியது.
‘சரி நிச்சயமே அடுத்த வாரம் தானே, திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாத காலங்கள் இருக்கின்றன. பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதே யோசித்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.’
தனக்குத்தானே சொல்லிக் கொண்டவனின் மனம் முழுக்க இப்போது தன்னுடைய நினைவுகளால் முற்றுகையிட்டாள் வம்சியின் மென்னிலா.
அவனவளின் கன்னத்து காதோர மச்சம் வம்சியை பலமாக இம்சித்தது.
ஒரு மணி நேரம் போதும் அவன் அவளைப்பற்றி அனைத்தும் அறிய, ஆனால் அதனை செய்யாமல் எதற்காக இந்த காதல் வலியை அனுபவிக்கின்றான். அதுவும் விருப்பத்தோடு.
அவனின் மனமே அவனை சாடியது.
“அனைத்தும் அறிந்தும் நானெப்படி அவளை தேடிச் செல்வேன்? என் குடும்பத்திற்கு காதலால் வேதனை கொள்ளும் ஒரு மனம் போதும். அதில் நானும் சேரவில்லை” என்றவன் மனதை மொத்தமாக அடக்கியிருந்தான்.
அதில் நானும் வேண்டாமென்று நினைத்தவன் அறியவில்லை. இப்போது அவனும் காதலில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை.
மனதிலிருந்து குடும்பத்தின் நினைவுகளை ஒதுக்கியவனால் அவனின் காதலான மென்னிலாவை ஒதுக்க முடியாது திணறினான்.
“ஒரே நாள் தான்டி உன்னை பார்த்தேன். என்னை மூச்சுமுட்ட வைக்குறடி! மொத்தமா போட்டு படுத்துற, இம்சைடி நீ!” வாய்விட்டே புலம்பினான்.
அவனுக்கு அருகிலமர்ந்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்த சுப்பாராவ் அவனின் புலம்பலில் அவன் புறம் திரும்பி பார்த்தார்.
வம்சியின் நல்ல நேரம் அவன் பேசிய தமிழ் அவருக்கு புரியவில்லை.
ஆனால் ஏதோ மன குழப்பத்தோடும், வருத்தத்தோடும் வம்சி இருப்பதாக எண்ணினார்.
தன் தலையை உலுக்கியவன், பின்னந்தலையை அழுந்த கோதி… கண்களை மூடி இருக்கையின் பின் நன்கு சாய்ந்து சரிந்து அமர்ந்தவன் இதய பகுதியை நீவியபடி இருந்தான்.
வம்சியின் செய்கை சுப்பாராவுக்கு வினோதமாக இருந்தது.
இரண்டொரு நொடிகள் வம்சியை கவனித்தவர் சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த உணவகத்தில்.. வம்சிக்கு பிடித்த விதத்தில் தேநீர் வாங்கி வந்து அவன் பக்கத்து வண்டியின் சன்னலை கீழிறக்கி,
“சார் டீ” என்றார்.
வம்சியிடம் சிறு அசைவும் இல்லை.
மீண்டும் அழைத்து பார்த்தவர், வம்சியிடம் பிரதிபலிப்பின்றி போகவே அவனைத் தொட்டு நிகழ்வுக்கு கொண்டு வந்தார்.
சுப்பாராவின் தொடுகையில் அதிர்ந்து கண் விழித்தவன், “சாரி” என்று நிமிர்ந்து அமர்ந்து சப்பாராவின் கையிலிருக்கும் தேநீரைக் கண்டு எவ்வித காரண கேள்வியுமின்றி நன்றியைத் தெரிவித்தவனாக அதனை வாங்கி தன் பாணியில் ஆழ்ந்து ருசித்து பருகி மிடறு மிடறாக விழுங்கினான்.
அப்போது அவனுக்கு அது தேவையானதாக இருந்தது.
வம்சி இங்கு வந்த இத்தனை காலங்களில் சுப்பாராவ் அவனைப்பற்றி அறிந்த ஒன்று எத்தகைய மனநிலையில் இருந்தாலும் வம்சி விரும்புவது தேநீர். அதனாலேயே அவனை மாற்றும் பொருட்டு தேநீர் வாங்கி வந்தார்.
தேநீரை முழுவதாக முடித்த பின்னரே வம்சி சுப்பாராவின் புறம் திரும்பினான்.
தனக்கு ஏதோவென்று உண்மையாகவே கலக்கம் கொண்டு இருப்பவருக்கு புன்னகையை கொடுத்தவன்…
“நவ் அம் ஓகே, பண்டி ஆபு ண்ணா” என்றான்.
அவரும் தன்னுடைய விருப்பமான அதிகாரி மனம் தெளிந்ததில் நிம்மதி அடைந்தவராக வண்டியை கிளப்பினார்.
அவர் தன் வயதிற்கு எத்தனை உயர் அதிகாரிகளை பார்த்திருப்பார். யாரும் வம்சி அளவிற்கு அவரின் மனதில் விருப்பத்தை பெற்றதில்லை. மற்ற அதிகாரிகளில் இருந்து வம்சி தனித்து காணப்பட்டான். அதனாலே சுப்பாராவுக்கு வம்சியின் மீது தனி அன்பும் அக்கறையும்.
“மிம்மல்ன்னி மீரு பயப்பெட்டாரா?” (உங்களை பயம்கொள்ள செய்துவிட்டேனா?) சுப்பாராவிடம் சிறு குற்றவுணர்வோடு கேட்டிருந்தான்.
“அண்டே காது சார்.” (அதெல்லாம் இல்லை சார்.)
அப்போதுதான் நினைவு வந்தவராக, வம்சி சென்னை சென்றபோது அவனைத் தேடி வைஷூ வந்ததையும், அவனில்லை என்றதும் தான் வந்ததை தெரிவித்து… தன்னை தொடர்பு கொள்ளுமாறு சொல்லி அலைபேசி எண் கொடுத்துச் சென்றதாகக் கூறியவர், மறந்து விட்டதற்கு சிறு மன்னிப்பை வேண்டி வைஷூவின் எண்ணை வம்சியிடம் அளித்தார்.
அதனை வாங்கியவன் ‘தன்னைத்தேடி பெண்ணா?’ என்ற யோசனையோடு அந்த எண்ணை அலைபேசி செயலியில் ஒன்றான ட்ரூ காலரில் ஆராய்ந்து பார்க்க ‘வைஷ்ணவி பிரகாஷ்’ என்று அடையாளப்படுத்தியது.
சுப்பாராவ் பெண் என்றதும், ‘தன்னைத்தெடும் ஒரே பெண் அந்த ரித்திகா தான்’ என எண்ணியவன் அவளாக இருக்குமோ என்று நினைத்தே ஆராய்ந்தான். ஆனால் இப்போது வேறொரு பெயரைக் குறிப்பிடவும் மீண்டும் குழப்பத்திற்கு சென்றான்.
காவல் நிலையம் வந்ததும் தன்னுடைய அலைபேசியை தவிர்த்து காவல் நிலைய தொலைபேசியிலிருந்து அவ்வெண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
******
ஜவுளிக்கடையில் இறக்குமதி துணிகளின் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்த வருணின் மனதில் நொடிக்கொரு முறைத் தோன்றி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள் தேவிகா.
“அய்யோ என்னதிது… எனக்கு என்னாச்சு ?”
கம்ப்யூட்டரை அணைத்தவன் வம்சியை போலவே தன்னவளை நினைத்து புலம்பினான்.
இரட்டையர்கள் அல்லவா காதலிலும் ஒரே மாதிரி இருந்தார்கள்.
ஆனால் வம்சி காதலை உணர்ந்து விலகி நிற்கிறான் என்றால், வருண் புரியாது விலகியிருக்கின்றான்.
வம்சி உணர்ந்த காதலை வருண் இன்னும் உணரவில்லை. தேவிகா தான் தன்னவள் என்பதை அறியாமலேயே அவளை நித்தமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றான்.
வருணும் என்னதான் செய்வான்… பார்க்க சென்றது ஒரு பெண்ணாக இருக்கும் போது வேறொரு பெண்ணின் மீது தோன்றும் ஈர்ப்பை எப்படி அறிவான். அப்படி அறிந்தாலும் அது காதலென்று உணர்வானா?
தன் மனம் செல்லும் பாதை தவறென்று மட்டும் புரிந்துகொண்டவன் தன்னை தெளிவுப்படுத்திக்கொள்ள விக்னேஷை அழைத்திருந்தான். முன்பென்றால் வம்சியைத் தான் நாடியிருப்பான்.
“விக்கி எங்கடா இருக்க?”
“உனக்கென்ன நான் இப்போ கடைக்கு வரணும் அவ்வளவு தானே!” எனக் கேட்டவன்,
“நான் வேலையில் இருக்கின்றேன் என்றாலும் அதை அப்படியே போட்டுட்டு வான்னு சொல்லப்போற இதற்கெதற்கு எங்கிருக்க என்ன பண்றன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க” என்றவனாக காலை டிஸ்கனெக்ட் செய்துவிட்டு அடுத்த கால் மணி நேரத்தில் வருணின் முன்பு காக்கி உடையில் நின்றான்.
“என்னடா இந்த ட்ரெஸ்ஸில் வந்து நிக்குற?”
“பின்னே உனக்கு வாக்கப்பட்டா போலீஸ் வேலையையா பார்க்க முடியும்? அவன் இருந்தவரை ஒரு மாதிரி படுத்தி வச்சான்னா, நீ இன்னொரு மாதிரி படுத்தி வைக்கிற” எனக் சொல்லிக்கொண்டே வருணிற்கு முன்பிருந்த இருக்கையில் அமர்ந்தான் விக்னேஷ்.
“சரி விடுடா நட்பிற்குள் இதெல்லாம் சாதாரணம்” என்ற வருண் “எனக்கு ஒரு விடயம் ரொம்ப குழப்பமா இருக்குடா விக்கி” என்றான்.
வருணின் முகம் தீவிரமாக இருக்கவே விக்னேஷும் மிகுந்த அக்கறையுடன்,
“என்னன்னு சொல்லுடா என்னால் தீர்க்க முடியுதா பார்க்கிறேன்” எனக்கூற,
“அதற்குத்தானே உன்னை வரச்சொன்னேன்” என்ற வருண், அவர்கள் கடைக்கு அருகிலிருக்கும் பூங்காவிற்கு விக்னேஷை அழைத்துச் சென்றான்.
எதற்காக நண்பனை அழைத்து வந்தானோ அந்த வேலையை விடுத்து வேடிக்கைப் பார்ப்பதில் ஆழ்ந்துவிட்டான் வருண்.
“இங்கு வந்து அரை மணி நேரமாகுதுடா!” விக்னேஷ் பொறுமை இழந்தவனாகக் கேட்டிருந்தான்.
“விக்கி…”
“நான்தான் சொல்லுடா!”
“எனக்கு பார்த்திருக்கும் பெண் யாருடா?”
வருணின் கேள்வியில் அவனை புரியாது பார்த்தான் விக்னேஷ்.
“யாருன்னா?”
“அவள் பெயர் என்னடா?”
சற்று யோசித்த விக்னேஷ்,
“ஏதோ நிலா… அம்மா சொன்னங்களே! என்று இழுத்து, நினைவு வந்தவனாக “ஆங் மென்னிலா” என்றான் தன் தலையைத் தட்டிக்கொண்டே.
அதற்கு ஆமோதித்த வருண்…
“மென்னிலா தானடா?” என மீண்டும் கேட்டிருந்தான்.
“ஆமாம்… இப்போ அதிலென்ன உனக்கு டவுட்?”
“எனக்கு டவுட்டே தான்டா விக்கி” என்ற வருண்,
“நான் பார்க்க போன பெண் மென்னிலா தானடா? இப்போ எனக்கும் அவளுக்கும் தானடா அடுத்த வாரம் நிச்சயம் நடக்கப்போகுது?” எனக் கேட்டான்.
“அதான் தெளிவா சொல்றியே அப்புறம் என்னடா கேள்வி?”
விக்னேஷிற்கு வருண் தன்னை வேண்டுமென்றே கடுப்படிப்பதாகத் தோன்ற எரிச்சலுற்றான்.
“டேய் வம்சி நீ இருந்திருந்தால் இதையெல்லாம் நான் கேட்காமல் தப்பித்திருப்பேன். எல்லாம் உன்னால் தான்டா!” அருகில் இல்லாத வம்சியின் மீதும் தன் கோபத்தைக் காட்டினான் விக்னேஷ்.
விக்னேஷின் எரிச்சலெல்லாம் தனக்கு பொருட்டே இல்லை என்பதைப்போல அடுத்தும் அவனுக்கு புரியாதபடி கூறினான் வருண்.
“ஆனால் மச்சி எனக்கு அவள் முகம் நினைவிலேயே இல்லைடா!”
“இப்போ அதுக்கென்னடா? உனக்கு ஞாபகம் இல்லைன்னா, என்னை வரவழைத்து ஏன்டா சாகடிக்கிற?”
“பிக்காஸ் யூ ஆர் மை ஒன் அண்ட் ஒன்லி பிரண்டுடா!”
விக்னேஷிற்கு பக்கத்திலிருக்கும் மரத்தில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
வருண் மீண்டும் அமைதியில் ஆழ்ந்திட…
“பொண்ணை பிடிக்கலையோ?” என்றான் விக்னேஷ்.
“தெரியல!”
“அழகா இல்லையோ?”
“நல்ல லட்சணம்.”
“இதை மட்டும் வக்கனையா சொல்லு.” விக்னேஷ் சிடுசிடுத்தான்.
“கூப்பிட்டு வச்சு கடுப்படிக்கிறடா” என்று விக்னேஷ் கூற,
“சரி அதெல்லாம் விடு. நான் கேட்டதற்கு பதில் சொல்லுடா?” வானத்தை பார்த்தே இவ்வளவு நேரமும் வருண் பேசிக் கொண்டிருந்தான்.
“இப்போ என்னடா ஒருமுறை தானே அவளை பார்த்திருக்கிறாய் அதனால் அவளின் முகம் உனக்கு ஞாபகம் இருந்திருக்காது. இன்னொருமுறை பார்த்திட்டால் நினைவில் நிற்க போகிறது” என்று இதெல்லாம் ஒரு விடமாயென்று சாதாரணமாக சொன்னான் விக்னேஷ்.
“ஹோ…” என்று குரலை ஒரு மாதிரி இழுத்த வருண், அடுத்து கூறியதில் விக்னேஷ் அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து சென்றிருந்தான்.