நெஞ்சோடு காதல் சேர 17

அத்தியாயம் 17

வருண் என்னதான் சொல்ல வருகிறானென்று புரியாத நிலையில், எரிச்சல் மிகுதியில் வருண் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருந்த விக்னேஷிற்கு அடுத்து வருண் சொல்லியதில் பேரதிர்ச்சி.

“அந்த பொண்ணு முகம் நினைவில் வரணும் அப்படின்னா, போட்டோ அனுப்ப சொல்லி பார்த்துட்டே இருடா! என் உயிரை ஏன் எடுக்குற?”

“அந்த பொண்ணு முகத்தை ஒருமுறை தானே மச்சி பார்த்தேன்? அதனால் தான் எனக்கு அந்த பொண்ணு முகம் நினைவுக்கு வரலன்னு சொல்றியா?”

இப்போது விக்னேஷிற்கு மிகவும் பொறுமை வந்திருந்தது. என்ன இருந்தாலும் அவன் தன்னை விடப்போவதில்லை என்பதை உணர்ந்ததால்.

“ஆமா… அப்படியும் இருக்கலாம்.” இழுதுப்பிடித்துக் கூறினான் விக்னேஷ்.

“ஆனால் மச்சி… அதே ஒருமுறை தான் அவளையும் பார்த்தேன்.”

“இந்த அவள் யாரு?”

“இவள் என் கண்ணு முன்னாடி அடிக்கடி வந்து இம்சிக்கிறாளே!” என்று விக்னேஷின் கேள்விக்கு பதிலளிக்காது சாதரணமாகக் கூறினான் வருண்.

“அது யாருடா?”

விக்னேஷ் சந்தேகமாக மீண்டும் அதையே கேட்டான்.

“தேவிகா!”

“அப்படின்னா?” எதையுமே ஒருமுறையில் தெளிவாக புரியும்படி சொல்லமாட்டானா என்றிருந்தது.

“மென்னிலாவோட சிஸ்டர்டா… தேவிகா”

தேவிகா என்ற பெயரை சொல்லும்போதே வருணின் முகம் மென்மையானது. முகம் முழுக்க ஒருவித ஒளி பரவியது.

வருணின் அந்தத் தோற்றத்தில் விக்னேஷிற்கு அதிர்ந்து வந்தது. ‘இவன் என்ன பார்க்க சென்ற பெண்ணை நினைவில் கொள்ளாது அவளின் தங்கையின் நினைவு வருகிறது என்கிறான்!’ உண்மையிலும் விக்னேஷிற்கு ஈஸ்வரை நினைத்து பயம் வந்தது.

‘அந்தாளு சும்மாவே என்னை காய்வார்… இப்போ இவன் பண்றதுக்கு… ஆசை மகன்னு இவனை விட்டுட்டு என்னையல்லவா காய்வார்.’

மனதில் புலம்பிக்கொண்டே கேள்வியாக நண்பனை விளித்தான்.

“வருண்…”

“எனக்கு மென்னிலா மீது தானேடா சில உணர்வுகள் வர வேண்டும்… அதெல்லாம் தேவிகா மீது வருதுடா!”

“என்னடா சொல்ற…?” ‘உனக்கு ஈஸ்வர் கையால் அடி நிச்சயம்டா விக்கி.’

“ஆமாம்டா விக்கி எனக்கே அப்பப்போ டவுட் வருது… நிச்சயம், தேவிகாவுடனா, மென்னிலாவுடனா?” என்ற வருண் வானத்தை பார்த்த பார்வையை விலக்காது அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தான்.

“இப்போது கூட இந்த வானத்துல, மிதந்து போகிற மேகத்துல எல்லாம் என்னை பார்த்து சிநேகமா சிரிச்ச தேவிகா முகம் தான்டா தெரியுது” என்றான். வருணின் முகத்தில் அவ்வளவு ரசனை.

“எனக்கும் ஒன்னு நல்லா தெரியுதுடா வருண்.”

“என்னடா?”

“இதை உடனே ஈஸ்வர்க்கிட்ட சொல்லணும் தெரியுது. இல்லைன்னா நீ பண்ணும் காரியத்துக்கு அவர்கிட்ட எனக்கு நல்லா கிடைக்குமென்று தெரியுது” என்றவன் “உன் சங்காத்தாமே வேண்டாம்டா சாமி… உன் கல்யாணம் முடிஞ்சதும் சொல்லு நான் வந்து உன் பிரண்ட்ஷிப்பை புதுப்பித்துக் கொள்கிறேன்.

அதுவரை நான் உன்னை டிவோர்ஸ் செய்யுறேன்டா” எனக்கூறி விட்டால் போதுமென்று ஓடிவிட்டான்.

****

மென்னிலா தன் காதலனையே கரம் பிடிக்கப்போகும் சந்தோஷத்தில் உற்சாகமாக வலம் வந்தாள்.

திருமணமென்றாலே பெண்களுக்கு தனி கலை வந்துவிடும் போலும்.

மகளின் பூரித்த முகத்தைக் கண்டு ராஜராஜன் தன் தந்தையிடம் மகிழ்வாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் இன்னும் சில தினங்களில் வாடிய சருகாக மகளின் முகம் மட்டுமல்லாது மனமும் கசங்க இருக்க போவதை அந்த தந்தை உள்ளம் அறியாமல் போனது.

தெரிந்திருந்தால் மகளின் மனம் வாடாதிருக்க ஏதேனும் செய்திருப்பாரோ! தன் காதலையே காக்கத் தெரியாதவரா மகளின் காதலை காத்திடுவார்.

என்ன நடக்க வேண்டுமோ அதுவல்லவா நடைபெறும். இங்கு காலத்தினை மாற்ற, விதியின் செயல்களை வெல்ல எவருக்கேனும் வல்லமை உள்ளதா என்ன?

தேவிகா அலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்க, அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த மென்னிலா “எப்படியாவது கிருஷ்ணா’விடம் பேச வேண்டுமே! எப்படி?” என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பற்களில் கடிப்பட்டுக் கொண்டிருந்தது பெருவிரல் நகம்.

“அந்த விரல் பாவம்க்கா…”

தேவிகாவின் பேச்சு புரியாது மென்னிலா முழித்தாள்.

“அக்கா என்ன தீவிர யோசனை?”

“அதெல்லாம் ஒன்றுமில்லை” என்ற மென்னிலா மற்ற எவரேனும் தேவிகாவை போல கவனித்து என்னவென்று கேட்கக்கூடுமென அங்கிருந்து எழுந்து சென்றாள்.

“இந்த அக்காவுக்கு என்னவோ ஆகிப்போச்சு” என்றவளாக தேவிகாவும் எழுந்து தனது அறை நோக்கிச் செல்ல… அங்கிருந்த சிறு மேசையில் அன்று தரகர் கொடுத்துச் சென்ற வருணின் புகைப்படம் இருந்தது. அதனைக் கண்டதும் யாரேனும் தன்னை கவனிக்கின்றனரா என்று நோட்டமிட்ட தேவிகா சட்டென்று அப்புகைப்படத்தை எடுத்து தன்னுள் மறைத்தவளாக வேகமாக சென்றுவிட்டாள்.

அறைக்குள் நுழைந்தவள் தன்னுடைய செய்கையை உணர்ந்து அதிர்ந்து நின்றாள்.

மண்டையில் வண்டாகக் குடைந்தது.

‘என்ன காரியம் செய்தேன் நான்?’

தன்னையே கேட்டுக் கொண்டவளிடம் பதிலில்லை.

புகைப்படைத்தை ஒருமுறை திருப்பி பார்த்தவளின் மனம் சட்டென்று மேகம் விலகி நிலவு குளிர்விப்பது போல்… அவளின் மனதில் எழுந்த குழப்பம் அடங்கி அங்கே ரசனை ஆட்கொண்டது.

புகைப்படத்தில் வருண் அழகாக சிரித்துக் கொண்டிருக்க… அவளுக்கு இங்கே இதழ்கள் விரிந்தன. வருணின் கண்கள் அவளை உற்றுநோக்கும் மாயம். அவளின் தேகம் ஊசியாய் குளிர்வை உணர்ந்தது.

புகைப்படத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவளின் இதயம் அவளின் எண்ணத்தை அவளுக்கு அழகாக உணர்த்தியது.

பட்டென்று தீயை மிதித்தவள் போல் புகைப்படத்தை தூக்கி எறிய அவள் படுக்கும் மஞ்சத்தில் வீற்றியது.

“என்ன செய்கிறேன் நான்.” தரையில் சரிந்து முட்டியிட்டு அமர்ந்தவள் தன் கன்னத்திலேயே அறைந்து கொண்டாள்.

‘எனக்கு அவர் மீது காதலா?’ அவளின் கேள்வி அவளுக்கே அதிர்வை கொடுத்தது. காதலென்று அவளின் மனம் அடித்து சொல்வதை ஏற்க முடியாது தடுமாறினாள்.

‘இதெப்படி சாத்தியமாகும்? அவர் அக்காவிற்கு கணவனாக போகின்றவர்.’ அவளின் மனதை அவளே ஏமாற்ற பார்த்தாள். தன் மனதில் தான் சொன்ன வார்த்தைகளை பதிய வைக்க முயன்றாள்.

அந்தோ பரிதாபம் வருண் தான் ஆழமாக அவளின் மனதில் பதிந்து விட்டானே! உணர்ந்த நொடி அவளை நடுங்கச் செய்த்தது.

கால்களை கட்டிக்கொண்டு முகம் புதைத்து அமர்ந்தவள் தன்னையே நிந்தித்தவளாக அழுகையில் கரைந்தாள். அக்காவிற்கு முடிவு செய்தவர் மீது தன் மனம் கொண்ட நேசத்தை எண்ணி அவள் மீதே அவளுக்கு கட்டுகடங்கா கோபம் எழுந்தது.

மென்னிலாவை பார்க்கவென்று வருணின் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு வருகை தந்த போது… அவர்களை வாயிலில் வைத்து முதலில் பார்த்தது, அங்கே செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த தேவிகா தான்.

வந்திருந்த நால்வரில் நல்ல உயரமாக இளைமையோடு வருண் இருந்ததால் தேவிகாவின் பார்வை தானாக அவன்மீது படிந்தது. அப்போதுதான் அவளும் உணர்ந்தாள், வருணின் பார்வை அவளை மேலிருந்து கீழாக அளந்தது. மொத்தமாக அவளை பார்த்தவன் அவளின் தோற்றம் கண்டு புன்னகைத்துக் கொண்டான்.

அவனின் பார்வையில் விகல்பம் இல்லை.

அவர்கள் வீட்டின் சுற்றுச் சுவரை கடந்து உள்ளே வரும்போது… தூக்கி சொருகிய பாவாடையும், கையில் தண்ணீர் குழாயுமாக அவள் ஆடிக்கொண்டிருந்த விதம் வருணின் கவனத்தை அவள் பக்கம் ஈர்த்திருந்தது. அவர்களை கண்டும் அவள் அப்படியே இருக்கவே அவனுக்கு அவளின் அந்நிலை சிரிப்பை தோற்றுவித்தது.

வருண் சிரித்ததும் தான் தன்னிலை அடைந்து, தன்னை குனிந்து பார்த்தவள் கையிலிருந்த குழாயினை கீழே போட்டுவிட்டு பாவாடையை கீழே இறக்கிவிட்டாள்.

அவர்கள் அவளிடம் விவரம் கேட்டு உள்ளே செல்ல… தரையின் ஈரம் வழுக்கி கீழே விழப்போனவளை அவளுக்கு பின்னால் சென்ற வருண் தன் கைகளில் தாங்கியிருந்தான்.

இருவரின் முகமும் ஒருவரையொருவர் பார்த்திருக்க… இருவரின் மனமும் அவர்கள் உணரும் முன்னரே அப்போதே இணைந்திருந்தது.

அவளின் இடை தாங்கியிருந்த வருணின் கை அழுத்தத்தில் சுயம் பெற்றவள், அவனின் பிடியிலிருந்து சற்றும் விலகும் எண்ணமில்லாது…

“நீங்க பார்க்க வந்திருப்பது என் அக்காவை!” என்றாள்.

அவளுக்கு அவன் மீது தவறான எண்ணமில்லை. அவனின் மீதே தன் பார்வை நிலைத்திருப்பதை உணர்ந்தவள், தனக்காக அவ்வார்த்தைகளை சொல்லிக் கொண்டாலும்… அவனும் தான் தான் பார்க்க வந்திருக்கும் பெண்னென்று தவறாக எண்ணிவிடக் கூடாதே என்பதற்காகவும் கூறினாள்.

தேவிகா சொல்லும் வரை… அவளிடம் ஏதோவொரு வகையில் கட்டுண்ட அவனின் மனம் தான் பெண் பார்க்க வந்திருப்பதை நினைவில் கொள்ளவில்லை.

அவள் சொல்லிய வார்த்தைகள் கிரஹித்ததும் பட்டென்று விலகியவன் உள்ளே சென்றுவிட்டான்.

அதன் பின்னர் இருவருமே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. ஒருவர் மற்றொருவரிடம் செல்லும் பார்வையை முயன்று கட்டி வைத்திருந்தனர். இந்த பார்வை ஏனென்று இருவருக்குமே விளங்காத நிலை.

அதில் வருண் இன்னும் புரியா நிலையில் இருக்க, புரிந்து கொண்ட தேவிகா இதெப்படி நடக்குமென்று மனம் வெதும்பி அழுகையில் கரைந்து கொண்டிருக்கிறாள்.

இரவு உணவையும் தவிர்த்தவளாக அறைக்குள்ளே இருந்தவள். வருணின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு தன் சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.

‘அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் மீது எனக்கு விருப்பம் உள்ளது என்று எப்படி சொல்ல முடியும்? அப்படி சொன்னால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்!’ பல விதமாக பலவாறு மனதை குழப்பி யோசித்துக் கொண்டிருந்தவள் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

கையிலிருந்த வருணின் புகைப்படத்தை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவள்… தன் கட்டுப்பாடு தகர்வதை உணர்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டு புகைப்படத்தை தூள் தூளாகக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டவள்…

“அவர் அக்காவின் கணவர்” என்ற வார்த்தைகளை வலிக்க வலிக்கக் கூறிக்கொண்டே இருந்தாள். விடியும் பொழுதில் மனம் அவ்வார்த்தைகளை ஏற்றுக்கொண்டதாகக் கருதியவள் எதுவுமில்லை எனும் விதமாக குளித்து முடித்து புது தேவிகாவாக தன்னை தன் மனதை நிலைநிறுத்தி அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அவளின் மனம் இறுகியிருந்தது. இனி அதனை இளக்கும் சக்தி வருணுக்கு கிட்டுமா? வருண் தேவிகாவுக்கு சொந்தமாவானா?

இங்கு தேவிகா தான் உணர்ந்த காதலை மனதில் புதைத்த நொடி… அங்கு வருண் தன் காதல் எதுவென்று அறிந்து கொண்டிருந்தான்.

வருண் தன்னிடம் சொல்லியதை எல்லாம் இரவு வீட்டிற்கு வந்த விக்னேஷ் தன் மனைவி வசுதாவிடம் சொல்லி புலம்பினான்.

“இந்த வருண் அவங்க அப்பா கையால் எனக்கு அடி வாங்கி வச்சிடுவான் போலிருக்கு வசு.”

விக்னேஷின் புலம்பலை கேட்டு எரிச்சலடைந்த வசு என்னவென்று கேட்க, விக்னேஷும் வருண் பேசிய வார்த்தைகள் ஒன்றும் மாறாது அப்படியே தன் மனைவியிடம் கூறினான்.

அனைத்தும் கேட்ட வசு சற்றும் யோசிக்காது…

“வருண் அண்ணாவுக்கு தேவிகா மீது வந்திருப்பது காதல்” என்று சொல்ல,

“உனக்கு வருணே தேவலாம் போல” என்று விக்னேஷ் அதிர்ச்சிக்குள்ளானான்.

“ஒரு பொண்ணு முகம் எவ்வித காரணகாரியமின்றி, அடிக்கடி மனதில் தோன்றுகிறது என்றால் என்ன அர்த்தம் அதுவும் ஒருமுறை பார்த்த பெண்… வேறொரு பெண்ணை பார்த்து முடிவு செய்த நிலையில். கொஞ்சம் நீங்களே யோசிங்க” என்று அவனுக்கு விளக்கிய வசு தன் வேலைகளை கவனிக்கச் சென்றிட… சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்த விக்னேஷ் வருணுக்கு அழைத்து வசு சொல்லியவற்றை சொல்ல, அதை கேட்ட வருணுக்கும் அதிர்ச்சிதான்.

அப்போதுதான் வருணுமே அதுவாக இருக்குமோவென்று அந்த கோணத்தில் சிந்திக்க… அவனின் மனம் தெளிவாகியது.

காதலை உணர்ந்ததும் தேவிகாவை போல் வருண் வருந்தவில்லை. மாறாக மனதில் உற்சாகம் ததும்ப அந்நொடியை விரும்பி அனுபவித்தான்.

error: Content is protected !!
Scroll to Top