அத்தியாயம் 18
சுப்பாராவ் அளித்த வைஷூவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்த வம்சி… எதிர்பக்கம் அழைப்பை எடுக்க காத்திருக்க, வம்சியின் அலைபேசி அழைப்பினைத் தாங்கி வந்தது.
வம்சி எதிர்பார்த்த அழைப்பு.
தொலைபேசியை அதனிடத்தில் பொருத்தியவன்… தன்னுடைய அலைபேசியை எடுத்து ஆர்வமாக செவி மடுத்தான்.
ஆனால் பேசாது மௌனம் காக்க, எதிர்புறத்தில் அப்படியொரு சிரிப்பு. ஆங்காரமாக ஒலித்தது.
“என்ன வம்சி கிருஷ்ணா… எப்படி இருக்க?”
ரத்தினத்தின் குரலில் உன்னை நான் கண்டு பிடித்துவிட்டேன் என்கிற தெனாவட்டு.
அவரின் நிலை அறிந்த வம்சி தனக்குள் சிரித்துக் கொண்டான். அவனாக நினையாது அவனை அவர்களால் கண்டுபிடித்திருக்க முடியுமா?
“நீங்களாக என்னை கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தால் அது தவறு மிஸ்டர்.ரத்தினம். என்னை எதுவும் செய்ய நான் நினைக்க வேண்டும். நான் சம்மதம் அளிக்க வேண்டும்.”
வம்சியின் பேச்சில் ரத்தினம் ஆடிப்போனார்.
வம்சி சென்னை வந்த அன்று வேண்டுமென்றே ரத்தினத்தின் ஆட்களின் கண்களில் படுமாறு சென்றான். வம்சி நினைத்தது போலவே அவர்களும் அவனை தொடர, விக்னேஷின் கண்ணிலிருந்து மறைந்தது போல அவர்களின் கண்ணிலிருந்தும் நொடியில் தன்னை மறைத்துக் கொண்டான்.
வம்சியின் வண்டி எண்ணை குறித்தவர்கள் அதனை வைத்து வம்சி இருக்கும் இடத்தை ஆராய அவன் இருக்குமிடம் தெரிந்து இப்போது ரத்தினம் வம்சியை அழைத்தும் விட்டார்.
ஆனால் ஒன்று அவன் மனது வைத்ததால் தான் அவனை கண்டுபிடிக்க முடிந்தது என்ற உண்மை அவரை கோபம் கொள்ளச் செய்தது.
“என்ன வம்சி தைரியம் வந்துவிட்டது போலிருக்கே!” ரத்தினம் எள்ளலாக வினவினார்.
“புலி பதுங்குவது பயத்தினால் இல்லை.” வம்சியின் கூற்று அவரை சற்று சிந்திக்க வைத்தது.
“உன் குடும்பத்தை நினைத்து… உன்னால் அவர்களுக்கு ஒன்றுமாகிடக் கூடாதென்று தானே பயந்து ஓடிப்போன… இப்போ என்னவோ வேறு கதை சொல்ற?” ரத்தினத்தால் வம்சியின் திமிரான பேச்சினை ஏற்க முடியவில்லை.
“ஹஹா…” சன்னமாக சிரித்த வம்சி, “நீ அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது” என்றான்.
வம்சியின் சிரிப்பு ரத்தினத்திற்கு கோபத்தையே ஏற்படுத்தியது.
கருவில் உதித்தது முதல் ஒன்றாகவே இருந்த தன் உடன் பிறப்பை அன்று அந்நிலையில் மருத்துவமனையில் கண்டதும் வம்சி தன் பணி, தன் செயலே வருணின் இந்நிலைக்கு காரணமென்று பயந்தது உண்மை தான்.
சிந்திக்க முடியாத நிலையில் குடும்பத்தை விட்டு விலகியிருப்பதே நல்லதென்று எண்ணியவன் தூரமும் வந்துவிட்டான்.
இவ்வளவு நாள் தனித்து இருந்ததன் வலி… வம்சியை சிந்திக்க விடவில்லை. ஆனால் ரத்தினத்தின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருந்தான். எந்த வழியிலெல்லாம் ரத்தினத்தை சட்டத்தின் முன்பு நிற்க வைக்க முடியுமோ அந்த வகையிலெல்லாம் ரத்தினத்திற்கு எதிராக காய்களை நகர்த்திக் கொண்டுதான் இருந்தான்.
ரத்தினத்திற்கு மொத்தமாக மூடுவிழா நடத்திய பின்னரே சென்னை செல்ல வேண்டுமென்று நினைத்தவன் பொறுமை காத்தான்.
அதெல்லாம் தன்னை காண ஏக்கத்தோடு ஓடிவந்த வருணை நேரில் காண்கிற வரை மட்டுமே! அன்றிரவு தன்னை காண முடியாத சோகத்தை விக்னேஷ் அறியாது வருண் தனக்குள் புதைத்தவாறு மறுபக்கம் திரும்பி கலங்கிய விழிகளை சரி செய்வதை கண்ட வம்சி அப்போதே முடிவு செய்துவிட்டான். தான் சென்னை செல்லும் நேரத்தினை.
அதனாலே அன்று வம்சியின் ஆட்களின் முன்பு தன்னைக் காட்டிக்கொண்டான்.
“என்ன ரத்தினம் பேச்சே காணோம்” என்ற வம்சி… “நான் நகர்த்தும் காய்கள் சரியென்றால், உன் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி இந்நேரம் எனக்கு சென்னைக்கு மாற்றல் வாங்கியிருப்பாய்! அதனை என்னிடம் நீயே சொல்ல வேண்டுமென்று எனக்கு அழைத்திருக்கிறாய் சரிதானே!” என்றான்.
ரத்தினத்தின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் மாறியது.
“இப்போது நான் அங்கு வருவது உனக்குத்தான் ஆபத்து மிஸ்டர்.ரத்தினம்.” வம்சியின் தற்போதைய பேச்செல்லாம் ரத்தினத்தை பயம் கொள்ளவே செய்தது.
‘வேலியில் திரிந்த ஓணானை வேட்டியில் விட்டுக் கொண்டோமோ!’ ரத்தினத்தால் நினையாது இருக்க முடியவில்லை.
“ஏன் ரத்து… பெரிய பெரிய குற்றவாளிகளையே என்கவுண்டருன்னு அசால்ட்டா போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருக்கேன்.
நானா உனக்கு பயந்து… என்ன ரத்து காமெடியெல்லாம் பண்ணிட்டு.”
சிரித்துக்கொண்டே பேசிய வம்சி நொடியில் தன் முகத்தில் இறுக்கத்தைக் கொண்டு வந்து… குரலில் அழுத்தத்தைக் கூட்டி,
“என் வருண் மேல் கை வைத்த உன்னை மொத்தமாக வேரறுக்கத்தான் இந்த வனவாசம். நான் பதுங்குவது உனக்கு தெரியக்கூடாது என்பதற்கே என் செயல் என் குடும்பத்திற்கு பாதகாமாக அமையாமல் இருக்க நான் விலகியிருக்க வேண்டுமென்று பொய்யான காரணத்தை ஜோடித்து தனித்து இருந்தேன்” என்றான்.
உண்மையில் குடும்பத்திற்காகவே வம்சி தனித்திருந்தான். என்று தன் அன்னையின் மீதே ரத்தினம் கை வைக்க துணிந்தானோ அன்றே தன் விலகலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்.
வம்சியின் பேச்சில் பேச வார்த்தைகளற்று ரத்தினம் அரண்டு நிற்க,
“இன்னும் இரண்டு நாளில் நானே வருகிறேன் ரத்து… அம் பேக்… கெட் ரெடி போர் அவர் பேட்டில்” என்ற வம்சி அலைபேசியை வைத்துவிட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் வைஷூவின் எண்ணிலிருந்து காவல் நிலைய தொலைபேசிக்கு அழைப்புவர அதனை ஏற்று காதில் வைத்த வம்சி கூறிய ஹலோவினிலேயே வைஷூவின் தேகம் அதிர்ந்து அடங்கியது.
‘ப்பா… மனுஷன் குரல்ல கூட கெத்து போல… ஒரு வார்த்தைக்கே பயந்து வருது.’
வைஷூ தன்னைப்போல் வாய்விட்டு சொல்லிவிட,
“ஆர் யூ வைஷ்ணவி பிரகாஷ்” என்று அடுத்த அதிர்வை அவளுக்கு பரிசாக அளித்தான்.
“அவ்வுனு சார்.”
“தமிழ் தானே நீங்க… சோ தமிழிலே பேசலாம்.” அதிகாரமாகத்தான் ஒலித்தது வம்சியின் குரல்.
“சாரி சார் இருக்க இடத்தோட பழக்க தோஷம். அப்பப்போ சட்டுன்னு தெலுங்கு வந்திடும்.”
“நாட் ஆன் இஸூஸ்” என்றவன், “எதுக்காக என்னைத் தேடி வந்தீங்க? உங்களுக்கு உதவி செய்ததற்கு தேன்க்ஸ் சொல்ல வந்திருந்தால்… நோ நீட். பட் நீங்க அதுக்காக வரல அம் அ ரைட்?” எனக் கேட்டிருந்தான்.
“சார்… எப்படி சார்… சான்ஸே இல்லை. இந்த கெத்த பார்த்துதான் பல பேர் பின்னாடி சுற்றியும் கண்டுகொள்ளாது இருந்த என் பிரண்டையே உங்களைத் தேட வச்சீட்டிங்க!” அவனைப்பற்றி பெருமையாக பேசியவாறு உண்மை காரணத்தையும் சொல்லியிருந்தாள்.
“மென்னிலா?” வம்சிக்கு சந்தேகமெல்லாம் இல்லை. வைஷூ சொல்லியதும் உறுதியாகத் தெரிந்தது அது அவனின் நிலா என்று. அதனால் தான் பட்டென்று தன்னவளின் பெயரை மட்டும் சொல்லிக் கேட்டிருந்தான்.
“வாவ் சார் எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?” வைஷூவின் உற்சாகமெல்லாம் வம்சியிடம் துளியும் இல்லை. அவன் என்ன நினைக்கின்றான் என்றெல்லாம் வைஷூ கருத்தில் கொள்ளவே இல்லை.
மென்னிலா அவன் மீது கொண்ட காதல் முதல்… அவனைத் தேடி அலைந்தவரை எல்லாம் சொல்லியவள், இறுதியில் சாரி கேட்க,
வம்சி புரியாது “எதற்கு?” என்றான்.
“இதெல்லாம் மென்னிலா உங்ககிட்ட உங்களுடைய பிரைவேட் டைமில் சொல்லணும் இருந்திருப்பாள் ஆனால் நான் உளறிட்டேன்” என விளக்கம் அளித்தாள்.
வைஷூ சொன்னதைக் கேட்ட வம்சிக்கு காற்றில் இறகை போல் மிதக்கும் உணர்வு. தன்னைப்போல் தன் இணையும் நேசம் கொண்டிருப்பது மகிழ்வு தானே. அது வரமும் அல்லவா! மனதில் உற்சாகம் ததும்பியது. ஆனால் வைஷூவின் கடைசிப்பேச்சு அவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை.
அதையும் வம்சி கேட்பதற்கு முன்பு வைஷூவே புரிய வைத்திருந்தாள்.
“அப்புறம் சார்… மென்னிலாவின் மீது உங்களுக்கும் காதல் இருந்திருக்கும் போலவே?”
“வாட்…”
“சும்மா நடிக்காதீங்க சார், அவள் நியாபாகமே இல்லாமதான்… பொண்ணு பார்க்க போன இடத்தில் அப்படி திகைச்சுப்போய் பார்திருந்தீங்களா?”
வைஷூவின் பேச்சில் வம்சிக்கு எதுவோ புரிந்தது.
“நீங்க தான் பொண்ணு பார்க்க வர்றீங்கன்னு தெரியாமல் மென்னிலா துடிச்ச துடிப்பு எனக்குத்தான் சார் தெரியும்.
வந்த மாப்பிள்ளை நீங்கன்னு தெரிந்த பிறகு அவள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அவள் சொல்லுவா சார், காதல் உண்மைன்னா அதுவே நம்மை சேர்த்து வைக்குமென்று. இப்போ அது அவள் விடயத்தில் உண்மையாகிருச்சு” என்று வைஷூ நீளமாக சொல்லிக்கொண்டே போக வம்சி அழைப்பைத் துண்டித்திருந்தான்.
கேட்ட அனைத்தும் வம்சியை மொத்தமாக மரிக்கச் செய்திருந்தது. மேற்கொண்டு எதுவும் கேட்கும் திராணி அவனிடத்தில் இல்லை. பல பேரை பார்வையாலேயே வீழ்த்துபவன் இன்று காதலில் வீழ்ந்து போனான்.
‘வருண் பார்க்கச் சென்ற பெண் நிலாவா?’
மனதின் ஓலம் துடிப்பை நிறுத்தச் செய்தது.
தன் காதல் குடும்பத்தில் வலியை ஏற்படுத்துமென்றே விலகி இருந்தான். அவள் தனக்கு வேண்டாமென்றே ஒதுங்கி போனான்.
‘ஆனால் தன்னைப்போல், தான் அவளின் நினைவால் தவிப்பது போல் அவளும் தன் மீது காதல் கொண்டு தவிக்கின்றாள். நானாவது அவளை ஒதுக்கிவிட்டு இருந்திருக்கிறேன். ஆனால் அவள்… என்னைத் தேடியிருக்கின்றாள்.’ மனதில் எழுந்தவையெல்லாம் சில்லென்ற உணர்வைத் தர உண்மை அவனை நேருக்கு நேர் அறைந்திருந்தது.
“வருண் மென்னிலாவுக்கு பார்த்திருக்கும் பெண்.”
இதயத்தில் பதிய வைக்க முயற்சித்தான்.
‘மென்னிலா காதலிப்பது உன்னைத்தான். அவள் வருணை நீயென நினைத்தே சம்மதம் சொல்லியிருக்கின்றாள்.’ வம்சியின் மனம் எடுத்துரைத்தது.
“ஆனால்…” வம்சி முதல் முறையாக தடுமாறுகின்றான்.
“ஆனால், நான் மென்னிலாவை கண்டதும் திகைத்து நின்றதாக வைஷ்ணவி சொன்னார்களே! அப்படியானால், வருணுக்கு மென்னிலாவை பிடித்திருக்கிறது.
ஆம் பிடித்திருக்கிறது.
அதனால் தானே நிச்சயம் வரை சென்றிருக்கிறது.”
‘நிச்சயம் இன்னும் நடக்கவில்லை.’
வம்சியின் மூளைக்கும் மனதிற்கும் இடையே பெரும் வாக்குவாதமே நடைபெற்றது.
“என் வருணுக்கும் என்னைப்போலவே நிலாவை பிடித்திருக்கிறதே!”
‘ஆனால் அவள் நேசிப்பது உன்னைத்தான்.’
முடிவெடுக்க முடியாது குழம்பினான்.
‘உன் காதல் தெரிந்தால் வருணே விலகிவிடுவான்.’
“ஆமாம் விலகிடுவான். எனக்காக அவன் விலகும் போது அவனுக்காக நானும் விலகுவதுதானே சரியாக இருக்கும்” என்று மனதிடம் கேட்ட வம்சி தீர்க்கமான முடிவிற்கு வந்திருந்தான்.
‘அப்போ நீ…’
“இந்த நொடியிலிருந்து நிலா… மென்னிலாவுக்கு என் மனதில் இடமில்லை” என்று கத்தியிருந்தான்.
வம்சியின் சத்தம் கேட்டு குமார், சுப்பாராவ் எல்லோரும் அவனின் அறைக்குள் வந்திருந்தனர்.
அவர்களிடம் ஒன்றுமில்லை என்று தலையசைத்தவன் இருக்கையில் அமர்ந்து கோப்பு ஒன்றை கையிலெடுத்து அதனை பார்க்கத் தொடங்க… அவ்விருவரும் அவனின் செயலில் ஆராயும் பார்வையோடு வெளியேறினர்.
அவர்கள் மறைந்ததும் கையிலிருந்த கோப்பினை சுவற்றில் விசிறி அடித்தவன்… ‘முதலில் ரத்தினத்தை கவனிப்போம்’ என்று தன் காதலை ஒத்தி வைத்தான்.
இல்லை இல்லை தன் வருணுக்காக தன் காதலை இழக்கத் துணிந்தான்.
‘ஆனால் பின்னாளில் மென்னிலாவுக்கு உண்மை தெரிய வந்தால், வருண் நீயில்லை என்று அறிந்தால்? அந்நொடி உங்கள் மூவரின் வாழ்வும் கேள்விக்குறியாகும்.’
மனம் சொல்லுவதை கேட்கும் நிலையில் வம்சி நிதானமாக இல்லை.
அந்த நொடி தன் போலீஸ் மூளையை கழட்டி வைத்திருந்தான் போலும்… எதையும் ஆராய மனமின்றி வருணுக்கு பார்த்திருக்கும் பெண் மென்னிலா என்று அறிந்ததும் எதைப்பற்றியும் விளக்கம் பெற முயலாது தன் காதலை கொன்று புதைப்பது மட்டுமே தீர்வாகக் கருதி… இதயம் ரகணமாக வலிக்க வலிக்க கத்தியை சொருகிக் கொண்டிருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவனின் நிலாவை அடி ஆழத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தான்.