அத்தியாயம் 19
வருண் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
பின்னே அவனும் காதலில் விழுந்து விட்டானே! மகிழ்வில் நீச்சல் அடிக்கத்தானே செய்வான்.
காதலை உணர்ந்ததும் தன்னுடன் பிறந்தவன் போல் அல்லாது தன்னவளிடம் சொல்லிடத் துடித்தான். ஆனால் அதற்கு முன் பல வேலைகள் அவனுக்கு அணிவகுத்து இருந்தன.
குழம்பிய முகத்தோடு தெளிவில்லாது மாடிக்குச் சென்றவன், கீழே இறங்கி வரும் போது அவ்வளவு மகிழ்வில் இருந்தான். நடையில் ஒரு துள்ளல். முகத்தில் உற்சாகம். அவனை பார்த்ததும் திரிலோகர் அவதானித்து விட்டார்.
‘இப்போது இந்த வீட்டில் நடக்காத சில விடயங்கள் நடக்க இருக்கின்றன.’ நினைத்தவர் அர்த்தமாக சிரித்துக் கொண்டார்.
விக்னேஷிடம் பேசிவிட்டு காதலை அறிந்த கணத்தை முற்றுமாக அனுபவிக்க முடியாது மென்னிலாவின் நினைவு அலைகழிக்க, அதனை முதலில் சரி செய்ய வேண்டுமென்று, ஈஸ்வரைத் தேடி கீழிறங்கி வந்த வருண்…
வசந்தியிடம் “அப்பா எங்கேம்மா?” எனக் கேட்டவன்…
“வர நேரம் தான்” என்று வசந்தி பதில் வழங்கியதும்,
தன்னை பார்த்த பார்வை மாற்றாது இருக்கும் திரிலோகரிடம் வந்தான்.
“கெஸ் பண்ணிடீங்கதானே!” என்றவன் தான் கேட்டதற்கு பதில் சொல்லாது இருப்பவரிடம் “உங்களது சிரிப்பே ஆமென்று சொல்லுதே தாத்தா” என்றான்.
அவரிடம் ஒரு ஆழ்ந்த பார்வை. அவ்வளவு தான்.
“அப்போ நான் இப்போ என்ன பண்ணப்போறேன்னும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படித்தானே!”
ஆம் என்பதைப்போல சிறு தலையாட்டால் அவரிடம்.
“அப்படின்னா, ரிசல்ட் என்னவாக இருக்குமென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.”
“அறிந்தது சரியாக நடக்கிறதா என்பதை கவனிப்பதே என் வேலை. வெளியில் சொல்ல இயலாது. நடப்பதை முன்பே அறிந்து கொண்டால் தேவையில்லா சஞ்சலங்களே வந்து சேரும்.” அமைதியாக சாந்தம் தவழும் குரலில் கூறினார்.
“அப்போ சொல்ல மாட்டீங்க!”
அவரிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை.
“எதுவுமே கேட்கக்கூடாது… அப்படித்தானே தாத்தா?”
“நான் வெறும் ஆடியன்ஸ் மட்டுமே!”
வம்சியை போன்று தன்னிடம் வாயாடும் இந்த வருணை திரிலோகருக்கு நிரம்பவே பிடித்தது. பின்பு அவரின் ஆசை பேரனையல்லவா தன் பேச்சின் மூலம் நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றான்.
உருவத்தில் ஒன்றாக இருந்தாலும் வம்சியின் அழுத்தமும் வீட்டார்களிடம் மட்டும் காட்டும் கலகலப்பும் அவரிடம் வருணுக்கு வராது. எப்போதும் வருணிடம் அமைதியே. ஆனால் இன்று, காதலுக்கு குணத்தையும் மாற்றும் வல்லமை உண்டு போலும்.
வருண் ஏதேதோ பேசிக்கொண்டே செல்ல திரிலோகர் தன் சிந்தனையிலேயே இருந்தார். அவனின் இறுதி கேள்வி அவரை பேச வைத்தது.
“என் திருமணத்திற்கு வம்சி வருவானா தாத்தா.”
“நடக்கப்போவது வம்சியின் திருமணமும் தான்!”
“தாத்தா!”
திரிலோகரின் பதிலில் எத்தகைய உணர்வினை வெளிப்படுத்தவென்று வருணுக்கு தெரியவில்லை. வம்சிக்கும் திருமணமென்றால் வருணுக்கு சந்தோஷம் தான்.
“ஆனால், அவனுக்கும் திருமணம் என்றால்… எனக்கு இந்த திருமணம் நடக்குமா?” வருண் அதிர்ந்து கேட்டான். ‘அப்போ என் காதல்.’ மனம் அரற்றியது.
“வம்சி நாளை வருகிறான்.”
அவன் கேட்டதற்கு பதில் சொல்லாது வேறொன்றை கூறிச்சென்றார்.
வம்சி வருகிறான் என்பதை நினைத்து அந்த நொடி அவனால் முற்றும் மகிழக்கூட முடியவில்லை.
அந்நேரம் ஈஸ்வர் வருகை தந்தார்.
‘தாத்தா சொல்லிச் செல்வதை பார்த்தால் இது பெரிய சிக்கலில் முடியும் போலிருக்கே! என்ன செய்வதென்று பொறுமையாக யோசிக்கவெல்லாம் நேரமில்லை. இன்றே இதற்கு முடிவு கட்டுகிறேன்’ என மனதோடு சொல்லிக்கொண்ட வருண் ஈஸ்வர் இரவு உணவை முடிக்கும் வரை அமைதியாக அவரையே பார்த்திருந்தான்.
ஈஸ்வரே மகனின் பார்வை உணர்ந்து… உணவை முடித்ததும் கையினை சுத்தப்படுத்திக்கொண்டு வருணின் அருகில் வந்தமர்ந்தார்.
“என்னிடம் எதாவது பேச வேண்டுமா வருண்?” ஈஸ்வரிடத்தில் மகன் மீது அத்தனை கனிவு. அவரின் கை மகனின் கன்னத்தை வாஞ்சையாக தடவியது.
அவரின் பாசத்தில் கட்டுண்ட மனதை முயன்று வெளிக்கொணர்ந்தவன்…
“உங்களிடம் முக்கியமான விடயம் சொல்லணும் டாட்” என்றிருந்தான். முகத்தில் வியர்வை அரும்பியது. அவனின் பேச்சில் தடுமாற்றம்.
ஈஸ்வரின் கண்கள் அவனின் படபடப்பை குறித்துக்கொண்டன.
அவர்கள் பேசிக்கொண்டிருக்க, வசந்தி அழகுவிற்கு உணவு ஊட்ட அறைக்குள் சென்றார்.
திரிலோகர் தனது அறையிலிருந்து வெளிவந்து அவர்களுக்கு முன் உட்கார்ந்தார்.
‘வேடிக்கை பார்க்க வசதியா வந்து உட்கார்ந்தாச்சு. எதாவது ஹெல்ப் பண்ணலாமே!’ வருண் மனதிற்குள் சொல்ல, அதனை அறிந்தவர் உதடு பிதுக்கி தன் இயலாமையை வெளிப்படுத்தினார்.
திரிலோகரிடம் “சாப்பிட்டாச்சா மாமா” எனக்கேட்ட ஈஸ்வர் அவரின் பதிலை பெற்றுக்கொண்டு…
“என்ன விடயம் சொல்லுப்பா?” என மகனை சொல்ல ஊக்கினார்.
வருண் முதன் முதலாக அவன் வாழ்வில் ஈஸ்வர் செய்ய நினைக்கும் ஒன்றை மாற்ற முயற்சிக்கின்றான். அதுவே அவனை தடுமாறச் செய்தது. இதுவரை ஈஸ்வர் ஒன்றை சொல்லி அதனை வருண் மறுத்தது இல்லை. அதனால் இன்றைய தன் மறுப்பிற்கு தந்தையின் எதிர்வினை எப்படி இருக்குமென்று இதற்கு முன்பு அறிந்ததில்லை. அதனால் வருணுக்கு மனதில் சிறு பயம் கூட எழுந்திருந்து.
ஈஸ்வர் கேட்ட பின்பு சொல்ல வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி வெளியே வருவனாயென்று வருணிடம் ஆட்டம் காட்ட, அவனிடம் அமைதியே!
“உனக்கானது உன்னையடைய நீதான் முயற்சி செய்ய வேண்டும் வருண்.” திரிலோகரின் பொருள் புரிந்த வருண்… ஈஸ்வரை பார்ப்பதை தவிர்த்து,
“எனக்கு மென்னிலா மீது விருப்பமில்லை டாட்” என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லியிருந்தான்.
“அப்போ வேறு யார் மீது விருப்பம்?”
பட்டென்று கேட்டிருந்தார். அவர் கேட்டது சரியென்றே வைத்துக் கொண்டாலும், கேட்ட விதம் வருணை பலமாய் தாக்கியது.
“டாட்…”
“என்னடா புதுசா குரலெல்லாம் உயருது…”
வருணைவிட அதிகமாக அவர்தான் கத்திக் கொண்டிருந்தார்.
உள்ளறையில் படுக்கையில் இருக்கும் அழகுவிற்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த வசந்தி கூட இருவரின் சத்தத்திலும் அங்கு ஓடி வந்திருந்தார்.
“சரி சொல்லு… போய் பார்த்துவிட்டு வந்து இன்றுவரை அமைதியாகத்தானே இருந்தாய்? அந்த பெண் மென்னிலாவை மணக்க சம்மதம் தானே சொல்லாயிருந்தாய்… இப்போ என்ன மாற்றம்?” இடுங்கிய விழிகளுடன் கேட்டிருந்தார்.
“எனக்கு மென்னிலாவின் தங்கை தேவிகாவை பிடித்திருக்கிறது.”
சிறிதும் யோசிக்காது சொல்லிவிட்டான்.
வருண் சொல்லி முடித்ததும் ஈஸ்வர் கையை ஓங்கிக்கொண்டு செல்ல… திரிலோகர் இடை புகுந்து தடுத்திருந்தார்.
தந்தையின் செயலில் வருண் அசைவின்றி திகைத்து நின்றான்.
“டாட் என்னை இப்போ அடிக்க வந்தீங்களா?” அதிர்ச்சியிலிருந்து விலகாது கேட்டான்.
“ஆமாடா நீ சொன்னதுக்கு அடித்திருந்தால் கூட என் ஆத்திரம் தீராது” என்றவர்,
“பார்க்க போன பெண்ணை விட்டு அவளின் தங்கையை பிடித்திருக்கிறது சொல்கிறாயே… இதை நான் அவர்களிடம் சொன்னால் உன்னைப்பற்றி நம் குடும்பத்தைப்பற்றி என்ன நினைப்பார்கள்.
என்னாலெல்லாம் அவர்களிடம் சென்று உங்க பெரிய பெண்ணை பிடிக்கவில்லை. சிறிய பெண்ணை தான் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியாது.
அப்படி சொன்னால் அந்த பொண்ணோட அப்பா என் முகத்தில் உமிழ்வான்டா” என்று தன் போக்கில் பேசிக்கொண்டே சென்றார்.
“அதற்காக விருப்பம் இல்லாத பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள முடியுமா?” இப்போது வருணுக்கும் மிதமிஞ்சிய கோபம். இப்படி புரிந்துகொள்ளாமல் பேசிகிறாரே என்று.
“இப்போ என்னதான் டாட் சொல்றீங்க?”
“பெரிய பொண்ணை பார்க்க வந்த இடத்தில் உங்க சின்ன மகளை பார்த்திருக்கிறான் என்று அவர்களிடம் என்னால் சொல்ல முடியாது.
“அப்போ நானே சொல்கிறேன்.”
“அதுக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். உனக்கு மென்னிலா உடன் தான் திருமணம். என் பேச்சை மீறினால் நீயும் எனக்கு மகனில்லை.” காட்டமாக உறுதியுடன் சொல்லியவர் சென்று விட்டார்.
மற்ற மூவரும் தான் செய்வதறியாது விழி பிதுங்கி நின்றனர். திரிலோகருமே ஈஸ்வரின் இத்தகைய கோப முகத்தை எதிர்பார்க்கவில்லை.
தருணும் தந்தையின் இந்த முகத்தில் கலக்கம் கொண்டிருந்தான். அவரை எதிர்த்து முதல் முறையாக இவ்வளவு பேசியதே அதிகம். இதில் இறுதியாக அவர் சொல்லிவிட்டுச் சென்றதை நினைத்தவனுக்கு தந்தையற்ற ஒரு வாழ்வை எண்ணி பார்க்கக்கூட முடியவில்லை. அதேசமயம் தேவிகாவை விடுத்து மென்னிலாவையும் மணந்து கொள்ள முடியாதென்றே உறுதியாக நினைத்தான்.
அடுத்து என்ன செய்வதென்று புரியாது, நடுக்காட்டில் தனித்து விடப்பட்ட சிறுவன் போல் தவித்து நின்றவனின் மனம் வம்சியை தேடியது.
“வம்சி எங்கடா இருக்க…!” வரவேற்பறையின் நடுவில் நின்றிருந்தவன், தலையை பிடித்துக்கொண்டு மேல் நோக்கி கத்தியிருந்தான்.
வசந்தி அவனின் நிலையில் பதறிப்போனார்.
“வருண்.”
“அம்மா என்னை கொஞ்சம் தனியாவிடுங்க” என்றவன்,
“இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்தும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறீங்க இல்லையா?” என திரிலோகரிடம் கேட்டு, “அப்பா இல்லாமல் நானெப்படி… என் திருமணம் எப்படி தாத்தா” என்று சொல்லியவன் அவரின் தோளைக் கட்டிக்கொண்டு கதறி விட்டான்.
உள்ளிருந்து வருணின் பேச்சினைக் கேட்ட ஈஸ்வருக்கு மகனின் சொற்களை எண்ணி கர்வமே!
‘தனக்காக அவன் எதையும் செய்வான்.’ மனதில் சொல்லிக் கொண்டவருக்கு தன் கௌரவத்தை விட மகனின் சந்தோஷம் முக்கியமென்று தெரியாமல் போனது.
“எல்லாம் சரியாகிவிடும் வருண்.” பேரனின் முதுகை தட்டிக்கொடுத்தவராக திரிலோகர் சொல்ல, “எனக்கு வம்சியை பார்க்கணும் தாத்தா.” சிறுப்பிள்ளை போல் உடன் பிறந்தவனை காண ஏங்கினான்.
வம்சிக்கு அனைத்திற்கும் வருண் வேண்டும். அதேபோல் தடுமாறும் சமயங்களில் வருணின் மனம் வம்சியை மட்டும் தேடும்.
“போய் தூங்கு கண்ணா” என்று வருணை அறைக்குள் அனுப்பியவர், வசந்தியிடம் பின் செல்லுமாறு கண்காட்டிவிட்டு வினித்திற்கு அலைபேசியில் அழைத்திருந்தார்.
மென்னிலா வீட்டிலிருந்து கிளம்பும்போதே அனைவருக்கும் பின்தங்கி, வினித்தின் அலைபேசி எண்ணை திரிலோகர் வாங்கியிருந்தார்.
வினித் அழைப்பை ஏற்றதும் அவனிடம் பொதுவாக சில விடயங்கள் பேசிவிட்டு…
“நாம் பேசிக்கொள்வதை விட திருமணம் செய்துகொள்வோர் பேசிக்கொண்டால் தான் பரஸ்பரம் ஒட்டுதல் வரும்” என்றவர் வருணின் எண்ணை வினித்திற்கு அளித்து “மென்னிலாவை பேச சொல்லுப்பா… நம்ம பையன் இந்த விடயத்தில் கொஞ்சம் தத்தி” என்று சொல்ல…
“நீங்க தாத்தாவாக இருந்தாலும் இந்த மாதிரி விடயத்தில் யூத்தாக இருக்கீங்க தாத்தா” என்றவன், “காலையில் தான் அக்கா அத்தான் நெம்பர் கிடைக்குமான்னு என்னிடம் கேட்டாள். உங்களிடம் எப்படி கேட்பதென்றே தயங்கினேன்” என்று கூறி அவருக்கு ஒரு நன்றியையும் சொல்லிவிட்டு அழைப்பை வைத்துவிட்டான்.
வருணும் மென்னிலாவும் பேசிக்கொண்டால் ஏதேனும் நல்லது நிகழலாம் என்று திரிலோகர் நினைத்தார். அதற்கே இந்த ஏற்பாடு.
ஆனால் அவர் ஒன்று நினைக்க வேறொன்று நடந்தது.
வைஷூவின் மூலம்… அவள் வம்சியிடம் பேசியதை அறிந்த மென்னிலா வைஷூ அளித்த எண்ணிற்கு முயற்சிக்க எடுத்தது என்னவோ வம்சி தான். ஆனால் அழைத்தது மென்னிலா என்றதும் “ராங் நெம்பர்” எனக்கூறி சட்டென்று வைத்துவிட்டான்.
நேற்று தான் நேரில் பார்த்து சம்மதம் சொல்லிவிட்டுச் சென்றிருக்க இன்று யாரென்று தெரியாதைப்போல் வம்சி நடந்து கொண்டதில் மென்னிலா விக்கித்துப் போயிருந்தாள்.