நெஞ்சோடு காதல் சேர 2

அத்தியாயம் 2 :

ரயிலின் சன்னலோரம் அமர்ந்திருந்த மென்னிலாவின் கண்கள் எதையோ தேடியது. என்னவென்று தான் அவளுக்கு விளங்கவில்லை.

தோழிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர்களின் அரட்டையில் பங்குகொள்ள மறுத்துவிட்டாள்.

ஒற்றை இருக்கையில் தனியாக பின்னோக்கி நகரும் இருள் வானை வெறித்தபடி இருந்தவளின் சிந்தனை இங்கில்லை.

என்னவென்று இனம் புரியா உணர்வு அவளை ஆட்கொண்டிருந்தது. குழம்பிய மூளை களைத்துப்போக மெல்ல விழி மூடியவளின் கண் முன் தோன்றினான் அவளால் வருண் என அறியப்பட்ட வம்சி.

பட்டென்று கண் திறந்தவளின் முகம் வியர்த்து வழிந்தது.

‘என்ன உணர்விது, எனக்கு இந்த மாதிரி எண்ணமெல்லாம் தோன்றக் கூடாது.’ திரும்ப திரும்ப இதையே சொல்லிக் கொண்டவளின் கண்கள் கண்ணீரின்றி அழ, மனம் ஊமையாய் அரற்றியது.

‘உன்நிலை அறிந்தும் உனக்கு இப்படியொரு ஆசை மனதில் வரலாமா?’ தன்னையே கேட்டுக்கொண்டவளுக்கு, வம்சியின் முகத்தை நிமிர்ந்து பார்த்ததும், தான் உறைந்து நின்றதற்கான காரணம் புரிந்தது.

மனம் சமன்படுவதற்காகக் கூட அவளால் இமைகளை மூட இயலவில்லை. மூடிய விழிகளுக்குள் கோப முகமாகத் தோன்றி அலைக்கழித்தான் வம்சி.

“ஏன்டா படுத்துற.” வாய்விட்டே புலம்பினாள்.

“நான் உனக்கு செட்டாகமாட்டேன். என் மனசிலிருந்து போ… போ…” என்று அவனை விரட்டினாள். பாவம் அவளுக்குத் தெரியவில்லை, அவனின் முதல் பார்வையிலையே தன்னை மொத்தமாக வாரி சுருட்டிக்கொண்டான் என்று.

பார்த்த நொடி அவனுள் கோபம் மட்டுமே. அவளிடம் அழகாய் மலர்ந்திருந்தது காதல். அதனை உணர்ந்தவளின் மனம் தான் வெகுவாய் கலங்கியிருந்தது.

அவளால் ஒரு ஆணுடன் அவ்வளவு எளிதில் பேசக்கூட முடியாது. இதில் காதலெல்லாம் அவளை பொறுத்தவரை கற்பனைக்கும் எட்டாதவை.

காதலென்றாலே அவளின் குடும்பத்தில் வேப்பங்காய் தான்.

கொடைக்கானலுக்கு அருகிலிருக்கும் அழகிய கிராமம் அவளுடையது. அக்கிராமத்திற்கு அவர்களின் குடும்பம் தான் மரியாதைக்குரியது. செல்வத்திலும் மதிப்பிலும் உயர்ந்த குடும்பம்.

மூத்த தம்பதியர் ராஜன், விசாலாட்சி. அவர்களுக்கு ஒரே மகன் ராஜராஜன். விசாலாட்சி தன்னுடைய மகனுக்கு தனது அண்ணன் மகளை மணம் முடித்து வைக்க விருப்பம்கொள்ள ராஜராஜன் கல்லூரியில் தன்னுடன் படித்த மீனாவை காதலிப்பதாகக் கூறினார்.

முதலில் முடியாதென்று மறுத்தவர்கள், பிறகு தங்கள் மகனின் ஆசை தான் முக்கியமென ஒப்புக்கொண்டார்கள். இருப்பினும் விசாலாட்சிக்கு மீனாவை சுத்தமாக பிடிக்கவில்லை. கணவன் மற்றும் மகனின் முன்பு மருமகளை நன்கு பார்த்துக் கொள்வதைப்போல் காட்டிக்கொள்பவர் மகன் இல்லாத நேரங்களில் மீனாவை கீழாகவே நடத்தினார்.

என்ன தான் கணவனுக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டாலும் விசாலாட்சியின் முறையற்ற வார்த்தைகளை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. காலை விடிந்ததும் தோப்பு தொறவென்று கிளம்பி சென்றிடும் ராஜராஜன், மில், வயல், வரப்பு, ஏற்றுமதி, இறக்குமதியென அனைத்தையும் முடித்து இரவு தான் இல்லம் வருவார். வருபவர் தன் அனைத்து சோர்விற்கும் அலைச்சலுக்கும் மீனாவை வடிகாலாக நினைத்து கூடினாரே அன்றி பழைய காதல் அவரிடத்திலிருந்ததா என்றால் அவருக்குத்தான் வெளிச்சம்.

திருமணத்திற்கு முன்பு காட்டிய, உணர்த்திய காதலை, திருமணத்திற்கு பின்பு காட்டத் தவறிவிட்டார். அந்த இடத்தில் அவர் சறுக்க, மீனாவுக்கு மனமே விட்டுப்போனது. என்ன வாழ்க்கையென்கிற சலிப்பு தோன்றிய சமயம் அவள் கருவுற்றிருந்தாள்.

இனியாவது தனது மாமியார் தன்னை தங்குவார்கள் என்று அவள் நினைக்க, அவரோ கருவை அழிக்க முயற்சி செய்தார். தனது அண்ணன் மகளை தன்னுடைய மருமகளாக வாழ வைக்கும் அவரின் ஆசை தீரவில்லை. அது எல்லா பாவங்களையும் செய்ய வைத்தது.

தான் அப்பாவாகப்போகும் செய்தியறிந்த ராஜராஜன் கொண்ட மகிழ்விற்கு அளவேயில்லை. மனைவியுடன் பொழுதை கழிக்க நினைத்தவருக்கு விசாலாட்சியின் திட்டத்தின்படி வேலைகள் எந்நேரமும் வரிசைகட்டி நின்றது. இவர் இரவு வரும் நேரம் மீனா மசக்கையில் உறக்கத்தை தழுவியிருப்பார்.

இருவரும் பார்த்துக்கொள்வதே அறிதாகிப்போனது. ஒருகட்டத்தில் மீனாவுக்கு வாழ்க்கையே கசந்தது. ராஜராஜன் காதலாக நெருங்கி வந்தாலும், மீனா விலகிச் சென்றார். அதை ராஜராஜன் உணராமல் இல்லை. இருப்பினும் அதனை பேறுகால மாற்றமென்று ஒதுக்கிவிட்டார்.

மீனாவுக்கு ஒன்பதாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. மகனுக்கு தன்மேல் சந்தேகம் வந்துவிடக் கூடாதென்று வளைகாப்பினை சிறப்பாகவே நடத்தினார் விசாலம்.

அன்று இரவு உறக்கத்திலிருந்த மீனாவுக்கு ஏதோ அவஸ்தையாக அசௌகரியமாக இருக்க, சற்று குளிர் காற்றில் நடக்க எண்ணி தோட்டத்திற்கு சென்றாள்.

வளைகாப்பு முடிந்ததுமே ஏதோ ஏற்றுமதி விடயமென்று ராஜராஜன் வெளியூருக்கு கிளம்பிவிட்டார். வர நான்கு நாட்களாகுமென்று சொல்லியிருந்தார்.

சிறிது நேரம் நடந்த மீனா சோர்வாக இருக்க, மல்லிகை புதருக்கு அருகிலிருந்த சிறு மேடையில் அமர்ந்தாள். அந்நேரம் புதருக்கு அந்தப் பக்கமிருந்து ஏதோ பேச்சுக்குரல் அதுவும் விசாலத்தின் ஓசை போலிருக்க கூர்ந்து கவனித்தாள்.

விசாலம் மருத்துவச்சியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“பிள்ளை இன்னைக்கோ நாளைக்கோ பிறக்கும் நிலையில் இருக்காள். பிள்ளை பிறந்ததும் அவளை கொன்றுவிடு. பிரசவத்தில் இறந்து விட்டதா சொல்லிவிடலாம். என் மகனும் நம்பிடுவான். அப்புறம் என் அண்ணன் பொண்ணு தான் எனக்கு மருமகள்” என்ற விசாலம், “அந்த பொறக்க போற பிள்ளையை தான் கருவினிலே அழிக்க நினைத்தேன், ஆனால் அதை அழிகிறதால எந்த பயனுமில்லை. அதுக்கு பதிலா இவளை அழிச்சிட்டால் என் ஆசை நிறைவேறிடும். என்ன இருந்தாலும் அந்த பிள்ளை என் மகனோட ரத்தம். இந்த வீட்டு வாரிசு, ஒரு ஓரமா வளர்ந்துட்டு போவுது” என்று கரிசனமாகப் பேசினார்.

கேட்டிருந்த மீனாவுக்கு உலகே ஸ்தம்பித்து விட்டது.

‘அப்பா, அம்மா பேச்சினை மீறி காதல் தான் பெரியதென்று வந்தது தவறோ’ என்று மனம் வருந்தினார். இப்போது தன்னால் பெற்றவர்களிடமும் செல்ல முடியாது. மகள் காதலித்தவனுடன் சென்றுவிட்டதை அவமானமாக நினைத்தவர்கள், அவர்கள் ஊரை விட்டே சென்றுவிட்டனர். அவர்களைப்பற்றி எந்தவொரு தகவலும் மீனாவுக்கு தெரியாது.

தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற பயதத்திலேயே இருந்தவர் மாலை நேரம் கோவிலுக்கு செல்ல, அங்கு தன்னுடன் பயின்ற ஒருவனை கண்டாள். அவன் இவளை பார்க்கவே வந்திருந்தான். கல்லூரி காலத்தில் மீனாவை ஒரு தலையாகக் காதலித்தவன், அவள் வேறொருவனை விரும்புகிறாளென்றதும் தன்னுடைய காதலை மறைத்துக்கொண்டான்.

இன்று தற்செயலாக அவனைக் கண்டதும், தன்னை காதலித்த காரணத்திற்காகவே அவன் இதுவரை யாரையும் மணம் செய்யவில்லை என்பதை அறிந்து குற்றவுணர்வாகிப் போனாள்.

துக்கத்தைக்கூட பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் இருந்தவளுக்கு, அவனின் விசாரிப்பு ஒன்றே போதுமானதாக இருக்க தன் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் கூறினாள். விசாலத்தின் திட்டம் உட்பட. இறுதியில் உடைந்து அழத் துவங்கியவளை தோழியாக எண்ணி தன் தோளில் சாய்ந்து ஆறுதல் படுத்தினான்.

இருவருமே சுற்றத்தை அந்த கணம் மறந்திருந்தனர்.

கோவிலுக்கு வந்து சென்ற சிலர் மீனாவை வேறொரு ஆடவனுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு கண் காது வைத்து பேச, அது காற்றைவிட வேகமாக ஊர் முழுக்க பரவியது.

மீனா கிளம்புவதாக சொல்ல, பாதுகாப்பாக இருக்குமாறு கூறியவன் சென்றுவிட்டான்.

வீட்டுக்கு வந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. முழுதாய் வேறொரு விசாலத்தை கண்டாள். உண்மையில் காளியாகவே மாறியிருந்தார் விசாலம்.

“என் குடும்பத்தை இப்படி சந்தி சிரிக்க வைத்து விட்டாயே” என்றவர் கர்ப்பிணி என்றும் பாராது மீனாவை கீழேத் தள்ளி காலினாலே மிதித்தார். ராஜன் எவ்வளவோ தடுத்தும் விசாலத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் மீனாவை தன் முதுகுக்கு பின்னால் மறைத்து நின்றபடி ராஜன் தடுக்க, விசாலம் இறங்கி வந்தார்.

தன்னை பேசவிடாது, அவர்களே ஏதோவொன்றை நினைத்து தண்டித்ததை மீனாவாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடக்க முடியாது நடந்து அறைக்கு சென்ற மீனா கண்ணீரில் கரைந்தாள்.

கல்யாணத்திற்கு பிறகு இந்நொடி வரை தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் எழுதியவர், தனக்கு அந்த வீட்டில் ஒரே ஆதரவாக இருக்கும் ராஜனிடம் சென்று,

“எனக்கு என்ன குழந்தை பிறந்தாலும் அதனை தைரியம் வாய்ந்த பிள்ளையாக வளர்க்க வேண்டும் மாமா” என்று கேட்டுக்கொண்டவள், “என் சாவு என் கண் முன்னால் நிற்கிறது மாமா, என் பிள்ளையை நீங்கதான் பார்த்துக்கொள்ள வேண்டும். விவரம் தெரியும் வயதில் இதை என் பிள்ளையிடம் கொடுங்க மாமா, என் வாழ்வை என் பிள்ளை தெரிந்துகொள்ள வேண்டும்” என்றவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

மீனாவின் பேச்சு புரியாத போதும் அவளுக்கு தன் வீட்டில் தன் மனைவியால் எந்தவொரு துன்பமும் நிகழ்ந்திருக்காது என்றே நம்பினார் அந்த பெரியவர்.

இன்று ஊரார் எதையோ தவறாக கணித்து திரித்து பேசியதில் விசாலம் கோபம் கொண்டதாகவே எண்ணினார். அதனாலே தன் மருமகள் இப்படி விரக்தியில் பேசுகிறாள் என்று நினைத்தவர் மீனா மயங்கி சரிந்ததும் சற்று மிரண்டு விட்டார்.

விசாலத்தை அழைக்க, அவரோ மருத்துவச்சியை அழைத்து வந்தார். அவர் வந்து பரிசோதித்துவிட்டு சொல்லிய பிறகே வெகு நேரமாக பிரசவவலியை அடக்கி வைத்திருந்ததால் ஏற்பட்ட மயக்கமென்று அவர்களுக்கு தெரிந்தது.

“அய்யோ, இருவருக்கும் ஒன்றும் ஆகிடாதே!” குழந்தை மற்றும் மீனாவின் நலனில் அக்கறை கொண்டவராக ராஜன் பதட்டம் கொள்ள,

‘இந்த கிழவன் இங்கிருந்தால் தன் காரியமே கெட்டுவிடும்’ என நினைத்த விசாலம் ராஜனை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையை செய்தார்.

“நீங்க தபால் அலுவலகம் போயி, அங்கிருக்கும் போன் மூலமாக ராஜராஜனுக்கு தகவல் சொல்விட்டு வாங்க.”

“மழை வர மாதிரி இருக்கு, புயல் காத்து வேற வீசும் போலிருக்கு. குழந்தை பொறக்கட்டும் தகவல் சொல்லிக்கலாம், இப்போ நானும் அங்க போய் மாட்டிக்கிட்டா இங்க உங்க துணைக்கு யார் இருக்கா?”

அவ்வாறு கேட்ட கணவரை மனத்திற்குள் வறுத்தெடுத்தார் விசாலம்.

அந்நேரம் அறையிலிருந்து வெளிவந்த மருத்துவச்சி, “பிள்ளை பிரண்டிருக்கு” என்று சொல்ல அதனை பிடித்துக்கொண்ட விசாலம்,

“பிரசவத்தில் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா மவனுக்கு யார் பதில் சொல்லுறது. நான் இங்கே பார்த்துக்கிறேன், நீங்க அவனுக்கு முதலில் தகவல் சொல்லிட்டு வாங்க” என்று வம்படியாக ராஜனை அனுப்பி வைத்தார்.

குழந்தை பிறக்க வேண்டுமென்றால் மீனா கண் திறந்தாக வேண்டும். அதற்காக அவளின் கன்னத்தை வலிக்க தட்டி எழுப்பினர். கண் விழித்தவள் அவ்வளவு வலியிலும் சிறு முனகளைக்கூட வெளிப்படுத்தவில்லை.

மீனாவின் இத்தன்மையில் விசாலமே அரண்டு நின்றார்.

விரைவிலேயே அழகான பெண் குழந்தையை ஈன்றாள் மீனா.

மகளைத் தடவி பார்த்துக் கொண்டிருந்த மீனாவிடம், கசாயமென்று சொல்லி எதையோ மருத்துவச்சி நீட்ட, அதை வாங்கிய மீனா…

“சரியான அளவு விஷம் கலந்திருக்கீங்களா ஆயா, இல்லன்னா நான் பாட்டுக்கு பொசுக்குன்னு எழுந்து உட்கார்ந்து என் மாமியார் ஆசையில் மண்ணை போட்டிடப் போறேன்” என்றாள்.

மருத்துவச்சி மீனாவின் பேச்சில் முகம் வெளிறிப்போய் நிற்க,

“யாரு யாருக்குடி விசம் வைக்குறா” என்று எகுறினார் விசாலம்.

“எனக்கு எல்லாம் தெரியும்” என்ற மீனா,

“என்னை கொன்னுட்டு உங்க பையனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறீங்க. உங்க மகன் என்னை மறந்துட்டு இன்னொரு கல்யாணம் செய்துபாருன்னு உங்களுக்கு தோணுதா? நிச்சயமா ஒத்துக்க மாட்டார். நான் செத்துப்போயிட்டேன்னு கேள்விப்பட்ட அடுத்த நொடி அவரும் சாக நினைப்பார். வேண்டுமென்றால் எங்க பெண்ணுக்காக வாழ எண்ணலாம். அதுக்கெதுக்கு வீணா என்னை சாகடிச்சு நீங்க பாவத்தை சுமக்கணும்” என்றாள்.

‘இவள் சொல்லுவதும் சரிதானே! இவளின் நினைப்பிலேயே மகன் இருந்துவிட்டால்.’ நினைத்தவருக்கு தலை சுற்றியது. மகன் அவள் மீது கொண்ட காதல் அவருக்குத்தான் நன்கு தெரியுமே!

“அதுக்காக உன்னை கடைசி வரை இங்க வாழவிட்டால் உன்னிடம் நான் தோத்துப்போனதாகாதா? யாரு யார்கிட்ட தோக்குறது.” விசாலத்திற்கு மகன் தன் விருப்பத்திற்கு கல்யாணம் செய்து கொண்டானே என்கிற மொத்த வெறியும் மீனாவிடத்தில் திரும்பியிருந்தது.

“நான் உங்க மகனுடன் வாழுறேன்னு சொல்லவேயில்லையே.”

மீனாவின் வார்த்தையில் விசாலம் குழம்பியிருக்க மீனா மேற்கொண்டு பேசினாள்.

“உங்க திட்டம் தெரிந்த அன்றே அவரோட வாழ முடியாத இந்த வாழ்க்கை வேண்டாம். பேசாமல் உங்க விருப்பப்படி குழந்தை பிறந்ததும் செத்துபோயிடலான்னு தான் நினைத்தேன். ஆனால், என்னை அருமை பெருமையா வளர்த்த என் பெற்றோருக்கு அவமானத்தை தவிர வேறெதையும் நான் செய்யவில்லையே. அவர்களை ஒருமுறையாவது பார்த்து மன்னிப்பு கேட்கணும் தோணுது. அதுக்கு நான் உயிரோட இருக்கணும்.

அதனால் என்னை விட்டுடுங்க, நான் இங்கிருந்து இப்படியே போயிடுறேன்.”

“என் மகன் வந்து கேட்டால். நீ செத்து போயிட்டேன்னு சொன்னாலும் உடம்பு எங்கன்னு கேட்டால் என்ன பண்ணுவேன்.”

“அதான் ஊருக்குள்ள ஒரு கதை பரவியிருக்கே அதை உண்மையாக்கிடுங்க.

நான் யாரோடவோ ஓடிப்போயிட்டேன்னு, (அவ்வளவு நேரம் திடமாக பேசிக்கொண்டிருந்தவளுக்கு அந்நொடி தானாக கண்ணீர் உடைப்பெடுத்தது.) இதை சொன்னால் உங்க பையன் என்னை வெறுத்திடுவார். அதுக்கு அப்புறம் என்மீதுள்ள வெறுப்பால் உங்க ஆசைப்படி இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள சம்மதிப்பார்.”

மீனாவின் இந்த யோசனை சரியெனப்பட விசாலம் உடனடியாக ஒப்புக்கொண்டார்.

“அப்போ குழந்தை?”

“என் கணவருக்கு நான் தரும் ஆறுதல் பரிசு” என்றவள் குழந்தையை இறுக்கி அணைத்து நெற்றியில் இதழ் பதித்து விட்டு, திரும்பியும் பாராது வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.

இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த தபால் நிலையத்திற்கு சென்ற ராஜன், மழையின் காரணமாக இரவில் எப்படி செல்வது மழை விட்டதும் செல்லலாமென்று அங்கேயே காத்திருக்க, மழை விட்டதும் கிளம்பி வந்தவர் பாதி வழியில்… நடு பாதையில் விழுந்திருந்த மரத்தால், அதனை அகற்றும் வரை மீண்டும் காத்திருந்து நள்ளிரவிற்கு மேல் வீடு வந்து சேருவதற்குள் அனைத்தும் முடிந்திருந்தது.

மருத்துவச்சிக்கு பணத்தை கொடுத்து சரிக்கட்டிய விசாலம், தன் குடும்பத்தாரை மட்டுமில்லாது ஊரையும்… மீனா யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று நம்ப வைத்தார்.

மறுத்த ராஜராஜனையும் பேசி பேசியே நம்ப வைக்க, அவரும் ஒருகட்டத்தில் மீனாவை வெறுத்தே விட்டார். அதற்கு காரணமாக அமைந்தது ஊரார் சொல்லிய, மீனா ஒரு ஆடவனுடன் கோவிலில் நெருக்கமாக அமர்ந்திருந்த காட்சி.

சில வருடங்களில் மருத்துவச்சியும் இறந்துவிட, உண்மைகள் அனைத்தும் விசாலத்திடம் மட்டும் உறங்கிக்கொண்டிருக்கிறது.

தன் ஆசைப்படி தனது அண்ணன் மகளை மருமகளாக்கிக் கொண்டார். மறுத்து பிடிவாதம் பிடித்த ராஜராஜனை, மீனாவின் மீது அவருக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பை பயன்படுத்தி, அவரின் குழந்தையையும் காட்டி மறுமணம் முடித்து வைத்தார்.

ஏதோ கடமைக்காக வாழ்ந்தவருக்கு இரண்டாம் தாரத்திலும் ஒரு மகள் பிறந்தாள்.

என்னயிருந்தாலும் அவருக்கு தன் காதலுக்கு பரிசாகக் கிடைத்த மீனாவின் வயிற்றில் பிறந்த மகள் மீது அலாதி பிரியம். அவள் தான் மென்னிலா.

ஆனால் விசாலத்திற்கு நிலாவை கண்டாலே ஆகாது.

“ஆத்தாலாட்டம் ஓடிப்போய் நீயும் குடும்ப மானத்தை வாங்கிடாதே” என்று சிறுவயதிலிருந்து கொட்டி கொட்டியே அவளை அடக்கிவிட்டார்.

ராஜராஜன் ஏதாவது நிலாவுக்கு பரிந்து பேசினாலும், “ஆத்தா செஞ்ச தப்பை மகளும் செஞ்சிட்டான்னு பின்னாடி யாரும் பேசிடக்கூடாதில்லையா ராசா… எல்லாம் அவள் நல்லத்துக்குத்தான்” என்று சமாதானம் செய்து விடுவார்.

இவற்றில் தனக்கு தெரிந்தவற்றை மட்டும் நினைத்து பார்த்தவளுக்கு தன் அன்னை மீது கோபமே மிஞ்சியது. அவரால் அல்லவா அவளுக்கு வலி.

அதனாலே இன்று தனக்குள் முளைத்த காதலை எண்ணி அஞ்சுகிறாள்.

விசாலத்தின் நாக்கு ஒன்று போதுமே அவளை சாய்த்திட… இவ்விடயத்தில் அவளுக்கு ஆதரவாக தாத்தா மற்றும் அப்பாவாலே அவளுக்காக பேசிட முடியாது.

விசாலத்திற்கு பயந்தே இன்றுவரை ஒரு ஆணிடம் கூட அவள் பேசியதில்லை. இப்போது காதலென்று போய் நின்றாள்,

“ஆத்தாலாட்டம்…” ‘இதை சொல்லியே கொன்றுவிடுவார்’ என்று நினைத்தவள் அரும்பிய காதலுக்கு சமாதி கட்டிவிட்டு விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top