அத்தியாயம் 20
இந்த காதல் வந்துவிட்டால் கண்ணீரும், அழுகையும், சோகமும், வலியுமே பரிசாகக் கிடைக்கும் போலும். மென்னிலாவுக்கும் அதுவே வாய்க்கப்பெற்றன.
எத்தனை எத்தனை ஏக்கத்தோடு வருணை(வம்சி) தேடியிருப்பாள். வலிக்க வலிக்க அவனின் நினைவில் மூழ்கியிருந்திருப்பாள். ஆனால் இன்று ஏனோ இந்த வலியை தாங்கிக்கொள்ள முடியாது மரித்துக் கொண்டிருந்தாள்.
வைஷூ சொல்லியதை வைத்து அவன் பணி நேரத்தில் கெத்தாக இருப்பான் போலும் என்று மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அன்று முதன் முதலில் ரயில் நிலையத்தில் பார்த்த போதும் அழுத்தமாகத்தான் இருந்தான். அதனால் அது அவனின் இயற்கை குணமென்று கருதினாள்.
வேண்டுமென்றே தன்னை தவிர்த்ததாகவே மென்னிலாவுக்கு தோன்றியது.
‘ஒருவேளை தன்னை நியாபகம் இல்லையோ?’ மனதோடு கேட்டுக் கொண்டவளுக்கு அப்படியும் இருக்குமோ என்றே பதில் கிடைத்தது.
“தங்களது முதல் சந்திப்பை மறந்திருப்பானோ?” அவளிடம் கேள்விகள் அணி வகுக்க பதிலும் அவளே சொல்லிக் கொண்டாள்.
“இல்லையே… வைஷூ தன்னைப்பற்றி சொல்லியதும் சரியாக என்னுடைய பெயரை சொன்னதாக சொன்னாளே?” என்றவள்,
“ஒருவேளை பணி நேரத்தில் தொந்தரவு செய்துவிட்டோமோ! அதனால் தான் கடுகடுவென்று வைத்து விட்டாரோ! போலீஸ் வேலையென்றால் அப்படித்தான் போல்” என்று தனக்குத்தானே பல யோசித்து தெளிந்தாள்.
‘இறுதியில் தன்னிடம் தன்னை தெரியாததைப்போன்று காட்டிக்கொண்டு, திருமணத்திற்கு பிறகு உண்மையை சொல்லி ஆச்சர்யம் அளிப்பானோ!’ காதலில் தனக்கு சாதகாமனவற்றையே சிந்தித்தாள். காதல் வந்தால் அர்த்தமற்ற கேள்விகளும், பதில்களும், செயல்களும் தானாக உடன்வந்து ஒட்டிக்கொள்ளும் போலும்.
சிந்தனையின் முடிவில், “என்ன இருந்தாலும் நான் உங்களை விடுவதாக இல்லை கிருஷ்ணா! உங்களுக்கு என் நினைவு இல்லையென்றால் நான் நினைவுப்படுத்தி வைக்கிறேன்” என்றவள் வாடிய முகத்தை நொடியில் மாற்றிக் கொண்டாள்.
அந்நேரம் மென்னிலாவின் அறைக்குள் வந்த வினித்,
“அக்கா நீ கேட்டது” என்று அவளின் புலனம் செயலிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியவன் அவளது அலைபேசியை கையிலெடுத்து கொடுத்தான்.
“யாருடைய நெம்பர்?”
வினித் அனுப்பியிருந்தது அலைபேசி எண்.
“அய்யோ அக்கா இது அத்தானோட பெர்சனல் நெம்பர். இரவு ஒன்பது மணிக்கு மேல் எப்போ வேண்டுமானாலும் பேசு. அப்போதுதான் அவர் வேலை முடித்து வீட்டிற்கு வந்து ஃபிரியாக இருப்பாராம்” என்றவன் ராஜன் அழைக்கும் குரல் கேட்டு மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசாது சென்றுவிட்டான்.
வருண் துணி கடையிலிருந்து இரவு ஒன்பது மணிக்கே வீட்டிற்கு வருவான். அதையே திரிலோகர் குறிப்பிட, வினித்தும் மென்னிலாவிடம் சொல்லியிருந்தான்.
ஆனால் மென்னிலா நினைத்ததோ வேறு.
“காவல் நிலையத்தில் வேலை முடித்துக்கொண்டு அப்போதுதான் வீட்டிற்கு வருவார் போல, அதான் வினித் சொல்றான். ஒருவேளை ஸ்டேஷனில் இருக்கும்போது கால் பண்ணியதால் தான் பெரியதாக ரியாக்ட் செய்யவில்லையோ!”
அவளுக்கேற்ற பதிலை அவளே உருவாக்கியிருந்தாள்.
****
“வம்சி சார் திரிகி சென்னை வெள்த்துன்னாடு.”
“என்ன சார் சொல்றீங்க ஒன்னும் புரியலையே?”
சுப்பாராவ் தன்னுடன் பணிபுரிபவர்களிடம் சொல்ல… அவர்களின் தெலுங்கு புரியாத குமார் புரியவில்லை என்றான்.
“நீங்க சீக்கிரம் தெலுங்கு கத்துக்கோங்க குமார். முடியலன தமிழ்நாட்டுக்கு ட்ரான்ஸ்பெர் வாங்கிடுங்க” என்ற வம்சியின் குரலில் குமார் திரும்பிப் பார்க்க,
“நான் சென்னைக்கு ட்ரான்ஸ்பெர் வாங்கிட்டேன் குமார். அதைத்தான் சார் சொல்றார்” என்றான்.
“என்ன சார் திடீரென…?”
“எனக்கு அங்கு நிறைய வேலை இருக்கு குமார்.”
“ஓகே சார். கண்டிப்பா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் சார்.”
வம்சியிடம் சிறு சிரிப்பு.
சுப்பாராவை மட்டும் அணைத்து விடுவித்தவன்.
“தேன்க் யூ ஃபோர் யூர் சப்போரட் காய்ஸ்” என்று அனைவரையும் பார்த்து சொல்லியவன் அந்த காவல் நிலையத்தை முழுதாய் வெளியிலிருந்து ஒருமுறை பார்த்துவிட்டு சென்னை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்.
ரத்தினத்திடம் தன்னுடைய ஒவ்வொரு அடியும் எப்படியிருக்க வேண்டுமென்ற சிந்தனைகளிலேயே சென்று கொண்டிருந்தான்.
குடும்பத்தைப் பற்றி அதுவும் வருணைப்பற்றி சற்றும் யோசிக்க கூடாதென்றே ரத்தினத்தின் மீது தன் யோசனைகளை வைத்தான்.
ரத்தினம் பின்வழிகளில் இருட்டில் பல தொழில்கள் செய்கின்றார். அதைப்பற்றி அறிந்து கொண்ட வம்சிக்கு முதலில் அதிர்வே. பின்னரே பணத்திற்காக எதுவும் செய்வது மனித இயல்பு தானே என்று புரிந்துகொண்டவன் ரத்தினத்திற்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் ஹைதராபாத்தில் இருந்தே தன் கைக்கு கொண்டு வந்திருந்தான்.
ரத்தினம் பற்றிய அனைத்து ரகசியங்களும் வம்சியுடன் தான் செல்கின்றன.
தன் வாழ்விலும் தான் நினைக்காதவை எல்லாம் நடைபெறவிருக்கிறது என்பதை அறியாமலே அறிந்து கொள்ள போகிறான்.
அதில் அவனின் திருமணமும் ஒன்று.
ஆனால் அவனுக்கு மனைவி யாரென்பது காலத்தின் கையில் தான்.
மதியம் இரண்டு மணியளவில் சென்னையில் தன்னுடைய பழைய பணியில் சேர்வதாக வம்சி ஐஜி’யிடம் கூறியிருந்தான்.
“இப்போது மணி 1.50.”
தன்னுடைய கைகடிகாரத்தில் மணியை பார்த்தவன், ரத்தினத்திற்கு அழைத்திருந்தான்.
“அம் பேக் ரத்து.” உல்லாசமாக வந்த வம்சியின் குரலைக் கேட்டு ரத்தினத்திற்கு எரிச்சலாக இருந்தது.
“சரி சொல்லு எப்போ மீட் பண்ணலாம்?”
ஏதோ பல நாள் பார்க்காமல் இருந்த காதலியிடம் கேட்பது போன்று இருந்தது அவனின் பேச்சு.
ரத்தினம் பற்களை கடிக்கும் சத்தம் கேட்டு அட்டகாசமாக சிரித்தான் வம்சி.
“அச்சோ ரத்து பயந்துட்டேன்” என்றவன், “நான் ஒரு கையெழுத்து போட்டுட்டு உன்னை வந்து பார்க்கிறேன் ரத்து” எனச்சொல்லி போனை வைத்தவன்… தனக்கு முன்பிருந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான்.
அது அவனின் கோட்டையல்லவா. அங்கு எத்தனை குற்றவாளிகளை புரட்டி எடுத்திருப்பான். வருணோடு வம்சி அங்கிருந்த நேரங்களே அதிகம்.
ஆம் வம்சி தன்னுடைய பழைய அலுவலக காவல் நிலையத்திற்கே வந்திருந்தான்.
முன்பு அவன் மாற்றல் கேட்டபோது ஏன் எதற்கென்று கேட்காது வம்சியின் முகத்தை வைத்தே வேறு மாநிலத்திற்கு அனுப்பி வைத்த ஐஜி… ரத்தினம் தனது மாற்றலுக்கு பேசியிருக்கின்றார் என்று அறிந்ததும் மீண்டும் அவரிடமே தனக்கு தன்னுடைய பழைய ஏரியாவில் தான் போஸ்டிங் வேண்டுமென்ற போதும் எதுவும் கேட்காது ஒப்புக்கொண்டிருந்தார் ஐஜி.
மனதார அவருக்கு நன்றியை தெரிவித்தவன் உள்ளே காலெடுத்து வைத்தான். அப்போதுதான் மனதின் சொல்ல முடியாத பாரம் ஒன்று விலகி லேசானதை உணர்ந்தான்.
வம்சியை முதலில் பார்த்தது ராணி மேடம் தான்.
இப்போதும் விக்னேஷ் அங்கே தான் இன்ஸ்பெக்டராக இருக்கின்றான். அவன் ஒரு கேஸ் விடயமாக நீதிமன்றம் சென்றிருக்கின்றான்.
புதிய டிசி வருகிறாரென்று அங்கு இருப்போர் எல்லாம் பரபரப்பாக தத்தம் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அதனால் வம்சி வந்ததை யாரும் அறியவில்லை.
வம்சியை பார்த்த ராணி இருக்கையிலிருந்து எழுந்து விறைப்பாக சல்யூட் வைக்க… அதனை சிறு தலையசைப்பில் ஏற்றுக்கொண்டான்.
அவ்வறையின் நடுவில் வந்து நின்றவன்,
“நான் போன பிறகு ரொம்ப பொருப்பாகிட்டீங்க போலிருக்கே!” என்று அனைவரையும் விழிகள் சுழற்றி பார்த்தவாறு வம்சி கேட்க… அவனின் குரலில் நிமிர்ந்து பார்த்த எல்லோருக்கும் வம்சியே மீண்டும் தங்களின் உயர் அதிகாரி என்பதில் மகிழ்வு கொண்டனர்.
பேச வந்தவர்களிடம்,
“டூயிட்டி ஃபர்ஸ்ட்” என்றவன் ரைட்டரிடம் சென்று சேர்க்கை பதிவேட்டில் கையொப்பம் இட்டவன் தன்னிருக்கையில் வந்தமர்ந்தான்.
ஒருமுறை இருக்கையை தன் கையினால் தடவியவன், சில முக்கியமான பேப்பர்களை எடுத்துக்கொண்டு கோர்டிற்கு செல்ல ஆயத்தமாகினான்.
கிளம்பும் போது கான்ஸ்டபிள் ஒருவரிடம்,
“இஃப் யூ டோன்ட் மைண்ட்” என்று வெளியில் வண்டியிலிருந்த அவனின் சிறியளவிலான உடைமைகளை காண்பித்து, “குவாட்டர்ஸில் எனக்கு வீடு அலார்ட் பண்ணியிருக்காங்க அங்கு வைத்திட முடியுமா?” என வேண்டுகோளாகக் கேட்டான்.
“அச்சோ சார்” என்றவர் அவனின் முன்பே குவார்ட்டர்ஸை நோக்கி புறப்பட்டார்.
நடக்கப்போகும் விபரீதத்தை முன்பே அறிந்திருந்தால் அவரை அனுப்பியிருக்க மாட்டானோ!
கோர்டிற்கு சென்ற வம்சி நீதிபதியை நேரடியாக தனித்து சந்திக்க அனுமதி வாங்கியிருந்தான்.
அவரை பார்த்துவிட்டு வெளியில் வந்த வம்சியின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். கர்வம் என்பதே சரியாக இருக்கும்.
வம்சி ரத்தினத்திற்கு எதிரான ஆட்டத்தை தொடங்கிவிட்டான்.
அப்போது தான் குற்றவாளியை நீதிமன்ற காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டு மற்றொரு கட்டிடத்திலிருந்து வெளியில் வந்த விக்னேஷ் வம்சியை கண்டதும் இருக்கும் இடம் கூட பொருட்படுத்தாது தானொரு தலைமை ஆய்வாளர் என்பதையும் கருத்தில் கொள்ளாது ஓடி வந்து நண்பனை முதுகு புறமாக தழுவியிருந்தான்.
தோடுகையிலேயே விக்னேஷ் என்று உணர்ந்து கொண்ட வம்சி அவனின் கைபிடித்து இழுத்து தனக்கு முன்பாக நிறுத்தினான்.
அன்று ரயில் நிலையத்தில் வம்சியை பார்த்தபோது கூட விக்னேஷ் இந்தளவுக்கு தன்னுடைய உணர்வுகளை காட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் இன்று,
தான் நேரில் பார்த்து அழைத்தும் வர மறுத்திட்ட வம்சியின் வலிகள் எத்தகையதென்று இந்த சில தினங்களில் விக்னேஷ் உணர்ந்திருந்தான். அதனாலே இன்று வம்சியை மீண்டும் இங்கு காக்கி உடையில் பார்த்ததும் மொத்தமாக தன்னிலை இழந்து இனியும் அவனை தனித்து விட்டுவிடக் கூடாதென்று பற்றியிருந்தான்.
“வம்சி இது நீதானே! நான் காண்பது கனவல்லவே?”
“ஏன்டா உச்சி வெயில் மண்டையை பொளக்குது… இதுல கனவு வந்திட்டாலும்.” வம்சியின் பழைய விளையாட்டுத்தனம் திரும்ப வந்திருந்தது.
“நீ இப்படி பேசும் போதுதான்டா எனக்கு இன்னும் சந்தேகமா இருக்கு” என்ற விக்னேஷ் தன்னை ஒருமுறை கிள்ளி பார்த்துக் கொண்டான்.
“திரும்ப இங்கேயே வந்துட்டியா வம்சி?” சற்று கலக்கத்தோடு தான் வினவினான்.
“சரி போகலாமா?”
விக்னேஷ் கேட்டதற்கு வம்சி பதில் அளிக்கவில்லை.
“எங்கே?”
“சென்னைக்கு புது டிசி வராரு இல்லையா?” வம்சி அர்த்தமாகாக் கேட்க,
“வம்சி நீதானா” என்ற விக்னேஷ் துள்ளி குதிக்காத குறை ஒன்றுதான். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பனுடனான பணி. அதுவே விக்னேஷிற்கு மனதில் ஒரு நிறைவை கொடுத்தது.
“நீ திரும்பி வந்துட்டேன்னு சொன்னால் வருண் ரொம்ப சந்தோஷப்படுவான்.” வம்சியிடம் சொல்லியவாறே விக்னேஷ் அலைபேசியை வெளியில் எடுக்க அதனை வம்சி பறித்துக்கொண்டான்.
“வருண் திருமணம் முடியும் வரை நான் இங்கிருப்பது அவனுக்கு தெரியக்கூடாது.” அழுத்தமாகக் கூறியவன், “தெரிந்தால்” ஒருவிரல் நீட்டி எச்சரித்து “சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன்” என்றான்.
“சொன்னால் என்ன செய்வ?” விக்னேஷ் சற்று நக்கலாகவே கேட்டான்.
“வசுக்கு முன்னாடி காலேஜ் படிக்கும் போது ப்ரீத்தி பின்னால் லோ லோன்னு சுத்துனியே அதை வசுகிட்ட சொல்லிடுவேன்” என்று அசால்ட்டாக சொல்லியவன், “வண்டி எங்க நிக்குது” என்று கேட்டவாறே பார்க்கிங்கில் பார்வையை ஓட்ட முத்தண்ணன் வம்சியை நோக்கி வந்தார்.
அவரை கண்டதும் சிநேகமாக சிரித்தவன் அவரின் நலன் அறிந்து… அவரிடம் பேசியவாறே வண்டிக்கு அருகில் வந்து உள்ளே ஏறி அமரும் வரையிலும் விக்னேஷ் என்ற சிலைக்கு உயிர் வரவில்லை.
“எதே வசுகிட்ட சொல்லிடுவியா” அப்போதே அவனின் ஆவி உறைந்தது.
“நல்லா இருக்க குடும்பத்தில் பத்த வச்சிடுவான் போலிருக்கே!” என்றவனுக்கு நன்றாகவே தெரியும்… வம்சி சொல்லமாட்டானென்றும், சொன்னாலும் அதனை வசு ஈசியாக கடந்துவிடுவாளென்றும், அவனைப்பற்றி அவளறிவாளென்றும், இருப்பினும் வம்சிக்காக, அவன் மனதில் என்ன இருக்கிறதோ என்பதற்காக வருணிடம் ‘வம்சியின் வருகையை இப்போதைக்கு சொல்ல வேண்டாம்’ என்று முடிவெடுத்தான்.
முத்தண்ணன் வண்டியை இயக்கியதும் ஓடிவந்து ஏறிய விக்னேஷ்,
“வருணிடம் சொல்லவில்லை” என்றான்.
“நீ சொல்லிக்கோ… நான் வசுவிடம் பேசிக்கொள்கிறேன்.”
“போதும்” என்ற விக்கியின் கை இரண்டும் தலைக்குமேல் உயர்ந்து வம்சியை பார்த்து கும்பிட்டது.
இருவருக்குமே தெரிந்துதான் இருந்தது பிரீத்தி விடயம் சொல்லுமளவிற்கு பெரியதில்லை. இருந்தும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மறைமுகமாக நண்பர்கள் விளையாடிக் கொண்டனர்.
“ஸ்டேஷன் தானே தம்பி சார் போகணும்?”
“ரத்தினம் வீடு தெரியுமாண்ணே” எனக் கேட்டவன் மணியை பார்த்துவிட்டு “அவர் கட்சி ஆபீஸ் போங்க” என்றான் வம்சி.
‘எதே மீண்டும் ரத்தினமா? இவனோடு வந்தததே தப்பு.’ விக்னேஷ் பேய் முழி முழித்தான்.