நெஞ்சோடு காதல் சேர 21

அத்தியாயம் 21

வருணும் ஈஸ்வரும் உணவு மேசையில் அமைதியாக எதிரெதிரே அமர்ந்திருக்க…

‘இவர்கள் இருவரும் இவ்விடத்தில் எப்படி இருப்பர்’ என்று மனதில் நினைத்த வசந்தி உள்ளக்குமுரலோடு வெளியில் எதையும் காட்டாது இருவருக்கும் தட்டில் உணவினை இட்டார்.

வருண் ஈஸ்வரை பார்க்காது உண்டு முடித்து எழ,

“என்ன முடிவு பண்ணியிருக்க வருண்?” எனக் கேட்டார் ஈஸ்வர்.

“நான் நேற்றே சொல்லிவிட்டேன் டாட்.” தந்தையை எப்படி வருணால் விட்டுக்கொடுக்க முடியாதோ அதேபோன்று தேவிகாவையும் விட்டுக்கொடுக்க முடியாதென்று அந்த ஒரு இரவில் நன்கு அறிந்திருந்தான் வருண்.

‘தந்தையின் கோபத்தை எப்போது வேண்டுமானாலும் சரிசெய்து கொள்ளலாம். தேவிகாவை இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாது.’

அதனாலே தன்னிலையிலிருந்து விலகாது பதில் கூறினான்.

“அப்போ என் பேச்சிற்கு மதிப்பில்லை இல்லையா?”

“டாட் நான் அப்படி சொல்லவில்லை.” வருணுக்கு இந்த ஒரு நாளிலேயே நடப்பதெல்லாம் ஆயாசமாக இருந்தது.

‘டேய் வம்சி எப்படிடா இருபத்தேழு வருசமா இவருக்கு எதிரா மட்டுமே நின்னுட்டு இருந்த?’ அந்நேரம் வருணுக்குள் எழுந்தது இதுதான்.

“எனக்கு இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். இல்லையென்றால் நான் இரவு சொன்னதுதான்.” ஈஸ்வரின் கோபம் சற்றும் குறைந்திருக்கவில்லை.

“போதுங்க… ஒரு பிள்ளை இருந்தும் இல்லாதவனாக்கிட்டீங்க. இப்போ இவனா? உங்க பிடிவாதம் எப்போதாங்க குறையும். பையனோட விருப்பத்தைவிட உங்க பிடிவாதாமாங்க முக்கியம்?” வசந்தி முதல் முறையாக தன் மகனுக்காக கணவரை எதிர்த்து பேசினார்.

மனைவியின் சொல் ஈஸ்வருக்கு சுடத்தான் செய்தது. இருப்பினும் இறங்கி போய்விட்டால் அது ஈஸ்வர் இல்லையே.

“தன்னுடைய பேச்சில் எவ்வித மாற்று கருத்துமில்லை. நான் தலை குனியும் நிலை வந்தால் அதுவே என் இறுதி நொடியாக இருக்கும்” என்றவர் தங்களது பாத்திரக் கடைக்குச் சென்றுவிட்டார்.

வருண் தந்தையின் வார்த்தையில் இடிந்து போய் அமர்ந்துவிட்டான்.

“உனக்கு அந்தப்பெண்ணை பிடித்திருக்குன்னா அதை அங்கே வைத்து அன்றே சொல்ல வேண்டியது தானேடா?” வசந்தியும் மகனின் செயலில் கொஞ்சம் அதிருப்தி அடைந்திருந்தார். அதனை இப்போது வார்த்தையில் வெளிப்படுத்தினார்.

“அம்மா நானே நேற்றுதான் உணர்ந்தேன்.” சற்று சலிப்பாக மொழிந்தான்.

“எனக்கென்னவோ உங்கப்பா நீ விருப்பமென்று சொன்னதை காதலென்று எண்ணி தடைபோடுறாருன்னு நினைக்கிறேன் வருண்.”

கணவரின் எண்ணத்தை சரியாக கண்டுகொண்டார் வசந்தி.

“அப்படியும் இருக்கலாம்மா… ஆனால் இது உண்மையில் காதல் தானே! ஒரு பெண்ணின் மீது காதலில்லாமல் விருப்பம் வருமா?”

வருணின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று வசந்திக்கு தெரியவில்லை.

“இந்த வீட்டிற்கு ஒரு காதல் போதுமென்று உன் அப்பா நினைக்கிறார் வருண். அவரை மீறி உன் விருப்பம் நடந்தால் எனக்கு சந்தோஷம் தான்” என்ற வசந்தி அவனை பெரும்பாடுப்பட்டு துணி கடைக்கு அனுப்பி வைத்தார்.

கடைக்கு வந்த வருண் நடந்தவற்றை எல்லாம் மனதில் போட்டு உருட்ட விக்னேஷிற்கு அழைத்துவிட்டான்.

வம்சியுடன் சென்று கொண்டிருந்த விக்னேஷ் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் போதே வம்சி அதனை கட் செய்து அணைத்துப் போட்டான்.

“டேய் வசு போன் பண்ணுவாடா ஸ்விட்ச் ஆஃப் வந்தால் பயப்படுவாள்.” விக்னேஷ் சொல்ல முத்தண்ணன் அலைபேசியை வாங்கி வசுவின் எண்ணைதானே டயல் செய்து விக்னேஷிடம் நீட்டியவன்,

“வீட்டிற்கு வர நாளை மாலைக்கூட ஆகலாமென்று சொல்லிவிடு” எனக்கூறி அதி முக்கியமாக வேடிக்கை பார்த்தான் வம்சி.

“நாளை ஈவ்வினிங்… அவ்வளவு நேரம் என்னடா பண்ணப்போறோம்?” அதற்குள் வசு அழைப்பை ஏற்றிருந்தாள்.

ஏன்? எதற்கு? என்று ஆயிரத்தெட்டு விசாரணை நடத்தியவளிடம் ஏதேதோ சொல்லி சமாளித்து வைப்பதற்குள் விக்னேஷ் நூடுல்ஸ் ஆகியிருந்தான்.

தனக்கு தெரிந்தால் தானே ஒழுங்கான காரணம் சொல்லியிருப்பான். தனக்கே தெரியாமல் இருக்கும்போது பாவம் ஏதேதோ உலறி வைத்திருந்தான்.

விக்னேஷின் நிலை கண்டு முத்தண்ணனே சிரித்துவிட்டார்.

“இவனை மாதிரி பிரண்ட் கிடைத்தால் என் பொழப்பு இப்படித்தாண்ணே சிரிப்பா சிரிக்கும்” என்று முத்தண்ணனிடம் புலம்பியவன் இருக்கையில் சாய்ந்து, “எனக்கு தூக்கம் வருது, அங்கு போனதும் எழுப்பி விடுடா” என வம்சியிடம் சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.

கண் திறந்திருந்தால் தன்னிடம் வம்பு செய்கிறேனென்று தன் உயிரை வாங்குவானென்றே கண்களை மூடிய விக்னேஷ் உண்மையில் உறங்கியும் போனான்.

முத்தண்ணன் ரத்தினத்தின் கட்சி அழுவலகக் கட்டிடத்தின் முன்பு வண்டியை நிறுத்த, கீழிறங்கி கூலர்ஸை அணிந்து கொண்ட வம்சி முத்தண்ணனிடம்…

“உள்ளே சென்று நான் வந்திருப்பதாக ரத்தினத்திடம் சொல்லுங்கண்ணா” என்று அவரை உள்ளே அனுப்பி வைத்தான்.

முத்தண்ணன் ரத்தினத்தை பார்த்து வம்சி வந்திருப்பதை தெரிவிக்க அவரின் உடல் சட்டென்று வியர்வையில் குளித்தது. கை விரல்கள் நடுக்கம் கொண்டன. தன் மேல் துண்டை எடுத்து முகத்தில் ஒற்றியவர் ஓட்டமும் நடையுமாக வம்சியைத் தேடி வெளியில் வந்தார்.

மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியின் எஞ்சின் மீது கால்மேல் காலிட்டு அமர்ந்திருந்த வம்சி தன் தொடையில் தாளமிட்டுக் கொண்டே ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

வேகமாக வரும் ரத்தினத்தை பார்த்ததும்,

“ரத்து” என்று உற்சாகமாகக் குரலிட்டவாறே வண்டியிலிருந்து குதித்து இறங்கி, வானோக்கி இரு கைகளையும் கோர்த்தபடி உயர்த்தி உடலை ஒருமுறை சற்று மேல் தூக்கி இறக்கினான்.

“வம்சி வேண்டாம் என்னை பகைத்துக் கொள்ளாதே!”

“என் அத்தை மீது கை வைத்து, நீதான் என்னை பகைத்துக்கொண்டாய்” என்ற வம்சி நொடியில் தன் கோப முகத்தை மாற்றி…

“என்ன ரத்து… மேலிடம் கையை விரித்து விட்டார்களா?” வம்சியின் பேச்சில் நக்கல் இருந்ததோ!

வம்சியின் வார்த்தைகள் உண்மை என்பதால் ரத்தினம் மௌனமாக இருந்தார்.

“சரி வா போவோம்” என்ற வம்சி ரத்தினத்தின் கையை பிடித்து அழைத்துச் சென்று வண்டியில் ஏற்றினான்.

வண்டி ரத்தினத்தின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

யாருக்கோ அழைப்பு விடுத்த வம்சி, “கூட்டிட்டு போயிட்டு இருக்கேன். நீங்க வந்திடுங்க” என்று சொல்லி வைத்துவிட்டான்.

“யாருக்கு ஃபோன்?”

வினவிய ரத்தினத்தை அலட்சியமாக பார்த்த வம்சி… “வருமானவரித்துறை” என்று ஒவ்வொரு எழுத்தையும் பிரித்து அழுத்திக் கூறினான்.

“வேண்டாம் வம்சி…”

“என்னடா இவ்வளவு ஸ்பீடா போறேன்னு பார்க்குறியா? கொஞ்சம் கேப் விட்டால் நீ எஸ்ஸாகிட மாட்டாய் அதுக்குத்தான்.

உனக்கு அனுப்புவதற்கு முன்பே ஐடி டிப்பார்ட்மெண்ட்க்கு அனுப்பிட்டேன்” என்ற வம்சி “இனி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” எனத் திமிராகக் கூறினான்.

வம்சி ரத்தினத்தின் இல்லீகள் தொழில்கலைப்பற்றி ஆதாரங்கள் சேகரிக்கும் போது தான் அவரின் வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்குவிப்பின் கணக்குகள் வம்சிக்கு கிடைத்தது. முதலில் இதிலிருந்து களமிறங்க வேண்டுமென்று நினைத்த வம்சியின் ஆட்டத்தில் முதல் காய் இதுதான்.

“என்னை சாதாரணமாக எடைபோடாதே வம்சி.”

ரத்தினம் நேரடியாகவே மிரட்டும் தொனியில் பேச, வம்சி தனக்கு வந்த சிரிப்பினை அடக்க பெரும்பாடு பட்டான்.

“நீ பதவியில் இருக்கும் போது தான் உன்னுடைய மகனைக் கொன்றேன். அப்போவே உன்னால் என்னைத்தொட முடியவில்லை. இப்போ நீ பதவியிலும் இல்லை, அரசியலிலும் இல்லை… அதை மறந்துவிட்டு பேசுகிறாயே!” என்றான்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் ரத்தினம் தோல்வியை தழுவினார். இதனால் அவர் இப்போது முன்னாள் எம்.எல்.ஏ அவ்வளவு தான்.

மதியம் தான் வந்துவிட்டதை தெரிவிக்க வம்சி ரத்தினத்திற்கு அழைத்த போதுதான், வம்சி தான் சேகரித்து வைத்த ஆதாரங்களில் சிலவற்றை ரத்தினத்திற்கு அனுப்பி வைத்தான்.

அதனை கண்டதும்ரத்தினத்திற்கே பயம் தோன்றியது.

அவரின் லீகள் மற்றும் இல்லீகள் சொத்துக்கள் அனைத்தும், எங்குள்ளது, எப்போது எவ்விடத்தில் எந்நேரத்தில் வாங்கியது என்பது உட்பட அனைத்தும் பட்டியலிடப் பட்டிருந்தது.

‘பதவியில் தானில்லாத போது இதில் மாட்டினால் வெளிவருவது மிகுந்த சிரமம்’ என்று கருதியவர், அவரின் முகத்தை வைத்தே என்ன பிரச்சனை எனக் கேட்ட மகளுக்கு பதிலளிக்கக்கூட விருப்பம் இல்லாதவராக தன் கட்சித் தலைவரை பார்க்க அலுவலகம் வந்திருந்தார்.

அவர்கள் கட்சி ஆட்சியில் இல்லையென்றாலும்… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பெரிய ஆட்கள். அதனாலே கட்சியின் பெயரை வைத்து வெளியில் வந்துவிட வேண்டுமென்று இங்கு வந்தார்.

வம்சி அனுப்பிய ரத்தினத்தின் சொத்து மதிப்புகளை ரத்தினம் காட்ட அதனை வாங்கி பார்த்த அக்கட்சித் தலைவரே ஆடிப்போய்விட்டார். ஏனென்றால் அவரிடம் கூட அவ்வளவு சொத்துக்கள் இல்லை. வரம்புமீறி குவித்திருந்தார் ரத்தினம்.

ஆட்சியில் இல்லாத போது இதில் ரத்தினத்திற்கு உதவி இருக்கின்ற கட்சியின் பெயரையும் கெடுத்துக்கொள்ளக் கூடாது’ என நினைத்த தலைவர் மற்றவர்களிடமும் கலந்தாலோசிக்க… அனைவரும் ஒருமித்துக் கூறியது ரத்தினத்தை கட்சியிலிருந்து நீக்குங்கள் என்பதே!

அதனை கேட்ட ரத்தினம் தலைவரிடம் வாதத்தில் ஈடுபட்ட சமயம் தான் முத்து சென்று வம்சியின் பெயரை சொல்லி அழைக்க…

“சாட்சிக்காரனைவிட சண்டைக்காரனிடமே பேசி பார்க்கலாம்” என வம்சியை காண வெளியில் வர அவனோ அவரை பேசவும் விடாது அள்ளிப்போட்டுக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றான்.

‘இவன் இதிலிருந்து தன்னை விடுவிக்க போவதில்லை’ என்று மனதில் நினைத்தவர் ஒரு திட்டம் போட்டார்.

‘வருமானா வரித்துறையினர் முன் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுவதுபோல் விழுந்து ஹாஸ்பிட்டல் சென்று கொஞ்ச நாட்களுக்கு படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.’

“பலே திட்டமாயில்லை இருக்குது…” ரத்தினத்தின் தீவிரமான முகத்தைக் கண்டு வம்சி கூற, வாய் திறக்காது காதுவரை உதட்டினை இழுத்து பிடித்து சிரித்து வைத்தார்.

அதுவே அவர் ஏதோ திட்டமிடுகிறாரென்று வம்சியை யோசிக்கத் தூண்டியது.

அந்நேரம் உறக்கத்திலிருந்து எழுந்த விக்னேஷ்,

“இன்னுமாடா அந்த ஆளு ரத்தினத்தோட ஆபீஸ் வரல” என்றவாறே தன்னருகில் தலையை திருப்பி பார்க்க… ரத்தினம் விக்னேஷை தீயாய் முறைத்தார்.

ரத்தினம் தன் அரசியலுக்காக எதற்கும் அஞ்சாது பல கொலைகள் செய்திருக்கிறார். இப்போது அது தேவையில்லாது விக்னேஷின் மூளைக்குள் ஓட சட்டென்று சன்னலில் ஒட்டி அமர்ந்து கொண்டான். ரத்தினத்தின் புறம் திரும்பிவிடக் கூடாதென்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தான்.

‘பாவிப்பய, கோர்த்து விடுவதற்க்குன்னே அங்கிருந்து திரும்பி வந்தான் போல.’ விக்னேஷ் நொந்து போனான்.

“நீ நினைத்தது எனக்கு கேட்டுச்சு விக்கி” என்று சிரித்த வம்சியின் முகம் ரத்தினத்தின் பற்களை நரநரக்கச் செய்தது.

அதில் ரத்தினத்தை வெறுப்பேற்றி பார்க்க நினைத்த வம்சி வண்டியை நிறுத்தச் சொல்லி தனக்கொரு தேநீர் வாங்கி வருமாறு முத்தண்ணனை அனுப்பினான்.

வம்சி தேநீர் பருகும் விதம் தெரிந்த விக்கிக்கு அங்கேயே அவன் தலையினிலேயே நான்கு கொட்ட வேண்டும் போலிருந்தது.

“இப்போது இது தேவையா வம்சி.” ரத்தினத்தின் பக்கம் சற்றும் நகர்ந்திடாது, மிகக் கவனமாக முன்னாலிருக்கும் வம்சியிடம் கேட்டான் விக்னேஷ்.

விக்கி குரல் தெளிவாகக் கேட்டபோதும்,

“என்ன விக்கி உனக்கும் டீ வேண்டுமா” என சத்தமாகக் கேட்டு மௌனமாக சிரித்தான்.

வம்சி பக்கமிருந்து மிரரில் அவனின் முகத்தை பார்த்து வாயில் கை வைத்து விக்னேஷ் காட்ட…

“என்ன விக்கி புரியல” என்று அதே மிரரில் விக்கியை பார்த்து கத்தினான் வம்சி.

விக்னேஷ் தன் தலையை தனக்கு முன்பிருந்த இருக்கையில் நன்றாக முட்டிக்கொண்டான்.

வழக்கம்போல் தன் பாணியில் முத்து வாங்கி வந்த தேநீரை பருகி ரத்தினத்தின் பொறுமையை மிகவும் சோதித்த பின்னரே வண்டியை இயக்கக் கூறினான்.

இவர்கள் வருவதற்கு முன்பே வருமான வரித்துறையினர் ரத்தினத்தின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

ரத்தினத்தோடு வம்சியும் விக்னேஷும் உள்ளே நுழையும் போது அவர்கள் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். ஒருவர் ரித்திகாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர்களைக் கண்டதுமே போர்டிகோவிலிருந்து உள் நுழைய கால் எடுத்து வைக்க முயன்ற ரத்தினம் தன் வலது பக்க மார்பை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு தரையில் சரிய இருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top