அத்தியாயம் 22
ரத்தினம் தன் இதயப்பகுதியை பிடித்துக்கொண்டு கீழே விழ,
உள்ளிருந்து அவர் வருவதை கவனித்த ஐடி ஆபீசர்ஸ் என்னவோ ஏதோவென்று இருக்கையிலிருந்து எழ… இமைக்கும் கணத்தில் ரத்தினத்தின் திட்டத்தை கண்டு கொண்டான் வம்சி.
ரத்தினத்திற்கும் தரைக்கும் சில மில்லி மீட்டர் இடைவெளி இருக்கும் சமயத்தில்… அதாவது ரத்தினத்தின் உடல் முழுவதுமாக தரையில் படயிருந்த சமயம்…
“அய்யோ பாம்பு, பாம்பு” என்று அலறியிருந்தான் வம்சி.
வம்சி கத்திய கத்தலில் கீழே விழயிருந்த ரத்தினம் எகிறி குதித்து அருகில் நின்றிருந்த விக்னேஷின் இடையில் ஏறி அமர்ந்திருந்தார்.
“எங்க பாம்பு… எங்க பாம்பு?”
வம்சிக்கு மேல் ரத்தினம் கத்தினார். அவருக்கு பாம்பென்றால் அத்தனை பயம் என்பதை வம்சி அறிந்திருந்தான்.
அங்கிருப்போர் அனைவருக்கும் இப்போது ரத்தினத்தின் நாடகம் தெள்ளத்தெளிவாக புரிய,
“இனி உங்களுக்கு உண்மையிலே அட்டாக் வந்தாலும்… சோதனை முடியும் வரை வெளியில் செல்ல முடியாது” என்று வந்திருப்பவர்களில் உயர் நிலையில் இருப்பவர் கூறினார்.
ரத்தினம் வம்சியை முறைத்தார். அவர் திட்டத்தை நொடியில் தவிடு பொடியாக்கியிருந்தானே!
“சார் கீழே இறங்கியும் அவனை முறைக்கலாம்.” விக்னேஷ் அப்பாவியாக சொல்ல அப்போதே தன்னிலை உணர்ந்த ரத்தினம் கீழிறங்கி ரித்திகாவுக்கு அருகில் சென்று அமர்ந்தார். ரித்திகா தந்தையை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.
“சிப்ஸ் சாப்பிடற மாதிரி சாதாரணமா கொலை பண்ணுற ஆளு, பாம்புக்கு போய் இப்படி பயப்படுறாரே!” விக்னேஷ் வம்சியிடம் ரத்தினத்தின் செயலைப்பற்றி கூறி சிரித்தான்.
“பாம்பென்றால் படையும் நடுங்குது இவர் பயப்பட மாட்டாரா” எனக் கேட்ட வம்சி, “உன் ஷூ மேல் பாம்பு ஏறுது பார்” என்று சத்தமின்றி சொல்ல… விக்னேஷ் பயந்து காலை உதரியவாறு சற்று தள்ளி நின்றான்.
வம்சி சிரித்த பின்னரே பொய்யென்று உணர்ந்து அசடு வழிந்தான் விக்னேஷ்.
“வீரமெல்லாம் எந்தவொரு பிரச்சனையையும் நேரில் காணும் வரை தான்… இப்போ நீ இல்லாத பாம்பை நினைத்து பயந்த மாதிரி” என்ற வம்சி ஐடி துறையினரிடம் சென்று பதுக்களில் இருக்கும் ரத்தினத்தின் சொத்துக்களைப் பற்றி சொல்லத் துவங்கினான்.
‘வம்சி சொல்ல சொல்ல இவையெல்லாம் தனக்கே தெரியாது’ என்ற நிலையில் ரித்திகா.
யாவும் அவளின் பெயரிலேயே வாங்கியிருந்தார். அதுதான் அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. இதைவிட பேரதிர்ச்சி அவளுக்கு காத்திருக்கிறது என்பதை அறியாது இதற்கே அத்தனை அதிர்ந்திருந்தாள்.
எதையும் கருத்தில் கொள்ளாது என்ன செய்யலாமென்ற யோசனையில் ரத்தினம்.
‘இந்த போலீஸ் இங்கிருந்து போனால் தான் இவர்களிடம் எதாவது டீல் பேச முடியும்.’
அவ்வாறு நினைத்த ரத்தினம், அவர்களிடம்… “வருமானவரி சோதனை நடக்கும் இடத்தில் போலிசுக்கு என்ன வேலை?” எனக் கேட்க, அதற்கு வம்சி பதிலளிக்க வர… அவனைத் தடுத்த அதிகாரி தானே பதில் வழங்கினார்.
“உங்க மேல் குற்றம் நிரூபணமாகும் நிலையில் உங்களை அரெஸ்ட் செய்யத்தான் மிஸ்டர்.ரத்தினம்” என்றவர் தன் வேலையில் தீவிரமானார்.
டீபாயில் அடுக்கப்பட்டிருந்த பத்திரங்கள் மற்றும் நகைகள், பணங்கள் அவற்றை காண்பித்து “இவ்வளவு தானா?” என்று ஐடி அதிகாரி வினவ, தடுமாறியவாறே ஆமாமென்று கூறினார் ரத்தினம்.
“அப்படியா ரத்து” எனக் கேட்டுக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்த வம்சி சற்று நடந்து வீற்றிக்குள்ளே இருக்கும் மாடிபடிக்கு கீழ் தேவையில்லாமல் நின்றிருந்த தூணை தொட்டு பார்த்தான்.
தூணையும் ரத்தினத்தையும் வம்சி மாற்றி மாற்றி பார்க்க, ரத்தினத்திற்கு கிலி பிடித்தது.
‘பய கண்ணுல இருந்து ஒன்றும் தப்பாதே’ என்று எண்ணிய விக்கி வம்சியின் பார்வையிலேயே பொருள் உணர்ந்து வீட்டுக்கு வெளியில் சென்று தோட்டத்தில் புற்கள் நிறைந்த தரையை சுத்தம் செய்ய பயன்படும் ஐந்து கூர்முனைகள் கொண்ட தடித்து நீண்ட இரும்பு கவையை கொண்டு வந்து வம்சியிடம் கொடுத்தான்.
வம்சியின் பலத்திற்கு ஒரே தட்டிலே அந்த தூண் விரிசல் விட்டது. இரண்டு மூன்று அடிகளில் சிமெண்ட் துகள்கள் சிதற அந்த கனத்த தூண் உடைந்தது. அதிலிருந்து தங்கக் கட்டிகளும், கட்டுகட்டாக டாலர்களும் தெறித்து தரையில் விழுந்தன.
“இதுக்கு என்ன சொல்றீங்க மிஸ்டர்.ரத்தினம்?” அதிகாரியின் கேள்விக்கு ரத்தினத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
“இதுக்கு மேலும் மறைத்து வைத்திருந்தால் சொல்லிடுங்க ரத்தினம்?” அதிகாரி சற்று காரமாகவே வினவினார்.
“அவ்வ… அவ்… அவ்வள” ரத்தினம் வார்த்தையை முடிக்கவில்லை டப்பென்ற சத்தம் அவ்விடத்தையே நிறைத்தது.
வம்சி தன் தலைக்குமேல் சீலிங்கை துப்பாக்கியால் சுட்டிருந்தான்.
கார்ட்போர்ட் அட்டைகளால் அந்த சீலிங் இருந்தது. மீண்டும் பட் பட் பட்டென்று வம்சி குண்டுகளை சிதறவிட… மேலிருந்து கணக்கிலடங்கா பத்திரங்கள் கட்டு கட்டாக கீழே விழுந்தன. அதில் பல குறுந்தகடுகளும் அடக்கம்.
ரத்தினத்தின் முகத்தில் ஈ ஆடவில்லை. அவ்வளவு அரண்டு போனார்.
“நாங்கள் எல்லாம் தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறோம் ரத்தினம். அதனால் நீங்களாவே உண்மைகளை சொல்லிடுங்க” என்றார் அதிகாரி.
“இதற்கு மேல் என்ன சார் வைத்திருக்க போகிறேன்” என்று ரத்தினம் சொல்ல, மாடிப்படிகள் செல்லும் பக்கச் சுவற்றில் கை முஷ்டியால் ஓங்கி ஒரு குத்தி குத்தினான் வம்சி. சுவற்றில் அட்டைகள் கொண்டு, பார்ப்பதற்கு செங்கல் வைத்து சிமெண்ட் கொண்டு பூசப்பட்டது போல் காட்சியளிக்குமாறு உருவாக்கப்பட்டிருந்தது. அட்டைச்சுவர் உடைந்து விழ, அப்பக்கச் சுவர் முழுக்க அவ்வளவும் கருப்பு பணம்.
“இந்தாளு மட்டுமே இவ்வளவு வைத்திருக்கிறான் என்றால், நம்ம அரசியல்வாதிகள் எல்லோரிடமும் இருக்கும் பணத்தை ஒன்று சேர்த்தால் ஆயுசுக்கும் உலகம் முழுக்க இருக்கும் மக்கள் உட்கார்ந்து சாப்பிடலாம் போலவே!” விக்னேஷ் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தவனாக வம்சியிடம் கூறினான்.
அதன் பின்னர் ரத்தினத்திடம் எதுவும் கேட்கவில்லை. வம்சியுடன் ஐடி துறை ஆட்களும் இணைந்து கொள்ள வீடு முழுக்க இன்ச் பை இன்ச் சல்லடையாக சளித்து இருந்தனர்.
அவ்வளவும் கணக்கில் வராத சட்டத்துக்கு எதிரான வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள்.
அவை யாவையும் சரிபார்க்கவே அவர்களுக்கு மலைப்பாக இருந்தது. நேரம் விடியலை நெருங்கிக் கொண்டிருந்தது.
விக்னேஷ் ஒருபுறம் கவுச்சில் உடலை குறுக்கி உறங்கிக் கொண்டிருக்க, எங்கும் காகிதங்கள் சலசலக்கும் சத்தம்.
அந்த நேரத்திலும் தூக்கத்திற்கு பிடி கொடுக்காது அனைவரும் தங்களது வேலையில் முனைப்பாக இருந்தனர். இரவு உணவினைக் கூட தவிர்த்திருந்தனர்.
வந்திருந்தோர் அனைவரும் ஆண்கள். இரவு நேரமும் சோதனை தொடரலாம் என்பதால் வம்சி முன்பே பெண் அதிகாரிகளை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைத்தான். அதன்படியே வந்தவர்கள் முழுக்க ஆண்கள் மட்டுமே.
அங்கு பெண் என்றால் ரித்திகா மட்டுமே. அவளைப்பற்றியும் வம்சி சிந்தித்தான், அதனால் அந்த வீட்டில் வேலை செய்யும் வயதான பெண்மணியை ஐடி அதிகாரியிடம் அனுமதி பெற்று அன்று அங்கேயே இருக்கச் செய்தான்.
இரவும் நேரம் பதினொன்றை கடந்ததும் ரித்திகாவையும், அப்பெண்மணியையும் மேலே இருக்கும் அவளின் அறைக்கு அனுப்பி வைத்திருந்தான்.
வம்சியின் செயலில் ரித்திகா தன் தவறை எண்ணி குன்றிப்போனாள். வம்சியின் முன் அவளின் முந்தைய செயல்கள் சிறுமைப்பட்டு போயின.
பொழுது நன்கு புலர்ந்திருக்கும் இன்னும் அவர்களின் சரிபார்க்கும் சோதனை நடந்து கொண்டிருந்தது.
“நான் என் வக்கீலிடம் பேச வேண்டும்.” ரத்தினம் உணர்வற்ற குரலில் கேட்க,
“உங்களை கோர்ட்டில் ஹேண்டோவர் செய்த பின் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்” என்றார் அந்த அதிகாரி. ரத்தினத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வம்சி முத்தண்ணனை அனுப்பி அனைவருக்கும் தேநீர் வாங்கி வரச் செய்து கொடுத்தான்.
தனக்கும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டவன், உறங்கும் விக்னேஷிற்கு அருகில் அமர்ந்து தேநீரை சுவைக்க…
“வசு காஃபி” என்று உறக்கத்திலேயே கேட்டான் விக்னேஷ்.
“அட லூசே” என்று அவனை லுக் விட்ட வம்சி தன் கையிலிருந்த ஆவி பறக்கும் கோப்பை கொண்டு விக்கியின் கையில் சூடு வைக்க… உறக்கம் பறந்தோட அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான் விக்னேஷ்.
“இப்போ என்ன நடந்துச்சு… எங்கிருக்கோம்?” என்று உறக்க கலக்கத்தில் ஒன்றும் புரியாது விக்னேஷ் கேட்க, சிரிப்பில் வம்சியின் உடல் குலுங்கியது.
அதன் பின்பே நிகழ் உணர்ந்த விக்னேஷ்,
“உன்னோடு இருக்கும் பாவத்துக்கு இன்னும் என்னவெல்லாம் படப்போகிறனோ” எனக் கேட்டுக்கொண்டே வம்சியின் கையிலிருந்த, அவன் பாதி குடித்த கோப்பையை வாங்கி தான் பருகினான்.
“அப்படியென்ன நீ குடிக்கிற டீ மட்டும் அவ்வளவு டேஸ்ட்டா இருக்குதுன்னு பார்க்கிறேன். எவனும் உன்னை மாதிரி ஒரு மேனரிசம் வைத்திருக்க மாட்டான்” என்று சொல்லியவாறு வம்சி குடிப்பது போல் இரண்டு சிப் சுவைத்தவன், “உன்னளவு பொறுமை எனக்கில்லைடா” என்று ஒரே தம்மில் காலி செய்தான்.
அந்நேரம் வம்சியிடம் வந்த ஐடி அதிகாரி,
“சோதனை முடிந்தது மிஸ்டர்.வம்சி” என்றார்.
“அப்பாடா வீட்டுக்கு போகலாமா?” விக்கியிடம் ஒரு நிம்மதி.
“இல்லை” என்ற வம்சி, “விசாரணை?” என்று கேள்வியாக இழுத்தான்.
“அட கடமைக்கு பொறந்தவனே” என்று வம்சியை திட்டியவன் மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்து கொண்டான்.
“அதை நீங்கதான் வம்சி சொல்ல வேண்டும். இங்கு வைத்தே விசாரணை செய்யலாம். இல்லையென்றால் எங்க இடத்திற்கும் செல்லலாம்” என்றார்.
“இப்போ இவரை வெளியில் அழைத்துச் சென்றால், மீடியாவுக்கு நாமே தகவல் தந்தது போலாகிவிடும்.
ரத்தினம் இதிலிருந்து தப்பிக்கவே கூடாது. இங்கிருந்து அவர் சென்றால் அது நீதிமன்றமாகத்தான் இருக்க வேண்டும்” என்ற வம்சி, அடுத்த அரை மணி நேரத்தில் விசாரணைக்கு தேவையானவற்றை அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்.
சிறிய மேசை ஒன்று போடப்பட்டிருக்க அதன் ஒரு பக்கத்தில் நான்கு முக்கிய அதிகாரிகள் அமர்ந்திருக்க, எதிர் புறம் ரத்தினம் உட்கார வைக்கப்பட்டிருந்தார்.
அந்த மேசையில் கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய கோப்புகள் அடுக்கப்பட்டிருந்தது.
இவை யாவையும் வீடியோ காமிராவின் மூலம் விக்னேஷ் பதிவு செய்து கொண்டிருந்தான்.
ஒருவேளை இந்த விசாரணை செய்திகளில் ஒளிபரப்பு செய்ய நேரிட்டால் எங்கும் தன் பெயர் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக விக்னேஷை முன்னிறுத்தியிருந்தான்.
‘இப்போது வருணின் முன்சென்று நின்று அவனின் திருமண வாழ்விற்கு தான் தடையாகிவிடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தான்.
அதற்காகவே விசாரணையிலிருந்து ஒதுங்கி நடப்பதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் நாளையே வருண் வம்சியின் கண் முன் வந்து நிற்கப்போகிறான். அவனை எதிர்கொள்ள முடியாது வம்சி தடுமாற இருக்கின்றான்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் ரத்தினம் பேசியவை மிகக் குறைவே!
எதற்கும் அவர் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், அனைத்திற்கும் சரியான ஆதாரங்களை வம்சி அளித்திருக்க ரத்தினம் வாய் திறக்கவில்லை என்றாலும் இதுவே போதுமென்று தங்களது விசாரணையை முடித்து பேப்பரில் கையெழுத்திட முயல, அவர்களை வம்சி தடுத்திருந்தான்.
“சார் ஒன் ரிக்வெஸ்ட்.”
“சொல்லுங்க மிஸ்டர்.வம்சி.”
“சட்டத்திற்கு விரோதமாக ரத்தினம் வைத்திருக்கும் எல்லாம் ரித்திகாவின் பெயரில் தான் உள்ளது. அதனால் இப்போது குற்றவாலியாகப் போவது ரித்திகா தான்.
ஆனால் இதற்கும் அவருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அதையும் ரத்தினம் ஒப்புக்கொள்ளுமாறு ஸ்டேட்மெண்ட் வாங்கிவிட்டால் உண்மை குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும்” என்றான்.
வம்சி சொல்லுவதும் சரியாகப்பட அதிகாரிகள் ரத்தினத்தை பார்க்க,
அவரோ பட்டென்று “ஒப்புக்கொள்ள முடியாது” எனக் கூறியிருந்தார்.
அதில் ரித்திகாவிற்கு பேரதிர்ச்சி.
“அவங்க உங்க பெண் தானே, இது கோர்டிற்கு சென்றால் அனைத்தும் அவரின் பெயரில் இருப்பதால் உங்கள் மகள் தான் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்கும்” என்று அதிகாரி விவரித்தும் ரத்தினம் ஒப்புக் கொள்ளவில்லை.
ரத்தினம் இது ஒன்றை வைத்துதானே இதிலிருந்து தப்பிக்க இருக்கிறார். அதை விட்டுவிடுவாரா என்ன?
ரத்தினத்தின் எல்லாம் அறிந்திருந்த வம்சி இதற்கான காரணத்தையும் அறிந்திருந்தான்.