நெஞ்சோடு காதல் சேர 25

அத்தியாயம் 25

தங்கை தன் முன் குற்றவுணர்வில் தவிப்பதை மென்னிலாவால் பார்க்க முடியவில்லை. மனதால் தாங்கிக்கொள்ள இயலாது, தங்கையின் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தியவள் தேவிகாவின் கண்களை நனைத்து கன்னத்தில் உருண்டு கொண்டிருந்த கண்ணீரை துடைத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள்.

“சாரிக்கா… எனக்கே தெரியல, நானெப்படி!” சொல்ல முடியாது வார்த்தைகள் இன்றி தடுமாறினாள்.

தன்னிலையை விளக்கத் தெரியாது செயலற்றுப் போனாள். தன்னை குறித்த நல்லெண்ணம் மாறுபட்டு விடுமோ என்று உள்ளுக்குள் மருகினாள்.

அப்போது மென்னிலா தேவிகாவின் மனதை அவள் மூலமாகவே வருண் அறிந்து கொள்ளட்டுமென்று தேவிக்கு தெரியாது தன் அலைபேசியிலிருந்து வருணுக்கு அழைப்பு விடுத்தாள்.

‘சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆக வேண்டும்’ என்று நினைத்த தேவிகா தன் மனதை திறந்தாள்.

வருணும் மென்னிலாவின் அழைப்பை ஏற்றிருந்தான்.

“அன்னைக்கு அவர் வரும்போது உன்னைத்தான் பெண் பார்க்க வர்றார்ன்னு முதலில் எனக்குத் தெரியாதுக்கா” எனத் துவங்கி வருணின் மீது ஆர்வமாக தன் கண்கள் படிந்ததையும், வருணின் ஆராயும் பார்வை தனக்குள் விதைத்த புதுவிதமான நுண்ணுணர்வையும், அதன் பின் மென்னிலாவை பார்க்க வந்தவர் என்று தெரிந்து நொடியில் தன் எண்ணப்போக்கை இழுத்து பிடித்து வைத்ததையும்… அதனையும் மீறி தற்செயலாக நடந்த தீண்டல் அவளுக்குள் மாற்றத்தை உருவாக்கியதையும், உணர்ந்தும் உணராத நிலையில் வருணைத்தேடி அலை பாய்ந்த கண்களுக்கு அக்காவை பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையென்று பலமுறை எடுத்து சொல்லி கடிவாளமிட்டதையும்… அவன் சென்றதும் தன்னுடைய ஈர்ப்பும் சென்றுவிட்டதென்று தவறாக நினைத்த மனதையும்… மீண்டும் வருணின் புகைப்படத்தை பார்த்தே தன்னுடைய மனதின் ஆசையை கண்டு கொண்டு, முயன்று இதயத்தில் தோன்றிய காதலை மரிக்கச் செய்து கொண்டிருப்பதையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்து தேம்பி தேம்பி அழுதாள்.

“ரொம்ப வலிகுதுக்கா.” சிறு பெண்ணால் காதலின் கனத்தை தாங்க இயலவில்லை.

அவளின் வார்த்தை வருணுக்கு அவன் மீது அவள் கொண்ட காதலை பறைசாற்றியது.

தேவிகா அழுகையில் கரைய,

அவளின் அழுகை ஒலியை கேட்க முடியாது வருண் கட் செய்திருந்தான்.

‘வருணின் மீது இவ்வளவு நேசம் கொண்டிருப்பவள் தனக்காக அவளின் காதலை தியாகம் செய்ய விழைந்திருக்கின்றாளே!’ தங்கையின் பாசம் மென்னிலாவை மலைக்கச் செய்தது.

‘தான் கூட இந்நிலையில் இவ்வளவு யோசித்திருப்போம் என்பது சந்தேகமே!’ உள்ளூற சொல்லிக்கொண்ட மென்னிலா தங்கையை அணைத்துக் கொண்டாள்.

“வருண் உனக்குத்தான்.”

“அக்கா?”

மென்னிலாவின் பேச்சில் தேவிகா அதிர்ந்து கேள்வியுடன் பார்த்தால்.

ஆமென்று சொல்லிய மென்னிலா நடந்த அனைத்தையும் ஒன்று விடாது… தன் காதல் முதல் கொண்டு, பெயரால், உருவ ஒற்றுமையால் எழுந்த குழப்பம்… அதனை தொடர்ந்து சற்று நேரத்திற்கு முன்பு வருணுக்கும் அவளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்கள் என எல்லாம் கூறினாள்.

இறுதியில்,

“நல்லவேளை பார்க்க வந்த என்னை பிடிக்காது… உன்மீது வருண் அத்தானுக்கு விருப்பம் வந்தது. இல்லையென்றால் நம் நால்வரில் இருவரின் உள்ளம் நிச்சயம் மரித்திருக்கும்” என்றாள்.

தேவிகாவுக்கு மென்னிலா சொல்லிய உட்பொருளெல்லாம் விளங்கவில்லை. ‘உன்மீது வருணுக்கு விருப்பம்’ என்ற இடத்திலேயே தேவிகா இன்பமாய் தேங்கி நின்றுவிட்டாள்.

தேவிகாவின் காதல் தெரிந்து மகிழ முடியாது அவளின் அழுகையில் தவித்த வருண், அவளிடம் பேசி தன் காதலை சொல்லிட எண்ணி…

சரியாக அந்நேரம் தேவிகாவுக்கு அழைக்க,

தேவிகா உறைந்து இருந்ததால் அவளின் அலைபேசியை மென்னிலாவே இயக்கினாள்.

“ஹலோ.”

வருணின் குரல் ஒலித்ததும்…

“உங்க ஆளு ஃப்ரீஸ்… இருங்க கொடுக்கிறேன்” என்ற மென்னிலா தேவிகாவை தொட்டு அலைபேசியை நீட்டினாள்.

புரியாது பார்த்த தேவிகா,

“யாருக்கா?” என்று வினவ…

“எல்லாம் பேச வேண்டிய ஆளுதான்” என சொல்லி அறையை விட்டு வெளியேறினாள். போகும்போது கதவினை சாற்ற மறக்கவில்லை.

தேவிகாவுக்கு மென்னிலாவின் பேச்சினை வைத்து அழைப்பில் யாரென்று ஒரு யூகம். அப்போதே இதயம் மத்தளம் வாசிக்கத் துவங்க அவளுக்கு குரலே எழும்பவில்லை. அங்கிருந்து வார்த்தை வரட்டுமென்று மௌனமாக இருந்தாள்.

“தேவி.”

அழைத்துவிட்டான். அவளின் பெயரை உச்சரித்து விட்டான். அவனின் குரலை சட்டென்று பெண் மனம் கண்டு கொண்டது.

வயிற்றில் பட்டாம்பூச்சிகளின் படபடப்பு. இதயத்தின் ரீங்காரம் காதுக்கு எட்டியது. வருத்தத்தில் மூழ்கியிருந்த முகம் சந்தோஷத்தில் திளைத்தது.

அதே நிலை தான் அங்கு வருணுக்கும். ஆனால் தன்னவள் தன்னிடம் பேசிட தவித்தான். அவளின் வாய் திறப்புக்காகக் காத்திருந்தான்.

தேவிகா வருணின் தேவி என்கிற விளிப்பிலேயே லயித்து, தான் பேச வேண்டும் என்பதையே மறந்து போனாள்.

இப்போதைக்கு அவள் பேச போவதில்லை என்றுணர்ந்து அழைப்பை துண்டித்துவிட்டு வீடியோ காலில் வந்து விட்டான்.

முதலில் எடுக்கத் தயங்கியவள் அழைப்பு நிற்கப்போகும் நிலையில் ஆன் செய்து விட்டாள்.

திரையில் தெரிந்த வருணின் முகத்தை கண்டே நாணம் கொண்டவள் இமை தாழ்த்தினாள்.

வருணுக்கு மென்னிலாவிடம் தேவி தன்மீதான விருப்பத்தை சொல்லும் போது கேட்டிருந்தாலும், நேரிடையாக ஒருமுறை கேட்க விரும்பினான். ஆனால் அவளாக சொல்லட்டுமென்றும் நினைத்தான்.

“அழுதியா தேவி… எனக்காக?”

வருணின் கேள்வியில்… அவனின் கரகரத்த குரலில் இமை விரித்து அவனின் கண்களை சந்தித்தவள், இமை மூடி திறந்து பதில் அளித்தாள்.

“வாய் திறந்து பேச மாட்டியா?”

…..

“உன் காதலை சொல்ல மாட்டியா தேவிம்மா?”

தனக்கான அவனின் ஏக்கத்தை கூட அவளால் தாங்கிக்கொள்ள இயலாது, அவனின் முகத்தில் புன்னகையை கண்டுவிட வேண்டுமென உள்ளம் பரபரக்க சொல்லியே விட்டாள் தன் காதலை.

“லவ் யூங்க.”

அப்படியொரு புன்னகை வருணிடத்தில்.

நாணம் மேலிட கைகள் கொண்டு முகத்தை மூடியவாறு சிறு பிள்ளையென ஹஸ்கி குரலில் அவள் மொழிந்த காதலில் மொத்தமாக அவளிடம் வீழ்ந்தான்.

“நானும் லவ் யூ டூங்க.” அவளைப் போலவே வருணும் தன் காதலை சொல்லிட…

“அய்யோ போங்க” என்றவள் காலினை கட் செய்து விட்டாள்.

மலர்ந்த தன்னவளின் முகம் கண்ட மகிழ்வில் உல்லாசமாக விசிலடித்தபடி வருண் கீழே செல்ல…

“ஒருவழியாக எல்லாம் சரியாகிடுச்சு போல” என்று திரிலோகர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த ஈஸ்வர்…

“நிச்சயத்திற்கான புடவை நகையெல்லாம் கொடுத்து அனுப்பிவிட்டேன். அடுத்தவார இறுதியிலிருந்த நிச்சயத்தை முதலிலே மாற்றிவிட்டேன்” என்று தகவல் போல் சொல்லிச் சென்றார்.

“எங்க சரியாச்சு… பார்த்தீங்களே!” என்று செல்லும் ஈஸ்வரை கை காண்பித்தான்.

“ஆனால் எல்லாம் சரியாகிவிடுமென்று நம்பிக்கை வந்திருக்கு தாத்தா” என்று அவரை அணைத்து விடுவித்தான்.

“வம்சி வந்துட்டான் தாத்தா.”

தெரியும் என்பதைப்போல கண்களை மூடி திறந்தார்.

“அவனாக வராமல் அவனிடம் செல்லக் கூடாது நினைத்தேன். ஆனால் இப்போ அவனை சந்தித்தால் தான் சரிவரும் நினைக்கிறேன்.”

“அவன் விலகளே உனக்காகத்தான் வருண். புரிந்துகொள்.”

“நான் கேட்டேனா?” என்று சத்தாமாகக் கேட்டவன், “அவன் இல்லாது அந்த ரூமுக்குள் மூச்சு முட்டுது தாத்தா… நீயில்லாமல் நானில்லைன்னு என்னையே சுற்றி சுற்றி வந்து இப்படி எல்லாவற்றுக்கும் அவந்தான்னு என்னை அவனுக்கு அடிமையாக்கிட்டு தனியா விட்டுட்டு போயிட்டான்.

நாளைக்கு இருக்கு அவனுக்கு” என்ற வருணுக்கு வம்சியின் பாசத்தில் கண்கள் வியர்த்தது.

இவர்களுக்குள் நடைபெற்ற நிகழ்வுகள் எதைப்பற்றியும் அறியாது அவர்களின் பேச்சுக்கான சொந்தக்காரன் அன்றைய இரவை ரத்தினத்தின் வீட்டில் சோதனையில் கழித்துக் கொண்டிருந்தான்.

****

“மிஸ்டர்.ரத்தினம் புரிந்து கொள்ளுங்க… உங்க மகள் ஜெயிலுக்கு செல்வதைத்தான் நீங்க விரும்புறீங்களா? இதனால் அவரின் வாழ்வே வீணாகிவிடும்.”

ஐடி துறை அதிகாரி எவ்வளவோ எடுத்துக் கூறியும் ரத்தினம் வாய் திறக்கவில்லை.

ரித்திகாவே தன் தந்தையிடம் இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை.

“கொஞ்சம் கூடவா உங்க பெண்ணின் வாழ்வின் மீது உங்களுக்கு அக்கறை இல்லை?”

“என் பெண்ணாக இருந்திருந்தால் அக்கறை வந்திருக்குமோ!” எள்ளலாக வினவியவர்,

“முடிந்தால் என்னை ஜெயிலில் போட்டு பாருடா!” என்று வம்சியிடம் சவால் விட்டார் ரத்தினம்.

தனக்கு வந்த கோபத்தில் துப்பாக்கியை எடுத்து ரத்தினத்தின் நெற்றியில் வைத்த வம்சி…

“உண்மையை சொல்லுடா… இல்லை இங்கேயே உன்னை போட்டுத் தள்ளிடுவேன்” என்றான்.

அதில் பயம் கொண்டாலும் தனக்கான துருப்புச்சீட்டு ரித்திகாவை விட்டுவிட அவர் நினைக்கவில்லை.

“மிஸ்டர்.வம்சி காம் டவுன்.”

“இவனெல்லாம் உயிரோடு இருந்து என்ன சார் பண்ணப்போகிறான். துப்பாக்கியால் ஒரு புல்லட்… சுட்டா போயிடுவான்.”

வம்சியின் கோபம் அடங்குவதாக இல்லை.

“இவனுக்கு இந்த ஒரு தண்டனை போதுமென்று நினைத்தேன். இது மட்டும் போதாது போலிருக்கே” என்ற வம்சி…

“நேற்று நான் என்னுடைய குவாட்டர்சுக்கு போனதும் என்னை கொலை செய்ய ஆள் வைத்திருந்தாயே அவனை பிடித்தாயிற்று.”

வம்சியின் உடைமைகளை வைக்கச் சென்ற கான்ஸ்டபிள் சுதாரித்துக் கொண்டதால் தப்பினார். இல்லையென்றால் அவர் இறந்திருப்பார்.

வீட்டின் கதவை திறந்து உள் நுழையும் வம்சியை கொலை செய்வதற்காக ரத்தினத்தின் ஆள் ஒருவன் ஏற்கனவே வீட்டிற்குள் பதுங்கி இருந்தான்.

வம்சியென நினைத்து கான்ஸ்டபிளை அவன் தாக்க வர, நொடியில் விலகி அவனின் கையை கட்டியிருந்தார் கான்ஸ்டபிள்.

இப்போது அதையே வம்சி குறிப்பிட்டான்.

“வருணையும் அவனை வைத்து தானே ஆக்சிடெண்ட் செய்தாய். அதற்கும் அவன் தானே சாட்சி” எனக் கேட்டு “உன் மீதான எல்லா வழக்கையும் இன்றே கோர்டிற்கு எடுத்து செல்கிறேன் என்றான்.

தன்முன் வேங்கையென நின்றவனைக் கண்டு பயந்த ரத்தினம்… ‘சொத்துக்குவிப்பிற்கு நான்கோ அல்லது ஐந்தோ வருட தண்டனை தான். இவன் சொல்லுவதைப்போல் எல்லா வழக்கையும் திறந்துவிட்டால் அவ்வளவுதான்’ என்று ரத்தினம் யோசிக்கும்போதே,

“ஹெல்த் பவுடர் அப்படிங்கிற பெயரில் போதைப்பொருளை ஏற்றுமதி செய்கிறாயே… அந்த ஒன்று போதும் உன் வாழ்க்கையை ஜெயிலிலேயே போக்கிட” என்று வம்சி உரும உண்மையிலேயே ரத்தினம் அரண்டு விட்டார்.

“நான் சொல்லி விடுகிறேன்… இந்த ஒரு வழக்கே போதும்” என்ற ரத்தினம் உண்மையை சொல்ல அதனை விக்கி ரெக்கார்ட் செய்தான்.

“ரித்திகா என் பெண்ணில்லை. ரித்திகாவின் தந்தையிடம் நான் டிரைவராக வேலை பார்த்தேன். அவருக்கு வலது கையாக செயல்பட்ட என்மீது அவ்வளவு நம்பிக்கை அவருக்கு.

கட்சி கலவரத்தில் அவருக்கு மிகுந்த அடி. மருத்துவர்கள் காப்பாற்ற முடியாதென கை விரித்துவிட, அவர் என் மீது கொண்ட நம்பிக்கையால் அவருடைய இடத்தில் என்னை வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

அந்த கடனுக்காகத்தான் அவருடைய பெண்ணை என் மகள் போல் வளர்த்தேன். அரசியலில் இருப்பதால் என் பெயரிலேயே அனைத்தும் சேர்க்க முடியாதே அதிலிருந்து தப்பிக்க ஒரு ஆள் தேவைப்பட்டது. அதற்கு அவளை பயன்படுத்திக் கொண்டேன்.

நான் சேர்த்த சொத்துக்கள் யாவும் சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் மூலம் சேர்த்தவை… அவை என் பெயரில் இருந்தால் ஆபத்துதானே. அதான் ரித்திகாவுக்கு தெரியாமலேயே அனைத்தும் அவள் பெயரில் சேர்த்தேன்.”

ரத்தினம் அவள் என் பெண்ணில்லை என்ற வார்த்தையிலேயே, ‘நான் அவருடைய பெண்ணில்லையா?’ என்று அப்போதே மரித்துவிட்டாள் ரித்திகா.

இப்போது முழுவதும் தெரிந்த பின்னர் உயிரற்ற உடலாக அமர்ந்திருந்தாள்.

“வெல்.”

ரத்தினம் சொல்லி முடித்ததும் துப்பாக்கியை  அதற்குரிய இடத்தில் வைத்த வம்சி சொல்லியது அவ்வார்த்தை தான்.

“பக்காவா ரெக்கார்ட் ஆகியிருக்கா விக்கி?” என்ற வம்சி, ரத்தினத்தின் மீது அவன் சொல்லிய வழக்குகள் அனைத்தும் ஏற்கனவே அவர்மீது எப்.ஐ.ஆர் இடப்பட்டிருக்கும் காகிதங்களை அவர் முன் காட்டி…

“அரசியல்வாதிகள் என்றாவது சொல்லியதை செய்திருக்கிறீங்களா? உங்க விடயத்தில் நாங்களும் அப்படியே” என்று ரத்தினத்திற்கு ஓங்கி ஒரு கொட்டு வைத்து…

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விக்னேஷை அழைத்துச் செல்லக் கூறினான்.

error: Content is protected !!
Scroll to Top