நெஞ்சோடு காதல் சேர 29

அத்தியாயம் 29

ஈஸ்வர் தன் கை பிடித்து அழைத்துச் செல்வதை நம்ப முடியாது அவர் பிடித்திருந்த தன் கையை பார்த்தவாறே அவர் இழுப்பிற்கு சென்றான் வம்சி.

“என்னடா இப்போ இங்கு நடந்தது” என்று வருண் வாய்விட்டே கேட்க,

“உனக்கு வேறு தனியா சொல்லணுமாடா” என உள்ளிருந்து குரல் கொடுத்திருந்தார் ஈஸ்வர்.

பல மணி நேரத்திற்குப்பிறகு தந்தை தன்னிடம் பேசிய மகிழ்வில் உற்சாகத்தோடு உள் சென்றான் வருண்.

வம்சியின் தோள் மேல் கைபோட்டவாறு வரும் ஈஸ்வரை கண்ட வசந்திக்கு அதிர்ச்சியில் விழிகள் தெறித்து உருண்டது.

நம்பமுடியாத பார்வை அவரிடம்.

ஈஸ்வரின் எண்ணம் அறிந்த திரிலோகரிடம் மர்மப்புன்னகை.

உள்ளே வந்து அன்னையை கண்டதும் வம்சி  அவரை விளித்துக்கொண்டே அணைக்க போக, அவனைத் தள்ளிவிட்டவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, வம்சிக்கு முகம் காட்டாது சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்தார்.

“வசு சாரி…”

இரு காதையும் பிடித்துக்கொண்டு சிறு வயதில் சாரி கேட்கும் வம்சியாக அவனின் தற்போதைய தோற்றம் தெரிய அதற்கு மேலும் தன் கோபத்தை வசந்தியால் இழுத்து பிடிக்க முடியவில்லை.

திரிலோகர் வம்சியின் அருகில் வந்து அவனின் முன்னெற்றி கேசத்தை கலைத்து விட… தாத்தா என்று அவரை கட்டிக்கொண்டான்.

“இப்போ தான் இந்த வீடு நிறைஞ்சிருக்கு கண்ணா!” திரிலோகரிடத்தில் இவ்வீட்டில் எல்லாம் சரியாகப்போகும் மகிழ்வு.

“ஆங் பேசனதெல்லாம் போதும்…  அவனை கொஞ்சம் ஃபிரியா விடுங்க” என்ற ஈஸ்வர் “போய் அத்தயை பாரு” என்று அவ்வளவு தான் என்பதைப்போல் அறைக்குள் சென்றுவிட்டார்.

“என்னடா இவர் இப்படி இருக்கின்றார்?” வசந்தி கணவனின் செயல்கள் புரியாது அலுத்துக்கொண்டார். வம்சியின் முகத்தைக்கூட ஏறிட்டு பார்க்க யோசிக்கும் ஈஸ்வர் அவனை வாசலுக்கே சென்று அழைத்து வந்ததை எண்ணி முழுதாக மகிழ்வதற்கு முன், திரிலோகர் அவனைப்பற்றி சற்று உயர்வாக சொன்னதும் வழக்கம்போல் முருங்கை மரம் ஏறிவிட்டார்.

இந்த வீட்டின் உயிர்ப்பு அவன் தான் என்று ஈஸ்வருக்கு என்றோ புரிந்துவிட்டது.

ஈஸ்வர் தான் வம்சி வீட்டைவிட்டு செல்ல அவரின் வார்த்தைகள் தான் காரணமாக அமைந்தன என்று அறிந்த வருண் அன்று முதல் ஈஸ்வரிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான்.

வருணுக்கு தந்தையில்லாமல் இருக்க முடியாது தான்… ஆனால் அவரைவிட வம்சி அவனுக்கு முக்கியமாயிற்றே! அவனின் உயிராயிற்றே!

ஈஸ்வருக்கு இனியும் அவரின் தவறை சுட்டிக்காட்டவில்லை என்றால் அவர் வம்சியை நெருங்கவே மாட்டாரென்று உணர்ந்த வருண் தன் ஒதுக்கத்தை காண்பிக்கத் துவங்கினான்.

வசந்தியும் ஈஸ்வரிடம் அளந்துதான் பேசினார்.

திரிலோகர் முழுவதுமாக ஈஸ்வரை தள்ளி வைத்து விட்டார்.

அன்று அவர் பேசியது அதிகப்படியே! ஒரு மகனின் மீது கொண்ட அன்பு இன்னொரு மகனை வெறுக்கச் சொல்லுமா என்ன? வம்சியின் இத்தனை வருட கோபத்தை வருணின் விபத்தை பயன்படுத்தி தீர்த்துக் கொண்டதாகக் கருதிய திரிலோகர் ஈஸ்வரிடம் சுத்தமாக தனது பேச்சினை நிறுத்தியிருந்தார்.

ஏதோ ஒருவகையில் அனைவரும் ஈஸ்வர் மீதான தங்களது அதிருப்தியைக் காட்ட… அவையெல்லாம் வம்சிக்கானதென்று ஈஸ்வருக்கு புரிந்தது.

ஈஸ்வருக்கு என்றோ உண்மை தெரிந்துவிட்டது. அன்று அந்த காசோலையில் தவறு செய்தது வருண் என்று… ஆனால் கோபத்தால் எழுந்த ஆத்திரம் கண்களை மறைக்க… வம்சியை அந்த அடி அடித்ததை அவராலே சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் செயலால் விளைந்த குற்றவுணர்வு மனதை கொஞ்சம் கொஞ்சமாக அறுக்க வம்சியின் முகம் காண்பதையே தவிர்த்தார். அது மற்றவர்கள் கண்களுக்கு வம்சியின் மீதான கோபமாகவே தெரிய… தன் கெத்தை மகனிடம் விட்டுக்கொடுக்க நினைக்காத ஈஸ்வர் அதையே மெயின்ட்டெயின் செய்து கொண்டார்.

உண்மையில் வருணை தாக்கிய ரத்தினத்தால் வம்சியை நெருங்க எவ்வளவு நேரமாகிவிடும். வம்சியின் மீதான கோபத்தால் வருணுக்கே ரத்தினத்தால் அந்நிலை என்றால், காரணமான வம்சியை என்ன செய்வானோ என்று பயந்தே வம்சி விலகிச் செல்லுமாறு அன்று அவ்வாறு பேசினார்.

ஈஸ்வருக்கு தெரிந்துதான் இருந்தது. வம்சியை ரத்தினத்திற்கு பயந்து செல் என்றால் செல்லமாட்டான். வீட்டை விட்டு அனுப்பினால், ஒரே ஊருக்குள் தங்களை பார்க்க நேரிடுமென்று நிச்சயம் வேறெங்காவது தான் செல்வானென்று. அதனால் வருணின் நிலையை காரணம் காட்டி வம்சியை அவ்வளவு பேசி அங்கிருந்து கிளப்பியிருந்தார்.

வம்சியில்லாது இக்குடும்பம் இல்லை என்று உணர்ந்தாலும் அதனை வெளிப்படையாக சொல்ல வம்சியின் சிறு வயது நிகழ்வால் அவருக்குள் ஏற்பட்ட குற்றவுணர்வே தடையாக உள்ளது.

இவற்றையெல்லாம் மற்றவர்கள் உணராது போனாலும் வம்சிக்கு நன்கு தெரியும்.

அதற்காகவே… தன் தந்தையின் நிம்மதிக்காகவே ரத்தினத்தை அழித்த பிறகு தான் அவர் முன் வந்து நிற்க வேண்டுமென்று இருந்தவன் இன்று அவரே அழைக்கவும் வந்தும் விட்டான். ஆனால் அவனே அறியாத ஒன்றை நாளை சொல்லவிருக்கிறார் ஈஸ்வர். அப்போது வம்சியின் நிலை என்னவாக இருக்கும்.

அழகுவை பார்த்துவிட்டு வந்த வம்சி யோசனையிலேயே இருந்தான்.

கணவன் வீட்டாரிடம் ஒத்து வரவில்லை என்று, வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட அழகு ஒரு வருடத்திலேயே தன் தாய் வீட்டிற்கு வந்து நின்றார்.

மகள் தங்கள் பேச்சினை மீறி சென்றுவிட்டாள் என்கிற கவலையே அழகுவின் தந்தையின் உயிரை பறித்திருக்க… மகள் செய்த துரோகம் ஏற்கனவே உடலை நோயில் கிடத்த, கணவன் இறந்தது மனதையும் உருக்குலைக்க அழகுவின் தாயாரும் இறந்து போனார்.

அடுத்தடுத்து தாய் தந்தை இறக்க காரணமாக இருந்த தங்கையின் காதலை வெறுத்த ஈஸ்வரால் தங்கையை வெறுக்க முடியாது போனது.

அத்தோடு வாடிய கொடியாக தன் பெற்றோரின் இறப்பிற்கு தானே காரணமாகி விட்டேனேயென்று கண்ணீர் சிந்தும் தங்கையை தானும் தவிக்கவிட அவருக்கு மனமில்லை. தாங்கிக்கொண்டார்.

பெற்றோரில்லா ஊரில் இருக்க முடியாது… சென்னை வந்து சேர்ந்தனர்.

ஈஸ்வர் பலமுறை கேட்டும் தன் கணவன் யாரென்றும் அவரின் வீட்டாரை பற்றியும் அழகு கூற மறுத்துவிட்டார்.

“மறக்க இருப்பதை நினைவு படுத்தாதீர்கள்” என்று கடந்து சென்ற தன் வாழ்வை எண்ணி அழகு கதறிட, அதற்குமேல் தங்கையை வற்புறுத்தி கேட்க ஈஸ்வருக்கு மனமில்லை.

கணவரின் பெயரைக்கூட சொல்ல மறுத்தவர் இன்று வம்சியின் கையில் தானும் தன்னுடைய கணவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட பழுப்பு ஏறிய வெள்ளை கருப்பு புகைப்படத்தைக் கொடுத்தார்.

அறைக்கு வந்த வம்சி தீவிரமான முக பாவனையில் அமர்ந்திருக்க… அவனின் பார்வை கையில் வைத்திருந்த புகைப்படத்தில் அழகுவிற்கு அருகிலிருந்த அவரின் கணவரின் மீது இருந்தது.

தேவியிடம் கடலை போட்டுவிட்டு வந்த வருண்,

“நான்கூட லவ்வெல்லாம் பண்றேன்டா… பாரு மணி பணிரெண்டுக்கு மேலாகுது.. இன்னும் தூங்காமல் பேசிட்டு வர்றேன்” என்று உற்சாகமாக வம்சியிடம் பேசாயவாறே அவனருகில் மெத்தையில் அமர… வம்சியிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை.

“என்னடா வம்சி யோசனை” என்ற வருண் வம்சியின் கையிலிருந்த புகைப்படத்தை பார்க்க அதிலிருந்த நபரை எங்கேயோ பார்த்த நினைவு.

“யாருடா இது?” என்று கேட்க வந்தவன் அப்போதுதான் அழகுவை பார்த்துவிட்டு, “இவர் தான் அத்தையோட கணவரா?” என்றான்.

ஆமென்று தலையசைத்த வம்சி…

“இவ்வளவு வருடங்கள் சொல்லாத அத்தை இன்று ஏன் அவரைப்பற்றி சொல்ல நினைக்கிறார்?”

வம்சி தனக்குள் எழுந்த சந்தேகத்தை வருணிடம் கேட்க…

“இந்த விடயத்திலும் உன் போலீஸ் மூளையை காட்டாதே வம்சி. உடம்பு சரியில்லாத நிலையில் தனக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறாரோ என்னவோ. அதனால் இவ்வளவுநாள் கேட்டு சொல்லாத விடயத்தை சொல்ல நினைக்கின்றார் போலும்” என்ற வருணை போன்று வம்சியால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

“ஏற்கனவே ரொம்ப லேட் டா… அந்த போட்டோவை தூக்கிப்போட்டு தூங்குடா” என்று படுத்து கண்களை மூடிய வருண் வேகமாக எழுந்து வம்சியின் கையிலிருந்த போட்டோவை பிடுங்கி உற்று பார்த்தவன் “இவர் தேவிகா அப்பாடா” என்றான்.

“வாட்… யூ மீன்?”

“யா ஐ மீன் இட்” என்ற வருண் அப்போதே தேவிக்கு புலனம் வழி தகவல் அனுப்பி அவர்களின் குடும்ப புகைப்படத்தை அனுப்பக் கூறினான்.

இரண்டு நிமிடங்களில் புகைப்படம் வர அதனை பார்த்த வம்சிக்குமே அதிர்ச்சி தான்.

“அப்போ ராஜராஜன் தான் அத்தையின் காதல் கணவரா?” என்ற வம்சி “இதில் ஏதோ இருக்குடா! மென்னிலாவிடம் கேட்டால் பதில் கிடைக்கும்” என்றவனாக அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டான்.

வருணுக்கும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் எழ, வம்சி மென்னிலாவுக்கு அழைத்த அதே நேரம், வருணும் தேவிக்கு அழைத்திருந்தான்.

மென்னிலா வம்சியின் நினைவில் காதலில் மூழ்கிக் கொண்டிருந்த நேரம் அலைபேசி ஒலிக்க அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்தாள்.

“ஹலோ.”

“நிலா” என்று அவளின் பெயருக்கும் வலிக்குமோ என்று மென்மையாக அழைத்தவனே அவளை வலிக்கச் செய்யும் கேள்வியைக் கேட்டான்.

“நிலா இஃப் யூ டோன்ட் மைன்ட்…?”

“சொல்லுங்க என்ன?”

“உங்க அப்பாவுக்கு இரண்டு மனைவிகளா?”

இப்போது இதையேன் கேட்கிறானென்று தெரியாத போதும்… இதுநாள் வரை மனதில் இருக்கும் சோகத்தை சொல்லிட ஆளில்லாமல் இருந்தவள் இன்று தனக்கே தனக்கென்று கிடைத்த உறவிடம் சொல்லிட நினைத்தாள். அதற்கு வம்சி கேட்ட ஒரு கேள்வியே போதுமானதாக இருந்தது.

“ஆம்” என்று வம்சி கேட்ட கேள்விக்கு பதிலளித்தவள், “நான் முதல் மனைவியின் மகள்” என்று சொல்ல வம்சி இன்பமாக அதிர்ந்தான்.

தேவிகாவுடன் கேட்டுக் கொண்டிருந்த வருணுக்கும் அதே நிலை தான்.

‘நிலா… என் அத்தை மகளா?’ அவனுள் கேள்வி எழுந்த நொடி மென்னிலா தன்னுடைய அம்மாவின் வாழ்வில் நடந்த அனர்த்தங்களை சொல்லத் தொடங்கியிருந்தாள்.

ராஜராஜனை மீனா குடும்பத்திற்கு தெரியாது திருமணம் செய்து வந்தது முதல் விசாலத்திடம் அவர் பட்ட கொடுமைகள்… தன் பிறப்பின் போது கூட மனமிலகாத விசாலத்தின் செயல்கள், சதி திட்டங்கள்… அத்திட்டத்தினால் தான் அனுபவித்த வேதனைகள் என அனைத்தையும் சொல்லிய மென்னிலா விசாலத்தின் இறப்பின் போது, நடந்த உண்மைகளை தெரிந்து கொண்டதன் பற்றியும் கூறியவள் தன் அன்னையின் நினைவில் கதறி விட்டாள்.

“நிலா சில்… காம் டவுன்.” வம்சி அவளை ஆறுதல் படுத்த முயன்றான். அத்தோடு அவளின் அழுகை அவனை உள்ளுக்குள் என்னவோ செய்தது.

“நிலா லிஸன்… நீ அழுதால் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.”

வம்சி சொல்லியதும் நிலாவின் அழுகை பட்டென்று நின்றது.

“தட்ஸ் மை கேர்ள்” என்ற வம்சி…

“இனி நம் திருமணம் முடியும் வரை எதை நினைத்தும் நீ அழக்கூடாது” என்று அழுத்திக் கூறினான்.

“திருமணத்திற்கு பிறகு அழலாமா?”

“அப்போ அழுதால் உன்னை ஆறுதல் படுத்த நான் உன்னருகிலே இருப்பேன். இப்போது அது முடியாதே! நீ அழுவதை வேடிக்கை பார்க்கும் திடம் எனக்கில்லை. அதுவும் இவ்வளவு தூரத்தில் நீயிருக்கும் போது என்னால் விரைந்து வரவும் முடியாது” என்றவனின் பேச்சில் நெகிழ்ந்திருந்தாள் மென்னிலா.

‘இவனுக்கு நான் முக்கியமில்லை என்று வருண் அத்தானிடம் குறைப்பட்டுக் கொண்டேமே!’ தன் தலையில் தானே தட்டிக் கொண்டாள்.

“சரி உன் அம்மாவை நீ பார்த்திருக்கிறாயா?”

“அய்யோ லூசு மாமா… நான் பிறந்தப்பவே அம்மா போயிட்டாங்களே… நானெப்படி பார்த்திருக்க முடியும்.”

நிலாவின் பிற்பாதி வார்த்தைகளை வம்சி கவனிக்கவே இல்லை. அவள் சொல்லிய மாமாவிலேயே நின்று விட்டான்.

“இன்னொரு முறை சொல்லு நிலா?” ஏக்கமாக வினவினான்.

“என்னது?”

“இப்போ சொன்னியே?”

என்ன சொன்னோமென்று அவள் சொல்லியதை அசைபோட அப்போது தான் அவள் சொல்லிய மாமா நினைவுக்கு வர முகம் சிவந்தவள்,

“அதெல்லாம் அப்பப்போ தான் வரும். நீங்க கேட்டெல்லாம் சொல்ல முடியாதென்று அவனிடம் விளையாடினாள்.”

“என்னை இதுவரை யாருமே அப்படி சொல்லி அழைத்தது இல்லை தெரியுமா?” வம்சி கள்ளப் புன்னகையோடு சொல்ல,

“ஏன் போலீசுக்கு அதில் வருத்தமோ” என்று உரிமை உணர்வில் சற்று குரல் உயர்த்திக் கேட்க வம்சியிடத்தில் அப்படியொரு சிரிப்பு.

மென்னிலாவின் மனநிலையை மாற்றவே பேச்சினை திசை திருப்பினான். அவள் சாதரணமாகிவிட்டதை அறிந்தவன்…

“உன் அம்மா பெயர் என்ன நிலா?” என்று வினவினான்.

“அழகு மீனாள்.”

“நீ அவங்களை நேரில் பார்த்தால் என்ன செய்வ?”

சற்று யோசித்தவள் தெரியலையே என்க,

“அப்போ அவங்களை பார்க்கும்போது என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து வைத்துக்கொள்” என்ற வம்சியின் பேச்சு புரியாது மென்னிலா குழம்ப…

“லவ் யூ நிலா” என்று சொல்லி அவளின் சிந்தனையை அவனைப்பற்றி சுழலுமாறு மாற்றிவிட்டு அழைப்பை வைத்துவிட்டான்.

error: Content is protected !!
Scroll to Top