நெஞ்சோடு காதல் சேர 3

அத்தியாயம் 3:

வீட்டிற்கு வந்த தனது தந்தை திரிலோகச்சந்தரை இன்முகத்தோடு வரவேற்றார் வருண் மற்றும் வம்சியின் அன்னை வசந்தி.

“நல்லாயிருக்கீங்களா ப்பா?”. நல விசாரிப்போடு, காலில் விழுந்து வணங்கிய மகளை ஆசிர்வதித்தார் திரிலோகர்.

“இந்த மாதிரி நேரத்தில் வந்து சேராமல் கொஞ்சம் முன்னாடியே வருவதை போல் கிளம்பலாமேப்பா” என்ற வசந்தி அவர் உடைமைகளை எப்போதும் அவர் வந்தால் தங்கும் அறையில் வைத்தார்.

“இனிமேல் முயற்சிக்கிறேன்” என்றவர் அறைக்கு செல்ல, அவருக்கு எதிரே அழகு வந்தார்.

அழகு வசந்தியின் நாத்தனார். மிகவும் அமைதி. தேவைக்கு மட்டும் தான் பேச்சு மற்றும் அறையிலிருந்து வெளியிலும் வருவார். வம்சி மற்றும் வருண் மீது அதீத பாசம். அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவர்கள் மட்டும் தான்.

தன்னெதிரில் பட்ட திரிலோகரை, “வாங்க மாமா!” என்று வரவேற்றவர் ஒற்றையாய் புன்னகைக்க, அழகுவின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்த திரிலோகர்…

“உன் சொந்தம் உன்னை வந்து சேரப்போகிறது… நேரம் தூரமில்லை.” என்றார்.

“மாமா!”

“நீ சொல்லவில்லை என்றாலும், என்னால் உன் மனதை உணர முடியும். அதோடு நீ வாழ்ந்த வாழ்வும் எனக்குத் தெரியும்.”

அழகுவிடம் எல்லாம் துறந்திட்ட ஒரு நிலை.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நிற்க,

“ரொம்ப பசிக்குது தாத்தா, இப்படியே நின்னுட்டு இருந்தால் என்ன? வாங்க சாப்பிடலாம்” என அழைத்தான் வருண்.

“இரவு ரொம்ப நேரமாகிவிட்டது வருண் நீங்க சாப்பிடுங்க, நான் குளிக்க வேண்டும்” என்றவர்,

‘இக்குடும்பத்தில் அனைத்தும் மாற்றம் பெறப்போகிறது. யாவும் நல் மாற்றமே.’ மனதோடு நினைத்தபடி அறைக்குள் சென்றார்.

“என்னம்மா இன்னும் உன் வீட்டுக்காரர் வரல போலிருக்கே?” அன்னையிடம் வம்சி கேட்டான்.

“இப்போ அவரை எதுக்குடா கேட்குற, அவரிடம் வம்பு செய்யவில்லை என்றால் உனக்குத் தூக்கம் வராதா?” வசந்தியின் வினாவுக்கு அவனிடத்தில் புன்னகை மட்டும் தான்.

“அது அவரை வம்புக்கு இழுப்பதில்லைம்மா, அவனுக்கு அவரிடம் திட்டு வாங்க வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது.” வருண் வம்சியை கேலி செய்தான்.

“என்னவோ எப்பவும் குடும்பம்ன்னா புருஷன் பொண்டாட்டி தான் எதுக்கெடுத்தாலும் சண்டை போடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். இங்கென்னான்னா, அப்பாவும் பிள்ளையும்… ம்க்கும்.” பெருமூச்சு ஒன்று வசந்தியிடம் வெளிப்பட்டது.

“எல்லா வீட்டுலையும் அப்பா, மகன் எப்படி நண்பர்கள் போலிருக்கிறார்கள். எனக்கும் வாச்சிருக்கே!” முகம் நொடித்து சொல்லியவர், மகன்களுக்கு உணவை பரிமாறிவிட்டு தந்தைக்கு பால் எடுத்துச் சென்றார்.

வசந்தி அறைக்குள் சென்றபோது திரிலோகர், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த இறைவனின் படத்திற்கு முன்பு கை கூப்பி அமர்ந்திருந்தார். சிறிது நேரம் நின்று, தெய்வீகம் தவழும் தந்தையின் முகத்தை பார்திருந்தவர்… பாலை மேசையில் மூடி வைத்துவிட்டு அமைதியாக வெளியேறிவிட்டார்.

அதற்குள் வருணும், வம்சியும் உண்டுவிட்டு மாடியேறிச் சென்றிட, அழகு வரவேற்பறை நீள் இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தார்.

அழகுவின் அருகிலமர்ந்த வசந்தி, அவரின் கரம் பற்ற, அழகு உடைந்து அழுதார்.

திரிலோகரின் பேச்சில் அழகுவின் கடந்த கால ரணம் கண் முன்னே வந்திருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, தான் செய்துவிட்டு வந்த தவற்றை நினைத்து வருந்தி அழுதார். இதுவரை யாரிடமும் சொல்லிடாததை, இப்போதும் அவரால் சொல்ல முடியவில்லை.

அவர் சொல்ல நினைக்கவில்லை என்பதே உண்மை.

அந்நேரம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார் வசந்தியின் கணவர் ஈஸ்வர். இவர் அழகுவின் உடன் பிறந்த அண்ணன். இவர்களின் பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை.

ஈஸ்வரின் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்திரைக்குளம். இவர்களின் தொழில் விவசாயம் தான். அளவான வருமானம், அளவான மகிழ்வான குடும்பமென்று நிம்மதியாக வாழ்ந்து வந்தவர்கள், குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வால் சொந்த ஊரை விட்டு புலம்பெயர்ந்து சென்னை வந்தனர்.

அப்போது வருணுக்கு ஐந்து வயது.

கையிலிருக்கும் பணத்தை வைத்து ஈஸ்வர், அங்காடித் தெருவில் சிறிய அளவிலான பாத்திரக்கடை ஒன்றை தொடங்கினார். இவரின் நேர்மை, உழைப்பு மற்றும் பொருட்களின் தரத்தால் விரைவிலேயே நிறைய வாடிக்கையாளர்களை பெற்றார். அயராது உழைத்து, முயற்சியை கைவிடாது இத்தொழிலில் முன்னேற்றம் கண்டார். அதன் பயனாக சென்னையின் முக்கிய பகுதிகளில் கிளைகளைத் தொடங்கி தன்னுடைய குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார். அதோடு நின்றுவிடாது, இவரின் முதன்மை பாத்திரக்கடைக்கு அருகிலேயே எட்டு மாடி கொண்ட துணி கடையை இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். ஒவ்வொரு வயதினர் மற்றும் பாலினத்தற்க்கு ஒவ்வொரு தளம். அதிலும் நல்ல வருமானம் கிடைக்க, இப்போது இவரும் செல்வந்தர் வரிசையில் உள்ளார்.

அண்ணனை கண்டதும் கண்களை துடைத்துக்கொண்டு சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டார் அழகு. அழகு அழுதால் ஈஸ்வருக்கு பிடிக்காது.

“நீ அழுதவரை போதும்” என்று கடிந்துகொள்வார்.

அவருக்காகவே மனதில் எவ்வளவோ துக்கமும் வேதனையும் இருப்பின் முயன்று முகத்தை அமைதியாகக் காட்டிக்கொள்வார்.

“சாப்பிட்டாச்சா?” பொதுவாக மனைவி மற்றும் தங்கையை விசாரித்தார். அவர்கள் பதிலளித்ததும் அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவர், உணவு மேசையில் உணவுண்ண அமர்ந்தார்.

“வருண் சாப்பிட்டானா?”

“வம்சியும் சாப்பிட்டாச்சு… தூங்கவும் போயாச்சு.”

“நான் உன் மகனை கேட்கவேயில்லை.”

“ஆமா ஆமா அவன் எனக்கு மட்டும் தான் மகன். நீங்க இல்லாம குந்திதேவி மாதிரி கடவுள் நேரா என் வயித்துல வச்சிட்ட மகன்.” ஈஸ்வருக்கு கேட்க வேண்டுமென்றே சத்தமாக முணுமுணுத்தார் வசந்தி.

“என்ன சொல்லுற?”

“உங்களுக்கு என்ன கேட்டுச்சோ அதான் சொன்னேன்.”

அடுத்து ஈஸ்வர் எதுவும் பேசாது அமைதியாக உண்டு கொண்டிருக்க,

“அவனும் நம்ம மகன் தாங்க.” வசந்தியின் குரல் தழுதழுத்தது. ஈஸ்வரிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை. வசந்திக்கு மனமே விட்டுபோனது.

சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தவர், “எனக்கு ஒரே மகன் தான்” எனக்கூறிச் சென்றார். கணவனின் வார்த்தைகளில் வசந்தி விக்கித்து நின்றார்.

நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அழகு தான் வசந்தியை தேற்றி உறங்க அனுப்பி வைத்தார்.

அண்ணியை உறங்க வைத்த அழகுக்கு உறக்கம் வெகு தூரம் சென்றிருந்தது. கடந்த காலங்கள் வடுவாய் அவர் மனதில் தடம் பதித்திருக்க, இன்று அதன் ரணம் சற்று அதிகமாகவே இருந்தது.

********

“எங்கடா போற?”

“மொட்டை மாடிக்கு.”

அண்ணனின் கேள்விக்கு பதிலளித்த வம்சியின் கையில் பாயும், தலையணையும் இருந்தன.

வீட்டில் அறைகள் இருப்பினும் இருவரும் ஒரு அறையையே பகிர்ந்து கொள்கின்றனர். சிறுவயதிலிருந்து இப்பழக்கம் தொடர்கிறது.

வம்சிக்கு வருண் மீது கை, கால் போட்டால் தான் உறக்கமே வரும். ஆனால் இன்று அவன் தனித்து உறங்க சென்றது வருணுக்கு வருத்தமாக இருந்தது.

‘அவனைப்பற்றி தெரிந்தும் தான் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது’ என்று காலம் கடந்து தன்னையே திட்டிக்கொண்டான்.

வம்சி ஏற்கனவே மொட்டை மாடிக்கு சென்றிருக்க, வருண் தலையணை மட்டும் ஒன்றை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றான்.

அங்கே வம்சி மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தூர நிலாவை வெறித்துக் கொண்டிருந்தான். அவனின் முகம் தீவிர யோசனையில்.

பின்னாலிருந்து தம்பியை அணைத்துக் கொண்ட வருண், மன்னிப்பு வேண்ட…

“காதல் வந்தது எப்படித் தெரியும்?” எனக் கேட்டான் வம்சி.

அவனிடமிருந்து விலகி, கையிலிருந்த தலையணைகொண்டு வம்சியின் முதுகினிலே நான்கு அடி போட்ட வருண்,

“நீ நான் ரயில்வே ஸ்டேஷனில் சொன்னதுக்குத்தான் இப்படி இருக்கன்னு நினைத்தால் மேட்டர் வேற போலிருக்கே” என்றான்.

ரயில் நிலையத்தில் நடந்தவற்றை வம்சி வருணிடம் அப்படியே கூறினான்.

“பார்த்து ஒரு ரெண்டு மணி நேரமிருக்குமா, அதுக்குள்ள இங்க அவள் நினைவாவே இருக்குடா.” வலது பக்க இதயத்தை தொட்டு காண்பித்தான்.

“அப்போ லவ் பண்றியா வம்சி?”

“தெரியலடா… நான் அவள் முகத்தை கூட சரியா பார்க்கல, ஆனால் அவள் கன்னத்து காதோரம் இருந்த மச்சம் ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுதுடா” என்றவன் அங்கு விரிந்திருந்த பாயில் படுத்து, வானில் மங்கிய ஒளியில் தெரிந்த நிலாவை பார்த்தான்.

அது அவளின் பெயரை அவனுக்கு நினைவு படுத்தியது.

“சரியா முகம் கூட பார்க்கலன்னு சொல்லிட்டு கன்னத்து மச்சமெல்லாம் நோட் பண்ணியிருக்கியேடா!” என்று தம்பியை கலாய்த்தான் அண்ணன்.

“அவளை கன்னத்தில் அடிக்கும் போது பார்த்தேன்டா. அம்மா வைக்குற பொட்டு சைஸ் இருந்துச்சு, பார்த்ததும் சட்டுன்னு ஈர்த்துச்சு. அப்போ அதை காட்டிக்கொள்ளவில்லை. இப்போ சுத்தமா முடியலடா!” என்றான் வம்சி.

“ம்ம்ம்… இப்போ தான் எனக்கும் புரியுது” என்ற வருண்,

“முதல் முறை அடித்ததில் வேண்டுமென்றால், யாரோ தெரியாத பெண் காதல் சொன்னான்னு கோபத்தில் அடித்ததாக ஏற்றுக்கொள்ளலாம்” என சொல்ல வந்ததை இழுத்து,

“இரண்டாம் முறை நீ அடித்தது, அப்புறம் அவளிடம் நீ பேசியதெல்லாம் ஏதோ உரிமையில் அக்கறையாக கடிந்து கொண்டதாகத்தான் எனக்குத் தெரிகிறது” என்றான்.

வம்சி வருணை முறைக்க,

“ஏன்டா காலேஜ்ல உனக்கு எத்தனை புரோபோசல்… விளையாட்டுக்கு நம்ம கேங்க் வைத்து எத்தனை பெண்களிடம் இப்படி விளையாடியிருப்போம்…”

“நிறுத்து நிறுத்து…” வருணின் பேச்சினை இடை வெட்டினான் வம்சி.

“என்னடா?”

“ஒரு சின்ன திருத்தம் விளையாடியிருப்போம் இல்லை, விளையாடின… இதில் நானில்லை” என்று விளக்கினான் வம்சி.

“சரிடா நீயில்லை, நாங்க தான்” என்ற வருண் மேலே தொடர்ந்தான்.

“அப்போலாம் நீ யாருக்கும் இப்படி அட்வைஸ் பண்ணலையே ராசா” என்று கேட்க வந்ததை கேட்டு முடித்தான்.

“இதுதான் காதலா வருண்.”

“எனக்கும் காதலைப்பற்றி ஒன்றும் தெரியாது, வேண்டுமென்றால் இதுவும் காதலாக இருக்கலாம்” என்ற வருண் குப்புற படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

சில நிமிடங்கள் வம்சி தன் மனதையே ஆராய்ந்து கொண்டிருக்க,

“இது காதல் தானான்னு முடிவு செய்வதற்கு முன் அப்பாவை ஒருமுறை நினைத்துபார்” என்று கண்களை திறவாமலே கூறினான் வருண்.

வம்சிக்கு அந்நொடி தந்தையை எண்ணி சிறு அச்சம் எழுந்தது.

ஈஸ்வரை பொறுத்தவரை காதலென்றாலே எட்டிக்காய் தான். அதனால் அவர்கள் குடும்பம் இழந்தது சற்று அதிகப்படியே. காதலென்ற வார்த்தையை கூட ஈஸ்வர் முன்னால் உச்சரித்திட முடியாது.

‘ஏற்கனவே வேண்டாத பிள்ளை… இந்நிலையில் காதலுன்னு போய் நின்னா அவ்வளவுதான், ஈஸ்வர் உடுக்கை இல்லாமலே ருத்ர தாண்டவம் ஆடிடுவார்’ என மனதிற்குள் நினைத்த வம்சி மனதில் இம்சிக்கும் அவளின் நினைவை ஒதுக்கியவனாக உறங்க கண்களை மூட,

அவனை முழுதாய் ஈர்த்த அவளின் கன்னத்து காதோர மச்சம் மூடிய இமைக்குள் அழகாய் தோன்றியது.

தந்தையா காதலா என்ற நிலையில் மனம் ஊசலாட, முடிவெடுக்க முடியாது குழம்பினான்.

“இது ஆவதற்கு இல்லை” என்று எழுந்து அமர்ந்த வம்சி,

“சில நாட்கள் சென்றால் தன்னைப்போல அவளின் நினைவு மறந்துவிடும்” என்று தப்பு கணக்கு போட்டான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top